கொலை

அந்த மேல்புறத்தில் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் சுந்தர். அந்த மின்விசிறி ‘க்ரீக்..’ ‘க்ரீக்…’ என்று சத்தம் கொடுத்துக்கொண்டிருந்தது. அவர் பார்வை அங்கு இருந்தாலும் அவர் மனம் வேறு ஏதோ சிந்தையிலே இருந்தது. சட்டென ஏதோ நினைவு வந்தவராய் எழுந்து வேக வேகமாக வீட்டின் தெருகதவை திறந்துவிட்டு வாசலில் இருந்த தனது பைக்கின் ‘டேங்க்’ பையில் கையைவிட்டு துழாவினார். அவர் கையில் ஏதோ அகப்பட்டுக்கொள்ள வெளியில் எடுத்து பார்த்தார்.

அது ஒரு கசங்கிய நிலையில் இருந்த ஒரு காகிதம். பரபரப்பாக திறந்து பார்த்தார்.
’என்னைத்தேடி உன் உயிரை இழக்காதே…!’ என்று கிறுக்கிய நிலையில் ஒரு கையெழுத்து இருந்தது. அவர் அதை படித்துவிட்டு மீண்டும் சிந்தையில் ஆழ்ந்தார். அப்பொழுது அவரின் சுற்றுசுவரின் பக்கத்தில் இருக்கும் ஒரு பூ சட்டி கீழே சரிந்தது. அவர் அந்த பக்கம் திரும்பி பார்க்கும்பொழுது கருப்பு உடை அணிந்த ஒருவர் சட்டென சுவரை ஏறி குதிப்பதை பார்த்து பதறி கத்தினார்.
‘டே யாரு..? நில்லுடா’ என்று சொல்லிவிட்டு அவன் பாய்ந்த திசையை நோக்கி ஓடினார். ஆனால் அவர் வருமுன்னே அவன் சிறிது தூரம் கடந்து ஓடியிருந்தான். அவர் ஒரே குழப்பநிலையில் இருந்தார். ஏதோ யோசனையோடே வீட்டினுள் நுழைந்து இறுக பூட்டிக்கொண்டார். தனது அறையில் வந்து மெதுவாக படுத்துக்கொண்டு தனக்கு தானே ஏதோ முனகிக்கொண்டார். அவருக்கு அன்று காலையில் இருந்து நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாய் நினைவெழும்பியது.
அவர் அன்று காலையில் வழக்கம்போல அவர் தெருவில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு காவல் நிலையத்திற்கு சென்றார். இரவு ஒன்பது மணி வரை எதுவும் வித்யாசமாக நடைபெறவில்லை. சரியாக 9.30 மணிக்கு ஒரு பெரியவர் சுந்தரிடம் ஓடி வந்தார்.
‘சார்… ஐயோ சார்… மோசம் போயிட்டேன் சார்…’ என்றார் கதறிக்கொண்டே. சுந்தருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. முதலில் பெரியவரை ஆஸ்வாசபடுத்த எத்தனித்து அவரை அமைதியாக்கி இருக்கையில் அமர செய்தார். அவருக்கு ஒரு பாட்டில் தண்ணீரை கொடுத்து அமைதியாக்கினார். பின்னர்,
‘பெரியவரே… நீங்க அமைதியா பேசுனா தான் என்னனு விளங்கிக்க முடியும்.. பதட்டபடாம சொல்லுங்க’ என்றார் சுந்தர்.
‘சார்… அங்… அங்க…’ என்றார் பெரியவர் இன்னும் இழுத்துக்கொண்டே.
‘ஐயா… அமைதியா சொல்லுங்க. யாருக்கு என்ன ஆச்சு?’ என்றார் சுந்தர் பொறுமை இழந்தவராக.
‘சார்… அங்க ஆபிஸ்க்கு போன என் பொண்ண காணும் சார்…’ என்றார் இன்னும் பெரிய கதறலோடு.
‘ஐயா… பதட்டபடாதீங்க… யாராச்சும் ஃப்ரண்ட் வீட்டுக்கு போயிப்பாங்க… விசாரிக்கலாம்… அமைதியா இருங்க… நீங்க பொறுமையா பேசினா தான் எங்களாள முடிவெடுக்க முடியும்’ என்றார் சுந்தர் பொறுப்பாக. ரைட்டரை கூப்பிட்டு ’எழுதிக்கோ’  என்று சைகை காட்டிவிட்டு பேசத்தொடங்கினார்.
‘ஐயா… சொல்லுங்க…’ என்றார்.
’காலையில ஆபிஸ்க்கு வழக்கம் போல கிளம்பி போனா சார். ஆனா என் பொண்ணு திரும்ப வரவே இல்ல சார்’ என்றார் இன்னும் கண்களில் நீர் ததும்பிக்கொண்டு.
‘ஆபிஸ்… நண்பர்கள்… இப்படி விசாரிச்சீங்களா? எதனா பிரச்சனையானு..’ என்றார்.
‘விசாரிச்சுட்டேன் சார். யாருக்கும் தெரியல... ஆபிஸ்ல இருந்து வழக்கமா கிளம்புற போல 7 மணிக்கு கிளம்பிட்டதா சொன்னாங்க’
‘செல்ஃபோன் ட்ரை பண்ணீங்க தானே…’
‘பண்ணிட்டேன் சார்… ஸ்விட்ச் ஆஃப்’ என்றார் பெரியவர். சுந்தர் ஒரு நிமிடம் அங்குமிங்கும் யோசனைகளை போட்டுவிட்டு அவர் பக்கம் திரும்பினார்.
