பெண்ணியன்

அவள் அங்கு வேக வேகமாக கம்ப்யூட்டரில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் அருகில் ஒரு கோலா டின் வைத்துவிட்டு அருகில் உட்கார்ந்தான் அவளின் நண்பன். அவள் கம்ப்யூட்டரில் இருந்து கண் எடுக்காமல் ‘ஹாய்..’ என்றாள். அவன் உன்னிப்பாக அவள் என்ன செய்கிறாள் என்பதையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் தட்டச்சு வேகம் உச்சத்தில் இருந்தது, இறுதியில் ஒரு பெரிய பொத்தானை ‘தட்’ என அடித்துவிட்டு சுழலும் அந்த நாற்காலியை சுழற்றிவிட்டு அவள் நண்பனை பார்த்து புருவத்தை ‘என்ன’ என்பது போல உயர்த்தி கேட்டாள்.

’ஒண்ணுமில்ல. சும்மா..’ என்றான் அவன் கண்ணை சிமிட்டிக்கொண்டே. தொடர்ந்து, ‘கேன்டீன் போலாமா?’ என்றான். அவள் சிறிது யோசித்துவிட்டு பிறகு சரியென்று தலையை ஆட்டினாள். இருவரும் அந்த அலுவலக கேன்டினுக்கு சென்றனர்.

இருவர் கையிலும் கோலா டின் இருந்தது. அவள் அந்த கண்ணாடி கூண்டில் இருந்து வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். ஏதோ யோசித்துக்கொண்டே அங்கிருந்து பார்வையை எடுக்காமல் பேச ஆரம்பித்தாள்,

‘நாமலாம் எங்க போறோம்னே தெரியலல. இவ்வளவு அவசரமா. இவ்வளவு பரபரப்பா. எதநோக்கி?’ என்றாள்.

‘பணம் தான்’ என்றான் அவன் குடித்துக்கொண்டிருந்த கோலாவை வாயிலிருந்து எடுத்துவிட்டு.

‘அது சரி. பணம் மட்டும் தான் வாழ்க்கையா?’

‘உன்னோட வியாக்கானத்த கேக்க நான் வரல. என்கிட்ட பேச வேற ஒரு விசயம் இருக்கு’ என்றான் அவளது தோழன்.

அவள் அவன் பக்கம் திரும்பி, ‘என்ன?’ என்றாள்.

‘ரகு. ரகு தான். வேற என்ன நான் பேசுவேன்?’ என்றான் அவன்.

‘ஹே… அவன தவிற வேற எதுவேனா பேசு. அவன பத்தி மட்டும் பேச்ச எடுக்காத’

‘என்ன பிரச்சனை உனக்கு? நீ ஒரு மாடர்னைஸ்டு கேர்ள். நீ எல்லா பெண்கள போல இல்லனு இந்த கதையெல்லாம் விடாத. ரகுவுக்கு உன்ன நாலு வருசமா தெரியும். அவன் அத தான் விரும்புறான். நான் ஆண் ஆதிக்கவாதி தான். ஆனா ரகுகிட்ட நீ எதிர்பார்க்குற சுதந்திரம் கிடைக்கும் தானே. அவன ஏன் உனக்கு பிடிக்கல’ என்றான் அவன் ஒன்றும் விளங்காதது போல.

‘Stupid Masker’ என்றாள் அவள் வாய்க்குள்ளே முனகிக்கொண்டு.

‘என்ன… என்ன.. என்ன சொல்லுற?’ என்றான் அவள் தோழன்.

’இங்க பாருடா. ரகு நல்ல பையன். கெட்ட பழக்கமில்ல, நேர்மையானவன், தனித்துவமானவன். அதெல்லாம் சரி. ஆனா காதல் இதெல்லாம் பாத்து வராது’

‘இங்க பாரு. உனக்கு ரகு மேல காதல் இல்லனு மட்டும் சொல்லாத. இப்ப அவன இங்க கூப்பிடவா. அவன நீ பார்க்குற பார்வை மட்டுமே ஆயிரம் காதல் கதைகள் சொல்லும்’ என்றான் அவன் நக்கலாக.

‘இருக்கலாம். ஆனா, அவன் கூட ஒரு லைஃப். எனக்கு விருப்பமில்ல’ என்றாள் அவள் திடமாக.

‘என்ன பிரச்சனை உனக்கு. காதல் இருக்குனு பூசினாப்புல ஒத்துகிட்ட. காதலிக்கிறவன கட்டிக்க வேண்டியது தானே’

‘ஹே முட்டாள். காதல் பத்து முறை இம்ப்ரஸ் ஆனாலே வரும். ஆனா கல்யாணம் காதல தாண்டி பல விசயங்கள யோசிக்கணும். இங்க பாதி பேரு அப்படி யோசிக்கிறது இல்ல. அதனால தான் பாதி காதல் கல்யாணம் வரை போறதே இல்ல’

‘அப்படி என்ன யோசிக்கணும்?’

’இங்க பாருடா. நீங்க பேசுறது எல்லாமே நடக்குறது இல்ல. பேசுற போலவே வாழுறவன் நூத்துல ஒருத்தன் இல்ல இரண்டு பேரு தான் இருப்பாங்க. பெண் சுதந்திரம் பத்தி ரகு என்னலாம் பேசுவான். ஒரு பெண் அவன காதலிக்க விருப்பமில்லனு சொல்லியும் பின்னால காதலி காதலினு சுத்துறானே இது பெண் சுதந்திரத்துக்கு அப்பாற்பட்டது இல்லயா?’ என்றாள் அவள். அவள் தோழன் பதில் எதுவும் சொல்வதற்கு இன்றி கையை விரித்துவிட்டு அவன் இப்பொழுது கண்ணாடி வழியே வெளியில் பார்க்க ஆரம்பித்தான்.

‘பட் ஐ நோ. ரகுக்கு என் கண்ணுல இருக்குற காதல் தெரிஞ்சிருக்கும். அத நான் மறைக்குறேனு அவனுக்கு புரிஞ்சிருக்கும். அதான். அதான் என் பின்னாடியே வர்றான்’ என்றாள் அவள். அவன் சட்டென திரும்பி அவள் முகம் பார்த்தான். அவள் கண்கள் சற்று கலங்கியிருந்தன.

அவள் மேலும் பேசினாள், ‘ரகு நல்ல பையன் டா. அவன் பேசுறது, சிரிக்கிறது ஒவ்வொன்னும் அவ்வளவு இம்ப்ரஸ் பண்ணும். ஆனா…’

‘என்ன லூசு ஆனா…’ இம்முறை மகிழ்வு பொங்க சிறு கோபத்தோடு அவன் கேட்டான். மனதில் காதலை வைத்துக்கொண்டு ஏன் அவள் மறைக்கிறாள் என்னும் கோபம் அது.

அவள் மாற்று பக்கம் திரும்பிக்கொண்டாள். கண்ணாடி வழியே உலகத்தை பார்த்தாள். பார்த்துக்கொண்டே பேசினாள், ‘ஆனா.. ரகுகிட்ட என் காதல சொல்லாததுக்கு காரணம் ஒண்ணு தான். நான் ரகுவ கல்யாணம் பண்ணிக்கிட்டா கண்டிப்பா ரகுவோட மனைவியாகிடுவேன்’

‘ஆமா… அதானே உண்மை. கல்யாணம் பண்ணிகிட்டா அவன் மனைவி தானே நீ’ என்றான் அவன் புரியாமல்.

‘இல்லடா. உனக்கு புரியல. மனைவினு சான்று வேற, மனைவினு வாழ்க்கை வேற. நான் கல்யாணம் பண்ணிக்க விரும்பல டா. அப்படி நான் பண்ணிகிட்டா, நான் இம்ப்ரஸ் ஆகாத ஒருத்தரா தான் நான் கட்டிப்பேன்’ என்றாள் அவள்.

