அப்பாவின் கையிறுக்கம்

அந்த அறையின் கதவுகள் மெல்ல திறக்கப்பட்டது. காற்றின் சத்தம் அங்கு அதிகமாக இருந்தது. அடர்மரங்கள் சுற்றி இருந்த அவன் வீட்டில் சுழற்காற்று வீசும் சத்தம் கேட்கதான் செய்தது. பக்கத்திலிருந்த தென்னை மரத்திலிருந்து ஒரு கிளை சரிந்து விழுந்திருக்க வேண்டும். சர்றென்று சுவற்றை உரசிக்கொண்டே தொப்பென்று ஏதோ விழுந்த சத்தம் அங்கு கேட்டது.

அவன் படுக்கையிலிருந்து அவசர அவசரமாக எழுந்து லைட்டை ஆன் செய்துவிட்டான். தன் அறையின் கதவை நன்றாக தாழிட்டு கொள்கிறான். டிவியை ஆன் செய்து கொஞ்சம் சத்தம் அதிகமாக கேட்டான். அவன் வீட்டில் அன்று யாரும் இல்லை. தனிமையில், பலமான காற்று, மரங்களில் பிதறல் சத்தங்கள் என அவன் கொஞ்சம் பீதியடைந்திருந்தான். டிவியை இயக்கி தன்னருகில் யாரோ இருக்கும் பிம்பத்தை அவன் உருவாக்கிக்கொள்ள நினைத்தான்.

ஒவ்வொரு சானலாக அவன் மாற்றிக்கொண்டே வருகையில் கவுண்டமணி காமெடி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த ஒரு சானலில் வைத்தான். அவரின் நடிப்பை பார்த்து சூழல் மறந்து வாய்விட்டு அவன் சிரித்துக்கொண்டிருந்த சமயம் சட்டென மின்சார துண்டிப்பு ஏற்பட்டது. அவனது பழைய பீதி மீண்டும் குடிக்கொண்டது. தன் அலைப்பேசியை எடுத்து டார்ச் அடித்துக்கொண்டான். பூஜை அறைக்கு சென்று ஒரு மெழுகுவர்த்தி கொலுத்திவிட்டு அவன் திரும்புகையில் சமையலறையில் சட்டென சாமான்கள் சிதறிவிழுந்தன.

அவன் நெஞ்சம் பட் பட்டென அடித்துக்கொண்டது. அவன் கால்கள் அங்கு செல்லலாமா வேண்டாமா என்று போர் ஒன்று நிகழ்த்திவிட்டு சட்டென அவன் அறை இருந்த பக்கம் திரும்பிக்கொண்டது. வேகமாக தன் அறைக்குள்ள சென்று அழுத்தமாக தாழிட்டுக்கொண்டான். அவன் நெஞ்சத்தின் பதட்டம் இன்னும் தணியவில்லை. ‘பட்’ ‘பட்’ ‘பட்’ என்று அவனின் நெஞ்சொலிப்பு வெளியில் கேட்கும் அளவுக்கு ஒரு அமைதி அங்கு நிலவியது. வீட்டில் லைட் போட்டது போல வெளியில் மின்னல் பளிச்சென்று ஒளி தந்தது. அடுத்த சில நிமிடங்களில் மழை பொத்துக்கொண்டு ஊத்தியது.

அவன் காதுகளில் எதுவும் சத்தம் கேட்க விரும்பவில்லை. காதில் ஹெட்செட்டை எடுத்து மாட்டிக்கொண்டான். சத்தமாக பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தான். முடிந்த அளவு சத்தமாக அந்த பாடல்களை அவனும் பாடிக்கொண்டிருந்தான். உள்ளுக்குள் இருக்கும் பயம் அவனை ஆட்கொள்ளாது பார்த்துக்கொள்ள அவன் ஏதேதோ செய்துக்கொண்டிருந்தான்.

அச்சமயத்தில்,

‘டப்… டப்… டப்…’ என்று அவனின் வீட்டின் கதவு இடிக்கப்பட்டது. பாடல்களை சத்தமாக கேட்டுக்கொண்டிருந்தவன் காதில் எதுவும் விழவில்லை.

மீண்டும் அவன் வீட்டு கதவு,

‘டப்… டப்… டப்…’ என்று ஒலித்தது. அவன் இன்னும் கதவு இடிக்கப்படுவதை உணரவில்லை. உள்ளூர அவனுக்கு ஏதோ உணர்வு பொறிதட்டியது. சட்டென காதுகளில் இருக்கும் ஹெட்செட்டை கழட்டிவிட்டு சுற்று புறத்தை உன்னிப்பாக கேட்டான்.

இம்முறை கதவு,

‘சடார்… சடார்…’ என்று இடிக்கப்பட்டது. அதுவரை வியர்த்திடாத அவனது முகம் வியர்வையை சற்றென்று துப்பியது. இல்லை, இது பிரமை என்று மனதினுள் நினைத்துக்கொண்டான். மீண்டும் சத்தம் கேட்கிறதா என்று பார்த்தான்.

இம்முறை,

‘டப்… டப்…. சடார்.. சடார்.. சடார்…’ என்று இடித்து பின்னர் கதவு தாழைமீறி ஒரு பிதற்றல் கொண்டு தடார் என்று முட்டிக்கொண்டது. யார் இப்படி கதவை இடிக்கிறார்கள் என்று அவன் பதறி எழுந்து மெதுவாக அறை கதவை திறந்துவிட்டு அடிமேல் அடிவைத்து சென்றான். அங்கு ஒரு மயான அமைதி இருந்தது. மீண்டும் சமையலறையில் சில பாத்திரங்கள் சிதறி விழுந்தன. அவன் உடம்பெல்லாம் இம்முறை வியர்த்து இருந்தது. அவன் அந்த இரவு நேரத்தில் குளித்தவன் போல நின்றிருந்தான். மீண்டும் மின்னல் பளிச் பளிச்சென்று அங்கு ஒளிமின்னியது. அங்கு மீண்டும் கதவு இடிக்கப்பட்டது. இம்முறை அது பேய் இடியாக இருந்தது. கையில் இருந்த மெழுகுவர்த்தியை சட்டென சிதறவிட்டான் அவன். அவன் கால்கள் நடுக்கம் பெற்றிருந்தது. அந்த மின்னல் ஒளியில் ஜன்னல் ஓரத்தில் நிழல் படர்ந்து இருந்தது. பக்கத்திலிருந்த மரத்தில் கிளைகளின் நிழலும் அந்த மனித நிழலோடு சேர்த்துக்கொண்டு ராட்சச ரூபம் பெற்றிருந்தது.

‘யாரு…?’ என்றான் அவன் குரல் கம்மிக்கொள்ள. எதிர்புறத்திலிருந்து பதில் எதுவும் இல்லை. இம்முறை ஜன்னல் இடிக்கப்பட்டது.

‘டப்… டப்… டப்….’ என்று ஜன்னல் வேகமாக இடிக்கப்பட்டது. அவன் குரல் இன்னும் நடுங்குற்றது. வாயிலிருந்து வார்த்தைகள் வரவழியில்லாது துடித்துக்கொண்டிருந்தது.

‘யாருனு கேக்குறேன்ல’ என்றான் இன்னும் உரக்க கத்தி.

‘டே உருப்புடாதவனே… கதவ தொறந்து தொலடா…’ என்று வெளியிலிருந்து ஒரு குரல் வந்தது. அது அவனின் அப்பாவின் குரல். அவன் அடிவயிற்றில் அடைத்துக்கொண்டிருந்த ஏதோ ஒன்று வெளிப்பட்டதாய் அவன் உணர்ந்தான். ஒருமுறை இழுத்து பெருமூச்சு விட்டான். நேராக சென்று கதவை திறந்தான். அவன் அப்பா முழுதும் நனைந்தவராய் விட்டினுள் நுழைந்தார்.

‘ஏன்டா.. கதவை திறக்க எவ்வளவு நேரம்டா.. இந்த மழையில நனஞ்சு… கரண்ட் இல்லாம வந்து… இங்க நீ வேற உசுர எடுக்குற’ என்று அவர் கோபித்துக்கொண்டார்.

‘ஆன்… எனக்கு எப்படி தெரியுமாம் நீங்க இங்க வருவீங்கனு… சும்மா… ஆமா போகலயா?’

‘எங்கிருந்து போக… ஒரு பஸ்ஸூம் இல்ல… கடுப்பேத்தாத…’ என்றார் அப்பா.

‘ஓ… அப்போ போகவே இல்லயா? ஹா… இவ்வளவு நேரமும் பஸ் ஸ்டாண்ட்லயே வா இருந்தீங்க?’ என்றான் பாவமாக.

‘நக்கலு… போயி பாருடா தெரியும். இந்த மழை வேற…’

‘ஆமா ஆமா.. சரி இங்க வந்து கதவ இடிக்க பேசாம ஃபோன் பண்ணலாம்ல?’

‘பண்ணுறாங்க… ஏன்டா நீ வேற? மழையில நனஞ்சு ஃபோன் நாராம்சமா போச்சு…’ என்று அவர் வருந்திக்கொண்டார்.

‘சரி சரி… ஃபோன கொடுங்க.. இந்த துண்ட வச்சி துடைங்க ஈரத்த..’ என்றான் அவன்.

‘அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம்… இருட்டிலேவா இருப்ப… போய் ஒரு மெழுகுவர்த்திய கொலுத்து டா... அப்படியே முடிஞ்சா எனக்கு ஒரு டீய போடுறியா…’

‘கொலுத்தி தான் வச்சிருந்தேன்… நீங்க இடிச்ச இடியில எல்லாம் சிதறிடுச்சு. பேய் இடியா இடிப்பீங்க…?’ என்று சொல்லிகொண்டே அவன் தழுவிக்கொண்டு சமையலறைக்கு சென்றான். மெழுகுவர்த்தியை கொலுத்திக்கொண்டு, இருவருக்கும் டீயை போட்டுக்கொண்டு அவன் வந்தான். அதற்குள் அவன் அப்பா உடையை மாற்றிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவருக்கு ஒரு கப், அவனுக்கு ஒரு கப் என்று வைத்துக்கொண்டு நடுவில் மெழுகுவர்த்தியை வைத்துக்கொண்டு அவன் உட்கார்ந்தான். ஆவி பறக்கும் அந்த டீயை இருவரும் அருந்தினர்.


அப்பா அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். அவன் அப்பாவிடம் கேட்டான்,

‘என்னபா அப்படி பாக்குறீங்க?’

‘இல்ல… இந்த ஒரு நைட் கரண்ட் போனதுக்கு இப்படி பயந்து சாகுறியே… நீ வாழ்க்கையில என்ன பண்ண போறனு நெனச்சேன்…’ என்றார் கொஞ்சம் உதட்டு சிரிப்போடு.

‘அதெல்லாம் பாத்துக்கலாம்…’ என்றான் அவன் அலட்சியமாக.

‘டே… இந்த புத்திய எப்படா மாத்திக்க போற… பாத்துக்கலாம் பாத்துக்கலாம்னு… என்னதான் புத்தியோ’ அப்பா சலித்துக்கொண்டார்.

‘என்னபா எப்ப பாத்தாலும் எதனா குறை சொல்லிக்கிட்டே இருக்கீங்க. லைஃப்ப காம்ப்ளிகேட் பண்ணிக்காதீங்க பா… அப்படியே வாழ்ந்துட்டு போயிறனும்..’

‘அட அட அட…. என்னமா பேசுற டா… அதான்.. பர்ஃபெக்ட்… புரிஞ்சுக்கோ… நான் என்னைக்கும் லைஃப்ப காப்ளிகேட் பண்ணினது இல்ல… எந்த சூழ்நிலையிலயும் உடைஞ்சு போனதில்ல.. தைரியமா நின்னுருக்கேன்.. உன்னால முடியுமா?’

‘இந்த ராத்திரில… இந்த மொக்க பேச்சு அவசியமா?’ என்றான் அவன் கொஞ்சம் சலிப்போடு.

‘ஆமா ஆமா… மொக்கையா தான்டா இருக்கும். ஏனா உனக்கு தான் தைரியம் இல்லயே..’

‘யாருக்கு..? எனக்கா?’

‘பின்ன எனக்கா?’

‘ஹலோ… அப்பானு பாக்குறேன்…’

‘ஓஹோ… இல்லனா…’

‘பொங்குனு வாயில கொடுப்பேன்…’

‘ஏன் சொல்லமாட்ட… நான் இல்லாம உன்னால ஒரு வேலை உருப்புடியா செய்ய முடியுமா டா…? வயசு ஆச்சுனு தான் பேரு. வேலைக்கு போறனு தான் பேரு. எதனா உருப்புடியா செய்வியா? உன் அம்மா உன்ன என்கிட்ட விட்டுட்டு போயிட்டா. அஞ்சாவது படிக்கிற வரை உனக்கு ஜட்டியே போட தெரியாதே…’ என்று சொல்லிவிட்டு உதட்டை பிதுக்கிக்கொண்டு ‘புர்.. புர்…’ என்று சிரித்தார் அப்பா.

‘யோவ் அப்பா… நக்கலடிக்கதயா… என்னால நீ இல்லாம எத வேணா செய்ய முடியும்… என்ன நீ இருந்தா கொஞ்சம் சப்போர்ட்டா இருப்ப அதான்…’

‘ஆமா ஆமா… சப்போர்ட்டாம்… காமெடி ஃபெல்லோ..’

‘அப்பா… ரொம்ப கிண்டல் பண்ணுறபா நீ… கொன்னுருவேன் அப்படியே…’ என்று அவன் கதற அவர் வாய்விட்டு சிரித்தார். எழுந்து முன்னால் நடந்து சென்று மெழுகுவர்த்தியை பிடித்துக்கொண்டார். அங்கு சுவற்றில் மாட்டியிருந்த ஒரு படத்தின் முன்னால் சென்று மெழுகுவர்த்தியை உயர்த்தி பிடித்தார். அவரும் அவரது மனைவியும் இருந்த படம் அது. அதை பார்த்துக்கொண்டே அவர் பேசினார்,

‘உங்கம்மாவும் நானும் அந்த காலத்துலயே லவ் மேரேஜ். எங்களுக்கு துணையா யாரும் இல்ல. தனியான வாழ்க்கைய வாழ ஆரம்பிச்சோம். ஆனா எங்க வாழ்க்கை ஒரு முழுமையடையிற முன்னவே அவ நம்மல விட்டு போயிட்டா. அந்த சில வருடங்கள் அவ இல்லாம என்னால எதுவுமே பண்ணமுடியாது. அவ போன பிறகு உன்ன வேற வச்சுகிட்டு ஒரு போராட்டமே நடந்துச்சு. என் உயிர் அவ. என் உலகம் அவ. ஆனா அவள தாண்டியும் எனக்கு உலகம் இருந்துச்சு. அத நான் உணர்ந்தேன். அத நோக்கி போனேன். அவ இல்லாம எல்லாத்தையும் செஞ்சேன்… உயர்ந்து நிக்கிறேன் இப்ப உன் முன்னாடி. என் அருமை பையனோட’ என்று சொல்லும்பொழுது அவரின் கண்கள் கண்ணீரை பெருக்கிக்கொண்டிருந்தது. அவன் அப்பா கண்ணீர் பெருகுவதை பார்த்து எழுந்து வந்து,

‘எல்லோருக்கும் தனி உலகம் இருக்குப்பா… எல்லோரும் தன்னிச்சையா ஒரு நாள் செயல்படுவாங்க. நீங்க சொல்லிகொடுத்தது தான் இது. இப்ப எதுக்கு அத நினைச்சு ஃபீல் பண்றீங்க… விடுங்கபா… ரொம்ப சென்டிமெண்டா போகுது…’ என்று அவன் சொல்ல அவர் கண்களை துடைத்துக்கொண்டு,

‘ஆமா ஆமா… யார் அந்த பொண்ணு.. அந்த பொண்ணு அழுதுருந்தா உருகியிருப்பீங்க… நான் தானே அழுதது’ என்று பொய் கோபம் கொண்டார்.

‘அப்பா….’ அவன் செல்ல கோபமாய் பேசினான்.

‘டே டே… தெரியும்டா … நடிக்காத…’

‘அப்பா.. அவ ஜஸ்ட் ஃப்ரண்ட் … எத்தனை முறை சொல்ல…’

‘டே … என் பையன பத்தி எனக்கு தெரியாதா? அந்த பொண்ண பாக்குறப்போ உன் கண்ணு எப்படி இருக்கும் தெரியுமா?’
’அப்பா… இப்ப வரை அப்படி எனக்கு தோணல பா.. ஆனா தோணினா உன்கிட்ட தான் முதல்ல சொல்லுவேன்…’

‘லவ் யு டா… அந்த பொண்ணுனா என்கிட்ட நீ கேக்கவே வேணா.. டபுள் ஓகே டா.. நல்ல பொண்ணுடா அவ…’ என்றார் அவர் சிரித்துக்கொண்டே. சட்டென பொறி தட்டியவராய், ‘டே.. இன்னும் ஆபிஸ்ல கோபகாரனா தான் இருக்கியா?’  என்றார்.

‘ஏன்பா… அப்படி தான் இருக்கேன்…’

‘மாறிடனும்டா… எல்லாம் மாறனும். நம்ம இயல்ப வேலை செய்யிற இடத்துல காட்ட கூடாது. இந்த சமூகத்து மேல காட்டு. இந்த உலகத்து மேல இருக்குற கோபத்த எதிர்த்து காட்டு, அநீதய எதிர்த்து குரல் கொடு, சமுதாயத்துக்கு நல்லது செய், தேவையிருக்குறவங்க பாத்து உதவி செய், பெண்கள மதிக்கணும், குழந்தைகளோட விளையாடு, நல்ல கல்வி சொல்லிக்கொடு உன் குழந்தைகளுக்கு, நல்ல வாழ்க்கைய உணர்த்து… என் சிற்றரவுக்கு எட்டுன அளவு உனக்கு செஞ்சேன் அதை தாண்டி ஒரு நல்ல உலகத்த உன்னோட அறிவ கொண்டு நீ செய்யணும்டா…’ என்று அவர் உணர்ச்சி பொங்க பேசினார். அவன் அவரை உற்று பார்த்துக்கொண்டிருந்தான். அவர் மெல்லியதாய் ஒரு சிரிப்பு சிரித்தார்.

உள்ளே அவனது அலைப்பேசி ஒலித்தது. அவன் ஏதோ யோசனையில் ஒன்றும் பேசாமல் எழுந்து உள்ளே சென்றான். அவனது படுக்கையிலிருந்த அவனது அலைப்பேசியை எடுத்து பார்த்தான். அதில் ‘அப்பா…’ என்று காட்டியது. அவன் பதறி சட்டென வெளியில் ஓடிவந்தான். அங்கு அப்பா இல்லை. அவர் குடித்துவிட்டு வைத்த டீ டம்ளர் அங்கேயே தான் இருந்தது. அவரது பேனா அந்த டேபிளில் இருந்தது. அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அவன் அலைப்பேசியை எடுத்து பேசினான்,

‘ஹலோ…’ என்றான்.

‘சார் யார் சார் நீங்க… இந்த ஃபோன் உங்களுக்கு தெரிஞ்சவர்தா?’

‘ஆமா… அப்பாது..’ என்றான் இன்னும் அதிர்ச்சி நீங்காமல்.

‘சார் நான் மதுராந்தகம் போலீஸ் ஆபிஸர் பேசுறேன். இங்க விழுப்புரம் போற வழியில பஸ் ஆக்ஸிடண்ட் ஆகி நிறையா பேர் டெட்.. அதுல ஒருத்தர் பையில இந்த ஃபோன் இருந்துச்சு.. .கொஞ்சம் வாரிகளா?’ என்றார். அவன் கையிலிருந்த ஃபோன் சட்டென கீழே விழுந்து சிதறியது. அவன் உறைந்து போய் நின்றான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் தானாக வழிந்தது.

‘அப்பாஆஆஆ…’ என்று அவன் மெல்லியதாய் இழுக்க அவன் அப்பா சற்று முன்பு பேசிய அத்தனை காட்சியும் அவன் கண்முன்னே விரிந்தது. மேஜை மேல் இருந்த அவரின் பேனாவின் கீழே ஏதோ பேப்பர் இருப்பதை பார்த்து அவன் கைகள் அங்கு போனது. அதில்,


‘நீ விருப்பபட்ட பேனா, இனி உன்னுடையது. நீ சொன்னது போல தான். எல்லோருக்கும் உலகம் இருக்கு. உன்னோட உலகத்த நீ பாக்க வேண்டிய நேரம். என் கைய விட்டுட்டு நடந்து போடா கண்ணா. லவ் யூ.. நம்பிக்கையுடன் – உன் அப்பா’

-தம்பி கூர்மதியன் 

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி