சொந்த ஊர்

அந்த கார் மெதுவாக அந்த ஊருக்குள்ளே நுழைந்துக்கொண்டிருந்தது. உள்ளே சென்று இன்னும் நான்கு சந்துகளில் இடது பக்கம் திரும்பவேண்டும். அக்கா தம்பிக்கு வழி சொல்லிக்கொண்டே வந்தாள். இடது பக்கம் திரும்பிய வண்டி நேராக சென்று தெரு முட்டும் இடத்தில் இருந்த ஒரு சின்ன கோபுர கோவிலை அடைந்தது. அக்காவும் தம்பியும் தங்களை மாறி மாறி பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் கண்களில் தங்களை அறியாமல் கண்ணீர் கசிந்தது.
‘தம்பி வண்டிய எடுத்துருடா…’ என்றாள் அக்கா. அந்த கோவிலையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த தம்பி, ‘அக்கா….’ என்றான் இன்னும் கலங்கிய கண்களோடு. அவளும் அந்த கோவில் பக்கம் திரும்பி பார்த்தாள்.
பாவாடை சட்டையில் இருந்த ஒரு பெண்ணை ஒரு சிறுவன் முடியை பிடித்து இழுத்துவிட்டு முன்னாள் ஓடுகின்றான். அந்த பெண் அவனை அடிக்க பின்னால் ஓடுகின்றாள். கோவில் சுவரில் அந்த சிறுவன் முட்டிக்கொள்ள அந்த பெண் பதறிப்போய் ஓடி அவன் காலில் அடிப்பட்ட இடத்தில் தன் எச்சில்கொண்டு வைத்தியம் செய்கிறாள். இன்னும் கண்ணீர் தம்பியின் கையை நனைக்க அங்கு இருந்த சிறுவனும் சிறுமியும் மறைந்து போகிறார்கள்.
‘என்னடா… கால் வலிக்குதா?’ என்றாள் பக்கத்தில் அமர்ந்திருந்த அக்கா. அவன் பதிலுக்கு அவள் முகத்தை பார்த்து கண்ணீர் கண்களோடு சிரித்தான். அவர்களின் கார் மெதுவாக அந்த தெருவை வளம் வந்தது. தெருவில் நின்றவர்களெல்லாம் அந்த மெதுவாக செல்லும் காருக்குள் எட்டிப்பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.
‘இது செட்டியார் வீடு… ஏ… ஏ… இது சின்னமணி வீடுதானே… நம்ம வீடு இருந்த இடமே காணோமேடா… டே அந்த மோட்டு வீடு… அந்த வீடு… அது.. அது…’ அக்காவின் வார்த்தைகள் தடுமாற தம்பி வைத்த கண் வாங்காது… ‘ஆமா கா…நம்ம வீடு…’ என்றான் ஆனந்த அழுகையோடு.
வீட்டின் வாசலில் ஒருவன் வந்து கடப்பாரையை வைத்து முட்டி வெளியில் வந்திருந்த திண்ணையை இடித்துக்கொண்டிருந்தான். ஒரு சிறுவன் நேராக ஓடிவந்து இடித்துக்கொண்டிருந்தவன் கால்’ஐ கடித்துவிட்டு ஓடினான். வீட்டினுள்ளே இருந்து ஒரு நடுத்தரவயது ஆண் அவனை அடிக்க துரத்தி ஓடிவந்தார். அந்த இடிக்கப்பட்ட திண்ணை பாதியிலே நின்றிருந்தது. அவன் அக்கா அவனின் தோளில் கைவைத்து அவனை அமைதிபடுத்தினாள். கார் வேகமாக அந்த தெருவை விட்டு வெளியில் வந்து ஊரின் எல்லையில் சடாரென்று நின்றது. வண்டி ஸ்ட்யரிங்கில் தலையை வைத்து தம்பி படுத்துக்கொண்டான். அக்கா அவனின் தோளில் கையை வைத்து எழுப்பினாள். அவன் கண்கள் கலங்கியிருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் ஆஸ்வாசபடுத்திக்கொண்டார்கள்.
 சிறிது நேரத்திற்கு பிறகு அவன் காரை இயக்கினான். கொஞ்ச தூரம் சென்றான். சட்டென வண்டியை திருப்பிக்கொண்டு அவன் தெரு இருந்த பக்கம் ஓட்டினான்.
‘டே… என்னடா’ என்றாள் அக்கா பதறிப்போய்.
‘அக்கா ஒரே ஒரு முறைகா… எனக்கு ஆசையா இருக்குகா… ஒரே ஒரு முறை நாம விளையாண்ட இடத்தையெல்லாம் பாத்துட்டு வந்துருவோம்கா…’ என்றான் இன்னும் கண்களில் ஆசை குறையாமல். அக்கா பதிலுக்கு ஒரு முறை சிரித்து வைத்தாள்.
வண்டி நேராக அவர்கள் வீட்டின் முன்புறத்தில் நின்றது. இருவரும் மெதுவாக அந்த வண்டியை விட்டு கீழே இறங்கினார்கள். ஊரில் அங்குமிங்கும் இருந்தவர்கள் எல்லாம் தங்கள் தெருவில் யாரோ புதிதாய் காரில் வந்திருக்கிறார்களே என்று இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தது. காரை அவ்வபோது பார்க்கும் குழந்தைகள் ஓடிவந்து காரை தொட்டு தொட்டு பார்த்து ஓடினர்.
’நான் இப்போ யார் இருக்காங்களோ அவங்ககிட்ட கேக்கவா டா? உள்ள போயி பாக்குறியா?’ என்றாள் அக்கா. தம்பி அதை தான் விரும்பியதாய் முகத்தையும் கண்ணையும் சம்மதமாக பாவித்தான்.
அக்கா நேராக அந்த வீட்டு வாசலுக்கு சென்றாள். அந்த வீட்டின் கதவை ஒரு முறை இறுக பிடித்துக்கொண்டாள். மெதுவாக தட்டினாள். அக்கம்பக்கமிருந்தவர்கள் எல்லாம் ‘ராசுப்புள்ள வூட்டுக்கு காருல ரெண்டு சனம் வந்துருக்கு’ என்று பேசிக்கொண்டார்கள். அந்த வீட்டினுள்ளே இருந்து ஒரு நடுத்தர வயது பெண் வெளியில் வந்தாள்.
‘யாருங்க…’ என்றாள் கேள்விகுறியோடு. நான் பிடித்து விளையாடிய கதவும், நான் விழுந்து ஏறிய திண்ணையும், நான் ஓடிய தெருவும், என் கால்களை பதம் பார்த்த படிகளுக்கும் என்னை தெரியும் என்று சொல்லி கண்ணீரை வடிக்க தோன்றியது அவளுக்கு. அவள் அதை கட்டுபடுத்திவிட்டு தன் தொண்டையை கரகரத்துக்கொண்டு பேச தொடங்கினாள்.
‘நான்… நாங்க… இது எங்க வீடு… இல்ல… நாங்க இங்க தான் இருந்தோம்… கஷ்டம் வித்துட்டு போயிட்டோம். இந்த வழியா வந்தோம். வீடு ஞாபகம் வந்துச்சு ஒரு முறை…’ என்றாள் இழுத்துக்கொண்டு.
‘அட வாங்க வாங்க… நாங்க இங்க வந்து ரெண்டு மாசம் தாங்க ஆகுது. நாங்க வாடகைக்கு தான் இருக்கோம். முன்னத்தெருல சேகரு தெரியும்லங்க… அவுக தான் வுட்டாக… உள்ள வாங்க’ என்று சொல்லி மரத்தால் ஆன கால் பக்கம் வாங்கியிருந்த ஒரு நாற்காலியை அந்த வீட்டம்மாள் போட்டாள். அக்கா தம்பிக்கு ஒரு கையை வா என்று அசைத்துவிட்டு உள்ளே சென்றாள். தம்பி ஆர்வமாக உள்ளே சென்றான். இருவருக்கும் அந்த வீட்டம்மா தண்ணீர் குடிக்க கொடுத்தாள்.
