இராமசாமி அண்ணன்...

எங்கள் ஊரில் எங்கள் தெரு எப்பொழுதும் சீராகவே தான் இருக்கும். வரிசையாக வீடுகள் இருக்கும். ஒரு வீட்டிற்கும் இன்னொரு வீட்டிற்கும் சீரான இடைவெளி இருக்கும். அது ஒரு நீண்ட தெரு. தெருவின் ஒரு முடிவில் ஒரு பெரிய குளம் இருந்தது. மறுபுறம் சிவன் கோவில் ஒன்று இருந்தது.

சிவன் கோவிலின் சாவி எப்பொழுதும் அந்த கோவில் பக்கத்திலே இருக்கும் கண்ணு தெரியாத தாத்தாவிடம் தான் இருக்கும். காலையில் ஒரு ஐயர் சைக்கிளில் வந்து சாவியை வாங்கி, கோவிலை திறந்து பூஜை செய்வார். மாலையில் வந்து ஒருமுறை பூஜை செய்வார். எங்கள் தெருவில் இருக்கும் சிலர், கோவிலை சுற்றி இருக்கும் இடத்தில் மிளகாயை காயபோட்டு விட்டு செல்லுவர். நாங்கள் கோவில் சுவரில் ஏறிக்கொண்டு புளியங்காய் அடித்து தின்றுக்கொண்டிருப்போம். ஏனோ என்றும் நான் அடிக்கும் கல்லில் மட்டும் ஒரு புளியங்காயும் விழாது. அப்பொழுதெல்லாம் இராமசாமி அண்ணனின் தம்பி சிவநேசன் தான் எனக்கும் புளியங்காய் தருவான். ஆனால் அவனோடு சேரக்கூடாது என்று அம்மா சொல்வதால் புளியங்காயை வாங்கிக்கொள்வதோடே எங்கள் சிநேகம் முடிந்துவிட்டது.

அம்மா ஏன் சிவநேசனிடம் சேரக்கூடாது என்று சொன்னார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் அடிக்கடி இராமசாமி அண்ணனை கறுப்பு சட்டைக்காரன் என்று எங்கள் தெருவே திட்டிக்கொண்டிருப்பதை நான் கேட்டிருக்கிறேன். அதனால் கூட இருக்கலாம் என்று என் மனதினுள்ளே தோன்றும். அதென்ன கறுப்பு சட்டைக்காரன் என்று பல நாள் யோசித்திருக்கிறேன். எங்கே அம்மாவிடம் கேட்டால் அடிவிழுமோ என்று பயந்து நான் அம்மாவ்விடம் அதை பற்றி கேட்கவில்லை.

ஒரு நாள் பள்ளிகூடத்தில் சண்முகம் வாத்தியார் ஏதோ சொல்லிவிட்டு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் என்றார். நானும் முதலாக கையை தூக்கிவிட்டு ‘கறுப்பு சட்டை காரவுகனா யாரு சார்?’ என்றேன். நெற்றி நிறைவாய் விபூதியும், நடுவே கோவக்காயை நறுக்கிய சிவப்பாய் பொட்டும் வைத்திருந்த சண்முகம் வாத்தியார் ஏனோ என்னை மேலும் கீழும் முறைப்பாய் பார்த்தார், கூடியிருந்தவரும் சிரித்தனர். தலை குனிந்துக்கொண்டேன்.

ஒரு நாள் அம்மா வந்து என்னை கோவில் பக்கம் போக கூடாது என்று தடுத்துவிட்டார். அக்கம் பக்கத்திலிருந்த எந்த சிறார்களும் கோவில் பக்கம் போக அனுமதிக்கப்படவில்லை என்று நான் அறிந்தேன். ஆற்றுக்கு துணி துவைக்க செல்லும் பெண்கள் கூட ஏனோ கோவில் பக்கம் செல்லாமல் சுற்றியே சென்றனர். சைக்கிளில் கோவிலுக்கு வரும் ஐயரும் ஏனோ இரண்டு மூன்று நாட்களாக ஆளையே காணும். தூரத்தில் நின்று நான் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது அந்த கண்ணு தெரியாத தாத்தா மட்டும் அவ்வபோது கோவிலுக்கு சென்று சென்று வருவது தெரிந்தது. அம்மாவிடம் சென்று ஏனம்மா என்று நான் கேட்டபொழுது அம்மா சொன்னார்,

‘அங்க அஞ்சு தலை பாம்பு இருக்காம்டா.. ஐயர கொன்னுருக்கும். நல்ல வேல தப்பிச்சுட்டாரு. ஏதோ சிவனுக்கு தோஷம் இருக்கு. அது என்னனு கண்டு பிடிச்சு நிவர்த்தி பண்ணினா தான் அந்த அஞ்சு தலை பாம்பு போகுமாம். ஊரே என்ன குத்தம் பண்ணுனோமோனு அல்லோல பட்டு கிடக்கோம்டா’ என்றார் அம்மா. நான் வெடவெடத்து போனேன். ஐந்து தலையுடன் ஒரு பாம்பு என்றால் நடுங்காதா என்ன? அதன் பிறகு என் பார்வை கூட கோவில் பக்கம் போகவில்லை. ஆனால் அந்த கண்ணு தெரியாத தாத்தா அடிக்கடி போகிறாரே, என்ன ஆகுமோ? அவரை காப்பாத்தி ஆகணும்னு மனசு தவிக்கும்.

அப்பொழுது தான் இராமசாமி அண்ணன் ஊருக்கு வந்தார். அண்ணன் எப்பொழுதும் ஊருக்குள் தங்கமாட்டார். வெளி ஊரில் அடிக்கடி வேலை என்று சென்றுவிடுவார். ஒருமுறை பின்ன ஊருல ஒரு வீட்டில் சாப்பிட்டார் என்று அண்ணனை தெருவில் வைத்து அவர் அப்பா அடித்தார். அவரின் அம்மா அப்பாவின் காலை பிடித்துக்கொண்டு கதற தெருவே அவர்களை வேடிக்கை பார்த்தது. அப்பொழுது சிவநேசன் வீட்டில் இருக்கும் ஒரு பையை வேகமாக எடுத்துக்கொண்டு வந்து அண்ணனிடம் கொடுத்து ‘போ’ என்றான். அவன் அப்பாவின் கைகளில் இருக்கும் கம்பை இறுக்கமாக பிடித்து தொங்கிக்கொண்டே அவனின் அண்ணனை பார்த்து ‘போ’ என்று கூப்பாடு போட்டான். அவன் அண்ணன் மீது அவன் உயிரையே வைத்திருந்தான். ஒரு நண்பன் வீட்டில் போய் சாப்பிட்டது தவறா என்று என் அம்மாவிடம் கேட்க எனக்கு ஆசையுண்டு. ஆனால் அம்மா என்னையும் அந்த பக்கம் செல்லக்கூடாது என்று சொல்லியிருந்தார்கள். அதனால் அம்மாவிடம் கேட்கவும் கொஞ்சம் பயம் எனக்கு. நாள் கடக்க இராமசாமி அண்ணனின் அப்பா கொஞ்சம் அமைதியாக அவ்வபோது இராமசாமி அண்ணன் அவர் வீட்டுக்கு வந்து வந்து போவார். அன்றும் அதுபோல தான் வந்திருந்தார்.

வந்திருந்தவரிடம் சிவநேசன் கோவிலுக்குள் ஐந்து தலை நாகம் புகுந்திருப்பதை சொல்லியிருப்பான் போல. அண்ணன் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. கண்ணு தெரியாத தாத்தா வீட்டிற்கு அண்ணன் நேராக சென்றார். கோவிலின் சாவியை வாங்கினார். அதுவரை வெளி பிரகாரத்தில் மட்டும் சுற்றிவந்துக்கொண்டிருந்த தாத்தாவும், உள்சாவியை கொடுக்க கொஞ்சம் தயங்கினார். வலுக்கட்டாயமாக வாங்கிக்கொண்டு அண்ணன் அந்த கோவிலை திறந்தார். பின்ன ஊரில் உள்ள அத்தனை குட்டி சிறுவர்களையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார். உள்ளே அங்குலம் அங்குலமாக சுற்றி வந்தார். கருவறையை திறந்துக்கொண்டு அதனுள்ளும் சுற்றி வந்தார். கோபுரத்தின் மேலே சென்றார், கோவில் வெளி பிரகாரத்தை சுற்றி வந்தார். நேராக வந்து அந்த தாத்தாவிடம்,

‘தாத்தா… பாம்பும் இல்ல. ஒண்ணுமில்ல. கட்டுகதை எவனோ விட்டிருக்கான். போயி பொலப்ப பாருங்க’ என்று சொல்லிவிட்டு விடுக் விடுக்கென நடந்து வீட்டிற்குள் நுழைந்தார். என் அப்பாவும் அம்மாவும் இன்ன தெருவில் இருக்கும் அத்தனை பேரும் அன்று அண்ணன் வீட்டு முன்னால் நின்று கூப்பாடு போட்டனர். எல்லோரும் தெய்வ குத்தம் என்று சொல்லி சொல்லி மாறி மாறி பேசிக்கொண்டார்கள். அவர்கள் யாரேனும் அண்ணனை அடித்துவிடுவார்களோ என்று என் மனம் உள்ளுக்குள் பதறிக்கொண்டே இருந்தது. அண்ணன் அமைதியாக வெளியே வந்தார். எல்லோரையும் ஒருமுறை பார்த்தார்.

‘மூடநம்பிக்கை இருக்க கூடாது. வெற்று நம்பிக்கைகள் எதுவும் தராது. ஐயா பெரியார் சொன்ன பகுத்தறிவ வளத்துக்கங்கயா. எவனோ கட்டுகதை கட்டுறதெல்லாம் நம்பாதீங்க. உங்க மனச கேட்டு நடந்துக்குங்க. பின்ன ஊருல இருக்கற சாதிய பசங்களெல்லாமும் நம்ம மனுச இனம் தானே. கூட்டி நடந்துகுங்க. அவிங்களும் கோவிலுக்குள்ள போகலாம். அஞ்சு தலை நாகமெல்லாம் ஒரு மண்ணும் இல்லங்க. பொண்ணுங்க வேலைக்கு போகலாம். ஆணுக்கு என்ன சுதந்திரம் இருக்கோ அது பெண்ணுக்கும் இருக்கணும். ஜாதிய பாகுபாடு இருக்க கூடாது. முட்டாள் தனமான நம்பிக்கைகள் நம்ம முன்னேற்றத்த தட்டுபடுத்தும். அதையும் விட்டுட்டு நல்ல ஆறறிவு இருக்குற மனுசங்களா இருங்கயா..’ என்று சொல்லிவிட்டு பக்கத்தில் நின்றிருந்த ஒரு சின்ன பெண்ணிடம் கேட்டார்,

‘ஏ பாப்பா.. உனக்கு வீட்டடியல குழா ஊதனுமா இல்ல உங்க அப்பன போல சக்கரை ஆலையில கணக்கு எழுத போறியா?’

‘கணக்கு எழுதணும்னே’ என்றாள் அந்த பெண். உடனே ஊர் பக்கம் திரும்பி,

‘பாருயா.. பெண்ணுக்கும் கனவு இருக்கு. முட்டாள் தனமா நடந்துக்காதீங்க’ என்று சொல்லிவிட்டு படபடவென வீட்டிற்குள் சென்றுவிட்டார். தெருவில் நின்றிருந்த கூட்டமெல்லாம் மாறி மாறி முனுமுனுத்தது. பின்னர் கலைந்து சென்றுவிட்டது. அன்று இரவு அண்ணன் வீட்டிலிருந்து வெறும் அழுகும் சத்தமும், கத்தும் சத்தமும் மட்டும் தான் கேட்டுக்கொண்டிருந்தது.

அடுத்த சில நாட்களில் ஊரில் இருக்கும் பலர் பல இடங்களில் ஐந்து தலை நாகத்தை பார்த்ததாய் சொன்னர். என் கண்களுக்கும் அவ்வபோது அந்த நாகத்தின் கற்பனை பிம்பம் வந்து வந்து போனது. உண்மையில் அந்த நாகம் இருக்கிறதா, நம் கண்ணுக்கு ஏன் உண்மையில் தெரியவில்லை, ஒருவேலை எல்லோரும் பார்ப்பதாய் சொல்வதும் நம் போல கற்பனையில் தானோ என்று என் மனதில் அடிக்கடி எண்ணம் எழும். அதை அவ்வளவு எளிதில் என்னால் கடந்துவிட முடியாது.

எங்கள் வீட்டு கதவின் தாழ்பாள் சரியான இறுக்கம் தராது. அதனால் ஒரு துணியை வைத்து, கொஞ்சம் இடது புறம் இருக்கும் கதவை தூக்கி அழுத்தி தாழ் இட்டாள் தான் கதவு நன்றாக மூடிக்கொள்ளும். அதை செய்து பார்க்கவேண்டும் எனக்கு பெருத்த ஆசை. அன்று அப்படிதான் என் அம்மாவிடம் அடம்பிடித்து நான் செய்கிறேன் என்று வந்தேன். கதவுக்கு பக்கத்திலிருக்கும் ஒரு மரபலகைக்கு அடியில் இருக்கும் துணியை அம்மா எடுக்க சொன்னார். நானும் கீழே குனிந்து அந்த பெரிய துணியை எடுக்க ஏதோ வழவழப்பாய் அடிப்பட்டது. பயந்து தொப்பென கீழே துணியை போட்டுவிட்டேன். அதிலிருந்து ஒரு பெரிய நல்ல பாம்பு வெளிப்பட்டது. என்னையும் அம்மாவையும் குறி வைத்தது போல துரத்தியது. எனக்கு நடுங்கிவிட்டு. உறைந்து போய் நின்றேன். அம்மா சட்டென அவர் கைகளில் என்னை தூக்கிக்கொண்டு படிக்கட்டுக்கு விரைந்தார். பாம்பு அம்மாவை தொடர்ந்தது. அம்மா என்னை தூக்கி தூர எரிந்தார். சட்டென பாம்பு என் பக்கம் விரைந்தது. நான் எழுந்து சுதாரித்துக்கொண்டு மரக்கட்டையில் ஏறிக்கொண்டேன். அதற்குள் அம்மா பின்பக்கமிருந்து சத்தம் எழுப்பி, நிழலாடவைத்தார். பாம்பு அவர் பக்கம் திரும்பியது. எனக்கு வீட்டினுள் செல்ல இடம் கிடைக்க, நான் பாய்ந்தோடி அப்பாவை அழைத்துக்கொண்டு ஓடி வந்தேன். அந்நேரம் அம்மாவின் காலுக்கு அருகே பாம்பு சென்றிருந்தது. அம்மா இடுக்கில் மாட்டிக்கொண்டார். அப்பா நேராக பாய்ந்து ஓடி பாம்பின் மேல் பொடேரென்று ஒரு அடி வைத்தார். அடி சரியாக விழவில்லை. பாம்பு திரும்பியது. அப்பா கட்டையை அதனருகே தட்ட தட்ட அது திறந்திருந்த கதவின் வழியாக வெளியில் சென்றது. அப்பா பக்கத்தில் தட்டி தட்டி, அந்த குளத்திற்கு அருகே செல்லும்வரை வழியனுப்பிவைத்துவிட்டு வந்தார். அதற்குள் அக்கம்பக்கத்தார் எல்லாம், ‘நாகபாம்புலே…’ ‘பெரிய நாகம்’ என்று வாய்விட்டு பேசினர். சிறிது நேரத்தில், ‘ இது ஏதோ குத்த சந்ததிதாம்’ என்று பேச ஆரம்பித்தனர்.

பலர் கூடி பேசினர். பின்னர் ஒரு கூட்டமே இராமசாமி அண்ணன் வீட்டு முன்னர் நின்றது. எங்கள் வீட்டிற்கு பாம்பு வந்ததற்கு அண்ணன் தான் காரணம் என்று ஊர் பேசியது. அனைவரும் அவ்வபோது பார்க்கும் ஐந்து தலை நாகம் அண்ணன் இங்கு இருக்கும்வரை ஊரை அழித்துவிட்டு தான் விடும் என்று பலரும் பேசிக்கொண்டனர். அண்ணன் வெளியில் வந்து பலமாக சிரித்தார். அண்ணனின் அப்பா அண்ணனை ஓங்கி மண்டையிலே அடித்தார். ஊரை விட்டு வெளியில் போக சொல்லி நான் அறியாத வார்த்தைகளிலெல்லாம் கோபமாக பேசினார். ஊர் ஒன்று கூடியது. அண்ணன் மட்டுமல்ல அவர் குடும்பமே செல்லவேண்டும் என்று சொன்னது. அண்ணனின் அப்பா எல்லோரிடமும் கெஞ்சினார். ஆனால் ஊர் சம்மதிக்கவில்லை. அண்ணனின் தீட்டு குடும்பத்தையும் சாரும், அதுவும் ஊருக்கு பாதிப்பு என்றனர். அண்ணனின் அப்பாவும் அம்மாவும் கலங்கி நின்றனர். சிவநேசன் அவனின் பெட்டிகளை தூக்கிக்கொண்டு மிடுக்காக வெளியில் வந்தான், இராமசாமி அண்ணின் கைகளில் இரண்டு இரும்பு பெட்டிகளை கொடுத்தான். அவன் இரண்டு மூட்டை துணிகளை தூக்கிக்கொண்டான். அவன் ஊரை திரும்பி பார்க்கவில்லை. அண்ணனை இழுத்துக்கொண்டு வெடுக் வெடுக்கென நடந்து சென்றான். அண்ணினின் அப்பாவும் அம்மாவும் வேறு வழியின்றி அந்த ஊரை விட்டு நகர்ந்தனர்.

நான் என் அம்மாவிடம் கேட்டேன்,

‘அண்ணன் செஞ்சது தப்புனா முதல்ல பாம்பு அண்ணன் வீட்டுக்கு தானேமா போயிருக்கணும். ஏன் நம்ம வீட்டுக்கு வந்துச்சு?’ என்றேன். பதிலுக்கு அம்மா என் கையை திறுகினாள். வலியில் கத்த முடியாமல் வாயை மூடிக்கொண்டேன்.
அதன்பிறகு ஊரில் அதிகமான பாம்பு நடமாட்டமில்லை. யாரும் ஐந்து தலை நாகம் தெரிவதாய் சொல்லவில்லை. ஊர் சிறப்படைந்துவிட்டது என்று சிலர் பேசிக்கொண்டனர். சைக்கிளில் வரும் ஐயரும் தினமும் வந்தார். தினசரி பூஜைகள் நடந்தது.

அன்று கண்ணு தெரியாத தாத்தா வழியில் புதிதாத முளைத்த கல்லில் தடுக்கி விழ பார்த்தார். நான் அவரை தடுத்து அவரின் வீட்டுக்குள் விட்டுவிட்டு பேச உட்கார்ந்தேன். அதுநாள் வரை நான் தாத்தாவிடம் அதிகமாக எதுவும் பேசியதில்லை. அவரும் ஊர் விசயங்கள் எதிலும் தலையிட மாட்டார். அவர் உண்டு அவர் வேலையுண்டு என்பதிலே அவர் காலம் கழிப்பார். அதன்பிறகு அவர் எனக்கு நெருங்கிய நண்பர் ஆகிப்போனார். அடிக்கடி பேசிக்கொள்வோம். அப்படி ஒரு நாள் பேசும்பொழுது இராமசாமி அண்ணனை பற்றி நான் பேசினேன். அவரை ஏன் ஊரில் இருப்பவர்க்கு பிடிக்கவில்லை என்று கேட்டேன். அதற்கு தாத்தா சிரித்துக்கொண்டே சொன்னார்,

‘அவன் அவனுக்காக வாழல பா’ என்றார். மேலும் சொல்கையில், ‘அவன் ஊர் சொல்லுதுனும் வாழல. அவனுக்கு சரினு பட்டது போல வாழ்ந்தான்’ என்று சொல்லிவிட்டு சிரித்துவிட்டு உள்ளே செல்வார். அவர் சொன்னது ஏனோ என் மனசுக்குள் உறுத்திக்கொண்டே இருந்தது. காலம் கடந்தது. ஊரே விட்டு வெளியூருக்கு வந்தேன் படிப்பதற்கு. நல்ல படிப்பு முடிந்த சமயம் வேலை. பெரிய வேலையில் சேர்ந்தேன். கை நிறைய சம்பளம். ஊரில் இருக்கும் அம்மாவையும் அப்பாவையும் என்னோடே சேர்த்துக்கொண்டு சென்னையிலே தங்கிக்கொண்டேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கண்ணு தெரியாத தாத்தா இறந்துவிட்டார் என்னும் செய்தி கிடைத்தது. அவருக்கு சொந்தம் யாரென்று தெரியாத காரணத்தால், ஊராரே சேர்ந்து எரியூட்டிவிட்டதாய் சொன்னார்கள்.

பின்னர் ஒரு நாள் என் அலுவலகத்தில் வேலை தேடி ஒரு விண்ணப்பம் வந்தது. அதில் அவரின் பெயர் சிவநேசன் என்றிருந்தது. அந்த பெயரை பார்த்ததும் எனது பால்ய கால புளியங்காய் நண்பன் ஞாபகம் வந்தான். கூடவே அவனின் அண்ணன் இராமசாமி ஞாபகமும் தொற்றிக்கொண்டது. அந்த நபரை அழைத்தேன். அவரின் முகசாயல் அவனை போலவே தான் இருந்தது. அவரை பற்றி சொல்ல சொன்னேன்.

‘என் பெயர் சிவநேசன்.’ என்று ஆரம்பித்தவர் அவரின் படிப்பு, அவரிடம் இருக்கும் தனித்திறமைகள் என்று சொன்னார். பின்னர் அவர் படிப்பில் இருக்கும் இடைவெளி பற்றி நான் கேட்டேன். குடும்ப பிரச்சனைகளால் சில காலம் வேலைக்கு செல்ல நேர்ந்தது என்று சொன்னார். சில புரட்டல்களில்,

‘இராமசாமி….’ என்று நான் இழுத்தேன். அவர் அதிர்ச்சியுற்றவராய் பார்த்தார். உடனே நான் சுதாரித்துக்கொண்டேன். அவன் தான். இது என் நண்பன் தான் என்று ஊர்ஜிதபடுத்திக்கொண்டேன்.
‘இராமசாமி உங்க அண்ணன் தானே’ என்றேன். அவன் ஆச்சர்யத்தில் மூழ்கி நின்றான். வாயில் வார்த்தைகள் வராமல் தடுத்து நின்றான். என்னை ஏதோ கேள்விகுறி கண்களோடு பார்த்துக்கொண்டிருந்தான். நான் என் ஊரையும் என் பெயரையும் சொன்னேன். சிறிது யோசிப்பிற்கு பிறகு,

‘டே’ என்றான் வாஞ்சையோடு. நான் எனது இருக்கையிலிருந்து எழுந்து சென்று அவனை கட்டி தழுவிக்கொண்டேன். இருவரின் கண்களும் ஏனோ கண்ணீரை தேக்கிக்கொண்டிருந்தது. ’அந்த புளியங்காயை மறக்கவில்லை’ என்று எனது சிறிய நினைவுகளை அவனிடம் சொன்னேன். அவன் சிரித்துவிட்டு மறுமுறை கட்டிக்கொண்டான். நேர்முக தேர்வை ஒத்திவைத்துவிட்டு அவனோடு கொஞ்சம் வெளியில் நடந்தேன். என் கண்கள் மீண்டும் இராமசாமி அண்ணனை பார்க்காதா என்று ஏங்கியது, எனது சிறுவயது ஹீரோ போல் அவர். அவர் சொல்லிய வார்த்தையும், அவரை பற்றி கண்ணு தெரியாத தாத்தா விளக்கியதும் எனக்கு ஒரு தூண்டுதலாகவே அமைந்தது.

அவனிடம் அண்ணனை பற்றி கேட்டேன். அண்ணன் ஒரு சமயம் கீழ்சாதி பெண்ணை மணந்துவீட்டிற்கு வந்ததாகவும். இதற்கு மேல் இவனிடம் பொறுப்பதற்கு ஒன்றுமில்லை என அவரது அப்பா அவரையும் அந்த பெண்ணையும் அதே இடத்தில் வெட்டி சாய்த்துவிட்டதாகவும். அதனால் அப்பா இன்றளவும் சிறையில் இருக்கிறார் என்றும் அவன் சொன்னப்பொழுது என் நெஞ்சு அடைத்துக்கொண்டது. தொண்டையிலிருந்து வார்த்தைகள் வெளியில் வரவில்லை. காலம் பல கடந்துவிட்டது போலும். அவன் வார்த்தைகளில் விரக்தி மட்டுமே இருந்தது. தன் அண்ணன் போல இனி தனக்கு யாரும் இல்லை என்று கவலையுற்றான். எங்கள் இருவரின் கண்களும் லேசாக கலங்கியது. அவனின் கையின் மேல் எனது கையை வைத்து அழுத்தி கொடுத்தேன். அவன் விரக்தி சிரிப்பு ஒன்று சிரித்தான்.

அவனை எனது அலுவலகத்தில் வேலை செய்ய தேர்ந்தெடுத்துவிட்டேன். அவனை வீட்டிற்கு வரச்சொல்லி என்று அழைத்தேன். மீண்டும் எங்கள் வீட்டிற்கு பாம்பு வந்துவிட போகிறது என்று சொல்லி சிரித்து மறுத்துவிட்டான். அந்த மறுத்தலில் ஒரு குடும்பத்தின் வலி தெரிந்தது. வீட்டிற்கு செல்ல செல்ல இராமசாமி அண்ணன் முகத்தின் முன்னால் வந்து சொல்லிக்கொண்டே இருந்தார்,


‘பெண் விடுதலையும், சாதிய ஒழிப்பும், சமத்துவ சமுதாயமும் வேண்டுமடா’ என்று.

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!