Skip to main content

உணரும் கல்வியை போதிப்போம்

நாகரீக வளர்ச்சி. தொடர்ந்து முன்னேற்றம் என்னும் பாதையை நோக்கி பறந்துக்கொண்டிருக்கும் உலகம். உலகம் முன்னேறிக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அன்று இருந்த அந்த ஏற்றத்தாழ்விலிருந்து துளியேனும் விளகாமல் துளியேனும் மாறாமல் முன்னேறிக்கொண்டிருக்கிறது. இடுப்புக்கு கீழ் கோவணத்தை மட்டும் கட்டிக்கொண்டு முகத்திற்கு அலங்காரம் செய்துக்கொண்டிருக்கிறோம்.

ஒருவன் வாழ்க்கையை எங்கு உணர தொடங்குகிறான் என்பதிலிருந்து ஒருவனின் தனிப்பட்ட வளர்ச்சி உருவாகிறது. இங்கு நம்மை சுற்றி இருக்கும் பலரும் தங்கள் வாழ்க்கையின் கால் பகுதியை கடந்த பிறகே வாழ்க்கையை பார்க்கவே ஆரம்பிக்கின்றனர். அவர்கள் பட்டு உணர்ந்து அடுத்த இடத்திற்கு செல்வதற்குள் இங்கு பலருக்கு வாழ்க்கையே முடிந்துவிடுகிறது. பிறந்து கையில் தவழும் குழந்தை இந்த பூமி தரையை முதலில் உணர்வது புறமுதுகில் தான். வாழ்க்கையை பின்னோக்கி பார்க்க தெரிந்தவனுக்கு தான் முன்னோக்கி செல்ல தெரியும்.

அப்படி ஒவ்வொருவன் வாழ்வும் தொடங்கிய திசை எங்கு இருக்கிறது? பள்ளி. கல்வி போதிக்கும் இடம். ஒழுக்கம், உலகம் என்று பறந்துவிரிந்திருக்கவேண்டிய கற்பித்தல் ஏனோ ஏட்டில் புகட்டப்பட்ட ஒன்றை மட்டும் மாறாமல் மண்டையில் புகுத்த முற்பட்டுக்கொண்டிருக்கிறது. இதை நீ இப்படி உணரவேண்டும் இப்படி கற்க வேண்டும் இதை கற்றுணர்ந்தால் நீ இந்த இடத்தில் இதை பயன்படுத்துவாய் என்று போதிக்ககூடிய கல்வியை நான் எங்கும் எதிர்பார்த்தேன்.

இங்கு திறன் இல்லாத பிள்ளை என்று ஒருவன் இல்லை. நேற்று பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கியவன் இஞ்சினியரிங் கணிதத்தில் தோற்கிறான் என்று வருகையில் எங்கு பிசகு? தமிழில் நல்ல மதிப்பெண் எடுப்பவன் ஆங்கிலத்தில் தோற்கிறான் என்றால் அவன் முட்டாள் என்ற அர்த்தமா?

கல்வி நிர்பந்திக்கபடவேண்டியது அல்ல. உணர வேண்டியது. நான் பள்ளியில் படித்த பல பாடங்கள் இன்று என் நினைவில் இல்லை. என்ன படித்தேன், எதற்காக படித்தேன் என்று நான் யோசிக்கும் பொழுது உதட்டின் ஓரம் ஒரு மெல்லிய சிரிப்பு மட்டுமே வந்திருக்கிறது. ஒரு நாள் முட்டாள் முட்டாள் என்று என்னை ஓரம்கட்டியபொழுது நான் எங்கு சென்றாலும் கேலி பேச்சுகள் தான். வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி, அக்கம் பக்கத்தாரும் சரி, ஊர் சொந்கங்களும் சரி ‘தம்பி படிக்கலனா வாழ்க்கை நாசமா போயிரும். மார்க் எடுத்தா தான் வாழ்க்கை…’ என்று ஒரு பூத ஓலம் போலவே ஒலித்துக்கொண்டிருந்தது. ஒரு வார்த்தை விடாமல், ஒரு எழுத்து விடாமல் மனதில் ஏற்றி மனப்பாடம் செய்யமட்டுமே எனக்கு தெரியும்.
கணிதத்தில் வரும் ஆல்ஃபாவும், காமாவும் யார் என்ன என்ற கேள்விகளுக்கு விடையே கிடைக்காமல் சுற்றியிருக்கிறேன். டீடா யாரு. சைன் டீடா, காஸ் டீடா என்கிறார்களே இதெல்லாம் என்ன என்று குழம்பியிருக்கிறேன். இது போட்டால் இது வரும் என்பது எனக்கு தெரியும் ஆனால் அதை அங்கு போடவேண்டிய கட்டாயம் எனக்கு தெரியாது. Trigonometry எங்கு பயன்படுகிறது என்பதை யாரும் எனக்கு விளக்கவில்லை. நான் போடும் கணக்குகள் எந்த துறை சார்ந்து வரும், அதை வைத்து அந்த துறையில் என்ன செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது.

நாம் படிக்கும் பாடங்கள் எல்லாமே கோர்க்கபடாத புள்ளிகள் தான். ஒரு பாடத்தை எடுத்தால் அது ஒரு புள்ளி. அந்த பாடம் எது சம்பந்தபட்ட துறை, அந்த துறையில் இருக்கும் துள்ளியமான விசயங்கள், நான் படிக்கும் ஒவ்வொன்றும் அந்த துறையோடு எவ்வகையில் ஒத்துபோகும் என்று சொல்லும்பொழுது அந்த புள்ளிகளை இணைத்த ஒரு படம் கிடைக்கும். அந்த படம் ஒரு கதை சொல்லும். அந்த கதை  மனதில் நீங்காமல் நிறைந்திருக்கும். இதுதான் கல்வி. இதுதான் போதிக்கும் முறை. ஆனால் அப்படியா இருக்கிறது இக்கால கல்வி. நான் என்ன படிக்கிறேன் எதுக்காக படிக்கிறேன் என்பதே எனக்கு தெரியாது.

என்னை பொறுத்தவரையில் நான் ஏன் படித்தேன். மதிப்பெண் வாங்க. எதற்கு மதிப்பெண் வாங்க வேண்டும். நல்ல வேலை வாங்க. எதற்கு நல்ல வேலை. காசு வேண்டும். எதற்கு காசு. சொந்தமா ஒரு வீடு, ஒரு காரு வாங்க. இதுதான். இதுமட்டுமே தான் மனதில் தங்கி இருந்த விசயங்கள். பணத்தின் மீது மோகம் கொள்ளும் ஒரு மனதில் எப்படி கற்கும் ஆர்வம் வரும். இது முக்கியமான கேள்வி இதை அடிக்கடி கேட்பார்கள் இதை படித்தால் மதிப்பெண் பெறலாம் என்று படிக்கும் அத்தனை மாணவர்களும் இந்த வாழ்க்கை என்னும் விளையாட்டில் தோற்று நிற்கிறார்கள்.

அவன் விளையாட்டில் தீரனாக இருப்பான். ஆனால் மதிப்பெண் குறைவு. படிக்கிற காலத்துல படிக்காம விளையாடி என்னாத்த கிழிக்க போறன்னு திட்டும் ஆசிரியரை தான் நான் இன்னும் பல பள்ளிகூடங்களில் பார்க்கிறேன். சென்னையை தாண்டிய பல ஊர்களில் இன்னும் விளையாட்டு நேரங்களில் ஓடி பிடித்து மட்டும் தான் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். கல்வி, ஏட்டில் இருந்து வருவது மட்டுமல்ல, விளையாட்டும் ஒருவகை கல்வி தான். அந்த கல்வி இன்னும் பரப்பபடாமலே இருக்கிறது. ஏனென்றால் அது சுலபமாக காசு பார்க்கும் வழியல்ல.