‘உள்ள போயி என்ன பாக்கணுமோ பாருங்க…’ என்றாள் இன்னும் வாஞ்சையோடு. தம்பியும் அக்காவும் அந்த வீட்டை ஒவ்வொரு அங்குலமாக சுத்தி வந்தார்கள். பழைய நினைவுகள் ஒவ்வொன்றும் அவர்களுக்கு மெல்லிய மலராய் மலர்ந்தது. பாதி வீட்டிற்கு பிறகு ஒரு கதவு பூட்டப்பட்டிருந்தது. அதை திறக்க முடியுமா என்று அவர்கள் கேட்க வீட்டம்மாள் பேசினாள்.
‘அதோட சாவி என்கிட்ட இல்லயேங்க… அது ஓனருகிட்ட தான் இருக்கு. பின்னாடி வீடு இடிஞ்சுபோச்சுங்க… அதனால பூட்டி வச்சுருக்காரு’ என்றாள் அவள். அவர்கள் இருவருக்கும் மனம் நொந்து போனது. அந்த வீட்டை கட்டும்பொழுது அவர்களுக்கு உண்டான அனுபவங்கள் அனைத்தையும் நினைத்து பூரித்துக்கொண்டார்கள். இடிந்து போன அவர்களது உயிரை பார்க்க வேண்டும் என்று ஆவல் அவர்களுக்கு எழுந்தது. அந்த வீட்டில் நடந்த ஒவ்வொரு விசயமும் அவர்கள் கண்முன்னே வந்து போக இருவரும் கொஞ்சம் சிரித்து கொஞ்சம் கண்ணீர் விட்டு ஏக்கத்தையும் சந்தோசத்தையும் பரிமாறிக்கொண்டனர்.

‘அப்படியே இருந்திருக்கலாம்  இல்லயா கா…’ என்றான் தம்பி ஆசை குறையாமல். அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த அக்கா, இயந்திர வாழ்க்கையில் பணம் பணமென தேடி ஓடும் ஒரு பிஸினஸ்மேனான தன் தம்பி இப்படி மீண்டும் குழந்தையாக மாறுவான் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை. நினைவுகளுக்கு இருக்கும் அழியாத சக்தியில் இதுவும் ஒன்று என்று நினைத்துக்கொண்டு ஒரு அக்காவாக பேசத்தொடங்கினாள்,
‘என்ன நடந்தாலும் வாழ்க்கை கடந்து போகணும்டா தம்பி’ சொல்லிவிட்டு அந்த வீட்டை ஒரு முறை பார்த்தாள். மீண்டும் பேசதொடங்கினாள், ‘இந்த வீட்டு விட்டு போகறப்போ நீ அந்த தூண பிடிச்சுட்டு அழுத. அப்பா தெருகதவுல கைய வச்சுட்டு உடஞ்சு போயி நின்னாரு. அப்போ நாம இருந்த சூழல்ல இப்படி ஒரு நாள் இதே வீட்டுக்கு ஒரு காருல வருவோம்னு நாம நினைக்கவேயில்ல… காலம் கடந்து தான் ஆகணும் தம்பி. வாழ்க்கைய அதோட போக்குல நாம ஏத்துகிட்டு தானே ஆகணும்’ என்றாள்.
அவள் பேசும்வரை அவளையே பார்த்துக்கொண்டிருந்த தம்பி பேசினான், ‘இந்த வீட்டுல நீ இப்படி விவரமா பேசுறத என்னால… ஹா’ என்று பேசிவிட்டு சிரித்தான். அவள் பதிலுக்கு அவனை செல்லமாக தட்டி வைத்தாள்.
மெதுவாக நடந்து அவர்கள் அந்த வீட்டை விட்டு வெளியில் வந்தார்கள். தெருவை ஒரு முறை அங்குமிங்கும் பார்த்தார்கள். மொட்டை மொட்டையாக இருந்த தெருவில் இப்போது எல்லாம் அடுக்குமாடி வீடாய் மாறியிருப்பதை பார்த்து அச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அக்கா தூரமாக ஒரு இடத்தை காட்டி,
‘அது எந்த இடம்னு ஞாபகம் இருக்காடா தம்பி’ என்றாள். அவன் சிறிது யோசித்துவிட்டு இல்லை என்பதாய் தலையை ஆட்டி தன் அக்காவை கேள்விகுறி கண்களோடு பார்க்க அவள் பேசினாள்.
‘அந்த இடத்தையும் சேர்த்து அந்த வீட்டுக்காரன் இழுத்து கட்டிட்டான். அது சந்தா இருந்துச்சு. நம்ம மாட்ட அந்த வழியா தான் நாம மேய கூட்டிட்டு போவோம். ஒருநாள் நீயும் நானும் கூட்டிட்டு போனப்போ…’ என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே தம்பி ஞாபகம் வந்தவனாய் இணைந்துக்கொண்டான்.
‘மாடு மிரண்டு ஓட… நீயும் நானும் தொப்புனு சாக்கடையில விழுந்து எழுந்து வந்தோம்’ என்றான் சிரிப்பாக. இருவரும் அங்கு சிரித்துக்கொண்டனர். நாலு வீடு தள்ளிய இடத்திலிருந்து ஒரு நடுத்தரவயது நபர் சட்டையை போட்டுக்கொண்டே வெளியில் வந்து இவர்களை பார்த்தான். உற்று நோக்கிக்கொண்டே இவர்களிடம் வர, பட்டென பொறிதட்டியவனாய்
‘டே குமாரு…’ என்று அழைத்துக்கொண்டே நேராக அந்த தம்பியிடம் ஓடிவந்தான். ‘குமாரு… கண்ணன் டா’ என்றான் ஆவலாக.
‘டே கண்ணா…’ என்று ஞாபகம் கொண்டவனாய் தம்பி அவனை சென்று கட்டி அணைத்துக்கொண்டான் ‘எப்படி டா கண்டுபுடிச்ச… இத்தனை வருசத்துக்கு பிறகு’ என்றான் ஆவலாக.
‘முகம் மாறவேயில்லயேடா… அதே கண்ணு… அதே குமாரு… எப்படிடா மறக்க முடியும்… இத்தன வருசமாச்சாடா எங்களலாம் பாக்க வர…’ உரிமையாக கோபம் கொண்டு.
‘அப்படியில்லடா…’ என்று சிறு சிறு சமாதானங்களுக்கு பிறகு இருவரும் தெளிவாக பேசத்தொடங்கினார்கள். கண்ணன் அக்கா பக்கம் திரும்பி,
‘அக்கா நல்லாயிருக்கீகளா? பசங்கலாம் இருக்குல… எப்படி இருக்காக… அப்பப்போ உங்க அத்தை வருவாக… உங்கள பத்தி விசாரிப்போம்…’ என்று கண்ணன் பேசிக்கொண்டிருந்தான்.
அக்காவும் தம்பியும் மாறி மாறி தங்களோடு படித்த அத்தனை பேரையும் சொல்லி அவர்களது தற்கால நிலையையும் நலத்தையும் பற்றி அறிந்துக்கொண்டு மகிழ்ந்தார்கள். நேரம் கடந்துக்கொண்டிருந்தது. ஊர் இருள் சூழ ஆரம்பித்திருந்தது. பழைய நினைவுகள் கடந்து தற்கால வாழ்வை பார்க்கவேண்டிய நேரம் என்று இருவரும் உணர்ந்தனர். இருந்தவர்களிடம் பிரியாவிடை பெற்றுவிட்டு அந்த காரில் ஏறி தங்களுடைய தற்கால உலகத்தை நோக்கி சென்றனர். நீங்கா நினைவுகளையும் ஆசைகளையும் மனதில் தேத்திக்கொண்டு அவர்கள் செல்லும்பொழுது ஊரின் எல்லையும் ஒரு பலகை,
‘நன்றி மீண்டும் வருக..!’
-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி