மாமியாரும் மருமகளும்

அந்த வீடு மிகவும் அமைதியாக இருந்தது. சுற்றி குயில்களும் குருவிகளும் கொஞ்சும் சத்தங்கள் வீட்டிற்கு ரம்மியத்தை கொடுத்தது. வீட்டு வாசல் கதவில் சந்தனமும் குங்குமமும் பூசப்பட்டிருந்தது அழகாக இருந்தது. கதவை திறந்தவுடன் வரும் சாம்பிராணி வாசம் அந்த வீட்டிற்கே தெய்வ கடாக்ஷத்தை கொடுத்தது. உள்ளேயிருந்து மெல்லியதாய் சுப்ரபாதம் ஓடும் சத்தம் கேட்டது. அந்த வீட்டில் நுழையும் பொழுதே அவர் உடல் சிலுர்த்து இருந்தது. ஊர் கோவிலில் இருந்து நிதி வசூலிக்க அவர் வந்திருந்தார். உள்ளே கேட்டுக்கொண்டிருந்த சுப்ரபாதத்தை அவர் கண்ணை மூடி கேட்டு லயித்துக்கொண்டிருந்தார்.

‘பொடேர்’ என ஒரு சப்தம் அவரை திடுக்கிட செய்தது. அவர் திடுக்குற்றார். சிலிர்த்துக்கொண்டிருந்த முடி, அடங்கி போய் படுத்துக்கொண்டது. அதை தொடர்ந்து மீண்டும் ‘பொடேர்’ என ஒரு சப்தம். அவர் நடுங்கினார்.

‘அம்மா…’ என்றார் பவ்வியமாக.

‘யாரு…’ என்று கேட்டுக்கொண்டே உள்ளிருந்து ஒரு இளம்பெண் வெளியில் வந்தார்.

‘அம்மா. நான் ஊருல அங்காளம்மன் கோவில் கமிட்டில இருந்து வர்றேன். ஐயா இல்லீங்களா?’ என்றார் அவர்.

‘அவர் இன்னும் எழலையே. தூங்கிட்டு இருக்காருங்க’

‘அப்படியா? காலையிலயே எழுந்திடுவாரே! வயசாகிட்டுதில்லையா? கொஞ்சம் சோம்பல் கூட தான் செய்யும்’ அவரே சமாதானம் சொல்லிக்கொண்டார். அவள் ஒன்றும் புரியாமல் கொஞ்சம் யோசித்தவாறே நின்றாள். அடுப்பறையிலிருந்து அவள் மாமியார் வெளியில் வந்தாள்.

‘ம்க்கும். ஐயானதும் உன் புருசன நினச்சியாக்கும். என் புருசன கேக்குறாரு. ஐயா.. அவர் வாக்கிங் போயிருக்காரு. உட்காருங்க. வந்திடுவாரு’ மாமியார் அவளிடம் முறுக்கிக்கொண்டே அவருக்கு பதில் சொன்னார்.

அவர் சிரித்துக்கொண்டே ‘ஓ.. மருமகளா? தம்பி தூங்குறாப்பிடியா? சின்ன வயசுல இருந்து நான் எப்ப வந்தாலும் தம்பி தூக்கம் தான்.. அப்படி இருக்க கூடாதுங்க’ சொல்லிக்கொண்டே அவர் சென்று அமர்ந்தார்.

‘எங்க சொன்னா கேக்குதுங்க. நைட் முழுக்க என்னாத்த பேசுங்களோ.. கெக்கபெக்க கெக்கபெக்கனு.. அப்பரம் வவ்வ வவ்வனு ஒரே அரட்டையா இருக்கும்’ மாமியார் கோனிக்கொண்டாள். ‘அப்பரம் காலங்காத்தால குறட்டை விடுவான் நல்லா’ என்று மாமியார் அலுத்துக்கொண்டாள்.
‘அட.. விடுங்கம்மா. சின்னஞ்சிறுசுங்க. அப்படிதானே இருப்பாங்க. என்னதான் மருமக நைட் அரட்டை அடிச்சாலும் காலையிலே குளிச்சுட்டு மங்களகரமா இருக்காங்களே! பெருமை பட்டுக்குங்க’ என்றார் அவர் அவர்களது பிரச்சனையை முடிக்கும் வண்ணம். அவர் சொன்ன மாத்திரத்தில் மருமகள் அவரை நோக்கி ஒரு முறை முறைத்தாள்.

‘ஆமா ஆமா. இன்னைக்கு அவங்க ஊருல ஏதோ திருவிழா. அதுக்கு கிளம்பி நிக்கிது. இல்லனா.. இதுவும் உள்ள குர்ர்ர் தான்’ மாமியார் சொல்லிவிட்டு கையை விரித்து இழுத்துக்கொண்டாள். தெரியாமல் இவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டோம் என்று அவர் நெளிந்துக்கொண்டே உட்கார்ந்திருந்தார்.

மருமகள் முனகிக்கொண்டே தன் அறைக்குள் சென்றாள். அங்குமிங்கும் குறுக்காக நடந்தாள். அவள் கணவன் அங்கு குப்புற படுத்து வாயை பிளந்துக்கொண்டு குறட்டை விட்டுக்கொண்டிருந்தான். நேராக சென்று அவன் உச்சந்தலையில் ‘நங்’கென்று ஒரு கொட்டு வைத்தாள். ‘அம்மா…’ என்று வலி பொறுக்காமல் அவன் கத்திக்கொண்டே தலையை தேய்த்துக்கொண்டே எழுந்தான். அவள் முந்தானையை இரண்டு கைகளாலும் கசக்கி, இழுத்து பிழிந்துக்கொண்டிருந்தாள்.

அவன் இன்னும் வலி பொறுக்காமல் தேய்த்துக்கொண்டே எழுந்தான். குப்புற படுத்ததில் அவன் வாய் ஒரு பக்கம் கோனலாக வாங்கிக்கொண்டிருந்தது. கண்கள் சுருங்கி இருந்தன. தலையை தேய்த்துக்கொண்டே,

‘ஏன்டி அடிச்ச?’ என்றான். அவள் முனுமுனுத்துக்கொண்டே நின்றாள்.

‘அடியே. கேக்குறேன்ல’ என்றான்.

சட்டென அவன் பக்கம் திரும்பி ‘அப்படி தான் டா. அடிப்பேன்’ என்றாள்.

‘அது சரி. அதான் ஏன்.’

‘காரணம் உன்கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்ல’ என்றாள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்த தோரணையில்.

‘அவஜியம் இல்லன்னு ப்ப்போஓஓ..’ என்று அவன் சொல்லிக்கொண்டே கண் அயர்ந்துக்கொண்டே கட்டியில் சாய்ந்தான். அவள் அவன் கையை பிடித்து நன்கு திருகினாள். மீண்டும் வலி பொறுக்கமட்டாது கத்திக்கொண்டே எழுந்தான்.

‘அடியே.! என்னடி உன் பிரச்சனை’ என்றான் சிடு சிடு முகத்தோடு.

‘உங்க அம்மாவுக்கு வீட்டுக்கு வந்தவங்ககிட்ட எப்படி பேசணும்னே தெரியாதா?’ என்றாள் இன்னும் கடுகடுப்புடன்.

‘என்னடி. காலையிலே ஆரம்பிச்சுட்டீங்களா?’ என்றான் அவன் சலிப்போது.

‘சலிப்பா இருக்குல..’ என்றாள் அவள் மனவலியோடு.

‘அப்படி இல்லடி கண்ணம்மா..’ என்றான் அவன் படுக்கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துக்கொண்டே வந்து.

‘இதுக்கு தான். என் அப்பா வேணா. அம்மா வேணானு உன் பின்னாடியே வந்தனா? எனக்கு வேணும்.. எனக்கு வேணும்’ என்றாள் அவள். எப்படி அத்தனை சேமித்துவைத்திருப்பாள் என்று தெரியாது. அவன் ஏதேனும் கேட்டுவிட்டால் பொல பொலவென அவள் கண்களில் இருந்து கண்ணீர் தாரையாக ஓடும்.

‘ஏ.. ஏ.. கண்ணம்மா. ப்ளீஸ் டி.. அழுகாத டி.. ஏன் டி இப்படி பண்ற’ என்றான் அவன் கொஞ்சம் கெஞ்சலாக.

‘ஆமாம் சாமி ஆமா.. நான் தான் பண்ணுறேன். உங்க அம்மா பண்ணுறதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியுமா?’ என்றாள் அவள் சலிப்போடு.

‘அப்படி என்ன தான்டி அம்மா சொன்னாங்க’ என்று அவன் கேட்க அவள் அவனை மேலும் கீழுமாக பார்த்தாள். ‘உன்னால தான்டா. நைட் முழுக்க கதை சொல்லுறேன், கருமாந்திரம் சொல்லுறேன்னு என்ன உக்கார வச்சு மொக்க போட்டு காலையில தூங்க வச்சிடுற. உங்க அம்மாகிட்ட நான் வாங்கி கட்டிக்கிறேன்’ என்றாள் அவள்.

‘ஹா.. ஹா… அதானா…’ அவன் சிரித்துக்கொண்டே மாற்று பக்கம் திரும்பினான். அவள் அவனை இழுத்து அவள் பக்கம் திரும்ப வைத்து,

‘அது எப்படி வெட்கமே இல்லாம உனக்கு சிரிப்பு வருது?’ என்றாள். அவன் ஏதோ சொல்ல முற்பட அவனை தடுத்துவிட்டு, ‘காலையில குறட்டை வேற. ஏன்டா. இனிமே நீ காலையில குறட்டை விடுறத பாத்தேன். சுடத்தண்ணிய புடிச்சு மூஞ்சில ஊத்திடுவேன்’ என்றாள் அவள் கோபமாக. அவன் தலையை தொங்கபோட்டுக்கொண்டு குழந்தை போல உதட்டை பிதுக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.

‘டே டே… நடிக்காத டா. நீ எந்த எந்த சமயத்துக்கு எப்படிலாம் நடிப்பனு எனக்கு தெரியும் டா. நாளையில இருந்து காலையில 4 மணிக்கு எழுந்திருக்கிற… ஒரு மணிநேரம் ஓடுற. அவ்வளவு தான்..’ என்று அவள் சொல்லும்பொழுது அவன் அதிர்ச்சி அடைந்தான். பட்டென தலையை தூக்கி,

‘அடியே. அதுதான்டி நான் தூங்க போற டைம்மு’ என்றான் அதிர்ச்சி நீங்காமல்.

‘தூங்காதனு சொல்லுறேன். தூங்காத.. ஆபிஸ்ல போயி தூங்கி அடிவாங்குனு சொல்லுறேன். மேனேஜர் தூங்குறான் பாருடானு எல்லாம் கிண்டல் பண்ணட்டும்னு சொல்லுறேன். இங்க நான் அசிங்கபடுறேன்ல அங்க நீ அசிங்கபடு’ என்றாள் பல்லை கடித்துக்கொண்டு. அவன் ‘ஹிம்.. ஹிம்.. ஹிம்..’ என்று சினுங்கினான். அதற்குள் வெளியிலிருந்து சத்தம் வந்தது.

மாமனாரும் அதற்குள் வந்திருந்தார். நிதி வசூலிக்க வந்தவர் வசூலித்துவிட்டு விடைபெறுவதற்காக நின்றுக்கொண்டிருந்தார். இவள் வெளியில் சென்றதும்,

‘போறாங்களாம்.. சொல்லிட்டு போக நிக்கிறாங்க..’ என்றாள் மாமியார். உடனே அவள் அவரை பார்த்து மெல்லியதாய் ஒரு புன்னகை புரிய அவர் கும்பிட்டுவிட்டு விடைப்பெற்றார்.

‘வீட்டுக்கு வந்தவங்களுக்கு ஒரு காபி குடிக்க சொல்ல கூட முடியல’ என்றாள் மாமியார் அவள் காதில் விழும்படியே. பட்டென அவள் சுதாரித்துக்கொண்டு வெளியில் சென்றவரை அழைத்து,

‘ஐயா. காபி எதனா போடவா. குடிச்சுட்டு போறீகளா?’ என்றாள் கொஞ்சம் சத்தமாக.

‘இல்லமா. அம்மா கொடுத்தாக. குடிச்சுட்டேன். நன்றிம்மா. வர்றேன்’ என்று சொல்லிவிட்டு அவர் விலகிச்சென்றார். அவளது மாமனார் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். அவள் அவரை பார்த்து பல்லை காண்பித்தாள்.

‘ஏம்மா. வீட்டுக்கு வந்த உடனே காபி கொடுக்காம. வெளியில போகுறப்பவா கூப்பிடுவாங்க..’ என்றார் சலித்துக்கொண்டே. அவள் பதிலுக்கு மீண்டும் பல்லை காண்பித்துவிட்டு மாமியார் பக்கம் திரும்பினாள். அங்கு அவள் மாமியார், ‘பெக்கபெக்க’வென கேலி சிரிப்பு சிரித்துவிட்டு மகிழ்வோடு உள்ளே சென்றாள். மருமகளுக்கு மூச்சு மேலும் கீழும் வாங்கியது. கையை முறுக்கினாள். உள்ளே விருட்விருட்டென தன் அறைக்குள் சென்றாள். கணவன் உள்ளிருந்து இதை கவனித்துக்கொண்டிருந்திருப்பான் போல. அவள் அறைக்குள் நுழையும் முன், அவன் ஒரு துண்டை ஒன்று எடுத்துக்கொண்டு வேகவேகமாக அவளை நெட்டித்தள்ளிவிட்டு சென்று பாத்ரூமில் நுழைந்துக்கொண்டான். அவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கத்தகூடாது என்று பொறுமையாக உள்ளே சென்று பல்லை கடித்துக்கொண்டு அமர்ந்துக்கொண்டாள்.

அடுத்த சில நிமிடங்களில் கீழ் வீட்டிலிருந்து ஒரு சத்தம் வந்தது. சிறிது நேரத்தில் அது வாக்குவாதம் போல தோன்றியது. மருமகள் மெதுவாக வீட்டின் வெளியே எட்டி பார்த்தாள். அவளின் மாமியார் கீழ்வீட்டு பெண்ணோடு சண்டை போட்டுக்கொண்டிருந்தாள். விடாபிடியாக வெளியில் சென்றாள். அவள் மாமனார் ‘வேண்டாம்.. போகாதே’ என்று சைகை காட்டினார். அவள் கேட்காமல் வெளியில் சென்றாள்.

அவள் வெளியில் சென்ற சமயம் அந்த கீழ்வீட்டு பெண், ‘பெரிய மனுசினு பாக்குறேன்’ என்றாள் இவளது மாமியாரை பார்த்து. உடனே இவளுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

‘ஏ.. என்ன சொன்ன?’ என்று கத்திவிட்டு படபடவென படிக்கட்டிலிருந்து கீழே இறங்கினாள். அவளின் முகத்துக்கு நேராக நின்றுக்கொண்டாள். ‘என்ன சொன்ன? பெரிய மனுசினு பாக்குறியா? எங்க நான் சின்னவ தான். என்ன பண்ணுவ? ஹான்.. என்ன பண்ணுவ?’ என்றாள் மல்லுக்கு.

‘தே பாருமா.. சும்மா இங்க என்கிட்ட மல்லுக்கட்டாத’ அந்த பெண்மணி பின்வாங்கினாள்.

‘ஓஹோ. மல்லுக்கட்டுறாங்க’ தன் புடவையின் கொசுவத்தை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டாள் மருமகள். ‘மல்லுக்கட்டுறாங்களா? பெரியவங்ககிட்ட எப்படி பேசணும்னு தெரியாது? ஹான். என்ன பேசுற நீ. நான் பேசுனா நீ நாரிடுவ. தெரியும்ல’ என்றாள் இன்னும் கோபமாக.

‘ஆமா… வந்துட்டாளுங்க மாமியாரும் மருமகளும்…’

‘தே சீ. ஆமா வருவோம். என்ன பண்ணுவ. என்ன பண்ணுவ. சும்மா. கொஞ்சம் ஏமாந்தவங்க கிடைக்க கூடாதே. நல்ல ஏறலாம்னு பாப்பியே..’

