அந்த கல்யாண மண்டபத்தில்...

அந்த மண்டபத்தில் அவன் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தான். சுத்தியும் மேள தாளங்கள் ஒலித்துக்கொண்டிருந்தது. குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடிவிளையாடிக்கொண்டிருந்தனர். அங்கெங்கே சிரிப்பும், பரபரப்பும் காணப்பட்டது. வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு, தோளில் துண்டை போட்டுக்கொண்டு ஒரு பெரியவர் பரபரப்பாக காணப்பட்டார். நேராக அவனிடம்,
‘தம்பி… சொல்லுங்க… என்னமோ பேசணும்னு சொன்னீகளே’ என்றார் அவசர அவசரமாக.
‘சார்.. தனியா..’ என்றான் அவன் இழுத்துக்கொண்டே.
‘தம்பி… நேரம் இல்ல தம்பி. ஆயிரெத்தியெட்டு வேலை இருக்கு… கல்யாணத்துக்கு அப்பரம் பேசலாமா, இல்ல ஏதேனும் அவசரமா?’ என்றார் பதட்டமாக. அவன் பதிலெதுவும் பேசாமல் தலையை கீழே குனிந்துக்கொண்டான். அவர் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். சட்டென திரும்பி இன்னொரு இளைஞனை அழைத்து, அவன் காதுகளில் ஏதோ ஓதினார். பின் இவனை பார்த்து,
’வாங்க தம்பி… மேல போயிருவோம்’ என்று சொல்லிவிட்டு அவனை அழைத்துக்கொண்டு மேலே சென்றார். அவன் அங்கு அமைதியாக நின்றுக்கொண்டிருந்தான்.
‘தம்பி… என்ன… லவ்ஆ?’ என்றார் அவன் அமைதிக்கு பதிலாய். அவன் திரும்பி அவரை அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்ததாய் பார்த்தான். ஆனால் அவர் முகத்தில் சந்தேகத்தின் கோபங்கள் வெடித்துக்கொண்டிருந்தது. அவன் அமைதியாக தலை கவிழ்ந்துக்கொண்டான்.

‘ஏன் இத்தன நாளா சொல்லல… நீங்களும் சரி. என் பொண்ணும் சரி…’ என்றார் கடுகடுக்கும் அமைதியான குரலில்.
‘யில்ல…’ தொண்டையை கரகரத்துக்கொள்கிறான் ‘இல்ல… ஒரு சின்ன புரிதலின்மை. பேசாம இருந்தோம். என் மேல இருந்த கோபத்துல நீங்க பாத்த மாப்பிள்ளைக்கு ஒத்துக்கிட்டா…’ என்றான் விம்மும் குரலோடு.
‘ம்ம்… என் பொண்ணுகிட்ட பேசுனீங்களா? உங்க மேல இருக்க கோபம் இப்ப போயிடுச்சா…’ என்று அவர் கேட்ட கேள்விக்கு அவன் பதிலெதுவும் பேசாமல் தலைகவிழ்ந்து நின்றான்.
அவர் தலையை ஆட்டிக்கொண்டே சுற்றி திரும்பி பார்த்தார், ‘இப்போ… இந்த ஏற்பாடு இதெல்லாம் நிறுத்த சொல்லுறீங்க.. அடுத்த ஒரு மணிநேரத்துல நடக்க போற கல்யாணத்த நிறுத்த சொல்லுறீங்க… இல்லயா?’ என்றார் இம்முறை கோபம் கொபளிக்க. அவன் அமைதியாக நின்றுக்கொண்டிருந்தான்.
’சொல்லலாம்… தப்பில்ல… இதுல என்ன இருக்கு? ஏனா நீங்க தான் லவ்வ பண்ணுறீங்களே’ என்றார் விரக்தி கலந்த கோபத்தில். ‘ஒரு பத்து நிமிஷம் கொடுங்க… என் பொண்ணுகிட்ட பேசிட்டு வர்றேன்…’ என்று சொல்லிவிட்டு அவர் கீழே சென்றார் அவசர அவசரமாக. மணமகள் அறையில் இருந்த மற்றவரையெல்லாம் வெளியே செல்ல சொல்லிவிட்டு அவர் மட்டும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார். அவன் சொல்லியிருப்பான், அது தான் காரணம் என்று அவள் உணர்ந்திருந்தாள். அவரிடம் அவள் எதுவும் கேட்கவில்லை.
அவர் நேராக அவளிடம் வந்து அவள் முகத்தை திருப்பி கேட்டார்.
‘அம்மா… ஒரு தம்பி வந்துருக்கு’ என்று சொல்லிவிட்டு இழுத்தார். அவள் கண்களில் இருந்து கண்ணீர் கொப்பளித்தது. அவர் அது உண்மையில்லை என்று அவள் வாயிலிருந்து ஒரு வார்த்தை வந்துவிடும் என்று ஓர் நப்பாசை கொண்டிருந்தார்.
’ஏன் மா… ஏன்… முன்னவே சொல்லியிருக்கலாம்ல… அப்பாவுக்கு உன்ன தான்டி என்ன முக்கியம் மா..’ என்று அவர் கண்களும் கலங்க அவர் வார்த்தைகளை திறட்டி எடுத்து கொட்டினார்.
’அப்பா… அவருக்கும் எனக்கும் சண்டையா இருந்துச்சு… ஆனா கல்யாணம் நெருங்க நெருங்க… என்னால முடியலபா…’ என்றாள் இன்னும் அழுத கண்களோடு. அவர் கண்களும் கலங்கி வழிந்துக்கொண்டிருந்தது. அவளை மாடிக்கு உடினே இழுத்துசென்றார், வழியில் மணமகன் அறையில் இருந்த புதுமாப்பிள்ளையும் அழைத்துக்கொண்டு மேலே சென்றார். நெருங்கிய உறவினர்கள் எல்லாம் ஒருமாதிரி பார்த்துக்கொண்டிருக்க, அவர் எதுக்கும் பதிலில்லை என்பது போல மேலே ஓடினார். படிக்கட்டுகளின் கதவை மூடிக்கொண்டார், மேலே யாரும் வராது போல.

