உணர்ச்சியின் பயமுறுத்தல்..

அன்று அவனுக்கு அலுவலகத்தில் அதிகமான வேலை. கலைப்பாக வீட்டிற்கு கிளம்பினான். வரும் வழியில் அவனது வண்டி பஞ்சர் ஆனது. அதை சரிசெய்துவிட்டு அவன் கிளம்பும்பொழுது மழை பொத்துக்கொண்டு விழுந்தது. பசி வேறு கொலையாய் கொன்றுக்கொண்டிருந்தது. ஒதுங்கி நின்றால் வேலைக்கு ஆகாது என்று முடிவு செய்துவிட்டு வண்டியை விரட்டிக்கொண்டு வேகமாக ஓட்டினான். வீட்டிற்கு வந்து கதவை தட்டினான். அவனது மனைவி கதவை திறந்தாள்.

‘வாங்க… என்னங்க நினஞ்சுட்டே வர்றீங்க…? ஒதுங்கி வரலாம்ல…’ என்றாள் கொஞ்சம் பாவமாக. அவன் மெல்லியதாய் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு உள்ளே நுழைந்தான்.

’பசிச்சுது மா… அதான்…’ என்றான்.

’அதுக்கு இப்படியா… வழியிலயே கடையில சாப்பிட்டுட்டு வந்திருக்கலாம்ல’

அவள் கண்களை உற்று பார்த்தான். ‘உன் கையால சாப்பிட்டா தான் தொண்டைக்கு கீழ இறங்குது’ என்றான் தலையை ஆட்டிக்கொண்டு. மழையில் நனைந்த அவனது முடியிலிருந்து சொட்டும் மழைநீர் அவளின் முகத்தில் தெளிக்க அவன் கண்ணை சட்டென மூடிக்கொண்டாள்.

‘பாரு… புருசன் நனைஞ்சு வந்துருக்கானே பட்டுனு முந்தானையால தலையை தோட்டிவிடணும்னு அறிவு இருக்கா?’

‘ம்க்கும் இருக்கும்… போ… உள்ள போயி சுடதண்ணி போட்டு குளிச்சுட்டு வா… என் கையால சாப்பாட்ட போட்டு திணிக்கிறேன்…’ என்றாள் செல்லமான கோபத்தோடு.

அவன் விறுவிறுவென குளித்துவிட்டு உடையை மாற்றிக்கொண்டு அவசரமாக வந்தான்.

‘ஏ வாடி வாடி.. பசி கொல்லுது.. ஒரு புடி புடிக்கிறேன்…’ என்றான் பரபரப்பாக. அவள் பரபரப்பாக வந்து தட்டை வைத்து அதில் உப்புமாவை போட்டாள்.

‘அடியே…’ என்றான் பதறிப்போய்.

‘என்ன…’ என்றாள் அவள்.

‘ஏன்டி எனக்கு உப்புமா புடிக்காதுன்னு உனக்கு தெரியாதா…’ என்றான் சற்று கோபமாக.

‘டெய்லி இட்லி தோசையே செய்ய முடியுமா? ஒரு நாள் உப்புமா சாப்பிட்டாதான் என்ன…’

‘ஏ… பசியில இருக்கேனே அறிவு இல்லயா உனக்கு.. நான் வந்தபோதே சொன்னேன்ல பசியில இருக்கேனு. பசியில கூட புடிச்சத சாப்பிட கொடுக்கமுடியாதா. நான் குளிச்சுட்டு வர்றதுக்குள்ள கூட எதனா நல்லதா பண்ணியிருக்கலாம்…’ என்றான் இன்னும் கோபமாக. அவள் பதிலெதுவும் பேசாமல் உப்புமா பக்கத்தில் தேங்கா சட்டினி போட்டாள். அவன் முனுமுனுத்துக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தான். சட்டினியில் உப்பு சற்று குறைவாக இருந்தது.

‘ஏன்டி… உப்பு கூட போட தெரியாதா? உப்ப காமிச்சியா இல்லயா?’ என்றான் கோபமாக. அவள் பதிலெதுவம் பேசாமல் பக்கத்தில் உப்பு டப்பாவை எடுத்து வைத்தாள். அவன் அவளை வைத்த கண் வாங்காமல் முறைத்து பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் அவள் இவன் பக்கமே திரும்பவில்லை.

‘நான் ஏன் வந்தேனு தோணுதா?’ என்றான் இன்னும் கடினமாக. அவள் திரும்பிகூட பார்க்காமல் அடுப்பறையில் நுழைந்தால்.

