அந்த காதலில் அன்றொரு நாள்..

அன்று வழக்கம் போல பேருந்துகள் நடைபாதையில் ஏறி பறந்துக்கொண்டிருந்தது. இடது புறம் சென்றுக்கொண்டிருந்த ஆட்டோ சட்டென்று வயிற்று வலி வந்தது போல சுறுக்கி வலது புறம் சாய்ந்தது. அதனால் சட்டென்று ப்ரேக் அடித்த டூவிலர் பின்னால், ‘L’ போர்டு போட்டுக்கொண்டு வந்த ஒரு கார் சடாரென இடித்துவிட அந்த இரண்டு சக்கரத்துக்கும் நாலு சக்கரத்துக்கும் அந்த நடுரோட்டிலே வாய் தகராறு முற்றிக்கிடந்தது. அதை சுற்றி இன்னும் பல பாதசாரிகளும் இருசக்கர ஓட்டிகளும் வேடிக்கை பார்க்க அந்த சாலை இயக்கம் அல்லாது முடங்கி போனது.
 பறபறவென எங்கிருந்தோ ஒரு ட்ராபிஃக் கான்ஸ்டபிள் வர அவரது மிரட்டும் தோரணையில் சம்பந்தபட்ட இருசக்கரமும், நான்கு சக்கரமும் ஓரமாக ஒதுங்கிக்கொண்டது. சிறிது நேரத்தில் அந்த சாலை இயங்கியது. அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த சம்பந்தப்பட்ட இருசக்கரமும் நான்குசக்கரமும் சுமூகமாக பேசி கைகொடுத்துவிட்டு கிளம்பினர். ட்ராஃபிக் கான்ஸ்டபிள் பையில் ஒரு ஐம்பது நோட்டும் ஒரு நூறு ரூபாய் நோட்டும் உள்நுழைந்தது.
 இந்த காட்சிகளை ஆரம்பித்திலிருந்து இறுதி வரை அந்த இளநீர் கடையில் நின்று வழுக்கையான இரண்டு இளநீரை குடித்துமுடித்திருந்த அவன் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான். ‘ஸ்டூபிட் பீப்பிள்’ என்று சொல்லிவிட்டு சட்டென தன் சட்டையின் கையை மேலே இழுத்துவிட்டு கைகடிகாரத்தில் மணி பார்த்தான். அடுத்த நொடி அவனது வண்டியை இயக்கிவிட்டு சட்டென பறந்தான். அவன் வண்டி நேராக ஒரு அடுக்குமாடி கண்ணாடி கட்டடத்தின் வெளியே வந்து நின்றது. அவனது அலைப்பேசியை எடுத்து யாருக்கோ ஒரு குறுஞ்செய்தியை தட்டிவிட்டான். அடுத்த நொடி அவனது அலைப்பேசிக்கு அழைப்பு வந்தது….
 ‘என்ன…’ என்றது அந்த பக்கமிருந்த வந்த பெண்ணின் குரல்.
‘பேசணும்...’ என்றான் அவன்.
‘சொல்லு…’
’நேருல பேசணும்…’
‘இங்க பாரு… என்னால நீ இழுத்த இழுப்புக்கெல்லாம் வரமு..’ அவள் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே அவன் இடைமறித்தான். ‘நான் வெளியே இருக்கேன்…’ என்றான்.
‘என்ன…’ என்றாள் அவள் பதறியவளாய்.
‘உன் ஆபிஸ் வெளியே தான் இருக்கேன்…’ என்றான் இன்னும் அழுத்தமாக.
‘ஓ… அதுக்கு…?’ என்றாள் அவள் குரலில் இருந்த காரம் குறைந்திருந்தது.
‘உன்ன பாக்கணும்…’
‘ஏன்…?’
‘உன்கிட்ட பேசணும்…’
‘ஏன்…?’
‘உன்ன காதலிக்கணும்…’
‘ஏன்…?’
‘உன்ன கட்டிக்கணும்…’
‘ஏன்…?’
‘உன்கிட்ட நிறைய முத்தம் வாங்கணும்…’ என்றான் இம்முறை சத்தம் குறைவாக. அவள் பதிலெதுவும் பேசவில்லை. வெட்கம் கொண்டிருப்பாள் என்று எண்ணி அவன் அந்த கட்டிடத்தின் வெளியே தனியாக சிரித்தான்.
‘என்ன…?’ என்றான் அவன்.
‘ஒண்ணுமில்லையே…’ என்றாள் அவள்.
‘முத்தம்….’ கொஞ்சம் இழுத்துவிட்டு ‘கிடைக்குமா?’ என்றான் கொஞ்சம் பவ்வியமாக. அவள் அங்கு பக்கத்தில் இருக்கும் எவரிடமோ ஏதோ ஆங்கிலத்தில் பேசினாள். அவள் பேச்சின் ஆளுமை தோரணை தெரிந்தது. அடுத்த சில நொடிகள் அந்த அலைப்பேசியில் கடக் முடக்கென்ற சத்தம் கேட்டது. அவள் கையில் அலைப்பேசியை வைத்துக்கொண்டு ஏதோ வேலை செய்துக்கொண்டிருக்கிறாள் என்று அவன் புரிந்துக்கொண்டான். அடுத்த சில நொடிகள் அமைதியாக இருந்தது. அடுத்து அவள் பேசினாள். கொஞ்சம் மூச்சை இரைத்துக்கொண்டே அவள் பேசினாள்,
‘என்ன கேட்ட..?’ என்றாள் அவள். அவனிடம் தனிமையில் பேச அவள் ஆர்வத்தோடு எங்கோ ஓடிதனியே வந்திருக்கிறாள் என்று அவன் புரிந்துக்கொண்டான். அவள் கேட்ட கேள்விக்கு அவன் பதிலெதுவும் சொல்லாமல் சிரித்து வைத்தான்.
 ‘என்ன சிரிப்பு…?’ என்றாள் அவள்.
‘ஒண்ணுமில்லையே…!’ என்றான் அவன் இன்னும் சிரிப்பு அடங்காமல்.
‘ம்ம்… அப்பரம்…’
‘அப்பரம் என்ன… இப்ப ஒரு ஹிந்தி காரன் வந்து சாப்… ஜாவோ சாப்னு என்கிட்ட சொல்ல போறான்…’ என்றான் அவன் கொஞ்சம் சோகமாக.
‘அய்யோ… சாரிடா.. நீ இங்க இருக்கல… மறந்தே போயிட்டேன்டா… டூ மினிட்ஸ்…’ என்று சொல்லிவிட்டு அவள் பரபரப்பாக கீழே இறங்கி ஓடிவந்தாள். அவன் அலைப்பேசியை துண்டித்துவிட்டு தனக்குள்ளே சிரித்துக்கொண்டிருந்தான். அவள் நேராக ஓடிவந்து அவன் பைக்கை பிடித்துக்கொண்டு மூச்சு வாங்கி நின்றாள். அவன் அவளது கண்களை வைத்த கண் வாங்காமல் பார்த்து சிரித்தான்.

‘சே… இதுல தான்டா… இந்த சிரிப்புலதான் விழுந்துட்டேன்… இவன்கிட்ட போயி மாட்டிகிட்டியேடி..’ என்று பொய்யாக பாசாங்கு செய்துவிட்டு அவள் வருந்தினாள். அவன் பதிலுக்கு இன்னும் பற்கள் வெளியில் தெரியும்படி சிரித்தான்.
 ’ஆமா ஆமா… இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல…’ என்றாள் இன்னும் பொய் கோபத்தோடு. அவள் கண்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே அவன் வண்டியில் சாவியை போட்டு திருகினான். வண்டி இயங்கியது. அவளும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
‘அப்பரம்…’ என்றாள் அவள்.
‘ஐ லவ் யு..’ என்றான் அவன். அவள் பதிலுக்கு சிரித்தாள்.
‘சரி கிளம்பவா?’ என்றான் அவன்.
‘என்னது கிளம்பறியா… இதுக்கா என்ன கூப்பிட்ட…’
‘ஆமா…’
‘ஏதோ.. பாக்கணும் பேசணும்னு சொன்னியே டா…’
‘அதான்… பாத்துட்டேன்… பேசிட்டேன்ல…’
‘எது..?’
‘இப்ப பாத்தேன்… ஐ லவ் யுனு சொன்னேன்ல…’ என்றான் அவன் வேறெதுவும் இல்லாதது போல.
‘ஓஹோ… அது சரி… அவனுங்ககிட்ட வேற போயி இதெல்லாம் முடிச்சுடு அதெல்லாம் முடிச்சுடுனு சொன்னேன்… அந்த குரங்கு மூஞ்சன்கிட்ட போயி பர்மிஷன் கேட்க நின்னேன்ல… என்ன செருப்பாலயே அடிக்கணும்…’ என்று அவள் கோபத்தில் கொஞ்சம் கத்திக்கொண்டே திரும்பி நடந்தாள்.
 ‘ஏ… ஏ…. சும்மா சொன்னேன்டி… வண்டியில ஏறு…’ என்றான் அவன் சிரித்துக்கொண்டே கொஞ்சம் சத்தமாக. சிறிது தூரம் சென்றவள் திரும்பி அவனை பார்த்து,
‘ஏன் சார்… வண்டியில ஏத்தணும்னு ஆசைப்பட்டேன்… ஏத்திட்டேன்… இறங்குனு உடனே சொல்லவா…’ என்று கோபமாக சொல்லிவிட்டு அவள் மீண்டும் திரும்பி நடந்தாள். அவன் வண்டியை ஒரு முறுக்கு முறுக்கிவிட்டு அவளது பாதையை மறித்து நின்றான்.
 ‘நீயே இறங்குனாலும் என் கை உன்ன விடாதுடி..’ என்று சொல்லிவிட்டு அவள் கண்களையே உற்று நோக்கினான். சில நொடிகள் அவளும் அவனது கண்களையே பார்த்துவிட்டு சட்டென அவனது வண்டியில் ஏறி உட்கார்ந்துக்கொண்டாள்.
 ‘எங்க போகணும்…?’ என்றான் அவன். அவள் சட்டென கீழிறங்க முற்பட்டாள்.
‘ஏ சாரி சாரி… நானே போறேன்…’ என்று அவன் சொல்லிவிட்டு வேகமாக வண்டியை முறுக்கி அந்த இடத்திலிருந்து நகர்ந்தான். உதட்டின் ஓரம் சிரிப்பை தேக்கிக்கொண்டு அவள் சவுகர்யமாய் உட்கார்ந்துக்கொண்டாள்.
 அந்த வண்டி நேராக அந்த மெரினா கடற்கரையில் சென்று அவர்கள் வழமையாக நிறுத்தும் இடத்தில் நின்றது. அவன் வண்டியிலிருந்து இறங்கி ஒருமுறை உடம்பை மேலும் கீழும் சாய்த்து முறுக்கிக்கொண்டான். அவன் கால்கள் அங்கு இருந்த ஒரு பஜ்ஜி கடையை நோக்கி நடந்தது.
 ‘டே எங்கடா போற…?’ என்றாள் அவள். அவன் அவளை ஒருமுறை திரும்பி பார்த்து,
‘இங்க பாருடி… மனச காயபோடலாம்.. வயித்த காயபோடலாமா… நமக்கு சோறு தானே முக்கியம்…’ என்று சொல்லிவிட்டு முன்னால் திரும்பி மீண்டும் நடக்க ஆரம்பித்தான்.
‘வாயி… வாயி.. வாயி…’ என்று சொல்லிவிட்டு அவள் அவனது பின்னாலே நடந்துசென்றாள். இருவரும் அங்கு சுடப்பட்ட பஜ்ஜிகளை சுட சுட வாங்கி சாப்பிட்டனர். அதன்பின் அவன் ஒரு பெரிய ஏப்பம் விட்டுவிட்டு எழுந்து நடந்தான்.
‘வயிறு நிறஞ்சுடுச்சா..’ என்று அவள் கேட்டாள்.
‘அதுக்குள்ளவா…?’ என்றான் அவன்.
‘அடப்பாவி… உனக்கு சமைச்சுபோடுறத்துக்குள்ள உசுரு போயிரும் போலவே…’
‘ஆமா ஆமா… நீங்க சமச்சுட்டாலும் அது ருசிச்சுட்டாலும்..’ என்று அவன் கேலி செய்ய அவள் செல்லமாக அவனை தட்டினாள். அவன் கைகளை அவள் இறுகபிடித்துக்கொண்டாள். அவன் தோளில் சாய்ந்துக்கொண்டாள்.
 ‘இப்போ ஓடிவிளையாடுற குழந்தைங்க… சீறி பாஞ்சு வர்ற கடல் அலை பத்தி பேசணும்னு தோணுமே…’ என்றான் அவன்.
‘ஆமா டா… எப்படி கண்டு புடிச்ச…’ என்றாள் அவள் ஆச்சரியத்தோடு.
‘இத தானே… அஞ்சு வருசமா கேட்டுகிட்டு இருக்கேன்… அது எப்படி தோளுல சாஞ்சதும் எல்லாத்தையும் ரசிக்க தோணுமோ…’ என்றான் அவன் சலிப்பாக.
‘அதெல்லாம் உனக்கு புரியாது. பெண்ணா இருந்து பாரு… தெரியும்… அந்த ஃபீல்… பெண் யாருக்கும் அடங்கி போகமாட்டா… ஆனா அவ மனசுக்கு பிடிச்சவங்கள என்னைக்கும் ரசிக்க தவறமாட்டா… அவங்க கூட இருக்கப்போ எல்லாமே அழகா தெரியும்…’ என்று சொல்லிவிட்டு அவன் கண்களை பார்த்தாள். ‘இது பொண்ணா இருந்தா தான்டா புரியும்…’ என்றாள் கொஞ்சம் கர்வத்தோடு.
’ஒரு சின்ன ட்ராவல் போதும்…’ என்றான் அவன்.
‘எங்க…?’
‘மும்பைக்கு…’
‘எதுக்கு…?’
‘நீதானே பொண்ணா மாறுன்னு சொன்ன… மாறிட்டு வந்துடுறேன்…’
‘சீ… லூசு… பேச்ச பாரு… உனக்கு ஆண்மை தான்டா அழகே..’
‘அதுக்குள்ள என் ஆண்மை எப்படி மேடம்க்கு தெரிஞ்சுது..? இன்னும் எதுவும் நடக்கலயே…’ என்றான் கொஞ்சம் பவ்வியமாக.
‘ஓய்…’ என்று சொல்லி அவனை செல்லமாக இரண்டு அடி அடித்தாள். கொஞ்சம் நிதானித்து அவள் மீண்டும் பேசதொடங்கினாள்,
‘ஆண்மைனா அது மட்டும் இல்லடா. அது ஒரு உணர்வு. ஒரு பெண்ணுக்கு ஆண்மையா தெரியிற விசயங்கள், அவளுக்கு மரியாதை தரணும், சம உரிமை, சீர்கெட்ட சமுதாயத்தை எதிர்த்து கேள்வி கேட்குற தண்மை, தைரியம், தன்னம்பிக்கை, கொஞ்சம் பாசமான ஆதிக்கம், கொஞ்சூண்டு திமிர்… இதெல்லாம் தான்டா ஒரு பெண்ணுக்கு ஆண்மையா தெரியும்… இதுல எல்லாத்திலும் நீ 200 பர்சன்ட் டா..’ என்றாள் அவள் பெருமிதமாக.
 ‘தேங்க்யூ… தேங்க்யூ… மேடம்…’ என்றான் அவன். அவள் அவனை ஆசிர்வதிப்பது போல கைகளை உயர்த்தி காண்பித்தாள். அங்கு சிறிது நேரம் அமைதி நிலவியது. அவன் பேசினான்,
‘ஆனா உலகத்துல எந்த ஒரு விசயத்துக்கும் இலக்கணமே இல்ல தெரியுமா?’ என்றான் அவன்.
 அவள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். ‘ஆமா டி…’ என்று சொல்லிவிட்டு அவனும் அவளை பார்த்தான். ‘பாக்குற கண்ணோட்டம் தான் இதுல எல்லாமே… என்ன பாக்குற வரை ஆண்மைக்கான இலக்கணம் தேட தோணல உனக்கு… என்ன பாத்ததும் என்னோட குணங்கள் எல்லாம் ஆண்மைக்கான குணங்களா தெரியுது உனக்கு… அவ்வளவு தான்… அத தாண்டி… ஒரு பெண் இப்படி தான் நினைப்பானு பொதுவா எதுவும் சொல்லிட முடியாது இல்லயா..’ என்றான் அவன்.
 ‘இருக்கலாம்… ஆனா… பெண்ணுக்குனு பொதுவான ஒரு குணம் உண்டு தானே…’ என்றாள் அவள்.
‘ஆமா… உண்டு… பெண்ணுக்கான சுதந்திரங்கிறது எல்லா பெண்ணும் விரும்பிறது. ஆனா தப்பு நடந்தா எதிர்த்து கேக்குறது, கொஞ்சம் ஆதிக்கம், கொஞ்சம் திமிர் எல்லாம் எல்லா பெண்களுக்கும் பிடிக்காது’ என்றான் அவன்.
‘அது சரி…’ என்று அவள் சொல்லிவிட்டு கொஞ்சம் சலித்துக்கொண்டாள்.
’ஒருதலை காதல்… ஒரு பொண்ணோட ஃபோட்டோவ மார்ஃபிங் பண்ணி நிர்வாணமா விட்டானே ஒருத்தன்… அவன் ஆம்பிளையா’ என்றான் அவன்.
‘செருப்பாலயே அடிக்கணும் அந்த நாய… பொண்ணுங்க என்ன காட்சி பொருளா… இவனுங்க இஷ்டத்துக்கு ஆடணும்… இல்லனா… து… வெட்கம் கெட்ட நாயிங்க…’ என்று அவள் பொங்கினாள். அவளை ஒருமுறை பார்த்து அவன் சிரித்தான்.
‘சரி… அந்த பொண்ணு இடத்துல நீ இருந்தா என்ன பண்ணியிருப்ப..’ என்றான் அவன்.
‘சீ… எப்படி அப்படி உன்னால யோசிக்க முடியுது..’
‘சொல்லுடி…’
‘உடனே செத்துருப்பேன்… இத்தன நாள் கூட வெயிட் பண்ணியிருக்கமாட்டேன்…’ என்று அவள் சொல்ல அவன் சட்டென அவளது கைகளை பிடித்து திருகினான். அவள் வலி பொறுக்கமாட்டாது அலறினாள்.
’ஏன்டா…’ என்றாள் அவள் கொஞ்சும் அழுகையோடு.
‘தப்பில்லையா… அது உன்னோட உடம்பு இல்லதானே… மார்ஃபிங் தானே…’ என்றான் அவன்.
‘டே… கழுத்துக்கு கீழ எல்லா பொண்ணும் ஒண்ணு தான்டா… அத பாக்குற ஒருத்தன் அந்த முகத்தை வச்சு தான் மீதிய பாப்பான்..’
‘சரிதான்… நீ சொன்னதே தான்… கழுத்துக்கு கீழ எல்லா பொண்ணும் ஒண்ணு தானே… அவன் அவனோட அம்மாகிட்ட பால் குடிச்ச மார்பகம் தானே… அவன் குழந்தைக்கு கழுவிவிட்ட வெளிபுரம் தானே… இதுல என்ன தப்பா இருக்கு… ஆடை உடுத்துறது தான் நாகரீகமா… அது தான் மானத்த காப்பாத்துதா…’ என்றான் அவன்.
‘உனக்கு பைத்தியமாடா… நாம வாழுற சூழல் என்ன… நாம வாழுற வாழ்க்கை என்ன… நம்ம இஷ்டதுக்கு வாழலாம்னா இது வாழ்க்கையே இல்ல. இங்க சில கோட்பாடுகள் இருக்கு… அந்த கோட்பாட நாமலே விலகினாலும் சரி, யாராச்சும் விலக்கினாலும் சரி அசிங்கம் நமக்கு தானே…’
’ஹா… அப்ப ஒரு பொண்ண அசிங்க படுத்தணும்னா ஒரு அரைகுறை ஃபோட்டோஷாப் தெரிஞ்சா போதும் அப்படிதானே’ என்றான் அவன்.
‘அப்படி தானே நடந்துகிட்டு இருக்கு…’
‘அத எப்படி தடுக்குறது?’
‘இந்த நாயிங்கள எல்லாம் கண்டுபுடிச்சு கடுமையான தண்டனை தரணும்…’
’தரலாம்… ஆனா இப்படி ஊருல ஆயிரம் நடக்குது, வெளிய வர்றது ஒண்ணோ ரெண்டோ தான்… அப்போ தண்டனை மட்டும் போதும்னு நினைக்கிறியா?’