‘ஐயா… கேக்குறேன்னு தப்பா நினைக்க கூடாது. உங்க பொண்ணுக்கு… லவ்…’ என்று சுந்தர் இழுக்கும்பொழுதே அந்த பெரியவர் முகத்தில் ஒரு மாற்றம் உண்டானது.
‘ஆமா சார்… ஒரு பையன்… என் பொண்ணோட ஒண்ணா படிச்சவன்…’ என்றார் இறுக்கமாக.
‘அப்போ அவனுக்கு ஃபோன் போட்டீகளா?’ என்றார் சுந்தர் புது வழி கிடைத்ததாக. பதிலுக்கு அந்த பெரியவர் இல்லை என்பதாய் தலையை ஆட்டினார். அவரிடம் அவனது நம்பர் இருக்கிறதா என்று கேட்டபொழுது அவர் தன் சட்டையில் இருந்த கையடக்க டைரியை எடுத்தே ராகுல் என்ற பெயருக்கு அருகில் இருந்த நம்பரை காண்பித்தார். சுந்தர் அந்த நம்பருக்கு தன் மொபைலில் இருந்து ஒரு அழைப்பு விடுத்தார், அந்த எண் அணைத்துவைக்கப்பட்டதாக பதிவுசெய்யப்பட்ட குரல் சொல்ல அங்கு இருந்தவர்கள் அனைவரும் அதிர்ந்தனர். சுந்தர் இறுக்கமாக அந்த டேபிளில் ஒரு குத்து குத்தினார்.
‘ஐயா… உங்க பொண்ணு லவ் பண்ணினத நீங்க ஒத்துகிட்டீங்களா?’ என்றார் சுந்தர்.
‘ஒத்துகிட்டேனே சார். நேத்து தான் ஒத்துகிட்டேன். அவ என்ன கட்டி புடிச்சு ரொம்ப தேங்க்ஸ்பானு சொல்லிட்டுலாம் போனாளே’ என்றார் இன்னும் கண்களில் கண்ணீரோடு.
‘அப்போ இந்த பையன புடிச்சா விசயம் தெரியும்… வெயிட் பண்ணுங்க ஐயா..’ என்று சொல்லிவிட்டு சுந்தர் அந்த நம்பரின் கம்பேனிக்கு அழைப்பு விடுத்து அந்த நம்பர் எப்பொழுது தொடர்புக்கொள்ள முடிந்தாலும் தமக்கு தகவல் அளிக்கவேண்டும் என்று உத்தவிட்டார். பின் தன்னுடைய கான்ஸ்டபிள் இருவரை அந்த பெண் வேலை செய்யும் அலுவலகத்திற்கு அனுப்பி ஒரு பொதுவிசாரணை செய்ய சொல்லி அனுப்பினார். அதே சமயம் அவர் கிளம்பி அந்த பையன் வேலை செய்யும் கம்பேனிக்கு சென்றார். அங்கு இருக்கும் செக்யூரிட்டியடம் தன்னை அறிமுகம் செய்துக்கொண்ட சுந்தர், அந்த கம்பேனியின் மனிதவள ஒருங்கிணைப்பாளரை  சந்தித்தார்.
‘உங்க ஆபிஸ்ல வேலை செய்யிற ராகுல்… இன்னைக்கு ஆபிஸ் வந்தாரா?’ என்று சுந்தர் அவரிடம் கேட்டார். அந்த நபர் ஒருசிலருக்கு அழைப்புவிடுத்துவிட்டு சுந்தரிடம் பேசினார்.
‘ராகுல் இன்னைக்கு ஆபிஸ் வந்திருக்கார் சார். அப்பரம் அலுவலக வேலையா ஈவ்னிங் நாலு மணி ட்ரெயின்ல கொல்கத்தா போயிட்டாராம் சார். எதனா ப்ராப்ளமா?’ என்றார் அவர். சுந்தர் பதிலுக்கு இல்லை என்பதாய் தலையை ஆட்டிவிட்டு வெளியில் வந்தார். அவர் வெளியில் வந்த சமயம் அவரது அலைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.
‘ஹலோ’ என்றார் சுந்தர்.
‘சார். வணக்கம் நாங்க ஏர்டெல் கம்பேனியில இருந்து பேசுறோம்’
‘சொல்லுங்க.’
‘நீங்க கொடுத்த நம்பர் சென்ட்ரல் ரயில் நிலையம் டவர் பக்கத்துல ஆன் ஆகியிருக்கு சார்… ஒரு அஞ்சு நிமிசத்துக்கு முன்னாடி’ என்று சொல்ல அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு சுந்தர் உடனே அந்த நம்பருக்கு அழைப்பு விடுக்கிறார். இவரது அழைப்பை எதிர் தரப்பில் இருப்பவர் ஏற்க மறுத்து துண்டித்துக்கொண்டே இருக்க ஒரு சமயம் அந்த எண் மீண்டும் அணைத்துவைக்கபடுகிறது. அவர் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே சென்ட்ரல் ரயில் நிலையம் அடைகிறார். மீண்டும் அந்த எண் இயக்கப்பட்டது. மறுபக்கம் ஏர்டெல் நிலையத்திற்கு அழைத்து அந்த நம்பரை ‘ட்ராக்’ செய்ய சொல்கிறார். அந்த தகவலை வைத்துக்கொண்டு அவன் ‘ப்ரீபெய்டு டாக்ஸி’ கவுண்டர் பக்கத்தில் இருப்பதாக அறிந்துக்கொண்டு அருகில் செல்கிறார்.