‘அடியே… கேக்குறேன்ல..’ என்றான் கோபமாக. அவள் கண்கள் கலங்கியபடியே வெளியில் வந்தாள். அவன் சொற்கள் வசமேதுமல்லாது திகைத்து நின்றான்.

‘எதுக்குடி இப்ப கண்ண கசக்குற’ என்றான் அவன் பதறிப்போய்.

‘எனக்கு எங்க போனாலும் நிம்மதி இல்ல. நான் என்ன பண்ணுறதுங்க… எனக்கு எதுவுமே வரலயே..’ என்றாள் கோபமாக.

‘என்னடி? நீ தோசை தான் நல்லா சுடுவல. ஏன் வரல?’ என்றான் இன்னும் புரியாமல்.

‘பிசினஸ் செஞ்சேன். ஆனா என்னால ஜெயிக்க முடியல. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்’ என்று சொல்லிவிட்டு கண்களில் இருந்து கண்ணீரை நழுகவிட்டாள். அவன் பதறினான்,

‘ஏன்டி… நான் கேட்டதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்…’ என்றான். ஆனால் அவள் அந்த கேள்வியை காதில் போட்டுக்கொள்ளவில்லை.

‘எங்க போனாலும் தோல்வி. எது செஞ்சாலும் தோல்வி. துவண்டு போயிட்டேன். என்னால முடியலங்க…’ என்றாள் இன்னும் அழுதுக்கொண்டே. அவன் சாப்பிட்டுக்கொண்டிருந்த கையோடு எழுந்து அவள் தலையில் கையை வைத்தான்.

‘இங்க பாருடி…நீ சம்பாதிக்கிற அவசியம் இல்ல தெரியுமா? நான் நல்லா சம்பாதிக்கிறேன். நீ ட்ரை பண்ணின முடியலனா என்னடி…’ என்றான் அமைதியாக. அவள் அழுதுக்கொண்டே அவனை பார்த்தாள்,

‘இல்லங்க. நான் எதுக்கும் லாயிக்கி இல்ல. எனக்கு எதுக்கும் திறமை இல்ல. நான் வெறும் மண்ணு. உங்களுக்கு பிடிச்சத கூட என்னால செய்ய முடியலயே…’ என்றாள் இன்னும் அழுதுக்கொண்டே. அவன் மனசு பதறியது. அவள் மனதை காயபடுத்திவிட்டோமோ என்று தோன்றியது. அவளது கன்னங்களை பற்றி முகத்தை பார்த்தான். அவளை உள்ளே அழைத்து சென்று கட்டிலில் படுக்கவைத்துவிட்டு அவள் தலையை கோதிகொடுத்தான்.

‘இங்க பாருமா… பசி… அதுல பேசிட்டேன்… நீ எல்லாத்திலும் பெஸ்ட். உன்னபோல ஒரு மனைவி எனக்கு கிடச்சது ரொம்ப பாக்கியம். உனக்கு பிஸினஸ் மைண்ட் இல்ல. அதான் ப்ராப்ளம். உனக்கு வேணும்னா நீ வேற எதுனா ட்ரை பண்ணேன். டீச்சிங் போலாம் இல்ல நீ படிச்ச பயோலஜிகல் டிபார்ட்மெண்டே போகலாம்’ என்றான் பொறுமையாக.

‘ஆனா… நான் தோத்துட்டேன்னு அர்த்தம் இல்லயா… என்னால பிஸினஸ் பண்ணமுடியலனு எல்லாம் கேவலமா பாப்பாங்கல… நான் தோத்துட்டேனு சொல்வாங்கல…’

‘அப்படி சொல்றவங்க யாரும் சாதிச்சவங்க இல்ல. ஒரு நாளுக்கு 9 டூ 5 வேலை பாக்குற அத்தனை பேரும் புத்திசாலிங்க இல்லை சாதிச்சவனும் இல்லை. நீ அதை தாண்டி ஒரு பெரிய முயற்சி எடுத்தல. அதுலயே நீ ஜெயிச்சுட்ட…’ என்றான் பாசமாக.

