கோமாளி நிறை கூட்டம்

சுயமரியாதையும், தனிமனித ஒழுக்கமும், அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன விட்டு செல்லப்போகிறோம் என்னும் உள்ளுக்குள் தோன்றும் கேள்வியும் தான் நமக்கு இப்படி ஒரு சுதந்திரமான பெற்று தந்திருக்கிறது.

இங்கு பலர் ‘இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு வந்துரணும் டா..’ என்னும் போக்கில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். குரல் கொடுப்பவன் ஒன்று தலைவனாக பார்க்கபடுகிறான் அல்லது கோமாளியாக பார்க்கப்படுகிறான். இங்கு எது தடையாக இருக்கிறது என்னும் கேள்விக்கு நமது கல்வியை தான் சொல்வேன். நான் படித்தவன் என்னும் போக்கில் அவனவன் அவனவனுக்கு தெரியும் நியாய தர்மத்தை பேசி ஒரு ஒருமித்த கருத்து இல்லாமல் ஒற்றுமை இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றும் சில்லரைகளாய் சிதறிக்கிடக்கிறோம்.

ஒருவன் ஒரு நல்ல விடயத்தை முன்னெடுத்தினால் நம்முள் இருக்கும் படித்த புத்திசாலி கிளம்பிக்கொள்வான்.

‘அதென்ன இத்தனை நாள் செய்யாமல் திடீரென செய்கிறானே. இதனால் அவனுக்கு என்ன லாபமோ?’

‘என்னடா.. எல்லோரும் சும்மா ஏத்துகிட்டு போறாங்கல. இவன் மட்டும் எதுக்கு குதிக்கிறான்’

‘சரி இந்த விசயத்துல இவன் எல்லாருக்கும் அறிவுரை சொல்லுறானே அந்த(அவனின் பர்சனல்) விசயத்துல இவன் ரொம்ப யோக்கியமா?’

என்று நமக்கு தெரிந்த சிற்றரவுக்கு எட்டிய கேள்விகளை மாறி மாறி திணித்து உயர்ந்து வருபவனை மட்டம் தட்டி அவனை எழவிடாமலே செய்துவிடுகிறோம். அல்லது அவனுக்கு தோள் கொடுக்காமலே தவிக்க விட்டுவிடுகிறோம். இதையெல்லாம் பார்க்கும்பொழுது ஏனடா இந்த படிப்பறிவு? சொல்லறிவுக்கொண்டே இருந்துவிடலாம் போலே என்று தோன்றுகிறது.

இங்கு தியாகங்களும் குறைந்து போனது பொது வாழ்வும் குறைந்து போனது. இங்கு சமூக மாற்றம் கொள்ள நினைக்கும் ஒவ்வொருவனும் அன்றைய பாரதியின் நிலையிலே இருக்கிறான். வீடும், அவனை சுற்றி இருக்கும் சமூகமும் ஏதோ முன்னேற்ற பாதையில் சென்றுக்கொண்டிருப்பது போலவும் அவன் வாழ்க்கை சீரழிவது போலவும் அறிவுரை வேறு.

மூணு வேலை சாப்பாடு. உடுத்திக்கொள்ள நல்ல உடை. ஒரு வீடு. ஒரு கார். வயசான காலத்தில் மாதா மாதம் பென்ஷன். இது தான் வாழ்க்கை. இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்பவனை தான் இந்த உலகம்(குறைந்த பட்சம் இந்த நாடு) நல்ல வாழ்க்கை வாழ்வதாய் சொல்கிறது. என் பிள்ளைக்காக சேர்க்கிறேன் என்று பணத்தையும், நிலத்தையும் சேமித்து வைக்கும் யாரும் அவனுக்கு ஒரு நல்ல சூழலை சேமிக்க பாடுபவதில்லை, ஒரு நல்ல அரசியல் சட்டமைப்பு வர பாடுபடுவதில்லை. ஒரு பெண் வீதிக்கு இறங்கி நடக்கையில் மனித மிருகத்தால் வஞ்சிக்கப்பட்டால் அவரவர் வீட்டு பெண்களை வீதிக்கு செல்லாமல் தடுக்க தான் நினைக்கிறது அந்த கூட்டம். தவறு செய்வது மிருகங்கள் தண்டனை பெண்களுக்கா? பெண் பிள்ளை வைத்திருக்கும் அத்தனை பேரும் வீதியில் இறங்கி போராடியிருக்க வேண்டாமா? ஏன்? இருக்குற இடம் தெரியாம சூதானமா இருந்துட்டு… செத்து போயிரணும். அதானே!!

அன்று வீதியில் இறங்கி போராட்டம் செய்யும்பொழுது நம் பின்னால் ஒரு மக்கள் கூட்டம் திரளாக எழும் என்னும் நம்பிக்கை இருந்தது. இன்று அவனவன் யோசனைக்கு ஏற்றார் போல கட்டம் கட்டுகிறான், கூப்பாடு போடுகிறான். ஒரு ஒற்றை இலக்கை விட்டு திசை மாறி தடம் மாறி குருட்டாம்போக்கில் பறக்கிறது மனிதனின் வேகம்.

மக்களுக்காக இறங்கி போராடுபவன் இப்பொழுதெல்லாம் கோமாளி போல தான் பார்க்கபடுகிறான். அல்லது ஒரு சிறிய தவறை கேட்கும்பொழுது அதை மறித்து ஒரு பெரிய தவறு காட்டப்பட்டு எல்லா தவறும் மழுங்கடிக்கப்படுகிறது. மும்பையில் ஒரு பெண் மின்சார ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணப்பட்டிருக்கிறார். அந்த பெண்ணிடம் பயணச்சீட்டு இல்லாததை அறிந்த டி.டி.ஆர்., அதற்கான காரணத்தை கேட்டால் அந்த பெண் ‘மல்லையானு ஒருத்தர்.. பல்லாயிரம் கோடி கடன் வாங்கிட்டு நாட்டவிட்டு தப்பி போயி சந்தோசமா இருக்கார். அவர புடிக்க வக்கில்ல. வந்துட்டாங்க…’ என்று பேசியிருக்கிறார். தவறில் இது பெரிது சிறிது என்றில்லை. இங்கிருக்கும் அத்தனை பேரும் ஏதோ ஒரு வகையில் தவறு செய்கிறான், அந்த தவறை மறைக்க அதைவிட பெரிய தவறை சுட்டிக்காட்டிக்கொள்கிறான்.

ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு டிப்ஸ் தராமல் செல்லும்பொழுது நம்மை அந்த சப்ளையர் பார்க்கும் பார்வையில் ஆயிரம் கேவலம் நிறைந்திருக்கும். அந்த சப்ளையர் மட்டும் தான் காரணமா அதற்கு? அவனுக்கு காசு கொடுத்து பழக்கப்படுத்தியது யார் குற்றம்? அந்த இடத்தில் சரியாக நடக்கும் ஒருவனுக்கு தான் கடைசியில் கேவலம் தொத்திக்கொள்கிறது. தவறுகள் படர்ந்திருக்கிறது. அந்த படர்ந்து போன தவறே சரியன திரிந்து நிற்கிறது.

வேலை செய்யும் இடமாகட்டும், தெருவில் கடந்து செல்லும் பாதையாகட்டும் அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுத்தால் ஒன்று கோமாளியை போல சித்தரிக்கப்படுவீர்கள், அல்லது வீண்வேலை செய்பவனாய் ஓரம்கட்டப்படுவீர்கள். அதையும் மீறி உங்களுக்கு ஏதேனும் ஒரு கை தோள்கொடுக்க வந்தது என்றால் அது இணையத்தின் கையாக தான் இருக்கும். இங்கு யாருக்கும் வீதியில் இறங்கி கேள்வி கேட்க திராணியில்லை. வீதியில் இறங்க தைரியமும் இல்லை. என்ன செய்ய தவறெது சரியெது என்று புடம் காட்டும் பத்திரிக்கைகளும் அட்டை படத்துக்கு நயன்தாராவை தானே தேடிக்கொண்டிருக்கிறது. தெருவில் ஆயிரம் சசிபெருமாள் இருக்கின்றனர். ஆயிரம் ட்ராஃபிக் ராமசாமி இருக்கிறார்கள். எப்பொழுது அவர்கள் எல்லாம் அட்டைப்படத்தை ஆக்கிரமிக்க போகிறார்கள்?

மாற்றப்பட வேண்டியது ஆயிரம் இருக்கிறது. எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியதும் ஆயிரம் இருக்கிறது. இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டு போக நீங்கள் பிறக்காமலே இருந்திருக்கலாம். நாளை உங்கள் பிள்ளைக்கு என்ன விட்டு செல்ல போகிறீர்கள்? சென்னையில் ஒரு வீடா? அல்லது நல்ல சுவாச காற்றா? சுவாசம் அல்லாத வீட்டில் அவன் என்ன வாழ்ந்து கிழித்துவிட போகிறான். நாளை உங்கள் பெண்ணுக்கு என்ன விட்டு செல்ல போகிறீர்கள்? நூறு பவுன் நகையா அல்லது தெருவில் தைரியமாக நடந்து செல்லும் சுதந்திரமா?

உங்களுடைய உரிமை என்ன? உங்களுடைய தேவையென்ன? அதை அடைய வழியென்ன? சரியான வழியென்ன என்பதை உங்கள் மனதிடம் கேட்டிருக்கிறீர்களா? உங்களுடைய உரிமைக்காக இறங்கி குரல் கொடுத்திருக்கீற்களா? இங்கு அரைகுறை ஆடை அணிவதற்காக போராடிய அளவு கூட, தினம் நடந்துமுடியும் கற்பழிப்புக்கு ஒரு தீர்வான சட்டம் அமைவதற்கு போராடவில்லையே ஏன்? தவறு எங்கிருக்கிறது? நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டிய நேரமிது. சுதந்திர தினமென்றால் சட்டையில் தேசிய கொடியை மட்டும் குத்திக்கொண்டு அங்குமிங்கும் திரிந்தால் தேசப்பற்றாகுமா? அந்த தேசத்திற்காக என்ன செய்தோம்? நம்மை தாங்கும் மண்ணிற்காக என்ன செய்தோம்?

அடுத்தவன் செய்கிறான் நானும் செய்கிறேன் என்பதால் தவறு சரியாகிவிடாது. ஒரு பெருக்கூட்டம் கழிவு குட்டையில் விழுந்து எழுந்து சென்றால் நீயும் விழுந்து செல்லவேண்டும் என்பது அவசியம் அல்ல. அதை மூடி ஒரு நல்ல பாதையை உண்டாக்கலாம். அல்லது அதை தாண்டியாவது செல்லலாம். எல்லாம் குதிக்கிறான் நானும் குதிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு தாண்ட நினைப்பவனையும், மூட நினைப்பவனையும் குட்டைக்குள் நின்றுக்கொண்டு கேலி சிரிப்பு சிரிக்க தேவையில்லை. மூடிக்கொண்டு அமைதியாக செல்லலாம். அடுத்தவனுக்கு துன்பம் தராத வகையில் இருக்கும் தனிமனித ஒழுக்கமென்பது அவசியம். அத்தியாவசியம்.

உங்களுக்கு கிடைக்கவேண்டியது நிராகரிக்கப்படுமேயானால் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும். உரிமைக்காகவும், உங்களுக்காகவும் கேள்வி கேட்டே ஆகவேண்டும். கேள்வி கேட்க வழியற்று, வாயற்று இருப்பவன் இல்லாமலே இருக்கலாம். ஜீவிக்காமலே இருக்கலாம்.

சுதந்திரத்திற்கு பின்பு நாம் இழந்து நிற்கும் தனிமனித ஒழுக்கமும், சுயமரியாதையும், எதிர்கால சந்ததியர்க்கான சிந்தையும் மீண்டும் நாம் பெற்றாக வேண்டிய சூழல் இது. அதை உணர்ந்து இனிவரும் காலங்களை சந்திப்போமாக. உங்கள் மொழியில் சொல்லவேண்டுமாயின் கோமாளி நிறை கூட்டம் முளைத்தெழவேண்டும். கண்டிப்பாக..!

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.


-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..