தன் மொபைல் வழியாக அவனின் மொபைலுக்கு ஒரு அழைப்பு விடுக்கிறார். அப்பொழுது அவரின் பின்னால் ஒரு அழைப்பொலி எழுகிறது. சுந்தர் மெதுவாக திரும்பி பார்க்க அவன் அந்த அழைப்பை கட் செய்துவிட்டு மேலே பார்க்கிறார். சுந்தர் தன்னையே பார்ப்பதை உணர்ந்த அவன் ஒரே ஓட்டம் பிடிக்கிறான். அவனை துரத்திக்கொண்டே ஓடினார் சுந்தர், ஆனால் அவர் மூர் மார்க்கெட் கூட்டத்தில் நுழைந்து தப்பித்து ஓடிவிடுகிறான். நான்கு புறத்தில் எந்த பக்கம் அவன் ஓடினான் என்பது புலப்படாமல் சுந்தர் குழம்பி நிற்கையில் அவரது கான்ஸ்டபிளிடமிருந்து அழைப்பு வருகிறது.

‘சொல்லுயா…’ அழைப்பை ஏற்று சொன்னார் சுந்தர்.
‘சார்… நாங்க அந்த பொண்ணோட ஆபிஸ்க்கு வந்தோம். அதோட க்ளோஸ் ப்ரண்ட் நம்பர் வாங்கி கால் பண்ணினோம் சார்… அந்த பொண்ணுக்கு இந்த ஆபிஸ்க்கு வெளியே எவனோ சுரேஷ்னு தினமும் லவ் டார்ச்சர் பண்ணினானாம் சார். இன்னைக்கு ஏதோ அந்த பொண்ணுகிட்ட ரொம்ப ரஃப்ஆ நடந்துகிட்டானாம். அத நினச்சு அந்த பொண்ணு ரொம்ப ஃபீல் பண்ணியிருக்கு சார்…’
‘அந்த பையன் யாருன்னு விசாரிச்சியா?’
‘அவன் ஏதோ பக்கத்து கம்பேனியில அக்கவுண்டண்டா இருக்கானாம் சார்…’ என்றார்.
‘அவன் நம்பர் வாங்கினீங்களா?’
‘விசாரிச்சு வாங்கிட்டோம் சார். உங்களுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கோம்…’
‘சரியா… நான் பேசுறேன். நீங்க கொஞ்சம் சென்ட்ரலுக்கு வாங்க’ என்று சொல்லிவிட்டு சுந்தர் அந்த அழைப்பை துண்டித்தார். அவர்கள் அனுப்பியிருந்த எண்ணுக்கு அழைப்பு விடுத்தார். சிறிது நேரத்திற்கு பிறகு ஒரு நபர் எடுத்தார்,
‘தம்பி… யாருங்க சுரேஷ்ஆ?’ என்றார் சுந்தர்.
‘ஆமா சார். நீங்க?’ என்றான் அந்த பக்கமிருந்து.
‘நான் R-2 இன்பெக்டர் சுந்தர் பேசுறேன் தம்பி. ஒண்ணுமில்ல ஒரு சின்ன இன்வஸ்டிகேஷன். ஸ்டேஷன் பக்கம் வர்றீங்களா?’ என்றார் அமைதியாக.
’என்ன சார் ப்ராப்ளம்…?’ என்றான் அவன் பதட்டமாக.
‘அட ஒண்ணுமில்ல தம்பி… ஒரு சின்ன என்கொயரி தான்…’
‘சார்… சத்தியமா நான் ஒண்ணும் பண்ணலசார்… அவன் தான் சார் எல்லாத்துக்கும் காரணம்’ என்றான் கண்ணீரை துப்பிக்கொண்டே.
’யார்டா?’ என்றார் சுந்தர் இம்முறை கம்பீரமாக.
‘அவன் தான் சார் அடிச்சான்… நான் எதுவும் பண்ணல சார்…’ என்றான் பதட்டமாக.
‘தம்பி. அழுகாத… நீ எங்க இருக்க இப்ப…’
‘சென்ட்ரல் ஹாஸ்பிடல்லதான் சார்…’
‘சரி அங்கேயே இரு… நான் வர்றேன்…’ என்று சொல்லிவிட்டு உடனே அவர் அவன் இருக்கும் இடத்திற்கு சென்றார். அவன் ஒரு பொது அறையில் தலையிலும், கையிலும் சிறு கட்டுகளோடு இருந்தான். அவர் நேராக அவனிடம் சென்று பேசினார்.
‘என்ன தம்பி ஆச்சு…’
‘சார்… நான் ஒண்ணுமே பண்ணல சார்… நேரா வந்து வண்டிய விட்டுட்டு அவன் தான் சார் பிரச்சனை பண்ணினான்…’ என்றான் இன்னும் அழுகை கண்களோடு.
‘யார் தம்பி…?’
