காதல் கசியும் நொடிப்பொழுதினிலே..!


சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அந்த ரயில் புறப்பட தயாராக நின்றது. அவன் வேக வேகமாக ஒவ்வொரு பெட்டியாய் ஏறி ஏறி இறங்கினான். இடையில் வந்த அத்தனை பேரையும் மின்னல் வேகத்தில் கடந்தான். அப்படி ஏறிச்சென்ற ஒரு பெட்டியின் தூரத்தில், ஜன்னல் ஓரமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு அவள் உட்கார்ந்திருந்தாள். அவன் ஒரு பெருமூச்சு வாங்கினான். அவனின் வேகம் குறைந்தது. மெதுவாக அவள் பக்கம் சென்றான்.

‘ஹே..’ என்று சொல்லிவிட்டு அவள் பக்கத்தில் அமர்ந்தான். அவள் அவனை பார்த்துவிட்டு மீண்டும் மாற்று பக்கம் திரும்பிக்கொண்டாள்.

‘என்கிட்ட சொல்லாம கூட கிளம்பிட்டல..’ என்றான் இன்னும் மூச்சிரைத்துக்கொண்டே. அவள் பக்கத்தில் இருந்த ஒரு மினரல் வாட்டர் பாட்டிலை எடுத்து மடக் மடக்கென்று தண்ணீர் குடித்தான். அவன் இருந்த தாகத்திற்கு அந்த மொத்த பாட்டிலையும் குடித்து முடித்துவிட்டு இன்னும் மூச்சு வாங்கிக்கொண்டே அவளை பார்த்தான்.

‘வா.. கீழ இறங்கு. நான் உன்ன அப்பரமா அனுப்பிவிடுறேன்..’ என்றான். அவள் கேட்கவில்லை. அவன் பக்கமும் அவள் திரும்பவில்லை.

‘இங்க பாருடி… எதுவா இருந்தாலும் கீழ இறங்கி பேசிக்கலாம்..’ என்றான் இன்னும் அழுத்தமாக. அவள் மீண்டும் பதிலெதுவுமில்லாமல் நின்றாள். ரயில் வண்டியின் கிளம்பும் சத்தம் எழுப்பப்பட்டது. அவன் சட்டென கீழிறங்கிக்கொண்டான். ஜன்னல் வழியாக அவளை பார்த்தான்.

‘ஹே.. ப்ளீஸ் டி.. நான் உனக்கு எல்லாம் சொல்லுறேன்.. தயவு செஞ்சு கீழ இறங்கு..’ என்றான் அவன் சற்று கெஞ்சலாக. அவள் பதில் சொல்லவில்லை. வண்டி நகர ஆரம்பித்தது.

‘ஏ.. ஏ.. ப்ளீஸ் மா.. ப்ளீஸ்.. கீழ இறங்கு மா..’ கெஞ்சிக்கொண்டே அவன் வண்டியோடே நடக்க ஆரம்பித்தான். அவள் அவனை பார்க்கவில்லை. தூரமாக பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு பெருமூச்சு ஒன்று இழுத்து விட்டாள். அவனை பார்க்காமலே பேசத்தொடங்கினாள்,

‘நான் தில்லி போறேன். எனக்கு அங்க கான்ஃபரன்ஸ் இருக்கு. கான்ஃபரன்ஸ்க்கு இன்னும் மூணு நாள் இருக்கு. நான் அங்க போகவே ரெண்டு நாள் ஆகும்…’ என்று அவள் மெல்லியதாய் சொன்னாள். அவன் வண்டியோடே நடந்து வந்தவன் கொஞ்சம் வேகமாக நடக்கவேண்டியதாய் இருந்தது.

‘அதான் தெரியுமே டி.. நான் உனக்கு ஃப்ளைட் டிக்கெட் கூட எடுத்து தர்றேன்.. கீழ இறங்குடி..’ என்றான் சத்தம் அதிகமாக. அவள் மீண்டும் ஒரு பெருமூச்சு இழுத்துவிட்டாள். அவனை பார்க்காமலே மீண்டும் பேசினாள்,

‘நான் தில்லிக்கு போறேன். டிரெயின்ல போறேன். ரீச் ஆகவே ரெண்டு நாள் ஆகும். தனியா தான் போறேன். இன்னும் மூணு நாள் கழிச்சு தான் கான்ஃபரன்ஸ். மூணு நாள் எந்த வேலையும் இல்ல..’ என்றாள் இன்னும் எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டு. வண்டி வேகமானது. அவன் அந்த இடத்திலே நின்றான். ஏதோ யோசித்தான். சட்டென வண்டியோடே ஓடத்தொடங்கினான். அவள் அமர்ந்திருந்த பெட்டி வந்தவுடன் தாவி ஏறிக்கொண்டான். அவள் இன்னும் ஜன்னல் வழியாக தூரமாக தான் பார்த்துக்கொண்டிருந்தாள். வண்டி வேகமானது. அவன் மெதுவாக நடந்து அவள் இருக்கும் இடத்திற்கு சென்றான். அவள் நீட்டியிருந்த கால்களை சுருக்கி அவனுக்கு இடம் கொடுத்தாள். அவன் அமைதியாக அமர்ந்துக்கொண்டான்.

அவள் பார்க்கும் திசையையே திரும்பி ஜன்னல் வழியாக பார்த்தான்.

‘நான் வந்துட்டேன்.. உனக்காக…’ என்றான் அவன் அவளை கை காண்பித்து. அவள் அவனை திரும்பி பார்க்கவில்லை.

‘எனக்காக இல்ல. உனக்காக… எங்க என்ன மிஸ் பண்ணிடுவியோனு பயத்துல வந்திருக்க..’ என்றாள் அவள் இன்னும் வேடிக்கை பார்த்துக்கொண்டு.

‘ஓ… என்னை விட்டு மிஸ் ஆகுற அளவுக்கு தைரியம் இருக்கா?’ என்றான் அவன் நக்கலாக. அவள் அவனை திரும்பி பார்த்தாள். அவன் முகத்தையே சில நொடிகள் பார்த்தாள். சட்டென ஏதோ கேவலமான ஒன்றை பார்த்துவிட்டது போல முகபாவனையை வைத்துக்கொண்டு ஜன்னல் வழியாகவே திரும்பிக்கொண்டாள்.

‘அடிப்பாவி… டிரெயின் டிக்கட் கூட இல்லாம ஏறி வந்திருக்கேன்டி… கருணை காட்டுடி…’ என்றான் கெஞ்சலாக.

அவள் அவன் பக்கம் சாய்வாக திரும்பினாள். அவன் பின்னாள் பார்த்தாள். ‘இந்த கருணைய பின்னாடி வர்ற டிடிஆர்கிட்ட கேளு.. கிடைக்குதானு பாப்போம்..’ என்று சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டாள்.

அவன் திரும்பி பார்த்தான். டிடிஆர் வந்துக்கொண்டிருந்தார். அவன் மெல்ல எழுந்து விசில் அடித்துக்கொண்டே சென்று டாய்லெட்டில் நுழைந்துக்கொண்டான். டிடிஆர்., ஒவ்வொரு ஆளாக சரிபார்த்துக்கொண்டே வருகையில் அந்த டாய்லெட்டிற்கு வந்தார். கதவை இரண்டு முறை தட்டினார்.

‘இருயா.. முடிச்சுட்டு வர்றேன்..’ என்றான் அவன் உள்ளே இருந்துக்கொண்டு.

‘நீ அங்கேயே இருக்கவேண்டியது தான் போல. ஏன்டா.. இந்த பெட்டியில இருக்கவன்லாம் சீட்டுல உட்கார்ந்திருக்கான். நீ எந்த சீட்டு?’ என்றார் டிடிஆர் வெளியில் நின்று கத்திக்கொண்டே.