அடிப்படையில் நாம் கற்கும் முறையையும் சரி, கற்பிக்கும் முறையையும் சரி, அதை வகைப்படுத்தும் வழியும் சரி இங்கு அனைத்தும் மாற்றம்கொள்ளவேண்டியிருக்கிறது. ஒருவன் ஒரு பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுத்து மீதி பாடத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் அவனை தோற்றான் என்று முத்திரை குத்த வேண்டாம். அவனுக்கு மற்ற பாடங்களில் நாட்டமில்லை. அவ்வளவு தான். எனக்கு படிக்கும்பொழுது வரலாறு சுத்தமாக பிடிக்காது. ஆனால் இன்று வரலாறு ஆய்வுகளையும், புத்தகங்களையும் தேடி தேடி புரட்டிக்கொண்டிருக்கிறேன். எனக்கு பிடித்த துறையில் எனது அறிவை மேம்படுத்திக்கொள்ள நினைக்கிறேன். இதுதானே கல்வியும் கற்பித்தலும். ஒன்று புரிந்து, அதை பிடித்து அதுமேல் அளவற்ற காதல் கொண்டு கற்றுக்கொள்வது தானே கல்வி.?

இங்கு வாழ்க்கைக்கு தேவையான கல்வி என்பது இல்லவே இல்லை. எதிர்பாலரை எப்படி மதிக்க வேண்டும் என்பது சொல்லிக்கொடுக்கப்படவில்லை. வாழ்க்கையில் வரும் துன்பங்களை சமாளிக்க பக்குவம் சொல்லிக்கொடுக்கப்படவில்லை. கட்டுப்படுத்தபடவேண்டிய ஆசை, மோகம், கோபம் பற்றி வாயை திறப்பதே இல்லை. ஏனென்றால் நான் என் பிள்ளையை காசு புரட்டும் மிஷினாக தான் வளர்க்க ஆசைப்படுகிறேன் மனிதனாக இல்லை என்று இங்கு பல பெற்றோர் கொக்கரித்துக்கொண்டிருக்கின்றனர்.

பள்ளிகள் இங்கு பெரிய வியாபார சந்தையாக மாறிக்கிடக்கும் அவலம். கேவலம். முன்னேற்ற பாதை என்று நினைத்து வாழ்வில் கற்கவேண்டிய அனைத்தையும் விட்டுவிட்டு பின்னோக்கி போய்க்கொண்டிருக்கும் இழிநிலை.

மாறவேண்டும். அனைத்தும் இங்கு மாறவேண்டும். கல்வியில் ஒரு புள்ளியை வைத்துக்கொள்ளுங்கள். உங்களை  நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள். கேள்விகளின் பதில்களை வைத்து புள்ளியை கோடாக்குங்கள். உங்கள் பதில்களை வாழ்க்கையோடு ஒன்றி பாருங்கள். அந்த ஒன்றுமைப்பில் கோடுகளை இணைத்து வரையுங்கள். வாழ்க்கை ஒரு அழகான ஓவியம், அது கல்வியென்னும் ஒரு புள்ளியில் தோன்றுகிறது அந்த கல்வி போதித்த அறிவால் வரையப்படுவது என்பது உணர வேண்டும்.


நாம் பின்னோக்கி பார்ப்போம். நாம் கற்கும்பொழுது காரணம் தெரியாமல் கற்றுவிட்டோம். நாம் கற்றவற்றை பின்னோக்கி போவோம். அதற்கான காரணங்கள், அது உபயோகபடுத்தும் துறை, அதை சார்ந்த நுன்னறிவுகளை பெற முயற்சிப்போம். நமக்கு அடுத்த தலைமுறை உருவாகிக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு உண்மையான கற்கும் அறிவை போதிக்க முயற்சிப்போம். உணர்ந்து கற்போம்…! நாம் தோற்றுப்போன வாழ்க்கை பாடங்களை அவர்களுக்கு போதிப்போம். கல்வியை புகுத்தாமல் உணர வைப்போம்…! நாளைய செல்வங்களை மனதில் தாங்கிக்கொண்டு உணர தொடங்குவோம் நமது நேற்றைய கல்வியை.

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…