ரௌத்திரம் பழகு

வாழ்வில் தினந்தோறும் மாறுப்பட்ட கோபங்களை கொண்டிருக்கிறேன். என்னோடு நெருங்கியவர், அற்று என்னை பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும் என் கோபம் எத்தகையது என்று. நொடிப்பொழுதில் என் எண்ணங்களில் கோபம் கொப்பளித்துவிடும். ஒரு விடயம் நடக்கும்பொழுது நொடிப்பொழுது அதன் சரி மற்றும் தவறாகிய தண்மையை பற்றி யோசிப்பேன். அடுத்த நொடி அது தவறாகுமெனில் யார், எத்தகையவர் என்று யோசிக்காது எனது கோபங்கள் முன் நின்றுக்கொள்ளும். நான் கடந்து வந்த பாதைகளில் என் கோபங்களால், எனது முடிவுகளால் நான் பல மனிதர்களை இழந்திருக்கிறேன். இருந்தும் என்னை சகித்துக்கொண்டு வாழும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வண்டி ஓட்டுவது எனக்கு பிடித்தமான ஒன்று. சாலை விதிகளை மதித்து வண்டி ஓட்டவேண்டும் என்று நான் ஓட்ட ஆரம்பித்த காலத்திலிருந்தே எண்ணிக்கொண்டு அதற்கேற்றவாறு நான் என்னை பழக்கப்படுத்திக்கொண்டேன். அதனால் என்னை ஏதோ வேற்றுகிரக வாசிப்போல பலர் பார்த்திருக்கிறார்கள், நடுசாலையில் பலரோடு மல்லுக்கு நின்றிருக்கிறேன், அரசாங்க பேருந்து ஓட்டுனரிடம் பல வாக்குவாதங்கள், ஆட்டோ ஓட்டுநர்களிடம் சில கைகலப்பு என்று போயிருக்கிறது. எனது வாழ்வியல் அதிகமாக சாலையில் அமைந்தது. எண்ணற்ற சாலை விபத்துகளை பார்த்திருக்கிறேன். அவைகளில் 90 சதவீதம் சாலை விதிகளை மதிக்காததால் தான் நிகழ்ந்தது.

கோடம்பாக்கம் மேம்பாலத்தில் ஒரு விபத்து. விபத்துக்குள்ளானவர் மண்டை உடைந்து பிளவுபடுகிறது. பதறிப்போய் இறங்கி நான் அவர் தலையை இறுக பிடித்துக்கொண்டேன். என் கைகள், சட்டை முழுதாய் இரத்தம். சுற்றி இருந்தவர்களை ஆம்புலன்ஸ்க்கு அழைக்க சொன்னேன், அருகில் இருக்கும் ஆட்டோ காரர்களை உதவிக்கு அழைத்தேன். யாரும் வருவதற்கு தயாராக இல்லை. அவரது மண்டை பிளவுக்கொள்கிறது, எப்பொழுது வேண்டுமாயின் வெளியே குதித்துவிடுவேன் என மண்டைக்குள்ளிருந்து ஏதோ என்னை பயமுறுத்திக்கொண்டே இருக்க அவர் என் கைகளை பிடித்துக்கொண்டு அழுதார்-மயங்கினார் எழுந்தார்-அழுதார். அங்கங்கே நின்றவர்கள் வண்டியை நிறுத்தி எங்களை வேடிக்கை பார்த்துவிட்டு சென்றனர். ரத்த வாடை எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது. வேகமாக ஒரு போலீஸ் அதிகாரி வந்தார்.

‘தம்பி எழுத்தரிங்க…’ என்றார்.

’சார்.. மண்டை உடைஞ்சுருக்கு… விட்டா பிளந்திரும்…’

‘அப்படியே அமுத்தி படுக்கவச்சுட்டு எழுந்திரியா…’ என்றார். நான் முகம் சுளித்தேன். வருந்தினேன்.

‘அட எந்திரிச்சு தொலையா…’ என்றார் கோபமாக. நான் அவரது மண்டையை எனது கைகுட்டை கொண்டு கட்டி படுக்கவைத்துவிட்டு எழுந்தேன்.

‘எதுல வந்தீங்க… என்ன ஆச்சு?’ என்றார்.

‘நான் பைக்ல வந்தேன்.. கூட்டமா இருந்துச்சு… உள்ள பாத்தேன்… இவர் இப்படி கிடந்தார்… அதான்..’ என்றேன்.

‘சரி நாங்க பாத்துக்குறோம்… நீங்க கிளம்புங்க…’ என்றார். நான் தயங்கிபடி நின்றேன்.

‘தம்பி… நீங்க இங்கேயே நின்னா பேச்சு அதிகமாகும்.. நீங்க அதிகமா அலைய வேண்டி வரும். போங்க.. நாங்க பாத்துக்குறோம்… நாயி Drunken drive.. எங்க சொன்னா கேக்குறானுங்க…’ என்று சலித்துக்கொண்டார். நான் அடிப்பட்டு கிடந்தவரை பாவமாக பார்த்துக்கொண்டே வண்டி ஏறிச்சென்றேன். நான் வண்டி ஏறும்போது அவர் தண்ணீ.. தண்ணீர் என்று கேட்டுக்கொண்டிருந்தார். அந்த போலீஸ்கார்ர ஒரு ஆட்டோவை நிறுத்தி தண்ணீர் பாட்டிலை கேட்டார், அந்த ஆட்டோவிலே ஏற்ற முற்பட்டார். ஆட்டோகார்ர தண்ணி பாட்டில் சென்றால் செல்லட்டும் என்று பாட்டிலை கொடுத்துவிட்டு ஜிவ்வென்று பறந்தார். அந்த போலீஸ்கார்ர என்னை பார்த்து முறைக்க நானும் எனது வண்டிய கிளப்பினேன்.

இது நான் முதன்முதலில் பார்த்த ஒரு விபத்து. கோர விபத்து. அதற்கு பின்னால் நான் சாலைகளில் பலவிதமான விபத்துகளை பார்த்திருந்தேன். அலைப்பேசி பேசிக்கொண்டே வண்டி ஓட்டியதால் ஈசிஆர் சாலையில் ஒரு பேருந்தே விபத்துக்குள்ளானது, அளவுக்கு அதிகமாக லோடு ஏத்திக்கொண்டு சென்ற லாரி நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது என்று அடிக்கடி செய்திகளும் மனதிற்குள் பதிந்து போனது. இந்த செய்கைகள் எல்லாம் நான் விதிகளை பின்பற்ற இன்னும் ஆணித்தரமான காரணிகளாய் ஆகிப்போனது. யார் விதியை பின்பற்றாமல் போனாலும் ஏதோ உள்ளுக்குள் கோபமாய் வரும். சிக்னலில் ஒரு நிமிடம் நிற்க பொறுமையில்லாமல் நான் முன்னால், நீ முன்னால் என்று அடித்துகொண்டு ஓடி அடிப்பட்டு என்ன ஆகப்போகிறது. மஞ்சள் நிற ஒளி இருந்தால் வண்டியை மெதுவாக்கி நிறுத்தவேண்டும் என்று தெரிபவர்கள் யாரும் மெதுவாக்குவதில்லை, மஞ்சள் நிறத்தை பார்த்த பிறகு தான் இன்னும் வேகம் கூட்டுவார்கள். ஒரு நிமிடத்திற்காக எத்தனை பேர் வாழ்க்கையை சூறையாட போகிறீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கு தான், இந்த மாதிரி அல்பத்தனமான விடயங்களால் வாழ்க்கையை அழித்துக்கொள்ளாதீர்கள்.

அடிப்படையில் இருந்தே நமக்கு கோளாறு தான். எதை செய்யவேண்டாம் என்று சொல்கிறோமோ அதை செய்துபார்க்க தான் மனம் துடிக்கும். வேகம் வேகம் என்று விவேகமாக செயல்படவேண்டிய இடத்தில் கூட வேகத்தை கூட்டி எந்த பந்தயத்தில் ஜெயிக்க போகிறோம் என்பது தெரியவில்லை. மனித உயிர் இப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது.

விபத்தோ, கொலையோ, தற்கொலையோ இப்பொழுதெல்லாம் ஒன்றுமில்லாத விடயமாகி போனது. விதிகளை மதிக்காதவர், அடுத்தவர்க்கு துன்பம் கொடுப்பவர், ஊரை அசுத்தம் செய்பவர்கள், ஊர் சொத்தை கொள்ளை அடிப்பவர் என எவரை கண்டாலும் கோபம் பொத்துக்கொண்டு வரும். அந்த கோபத்தின் அடிப்படையில் அதை சீர் செய்யும் முயற்சியும், அந்த வேகமும் வேண்டும். பல முறை ஆட்சியர்க்கும், காவலர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கண்களில் தெரியும் குறைகளை மனுவாக எழுதிப்போட்டிருக்கிறேன். என்னால் முடிந்த சின்ன சின்ன குறைகளை முன்னின்று கலைந்திருக்கிறேன். காவாலாளி இல்லாத சாலையில் பெரிய வாகன நெரிசலா, உங்கள் வண்டியை நிறுத்திவிட்டு ஒரு இருவர் சேர்ந்து அந்த நெரிசலை சரி செய்யுங்கள். அதை நான் பலமுறை செய்திருக்கிறேன் என்ற முறையில் இதை நான் உங்களுக்கு சொல்வது தவறல்ல என்று நான் உணர்கிறேன்.