‘சீட் நம்பர் 26 சார்..’ என்றான். டிடிஆர் ஒரு முறை அவரது அட்டவணையை பார்த்தார்.

‘யாரு..? ஷகீரா பேகம்… வயசு 70வதுனு இருக்கே அதுவா..’

‘ஆமா ஆமா சார்…’ என்றான் அவன்.

‘அந்த ஆம்பள குரல் கொண்ட ஷகீரா பாட்டிய பாக்க ஆசையா இருக்கு.. வெளிய வர்றியா..? இல்ல ரயில்வே போலீஸ கூப்பிடவா’ என்றார் அவர் சற்று கடினமாக. சட்டென கதவை திறக்கும் சத்தம் கேட்டது. அவன் பல்லை இளித்துக்கொண்டே வெளியில் வந்தான்.

‘அடடே.. வாங்க ஷகீரா.. வாங்க.. முடிஞ்சுதா..?’ என்று அவர் கேட்க அவன் நெளிந்துக்கொண்டே வந்தான்.

‘டிக்கெட் எடு டா..’ என்றார் அவர். அவன் நெளிந்துக்கொண்டே எல்லா பாக்கெட்டிலும் கையை விட்டான். தன் பின் பாக்கெட்டிலிருந்து ஒரு டிக்கெட்டை எடுத்து நீட்டினான். அவர் அவனை முறைத்துக்கொண்டே அந்த டிக்கெட்டை வாங்கி பார்த்தார். பார்த்தவர் அதிர்ந்து போய் அவனை நிமிர்ந்து பார்த்து,

‘டே.. என்னடா.. ப்ளாட்ஃபாரம் டிக்கெட் கொடுக்குற..’ என்றார் அவர் அதிர்ச்சி இன்னும் நீங்காமல், விழித்த பார்வையோடு.

அவன் தட்டுத்தடுமாறி, ‘ம்.. அது.. வழி.. வழியனுப்ப வந்தவன் சார் நான். அவசரத்துக்கு இங்க நுழைஞ்சேன். அதுக்குள்ள வண்டிய எடுத்துட்டீங்க…’ என்றான் மழுப்பலாக.

‘அடடா.. அது சரி.. நீ என் கூட வா… போலீஸ்ட சொல்லுறேன். பாதுகாப்போட உன்ன சென்னைக்கு திரும்ப அழைச்சுட்டு போவாங்க.. சரியா..’ என்றார் அவர்.

‘சார் சார் சார்.. ப்ளீஸ் சார்.. அவசரம் சார்.. ப்ளீஸ் சார்.. எவ்வளவு காசுன்னாலும் இப்பவே கொடுத்துடுறேன் சார். நான் கண்டிப்பா தில்லி போயாகணும் சார்..’ என்று அவன் கெஞ்சினான். அவர் கேட்பதாக இல்லை. அவள் சற்று பதட்டத்துடன் தான் அதையெல்லாம் தூரமாக இருந்து பார்த்துக்கொண்டிருந்தாள். அவர் இல்லை இல்லை என்பது போல தலையை ஆட்டிக்கொண்டே இருந்தார்.

‘சார் என் லவ்வே உங்க கையில தான் சார் இருக்கு..’ என்றான் கெஞ்சலாக. தலையை ஆட்டிக்கொண்டிருந்தவர் நிறுத்தினார். அவன் முகத்தை பார்த்தார்.

‘லவ் ஆ…?’ என்றார். அவன் சட்டென சிரிப்பும், வெட்கமும் கொண்டவனாய். நெகத்தை வாயில் வைத்து கடித்துக்கொண்டே, தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்டினான்.

‘உனக்கா..?’ என்றார் இம்முறை. வெட்கத்தோடு ஆட்டிக்கொண்டிருந்த அவனது தலை நின்றது. அவரை பார்த்தான், ‘உனக்கானா.. எனக்குலாம் லவ் வரக்கூடாதா..?’ என்றான்.

‘ஏன்டா.. ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கிட்டு தில்லிக்கு கிளம்புற.. உன்ன போயி எந்த பொண்ணுடா லவ் பண்ணுச்சு…’

‘சார்.. அது ஒரு கதை சார்.. என் லவ்வருக்கும் எனக்கும் இன்னும் ரெண்டு மாசத்துல மேரேஜ். ரெண்டு நாள் முன்ன இன்விடேஷன் செலெக்ட் பண்ண வர சொன்னா. நானும் ஓகேனு சொன்னேன். திடீர்னு க்ளைண்ட் மீட்டிங் வந்துருச்சு. அத சொல்லாம, ஃபோன ஆஃப் பண்ணிட்டு போயிட்டேன். அவ ஏதோ.. 2 மணி நேரம் வெயிட் பண்ணினாலாம். அதுக்கு போயி கோச்சுகிட்டு என்கிட்ட பேசவே இல்ல சார். தில்லிக்கு போறானு கூட சொல்லல சார்’ என்றான் வருத்தமாக.

‘ஓ… நீ செஞ்சது தப்பு தானே..?’ என்றார் அவர்.

‘தப்புதான்.. தப்பு தான்.. மன்னிப்பு கேட்டு ஓகே பண்ணனும்ல.. அதுக்கு தான் கூப்பிட வந்தேன். ஆனா அவ இறங்கல.. அதான் ட்ரெயின்லயே இருந்துட்டேன்.. எதனா பண்ணி ஓகே பண்ணிக்கொடுங்க சார்.. ப்ளீஸ் ப்ளீஸ் சார்…’ என்றான்.

‘நோ.. நோ.. நோ..’ என்று அவர் சொல்ல சொல்ல அவன் கெஞ்சிக்கொண்டே இருந்தான்.

‘சரி.. அந்த பொண்ணு எங்க இருக்கா..?’ என்று அவர் கேட்க. அவன் சட்டென இடது புறம் திரும்பிக்கொண்டான். அவர் மெல்லியதாய் அவனருகில் நெருங்கினார். அவன் கையை கட்டிக்கொண்டு, வாயருகில் கையை வைத்துக்கொண்டு அவரிடம் சொன்னான்.
‘சார் அப்படியே அந்த ரைட் சைட் ஜன்னலோரமா உட்கார்ந்துட்டு என் சட்டையை நீங்க புடிப்பீங்களா மாட்டீங்களானு ஆர்வமா பாத்துட்டு இருக்காளே ஒருத்தி. அவ தான் சார்..’ என்றான். அவர் அவரோடு வலது புறம் பார்த்தார் தேடிக்கொண்டே.

‘சார்.. உங்க ரைட் இல்ல. என் ரைட் பாருங்க சார்..’ என்றான் அவன் இன்னும் வாயை மறைத்துக்கொண்டே. அவர் மெதுவாக திரும்பி பார்த்தார். அவர் தன்னை பார்ப்பதை அறிந்த அவள், திடுக்கிட்டு நகர்ந்து நுனி சீட்டில் இருந்தவள் உள்ளே தள்ளி உட்கார்ந்துக்கொண்டு வேறு திசையை பார்த்தாள்.

‘பரவால டா.. நல்லா தான் இருக்கா பொண்ணு…’ என்றார் அவர்.

‘ஆமா சார்… அந்த மிஸ்ஸ மிஸ்ஸஸ் ஆக்குறது உங்க கையில தான் சார் இருக்கு.. கல்யாணத்துக்கு முன்னவே டிவோர்ஸ் பண்ண வச்சிறாதீங்க சார்…’ என்றான் அவன் பொய்யாக அழுதுக்கொண்டு. அவர் அவரின் கோட் பாக்கெட்டில் கையை விட்டுக்கொண்டே பேசினார்,

‘என் தம்பி ஒருத்தன். தில்லிக்கு இன்னைக்கு போறதா இருந்துச்சு. ஆனா அவன் லவ்வர்..’ என்று சொல்லிவிட்டு அவர் கெக்கபெக்கவென்று ஒரு முறை சிரித்தார். ‘எப்படி.. அவன் லவ்வர்.. போககூடாதுனு சொன்னதால அவன் போகல. பக்கத்து கம்பார்ட்மெண்ட் தான். அவன் டிக்கெட் இதுதான். இத வச்சிக்க.. சரியா..’ என்றார் அவர். அவன் கையில் வாங்கிக்கொண்டான். அவர் அவனது தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு அடுத்த கம்பார்ட்மெண்டுக்கு நகர்ந்தார்.

‘சார்.. இதுக்கு பணம்..?’ என்றான் அவன் சத்தமாக.

‘கல்யாண பரிசு. வச்சிக்கோ வச்சிக்கோ..’ என்று அவர் திரும்பி பார்க்காமல் சொல்லிவிட்டு கையை உயர்த்தி ஆசிர்வாதம் செய்துக்கொண்டே சென்றார். அவன் சிரித்துக்கொண்டே சென்று அவள் அருகில் உட்கார்ந்துக்கொண்டான். அவள் முன்னே டிக்கெட்டை உயர்த்தி காட்டி ஜெயித்துவிட்ட தோரணையில் சிரித்தான் அவன்.

அவள் அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு. ‘இதுல இருந்து தப்பிக்க கூட நான் வேணும் உனக்கு..’ என்றாள் அழுத்தமாக.

‘அடப்போடி.. நீ இல்ல.. என் காதல் மட்டும் தான் தேவை பட்டுச்சு…’ என்றான்.

‘வெட்கமா இல்ல.. காதலாம் காதல். ஒரு முறை சொல்ல முடியாது. அங்க பைத்தியக்காரி போல ரெண்டு மணி நேரம் உனக்கு என்ன ஆச்சு.. ஏது ஆச்சுனு தெரியாம உட்கார்ந்திருந்தேன். உன் ஆபிஸ் ஃப்ரண்ட்ஸ் எவனுக்கு ஃபோன் போட்டாலும் தெரியலனு சொல்லுறானுங்க. அது என்ன மீட்டிங்க டாய்லெட்லயா நடத்துவீங்க..’ என்றாள் அவள் கோபமாக.

‘ஏ… இல்லடி.. எவனும் ஒழுங்கா பாத்திருக்கமாட்டானுங்கடி.. யூஸ்லெஸ் பீபுள்ஸ்..’ என்றான் அவன்.

‘யாரு? எனக்கு சொல்லாம போன நீ பெட்டர். அவங்க யூஸ்லெஸ்ஆ?’

‘நான் தான்.. நான் தான் யூஸ்லெஸ்.. அக்கறை இல்லாதவன். பொறுப்பில்லாதவன். எல்லாம் நான் தான். ஆயிரம் முறை சாரி டி..’ என்றான் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு. அவள் அவன் முகத்தை ஒரு முறை முறைத்தப்படி பார்த்தாள்.

‘அந்த மூஞ்சிய அப்படி மட்டும் வைக்காத கேவலமா இருக்கு..’ என்றாள் அவள் கோபமாக. அவன் முகத்தை சட்டென மாற்றிக்கொண்டான். தலையை கீழ் குனிந்துக்கொண்டு மெதுவாக, சற்று கெஞ்சும் அழுகும் குரலோடு பேசத்தொடங்கினான் அவன்,

‘ஏன்டி.. தில்லிக்கு ட்ரெயின்ல வா வானு சொல்லிட்டு.. சண்டையா போடுறியே.. நியாயமா..?’ என்றான் சத்தம் கம்மியாக.

அவள் அவனிடம் நெருங்கி, ‘யார் நானா..? நானா வர சொன்னேன்..?’ என்றாள் இன்னும் அழுத்தமான கோபத்தோடு.

‘அப்பரம்… நான் தில்லிக்கு போறேன். கான்பரன்ஸ் மூணாவது நாள் தான். போவ ரெண்டு நாள் ஆகும். தனியா தான் போறேன்.. வெவ்வவே.. வெவ்வவவ்வே.. பப்பரப்பேனுலாம் சொன்னது யாரு..?’ என்றான் அவன் கோணித்துக்கொண்டு சொல்லும் பாவனையில். அவன் சொல்லும் முகத்தோரணையை பார்த்ததும் அவள் சிரித்துவிட்டாள்.

‘யப்பா… சிரிச்சுட்டாயா… எவ்வளவு கெஞ்ச வேண்டியதா இருக்கு.. இப்ப தான் நிம்மதியா இருக்கு..’ சொல்லிக்கொண்டே அவன் அவள் பக்கத்தில் இன்னும் நெருங்கி உட்கார்ந்தான். அவள் சிரித்த முகம் மீண்டும் முறைத்தது.

‘ஓவரா பண்ணாதடி..’ என்று சொல்லும்பொழுதே பக்கத்தில் ஒரு பெண் பூ வித்துக்கொண்டு வந்தாள். அவளை அவன் நிறுத்தினான்.

‘ஏமா.. ரோஜா பூ இருக்கா..’ என்றான் அவன்.

‘இல்லண்ணே.. மல்லிப்பூ மட்டும் தான் இருக்கு..’ என்றாள் அந்த பெண். அவன் சிறிது யோசித்தான்.

‘சரி ஒரு மூணு முழம் கொடு..’ என்றான். பக்கத்தில் இருந்த அவள் சட்டென தலையில் அடித்துக்கொண்டாள். அவன் பூவிற்கு காசை கொடுத்துவிட்டு அங்கேயே முட்டிப்போட்டு அவளிடம், ‘டார்லிங்.. ஐ ஆம் சாரி.. ஐ லவ் யூ…’ என்று சொல்லிவிட்டு இரு கைகளிலும் அடக்கப்பட்ட மல்லிப்பூவை நீட்டினான். அச்சமயம் டிக்கெட்டெல்லாம் சரிபார்த்துவிட்டு டிடிஆர் அவர்களின் கம்பார்ட்மண்ட் வந்தார். அவன் மல்லிப்பூவை நீட்டிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்தார். அவன் பின்னால் தட்டினார். அவன் அவரை பார்த்தவுடன் அதிர்ந்து எழுந்தான்.

‘என்னடா பண்ணுற?’ என்றார் இன்னும் அதிர்ச்சி நீங்காமல்.

‘சார் சமாதானம் பண்ணிட்டு இருக்கேன் சார்..’ என்றான் கொஞ்சம் வெட்கத்தோடு.

‘கல்யாணம் அடுத்த மாசம் தானே? அதுக்குள்ள மல்லிப்பூவ கொடுத்து சமாதானம் பண்ணுற? அதுவும் டிரெயின்லயேவா டா?’ என்றார். அவள் இன்னும் தலையில் அடித்துக்கொண்டாள். ஜன்னல் வழியாக திரும்பி முனகிக்கொண்டாள். அதை பார்த்த அவன் டிடிஆர்-ஐ தனியாக தள்ளிக்கொண்டு போனான்.

‘சார் சார்.. இன்னும் கோபத்த கிளப்பிடுவீங்க போல.. ரோஜா கிடைக்கல.. சோ ஏதோ ஒரு பூ-னு இத கொடுத்தேன் சார்.. தப்பா எதுவும் நினைக்காதீங்க..’ என்றான் அவன் சற்று எரிச்சலும் கோபமும் கலந்து.

‘அதானா… நான் கூட தப்பா நினச்சுட்டேன்..’ என்று சொல்லிவிட்டு அவர் நகர எத்தனித்து மீண்டும் அவன் அருகில் வந்து, ‘அந்த பொண்ணு உன்கிட்ட கோபபட்டதுல தப்பே இல்லடா… சரியான வெவஸ்தை கெட்ட ஆளு நீ..’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். போகும்பொழுதே, ‘உன்னோட சீட். அடுத்த கம்பார்ட்மெண்ட். நைட் அங்க போயிரணும். புரியுதா..’ என்று சொல்லிக்கொண்டே சென்றார். அவன் அவரை பற்றி முனகிக்கொண்டே அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தான்.

‘மானத்தை வாங்கியாச்சா..?’ என்றாள் அவள். சற்று கடு கடு முகத்துடன்.

‘இல்ல.. நான் உன்ன சமாதா..’ என்று அவன் பேசும்பொழுதே அவள் தடுத்தாள். ‘பேசாத.. கொஞ்ச நேரம் அமைதியா வா..’ என்றாள். அவனும் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தான். அச்சமயம் அவனின் ஃபோன் அடிக்க ஆரம்பித்தது. அவன் எடுத்து பார்த்தான். அவன் அம்மா. அவளிடம் அமைதியாக இரு என்று சைகை காண்பித்துவிட்டு ஃபோனை எடுத்தான்..

‘ஹலோ அம்மா’ என்றான்.

‘டே.. எங்கடா இருக்க..?’ அம்மா கேட்டாள்.

‘அம்மா.. ரொம்ப அர்ஜண்ட் மா.. ஆபிஸ்ல யாராலயும் முடியல. உடனே தில்லிக்கு கிளம்ப சொல்லிட்டாங்க மா. அதான், உடனே கிளம்பிட்டேன். போறவழியிலே மீட்டிங்கெல்லாம் இருந்துச்சா. அதான் உங்களுக்கு சொல்ல முடியல.. இப்ப தான் உங்கள கூப்பிடனும்னு இருந்தேன். நீங்களே கூப்பிட்டீங்க. ஒன் வீக்ல வந்துடுவேன்மா..’ என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த அவளை பார்த்து ஒரு கண்ணை அடித்தான். அவள் தலையில் அடித்துக்கொண்டே வெளியில் வேடிக்கை பார்த்தாள்.

‘ஓ… எது… காலையில தீபிகா ஃபோன் பண்ணி சொன்னாளே.. அந்த மீட்டிங்கா?’ என்றாள் அம்மா. அவன் அதிர்ந்து போய் அவளை பார்த்தான். அவள் ‘பொக்’கென்று சிரித்தாள். அவன் அமைதியாக வைத்திருந்த ஃபோனை கையில் வாங்கி பேசினாள்.

‘ஹலோ.. அம்மா..’ என்றாள்.

‘சொல்லுமா… உன்கூட ஏன் வர்றான் அவன்..’ என்றார் அம்மா.

‘அந்த இன்விடேஷன் பிரச்சனை வந்துச்சுல மா. அதுக்கு சமாதானம் பண்ணுறேன்னு அப்படியே டிரெயின்ல ஏறி வந்துட்டாங்க மா..’

‘ஓ.. சரி மா.. அடுத்த ஸ்டேஷன்ல அவன இறங்கி வர்ற சொல்லிடு என்ன..’ என்றாள் அம்மா.

‘அம்மா.. அது.. அவங்களும் என்கூடவே வரட்டும் மா. முதல் முறை வெளியூருக்கு போறேன். பயமா இருக்கு. அவர் இருந்தா தைரியமா இருக்கும்..’ என்று அவள் சொன்னபொழுது அம்மாவிடமிருந்து பதிலில்லை. அவளே மீண்டும் பேசினாள்,

‘நீங்க எதுக்கு பயப்படுறீங்கனு புரியுதுமா. எங்களுக்கு எங்க லிமிட் தெரியும். இத்தனை வருசம் காதலிக்கிறப்போ பொறுமையா இருந்த நாங்க இப்ப எதுவும் முட்டாள் தனமா பண்ணமாட்டோம். நீங்க அவங்கள நம்ப வேணா.. என்ன நம்புங்க மா. எங்க ஆபிஸ்ல சொல்லி அவருக்கு தனி ரூம் அரேஞ் பண்ண சொல்லிடுறேன்..’ என்றாள் அவள். அம்மா சிறிது யோசிப்பிற்கு பிறகு,

‘சரிம்மா.. பாத்து போயிட்டு வாங்க. அவனுக்கு ட்ரஸ் கூட இல்ல. எதனா வாங்கிக்கிங்க. என்னா புள்ளைங்களோ.. என்கிட்ட சொன்னது ஞாபகம் இருக்கட்டும்’

‘சரிம்மா.. கண்டிப்பா..’

‘அப்பரம் அவனுக்கு வீட்டுக்கு வா.. இருக்குனு சொன்னேனு சொல்லிடு மா..’ என்றார் அம்மா. அவள் சிரித்துக்கொண்டே சரியென்றாள்.

’மாமியாரும் மருமகளும் நல்லாதான் இருக்கீங்க..’ என்றான் அதுவரை அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துகொண்டிருந்தவன்.

அவள் பதிலெதுவும் பேசவில்லை. அவனே தொடர்ந்தான்.

‘பர்மிஷன்லாம் கேக்குற. ஆனா கோபம் மட்டும் குறைய மாட்டேங்குதே..’ என்றான் கொஞ்சலாக.

‘ஏன் சார் கெஞ்சமாட்டீங்களோ? இன்னும் கொஞ்ச நேரம் கெஞ்சினா தான் என்னவாம்..’ என்றாள் பொய் கோபத்தோடு.

‘ஹா.. பொண்டாட்டி டா… கெஞ்சிட்டா போச்சு…ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்டி..’ என்று அவன் சற்று பாவலா காட்டிக்கொண்டே கெஞ்சினான்.

‘போதும் போதும். அன்னைக்கு என்ன வெயிட் பண்ண வச்சல. உன் ஆபிஸ் நீ இல்லாம ஒரு வாரம் சாகட்டும். இதுபோல ஒரு ட்ராவல். உன்கூட… ரொம்ப ஆசை எனக்கு… சும்மா கூப்பிட்டா வந்திருப்பியா.. அதான் இப்படி…’ என்றாள் அவள் கூலாக.

‘அடிப்பாவி. அப்போ உனக்கு உண்மையா கோபம் இல்லையா?’

‘அதுவா.. அது அன்னைக்கு இருந்துச்சு… அன்னைக்கு நைட்டே போயிருச்சு. உன் மேல எப்படிடா என்னால அதிக நேரம் கோபபட முடியும்..?’ என்றாள் காதலோடு.

’அய்யோ… சோ ஸ்வீட்..’ என்று சொல்லிவிட்டு அவளின் இரு கன்னங்களையும் கில்லி முத்தம் கொடுத்தான் அவன். அவன் மெல்லியதாய் புன்னகை புரிந்தாள். அவனும் சிரித்துக்கொண்டே அவளின் கைகளை பிடித்துக்கொண்டான்.

’டோர் பக்கத்துல போயி நிக்கலாமா?’ என்றான் அவன். அவளும் ஒத்துக்கொண்டாள். இருவரும் அங்கு நின்று அந்த வேகத்தின் காற்றை ரிசித்துக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் ஒரு ஆள் வந்து அவனை தட்டினார். அவர் ஒரு ரயில்வே காதல் அதிகாரி.

‘தே சீ.. உள்ள போ.. வந்துட்டானுங்க.. பெரிய டைடானிக் ரோஸ், ஜாக்னு நினப்பு. உலகத்த காட்டுறார் டோருக்கு வந்து..’ என்று சொல்ல அவர்கள் இருவரும் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு உள்ளே சென்று அமர்ந்துக்கொண்டனர். அந்த போலீஸ் அதிகாரி அவர்களை முறைத்துக்கொண்டே விலகி போனார். அவர் கண்ணின் தூரம் மறையும் வரை இருவரும் பார்த்துவிட்டு, ‘ஹா..’ என்று வாய்விட்டு கைதட்டி சிரித்தனர். ஆனந்தமாக. கொஞ்சம் முட்டாள்தனமான நினைவுக்கொள்ளும் அழகிய காதலோடு.


-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..