‘யாருமா.. ஏமாந்தவங்க.. உன் மாமியாரா’ என்று அவள் கேட்டுக்கொண்டே மருமகள் கையை பிடித்து ‘வா’ என்று அழைத்துக்கொண்டே அவள் வீட்டு வாசலுக்கு அழைத்து சென்றாள். அங்கே சில மாம்பழ தோளும், சட்டினியும் சிதறிக்கிடந்தது.’பாரு’ என்று அவள் காண்பித்தாள். மருமகள் ஒன்றும்புரியாமல் பார்த்தாள்.

‘உன் மாமியார். மேல இருந்து இத இங்க கொட்டியிருக்காங்க.. என்னமா இப்படி பண்றீங்களேமானு கேட்டா.. நீயே எடுத்து கொட்டிக்க.. அதெல்லாம் என்னால செய்ய முடியாதுனு சொல்றாங்க. இல்ல நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரியா என்ன’ என்று அந்த பெண்மணி கேட்கையில் அதற்கு மேல் மருமகளுக்கு வார்த்தை வரவில்லை. திரும்பி அவளது மாமியாரை பார்த்தாள். அவள் மாமியார் சட்டென மேல்புறமும், இடப்புறமும் திரும்பி வேறு ஏதோ வேடிக்கை பார்ப்பது போல பாவலா செய்தார். அந்த மருமகள் மனதினுள்ளே,

‘கோத்துவிட்டுட்டியே டி. மாமியாரா நீ.. என்ன காலி பண்ணுற சாமியார் டி..’ என்று அவள் நினைத்துக்கொண்டாள். தொண்டையை கரகரத்துக்கொண்டாள். சமாளித்தாக வேண்டிய கட்டாயம்.

‘அது… அது.. அது..க்கு.. பெரிய மனுசினு பாக்குறேன்னு சொல்லுவியா’ என்று அவள் கேட்கும்பொழுது அவள் வார்த்தையில் சுருதி குறைந்து இருந்தது. அதட்டல் கம்மியாக இருந்தது. வார்த்தை பம்மிக்கொண்டிருந்தது.

‘சரி மா. மன்னிச்சுடுங்க. அம்மா.. நீங்க மன்னிச்சிடுங்க’ என்று அவளது மாமியாரை நோக்கி அந்த பெண்மணி சொன்னாள். மாமியார் ‘ஹான்.. ஹான்…’ என்றாள். பிறகு, ‘போதுமா.? இப்போ இதை யாரு சுத்தம் பண்ணுறது’ என்று அந்த பெண் கேட்க மருமகள் மாமியார் பக்கம் திரும்பினாள். மாமியார் வேறு பக்கம் திரும்பி, மேலே பார்த்துக்கொண்டே படியில் ஏறி ஒன்றும் நடவாவது போல மேலே சென்றுவிட்டாள்.


‘நான் தான்… நானே தான்…’ என்று சொல்லிவிட்டு அந்த மருமகள் எல்லாவற்றையும் சுத்தம் செய்துவிட்டு மேலே வந்தாள். ஷோபாவில் உட்கார்ந்துக்கொண்டு மாமியார் கால் ஆட்டிக்கொண்டே காபி குடித்துக்கொண்டே டிவி பார்த்துக்கொண்டிருந்தாள். மருமகள் சென்று மாமியார் பக்கத்தில் அமைதியாக உட்கார்ந்தாள். மாமியார் டிவியில் இருந்து கண்ணை எடுக்காமல் அருகில் இருந்த இன்னொரு டம்ளரை எடுத்து மருமகளுக்கு நீட்டினாள். அதில் நுரை பொங்கிய காபி இருந்தது. மருமகள் அதை வாங்கி குடித்துக்கொண்டே அவளும் டிவியை பார்த்தாள். அந்த இருவரும் ஒன்றாய் காபியை குடித்துக்கொண்டே டிவியை பார்த்தனர்-என்றும் போல அன்றும். 

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி