Skip to main content

காதல் காத்திருப்பு

அந்த கானகத்தின் நடுவே அன்னத்தாமரை போல அவள் வீற்றிருந்தாள். ஆகாய தாமரை மலர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பூத்திருந்த குளத்தின் ஓரத்தில் உட்கார்ந்து ஒரு கையை குளத்தில் இட்டு தண்ணீரை எடுத்து எடுத்து விட்டுக்கொண்டிருந்தாள் அவள். அவளது பார்வை தூரத்து மரங்களின் நடுவே இருந்தது. அந்த இடமே சுற்றி மரங்களால் சூழப்பட்டிருந்தது. இலைகள் செழுமையின் எடுத்துக்காட்டாக மின்னி ஆடிக்கொண்டிருந்தன. கிளிகளுக்குள் காதல் பேச்சுக்கள் அந்த கானத்தில் அங்குமிங்கும் கேட்டுக்கொண்டே இருந்தன. ஆண் கிளி பெண் கிளியை வசம் செய்ய துறத்தும் போல இருந்தன. இலைகள் சில உதிர்ந்தன. கீச்சுகள் அதிகமாயின.

மெதுவாக எழுந்தாள். சுற்றி அந்த இடத்தை பார்த்தாள். மெதுவாக அந்த குளத்தின் ஓரத்திலே நடந்தாள். ஒரு சுற்றில் குளத்தில் அருகே பொடிசு கூண்டில் இருந்தது. அதன் அருகே உட்கார்ந்தாள். கூண்டிலில் கையை மெதுவாக விட்டாள். ஒரு சங்கு மணி மாலையை எடுத்து பார்த்தாள். மெல்லியதாய் சிரித்தாள்.

நினைவுகள் புரண்டன…

‘கண்ணே… உனக்காக நான் தொடுத்து வந்த மாலை..’ அவன் இடப்பக்கம் இடுப்பில் சொருகியிருந்த சங்கு மாலையை எடுத்து நீட்டினான். அவள் அவனை பார்க்கவில்லை. வெட்கம்கொண்டு தலையை சாய்த்துக்கொண்டிருந்தாள்.

‘என்ன வேண்டாமா?’ அவன் பரிகாசமாய் கேட்டான். சட்டென பதறி அவன் முகத்தை பார்த்தாள். மீண்டும் வெட்கம் கொண்டு தலை கவிழ்ந்துக்கொண்டாள்.

‘இதன் பெயர் என்ன..?’ ஏக்கமாக கேட்டான்.

‘தங்களுக்கு தெரியாதா?’ செல்ல கோபத்தோடு பதில் சொன்னாள்.

‘உன் செவ்வாய் உதடுகள் திறந்து. உன் சங்கு போன்ற குரல்வலையில் தொடங்கி, உன் ருசிக்கும் நாவை உரசிவிட்டு. அதற்காகவே பிறப்பெடுத்தது போல வந்து விழும் வார்த்தைகளால் கேட்க என் மனம் ஆசைக்கொள்ளாதா?’ அவன் கேட்டதும் அவள் மீண்டும் வெட்கம் கொண்டாள்.

‘உண்மைதான்…’ மெல்லியதாய் சலித்துக்கொண்டு திரும்பினான்.

‘என்ன உண்மை?’ பதறியவளாய் அவள் அவன் திரும்பிய முகத்தை பார்த்து கேட்டாள்.

‘வானலாவி விண்கோட்டம் வரை என் குதிரையில் சென்றிருந்தேன். திரும்பி வரும் நேரத்தில் புகார் நகர சந்தை வீதியில் நுழைந்துவிட்டேன். கூட்டமே கூட்டம். சோழ நாட்டில் அப்படியொரு மக்கள் நிரை கூட்டத்தை நான் பார்த்ததில்லை. அப்பொழுது ஒரு சங்கு வியாபாரியை பார்த்தேன். வலஞ்சங்கு, வழுக்கை சங்கு, ஊதறி சங்கு, விண்ணிற்சங்கு என்று பல சங்குகளை விற்றுக்கொண்டு வந்தான். சுற்றி திரிந்துக்கொண்டிருந்த என்னிடம் அவன் வந்தான். இந்த சங்குகளை தொடுத்து மாலையாக தங்களுக்கு பிடித்தவரிடம் கொடுங்கள் என்றான். ஏன் என்றேன். பிறகு அவர்கள் உங்களிடம் பேசமாட்டார்கள் என்றான். என்ன உளறுகிறாய் என்று கேட்டேன்…’ சொல்லிவிட்டு அவள் பக்கம் திரும்பினான். அவள் ஆவலாக கேட்டுக்கொண்டிருந்தாள்.