‘முயற்சி எடுத்து தோத்துட்டேன். இந்த உலகம் ஜெயிச்சா தான் பாக்கும். தோத்தவங்கள பாக்காதுங்க’

‘ஜெயிக்குறது தோக்குறது என்னைக்கும் முக்கியம் இல்ல. வாழ்க்கைய நாம வாழ்ந்துகிட்டு தான் இருக்கோம். இங்க எந்த பந்தயமும் இல்ல. நீ எப்போ தெரியுமா தோக்குற, வாழ்க்கைய வாழாத போது தான். எப்போ ஒரு தப்பான முடிவு எடுக்குறியோ அப்ப வாழ்க்கை தோத்துறும்டி. நீ எதுக்கோ வேற எதுனா ட்ரை பண்ணி பாரேன்…’

அவள் தலையை இல்லை என்பதாய் ஆட்டிக்கொண்டே பேசத்தொடங்கினாள். ‘இல்ல… இல்ல… மாட்டேன்… நான் தோத்துட்டேனு சொல்வாங்க. நான் தோத்துட்டேனு எல்லாம் சொல்வாங்க. இப்பவே என்ன என் அப்பாவும் அம்மாவும் கிண்டலா பேசுறாங்க… இன்னும் நீங்க தான் பேசல… ஆனா இப்ப நீங்களும் என்னால முடியாதுனு பேச ஆரம்பிச்சுட்டீங்க…’

‘ஏ… நான் எப்ப முடியாதுனு சொன்னேன்… கண்டிப்பா நீ ஜெயிப்ப டி. ஆனா லேட் ஆகுது அவ்வளவு தான். நடுவுல நீ வேற எதனா பண்ணலாமேனு தான் கேட்டேன்.. வேற ஒரு முயற்சி பண்ணுறது எந்த தப்பும் இல்ல. உன் மனசு என்ன சொல்லுதுனே நீ பாக்கல. மத்தவங்க என்ன பாக்குறாங்கனு தான் நினைக்கிற. உன் அப்பா, தாத்தா, மாமா, பெரியப்பன்னு எல்லாம் பிசினஸ் பண்றாங்கனு நீயும் பண்ணனும்னு நினைக்கிற… இது உன்னோட ஆசை இல்ல… உன்னோட லட்சியம் இல்ல.. பெருமைக்காக பண்ணனும்னு நினைக்கிற… உன் மனசு என்ன சொல்லுதுனு யோசிடி…’ என்றான். அவள் அமைதியாகவே இருந்தாள்.

‘யோசி டி. யோசிச்சு பாரு. தனியா இரு… யோசிச்சு பாரு. உன் மனசு என்ன சொல்லுதோ அத கேட்டு நட… கொஞ்சம் டைம் எடுத்துக்கோ…’ என்று சொல்லிவிட்டு அவன் ரூம் கதவை மூடிவிட்டு அமைதியாக அந்த உப்புமாவை சாப்பிட்டு முடித்தான். அடுத்து கொஞ்ச நேரம் தொலைகாட்சியில் பாடல்களையும், காமெடி காட்சிகளையும் பார்த்துவிட்டு ரூமுக்குள் மெதுவாக சென்றான். அவள் கண் அயர்ந்திருந்தாள். அவன் நேராக சென்று அவளின் நெற்றியில் ஒரு முத்தமிட்டுவிட்டு அருகில் படுத்துக்கொண்டான்.

காலையில் எழும்பொழுதே அவள் டீ கப்போடு வந்தாள். சுட சுட டீயை அவன் முன் வைத்துவிட்டு பக்கத்தில் ’சேர்’ஐ இழுத்துப்போட்டு அமர்ந்தாள்.

‘என்ன மேடம்… குஷி மூட்ல இருக்கீங்க போல…’ என்றான் சிரித்துக்கொண்டே.

‘ஆமாங்க… ரொம்ப…’ என்றாள்.

‘என்ன விசயம்…?’

‘நேத்து யோசிக்க சொன்னீங்கல… யோசிச்சேன்…’

‘ஆஹான்… அப்பரம்…’

‘அட கேளுங்க… கிண்டல் பண்ணாம…’

’சரி சரி சொல்லுடி…’

‘நாம வெளிய போறோம். என்னோட சொந்தங்கள் வந்து காருல இறங்குவாங்க… சுத்தி இருக்கவன்லாம் அவங்கள எப்படி இன்ட்ரோ கொடுப்பான்..?’ என்று கேட்டுவிட்டு அவள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘எப்படி…?’ என்றான் சந்தேக பார்வையோடு. அவளின் அடுத்த வார்த்தைகளை அவன் கணித்திருக்ககூடும்.

‘ஏ ஏ… தோ பாரு.. சங்கர் பெரிய பிஸினஸ்மேன். இருங்காட்டுக்கோட்டையில இருக்குற பெரிய பில்டிங்ல அவரு ஆபிஸ். கிட்டதட்ட 300 பேர் வேலை செய்யிறாங்கனு சொல்வாங்க. இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அடையாளம். ஆனா என்ன என்னனு சொல்வாங்க?’

‘அதையும் நீயே சொல்லேன்…’

‘அவ இருக்காளே அவ ராகுலோட மனைவி. அந்த ஐடி கம்பேனியில மேனேஜரா இருக்காரே அவரோட மனைவி. அப்படினு சொல்வாங்க…’

‘பெருமை தானே…!’ என்றான் அவன்.

‘இல்லயா பின்ன. ஆனா இங்க எனக்கான அடையாளம் எங்க போச்சு..?’ என்றாள் அவள் மெல்லிதாய் சிரித்துக்கொண்டே.

‘அதான்… என்னோட மனைவினு…’ என்று அவன் சொல்லும்பொழுதே அவள் தடுத்தாள்.

‘அது நம்ம உறவோட அடையாளம்… என்னோட தனிப்பட்ட அடையாளம் என்ன?’

‘கண்ணு.. டீச்சர் ஆனாலும் அடையாளம் வரும் தான்…’

‘கரெக்ட் தான்… ஆனா யோசிச்சு பாருங்களேன்… 300 பேருக்கு வேலை கொடுக்குற பிசினஸ் மேன். ஒரு ஸ்கூல்ல 30 பேர்ல ஒருத்தரா வேலை பாக்குற பொண்ணு… ஏதோ இடிக்கல..?’ என்றாள் அவள்.

‘ஆமா இடிக்குது… அடப்போடி…’ என்றான் சலிப்பாக எழுந்து பாத்ரூமுக்குள் நுழைந்துக்கொண்டான்.

‘யோவ் மாமா… நான் முடிவு பண்ணிட்டேன்யா… நான் இதுல சாதிச்சுகாட்டிட்டு தான் வேற யோசிப்பேனே…’ என்று சொல்லியவுடன் உள்ளிருந்து ஃப்ளஷ் செய்யும் சத்தம் கேட்டது. அவன் பாத்ரூம் கதவை திறந்துவிட்டு வெளியில் வந்தான்.

‘என்ன…?’ என்றாள் கையை சுவற்றில் வைத்துக்கொண்டு கண்களை உயர்த்தி. அவன் மெல்லியதாய் சிரித்துவிட்டு அவள் பின்னால் தட்டினான். அவள் முன்னால் விழுந்திருந்த முடியை பின்னால் இழுத்துவிட்டு, அவள் கன்னங்களில் தன் விரலால் வருடிக்கொண்டே ‘உன்னோட கனவுக்கு என்னைக்கும் நான் துணையா இருப்பேன்..’ என்றான் அவன் பாசமாக. அவள் சிரித்தாள். அவள் உதட்டின் அருகே முத்தம் பதிக்க அவன் நெருங்கையில்,

‘பல்லு விளக்குனியா..?’ என்றாள் அவள். அவன் பதிலுக்கு பல்லை இளித்தான். அவள் அவனை எட்டி தள்ளினாள். அவன் சினுங்கிக்கொண்டே சென்று ப்ரஷை எடுத்துக்கொண்டான்.

நாட்கள் கடந்தது… அவளின் பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. அவள் விடாமல் முயற்சித்துக்கொண்டே இருந்தாள். ஒவ்வொரு முறை தோற்கும்பொழுதும் அவள் அவனின் தோள் பற்றி அழுவாள். அவன் ஒவ்வொரு முறையும் அவளை தேற்றி அவளுக்கு ஊக்கம் கொடுத்துக்கொண்டிருந்தான். நடுவில் சிற்சில பிரச்சனைகள் என்று வரும்பொழுதெல்லாம் அவள் தன்னின் இயலாமையை நினைத்து நினைத்து வருந்திக்கொள்வாள். அவள் கொஞ்ச மாதங்களில் கருவுற்றாள். அவன் மனமகிழ்ந்தான். அடுத்த சில மாதங்களில் அவளை கைகளில் தாங்கிக்கொண்டிருந்தான்.

சுகப்பிரசவம் ஏற்பட மருத்துவர் சில வழிமுறைகளையும், உணவு முறைகளையும் பரிந்துரைத்தார். ஆனால் அவள் அவை எதனையும் பின்பற்றவில்லை. அவன் பலமுறை சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை. பிரசவிக்கும் நாளும் வந்தது. அவளுக்கு ஆபரேஷன் தான் செய்தாகவேண்டும் என்று மருத்துவர்கள் சொல்ல வேறு வழியின்று ஆபரேஷன் செய்யப்பட்டது. குழந்தையும் தாயும் நலம். அவன் நேராக அந்த அறைக்குள் சென்றான். அவள் மயக்க நிலையில் இருந்தாள். குழந்தையை பார்த்தான். கண்களை மூடிக்கொண்டு கைகளை இறுக்கிக்கொண்டு அழகாக படுத்துக்கிடந்தது. அவளின் அருகே சென்று நெற்றியில் முத்தமிட்டுவிட்டு திரும்பினான்.

நேரம் கடந்தது… அவள் கண் விழித்தாள். அவளை பார்க்கவேண்டும் என்னும் ஆவலில் அவன் உள்ளே சென்றான். அவள் அவனை கண்டதும் கண் கலங்கிவிட்டாள். அவன் நேராக சென்று அவளை அணைத்துக்கொண்டாள்.

‘ஒண்ணுமில்லடா கண்ணு… முடிஞ்சுருச்சு… குழந்தை அழகா இருக்கா பாரு… நம்ம பொண்ணுடி…’ என்றான் பெருமிதமாக. அவள் அழுதுக்கொண்டே இருந்தாள்.

‘ஏ… அழுக கூடாதுடி… இந்த சமயத்துல’ என்று சொல்லிவிட்டு அவளை தேத்த முயற்சி செய்தான். அவள் பேச முற்பட்டாள். ஆனால் வாயில் இருந்து காத்து தான் வந்தது. பேச முடியவில்லை என்று அவள் சைகை செய்தாள். அவன் அவளை படுக்க சொல்லி பேசவேண்டாம் என்றான். அவள் இன்னும் பேச முயற்சி செய்தாள். அவளின் ஆவலை கண்டவன் அவளை வைத்த கண் வாங்காமல் உற்று கேட்க தொடங்கினான். அவள் மெல்ல காற்றோடு காற்றாய்,

‘நான் எதுக்கும் லாயக்கி இல்ல… பிஸினஸ் பண்ணினப்போ கூட எவ்வளவு தோல்வி’ என்றாள் காற்றாக. அவன் பயந்துபோய் அவளை பார்த்தான்.

‘இப்ப எதுக்குடி இத சொல்லுற’ என்றான் பதறிப்போய். அவள் தன் வயிற்றுபகுதியை அவனுக்கு சுட்டி காண்பித்தாள். அவள் ஆபரேஷன் செய்ததை காண்பிக்கிறாள் என்பதை அவன் உணர்ந்தான். அதிர்ந்துபோய் அவளிடம்,

‘இதுக்கும் உன் பிஸினஸ்க்கும் என்னடி சம்பந்தம்…?’ என்றான் இன்னும் அதிர்ச்சி நீங்காமல். அப்பொழுது உள்ளே நுழைந்த நர்ஸ்,

‘என்ன சார்… இவ்வளவு நேரம் உள்ள இருக்க கூடாது.. போங்க சார்… வெளிய போங்க..’ என்று அவனை பிடித்து தள்ளிக்கொண்டே வெளியில் இழுத்துவிட்டாள். அவன் பதிலெதுவும் பேசாமல், அதிர்ச்சியல் உறைந்த சிலையாய் வெளியில் சென்றான்.

மாதங்கள் ஓடின… வருடங்கள் கடந்தன. அவன் அவனது கம்பேனியின் டைரக்டர் ஆனான். அந்த ப்ரொமோஷன் லெட்டரை எடுத்துக்கொண்டு வந்தான். அவளுக்கும் மிகப்பெரிய சந்தோசம். இருவரும் இனிப்பு எடுத்து கொண்டாடினர். இரவு வெளியில் சாப்பிட போலாம் என்று முடிவு செய்தனர். இருவரும் ஒவ்வொரு ஹோட்டல் சொன்னர். அவன் அவளை அவனது விருப்பத்துக்கு வருமாறு வற்புறுத்தினான். அவள் கோபித்துக்கொண்டாள். அவன் அவளை  மெல்லியதாய் சமாதானம் செய்தான்,

‘அந்த ஹோட்டல்ல எதுவும் நல்லாயிருக்காதுடி… அதுல காசு தான் அதிகம்…’ என்று அவன் சொல்லும்பொழுதே அவள் குறுக்கிட்டாள்.

‘நான் எதுக்குமே லாயக்கி இல்லாதவ.. ஒரு ஹோட்டல் கூட என்னால ஒழுங்கா செலக்ட் பண்ண முடியல… இப்படிதான் பிஸினஸ்ல கூட ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியல… நீங்க வாழ்க்கையில முன்னேறி போயிட்டே இருக்கீங்க… நான்… ஹூம்…’ என்று சொல்லிவிட்டு விரக்தியில் கண்ணீர் விட்டாள். அவன் அதிர்ச்சியல் உறைந்து போனான்.

‘நான் உன்கிட்ட சொல்லவேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்டி. முயற்சி பண்ணினா கிடைக்காதது எதுவும் இல்ல. இதுக்காக நீ ஃபீல் பண்ணிட்டு இருக்காத’ என்று கொஞ்சம் சலிப்போடு தான் சொன்னான். அவள் அவனை ஒரு முறை பார்த்துவிட்டு ஏளனமாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு கீழே குனிந்துக்கொண்டாள்.

’இவளுக்கு இதே வேலையா போச்சுனு எரிச்சலா இருக்குலங்க. உங்கள சொல்லி என்ன புண்ணியம்… இந்த முட்டாள கட்டிகிட்டு நீங்க படாத பாடு படுறீங்க… வேணாங்க… நான் வேணா உங்களுக்கு… விவாகரத்து பண்ணிக்கலாம்… நீங்க ஒரு நல்ல பொண்ணா பாத்து கட்டிக்கோங்க…’

‘ஏ லூசு…’

‘இல்லங்க.. ப்ளீஸ்… நான் உங்க லைஃப்ல வந்திருக்கவே கூடாது… நான் போயிடுறேன்… என் புள்ளய தூக்கிட்டு போயி உங்க நெனப்பபோடவே காலத்த ஓட்டிடுறேன்…’

‘அடியே… என்னடி பேசுற…’

‘இந்த முட்டாள் எதுக்குங்க உங்களுக்கு…’ என்று அவள் அழுக அழுக அவன் அவளை சமாதானம் செய்து வெளியில் அழைத்து வரும்பொழுது ரொமான்டிக் டின்னர், ட்ராஜெடிக் ப்ரேக்ஃபாஸ்ட் ஆகியிருந்தது.

காலங்கள் கடந்தது… அவர்களின் குழந்தையை பள்ளியில் சேர்க்கும் நாளும் வந்தது. அவன் ‘லைஃப் ஸ்கூலில்’ சேர்க்க விரும்பினான். ஏட்டுக்கல்வியோடு வாழ்க்கை கல்வியும் போதிக்கும் இடம். ஆனால் அவள் ரிசல்ட் நோக்கி செல்லும் பள்ளியில் சேர்க்க விரும்பினாள். அவனுக்கு அதில் விருப்பமில்லை. பேச்சு ஒரு சமயத்தில் வாதமாக மாறியது.

’நான் சொல்லுற ஸ்கூல்ல படிச்சா அவன் வாழ்க்கைய உணருவான்டி. அதான் நல்லது…’ என்று அவன் அழுத்தமாக சொல்ல அவள் அடுப்பறையில் இருந்து வெளியில் வந்தாள். இருவருக்கும் நடுவில் நின்றுக்கொண்டிருந்த குழந்தை அவனை பிடித்து இழுத்து கீழே இறக்கியது. அவன்,

‘என்னடா செல்லம்?’ என்று குழந்தையிடம் கேட்க.

‘நான் எதுக்கும் லாயக்கி இல்ல. பிஸினஸ்ல கூட என்னால ஜெயிக்க முடியல’ என்று சொல்லியது. அவனுக்கு குலை நடுங்கியது. அவள் நேராக அடுப்பறையிலிருந்து வந்து,

‘என்ன சொன்னீங்க…’ என்று கேட்டாள். அவன் தடுமாறி, நிலைபிறண்டு, வாய் குளறி…

‘இல்ல மா… நீ சொல்றது தான் பெஸ்ட். அதுலயே சேத்துரலாம்னு சொன்னேன்’ என்று பேச்சை மாற்றினான். அவன் செல்லமாக, ‘தேங்க்ஸ் மாமா…’ என்றாள் அவனை அணைத்துக்கொண்டு. அவனும் அவன் குழந்தையும் கண் அடித்துக்கொண்டனர். -தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி