மரணத்தின் வாயிற்குரல்


இருட்டின் அமைதி அவனுக்கு உள்ளுக்குள் ஏதோ பண்ணிக்கொண்டிருந்தது. அவன் நெஞ்சின் படபடப்பு அவனின் காதுகளிலும் கேட்கும் அளவுக்கு அப்படி ஒரு அமைதி. இடக்கையை தலையிற்கு அடியில் வைத்து, வலக்கையை தன் நெஞ்சில் வைத்து மேலும் கீழும் வருடிக்கொடுத்துக்கொண்டான். இருந்தும் அந்த படபடப்பு நிற்கவில்லை. இதுதான் இரவு. இதுதான் அவன் கண்கள் காணப்போகும் கடைசி இரவு. கொடிதினும் கொடிது இறக்கும் நாள் அறிவது. அவன் அறிந்திருந்தான். நாளை அதிகாலை ஐந்து மணிக்கு மேல் அவன் இந்த பூலோகத்தில் இருக்கமாட்டான்.

அவனை அப்பா என்றழைக்கும் அவனது குழந்தை இனி அந்த சொல்லுக்கு உரித்தவரை காணப்போவதே இல்லை. நாளை அதிகாலையில் அவனுக்கு தூக்கு. மரண தண்டனை என்று தீர்ப்பெழுதிவிட்டு அந்த பேனாவின் நுனியை உடைக்கும்பொழுது அவன் வாழ்வே இருண்டுதான் போனது.

இதெல்லாம் சாதாரணம் – இப்படி போயி அப்படி வந்திரலாம் என்னும் போக்கில் ஆயிரெத்திட்டு வழக்கறிஞர்கள் அவனது அப்பாவிடம் தங்களது விசிட்டிங் கார்டை திணித்து சென்றனர். அத்தனை பேருக்கும் லட்சகணக்கில் பணம் என்பது மட்டுமே குறிக்கோளாக இருந்தது. அடுத்த வேளைக்கான சோற்றுக்கு மட்டும் சம்பாதித்த அவனிடம் சேமிப்பு என்றில்லை, இன்று கொடுப்பதற்கும் ஒரு ஆளும் இல்லை. நாளை காலை தூக்கு மேடை. ஏனோ அவனது கருணை மனுக்களும் கண்டபடி நிராகரிக்கப்பட்டு தான் கிடந்தது.

முன்னமே இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்ட தேதிகள், இம்முறை இந்த நிமிடம் வரை எந்த மாறுதலும் இல்லாமல் போனது. சமயங்களில் தோன்றும். முன்னால் தொங்கிக்கொண்டிருக்கும் தூக்கு கயிறை கண்டு நொடிக்கு நொடி இறப்பதற்கு பதிலாக மொத்தமாக இறந்துவிடலாம் என்று. ஆனால் அப்பொழுதெல்லாம் அவனது குழந்தையின் பிம்பம் அவனை நோக்கி ‘அப்பா’ என்று கத்திக்கொண்டே ஓடிவரும். ஓய்ந்து சாய்ந்து உட்கார்ந்துவிடுவான்.

அவன் அங்கு மல்லாக்க படுத்துக்கொண்டு விட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். கையில் ஒரு பேப்பரும் பேனாவும் அவனிடம் இருந்தது. கையில் எடுத்து ஒரு கடிதம் எழுதினான்.

‘அன்புள்ள அப்பா,

நலமா? என் நலம் முடிய போகுது பா. பாப்பாவ நேத்து கூட்டிட்டு வந்தீங்க. சீக்கிரம் வந்திருங்கப்பானு சொல்லுச்சு பாப்பா. அவளுக்கு நான் திரும்பவரமாட்டேன்னு எப்படியாச்சும் சொல்லிருங்கப்பா. பாப்பா நல்லா படிக்கணும். நல்லா இருக்கணும். உங்களுக்கு உடம்பு முடியாம இருந்துச்சு. உங்கள நீங்க பாத்துக்கணும். பாப்பாவ படிக்க வைக்கணும்.’ எழுதுவதை நிறுத்திவிட்டு கண்களிலிருந்து வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டான். மீண்டும் எழுதினான்,

‘தூக்கு எப்படி பா இருக்கும்? கண்விழி பிதுங்கி வெளியே வந்துரும்னு சொல்லுறாங்களே அப்படியா? மூஞ்சில துணிய மாட்டிவிட்டிருவாங்கல? தொண்டைய நெறிக்கிறப்போ ரொம்ப வலிக்கும்ல..’ எழுதிக்கொண்டே அவனுக்கு அழுகையும் விரக்தி சிரிப்பும் மாறி மாறி வந்தன. ‘கைய வேற கட்டிடுவாங்கல.. தெரிஞ்சே அந்த இடத்துக்கு எப்படி பா போவேன்?
இன்னைக்கு நான் தூங்கணுமா? காலையில இன்னும் கொஞ்சம் தூங்கினா நல்லா இருக்கும்னு தோணுமா? உடம்பு கலைப்பா இருக்கா? நாளைக்கு காலையில சூரியன கூட பாக்க முடியாதுல. நான் சின்ன வயசுல இருக்கப்போ நீங்க சொல்லுவீங்க. வீட்டுக்குள்ள வர்றாத.. சூரியன் தான் நம்ம கடவுள். அவரோட விளையாடு. உனக்கு சுகம் எல்லாம் தருவார்னு சொல்லுவீங்க. அந்த சூரியன் என்னைய காப்பாத்துவாறா பா?’ எழுதிவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தான். ஒரு பெருமூச்சு விட்டான்.

‘திரும்ப அம்மாகூடவும் உங்க கூடவும் வாழ்க்கைய முதல்ல இருந்து வாழ ஆசையா இருக்குபா. சின்ன வயசுல உங்க தோளுல உட்கார்ந்துகிட்டு தான் நான் வருவேன். என் ராசாடானு என்ன கொஞ்சுவீங்க. நீங்க ஒரு நல்ல அப்பா பா. நான் தான் நல்ல புள்ளையா இல்ல. நல்ல புள்ளையா மட்டுமில்ல, ஒரு நல்ல மனுசனாவே இல்லபா. இந்த உலகத்துக்கே நீ வாழ தகுதி இல்லாதவன்னு சொல்லிட்டாங்கப்பா. உங்க புள்ளைய இந்த அரசாங்கம் கொல்ல சொல்லிடுச்சு பா’ அவன் எழுதிக்கொண்டிருக்கும்பொழுதே அழுகை ஆத்திரமாக வந்தது. எழுந்து சென்று கம்பிகளுக்கு வெளியில் தெரியும் வட்டை நிலவை பார்த்தான். அது ஒரு முழு நிலவாக இருந்தது. அந்த நிலவில் அவன் அம்மாவின் முகம் தெரிந்தது அவனுக்கு. அவனுக்கு அவன் அம்மா நிலவை காட்டி தான் சோறு ஊட்டினாள். ஒரு உயிர் கருவாகி, உறுவாகி, நிலைக்கொண்டு நாளை அழிக்கொள்ள போகிறது. அவன் வாழ்விற்கான ஒரு அர்த்தம் அவன் கண்கள் தேடிக்கொண்டிருக்க, அது எங்கேயும் கிடைக்கவில்லை. மீண்டும் சென்று எழுத அமர்ந்துக்கொண்டான்.

‘படிப்பு தான் பா முக்கியம். பாப்பாவ இந்த வயசுல வச்சுட்டு நீங்க என்னப்பா பண்ணுவீங்க? வேணா பா. இந்த பாவியோட புள்ளையா அவ வளர வேணாம்பா. உங்க புள்ளை போல இல்லப்பா. ஊருல ஆயிரம் நல்லவங்க இருக்காங்க. விட்டிருங்க பா. அவங்ககிட்ட பாப்பா வளருட்டும் பா. நல்லா வளருவா பா. என் பொண்ணு பெரிய ஆளா வருவா பா. பாருங்களேன். அப்பா.. பசி தாங்க மாட்டேன்ல நான். ரெண்டு நாளா சாப்பிடல பா. பசிக்குது பா. சின்ன வயசுல நீங்க ஊட்டி விடுவீங்கல. அப்படி ஊட்டி விடுறீங்கலாபா. அப்பா உங்க கைய பிடிச்சுக்கணும்பா. கட்டிப்பிடிச்சுக்கணும்பா. நான் இனி தப்பு செய்யமாட்டேன்பா. எனக்கு இந்த உலகத்துல வாழணும் பா. என் பொண்ண பாத்துக்கணும். உங்கள பாத்துக்கணும். ஊருக்கு நல்லது செய்யணும். அப்பா என் வாழ்க்கைய நான் அழிச்சுட்டேன்பா. நான் வாழணும்பா. ஆசையா இருக்குப்பா… அப்பா.. அப்பா… அப்பா… என்னய கூட்டிட்டு போயிடுங்கப்பா. பயமா இருக்குப்பா. அப்பா பயமா இருக்குப்பா. அப்பா…’ சட்டென கையிலிருந்த பேப்பரையும் பேனாவையும் போட்டுவிட்டு தாரை தாரையாக வடிந்தோடிய கண்ணீரை துடைத்துக்கொண்டே நேராக ஒரு மூலையில் சென்று குத்துக்காலிட்டு அமர்ந்துக்கொண்டான். முகத்தை தன் இரு கைகளாலும் மூடிக்கொண்டான். இன்னும் தேம்பி தேம்பி அழுதுக்கொண்டிருந்தான்.

மீண்டும் வந்து பேப்பரை எடுத்துக்கொண்டான். ‘அப்பா.. உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்பா. உங்ககிட்ட நான் இதுவரை சொன்னதில்ல. ஆனா இப்ப சொல்லுறேன். உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்பா. உங்கள ரொம்ப மிஸ் பண்ணுறேன் பா. அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணுறேன் பா. அம்மா மடியில படுத்துக்கணும் போல இருக்குப்பா. அப்பா… எனக்கு தூக்கம் வருதுபா.. தூங்க போகவா? நான் காலையில அவங்க எழுப்புறப்போ எழுந்துக்கலனா விட்டிருவாங்களாப்பா? மாட்டாங்களா? இல்ல இல்ல.. எனக்கு வலி தெரியாத போல தூங்குறப்பவே தூக்குல போட முடியாதா பா? அப்பா பயமா இருக்குப்பா. நம்ம ஐய்யனாரா நினச்சுட்டு தான் பா இருக்கேன். ஐய்யனாரால கூட என் பயத்த போக்க முடியலப்பா. ஐய்யனார் கோவில் திருவிழாவுல கலந்துக்க ஆசையா இருக்குப்பா. என்ன ஸ்கூலுக்கு தூக்கிட்டு ஓடுவீங்கல, உங்கள ஒருமுறை என் சைக்கிள்ல வச்சு கூட்டிட்டு போக ஆசையா இருக்குப்பா. அப்பா இன்னைக்கு பௌர்ணமி போலபா. தெருவுல இறங்கி நிலாவ பாத்து ஆஆஆன்னு கத்திகிட்டே ஓட ஆசையா இருக்குப்பா.. ஹா.. என்னனு தெரியல பா. இந்த உலகம் இவ்வளவு அழகுனு எனக்கு இப்போ தான் பா புரியுது. என்ன பேச சொன்னா இன்னும் எத்தனை நாள் வேணா பேசுவேன் பா. ஆனா எனக்கு நாள் கணக்குல இல்லபா. இன்னும் சில மணி நேரம் தான் இருக்கு. அப்பா.. கடைசி ஆசை என்னனு கேட்பாங்க இல்லயா பா? நான் உங்கள கட்டி பிடிச்சுக்கணும், அம்மா மடியில படுத்துக்கணும்லாம் சொன்னா செய்வாங்களா பா? இப்ப நீங்க என்ன நினச்சுட்டு பா இருப்பீங்க? என்ன போலவே தூக்கம் இல்லாம என்னைய நினச்சுட்டு இருக்கீங்களா? போதும் பா. என்னைய நினச்சது. போதும் பா. என் பொண்ணு… என் பொண்ண பாத்துக்குங்கபா.. என் பொண்ணு.. என் பொண்ணு..’ அவன் சொல்லும்பொழுது மீண்டும் கண்ணீர் தேம்பி பெருக்கெடுத்தது. பேனா கீழே விழுந்து முனையில் அடிப்பட்டது. அவன் மீண்டும் எடுத்து எழுதி பார்த்தான். பேனா எழுதவில்லை.

‘நான் எழுதின பேனாவுக்கு என்னைவின ஆயிசு கம்மி போல’ சொல்லிக்கொண்டே அந்த லெட்டரை எழுதியவரை மடித்து வைத்துக்கொண்டான். காலைவரை உள்ளேயே சுத்திக்கொண்டிருந்தான். மணி ஐந்தாக இன்னும் அரை மணி நேரம் இருந்தன. ஜெயில் பாதுகாவலர் வந்தார். அவனை குளித்துவிட்டு வர சொன்னார். அவன் குளித்துவிட்டு வந்தான். அவனை அழைத்துக்கொண்டு அந்த நீண்ட ஹாலில் நடந்தார். அவன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். அவர் கையை சட்டென பிடித்துக்கொண்டான். அவர் அவனை திரும்பி பார்த்தார்,

‘சார்.. பயமா இருக்கு சார்…’ என்றான்.

‘எதுவும் பண்ண முடியாது டா. வா..’ என்று சொல்லிவிட்டு முன்னால் நடந்தார்.

‘சார்… சார்..’ அவன் பின்னாலே ஓடினான். ‘சார்… நான் தப்பிச்சு போறேன். என்னைய சுட்டுருங்க சார்… என்னால தூக்கு மேடையில… முடியாது சார்..’ என்றான். அவர் கோபமாக திரும்பி பார்த்தார். அவனுக்கு அருகில் இருந்த இன்னும் இரண்டு காவலாளிகளை அவனை இறுக பிடித்து அழைத்துவருமாறு கட்டளை இட்டார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அந்த பெரிய கட்டிடத்தை கடந்து அவர்கள் ஒரு மூளைக்கு சென்றனர். அங்கு தூக்கு மேடை தயார் நிலையில் இருந்தன. ஒரு மேற்பார்வையாளரும், டாக்டரும், தூக்கு போடுபவரும் தயாராக நின்றுக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் அவனுக்கு ராட்சசர் போல தெரிந்தனர். அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான். சட்டென போலீஸ் ஆபிசரின் கையை பிடித்துக்கொண்டான்.

‘சார்.. தப்பு பண்ணமாட்டேன் சார்… சார் ப்ளீஸ் சார்.. என்னைய விட்டுடுங்க சார்.. நான் வாழணும் சார்.. நான் வாழணும் சார்.. என் பொண்ணு இருக்கா சார்.. என் அப்பா அம்மாலாம் இருக்காங்க சார்.. நான் போகணும் சார்.. பயமா இருக்கு சார்.. ப்ளீஸ் சார்…’ என்றான். அவரின் காலை பிடித்துக்கொண்டு கதறினான். இன்னும் சில காவலர்கள் ஓடிவந்து அவனை பிடித்து நிறுத்தினர். அவன் அத்தனை பேரையும் உதறித்தள்ளிவிட்டு மீண்டும் விழுந்து புரண்டான். வற்புறுத்தலாக அவன் கைகள் கட்டப்பட்டன. தூக்கு மேடைக்கு ஏற்றப்பட்டு நிற்கவைக்கப்பட்டான்.

அங்கிருந்த அத்தனை பேரையும் பார்த்து கெஞ்சினான். ‘அய்யோ.. அம்மா… நான் சாகமாட்டேன்..நான் சாகமாட்டேன்.. நான் வாழணுங்கய்யா…’ அவன் கண்கள் தாரை தாரையான கண்ணீரை வடித்தது. அவன் முகத்தில் ஒரு கருந்துணி போட்டு மூடப்பட்டது. அவன் அழுதான். துணியின் சுறுக்கு இறுக்கப்பட்டது. கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி இன்னும் இறுக்கப்பட்டது.

நேரம் சரியாக பார்க்கப்பட்டது. டைம் கீப்பர் கையை உயர்த்தினார். ‘சார்.. வாழணும் சார்.. ஆசையா இரு..’. தூக்கு மேடையின் லிவர் இழுக்கப்பட்டது. சில பல உதறல்கள். ஆட்டம் நின்றது.


-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!