மறுத்துப்போன மனமொன்று பெண்ணாக நின்றது..!


அவள் அந்த புறா கூட்டத்தினை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் உதடுகள் பல நாட்களாக சிரிப்புகளை மறந்து இருந்திருக்க வேண்டும். அமைதியாக அவள் நின்றுக்கொண்டிருந்தாள். அவள் தோழிகள் தங்கியிருந்த அறையை விட்டு வெளியில் வந்தார்கள்.

‘ஹே.. நாங்க போயிட்டு வர்றோம்டி. சீக்கிரம் வந்திடுறோம் சரியா..’ என்றனர். அவள் இன்னும் தூரத்து புறாக்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘ஹே.. கேக்குதா டி..’ என்றனர் இம்முறை சத்தம அதிகமாக. அவள் சுயநினைவு வந்தவளாய் திரும்பினாள்.

‘ஹான்.. ம்ம்… எங்க?’ என்றாள் அவள்.

‘ரகு மேரேஜ்க்கு டி.. நாங்க வந்திடுறோம் சரியா.. நீ பூட்டிட்டு ஜாக்கிரதையா இரு’ என்று அவர்கள் சொல்ல அவள் சிறிது நேரம் யோசித்தாள்.

‘இரு நானும் வர்றேன்..’ என்றாள் அவள். அவள் சொல்லியதை கேட்டதும் அவர்கள் அதிர்ந்தார்கள்.

‘ஹே.. ஆர் யு சுவர்.. நீ வரணுமா?’ என்றாள் தோழிகளில் ஒருத்தி.

‘ம்ம்.. எஸ்… நான் வரணும்..’ என்று சொல்லிவிட்டு அவள் வீட்டினுள் சென்று உடையை மாற்றிக்கொண்டு வந்தாள். அவர்களது வண்டி சிறிது நேரத்தில் நன்றாக அலங்கரிக்கப்பட்ட ஒரு மண்டபத்தின் வெளியே நின்றது. அதிலிருந்து அவள் இறங்க, மண்டபத்தில் வெளியில் நின்றிருந்த சில இளவட்டங்கள் அதிர்ச்சி கண்களால் பார்த்துக்கொண்டிருந்தனர். அவள் அவர்களுக்கு அருகில் சென்று,

‘டோன்ட் வொர்ரி… சும்மா தான் வந்தேன். எதுவும் பிரச்சனை பண்ண மாட்டேன்..’ என்று சொல்லிவிட்டு ஒரு மெல்லிய புன்னகை செய்துவிட்டு உள்ளே சென்றாள். அந்த இளவட்டங்கள் பதிலில்லாமல் தலையை கீழே குனிந்தபடியே நின்றுக்கொண்டிருந்தனர்.

அவள் நேராக உள்ளே சென்றாள். மணமேடைக்கு முன்னால் இருந்த இருக்கைகளிலிருந்து ஒரு பெண் எழுந்தார். சட்டென அந்த இடத்தில் சென்று அவள் உட்கார்ந்துக்கொண்டாள். ஹோம தழலில் நெய் விட்டுக்கொண்டிருந்த மாப்பிள்ளை கண்ணை கசக்கிக்கொண்டே விருந்தினர் உட்கார்ந்திருந்த பகுதியை சிரித்துக்கொண்டே பார்த்தான். அங்கு முதல் வரிசையில் அவள் உட்கார்ந்திருப்பதை பார்த்ததும் அவன் உதட்டு சிரிப்பு சுருங்கிவிட்டது. அவள் கண்முன்னே பல காட்சிகள் வந்து போனது,

பீச் மணலில் அவள் கைகளை பிடித்துக்கொண்டு அவன்.

‘இந்த இறுக்கமான பிடி என்னைக்கும் விலககூடாது. உன்னோட கை என் கைகுள்ள அழகா..’ என்று சிரித்துக்கொண்டே சொன்ன முகம் அவளுக்கு வந்து போனது.

சினிமா தியேட்டரில் அவள் தோளில் சாய்ந்துக்கொண்டே அவன்.

‘இந்த அணைப்பு எனக்கு எப்பவும் வேணும். இத நான் என்னைக்கும் இழக்க கூடாது’ என்று அவன் ஏக்கமாக சொன்னது அவளுக்கு நினைவு வந்தது

அவன் பைக்கில் சென்று அடிப்பட்டு மருத்துவமனையில் இருக்கையில் அவள் எடுத்துக்கொண்ட அக்கரையின் காரணமாய்.

‘அம்மா… அம்மாவே தான் நீ. உன்ன என்னைக்கும் நான் இழக்கமாட்டேன்’ என்று அவன் பாசத்தோடு கண்ணில் சிறிது ஆனந்த கண்ணீரோடு சொன்னது நேற்று தான் என்பது போல இருந்தது அவளுக்கு. அனைத்தையும் நினைத்துக்கொண்டே மெல்லியதாய் ஒரு சிரிப்பு சிரித்து வைத்தாள் அவள். அவளை பார்க்க பார்க்க அவனுக்கு தேள் கொட்டியது போல உட்கார்ந்திருந்தான். அவன் விழித்துக்கொண்டிருப்பதை பார்த்து அவன் அம்மா பின்னால் தட்டி,

‘என்னடா வேடிக்கை பாத்துட்டு இருக்க. அங்க ஐயர் சொல்லுறத செய்’ என்று மிரட்டும் தோரணையில் சொல்கிறார். அவன் திடுக்கிட்டு, நடுங்கிட்டு அவன் அம்மா சொல்வது போல செய்கிறான். அதை பார்த்ததும் அவள் ‘தொபக்’ என்று சிரித்துவிட்டாள்.

அவர்கள் கடைசியாக பேசியது அவளுக்கு நினைவு வந்தது.

‘அம்மாகிட்ட பேசிட்டியா டா?’

‘இல்ல..’

‘ஏன் டா..?’

‘பயமா இருக்கு..’

‘இன்னும் எத்தனை நாள் தான்டா சொல்லாம இருக்க போற..?’

‘நான் நிறையா யோசிச்சேன்.. சிலமுறை அம்மாகிட்ட சொல்லலாம்னு போவேன். ஆனா அம்மாவுக்கு இந்த காதல் எதுவுமே பிடிக்காது. அதான்..’

‘அதான்.. எப்படி சொல்லறதுனு யோசிக்கணும்னு முன்னவே சொல்லிட்டியே.. யோசிச்சியா.. சொன்னியா.. இங்க பாருடா.. உங்க அம்மாவ பத்தி உனக்கு தான் தெரியும். சோ.. நீ தான் யோசிச்சு செய்யணும். எனக்கு இதுல என்ன ஐடியா தர்றதுனே தெரில..’

‘அது இல்ல… நேத்து ஊருல இருந்து ஒரு ஜாதகம் வந்துச்சு. அப்போ அம்மா சொந்தகாரர் ஒருத்தர்கிட்ட பேசிட்டு இருந்தாங்க..’

‘என்னானு..’

‘என் பையன்லாம் நான் சொன்னத மீற மாட்டான். அவன் தான் எனக்கு உயிருனு தெரியாதா அவனுக்கு. இல்ல என் பேச்ச மீறுனா என்னால தாங்க முடியாதுனு அவனுக்கு தெரியாதானு கேட்டாங்க..’

‘ஹா.. அதான் சான்ஸ்னு சொல்லிட வேண்டியது தானே டா.. என்னடா மிஸ் பண்ணிட்ட..’ என்றாள் அவள் சற்று வறுத்தமாக.

‘இல்ல.. அதுக்கப்பறம் நிறைய யோசிச்சேன். எனக்கு சின்ன வயசுலயே அப்பா தவறிட்டார். அம்மா தான் எல்லாம். ரொம்ப பாசம். நான் உன்ன லவ் பண்றேன்னு தெரிஞ்சாலே அம்மா எதனா செஞ்சுப்பாங்க.. அதான்…’ என்று அவன் சொல்ல சொல்ல சிரித்துக்கொண்டு மகிழ்வாக இருந்த அவள் முகம் சுருங்கிக்கொண்டே சென்றது.

‘அதான்…?’ என்றாள் கேள்விக்குறியோடு.

‘நாம பிரிஞ்சிடலாம்..’ என்றான் அவன். சட்டென அவன் கன்னத்தில் அவள் அறைந்தாள். அவள் கண்கள் கண்ணீரை வழிய விட்டது. ஓடிவந்தவள் போல மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. அவள் கண்கள் அங்குமிங்கும் அலைப்பாய்ந்தது. அவள் யோசித்துக்கொண்டிருக்கவேண்டும். பட்டென அவள் முகத்தில் அழுகையோடு ஒரு சிரிப்பு வந்தது.

‘யே.. பொய் தானே சொல்லுற. அம்மாகிட்ட சொல்லிட்டியா.. பர்மிஷன் வாங்கிட்டியா…? விளையாடுற தானே..’ என்று அவள் சற்று கெஞ்சலாக அவன் சொல்லியன எல்லாம் பொய்யென சொல்லிவிட மாட்டானா என்னும் ஏக்கத்தில் கேள்வியை கேட்டாள். அவன் மௌனமாக தலை குனிந்துக்கொண்டான்.

‘இல்லையா.. பொய் இல்லையா.. உண்மையா.. உண்மையா..’ என்று அவள் உக்கிரத்தில் அவன் சட்டையை பிடித்தாள். ‘உண்மையா.. உண்மையா..’ என்று சொல்லிவிட்டு பட்டென அவன் நெஞ்சில் சாய்ந்தாள். அவன் அவளை அணைக்காது கையை தொங்கலில் விட்டபடி அமைதியாக நின்றான்.

அவள் மெல்ல அவன் முகத்தை பார்த்தாள். கீழே பார்த்து ‘து..’ என்று துப்பிவிட்டு திரும்பி வேக வேகமாக நடந்து வந்துவிட்டாள். அன்றிரவுக்குள் அவன் மீண்டும் அழைப்பான் என்று அவள் ஏங்கி காத்துக்கொண்டிருந்தாள். அவன் அழைக்கவில்லை. இரவு 2-ஐ கடக்கும் சமயம் ஒரு குறுஞ்செய்தி அவளுக்கு வந்தது.

‘மன்னிச்சுடு. என்னால எங்க அம்மாவ பாத்து பேச முடியல. நான் உன்ன லவ் பண்ணியிருக்கவே கூடாதுதான். மன்னிச்சுடு. என்னை போல கோழை உனக்கு வேணாம். உனக்கு நல்ல தைரியமான ஒருத்தன் கிடைப்பான். கண்டிப்பா… என் வாழ்க்கையில பெரிய இழப்பு தான். ஆனா கண்டிப்பா நமக்கு பிடிச்சபோல நம்ம லைஃப் மாறும்.. பை.. மிஸ் யு’ என்று படித்தது அந்த குறுஞ்செய்தி. அதை முடிக்கும்பொழுது அவள் அந்த அலைப்பேசியை உடைத்துவிட்டாள்.

நினைவுகள் மீண்டெழ அவள் அந்த மணமேடையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள். மணப்பெண்ணை அழைத்து வந்தார்கள். அவளை போல மாடர்னைஸ்டாக அல்லாது, சரியான கிராமத்து பெண் போல காட்சியளித்தாள். அவளின் அருகில் அவளது தோழி வந்து அமர்ந்தாள். தோழி அவளின் கையை சற்று ஆறுதலாக பிடித்தாள். அவள் மணமேடையிலிருந்து கண்களை எடுக்காமல் அவள் தோழியிடம் பேசினாள்,

‘இந்த ஊர்கார பசங்க எல்லாம் கண்டிப்பா ஒரு வில்லேஜ் பொண்ண தான் நமக்கு கட்டிவைப்பாங்க.. சிட்டி பொண்ணுங்க, மாடர்ன் பொண்ணுங்க ரிலேஷன்ஷிப்ல எப்படினு தெரிஞ்சிக்கணும்னு நம்ம கூடலாம் சுத்துவாங்களோ?’ என்று சொல்லிவிட்டு அவள் தோழியை பார்த்தாள். தோழி அவளது கைகளை இன்னும் இறுக பிடித்தாள். அவள் கண்கள் கலங்கியது. ‘ஒருவேல.. இந்த மாடர்ன் பொண்ணோட லிப் டேஸ்ட் எப்படி இருக்குனு கூட பாக்க நினைச்சிருக்கலாம் இல்ல..’ என்று சொல்லும்பொழுது அவள் கண்கள் இன்னும் கலங்கியது.