ஊரில் ஒரு தப்பு நேர்ந்தால் அதை எதிர்த்து கோபம் கொள்ள வேண்டும். அதை எதிர்த்து கேள்விகள் கேட்க வேண்டும். இது சரியல்ல தவறு என்று தெரிவின் அதை எதிர்த்து கேட்கும் கோபம் நாம் தரிக்க வேண்டும். ஒரு சமூகம் உருவாக வேண்டும். உண்மையை நெஞ்சை நிமிர்த்தி உரக்க சொல்லும் ஒரு சமூகம் உருவாக வேண்டும். இளைய துடிப்புகள் ஒன்றிணைந்து தவறை தவறு என்று அழுத்தி சொல்லும் சமூகம் வேண்டும்.

காலையில் எழுந்து அலுவலகம் போய்விட்டு, இரவில் தின்றுவிட்டு தூங்கி, சனி ஞாயிறுகளில் ஊர் சுற்றுவது மட்டுமல்ல வாழ்க்கை. அதை நம் முன்னோர்கள் செய்திருந்தால், நமக்கு ஒரு சுதந்திர நாடு கிடைத்திராது. நாளைய சமுதாயத்திற்கு நீ என்ன விட்டு செல்ல போகிறாய் என்பதை உன்னை நீயே கேட்டுக்கொள். உனக்குள்ளே உனக்கான கோபத்தை காட்டு. இந்த சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்க பழகிக்கொள். உன்னுடைய உரிமையை கேள். உனக்கு வேண்டுவதை நீ தான் கேட்கவேண்டும். உனது உரிமைக்காக நீ தான் குரல் கொடுக்க வேண்டும்.

ஓட்டு போடவேண்டும் என்று பலர் பிரச்சாரம் செய்தார்கள். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவன் சரியாக நடந்துக்கொள்ளவில்லை என்றால் கோபம் கொள்ளுங்கள். அவர்களை எதிர்த்து கேட்கும் தைரியம் கொள்ளுங்கள். நமக்கென்ன என்னும் போக்கு அடுத்தவன் வீட்டு விசயத்தில் மட்டுமே வரவேண்டும்-நாட்டில் நடக்கும் அநியாயங்களை பார்த்து நமக்கென்ன என்று செல்பவன் இழிவானவன்.

இந்த உலகம் பரந்துவிரிந்து இருக்கிறது. எங்கிருந்து வந்தோம் எங்கு செல்கிறோம் என்பது நம் புத்திகளுக்கு அப்பாற்பட்டது. ஆனால் நாம் ஜீவித்திருக்கும் நொடிகளும் நேரங்களும் நாம் என்னும் அடையாளங்களுக்கு பொக்கிஷமானவை. அதை அடுத்த வேளை உணவிற்காக மட்டும் செலவிடாமல் விசாலமான பார்வைகள் கொண்டு நாளைய சமுதாயத்திற்கு நல்ல பாதைகளை அமைக்க பாடுபடவேண்டும்.


உங்கள் மீது கோபம் கொள்ளுங்கள். உங்களை நீங்களே மாற்றிக்கொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் தவறுகளை கலையுங்கள். உங்கள் நண்பர்களை பாருங்கள், வீடுகளை பாருங்கள் நெருங்கியவர்களின் தவறுகளை சரிசெய்யுங்கள். வீதியில் இறங்குங்கள் உங்களுக்கு தவறென தெரியும் அனைத்தையும் பார்த்து கோபம் கொள்ளுங்கள். கோபம் இல்லாதவன் பிணத்திற்கு சமம். நாம் பிணமாக நாட்கள் இன்னும் இருக்கிறது. வாழும் வாழ்க்கையில் பிணமான வாழ்க்கை நமக்கு தேவையில்லை, முறுக்கேறும் நரம்புகளும், புடைத்தெழும் மாண்பும் உரித்தாக்குங்கள். ரௌத்திரம் பழகுங்கள்…!

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி