ட்ராகன் சைக்கிள்

அது ஒரு கனவு. கிடைத்துவிடாதா என்று ஏங்கும் அளவுக்கு பெரிய கனவாக தான் பார்க்கபட்டது அவனுக்கு. தெருவில் விளையாடும்பொழுதெல்லாம் அதையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பான் அவன். ரகு – நான்காம் வகுப்பு படிக்கிறான். இந்த முறை அரையாண்டு தேர்வில் அனைத்து பாடங்களிலும் 80க்கு மேல் எடுத்தால் அவனுக்கு சைக்கிள் கண்டிப்பாக வாங்கி தருவதாய் அப்பா சொன்னார். அன்றிலிருந்து தெருவில் எந்த சைக்கிள் போனாலும் அவன் அதன் மீதே குறியாய் இருந்தான்.
அரையாண்டு தேர்வு நெருங்கியது. படித்தான். விழுந்து விழுந்து படித்தான். தூங்கி விழும்பொழுதெல்லாம் அவன் கனவுகளில் சைக்கிளின் பெல் சத்தம் காதுகளில் கேட்டது. திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்துக்கொள்வான். மீண்டும் படிப்பான். ஒருவழியாக தேர்வுகள் முடிந்து தேர்வு முடிவுகள் வந்த சமயம். அனைத்திலும் அவன் எதிர்பார்த்த மதிப்பெண்ணே வந்திருந்தது. இன்ப மகிழ்ச்சியில் வீட்டில் குதித்துக்கொண்டே வந்து அவன் சொல்லியபொழுது அவன் அப்பாவும் அம்மாவும் முத்தம் கொடுத்து பாராட்டிவிட்டு சென்றுவிட்டனர். அப்பா சொன்ன சைக்கிளை மறந்துவிட்டாரோ என்று அவன் யோசித்துக்கொண்டிருந்தான். அன்று இரவு அப்பா அவனுக்காக ஒரு சைக்கிளை வாங்கி வந்தார்.
அது ஒரு பழைய சைக்கிள். உயரமாக இருந்தது. அவன் உயரத்தை மிஞ்சிய ஒரு கம்பி இருந்தது கைப்பிடிக்கும் சீட்டுக்கும் இடையில். சைக்கிள் இரும்பில் அங்கங்கே துரு பிடித்திருந்தது. அவன் மனம் உடைந்து போனான். புதிதாக ஒரு சின்ன சைக்கிள், அவன் வயது சிறுவர்கள் வைத்து விளையாடும் மாடர்ன் சைக்கிளை அவன் கனவு கண்டு வைத்திருந்தான். அவன் அப்பாவிடம் கதறினான்,
‘அப்பா.. இவ்வளவு பெரிய சைக்கிள் நான் எப்படி பா ஓட்டுவேன்’ என்றான் கண்ணில் கண்ணீரோடு.
‘டே.. என்ன இப்ப மட்டும் தான் ஓட்ட போறியா? பெரியவனாகுற வரை ஓட்டி தானே ஆகணும். அதுக்கு தான் இப்பவே… கருத்தா பாத்துக்கணும் சாமி. அப்பாவால முடிஞ்சது இவ்வளவு தான்’ என்று அப்பா சொல்லிவிட்டு அவனது முடியை கோதிவிட்டு உள்ளே சென்றுவிட்டார். அப்பா அந்த வார்த்தையை அடிக்கடி சொல்வார். அப்படி சொல்லும்பொழுதெல்லாம் அவன் அதை மீறி பேசமாட்டான். அவன் வீட்டில் தினசரி உணவுக்காகவும், அன்றாட தேவைக்காகவும் எவ்வளவு கஷ்டபடுகிறார்கள் என்பதை அவன் பார்த்துக்கொண்டுதான் இருந்தான். அந்த சிறு வயதிலே அவனுக்கு அது புரியவும் செய்தது.
எப்படி அவன் அப்பாவிடம் அதற்குமேல் கேட்க அவனுக்கு விருப்பமில்லையோ அது போல அவனுக்கு விருப்பமில்லா அந்த சைக்கிளை தள்ளி பார்க்க கூட அவன் விரும்பவில்லை. ஒவ்வொரு நாளும் அவன் பள்ளிக்கு கிளம்பும்பொழுதும் வீட்டு வாசலில் நின்று அந்த சைக்கிள் அவனை கேலி சிரிப்பு சிரிப்பதாகவே அவன் நினைத்துக்கொள்வான்.

ஊரில் இருக்கும் மற்ற சிறார்கள் சைக்கிளில் பறக்கும்பொழுதெல்லாம் அவன் அதை ஒரு ஏக்கத்தோடு தான் பார்த்துக்கொண்டிருந்தான். சைக்கிளின் இரு பெடல்களும் எட்டாத அந்த சிறுவர்கள் சாய்ந்து சாய்ந்து மிதித்துக்கொண்டு போகும் காட்சி அவனுக்கு ஏக்கத்தை இன்னும் கூட்டியது. அவர்களின் சைக்கிள்களை ஆசையாக தடவி பார்ப்பான். யாரேனும் தங்கள் சைக்கிளை கொடுத்து ஓட்டி பார்க்க சொன்னால், யோசனையில்லாமல் தடுத்துவிடுவான். கொஞ்சம் சுயம் தடுத்தது அவனுக்கு.
அடுத்த சில மாதங்களில் அவனது முழுஆண்டு தேர்வும் முடிந்தது. அவன் ஊர் சர்ச்சில் சிறார்களுக்கான போட்டி மே மாதம் நடைபெற இருந்தது. ஒரு மாத காலம் முன்னதாகவே பெயர்களை பதிவு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியது. அவன் நண்பர்களோடு அவன் பதிவு நடைப்பெறும் இடத்திற்கு சென்றான். அங்கு பெருவாரியான சிறார்கள் சூழ்ந்து இருந்தனர்.
ஓட்டபந்தயங்களுக்கு அதிக பதிவுகள் நடத்தப்பட்டுக்கொண்டிருந்தது. 100மீ, 200மீ,400மீ,800மீ மற்றும் 1600 மீட்டர் என பிரித்து வைத்திருந்தனர். படிப்போ வயதோ சிறுவர்கள் பொய் சொல்லக்கூடும் எனபதால் அவர்கள் உயரத்தை வைத்தே வகைபடுத்தப்பட்டனர். 4 அடி வரை ஜூனியர், 5 வரை சீனியர் அதற்கு மேல் சூப்பர் சீனியர் என்று வரையறை இருந்தது. உள்ளே சென்று கூட்டத்தை வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்த ரகுவிடம் அவனது நண்பன் மூச்சிரைக்க ஓடி வந்து சொன்னான்,

’டே ரகு.. சைக்கிள் போட்டி இருக்குல. இந்த முறை வாடகை சைக்கிள்ல ஓட்ட முடியாதாம் டா. நம்ம சைக்கிள் கடை அண்ணாச்சிக்கும் ஊர் தலைவருக்கும் ஏதோ ப்ராப்ளம் போல. அவரு பொலப்ப கெடுக்குறதா நினச்சுட்டு நம்ம பொலப்புல மண்ண வாரி போட்டுட்டான்..’ என்று சொல்லி வருத்தப்பட்டான். சட்டென சுதாரித்துக்கொண்டு, ‘அட..உனக்கென்ன.. உன்கிட்ட தான் சொந்த சைக்கிள் இருக்கே… நான் தான் பாவம்’ என்று சொல்லிவிட்டு அவன் கெக்கபெக்கவென்று சிரித்தான்.
ரகு வேகவேகமாக வீட்டிற்கு நடந்து சென்றான். அந்த நடையில் சிறு ஆக்ரோஷம் தொத்திக்கொண்டிருந்தது. வீட்டிற்குள் நுழையும் முன் நின்றுக்கொண்டிருந்த அந்த பெரிய சைக்கிளை எட்டி ஒரு மிதி மிதித்தான், அது மெதுவாக மாற்று பக்கம் சாய்ந்து விழுந்தது. வேக வேகமாக உள்ளே சென்று படுத்துக்கொண்டான்.
அன்று இரவு அவன் அப்பா வீட்டிற்கு வரும்பொழுது சைக்கிள் விழுந்திருப்பதை பார்த்தார். அவரே தூக்கி நிறுத்திவிட்டு உள்ளே சென்றான். அவன் கோபமாக உள்ளே படுத்திருந்ததை பார்த்தார். அமைதியாக உள்ளே சென்று அம்மாவிடம்,
’அவன் சாப்புட்டானா?’ என்றார்.
’இல்ல.. சர்ச்ல இந்த வருச போட்டி வச்சிருக்காங்க. சொந்த சைக்கிள் இருக்கவங்க தான் கலந்துக்க முடியும்னு சொல்லீட்டாங்களாம். பக்கத்து தெரு சீதா மொவன் சொன்னான். இவன் வந்ததுல இருந்து வாயே தொறக்கல.அவனுக்கு இந்த பெருசு ஓட்டத்தெரியாதுல. அந்த ஊர் தலைவர்கிட்ட சொல்லி ஏதாச்சும் செய்ய முடியுமானு பாருங்க..’ என்று குசுகுசுத்துக்கொண்டாள் அம்மா.
’அட.. அவன்கிட்ட யாருடி போயி கேக்குறது. மீசைக்கு எண்ணெய் போட்டு வளக்குறவன் அவன். பிகு பண்ணிப்பான்… நான் ரகுகிட்ட பேசுறேன்..’
‘ஆமா.. அதுக்கு தான் லாயக்கி..’ என்று சொல்லிவிட்டு ஒரு இழுப்பு இழுத்துவிட்டு அம்மா உள்ளே சென்றாள்.
அப்பா மெதுவாக உள்ளே சென்றார். அப்பாவை கண்டதும் அவன் மாற்று பக்கம் திரும்பிக்கொண்டான். அவனருகில் சென்று அப்பா படுத்துக்கொண்டார்.
’கண்ணா..’ என்றார்.
அவன் பதிலுக்கு ‘ம்ம்..’ என்றான்.
‘சாப்பிட்டியா?’ என்றார்.
‘இல்ல..’
‘ஏன்?’
‘பசிக்கல’
‘ஏன்?’
‘பசிக்கலனா பசிக்கல. அதுக்கு ஏன்னா என்ன சொல்லுறது?’ என்று அவன் வாயிலிருந்து வார்த்தைகள் சற்று கடினமாக தான் வந்தது.
அப்பா மெல்லியதாய் ஒரு புன்னகை புரிந்தார். ‘சரி சர்ச்ல இந்த வருச போட்டி அறிவிச்சிருக்காங்களாமே?’ என்றார் தெரியாதது போல.
’ஆமா.. அதுக்கென்ன?’
‘என்னடா அதுக்கென்ன? போன முறை சைக்கிள் ஓட்ட தெரியாதுனு விட்டுட்ட. இந்த முறை தான் அடிக்கடி சைக்கிள வாடகைக்கு எடுத்து ஓட்டி ஓட்டி பழகிட்டியே. அப்பரம் என்ன?’
’இன்னும் ரேஸ் போற அளவுக்கு எனக்கு ஓட்டத்தெரியாது’
‘டே.. அதெல்லாம் ஓட்டிடலாம் டா.. நீ கலந்துக்க’ என்றார் அப்பா.
‘அப்பா.. ப்ளீஸ் பா. சொந்த வண்டி இருந்தா தான் இந்த முறை கலந்துக்க முடியுமாம்.’
‘சூப்பர் டா. அப்போ போட்டி கம்மியாகிடும். நீ ஈசியா ஜெயிக்கலாம் இல்லயா?’ என்றார் அப்பா மிகுந்து மகிழ்வோடு.
‘அப்பா.. என்கிட்ட இருக்கிற வண்டிய எனக்கு ஓட்ட தெரியாது. ஏறி உட்கார்ந்து ஒரு பக்கம் சாஞ்சா கூட கால் எட்டாது. அதுல எங்கிருந்து போக சொல்லுறீங்க. இந்த முறையும் நான் அந்த போட்டியில இல்ல. அவ்வளவு தான்’ என்று சொல்லிவிட்டு கவுந்து படுத்துக்கொண்டான். அப்பா  அவனின் பின்னந்தலையை தடவிக்கொடுத்தார்.
’தூக்கம் வருதா கண்ணா?’ என்றார் அப்பா.
‘ம்ம்’ கொட்டினான் அவன்.
‘அப்போ கண்ணனுக்கு ஒரு கதை சொல்லவா?’ என்று அவர் கேட்டார். அவன் பதிலெதுவும் பேசவில்லை. அவர் கதை சொல்ல தொடங்கினார்,
’ஒரு ஊருல ஒரு அம்மா நாய், நிறையா குட்டி நாயிங்க இருந்துச்சாம். அதுல ஒரே ஒரு குட்டி நாயிக்கு மட்டும் நாலு காலுல ரெண்டு கால் இல்லவே இல்லயாம். அதனால அம்மா நாய்க்கு அந்த ஒரு குட்டி நாய் மேல மட்டும் ரொம்ப பாசம் அதிகமாம். அதால நடக்க முடியாது முடியாதுனு மத்த நாயிங்க சொல்ல சொல்ல அது மனசுலயும் நடக்க முடியாதுனு தோண ஆரம்பிச்சு அது நடக்கணும்னு முயற்சியே பண்ணாம இருந்துச்சாம். அதுக்கு உட்கார்ந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்க ஆரம்பிச்சுச்சாம். அம்மா நாய் எல்லாத்தையும் கொண்டு வந்து கொண்டு வந்து கொடுக்குமாம். அந்த குட்டி நாயிங்க எல்லாம் வளர்ந்து வெளிய போக ஆரம்பிக்க, இந்த நாய் வளர்ந்தும் நடக்காம இருக்கிறது அதுக்கு ரொம்ப வருத்தமா, ஏக்கமா இருந்துச்சாம். ஒரு நாள் அதோட அம்மா போனவங்க வரவே இல்ல.’ என்று அவர் சொல்ல அவன் ஆர்வமாக கேட்க தொடங்கினான்.
‘ஏன் பா… அது அம்மாவுக்கு என்ன ஆச்சு..?’
’செத்திருக்கலாம். இல்ல வேற யாருனா புடிச்சுட்டு போயிருக்கலாம். அப்பரம், அதுக்கூட இருந்த மத்த நாயிங்களுக்கு அது ஒரு கவலையே இல்லாம போச்சு. இத யாருமே கவனிக்கல. அங்குமிங்கும் தேச்சு நகர்ந்துச்சு. முன்னாடி இருந்த ரெண்டு கால ஊண பாத்துச்சு. விழுந்துச்சு. பசி வந்துச்சு. மத்த நாயிங்க இதுகிட்ட வந்து குறைக்க ஆரம்பிச்சுச்சு. அம்மா நாய் இல்லாம அது ரொம்ப கஷ்டபட்டுச்சு. ஒரு நாள் எப்படியாச்சும் நடந்திரணும்னு முன்னாடி இருந்த ரெண்டு கால ஊன காலையிலருந்து கஷ்டபட்டு சாயங்காலம் பாத்தா ஊனிடுச்சு. பின்னாடி தேச்சுகிட்டு முன்னாடி இருந்த கால வச்சு குதிச்சு குதிச்சு நடக்க ஆரம்பிச்சுச்சு. பல நாள் முயற்சியில அப்படியே நடக்க ஆரம்பிச்சுருச்சு. அதுக்கு வலிச்சுது தான். ஆனா அது காமிச்சுக்கல. தன்னோட சாப்பாட தானே தேடிக்க ஆரம்பிச்சுச்சு. அந்த நாய் அப்படி கஷ்டபடுறத பாத்த ஒருத்தர், அத கால்நடை ஆஸ்பத்திரிக்கு அழைச்சிகிட்டு போயி உதவி செஞ்சாரு. பின்னாடி காலு இருக்குற இடத்துல செயற்கை கால் பொருத்திவிட்டாரு.. அதுக்கு அப்பரம் அந்த நாய் எங்க போனாலும் ஈசியா போயிடுச்சு..’ என்று முடித்தார்.
’இத மொதல்லயே அந்த நாய் செஞ்சிருக்கலாம்…’ என்றான் அவன் சிரித்துக்கொண்டே.
‘ஹா… கரக்டு டா கண்ணா. முதல் அடிய எடுத்து வைக்காம நம்மால முடியாதுனு மட்டும் நினச்சுட்டு கிடந்துச்சு. தொட்டா தானே தெரியும் சுடுமா இல்லயானு. இல்லையாடா கண்ணா’ என்றார்.
’ஆமாம் பா. பாவும் நாய் தானே.. அதுக்கு என்ன தெரியும்..’ என்றான் அவன் பெரிய மனிதன் போல.
‘கரெக்ட் டா கண்ணா. நாய்க்கு தெரியாது விடுவோம். நாம அத புரிஞ்சுகிட்டா போதும்’ என்று சொல்லிவிட்டு அவனையும் படுக்க சொல்லி அவர் தட்டிகொடுத்துக்கொண்டே படுத்தார். அவனும் திரும்பி படுத்துக்கொண்டு அந்த கதையையே யோசித்துக்கொண்டிருந்தான். அப்பா சொன்ன வார்த்தை மீண்டும் மீண்டும் அவனுக்கு கேட்டுக்கொண்டே இருந்தது. ‘தொட்டா தானே தெரியும் சுடுமா இல்லையானு’.
சட்டென திரும்பினான். அப்பாவை உலுக்கினான். அப்பா எழுந்து ‘என்னடா?’ என்றார்.
‘எனக்கு நம்ம பெரிய சைக்கிள் ஓட்ட ஹெல்ப் பண்றீங்களா பா?’ என்றான்.
அவர் அவனது நெற்றியில் ஒரு முத்தமிட்டு ‘கண்டிப்பா டா கண்ணா. இப்ப படு. காலையில முதல் வேலை இதுதான்’ என்றார். அவனும் மகிழ்வோடு படுத்துக்கொண்டான்.

அடுத்த நாள் காலையில் அவர்கள் முதல் வேலையாக சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினர். அப்பா அவனுக்கு பயிற்சி கொடுத்தார்.
’பாருடா. எல்லாத்துக்கும் ஒரு மாற்று இருக்கும். நீ மொதல்ல சொன்னது சரி. சீட்டுல உட்கார்ந்தா உனக்கு பெடல் எட்டாது. அதனால நீ குரங்கு பெடல் போடு’ என்றார். அவன் சிறிது யோசித்தான்.
’அது எப்படிப்பா?’ என்றான். அப்பா அவனிடமிருந்து சைக்கிளை வாங்கினார். தன் வலது காலை எடுத்து சீட்டுக்கும் கைப்பிடிக்கும் நடுவில் இருந்த கம்பிக்கு கீழே காலை விட்டு அடுத்த பக்கம் இருக்கும் பெடலில் காலை வைத்தார்.
‘இங்க பாரு. இப்படி வச்சிக்கணும். கொஞ்சம் உந்தி உந்தி போயி கொஞ்சம் சைக்கிள் நகர ஆரம்பிச்சதும் இந்த இடது காலையும் எடுத்து இதுல வச்சிக்கோ’ என்று இந்த புறம் இருந்த பெடலை கை காட்டினார். ’அடுத்து உடம்புக்கு ஒரு சாய்வு கொடு. அப்படியே அழுத்தி பிடிக்காத. கொஞ்சம் உடம்புக்கு லூஸ் கொடுக்கணும். சரியா’ என்று அவர் சொல்ல சொல்ல அவன் அமைதியாக கேட்டுக்கொண்டான். அவர் சொன்னது போல காலை கம்பிக்கு இடையில் விட்டு அந்த பக்கம் இருக்கும் பெடலின் மேல் வைத்துக்கொண்டான். கொஞ்சம் உந்தி உந்தி முன்னே சென்றான். வண்டி சிறிது வேகத்தில் இருக்கும்பொழுது இடது காலை வைக்க பார்த்தான். ஆனால் சட்டென எதிர்பக்கம் சாய்ந்தான். அப்பா ஓடிசென்று பிடித்துக்கொண்டார்.
’இதான் கண்ணா. நீ அந்த சின்ன சைக்கிள் ஓட்டி பழகிட்டல. அதனால உடம்பு நேரா இறுக்கமா இருக்க பாக்குது. அப்படி வைக்காத லூஸ் விடு. சைக்கிளோட பிடியில உடம்பு இருக்குற போல பாத்துக்க’ என்று சொல்லிவிட்டு அவனது உடம்பை தளர்விட தன் கையால் போட்டு அவனை உலுக்கினார். அவன் அவரின் சைகைபடி செய்ய ஆரம்பித்தான். சில பல தோல்விகளுக்கு பிறகு அவனது இரண்டு கால்களும் பெடல்களில் இருந்தது. அவனுக்கு மகிழ்வு தாங்கவில்லை. பின் அப்பா பேசினார்,

‘சூப்பர் டா கண்ணா. இப்போ கலக்கிட்ட. அடுத்து ஸ்பீடு எப்படி எடுக்குறதுனு பாக்கலாம்.’ என்று அவர் சொல்லும் சமயத்தில் அதில் முழு ஆர்வமும் மகிழ்வும் கொண்டிருந்தான் அவன்.
’ஓகே பா. டன்..’ என்றான் பெரிய மகிழ்வோடு.
அவர் ஒருமுறை சிரித்துவிட்டு, ‘இப்ப ரெண்டு காலையும் வச்சிட்டல. இந்த மாதிரி ஓட்டுறப்போ நாம ஒரே போல தான் இருப்போம். ஆனா அந்த சைக்கிள் வலது பக்கம் சாஞ்சு சாஞ்சு வரணும். அப்போ தான் உன்னால வேகமா ஓட்ட முடியும்’ என்று அவர் சொன்னபொழுது அவனுக்கு அது சற்று புரிந்தும் சற்று புரியாமலும் இருந்தது. அவர் அவனை ஓட்ட சொல்லிவிட்டு கூடவே ஓடிவந்து சைக்கிளின் அசைவுகளை ஏற்படுத்தினார். அவன் தடுமாறினான், கொஞ்சம் விழபார்த்தான் சற்று நேரத்தில் அவன் அவர் சொல்லியதை புரிந்துக்கொண்டான். அதற்குள் இருட்டிவிட்டது. அன்றிரவு அவன் மகிழ்வோடு வீட்டிற்கு சென்றான்.
அடுத்த சில நாட்களில் அவன் விடாது பயிற்சி செய்தான். சில நாட்களில் அந்த சைக்கிள் அவனுக்கு உற்ற நண்பனாகி போனது. மணலில் விழுந்தான், போஸ்ட் மரத்தில் இடித்து விழுந்தான், தெருவில் போய்க்கொண்டிருந்த பாட்டி மேல் விட்டு விழுந்தான், சில அடிகள், திட்டுகள் வாங்கி சைக்கிளை தள்ளிக்கொண்டே ஓடிவந்து பக்கத்து தெருவில் நின்று நன்கு வாய்விட்டு சிரித்துக்கொள்வான். இருவரும் உற்ற நண்பர்களானார்கள். அவன் பெயரை போட்டிக்கு பதிவு செய்ய போனான்,

‘பெயர் ரகு’ என்றான்.
‘தம்பி உயரம் பாருங்க சார்’ என்றார் பதிவு செய்யும் இடத்தில் இருந்தவர்.
‘தம்பி ஜூனியர் கேட்டகரி சார். 4 அடிலாம் வரமாட்டான்’ என்று சொன்னார் இன்னொருவர்.
பதிவு செய்பவர் குறித்துக்கொண்டார். ‘தம்பி என்ன சைக்கிள்..’ என்று கேட்டார். அவன் சிறிது நேரம் யோசித்தான். அவன் சைக்கிளுக்கு ஒரு பெயர் வைக்க வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது. பட்டென ஒரு பெயர் பொறித்தட்ட அவன் சொன்னான். ‘ட்ராகன்’
’தம்பி.. என்ன சொன்னீங்க…’
’ட்ராகன் சார். ட்ராகன்’ என்றான்.
‘ம்ம்க்கும்.. வண்டி மேக்க கேட்டா என்னா உளறுது பாருங்க.. ட்ரா…கன்..’ என்று அவர் முனகிக்கொண்டே குறித்துக்கொண்டார். அன்றிலிருந்து அதை யாரிடம் காண்பித்தாலும் ‘ட்ராகன்’ என்றே அவன் அறிமுகபடுத்துவான். போட்டி நடக்கும் நாளும் வந்தது. அவன் அவனை விட உயரமான ‘ட்ராகனை’ தள்ளிக்கொண்டு வருவதை பார்த்து அங்கிருந்த அனைவரும் சிரித்தார்கள்.  அவன் அப்பா தூரத்தில் நின்றுக்கொண்டு கையை உயர்த்தி வாழ்த்து தெரிவித்து, சிரித்த முகத்துடன் செல்ல சொன்னார். அவன் மனதில் பதட்டமிருந்தாலும் மெதுவாக தள்ளிக்கொண்டே சென்றான்.

போட்டி ஆரம்பிக்கும் முன் சைக்கிளில் ஸ்டாண்ட் போட்டுவிட்டு அதன் முன்னர் சென்று நின்றுக்கொண்டான்.
‘ட்ராகன்… இந்த ஒரு மாசம் நாம திக் ஃப்ரண்ட்ஸ் ஆகிட்டோம். எனக்கு இந்த போட்டி ஒரு ரெண்டு வருசமாவே கனவு கலந்துக்கணும்னு. நான் ஜெயிக்கணும்னு இல்ல. இந்த போட்டிய முடிக்கணும். நம்மல சுத்தி இருக்குறவங்க நம்மல பாத்து சிரிக்கிறாங்க. அத நாம பொய்யாக்கணும் ட்ராகன்..’ என்று அவன் சொல்ல அவனது கைப்படி ஒரு பக்கமாக காற்றில் சாய்ந்தது. அவன் சைக்கிள் சம்மதம் சொல்லிவிட்டதாய் அவன் மனதில் அவ்வளவு மகிழ்வு. அதன் கைப்பிடிக்கு அழுத்தி முத்தம் பதித்துவிட்டு சென்று தயார் ஆகி நின்றான். கூட்டத்தில் நின்றிருந்தவர்கள் எல்லாம் அவன் எப்படி ஓட்டுகிறான் என்பதை பார்க்கவே ஆயுத்தமானார்கள். காலை கம்பிக்கு நடுவில் விட்டு அந்த பக்கம் பெடலில் வைத்துக்கொண்டான்.
1..
2..
3..
பின் ஒரு பலமான விசில் சப்தம் கேட்டது. உந்தி உந்தி உந்தி ஒரு ஐந்து உந்தலுக்கு பிறகு அவன் இடது காலை தூக்கி மற்றொரு பெடலில் வைக்கும்பொழுது கூட்டமே கரகோஷம் எழுப்பியது. சுற்றியிருந்தவர்கள் எல்லாம் ஆ.. ஊ.. என்று கத்தினர். அவனை தெரிந்தவர்கள் அனைவரும் அவனை ‘ரகு.. ரகு..’ என்று கத்தி உற்சாகபடுத்தினர். அவன் வேக வேகமாய் ஓட்டினான். அவனது சைக்கிள் வலது பக்கம் சாய்ந்து சாய்ந்து அவன் கைக்கு வந்தது. அவன் ஓட்டிய விதம் அவன் கீழே விழப்போவது போல பாவனையை அனைவருக்கும் காண்பித்தது. ஊரே அவனை உற்சாகபடுத்த அவன் ஒவ்வொருவராய் வீழ்த்தி முன்னேறினான்.
அதுதான்.. கடைசி சுற்று. அவனுக்கு முன்னர் நான்கு பேர் இருக்கின்றனர். அவன் இப்பொழுது போகும் வேகத்தில் சென்றால் கண்டிப்பாக அவன் தான் முதலில் வருவான். அவன் முன்னர் சென்ற ஒருவர் கால் இடறி, கைபிடி மறித்து இடறி கீழே விழுந்தான். அவனை பின்தொடர்ந்த ரகுவால் ப்ரேக் போட முடியவில்லை. அதுவரை வலது புறம் மட்டுமே சாய்த்து ஓட்டிக்கொண்டிருந்த ரகு இடது பக்கம் சாய்க்க முற்பட்டான். அவன் உடம்பும் இடது புறம், சைக்கிளும் இடது புறம் என்றால் கண்டிப்பாக சைக்கிள் விழுந்துவிடும் என்று அப்பா பதறினார். இடது புறம் சாய்த்து சட்டென ப்ரேக் அடித்து மணலில் பிரண்ட பின் சக்கரத்தை நேராக்கி இன்னும் இடது திருப்பினான். வண்டி இடது பக்கமாக மாறி ஓடியது. கண் இமைக்கும் நேரத்தில் அவன் அப்படி செய்தது, கீழே விழுந்தவன் மேல் வண்டியை ஏற்றாமலும் காப்பாற்றியது.
போட்டி முடிந்தது. ரகு தோற்றுவிட்டான். அவன் மெதுவாக தன் சைக்கிளை தள்ளிக்கொண்டே முடிக்கும் இடத்திற்கு வந்தான். அவன் முடிக்கும் கோட்டை நெருங்க நெருங்க ஊரே அவனுக்கு கை வேகமாக தட்டியது. எல்லோரும் ரகு.. ரகு.. என்று கத்தினர். அப்பொழுது தான் அவன் செய்தது எத்தகைய விசயம் என்று அவனுக்கே புரிந்தது. அவன் சிரித்துக்கொண்டே கொஞ்சம் முகத்தை தொங்கவிட்டுக்கொண்டே அப்பாவிடம் சென்றான். அப்பா அவனை கட்டி பிடித்து ஒரு முத்தம் பதித்தார்.
’போட்டியில ஜெயிக்கிறது முதல்ல வர்றது மட்டுமில்ல கண்ணா. அடுத்தவங்களுக்காக நாம தோக்குறதும் ஜெயிக்கிறதுக்கு சமம் தான். நீ வந்த வேகத்துக்கு அவன் மேல விட்டிருந்தா அவனுக்கு கண்டிப்பா ரொம்ப அடிப்பட்டிருக்கும்’ என்று சொல்லிவிட்டு இன்னும் இறுக கட்டிக்கொண்டார். அவனுக்கு அன்று சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. ஊரில் எல்லோருக்கும் தெரியும் ஆளாக அவன் மாறிவிட்டான். எல்லாம் தன் ’ட்ராகன’ஆல் தான் என்று அவன் நம்பினான். அன்றிலிருந்து என்றுமே அவன் நாட்கள் ட்ராகனோடே பயணப்பட்டது. இனிய உறவாக.

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி