வழிவகையற்றாதல்

அவன் அமைதியாக வீட்டின் மாடியில் உலா வந்துக்கொண்டிருந்தான். அவனின் அலைப்பேசி மணி அவ்வபோது ஒலித்து ஒலித்து அடங்கியது. அவன் அதை பொருட்படுத்தாமல் எதையோ யோசித்துக்கொண்டே இருந்தான். திடீரென ஏதோ முடிவு எடுத்தவனாய் திரும்பினான். அவனின் அலைப்பேசி மீண்டும் ஒலித்தது. எடுத்து பேசினான்.

‘ஹலோ..’ என்றான்.

‘ஹப்பா.. என்னங்க.. எவ்வளவு நேரம் ஃபோன் எடுக்க..’

‘அதான் எடுத்துட்டேன்ல. சொல்லு..’ என்றான் மிடுக்காக.

‘என்ன சொல்லு. வரலயா? இன்னைக்கு டாக்டர் வர சொன்னாங்கல…’ என்று அவள் கேட்க அவன் பதிலெதுவும் பேசாமல் அமைதியாகவே நின்றான்.

‘என்னங்க… இருக்கீங்களா?’ என்றாள் இம்முறை அழுத்தமாக.

‘ம்ம்…’

‘என்ன கிளம்பிட்டீங்களா?’

‘இல்ல… நீ வீட்டுக்கு வா..’

‘ஏன்.. என்ன ஆச்சு..?’

‘நீ வீட்டுக்கு வாயேன்..’

‘ஏங்க.. டாக்டர்கிட்ட..’ என்று அவள் இழுக்கும்பொழுதே அவன் தடுத்தான்.

‘நான் மதியமே போயிட்டு வந்துட்டேன். மதியமே போயிட்டு வந்துட்டேன். என்னால உனக்கு ஒரு குழந்தைய தர முடியாதுனு சொல்லிட்டாங்க… போதுமா? நான் அதுக்கு லாயக்கி இல்லனு சொல்லிட்டாங்க போதுமா…’ அவன் அழுகை ஆத்திரம் அடைத்தது. கண்ணீர் கசிந்தது. வார்த்தை தடுப்பட்டது. ‘இன்னும் என்ன கேட்கணும்… ஹான்.. இவன் எதுக்கு நமக்குனு தோணுதா? இல்ல என்ன…?’ என்று அவன் ஆத்திரம் பொங்க கேட்டான்.

‘சீ பொறுக்கி… வரேன்டா.. கிளம்பிட்டேன்…’

‘ஏன்… ஏன் வரணும்.. வராத.. என் மூஞ்சிய நீ பாக்கவேணாம்.. இந்த லாயக்கி இல்லாதவன் மூஞ்ச..’ என்று இன்னும் அவன் ஆத்திரம் பொங்க கத்த அவள்  பேசினாள்.

‘கண்ணா… என்னடா இது… எதுக்கு இப்படி அழுகுற? எனக்கும் அழுகை வருதுடா… நீ அழுக கூடாதுடா.. ப்ளீஸ் டா.. செல்லமில்ல.. தோ வந்துட்டேன்டா.. 15 மினிட்ஸ்.. தோ கிளம்பிட்டேன்டா.. ப்ளீஸ் டா’ என்று அவள் சொல்ல சொல்ல அவனிடமிருந்து பதிலில்லை.

‘கண்ணா…’ என்றாள் இம்முறை கேள்விக்குறியோடு. அவன் ஒற்றை ‘ம்’ என்றான்.

‘எதனா பேசுடா… தோ வந்துடுறேன்டா.. நான் இல்லாம நீ எதுக்கு அங்க போன.. சூ… லவ் யு டா கண்ணா… நீ எதனா பேசுடா.. நான் பேசிகிட்டே அங்க வந்துடுறேன். தோ கார் எடுத்துட்டேன்’ என்றாள்.

அவன் ஒருமுறை மூச்சு உள்ளாற வாங்கிக்கொண்டான். தொண்டையை கரகரத்துக்கொண்டான். ‘இல்ல.. நீ வா… நான் நார்மலா தான் இருக்கேன். சாரி அப்படி பேசுனதுக்கு. நீ வா… வண்டி ஓட்டுறப்போ ஃபோன் பேச கூடாது. வா… நான் வெயிட் பண்றேன்…’

‘ம்ம் சரிடா.. தோ வந்துட்டேன்.. லவ் யு…’

‘ம்ம்…’

‘லவ் யு சொல் டா…’

‘லவ் யு டூ…’ என்றான் அதில் உணர்ச்சி இல்லாமல். அவள் அதை பொருட்படுத்தவில்லை.