‘வேற என்னதான்டா பண்ண முடியும்?’
‘எதிர்க்கணும்… பொண்ணு போதை பொருள் இல்லனு அந்த நாயிங்களுக்கு புரிய வைக்கணும். பொண்ணு கண்ண பாத்து பேசாதவன்லாம் ஆம்பளையே இல்லனு அந்த நாயிங்களுக்கு புரியணும்… இப்படி பண்ணினா ஒரு பொண்ண ப்ளாக்மெயில் பண்ணி அவன் ஆசபட்டத அடையளாம் இல்ல பழிவாங்கலாம்னு எண்ணத்தை அவன்கிட்ட இருந்து புடுங்கணும்…’
‘எப்படி?’
‘நீ ஆரம்பத்துல சொன்னது தான்… கழுத்துக்கு கீழ எல்லா பொண்ணுக்கும் ஒண்ணு தான். அவன் அப்படி ஏதாச்சும் தப்பா செஞ்சா.. செஞ்சிக்கனு சொல்லிட்டு நாம நம்ம பொழப்ப பாக்கணும்… அவன மதிக்கவே கூடாது… அவன் இச்சைக்கோ, அவன் சைக்கோ தனத்துக்கு அடிபணிய கூடாது…’ என்று அவன் சொல்ல அவள் சிரித்துவிட்டாள்.
‘சரி.. நான் அவன கண்டுக்கள… விட்டுடுறேன்… தெருவில இறங்கி நடக்குறேன்… போற நூறு பேர்ல பத்து பேராச்சும் என்னோட அந்த ஃபோட்டோவ பாத்திருப்பான்… ஆபிஸ்க்கு வர்றேன்… என்னோட ஃபோட்டாவ நூறு பேர் பாத்திருப்பான்… இன்னும் மால்ஸ், தியேட்டர், லைப்பரரி, இங்க பீச்… இப்படி வர்றேன்… இங்க ஆயிரம் பேர் பாத்திருப்பான்… என் முகத்தை பாத்ததும் இந்த காம வெறி பிடிச்ச நாயிங்களுக்கு என்னோட மார்ஃப் பண்ணின போட்டோ தானே ஞாபகம் வரும்…’
‘வரட்டுமே…’
‘ஆமா ஆயிரம் பேருக்கு ஞாபகம் வரும்… அதுல ரெண்டு பேரு என்ன அப்ரோச் பண்ணி ரூமுக்கு கூப்பிடுவான்… அதுக்கும் போகவா?’ என்றாள் கோபமாக.
‘ஏ… ஏ… கூல்… இப்படி நம்ம சுத்தி இருக்குறவங்களுக்கோ உனக்கோ நடக்கணும்னு நான் பேசலடி… நடந்துட்டா சாவு ஒரு முடிவு இல்லனு பேசுறேன். மார்ஃப் பண்ணனும்னு அவசியம் இல்ல. இந்த காலத்துல வளர்ந்து வர்ற டெக்னாலஜில நீ எங்க ட்ரஸ் அவுத்தாலும் படம் புடிக்கிறபோலவே பண்ணிடுவாங்க… இந்த மாதிரி கேவலமான புத்தி இருக்கவனுக்கு பொண்ணுங்க அடிபணிஞ்சு போகலனா இந்த புத்திய அடியிலயே அழிச்சிரலாம்…’
‘அது உனக்கு புரியாதுடா… தெருவுல இறங்கி நடக்குறப்போ எல்லோருமே நம்மல ஒரு மாதிரி பாக்குற போலவே இருக்கும். பஸ்ல சாதாரணமா எவனாச்சும் இடிச்சாலும் அந்த எண்ணத்தோட இடிக்கிறானோனே தோணும்… சும்மா எவனாச்சும் நம்மல சைட் அடிச்சா கூட காம பார்வையோனு தான் தோணும்… சுத்தி அசிங்கம் அசிங்கமா இருக்கும்டா…’ என்றாள் கொஞ்சம் கண்கள் கலங்க. அவன் அவளது கண்களையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் கண்கள் இன்னும் பரிதவித்துக்கொண்டிருந்தது. அவள் இன்னும் ஏதோ யோசித்துக்கொண்டிருந்தாள். ஆழ்ந்து சென்றிருந்தாள். அவள் கலங்கிய கண்கள் ஆயிரம் வலிகளை கடத்தியது. அவனது கண்களும் கலங்கிவிட்டன.

‘ஏ சீ… விடு… ஏ குள்ளச்சி…’ என்று அவன் அவளை சமாதானபடுத்த அவள் கண்கள் இன்னும் கண்ணீரை வடித்தது.
‘ஏ தப்புதான்… தப்புதான்… நான் இந்த பேச்ச எடுத்துருக்க கூடாது…’ என்று அவன் சமாதானபடுத்தினான். அவள் கண்களை துடைத்துக்கொண்டு,
‘இல்லடா… மனசுலயிருந்து யோசிக்காம கொஞ்சம் மூளையில இருந்து யோசிச்சா நீ சொல்லுறதும் உண்மை தான். எவனோ செஞ்சதுக்காக நான் என் அம்மா, அப்பா, உன்ன எல்லாரையும் விட்டுட்டு போனா எவ்வளவு பெரிய தப்புல… நீ துடிச்சுருவல’ என்றாள் அவள் இன்னும் கண்கள் கலங்க.
‘கண்ணம்மா… கண்ணம்மா… போதும்… உன்கிட்ட வேற ஒண்ணு முக்கியமா சொல்லணும்’ என்று அவன் சொல்ல அவள் கண்களை நன்றாக துடைத்துவிட்டு என்ன என்று கேட்டாள். அவன் வழியில் கண்டவற்றை சொன்னான்.
‘ஒரு ஆட்டோகாரன் கண்டமேனிக்கு ஓட்டிட்டு போனான். டூவீலர் காரன் கரெக்டா ப்ரேக் அடிச்சுட்டான். பின்னாடி கண்ணாடி போட்டுட்டு ஒரு “L” போர்டு பேக்கு ஒண்ணு நேரா கொண்டு போயி வண்டிய முட்டிருச்சு… அப்பரம் போலீஸ்ட கெஞ்சிட்டு நூறு ரூவா கொடுத்துட்டு போச்சு. சரியான பேக்குடி அந்த ஆளு… அவனும் அவன் மூஞ்சியும்..’ என்று அவன் இழுக்க,
‘இதானா முக்கியம்…’ என்றாள் அவள் சற்று பொய் கோபத்தோடு.
‘ஆமா… இல்லயா…’ என்றான் அவன்.
‘டே… உனக்கு பேச்ச மாத்தகூட தெரியலயேடா… உன்னய கட்டிகிட்டு நான் என்ன பாடு பட போறேனோ… அய்யோ’ என்று தலையில் கைவைத்துக்கொண்டாள்.
‘உனக்கு புரியும்…’ என்று அவன் சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டான். சிறிது நேர உலாத்தலுக்கு பிறகு அவளை மீண்டும் அலுவலகத்தில் விட்டுவிட்டு அவன் வீட்டிற்கு சென்றான். அவளும் சிறிது நேரத்தில் வீட்டிற்கு சென்றாள். இருவர் மனமும் இன்று பேசியதை அலசி ஆராய்ந்துக்கொண்டே இருந்தது.
 அவள் வீட்டினுள் நுழையும்முன்னே அவளின் அப்பாவின் கார் முன்னாள் நசுங்கி இருப்பதை பார்த்து பதறி என்ன ஆனது என்று கேட்க வீட்டினுள் ஓடினாள். அவள் அப்பா,
‘உங்க ஆபிஸ் பக்கத்துல தான் மா… ஒரு டூவீலர் காரன் ஸ்டூபிட் சடன் ப்ரேக் போட்டுட்டான்… பேலன்ஸ் இல்லாம போயி உட்டுட்டன்… ஸ்டூபிட்… இதுல போலீஸ்காரனுக்கு வேற நூறு ரூவா..’ என்று மொனகிக்கொண்டே அவர் உள்ளே நடந்து சென்றார். அவள் அவளது காதலன் சொன்னதை நினைத்து,
‘அடேடேடேய்ய்ய்…’ என்றாள் கொஞ்சம் காதல் கோபத்தோடு. 

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!