‘யாருக்கு தெரியும்… அவன் பாட்டுக்கு கொண்டு வந்து வுட்டுட்டு நான் தான் வுட்டேன்னு என்ன போட்டு அடிச்சுட்டான் சார். இப்ப உங்களுக்கு வேற கம்ப்ளைண்ட் கொடுத்துட்டான் போல’ என்று புலம்பினான்.
‘தம்பி… இன்னைக்கு காலையில என்ன ஆச்சு?’
‘ஓ…. அந்த பொண்ணு கம்ப்ளைண்ட்டா… சார் சந்தியா… நான் லவ் பண்ணுற பொண்ணு சார். அவள ரொம்ப பிடிக்கும்சார்… அடிக்கடி என் லவ்வ சொன்னேன் சார். நேத்து அவளுக்கு ஆள் இருக்குனு சொல்லிட்டா… ரொம்ப கஷ்டமா போச்சு சார். இன்னைக்கு காலையில ரொம்ப கோபமா போயி அவகிட்ட பேச நின்னா பேசாம போயிட்டே இருந்தா. கைய புடிச்சு இழுத்து நிறுத்தி இத்தன நாளா ஏன் சொல்லலனு கேட்டேன் சார். தெருல போற நாயிகிட்டலாம் இத டெய்லி சொல்லிகிட்டே இருக்க முடியுமானு கேட்டா சார்… துனு துப்பிட்டு நான் பாட்டுக்கு வந்துட்டேன்… பப்ளிக்ல ரொம்ப இன்சல்ட்டா போச்சு சார்…’ என்றான் கவலையோடு.
’அதுக்காக… அந்த பொண்ண கடத்திருவியா?’ என்றார் சுந்தர் கோபமாக.
‘சார்… நானா… சார்… பாக்க வேணா பொறுக்கிமாதிரி இருப்பேன்… ரொம்ப சைல்ட் கேரக்டர் சார். இந்த கடத்துறதுலாம் ஆகாது சார்…’ என்றான் சற்று பயந்தவனாக.
‘டே… சீ… நிறுத்து’ என்று சொல்லும்பொழுதே அவருக்கு அவருடைய கான்ஸ்டபிளிடமிருந்து அழைப்பு வந்தது.
‘சார் சைதாப்பேட்டை கூவத்துல ஏதோ பொண்ணு பாடி கிடக்குதுன்னு மெசேஜ் வந்துருக்கு’ என்றார் பதட்டமாக.
‘அந்த ஐயாவ கூட்டிட்டு நீங்க ஸ்பாட்டுக்கு போங்க… நானும் வந்திடுறேன்’ என்று சொல்லிவிட்டு அவர் அணைப்பை துண்டித்தார். அழைப்பை துண்டித்துவிட்டு இவனை பார்த்து முறைத்துக்கொண்டே அவன் அடிப்பட்ட கைகளை இறுக்கமாக பிடித்து திறுகினார்.
‘ஒரு பொண்ண கொன்னுட்டு கட்டு போட்டுட்டு படுத்தா யாருக்கும் தெரியாதா?’ என்று அவர் கையை இன்னும் இறுக பிடித்து திறுகினார். அவன் வலி பொறுக்கமுடியாமல் கதறி கத்தினான். அவன் கத்துதல் அதிகமாகும் சமயம் மருத்துவமனையில் இருந்த அனைவரும் இவனையே பார்த்தனர். அவர் சட்டென கையை எடுத்துக்கொள்ள அவன் அவன் அமர்ந்திருந்த கட்டிலை குத்திக்கொண்டு அழுதான், தேம்பி தேம்பி.
‘அதான் கைய எடுத்துட்டேன்ல… ஏன் நடிக்கிற இன்னும்’ என்றார் சுந்தர் இன்னும் கோபமாக.
‘நீங்க என்ன வேணா சொல்லுங்க சார். சந்தியாக்கு என்ன புடிக்காம இருக்கலாம். ஆனா அவன்னா எனக்கு உயிர்… அவ…’ என்று சொல்லிவிட்டு கதறினான். அவனை தன்னோட வரும்படி சுந்தர் கேட்க அவன் முதல் ஆளாக வலியையும் பொறுத்துக்கொண்டு வந்தான். அவர் அந்த மருத்துவமனையிலிருந்து வெளியில் வரும் முன்னர் வரவேற்பரையில் ஏதோ பேசிவிட்டு ஏதோ சீட்டு வாங்கிக்கொண்டு வந்தார்.
அவர்கள் அங்கு செல்லும்பொழுதே அந்த பெரியவர் அந்த பெண் பிணத்தை பிடித்துக்கொண்டு கதறிக்கொண்டிருந்தார். சுந்தர் அந்த இடத்திற்கு சென்றதும் பெரியவர் அந்த பிணத்தை காட்டி காட்டி அவரிடம் அழுதார். பக்கத்தில் இருந்தவன் அவளை பிணமாக பார்த்ததும் கதறி அழுதான், அவனை யார் என்ற கண்ணோடு அந்த பெரியவர் பார்க்க சுந்தர் விளக்கினார்.
‘உங்க பொண்ண ஒருதலையா காதலிச்சிருக்காப்புல’ என்றார். உடனே உள்ளுக்குள் கோபம் கொண்டவராய் அந்த பெரியவர் அவனை பிடித்து திருப்பி, அவன் நெஞ்சில் குத்தி,
‘ஏன்டா ஏன்… ஒரு பொண்ணு நிம்மதியா வெளிய போயிட்டு வர கூடாதா? காதல் காதல்னு ஏன் நச்சரிக்கிறீங்க. ஒரு தலையா காதல்னு என் பொண்ண என்ன கொடுமை செஞ்ச… ஏற்கனவே அவ லவ் பண்ணுறனு சொன்ன பாவி எங்க போனான்னு தெரியல… இதுல… ஏன் பாவி… நீயா… நீதான் என் பொண்ண கொன்னியா… சொல்லுடா… சொல்லுடா…’ என்று அவனை அடித்துக்கொண்டே அவர் சாய்ந்தார். அவனின் கதறிய கண்களும், உடம்பும் உறைந்து போய் இருந்தன. பிரம்மை பிடித்தவன் போல நின்றிருந்தான். அப்பொழுது தூரத்தில் ஒரு சிறிய பையன் அவர் வண்டியில் டேங்க் பையில் ஏதோ கைவிட்டுக்கொண்டிருந்ததை சுந்தர் கவனித்தார். ஆனால் குழந்தைகள் ஏதோ விளையாடுகிறார்கள் என்று எண்ணிவிட்டு அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அந்த பிணத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு அவனையும் மருத்துவமனையில் விட்டுவிட்டு சுந்தர் வீட்டுக்கு திரும்பினார்.

அப்பொழுது அந்த கொல்கத்தா டிரெயினிலிருந்த அவர் கேட்ட தகவல் அவருக்கு வந்தது. அந்த பெண்ணின் காதலன் அந்த ட்ரெயினில் வரவில்லை, அவர் சென்னையிலே ஏறவில்லை என்னும் செய்தி சுந்தருக்கு கிடைத்தது. அவரின் கான்ஸ்டபிள்களை அந்த பெண்ணின் காதலனை தேட சொல்லிவிட்டு அவர் வீட்டில் ஆழ்ந்த சிந்தையில் மூழ்கியிருந்தார்.
---
நினைவுகள் மீண்டு வர அவர் அந்த படுக்கையில் உருண்டு படுத்தார். அவர் வீட்டு சுவற்றை ஏறி குதித்து ஓடிய அந்த நபரின் உடலமைப்பு அவருக்கு மீண்டும் மீண்டும் நினைவு வந்தது. சட்டென சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு விறுவிறுவென சைதாப்பேட்டை கூவம் அருகில் சென்று தனது வண்டியை நிறுத்தினார். நடு இரவு, அங்குமிங்கும் சுழன்று பார்த்தார். சைதாப்பேட்டை மேம்பாலத்திற்கு அருகில் சென்று நின்று பார்த்தார். மீண்டும் அங்குமிங்கும் சுழன்றார். தன் பேண்ட் பாக்கெட்டினுள் கைவிட்டு ஒரு சிகரெட்டை எடுத்து பத்தவைத்துவிட்டு யோசித்தார். மீண்டும் சிகரெட்டை பாக்கெட்டினுள் போடும்பொழுது அவர் கையில் ஒரு காகிதம் தென்பட்டது. அதை எடுத்து பார்த்தபொழுது அது அந்த மருத்துவமனையில் அவர் வாங்கி வந்த சீட்டு. சுரேஷ் எந்த நேரத்திற்கு சேர்ந்தான், அவனை யார் சேர்த்தது என்று அந்த ஒரு மணி நேரத்தில் அந்த மருத்துவமனையில் இணைந்தவர் பெயர் பட்டியல் அதில் இருந்தது.

அதை பார்த்துவிட்டு சலித்துபோனவராய் அவர் மாற்றுபக்கம் திரும்பிக்கொண்டார். சட்டென பதறியவராய் அவர் அந்த சீட்டை மற்றொருமுறை பார்த்தார். வரிசையாக பெயர் கொண்டிருந்த அந்த சீட்டில் சுரேஷ்க்கு அடுத்த பெயர் ராகுல் என்றிருந்தது. ’ராகுல்’ அந்த பெண்ணின் காதலனின் பெயர் என்று அவருக்கு பொறி தட்டியது. அவனை யார் சேர்த்தது என்று பார்க்கும்பொழுது அங்கே ‘சந்தியா’ என்ற பெயர் இருந்தது. அவருக்கு பதட்டம், தெளிவின்மை. ஒன்றும் புரியாது அந்த மருத்துவமனைக்கு விரைந்தார். ராகுல் இருந்த அறைக்கு ஓடினார். அந்த அறையில் ஒரு இளைஞன், அவனருகில் ஒரு நடுத்தர வயது பெண்மணி படுத்திருந்தார். அந்த இளைஞன் உடல் முழுதும் காயங்களும் கட்டுகளும் நிறைந்திருந்தன.

பட்டென ஏதோ தோன்றியவராய் சுரேஷ் இருந்த பொது வளாகத்திற்கு சென்றார். அங்கே சுரேஷ் இருந்த கட்டில் காலியாக கிடந்தது. இவர் தவறிழைத்துவிட்டதாக எண்ணி அங்கு இருந்த டேபிளை குத்திவிட்டு பதட்டமாக வெளியில் ஓடி வந்தார். அப்பொழுது தூரமாக இருந்த கதவை திறந்துக்கொண்டு சுரேஷ் வந்தான். சுந்தரை பார்த்ததும்,
‘வாங்க சார்… பாத்ரூம் போயிருந்தேன். இந்நேரம் வந்திருக்கீங்க’ என்றான் விரக்தியாக.
’ராகுல் இங்க தான் இருக்கான்…’ என்றார் அவர்.
‘யாரு?’ என்றான் சுரேஷ் கேள்விக்குறி கண்களோடு.
‘சந்தியாவோட காதலன்’
‘அந்த நாயி… இங்க தான் இருக்கானா… இப்ப இப்ப பாருங்க சார் அவன… என் சந்தியாவ கொன்னுட்டு…’ என்று அவன் பல்லை கடிக்க அவர் அவனை சாந்தபடுத்தினார்.
‘டே… பொறுமையா இரு. நான் அவன்கிட்ட பேசணும். நீயும் கூட வா. ஆனா கோப படக்கூடாது’ என்றார் அழுத்தமாக. இருவரும் அவன் இருந்த இடத்திற்கு சென்றனர். அவனை கண்டதும் சுரேஷ் திடுக்கிட்டான், சுந்தர் என்னவென்று வினவினார்.
‘சார். இவன் தான் சார் என்ன அடிச்சது. சம்பந்தமே இல்லாம ஒருத்தன் என்னய அடிச்சான்னு சொன்னேன்ல… அது இவன் தான் சார். இவன் எப்படி இங்க…’ என்று இழுத்தான் அவன்.
’ஓ… அப்போ இதுல வேற எதுவோ இருக்கு. நீ உன் பெட்டுக்கு போ. நீ இருந்தா அவன் பேசமாட்டான். நான் பேசிட்டு கூப்பிடுறேன்…’ என்று சுந்தர் சொல்ல அவன் முரண்டு பிடிக்க ஒருவழியாய் அவனை அனுப்பி வைத்தார்.
சுந்தர் நேராக சென்று அமைதியாக ராகுலை தட்டி எழுப்பி வெளியில் வர சொல்லி அவனது அம்மாவிற்கு தெரியாமல் பேசத்தொடங்கினார்.
‘தம்பி நான் சுந்தர். R-2 போலீஸ் இன்ஸ்பெக்டர். இன்னைக்கு சாயங்காலம் என்ன ஆச்சு?’ என்றார்.
‘தெரியில சார். யாரோ சிலர் வந்து என்னய போட்டு அடி அடின்னு அடிச்சுட்டு போயிட்டாங்க… உடம்பு சரியானதும் நானே கம்ப்ளைண்ட் கொடுக்கணும்னு இருந்தேன்…’
‘தம்பி அத கேக்கல… நீங்க யாரையோ அடிச்சீங்க போல…’ என்று சுந்தர் கேட்டதும் அவன் சற்று தடுமாறினான்.
‘ஆமா… அது… சார்… அவன் வண்டிய என் வண்டிமேல…’ என்று அவன் இழுக்கும்பொழுதே சுந்தர் பட்டென அறைந்தார். ’டே… உண்மைய மட்டும் சொல்லணும்… சந்தியா விசயமெல்லாம் எனக்கு தெரியும்… ’ என்றார் கண்டிப்பாக.
அவன் கண்கள் கலங்கியது. லேசாக பேசத்தொடங்கினான், ‘பின்ன…. சும்மா இருப்பீங்களா… உங்க பொண்டாட்டிகிட்ட வந்து ஒருத்தன் லவ்வு லவ்வுனு டார்ச்சர் பண்ணினா சும்மா இருப்பீங்களா… அதான் வச்சேன்… நாலு…’
‘என்னது பொண்டாட்டியா…?’
‘அட ஆமா சார்… அது ஒரு வருசம் ஆச்சு. ரிஜஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டோம். அவங்க அப்பா அக்ஸப்ட் பண்ண மாட்டார்னு பயத்துல’
‘ஹூம்…’
‘ஆனா… நேத்து தான் அவ அப்பா ஒத்துக்கிட்டாரு. அந்த சந்தோசத்த நிலைக்கவிடாம இந்த நாயி நடுவுல நடுவுல அலப்பறைய கொடுத்தான்… அதான் வச்சேன்…’
‘சரி உன் ஃபோன் எங்க?’ என்றார் சுந்தர்.
‘அடிச்சவங்கள்ல ஒருத்தன் தூக்கிட்டு போயிட்டான் சார்… நாதாரிங்க… சந்தியா வேற இன்னைக்கு அவங்க அப்பாகிட்ட எல்லாத்தையும் சொல்ல போறேன்னு சொல்லிட்டு போனா… என்ன ஆச்சுனு வேற தெரியல… நாளைக்கு காலையில அவ வந்தா தான் தெரியும்’ என்றான் சோகமாக.
‘ஹூம்… சந்தியா தான் உன்ன இங்க சேத்தாலா…?’
‘ஆமா சார். அவளுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குனு ஈவ்னிங் 4 மணிக்கே ஆபிஸ விட்டு கிளம்பிட்டு எனக்கு ஃபோன் பண்ணினா. அப்போ என்னானு கேட்டப்ப தான் அந்த நாய பத்தியே என்கிட்ட சொன்னா. அதான் வந்து வச்சி வாங்கினேன்..’
‘நீ அவன அடிக்கிறப்போ… சந்தியா எங்க இருந்தா?’
‘அவள ஸ்டேஷன்லயே விட்டுட்டேன் சார். நான் இன்னைக்கு ஆக்சுவலா கொல்கட்டா போறதா இருந்துச்சு. இவன அடிச்சுட்டு 8 மணி ட்ரெயின்ல போயிக்கலாம்னு இருந்தேன். ஆனா அதுக்குள்ள என்னயே அடிச்சுபுட்டாங்க…’ என்றான் மீண்டும் கவலையாக.
‘இங்கிருந்து சந்தியா எத்தன மணிக்கு கிளம்பினா?’ என்றார் சுந்தர்.
‘என்ன ஒரு  7 மணி இருக்கும் சார். அப்போ தான் கரெக்டா ஆபிஸ்லயிருந்து கிளம்புற டைம்மா இருக்கும்னு சொல்லிட்டு கிளம்பினா. நேத்து தான் ஓகே சொன்னாரு அதுக்குள்ள இந்த பிரச்சனைய ஏன் சொல்லணும்னு நாங்க மீட் பண்ணின போலவே காட்டலனு சொன்னா. நானும் ஓகே சொல்லிட்டேன். ஆனா லவ் பண்ணின பொண்ண வீட்டு சம்மத்ததோட கல்யாணம் பண்றதே பெரிய சந்தோசம் தான் இல்ல…’ என்றான் சற்று பெருமையாக. அவனிடம் பதிலுக்கு அவர் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
‘சார்… கேஸ்லாம் எதுவும் இல்லல… இனிமே பண்ணமாட்டேன் சார்’ என்று கத்தி சொல்லிவிட்டு சிரித்தான் ராகுல். பதிலுக்கு சுந்தர் சிரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
’தேங்க்ஸ் சார்… தேங்க்ஸ்…’ என்று உரக்க சொல்லிவிட்டு உள்ளே சென்று அமைதியாக படுத்துக்கொண்டான் ராகுல். மீண்டும் அந்த பொது அறையில் சுந்தரும், சுரேஷ்ம் ஒன்றாக அமர்ந்திருந்தனர்.
‘என்ன சார் சொல்றான் அவன்’ பல்லை கடித்துக்கொண்டு சுரேஷ் கேட்டான். சுந்தர் ஏதோ ஆழ்ந்த சிந்தையிலே இருந்தார். அன்று காலையிலிருந்து அவர் சேகரித்த விசயங்கள் எல்லாம் அவர் கண்முன்னே வந்து வந்து சென்றது. பட்டென அவருடைய கான்ஸ்டபிளுக்கு அழைப்பு விடுத்து சந்தியாவின் தோழி நம்பரை வாங்கினார்.. அந்த பெண்ணுக்கு அழைப்பு விடுத்தார். அந்த பெண் பாதி தூக்க கலக்கத்தில் பேச,
‘ஏ மா… நான் இன்ஸ்பெக்டர் பேசுறேன்… சந்தியா எத்தன மணிக்கு கிளம்பினா…?’
‘அவ… இன்னைக்கு ஒரு ஏழு மணிக்கு… இல்ல இல்ல…. அந்த பையனால கடுப்புல இருந்தா சார். அதனால ஈவ்னிங் 4 மணிக்கே கிளம்பிட்டா சார்…’ என்று அவள் சொல்லிமுடித்ததும் அவர் அழைப்பை துண்டித்துவிட்டார்.

’நைட் அவ அப்பா என்கிட்ட கம்ப்ளைண்ட் கொடுக்க வந்தாரு. பொண்ணு நாலு மணிக்கு கிளம்பிட்டா. ஆனா அவர் ஏழு மணிக்கு கிளம்பினதா ஆபிஸ்ல சொன்னாங்கனு சொல்லுறாரு. ஃப்ரண்ட்ஸ்கிட்ட பேசினப்போ எதனா ப்ராப்ளமானு கேட்டதுக்கு யாரும் எதுவும் சொல்லலனு சொன்னாரு. ஆனா இன்னைக்கு உன்னால ஏதோ அங்க சந்தியா வருந்த்ததுல இருந்துருக்கா. நேத்து மேரேஜ்க்கு ஒத்துகிட்டேனு சொன்னாரு, ஆனா இன்னைக்கு அவர் பொண்ணு லவ் பண்ணுறது தெரிஞ்சும் ராகுல் நம்பர் இருந்தும் அவன்கிட்ட அவர் பேச முயற்சி பண்ணல. அதுவும் இல்லாம லவ் பத்தி கேட்டதும் அவர் முகம் ஒரு மாதிரி மாறுச்சு… அப்போ…’ என்று சுந்தர் இழுக்கும்போதே சுரேஷ் இணைந்துக்கொண்டான்,
‘அவ அப்பாவா?’ என்றான் பயமும் பதட்டமும் குறையாமல். அவர்கள் இருவரும் உடனே வண்டியில் ஏறி அவளுடைய வீட்டிற்கு சென்றனர். ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்க்கும்பொழுது அந்த பெரியவர் அந்த பெண்ணின் போட்டோவை கையில் பிடித்துக்கொண்டு அழுதுக்கொண்டே படுத்திருந்தார். அந்த இருவரும் கதவை தட்ட, அந்த பெரியவர் வெளியில் வந்து கதவை திறந்தார்.
‘என்ன சார்… சொல்லுங்க… அந்த பாவி கிடச்சானா?’ என்றார் அவர் கோபமாக.
‘ம்ம்…’ என்றார் சுந்தர்.
‘எங்க… எங்க அந்த நாயி….’ என்றார் கோபமாக வெளியில் எட்டி பார்த்துக்கொண்டு. சுந்தர் நேராக அந்த பெரியவரை நோக்கியே கையை நீட்டினார். அந்த பெரியவர் பதறிப்போய் இல்லை என்பதாய் பின்னால் ஓடினார்.
‘இன்ஸ்பெக்டர்… என்ன… என்னைய கைகாட்டுறீங்க’ என்றார் பெரியவர் கோபமாக.
‘யார் கொலைகாரனோ… அங்க தானே கை காட்ட முடியும்’ என்றார் சுந்தர்.
’இன்ஸ்பெக்டர்… என் குழந்தைய… நானா? சே…’
‘ஆமா… அதான் எனக்கும் தெரியணும்…’
‘என்ன தெரியணும் உங்களுக்கு? என்கிட்ட இப்படி கேட்க உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு?’ என்று அவர் பதட்டம் கலந்த பயத்தோடு பேச சுந்தர் தாம் கணித்ததை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக சொல்லிவந்தார். அவர் சொல்லிமுடிக்கும்பொழுது அந்த பெரியவர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
‘ஆமா… நான் தான்… நான் தான் கொன்னேன்..’ என்றார் சத்தமாக.
‘ஏன்…?’
‘ஜாதி… என் சொந்தம்… என் தம்பிங்க முகத்துல எப்படி முழிப்பேன்… என் ஊருக்குள்ள எப்படி போவேன்… கீழசாதி பயல என் பொண்ணு கட்டிகிட்டானு எப்படி சொல்லுவேன்… ஒத்துக்குற போல ஒத்துக்குவோம், அப்பரம் பாத்துக்கலாம்னு இருந்தேன். ஆனா… இன்னைக்கு வந்து அவுகளுக்கு கல்யாணம் ஆகிடுச்சுங்குறா… சண்டாலி…’ என்று சொல்லிவிட்டு பல்லை இறுக கடித்துக்கொண்டார் ‘ ஆனா… ஆனா… நான் அவள கொல்லணும்னு நினைக்கல… அடிச்சேனா என் குழந்தைய… அது அது… அந்த சுவருல முட்டி கீழ விழுந்துச்சா… அத எழுப்பினேன்… எழவேயில்ல… என் குழந்தை… நான் தூக்கிவளத்த குழந்தை.. எழவேயில்ல’ என்று சொல்லிவிட்டு திடீரென பித்துபிடித்தவர் போல நடந்துக்கொண்டார்.
‘ஆனா… அந்த பையன அங்க சென்ட்ரல்ல அடிச்சு போட்டது’ என்று சுந்தர் கேட்டார்.
‘அது என் புள்ள பண்ணின வேலை. அவனுக்கு விருப்பமே இல்ல. அதான் அவன் காலையிலே ஊருக்கு போயிட்டு இங்க ஆள் வச்சு அவன அடிச்சான்… அப்பரம் இந்த சம்பவம்… நான் தான் என் குழந்தைய தூக்கிட்டு போயி சைதாப்பேட்டை கூவத்துல போட்டேன்… அவ பண்ணின அசிங்கம் அந்த அசிங்கத்தோட போகட்டும்னு.. என் புள்ளைக்கு போன் பண்ணி சொன்னேன்… அவன் தான் உங்ககிட்ட கம்ப்ளைண்ட் கொடுக்க சொல்லி கேஸ அந்த நாயி பக்கம் திருப்பலாம்னு சொன்னான்… ஆனா நான் சொதப்பிட்டேன்…’ என்றார் இன்னும் அந்த கொலைவெறி கண்களில் தீராமல்.
‘து…’ என்று துப்பிவிட்டு பின்னாலிருந்து சுரேஷ் வேகமாக பாய்ந்து வந்து அந்த கிழவரை ஓங்கி கன்னத்தில் ‘பளார்’ என்று அறைந்தான். அவனை ஆஸ்வாசபடுத்திவிட்டு சுந்தர் தொடர்ந்தார்,
‘அப்போ… என் வண்டியில அந்த பேப்பர வச்சது…?’

‘அதுவும் என் பையன் வேலை தான். ஆள் வச்சு வைக்க சொன்னான்… நீங்க அப்போ தான் அவன தேடியே போவீங்கனு…ஆனா… ஹூம்..’ என்று இழுத்துக்கொண்டார் அந்த கிழவர். சிலபல பேச்சுக்கு பிறகு அந்த கிழவரை சுந்தர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து சென்றார். சுரேஷ் நேராக சந்தியாவின் போட்டோவிற்கு முன்னால் நின்று கண்ணீர் விட்டான். ஒரு சிறப்பு படை தலைமறைவான சந்தியாவின் அண்ணனை பிடிக்க முனைந்துக்கொண்டிருக்கிறது. இரண்டு நாட்கள் சந்தியா வருவாளென காத்திருந்த ராகுலுக்கு அவளின் இறப்பு செய்தி கிடைக்க பிரமை பிடித்து அமர்ந்தவன் அழுகவும் இல்லை, பேசவும் இல்லை – அவன் மனம் அவளோடு இருந்த நாட்களில் மீண்டும் மீண்டும் சுத்தி வந்துக்கொண்டிருக்க வேண்டும். 

- தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..