‘குட் பாய். தோ வந்துட்டே இருக்கேன். பை’ என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக வண்டியை இயக்கிவிட்டு வேகமாக வந்தாள். அவன் அதற்குள் தன் ரூமிற்குள் தஞ்சம் புகுந்திருந்தான். அவள் அவனை தேடிக்கொண்டு ரூமுக்குள் வந்தாள்.

அவன் அவளை பார்த்ததும் கண்ணீர் விட்டான். அவள் நேராக சென்று அவனை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள். அவள் கண்களும் கண்ணீரை கூட்டிக்கொண்டிருந்தது. ‘இல்ல டா.. இல்ல டா..’ என்று அவனின் தலையை தடவிக்கொடுத்துக்கொண்டே அவளும் கண்ணீர் விட்டாள். அவன் முகத்தை எழுப்பி ஆஸ்வாசபடுத்தி அமைதியாக்கிவிட்டு அவன் நெற்றியில் ஒரு முத்தமிட்டாள்.

அவர்கள் சிறிது நேரத்தில் அங்கு அமைதியாக நின்றார்கள். அவள் அவனை படுக்கவைத்துவிட்டு உள்ளே சென்று இரண்டு டீ போட்டு எடுத்துக்கொண்டு வந்தாள். அவனிடம் கொடுத்துவிட்டு அவன் அருகே அமர்ந்துக்கொண்டாள்.

’அது சரி… நீ ஏன் டா என்னை விட்டுட்டு போன…?’ என்று அவள் டீயை வைத்துக்கொண்டே கேட்டாள். ஆவிபறக்கும் அந்த டீ அவன் முன்னே இருந்தது. அவன் அமைதியாக இருந்தான்.

‘சொல்லுடா…’ என்றாள் அழுத்தமாக.

‘ஏன் உன் புருசன் ஆம்பள இல்லனு அந்த டாக்டர் உன்கிட்ட சொல்லணும்னு ஆசையா உனக்கு?’ என்றான் இம்முறை பல்லை கடித்துக்கொண்டு கோபமாக. சட்டென அவளின் கைகள் அவன் கன்னங்களில் அறைந்தது. அவன் அதிர்ச்சியில் உறைந்தான்.

‘பிள்ளை கொடுக்குறவன் மட்டும் தான் ஆம்பளையா? உன்ன போல பெண்ண மதிக்க தெரிஞ்சவன் எத்தனை பேர் இருக்கான்? நீ தான்டா ஆம்பள. ஆம்பள சிங்கம். இப்படி பேசாத..’ என்றாள் இம்முறை கையை முன்னால் உயர்த்திக்கொண்டு. அவன் தலையை ஆட்டிக்கொண்டே இருந்தான் ‘இல்லை’ ‘இல்லை..’ என்பதாய்.

அவள் அமைதியாக நின்று பார்த்தாள்.

‘என்ன’ என்றாள் மிடுக்காக.

‘நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்…’

‘என்னது?’

‘நீ இன்னொரு..’ என்று இழுத்தான்.

‘என்ன… என்ன இன்னொரு’ என்றாள் இம்முறை புரிந்தவளாய் கொஞ்சம் கோபம் கொப்பளிக்க.

‘வேற ஒருத்தர… ஆம்பளைய பாத்து கட்டிக்கோ’ என்றான் இன்னும் ஆத்திரம் அடைத்துக்கொள்ள.

‘டே… படுபாவி.. என்ன வார்த்தைடா சொன்ன. என்ன வார்த்தை. து… மனுசனா நீ… நீ தான்டா என் ஆம்பள… நீ தான் என் ஆம்பள… எனக்காக பழிய ஏத்துகிட்டு அத உண்மையாக்கணும்னு என்னலாம் பேசுறடா நீ.. நான் என்ன பதில் சொல்லுவேன்னு தெரிஞ்சு தானே கேக்குற.. பைத்தியக்காரா… அந்த டாக்டர் என் ஃப்ரண்ட் டா.. ஸ்டூபிட்’ என்று சொல்லிவிட்டு அவள் முகத்தை பொத்திக்கொண்டு அங்கேயே சுருண்டு அழ ஆரம்பித்தாள். அவன் பதறினான். அவன் கைகள் நடுக்கியது. குரல் தொண்டையிலே மாட்டிக்கொண்டது. கட்டிலிருந்து அவசரமாய் கீழே இறங்கி அவள் பக்கத்தில் ஓடினான்.

‘ஹே ஹே… இங்க பாருடி.. ஏ… இங்க பாருடி..’ என்று அவளை தடவிக்கொண்டு அவள் தலையை தூக்கிக்கொண்டு தன் மடியில் வைத்துக்கொண்டு தடவிக்கொடுத்தான். அவள் பட்டென எழுந்து அவன் கன்னத்தில், நெற்றியில், உதட்டில் மாறி மாறி முத்தங்களை அழுதுக்கொண்டே பதித்துவிட்டு அவனை இருக்க கட்டிக்கொண்டாள். அவனும் அவளை இறுக கட்டிக்கொண்டான். அவன் கண்களும் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது.

‘ஏன் டா.. பழிய நீ ஏன்டா ஏத்துக்குற?’ என்றாள் இன்னும் கட்டிபிடித்ததை விடாமல் அழுகை குரலோடு.

‘இல்ல மா.. இல்ல மா.. அதெல்லாம் ஒண்ணுமில்ல மா…’ என்றான் இன்னும் அழுகையோடு.

‘என்ன உனக்கு அவ்வளவு பிடிக்குமாடா’ என்று கேட்டாள் அணைப்பை விலக்கிக்கொண்டு அவன் முகத்தை பார்த்து.

‘ம்ம்’ என்றான் அவன் தலையை ஆட்டிக்கொண்டே.

’எனக்கு பாப்பா வேணாம் டா… எனக்கு பாப்பா வேணாம் கண்ணா. நீ போதும் டா. இந்த லவ் போதும்டா.. நீ மட்டும் போதும்டா எனக்கு..’ என்றாள் இன்னும் கண்ணீரை தந்துக்கொண்டு.

அவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கண்களும் கண்ணீரை தேக்கிக்கொண்டிருந்தது. இரண்டு பேரும் சிறிது நேரம் அணைத்துக்கொண்டும் தங்களை ஆஸ்வாசபடுத்திக்கொண்டனர். இருவரும் ஒரு பெரு மூச்சுக்கு பின்னர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அவள் அவனை பார்த்து கேட்டாள்,

‘ஏன் டா… ஏன் நீ அப்படி பழிய ஏத்துகிட்ட? ஏன் நீ ஏன் ஏத்துகிட்ட?’ என்றாள் இம்முறை நிதானமாக.

அவன் ஒரு பெருமூச்சு விட்டான். அவளை காதலோடு பார்த்தான். ‘என்னால ஒண்ணு தட்டுபட்டு போச்சுனா உன்னால ஏத்துக்க முடியும். அத ஈசியா கடந்து வந்திடுவனு நினச்சன். என் கண்ணம்மா சரியா இருக்கணும். திடமா இருக்கணும். வாழ்க்கைய அழகா பாக்கணும். சும்மா உடஞ்சு போயி தேமேனு இருக்குறத நான் விரும்பல. அதனால தான் அப்படி சொன்னேன். இப்ப உனக்கு உண்மை தெரியும். இருந்தும் நீ நான் விரும்புற போல தான் இருக்கணும்னு நான் எதிர்பார்க்குறேன். அதான் என் ஆசை… கிடைக்குமா?’ என்றான் அவளின் கைகளை பிடித்துக்கொண்டான் கண்களை பார்த்துக்கொண்டே. அவன் உதடுகள் துடித்தன. வார்த்தைகள் வர மறுத்தன. அங்குமிங்கும் திரும்பிக்கொண்டாள். திணறி திணறி சிரித்தாள். அழுகையோடு ஒரு சிரிப்பு சிரித்தாள்.

‘ம்ம்…’ என்று சொல்லிவிட்டு அவனை பார்த்தாள். அந்த பார்வையில் காதல் இருந்தது.

‘கண்ணா…’ என்றாள் அவள். அவன் ‘சொல்லுமா’ என்றான்.

‘கண்ணா.. நமக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி அஞ்சு வருசம் ஆகிடுச்சு. வார்த்தைக்காக உனக்கு நான் எனக்கு நீனு சொல்லிக்கலாம். உன்ன வேற ஒரு பொண்ணுக்கு விட்டு தரவும் என்னால முடியாது. அதனால…’ என்று அவள் இழுத்தாள்.

‘அதனால…’ அவன் கேள்விகுறி கண்களோடு கேட்டான்.

‘நாம…’

‘நாம?’

‘ஒரு குழந்தைய தத்தெடுத்துக்கலாமா?’ என்று அவள் சட்டென கேட்டு முடித்தாள். அவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவள், ‘என்னடா?’ என்றாள். அவன் உதட்டை இழுத்து மூடிக்கொண்டு சிரித்தான்.

‘சொல்லுடா…’ என்றாள் இம்முறை கொஞ்சியபடி.

அவன் இன்னும் வாய்விட்டு சிரித்துவிட்டு  அருகில் வந்து அழுத்தமாக அவள் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்தான். ‘எனக்கு இந்த சிரிச்ச பொண்டாட்டி போதும். இந்த சிரிப்புக்காக எத வேணா செய்யலாம். பட் அம்மாகிட்ட உன் பிரச்சனையினு சொல்லவேணா.. என் பிரச்சனையினே சொல்லிக்கலாம். லவ் மேரேஜ் வேற… எதனா விதண்டாவிதமா பேசுவாங்க. அந்த காலத்து ஆள்…’ என்று அவன் சரளமாக பேசினான்.

‘பட்.. கண்ணா…’

‘எதுவும் பேசக்கூடாது. இதுதான் என் முடிவு. நியாயம் தர்மம் அப்படினு பேசுற  இடமில்ல. சில நல்லதுக்காக சில பொய்கள் சொல்லித்தான் ஆகணும்’

‘ஆனா நாளைக்கு உங்கம்மாவுக்கு உண்மை தெரிஞ்சா?’
‘ஒண்ணு நீ சொல்லணும். இல்ல நான் சொல்லணும். ரெண்டு பேரும் என்னைக்கும் சொல்லமாட்டோம். நீ ஏன் கவல படுற. லீவ் இட் டூ மி…’ என்றான் சகஜமாக. அவள் அவனின் தோளில் மெல்லியதாய் சாய்ந்துக்கொண்டாள்.

‘ஆனா என் அப்பா… உங்கள தப்பா பேசுவாறே’ என்றாள் சற்று சங்கடத்தோடு.

‘அந்த ஆள நான் பாத்துக்குறேன். நான் அதெல்லாம் பெருசா எடுத்துக்கமாட்டேன். மாமாவ பத்தி எனக்கு தெரியாதா. லீவ் இட் டி..’ என்றான் சாதாரணமாக.

சில நாட்களில் அவர்கள் வீடே பறபறத்துக்கொண்டிருந்தது. அவளின் அப்பா அம்மா அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தனர். அவர்கள் இருவரும் குழந்தை தத்தெடுக்க கிளம்பிக்கொண்டிருந்தனர். அவள் அப்பா அங்கு முறுக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவன் வெளியில் கடை வரைக்கும் சென்றிருந்தான். அவள் அப்பா பேசலானார்,

‘லவ் பண்ணுறாளாம் லவ். எப்படிபட்டவன புடிச்சுருக்கா பாரு… ஒரு குழந்தைய பெத்துக்க கூட முடியல… சே… இதே நான் பாத்து கல்யாணம் பண்ணி வச்சிருந்தா?’ என்று அவர் இழுக்கும்பொழுது அவன் வீட்டினுள் நுழைந்தான். அவர் பட்டென அமைதியானார்.

‘சொல்லுங்க மாமா. என்ன பண்ணியிருப்பீங்க? அவனுக்கும் முடியல. என்ன பண்ணியிருப்பீங்க? சரி. கல்யாண முன்ன எதனா ட்ரயல் பாத்து முடியுது இல்லயானு பாத்துட்டு கட்டி கொடுத்திருப்பீங்களா?’ என்று அவன் கேட்க அவர் சடாரெனெறு கோபமாக எழுந்தார்.

‘அட உட்காருங்க மாமா. ஏ பொண்டாட்டி…’ என்று சொல்லி அவனின் மனைவியை அழைத்தான்.

‘உங்க அப்பாவ போட்டு தள்ளிரவா? ஓவர் விஷமியா இருக்காரே’ என்றான் இம்முறை சற்று கோபமாக. அவள் அவனையும் அவள் அப்பாவையும் மாறி மாறி பார்த்து சிரித்தாள்.

‘வாய் வாய் வாய். ஃப்யூஸ் போயுடும் சொல்லி வை. மாமனார்னு பாக்குறேன். பொண்ண கட்டி கொடுக்க ஓவர் லந்து பண்ணிட்டு இப்ப வந்து பேச்ச பாரு’ என்று சொல்லிக்கொண்டே அவன் உள்ளே நடந்து போனான்.

’உன் புருசன் எப்படி பேசுறான். சிரிக்கிற நீ?’ என்றார் அப்பா கோபமாக.

‘அவர் கண்ணாடி போல பா. பேசுற முன்ன யோசிச்சு பேசுங்க. நீங்க மரியாதை கொடுத்தா உங்களுக்கும் கிடைக்கும்.’ என்று அவள் சொன்னதும் அவர் சடாரென கோபமாக எழுந்தார். ‘அடடே உட்காருங்க பா. சில டைம் நானும் அப்படி தான். அவர பத்தி எதனா தப்பா பேசுனீங்க…’ என்று சொல்லி பல்லை கடித்துவிட்டு உள்ளே சென்றாள்.

‘இத பெத்ததுக்கு எரும மாட்ட பெத்துருக்கலாம்…’ என்றார் முனகிக்கொண்டே.


‘அதுக்கு நீங்க எரும மாட்ட கட்டிருக்கணும். என் அம்மாவ இல்ல’ என்று அவள் உள்ளே சென்றுக்கொண்டே சத்தம் கொடுத்தாள்.

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!