உறவற்ற உன்னத உயிர்

அவன் அங்குமிங்கும் அலைந்துக்கொண்டிருந்தான். அவ்வபோது சுவற்றை குத்திவிட்டு தலையை ஆட்டிக்கொண்டே நடந்தான். அவனது அலைப்பேசியை எடுத்து எடுத்து பார்த்துக்கொண்டான்.  வெளியில் வந்தான். மீண்டும் வீட்டிற்குள் சென்றான். அமைதியாக நின்றான். ஒரு பெருமூச்சு இழுத்து விட்டான்.

அங்கிருந்த ஒரு இருக்கையில் சென்று அமர்ந்துக்கொண்டான். அது ஒரு சாய்வு நாற்காலி. முன்னும் பின்னும் சில முறை ஆட்டிவிட்டான். நினைவுகளை மீட்டெடுத்தான்.

’லவ் யு’ என்றான். அவள் தூரமாகவே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் உதட்டில் ஒரு மெல்லிய சிரிப்பு இருந்தது.

‘லவ் யு’ என்றான் மீண்டும் அழுத்தமாக.

‘லவ் யு டா..’ என்றாள் அவள் இம்முறை அவனை திரும்பி பார்த்துக்கொண்டு அதே சிரிப்போடு.

‘எனக்கு ஒரு கனவு இருக்குடி’ தூரமாக பார்த்துக்கொண்டே அவன் பேசத்தொடங்கினான். அவள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். ‘இந்த உலகத்துல ஒவ்வொரு உயிரும் தனிமை படைச்சது. இங்க பிடிப்பு இல்லாம யாராலயும் வாழ முடியாது. அதுக்காக தான் உறவுன்னு சில நமக்காக நாமே உருவாக்கிக்கிட்டோம்.’ என்றான்.

‘சரி.. என்னடா சொல்ல வர்ற’ என்றாள் அவள் பொருமையிழந்து.

‘இல்லடி. அதான். அப்படி சொந்தங்கள வரையறுத்துக்க முடியாத குழந்தைகளுக்கு இந்த உலகமே உறவு தான்டி. அப்படிப்பட்ட ஒரு குழந்தைக்கு நாம நெருங்கின சொந்தமாகனும்டி’

‘என்ன சொல்ல வர்ற? அநாதை குழந்தைய தத்தெடுக்கணுமா?’ என்றாள் அவள் கேள்விக்குறியோடு.

‘ஆமா டி…’

‘அப்போ என்கிட்ட இருந்து உனக்கு குழந்தை வேணாமா?’

‘வேணும். நாம ஒரு குழந்தை பெத்துக்கலாம். ஒரு குழந்தைய தத்தெடுத்துக்கலாம்’ என்றான் அவன் ஆர்வமாக. அவள் பதிலெதுவும் பேசாமல் அமைதியாகவே நின்றாள்.

’பேசுடி..’ என்றான். அவள் அவனது தோளில் சாய்ந்துக்கொண்டாள்.
‘இங்க பாருடா… நாம நினைக்கிற போல கேட்டதும்லாம் குழந்தைய கொடுத்துறமாட்டாங்க. அதுக்கு நிறைய ரூல்ஸ் இருக்கு. நமக்கு குழந்தையே பிறக்காதுனு டாக்டர் சர்டிஃபிகேட் வாங்கி தரணும். அப்போ தான் குழந்தையெல்லாம் தத்தெடுக்க விடுவாங்க’

‘அதெல்லாம் நீ கவலைபடாதடி. நான் மாசாமாசம் போறேன்னே அங்க இருக்குற ஆஸ்ரமத்துல இருந்தே நாம தத்தெடுக்கலாம்’ என்றான். அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். ஒரு பெருமூச்சு விட்டாள்.

‘சரி சந்தோசம். முதல்ல என்ன கல்யாணம் பண்ணிக்கோ. அப்பரம் இத பத்தி பேசலாம். உங்க வீட்டுல பேசுனியா இல்லயா.? இல்ல நான் வந்து பேசவா?’ என்றாள் அவள். அவன் அவளை செல்லமாக முறைத்துவிட்டு தானே பேசுவதாய் சொன்னான்.

நினைவுகளில் இருந்து மீண்டான். அவர்களுக்கு திருமணமாகி ஒரு இரண்டு வயது பெண் குழந்தை இருந்தது. அந்த குழந்தைக்கு ஒன்றரை வயது ஆனதிலிருந்து அவளிடம் அவன் தத்தெடுப்பதை பற்றி பேசிக்கொண்டிருக்கிறான். இன்று சாயங்காலம் செல்லலாம் என்று அவள் சொல்லியிருந்தாள். ஆனால் நேரம் கடக்க கடக்க இன்னும் அவள் வரவில்லை. இவன் அவளை அலைப்பேசியில் அழைத்தாலும் பதில் இல்லை. அதனால் அவன் அன்று பதட்டத்தில் இருந்தான். அவனது குழந்தை உள்ளே அவனது அம்மாவிடம் விளையாடிக்கொண்டிருந்தது.

இரவு நேரம் ஆனப்பிறகு அவள் வீட்டினுள் நுழைந்தாள். அவன் கோபமாக உட்கார்ந்திருந்தான். அவள் அவனை கண்டுக்கொள்ளவில்லை. வீட்டினுள் சென்று உடையை மாத்திக்கொண்டு வேகமாக வெளியில் வந்து, அடுப்படியில் வேலையை பார்த்தாள். இவன் அமைதியாகவே உட்கார்ந்திருந்தான். அவள் தட்டில் நான்கு இட்லியை வைத்துக்கொண்டு வந்து டேபிளில் அமர்ந்தாள். சாப்பிட்டுக்கொண்டே பேசினாள்,

‘நீங்க சாப்பிட்டீங்களா?’ என்றாள். அவன் பதிலெதுவும் பேசவில்லை. அவள் சாப்பிட்டுக்கொண்டே இருந்தாள். இரண்டு இட்லியை சாப்பிட்டுவிட்டு மீண்டும் கேட்டாள். இம்முறை அவனை பார்த்து,

‘நீங்க சாப்பிட்டீங்களா?’ என்றாள். சத்தத்தை உயர்த்தி.

அவன் முறைத்த விழிகளோடு அவளை திரும்பி பார்த்தான்.

‘எத்தன மணிக்கு வர்றேன்னு சொன்ன?’ என்றான் திடகாதரமான குரலில். அவள் சலிப்போடு,

‘ஆ… வர்றேன்னு சொன்னேன். கொஞ்சம் வேலை. வரமுடியல. என்ன இப்போ’ என்றாள்.

‘என் ஃபோனாச்சும் அட்டண்ட் பண்ணி சொல்லியிருக்கலாம்ல’

‘பிஸியா இருந்தேன்…’ என்று சொல்லிவிட்டு மீண்டும் இட்லியை சாப்பிட ஆரம்பித்தாள். அவனுக்கு கோபம் இன்னும் தலைக்கேறியது.

‘நான் இன்னைக்கு எங்க போகணும்னு சொன்னேன்னு நியாபகம் இருக்கா?’

‘ம்ம்.. இருக்கு.. இன்னொரு நாள் பாத்துக்கலாம்’ என்றாள் அவனை பார்க்காமல் இன்னும் தின்றுக்கொண்டே.

‘ஏ.. என்னடி கேட்டுக்கிட்டே இருக்கேன். நீ மதிக்காம திண்ணுகிட்டே இருக்க’ கோபமாக அவன் எழுந்து அவள் முன்னர் சென்றான். அவள் முறைத்த விழிகளோடு அவனை நேராக பார்த்தாள். அவன் அமைதியானான்.

‘எங்க போகணும்? இல்ல எங்க போகணும்? ஒரு குழந்தைய தத்தெடுக்கவா? எதுக்கு? இன்னொரு குழந்தைக்கு நான் விருப்பமில்லனு சொன்னேனா? இல்ல என் உடம்புல தெம்பு இல்லயா’ என்றாள் கோபமாக.

‘என்னடி கேக்குற? எத்தனை நாளா கேக்குறேன். லவ் பண்ணுறப்பவே கூட சொன்னேன்ல. நமக்கு முதல்ல ஆண் குழந்தை பிறந்தா பெண் பிள்ளைய தத்தெடுக்கணும், பெண் பிள்ளை பிறந்தா ஆண் பிள்ளைய தத்தெடுக்கணும்னு’

‘ஆமா. நான் ஒத்துகிட்டேனா?’

‘இதுல என்னடி இருக்கு?’

‘ஏன் இல்ல?’

’என்ன இருக்கு?’

‘இங்க பாருங்க. என்னால என் குழந்தைக்கு காட்டுற அதே பாசத்த அந்த குழந்தைக்கும் காட்ட முடியுமானு தெரியல’ என்றாள் அவள். அவன் இடிந்துபோனான்.

‘என்னடி பேசுற? குழந்தை குழந்தை தானேடி..’

‘குழந்தை குழந்தை தான்… ஆனா அது என் குழந்தை இல்லையே. உங்களுக்கு வேணும்னா ஒரு குழந்தைக்கு ஸ்பான்சர் பண்ணுங்க..’ என்று அவள் சொல்லும்பொழுது அவன் இன்னும் இடிந்து போனான்.

‘தாய்மை ஒரு உணர்வு தான்டி. இங்க இருக்குற எல்லா குழந்தையும் வளர்ப்புல ஒரு தாய்மை தேவைபடுது. சொந்தமில்லாம இருக்குற அந்த குழந்தைக்கு நீ அண்ணனா, அக்காவா காப்பகத்துலயே போய் பாக்கலாம். ஆனா தாய்மை பாசத்த நம்ம வீட்டுக்கு கொண்டு வந்தா தான் தர முடியும்டி. ஆதரவு இல்லாத ஒரு குழந்தைக்கு ஆதரவா நாம இருக்கலாம்டி’

‘இங்க பாருங்க. செய்யணும்னா நாமலே ஒரு காப்பகம் கூட கட்டி விடலாம். இருக்குற எல்லா காப்பகத்துக்கும் பணம், பொருள்னு என்ன வேணா செய்யலாம். ஆனா ஒரு குழந்தைய தத்தெடுக்குறதெல்லாம் என்னால முடியாது’

‘ஏன்?’

‘எனக்கு பிடிக்கலங்க. எனக்கு என் குழந்தை தான் முக்கியம். நாளைக்கு அவ கல்யாணம் பண்ணிட்டு போயிடுவா. நான் யாரோ ஒருத்தர் குழந்தைக்கு அம்மாவா இருக்கணும்ல. யாரோ ஒருத்தருக்கு பொறந்த குழந்தைக்கு நான் அம்மானு சொல்லிகிட்டு வாழணும்ல. என்னால முடியாதுபா..’

‘என்னடி இப்படி பேசுற? உன்கிட்ட இருந்து நான் இப்படி எதிர்பார்க்கவே இல்லடி..’ அவன் கண்கள் கலங்கின. அவள் பெருமூச்சு வாங்கினாள். அவன் அருகில் வந்தாள்.

‘இங்க பாருங்க. நீங்க சமூகத்துக்கு ஏதாச்சும் பண்ணுறேன்னு இதை பாக்க முடியாது. இது உறவு. குழந்தை. பாசம். நாளைக்கே கோபத்துல உங்க அப்பா அம்மா, என் அப்பா அம்மா அவனை அநாதை குழந்தை தானேடானு சொல்லிட்டாங்கனா? சரி அதுவரை ஏன் போகணும். வர்ற குழந்தை என்ன ஜாதி மதம்னு தெரியாம உங்கவீட்டுலயும் சரி என் வீட்டுலயும் சரி தத்தெடுக்க அனுமதிப்பாங்களா?’

‘உன்ன தவிற வேற யாருக்கும் என் லைஃப்ல தலையிடுற உரிமை கிடையாது’ அவன் கராராக பேசினான். ‘ஆனா.. நீயே ஏன் இப்படி பேசுறன்னு தான் எனக்கு புரியல’

‘ஏனா நீங்க கனவுல இருக்கீங்க. நான் நிதர்சனத்த பாக்குறேன். என்னால வேற ஒரு குழந்தை மேல பாசத்த வைக்க முடியாது’

‘நான் வேற ஒருத்தியோட குழந்தை தானே. என்மேல எப்படி பாசம் வைக்கிற?’ என்றான் கோபத்தோடு.
’ஹா. நல்லா தானே இருக்கீங்க. மண்டையில எதுவும் அடிபடலயே..! இணைவேற தாய்மை வேற… உங்களுக்கு நான் சொல்லி புரியவைக்கணுமா என்ன?’

‘தாய்மைனா என்னனு சொல்ல வர்ற? தாய்மைக்கான கோட்பாடுனு ஏதாச்சும் இருக்கா’ என்று அவன் கேட்கும்பொழுது அவள் சற்று விழித்துக்கொண்டுதான் இருந்தாள். ‘முட்டாள் தனமான பாசம். அது மட்டும் தான் தாய்மை…’ என்றான் அவனே. ‘தெருவுல இருக்குற நாய்க்கு 4 நாள் சாப்பாடு போடுடி. அது சொல்லும் பாசம்னா என்னானு. அந்த நாய்க்கூட ஒரு மாசம் இருந்து பாரு. நீ சொல்லுவ, மாற்றான் மேல எப்படி தாய்மை கொண்டு வர்றதுனு’

‘நாயும் அந்த குழந்தையும் ஒண்ணு இல்ல.’ என்றாள் அவள் கடினமாக.

‘ஆமா.. கண்டிப்பா இல்ல. அந்த குழந்தை மனித பிறவி. அன்புக்காக ஏங்குற பிறவி. ஒரு அப்பா அம்மா, தாத்தா பாட்டினு வாழ ஆசைபடகூடிய ஒரு பிறவி’ என்றான்.

‘பேசுறதுக்கு எல்லாமே நல்லாயிருக்குங்க. ஜீன்ஸ்ல சில விசயங்கள் வரும். அவங்க அப்பா அம்மா யாரோ. அந்த ஜீன்ஸ்ல கெட்ட விசயங்கள் இருந்தா?’

‘இங்க பாருடி.. கல்லு எப்படி வேணா இருக்கலாம். அது எங்கிருந்து வேணா வந்திருக்கலாம். ஆனா ஒரு நல்ல சிற்பி செதுக்குனா அது கண்டிப்பா மூலஸ்தானத்த அடையும்’ என்றான் அவன். அவள் ஒரு பெருமூச்சு வாங்கினாள்.

‘இப்ப என்ன தத்தெடுக்கணும் அவ்வளவு தானே. சரி..’ என்றாள் அவள்.

‘இல்ல. நீ சொன்ன முதல் வார்த்தையிலே அந்த எண்ணம் எனக்கு போயிருச்சு. எப்போ நம்ம குழந்தை போல அந்த குழந்தைய உன்னால பாத்துக்க முடியாதுனு சொன்னியோ. அப்பவே போயிடுச்சு. தாய்மை சுயநலமற்றதுடி. உன்னோட வயித்துல இருந்து வந்த குழந்தைக்கு மட்டும் தான் உன்னால தாய்மைய உணர முடியுதுனா, அது தாய்மையே இல்ல. சுயநலம். உண்மையான தாய்மைய நீ இன்னும் உணரலடி’

‘ஹா.. என்ன வேணா சொல்லுங்க. ஒரு நாள் அந்த உயிர கஷ்டபடுத்த வேணானு நான் நினைக்கிறேன். அது கஷ்டபடாம பாத்துக்கலாம்னு நீங்க சொல்லுறீங்க. ஒரு உயிருக்கு குடும்பத்த கொடுத்துட்டா மட்டும் போதாது. ஒரு சாப்பாட்ட கண்ணுக்கு காமிச்சுட்டு பிடிங்கிட்டா எப்படி வலிக்குமோ அப்படி தான் அவனுக்கும் வலிக்கும் ஒரு நாள் இது அவன் குடும்பம் இல்லனு தெரியிறப்போ. ஹா.. அதுக்கும் சொல்லுவீங்க. ஏன் தெரியணும்னு.. சரிதான். நாம சொல்லமாட்டோம். ஆனா எப்படியாச்சும் கண்டிப்பா தெரிஞ்சுரும். நான் சொல்லுறது இப்ப புரியாது. வாழ்ந்து பாத்தா மட்டும் தான் புரியும்’ என்றாள் அவள். அவன் அமைதியாக கையை பிசைந்துக்கொண்டே இன்னும் கோபத்தோடே நின்றான். அவள் எழுந்தாள். அவன் தலையை கோதிக்கொடுத்தாள். அவள் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். அவன் கண்ணீர் விட்டு அழுகத்தொடங்கினான். தேம்பி தேம்பி அழுதான்.

‘கண்ணா.. வாழ்க்கை.. அதோட நிதர்சனம். கொஞ்சம் உணர பாருடா.. இந்த அழுகை உனக்கு ஏன் வருதுனு எனக்கு தெரியும்டா. உண்மை. நிதர்சனம். அத ஏத்துக்கமுடியாத இயலாமையில அழுகுற. வேணாம்டா..’ என்றாள் அவள். அவள் கண்களிலும் கண்ணீர் கோர்த்துக்கொண்டது.

அவன் அழுதுக்கொண்டே பேசத்தொடங்கினான், ‘ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு செல்வம்டி. ஊர் உலகம் தெரியாம அவங்க வளர போறதில்ல. யோசிச்சு பாரேன். சுத்தி இருக்குற அத்தனை பேருக்கும் அப்பா, அம்மானு சொல்லிக்க சொந்தமுண்டு. அதை பாக்குற அந்த பிஞ்சு மனசுல என்ன ஏக்கம்டி வரும்.’ அவன் தேம்பலை உள்ளே இழுத்துக்கொண்டு இன்னும் தொடர்ந்தான், ‘அந்த சின்ன மனசுல எவ்வளவு வலிடி இருக்கும். நம்ம அப்பா இருந்திருந்தா, நம்ம அம்மா இருந்திருந்தானு ஒவ்வொரு நாளும் எத்தனை முறைடி அந்த குழந்தைகளுக்கு தோணும். நம்ம வாழ்க்கை இதுதான். நாம நாதியத்தவங்கனு அந்த பிஞ்சு மனசுல பதியும்ல. அந்த வலி.. அய்யோ’ என்று சொல்லிவிட்டு அவன் இரண்டு கைகளையும் தலை முடியை பிடித்து இன்னும் இழுத்துக்கொண்டான். அவள் அவனை இன்னும் இறுக அணைத்துக்கொண்டாள்.


‘இதையெல்லாம் அநாதையா விட்டுட்டு போறாங்கல. அவங்க யோசிக்கணும்ங்க.. அவங்க யோசிக்கணும்.. அவங்களாம் அநாதை இல்லங்க.. ஆயிரம் உறவுகள் இருக்கு அவங்களுக்கு. கண்டிப்பா.. ஆயிரம் சொந்தங்கள் இருக்கு..’ என்று சொல்லிவிட்டு அவள் தூரமாகவே பார்த்துக்கொண்டிருந்தாள். அவனது தேம்பலும் இன்னும் அடங்காமல் இழுத்து இழுத்து மீண்டது.

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!