‘இல்ல வேற எதனா டேஸ்ட் பாக்க….’ என்று இழுத்துவிட்டு அவள் தோழியிடம் திரும்பி ’என்ன எப்படி நினைச்சிருப்பான்ல.. நல்ல வேலை நான் அந்த அளவுக்கு போகல.. உனக்கு ஒண்ணு தெரியுமாடி..’ என்று சொல்லிவிட்டு அவளது தோழியை பார்த்தாள். அவள் கேட்பதற்கு தயாராக இருப்பது போல இருந்தாள்.

‘நான் ரொம்ப போல்ட் தானே! கெஞ்ச மாட்டேன் தானே..! அவன் உங்களுக்கெல்லாம் பத்திரிக்கை வச்ச அன்னைக்கு அவன தனியா பாத்தேன் நான். வெட்கத்த விட்டு சொல்லுறேன்டி.. அவன்கிட்ட நான் கெஞ்சினேன். என்ன கட்டிக்கோ டா.. ஏமாத்தாதடானு.. அவன் என்ன சொன்னான் தெரியுமா..?’ ஆத்திரம் புடைக்க கண்கள் வெடிக்க அவள் கலங்கிகொண்டே கேட்டாள். மீண்டும், ‘என்ன எல்லாம் முடிச்சுட்டா விட்டேன். அதான் எதுவும் நடக்கலல.. அப்படியே குதிக்கிற.. அப்படினு கேட்டான்டி.. அப்ப அவன் அதுக்காக தான் பழகினானா என்கிட்ட..’ என்று சொல்லும்பொழுது தோழியும் கோபம் ஏறியவளாய் அவளது கைகளை இறுக பிடித்து தட்டிக்கொடுத்தாள்.

சட்டென கையை உதறிவிட்டு வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டு அவள் மண்டபத்தை விட்டு வெளியேறும் பாதையில் நடந்து சென்றாள். அவள் மூளை ஏதோ சிந்தித்துக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு அடியிலும் அவள் பார்வையில் ஒரு மாற்றம் தெரிந்தது. அவள் வெளியில் செல்லவில்லை. கண்களை நன்கு துடைத்தாள். திரும்பினாள். மணமேடை நோக்கி நடந்தாள். மணமேடை ஏறினாள். மணப்பெண்ணுக்கு அருகிலேயே நின்றுக்கொண்டாள். சுற்றி தாலி அனைவரின் ஆசிர்வாதம் பெற்று மேடை ஏறியது. அவன் கைகளில் எடுத்தான். கெட்டிமேளம் முழங்கப்பட்டது. அவளை பார்த்துக்கொண்டே பக்கத்தில் இருக்கும் மணப்பெண்ணுக்கு தாலிக்கட்டினான். ஊரே எழுந்து நின்று அட்சதை வீசியது. தாலிக்கட்டியப்பின் அந்த மணப்பெண்ணின் மனதினுள் அவ்வளவு பூரிப்பு. அவள் மணப்பெண்ணின் காதருகே சென்றாள்… சில வார்த்தைகள் பேசினாள். மணப்பெண் முகம் மாறியது. அதிர்ச்சியோடு அவனை திரும்பி பார்த்தாள். அவள் சிரிப்போடு மணமேடையை விட்டு கீழிறங்கி மண்டபத்தை விட்டு வெளியேறினாள். அவன் மனதில் அவள் என்ன சொல்லியிருப்பாளோ என்று பயம். என்ன பிரச்சனை வரப்போகிறது என்று பயம் இன்னும். அந்த மணப்பெண்ணின் கண்கள் லேசாக கலங்கியது. அவனை பார்த்து,

‘என்ன உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா?’ என்றாள். அவன் புரியாமல் விழித்தான்.

‘என் போட்டோவ உங்க ஆபிஸ் டேபிள்ல வச்சிருக்கீங்களாம். டெய்லி என்னைய பாத்து குட்மார்னிங் சொல்லிட்டு தான் வேலைய ஆரம்பிப்பீங்களாம்… இவ்வளவு பாசம்.. என்கிட்ட சொன்னதே இல்லையே..’ சொல்லிவிட்டு செல்லமாக அங்கே அவனது கைகளை காதலோடு பிடித்துக்கொண்டாள். அவன் வராத சிரிப்பையும், மகிழ்வையும் வந்தது போல காட்டிக்கொண்டான்.. அவன் கண்கள் அவள் போன திசையையே பார்த்துக்கொண்டிருந்தது.


-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!