மேலே சென்றதும் முதல் முறையாக புது மாப்பிள்ளையை பார்த்தார்.
‘மாப்ள… இந்த நேரத்துல உங்களுக்கு இது…’ என்று இழுத்தார். அவன் ஒன்றும் விளங்காமல் அந்த மூவரையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தான். ’என்ன மன்னிச்சிருங்க…’ என்று சொல்லிவிட்டு அவர் பெண்ணையும், அவள் காதலனையும் ஒரு முறைபார்த்துவிட்டு தலையை கீழே குனிந்துக்கொண்டார். அவளும், அவள் காதலனும் தலையை கீழ் குனிந்திருந்தனர். புது மாப்பிள்ளை புரிந்துக்கொண்டான், அவன் இன்னும் மாப்பிள்ளை ஆகவில்லை என்று. அவனுக்கு மாறி மாறி சிரிப்பும், கோபமும், இயலாமையும் வந்தது. கண்ணீர் சற்று கடிந்திருந்தது.
’ஹா… ஹா… லவ்… யு டூ…’ என்று சொல்லிவிட்டு அவளையும் காதலனையும் காண்பித்தான். ‘ஹா… ஹா… சொல்லியிருக்கலாம்ல…’ என்று சொல்லும்பொழுது அவன் பற்கள் கடித்துக்கொண்டு கண்ணீர் ததும்பிக்கொண்டிருந்தது.
அவன் பட்டு சட்டையில் இருந்த பொத்தான்களை ஒவ்வொன்றாக கழட்டினான். ‘அவ்வளவு தானே… இந்த ரெண்டு மாசத்துல இவள நெனச்சு நான் வேற… ஹா…’ என்று சொல்லிவிட்டு கண்களை துடைத்துக்கொண்டு சிரித்தான்.
‘மாமா…’ என்று சொல்லிவிட்டு தொண்டையை கரகரத்துக்கொண்டான், ‘சார்…’ என்றான் அவர் சற்று தயக்கமாக எழுந்து பார்த்தார். அவனை சார் என்று அழைப்பதை தடுக்க நினைத்தார், ஆனால் சூழல் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

‘நீங்க என்ன சொல்லுறீங்க மாமா…’ என்றான் ஏக்கத்தோடு.
‘மாப்ள… எனக்கு இதுவரை தெரியாதுங்க. இப்ப தான் சொல்லுறாங்க. எனக்கு என்ன முடிவெடுக்கனு தெரியலங்க. என் பொண்ணுகிட்ட உண்மையானு கேட்டேன், அவ பதிலுக்கு கண்ணீர மட்டும் தான் தந்தா…’ என்று சொல்லிவிட்டு அவளை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார். ‘இல்ல… ஏற்பாடு பண்ணிட்டேன்… உங்கள தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு என்னால வற்புறுத்த முடியும். அடம் புடிச்சு போக சொல்ல இது ஒண்ணும் ஸ்கூல் இல்லயேங்க… வாழ போறது நீங்க. உங்க வாழ்க்கைய நான் நாசம் பண்ணிற கூடாதுல்ல. வாழ்க்கையில சின்ன சின்ன பிரச்சனை வரும். வரும்போதெல்லாம் இந்த பையனே அவ மனசுக்கு வருவா… அது தப்பில்லையாங்க. அவ உங்களுக்கு துரோகம் பண்ணலாம்… நான் பண்ணலாமா?’ என்றார் தழுதழுத்த குரலோடு. அவன் கேட்டுக்கொண்டே கண்ணீரை துடைத்துக்கொண்டான், ஒரு பெருமூச்சு இழுத்துவிட்டான். அவரின் கண்கள் கலங்கியிருந்தன.
‘என் பொண்ண வளக்க தெரியாம வளத்துட்டேன் மாப்ள… மன்னிச்சிருங்க…’ என்று சொல்லிவிட்டு அந்த காதலன் பக்கம் திரும்பினார். ‘தம்பி உங்களுக்காக தானே பேசுறேன்… நீங்க பேசுனா என்ன?’ என்றார் அவர். அவன் அமைதியாக அவளையும், மாப்பிள்ளையுமே பார்த்துக்கொண்டிருந்தான் மாற்றி மாற்றி.
‘தம்பி பேசுங்க பா…’ என்றார் அவர் அழுத்தமாக. அவன் அமைதியாகவே நின்றுக்கொண்டிருந்தான். ‘டே…’ என்று வேகமாக அவனை நோக்கி போனார். அவன் பயந்து ஒதுங்க, மாப்பிள்ளை பேசினான்.
‘நிறுத்துங்க…’ என்றான் சத்தமாக. அவர் சட்டென நின்று அவன் பக்கம் திரும்பினார். ‘அவன் பேசமாட்டான்… எப்படி… எப்படி பேசுவான்?’ என்றான் இன்னும் அழுத்தமாக. அவர் தலையை கீழே குனிந்துக்கொண்டார்,
‘ஏன் சொல்லுங்க…’ என்றான் அவன். அவர் பதிலெதுவும் இல்லாமல் அமைதியாக நின்றிருந்தார்.
‘ஏனா.. அவனுக்கு டயலாக் அவ்வளவு தான். இந்த மாதிரி சீன் வரும்னு நாங்க எதிர்பார்க்கவேயில்ல. இதுக்கு டயலாக்கே அவனுக்கு தரலயே..’ என்று சொல்லிவிட்டு அவன் சிரித்தான். அவர் ஒன்றும்புரியாமல் மாப்பிள்ளையையும், காதலனையும் பார்த்தார்.
’எப்படி எப்படி… நிச்சயம் பண்ணியாச்சு பொண்ண வெளியே கூட்டிட்டு போறேன்னு சொன்னா கூடாது. ரொம்ப நேரம் பேசுனா ஃபோன வை வைனு திட்டுவீங்க… பொண்ணுகிட்ட பேசணும்னு கேட்டா வீட்டுக்கு வந்து உங்க கூட்டத்தோட உக்காந்து பேசணும்… நான் காதல் பண்ண கேட்டனா கட்சி மீட்டிங் நடத்த கேட்டனா… அதான் இப்படி ஒரு ஷாக் கொடுத்தேன்… ஆனா செம அப்பா மாமா நீங்க. உங்க பொண்ணு என்ன தப்பு செஞ்சாலும் மன்னிச்சிருவீங்க போல. அதையே என்கிட்ட எதிர்பார்க்க போறா…’ என்று சொல்லிவிட்டு சிரித்தான். அவருக்கு சுயநினைவை இழந்தது போல ஒரு தோன்றல். சுற்றி அனைவரையும் பார்த்து சிரித்தார். ஆனந்த கண்ணீர் சூழ்ந்தது. சிரித்துக்கொண்டே, கண்ணீர் ததும்ப
‘டே… மாப்பிள்ளையா போயிட்டடா நீ… இல்ல…’ என்று சொல்லிவிட்டு அவர் அவன் மீது பாய அவன் தலையை கீழே குனிந்து பரிசு பெறுபவன் போல நின்றுக்கொண்டான். அவர் பாய்ந்து அவனை கட்டிபிடித்துக்கொண்டார். அவனும் சிரித்துக்கொண்டே அவரை அணைத்துக்கொண்டான்.
’சரி சரி… லேட் ஆகுது… கல்யாணத்துக்கு அப்பரம் உங்கள கவனிச்சிக்குறேன்…’ என்று சொல்லிவிட்டு அவனை வர சொன்னார். ஆனால் அந்த காதலனும், அவளும் அமைதியாக நின்றுக்கொண்டிருந்தனர் இன்னும் தலை நிமிராமல்.
‘ஏ.. வா மா.. போலாம்…’ என்றான் மாப்பிள்ளை. அவள் இன்னும் தலை குனிந்துக்கொண்டே நின்றாள்.
‘நீங்க இந்த ஐடியா சொன்னப்போவோ… இப்ப நீங்க விளக்கறப்பவோ உங்களுக்கு தெரியாது.. அந்த உண்மை… நாங்க இங்க சொன்னது எல்லாமே உண்மை… உண்மை உண்மை…’ என்று சொல்லிவிட்டு அவள் கதறினாள். அந்த மாப்பிள்ளைக்கும் இடியே விழுந்தது போல இருந்தது. அந்த அப்பா என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் குழப்பத்திற்கு சென்றார்.

‘ஏ… விளையாடாத டி… வா…’ என்றான் மாப்பிள்ளை.
‘இல்லங்க… இதான் உண்மை. என்னோட இயலாமை. உங்ககிட்ட சொல்லணும்னு நினைக்கிறப்பலாம் முடியாம போச்சு. நீங்க இந்த ஐடியாவ சொன்னப்போ இதயே செய்யலாம்னு தோணுச்சு… இப்ப இங்க…’ என்று சொல்லிவிட்டு அவள் அமைதியாக நின்றாள்.
‘அய்யோ… நானும் உன்ன லவ் பண்றேனே… என்னடி இது…’ என்று சொல்லிவிட்டு அவன் அழுதான் பட்டென அவள் சிரித்துவிட்டாள்.
‘ம்ம்க்கும்… இத எத்தன முறை சொல்ல சொல்லியிருப்பேன்… எப்படிலாம் வாங்க வேண்டியதா இருக்க… வாங்க வாங்க… கல்யாணத்துக்கு லேட் ஆகுது…’ என்று சொல்லிவிட்டு பிகு பண்ணிவிட்டு முன்னால் சென்றாள்.
‘அடிப்பாவி…’ என்று மாப்பிள்ளை அவளை சென்று கட்டிக்கொண்டான். இருவரும் மெதுவாக அந்த படிகளை விட்டு கீழே இறங்கிசெல்ல, ஆனந்த சிரிப்போடு அப்பா அவர்களை பார்த்துக்கொண்டிர்ந்தார்கள்.
காதலனாக நடிக்க வந்த பையன் நேராக அவரிடம் சென்றான். அவர் மணமக்கள் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தார்.
‘நல்ல பொண்ணு… நல்ல மாப்பிள்ளை…’ என்றான் நக்கலாக. அவரும் சிரித்துவிட்டார்.
‘தம்பீ… உண்மையிலே நீங்க…’ என்றார் அவனை பார்த்து.
‘நான் உங்க பொண்ணோட ஆபிஸ்ல ஒர்க் பண்றவன் தான். எனக்கு கல்யாணம்லாம் ஆகிடுச்சுங்க… என் மாமனாருக்கு ஒரு பாடம் புகட்டனும்னு கேட்டேன்… இதுல நடிச்சா ஹெல்ப் பண்றதா உங்க பொண்ணு சொல்லுச்சு. அதான் நடிச்சேன். எவ்வளவு டயலாக் மனப்பாடம் பண்ணியிருந்தேன்… இப்படி கெடுத்துட்டீங்களே சார்.. நாங்க யோசிச்ச சீனே வரலயே…’ என்றான் வருத்தமாக. பதிலுக்கு அவர் சிரித்துவிட்டு கீழே இறங்க முற்பட்டார்.
‘சார்… நான் மனப்பாடம் பண்ணினது வீணா போக கூடாது… ப்ளீஸ் கேட்டுட்டே போங்க சார்..’ என்றான் கெஞ்சலாக.
‘தம்பி… கல்யாணத்துக்கு லேட் ஆகிடுச்சு..’ என்று அவர் முன்ன செல்ல..

‘சார்.. சார்.. ப்ளீஸ் சார்…’ என்று கெஞ்சிகொண்டே ஓடினான். அவர் சிரித்துக்கொண்டே உள்ளே சென்றார்.
-தம்பி கூர்மதியன் 

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!