‘என்ன சொன்னான்…?’ ஆவலாக கேட்டாள்.

‘இப்படி ஒரு பொய் கதையை சொல்லுங்கள் மீண்டும் ஆவல் கொண்டு பேச ஆரம்பிப்பார்கள் என்றான்..’ சொல்லிவிட்டு காதல் பார்வையோடு ஒரு சிரிப்பு சிரித்தான். அவளுக்கு அது புரிய சிறிது நேரம் எடுத்தது. அவளும் காதல் கொண்டு சிரித்தாள்.

“சங்குகள் வாங்குவது பெரிதல்ல. தொடுப்பது பெரிதல்ல..’ என்று சொல்லி அவள் நிறுத்தினாள்.

‘பிறகு?’ அவன் ஆவலாய் கேட்டான். மெதுவாக அவள் கீழ்குனிந்துக்கொண்டாள். வெட்கத்தோடு மீண்டும் பேசினாள்,

‘உற்றவள் என்ன விரும்புகிறாள் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்’

‘புரியவில்லையே…’ என்றான் அவன். அவள் பெரிதாய் ஒரு மூச்சை இழுத்து விட்டாள்.

‘இந்த ஆண்களுக்கு பெண்களை தவிக்கவிடுவதில் அப்படி என்ன சுகம் கண்டார்களோ?’ முனகிக்கொண்டாள் வெளியில் கேட்காதவாறு.

‘இல்லை. பிடிபடவில்லை. என்ன சொன்னாய்…?’ மீண்டும் அவளை நெருங்கி காதலோடு கேட்டான்.

‘என் கழுத்து உங்கள் கைகளால் படரப்பட்டால் தான் சங்குகளை தாங்குவேன் என்கிறதே நான் என்ன செய்ய?’ கொஞ்சலாய் சொல்லி மீண்டும் வெட்கிக்கொண்டாள்.

‘ஆஹா… அப்படியா சொல்கிறது. கழுத்து மட்டுமா?’

‘ஏன்..? வேறென்ன’
‘இல்லை… நான் சங்கை தொடுக்கும்பொழுது உன் நெஞ்சை தொடும் அளவை பார்த்து தான் செய்தேன். அதனால் கழுத்து மட்டுமல்லாது வேறு ஏதேனும் என் ஸ்பரிசத்தை எதிர்பார்க்கிறதா என்பதை அறிந்துக்கொள்ள ஆவல்..’ என்று சொல்லிவிட்டு அவன் அருகில் நெருங்கினான். அவள் தன் இரு கைகளையும் வைத்து மார்பகத்தை மூடிக்கொண்டாள். சட்டென முகத்தையும் மூடிக்கொண்டாள்.

‘இதன் பெயர் சம்மதமா?’ அவள் முகத்தின் நேராக தன் முகத்தை வைத்து கேட்டான் அவன். முகத்தை மூடியிருந்த கைகளில் இருந்து ஒரு விரலை மட்டும் மடக்கிக்கொண்டு ஒற்றை விழிகளில் பார்த்தாள். அந்த கண்ணில் இமைகள் மூடி மூடி திறந்தன. அன்னப்பறவை தன் சிறகுகள் கொண்டு அடித்துக்கொண்டு அழைப்பது போல இருந்தன. அவன் அவளிடம் இன்னும் நெருங்கினான். அவள் கண்களை மூடிக்கொண்டாள்.

‘தொடுதல் மட்டும் கேட்கிறதா? அல்ல கூடலுமா…’ அவன் கேட்ட மாத்திரத்தில் அவள் திரும்பி மரத்தின் மீது சாய்ந்துக்கொண்டாள். அவளருகே சென்று அவளது நீண்ட முடியை தழுவினான். அவள் உடம்பு சிலிர்த்தது. அவளை திருப்பினான். கண்களை மூடிக்கொண்டே அவள் திரும்பினாள். அவளில் தாடையை பிடித்து மேலே உயர்த்தினான். அவள் மெல்லியதாய் கண்களை திறந்தாள். அந்த கண்களில் சிறு ஏக்கம் இருந்தது.

‘மன்னரை கண்டேன்…’ என்றான் அவன். அவள் முகம் சட்டென மாறியது. காதல் பார்வையில் கலங்கம் ஏற்பட்டது. என்ன செய்தி என்று அறியும் ஆவளோடு அவள் அவனை பார்த்தாள். அவன் அவளை விட்டு சற்று விலகி நடந்தான். மெதுவாக பேசினான்,

‘கீழை சாளுக்கியம் நோக்கி செல்ல போகிறோம்’ என்றான் மெதுவாக. அவள் அதிர்ந்தாள். அமைதியாக நின்றாள். அவன் திரும்பினான். அதிர்ச்சியான அவளின் முகத்தை பார்த்தான்.

‘கீழை சாளுக்கியம்.. ஆம்…’ என்றான்.

‘ஏன் ராஜநரேந்திரன் மன்னரிடம் சரணடைந்து விட்டதாக ஊரார் பேசிக்கொண்டார்கள். தங்கை குந்தவையும் இங்கு வந்துவிட்டார்கள் என்று சொன்னார்கள். பிறகு ஏன்?’

‘விமாலாதித்தன் இறந்துவிட்டாராம். மேலை சாளுக்கிய நரிகள் கீழை சாளுக்கியத்தையும் இரை திண்ண பாக்கிறார்களாம்…’ சொல்லிவிட்டு கையை முறுக்கினான்.

‘ஓ.. எத்தனை மாத திட்டம்?’

‘மாதமல்ல…’ தயங்கியபடி அவன் சொன்னான்.

‘பிறகு..?’ அவள் அதிர்ந்தபடி கேட்டாள். அவன் தலையை கீழ்குனிந்துக்கொண்டான்.

‘வருடங்கள். எத்தனை என்று சொல்ல முடியாது. கீழை சாளுக்கியம். மேலை சாளுக்கியம். ஒட்டர் தேசம். பிறகு கங்கை வரை. கடாரம் வரை செல்லவும் திட்டம் இருக்கிறது..’ அவன் சொல்லிமுடிக்கும்பொழுது அவள் கண்கள் தாரையாக கண்ணீர் வடித்தது. அவன் சங்கடத்தான். அவள் அருகில் சென்றான்.

‘கண்ணே…’ என்றான். அவளின் கண்ணீர் நிற்கவில்லை. மீண்டும் அவளது தாடையை பிடித்து முகத்தை உயர்த்தினான்.

‘கண்ணே… தேச நலனா? சுய நலனா? தேச நலன் தானே முக்கியம். நான் உன்னை தவிக்க விட்டு செல்ல நினைப்பது பாவம் தான். ஆனால்… சோழ தேசத்திற்காக என் உயிரை கொடுப்பேன் என்று நான் சூளுரைத்தது உனக்கு தெரியாதா? இன்று நான் செல்லவில்லை என்றால் நாளை சாளுக்கிய நரிகள் நமது சோழ தேசத்தின் பெண்டிர்களையும் வஞ்சித்தும், நம் ஆநிரை மற்றும் பொருள்களை கொள்ளையடித்தும். அழிக்கமுடியா பொக்கிஷமான எம் நாட்டின் வளமையை சீரழிப்பது சரியாகுமா?’ அவன் கேட்டான். அவள் பதிலெதுவும் இல்லாது இன்னும் தேம்பிக்கொண்டிருந்தாள்.

’உன்னை காதலில் முதல் தொடுகையிலே நீ என் உற்றாள் ஆகிவிட்டாயடி. கவலைக்கொள்ளாதே. எனக்காக நல்லெண்ணெய் விட்டு திரி வைத்து விளக்கேற்றிக்கொண்டிரு. சாளுக்கிய நரிகளின் கொட்டத்தை அடக்கிவிட்டு, ஒட்டரின் திமிறை திசைபறக்க விட்டு, கங்கை நதிக்கரையில் புனித நீராடி, அதை உனக்கும் கொஞ்சம் எடுத்துக்கொண்டு. கடாரத்தின் கபடநாடகத்தை ஒழித்துவிட்டு விரைவிலே திரும்பிவிடுவேன்..’ என்றான் மனக்கனவோடு.

‘எவ்விரைவில்..’ அவள் கோபமாக கேட்டாள். அவன் அதிர்ச்சியில் திரும்பினான்.

‘எவ்விரைவில் நீங்கள் வெற்றி சூடி என்னிடம் வருவீர்கள். எவ்விரைவில் என்னை ஊரார் முன் மணப்பீர்கள்? எவ்விரைவில் என்னோடு ஆசையாக கூடுவீர்கள்? எவ்விரைவில் எம் பிள்ளைகளை எனை தாங்க செய்வீர்கள்?’ என்றாள் இன்னும் ஆத்திரமாக.

‘ஆனால்..’

‘என்ன ஆனால்.? மறவனுக்கு காதல் கூடாதா? மறவனுக்கு மனைவி கூடாதா? வேளாளணும், கருமாரும், அந்தணனும் தன் மனைவி, குடும்பம் என்று இருக்க மறவனுக்கு மட்டும் ஏன் இந்த நரக வாழ்க்கை…’

‘என்ன பேசுகிறாய்… எது நரகம்..? நாட்டுக்காக உயிரை கொடுப்பதா?’

‘எது நாடு..? இராஜேந்திரனா.. உங்கள் மன்னனா..? எது நாடு..? உங்கள் மன்னனின் குடம்ப பிரச்சனைக்காக இத்தனை சோழ தேசத்து உயிர் போக வேண்டுமா? இப்படிபட்ட சுயநல மன்னனை நான் பார்த்ததில்லை…’ கோபமாக கண்களை விரித்து கைகளை ஆட்டி பேசினாள். அவனின் விழிகள் முறைத்து பார்த்தன. அவன் கண்களின் கோபமே அவளை அடுத்து கொன்றுவிடும் போல இருந்தது. அவள் தலையை கீழ் குனிந்துக்கொண்டாள். அவன் அமைதியானான். மெல்லியதாய் அவள் அருகில் வந்து அவள் கைப்பற்றிக்கொண்டான்.

‘கண்ணே… சோழ மன்னன் சுயநலமற்றவன். இன்று நாம் சாளுக்கியரை அடிக்காது போனால் வடக்கே நமது பாதுகாப்பு அரண் உடைக்கப்படும். கீழை சாளுக்கியம் நம்மிடம் இல்லையென்றால் சோழ மண்ணில் எதிரிகள் எளிதாக ஊடுறுவி விடுவார்கள். மண்ணில் புகுந்த நரியை தீப்பந்தம் எடுத்துக்கொண்டு விரட்டுவது உசிதமா அல்லது நரிகள் ஊடுறுவாமல் தடுப்பது உசிதமா?’ கேட்டுக்கொண்டு அவளை பார்த்தான். அவள் தலையை உயர்த்தவில்லை.

‘சரி கீழை சாளுக்கியம் சரி. மேலை எதற்கு? ஒட்டர் எதற்கு? கடாரம் எதற்கு?’

‘கீழை சாளுக்கியத்தை பிடித்து ராஜநரேந்திரனிடம் கொடுத்துவிடலாம். ஆனால் அவன் தற்குறி. இன்னும் வளராதவன். அதனால் மேலைசாளுக்கியத்தை தீக்கிரையாக்கவேண்டும். போதுமா? மேலைசாளுக்கியத்திற்கு ஒட்டர் துணை வருவார். அவரை வெட்டி சாய்க்க வேண்டும். நம் அண்டை ஊர் வணிகரை பார்த்தாய் அல்லவா? இரு கைகளும் ஒட்டி பிரிக்க முடியாது போல என்ன கொடுமை என பதறினாயே. அதற்கு பதில் சோழம் சொல்ல வேண்டாமா? சோழத்தின் பிறந்தவன் பேடி இல்லை என பறைசாற்றவேண்டாமா? வெற்றியின் களிப்பில் இருக்கும் சோழத்தின் வீரம் இருமடங்கு கூடியிருக்கும். அந்த படை கடாரத்தை நோக்கி பயணித்தால் வெற்றி நமதே… இதை நாம் செய்தாக வேண்டாமா?’ என்றான். அவள் அமைதியாக நின்றாள். மெல்லியதாய் மீண்டும் கண்ணீர் விட்டாள்.

‘நீங்கள் அவசியம் செல்ல வேண்டுமா?’ கேட்டாள் அவள்.

‘என்ன கேள்வியடி. மூளை பிசகாகிபோனதா? படையின் முக்கிய உபதளபதி நான் என்பது மறந்து போனதா என் காதல் தேவதைக்கு’ என்று சொல்லிவிட்டு பரிகாசமாய் அவளை பார்த்தான். அதன் பின் இருவரும் சிறு உரையாடினர்.

‘நான் மீண்டு வந்து இந்த சங்கு மாலையை உனக்கு மணமுடிப்பின் ஆதாரமாய் இடுகிறேன். பத்திரபடுத்துடி…’ சொன்னான் அவன். அவள் காதலோடு அந்த சங்கு மாலையை வாங்கிக்கொண்டாள். அமைதியாக தலை குனிந்து நின்றாள். அவள் முகத்தை உயர்த்தினான். அருகில் நெருங்கினான். நெற்றியில் ஒரு முத்தம் பதித்தான். அவள் உடல் முழுதும் குளுமை பறவியது. வெட்கத்தால் சிரித்தாள். அவளிடம் விடைபெற்றுக்கொண்டு அந்த கானத்தின் மரமிடையே அவன் காணாமல் போனான். வருடங்கள் பல ஓடியது. ஊராரும், பெற்றோரும் பலமுறை சொல்லியும் அவள் வேறு யாரையும் மணக்க தயாராக இல்லை.

அவ்வபோது போர் இடத்திலிருந்து செய்திகள் வரும். அவளின் காதலனின் வீரத்தை மெச்சி மன்னர் உபதளபதியிலிருந்து தளபதியாக பதவி உயர்வு தந்திருக்கிறார். மேலை சாளுக்கியத்தை தீக்கிரையாக்கி கோட்டை உச்சியில் நின்று வெறிக்கொண்ட வேங்கையாக கத்தினான் என்று செய்தி வந்தது. அவளது உடம்பு புல் அரித்துபோனது. மகிழ்ந்தாள். சிரித்தாள். அந்த கானகத்தை சுற்றி சுற்றி ஓடி வந்தாள். கடந்த மாதம் போர் முடிந்த செய்தி வந்தது. அவன் எப்பொழுது வேண்டுமாயின் அங்கு வரலாம்.

நினைவுகள் மீண்டெழ அதே கானகத்தில் அவள் அவனுக்காக காத்திருந்தாள். ஊர் கொடியில் வீரர்கள் வந்துவிட்டார்கள். பூஜை நடக்கிறது. மணமாகிய பெண்கள் எல்லாம் வரவேற்க ஓடியிருக்கிறார்கள் என்னும் செய்தி வந்தது. எப்பொழுதுமாயின் அவன் வருவான் என்று அவள் காத்திருந்தாள். நேரங்கள் வருடங்களாய் கடந்தன. அனைத்து பக்கமும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். அடர்மரங்கள் ஆடின. கானகத்தின் மத்திம பகுதியில் இருந்து ஒரு புள்ளி மான் குதித்து ஓடியது. அவள் கண்கள் அந்த மானை பின்தொடர்ந்தன.

அந்த மான் கடந்த பிறகும் ஒரு திசையை அவள் அழுத்தமாக பார்த்துக்கொண்டிருந்தாள். தலையில் துண்டு, இடுப்பில் வேஷ்டி. புஜங்கள் புடைத்துக்கொண்டிருந்த ஒரு வீர ஆண்மகன் அங்கு வந்தான். அவள் கண்களை துடைத்துக்கொண்டு பார்த்தாள். வருடகணக்கில் போர் மற்றும் பயிற்சி அவனை இன்னும் கட்டுமஸ்தானாக மாற்றியிருந்தது. ஆனால் முகம். அதே சிரிப்பு. தூரத்திலிருந்து அவளை பார்த்து சிரித்துக்கொண்டே வந்தான். விண்ணில் இருந்து இந்திரன் தான் இறங்கிவந்துவிட்டானா என்று அவள் கண்களை அவள் துடைத்துக்கொண்டாள்.

அவன் அவளை நெருங்கி வந்தான். அவளுக்கு பேச்சு வரவில்லை. அவள் வாயை திறக்கிறாள். அதிலிருந்து சத்தமில்லை. கண்கள் ஆனந்த கண்ணீரை கொட்டிக்கொண்டிருக்கிறது. சிரிக்கிறாள். அழுகிறாள். அவளின் முகபாவங்களை பார்த்து அவன் இன்னும் பூரித்து போகிறான். கையிலிருக்கும் சங்கை கண்ணீரோடு நீட்டுகிறாள் அவள். அவன் ஒன்னும் சொல்லாது அதை வாங்கி அவளை திருப்பி, அவள் கழுத்தோடு பற்றிக்கொள்ள செய்கிறான். அவளை திருப்பி அவளது உதட்டில் அழுத்தமாக முத்ததை பதித்து இறுக கட்டிக்கொண்டான். குலுங்கினாள். அழுதாள். சிரித்தாள். தேம்பினாள். அவன் மெல்லியதாய் அவளது முதுகை எந்த பேச்சுமின்றி தடவிக்கொடுத்தான்.

‘அன்பு மனைவி…’ என்றான். அவள் ‘ஆ… ஆ.. ஆ..’ என்று வாய்விட்டு அழுதாள். ஆனந்தத்தோடு.

-தம்பி கூர்மதியன்


Comments

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…