‘ஸ்டூபிட்டா நீ? இல்ல பைத்தியமா உனக்குனு கேக்குறேன். வாழ்க்கைய வித்யாசமா பாக்குறோம்னு எண்ணமா உனக்கு? வித்தியாசம் வித்தியாசம்னு பேளுற வழியில திங்க ஆரம்பிச்சுடாத என்ன’ என்று அவன் கோபமாக வார்த்தைகள் விட்டான். அவள் ‘பொடே’ரென சிரித்துவிட்டாள். அவன் சட்டென சுயநினைவு தட்டியவனாய்,

‘சாரி’ என்றான் தலையை கீழே குனிந்துக்கொண்டான்.

‘தட்ஸ் ஓகே டா. பரவால’

‘பட். ரகு உன்ன நல்ல பாத்துப்பான்…’ என்றான் அவன் மென்மையாக.

‘யஸ். நான் இல்லனு சொல்லலையே. ஆனா என்னோட அடையாளம்? பாருடா. எனக்கு ரகுவ ரொம்ப பிடிக்கும். சில சமயம் அவன் மத்த பொண்ணுங்க கூட பேசுறப்போ ரொம்ப பொசசிவ்வா இருக்கும். கோபமா வரும். நான் அவன கல்யாணம் பண்ணிக்கிறேனு வச்சுக்கோ, அவனுக்கு நான் இப்படி இருந்தா பிடிக்குமா இப்படி இருந்தா பிடிக்குமானு யோசிச்சு யோசிச்சு கண்டிப்பா என்ன அவனுக்காக பலவகையில மாத்திக்க பாப்பேன்…’ என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே அவன் குறுக்கிட்டான்.

‘அதானே.! அதானே காதல். அப்பரம் என்ன..’

‘அதான் டா. அதான். இங்க கல்யாணத்துக்கு அப்பரம் ரகுவோட பொண்டாட்டி மட்டும் தானே இருப்பா. நான் எங்கே போவேன்’

‘யப்பா… இதானே நார்மல் லைஃப்..’

‘எது.. ஒரு ஆணோட நிழல்லையே பெண் எப்பொழுதும் வாழறதா?’

‘ஹலோ. அது உனக்கு பிடிக்கலனா அப்படி நடந்துக்காத. அவனுக்காக எதையும் மாத்திக்காத. அவன் அத எதிர்பார்க்கவும் மாட்டான்’ என்றான் அவன் சற்று காட்டமாக.

‘கண்டிப்பா அவன் எதிர்பார்க்கமாட்டான். இந்த நான் என்னும் அகம்பாவம் போயி, அவன் மேல வச்சிருக்குற காதல் கொப்பளிச்சு நின்னுடும் தெரியுமா. என் செய்கை என் கட்டுப்பாட்டுல இருக்காது. ரகு.. ரகு..’ என்று சொல்லிக்கொண்டே அவள் கண்ணை மூடிக்கொண்டாள். ‘ரகு…’ என்றாள் இன்னும் இழுத்துக்கொண்டே. சட்டென கண்ணை திறந்தாள். ‘இதுக்கு தான். இதுக்கு தான் அவன் வேணாம்னு சொல்லுறேன். நான் என்னை இழந்திருவேன்டா. அவன ஒரு பைத்தியம் போல காதலிக்க ஆரம்பிச்சிருவேன்டா. அவன் வேணாமே…’ என்றாள் அவள் கெஞ்சலாக.

‘ஆன்… அத உன் பின்னாடி டேபிள்ல இருந்து கேட்டுகிட்டு இருக்கானே அந்த நாதாரிகிட்டயே சொல்லு.’ என்று சொல்லிவிட்டு அவன் டேபிளை விட்டு எழுந்தான். ‘அப்படியே உருகுறாயா… நமக்கு எவளும் சிக்க மாட்றா.. ஏ ஷாமி… தோ வர்றேன்..’ என்று சொல்லிவிட்டு அவன் நகர்ந்துக்கொண்டான். அவள் அவளுக்கு பின்னாள் திரும்பி பார்த்தாள், அங்கு அவளையே பார்த்துக்கொண்டு ரகு உட்கார்ந்திருந்தான்.

அவள் சங்கூச்சமாய் உணர்ந்தாள். நெளிந்தாள்.

‘இல்ல… இல்ல.. நீ சாதாரணமாவே இரு’ என்றான் அவன். அவள் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். அவன் எழுந்து வந்து அவள் முன்னால் உட்கார்ந்துக்கொண்டான்.

‘இதான் உன் பிரச்சனையா? சொல்லியிருக்கலாமே’

’ஏன் ஒரு பெண்ணுக்கு எப்பொழுதுமே ஒரு ஆண் துணை தேவைனு காட்டவா? நான் அப்படியில்ல..’ என்றாள் அவள் பொட்டில் அடித்தாற் போல.

‘நான் அப்படியில்லனு சொல்லுறதுக்கு மொதல்ல ஒருத்தர் அப்படி இல்லாம இருக்கணும். உனக்கு எப்போதோ என் மேல காதல் வந்திருச்சு. சொல்லாம இருக்குறனா. நீ உன்னோட அடையாளத்த தக்க வச்சிக்கல. தக்க வச்சிட்ட போல நடிக்கிற. அப்படி தானே.’ என்றான் அவன். அவள் பதிலெதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றாள்.

‘சொல்லுடி… அப்படிதானே..’ என்றான்.

‘இங்க பாரு ரகு. என்னால நீ கேக்குற கேள்விக்கு எல்லாத்துக்கும் பதில் சொல்ல முடியும். ஆனா உன்கிட்ட இல்ல. என்னால உன்ன மீறி எதுவும் பேசமுடியாது. அத நினைக்கிறப்போ எனக்கே அசிங்கமா இருக்கு. நான் ஒரு ஆணுக்கு அடிமையா இருக்கேனு’

‘மெண்டலா நீ? காதலுக்கும் அடிமைக்கும் வித்தியாசம் இல்ல. ஏன்டி பொண்ணுங்க எல்லாம் உரிமை வேணும், சுதந்திரம் வேணும்னு கேட்க ஆரம்பிச்சு ஆரம்பிச்சு எது உரிமை, எது சுதந்திரம்னு தெரியாமலே இருந்திடுவீங்களா? இந்த கதை சொல்லுவாங்களே சண்டை இருக்கு காரணம் மறந்துபோச்சுனு கதை. அதுப்போல இருக்கு..’ என்று சொல்லிவிட்டு அவன் பல்லை கடித்துக்கொண்டான்.

‘தெரியல ரகு. இருக்கலாம். இப்ப நீ பொத்தாம் பொதுவாய் பொண்ணுங்கள இழிவா பேசுற பாத்தியா? அத பாத்தும் நான் சும்மா இருக்கேன்ல. உன் காதல் என்ன அடிமையாக்கிடுச்சு பாத்தியா..’ என்றாள் அவள் சற்று பாவமாக.

‘ஆமா டி. அடிமையாக்கிடுச்சு தான். பைல்ஸ் ஆபரேஷன் பண்ணுறப்போ கால தூக்கமாட்டேன், குப்புற படுக்கமாட்டேனு சொன்னா வாயிலயா பைல்ஸ் ஆபரேஷன் பண்ண முடியும்? அது போல தான். வாழ்க்கையில ஒரு இடத்துல இறங்கியும் இருக்க தெரியணும், மீறியும் இருக்க தெரியணும். நாலடி வாசல்ல நுழையுறப்போ கீழ குனிஞ்சு தான் ஆகணும். வெறப்பா நிக்க முடியாது’

‘ஆளையும் எடுத்துக்காட்டையும் பாரேன்..’ என்றாள் அவள் செல்லமான கோபத்தோடு. அவன் அப்படி வேடிக்கையாய் பேசுவதையும் அவள் ரசித்தாள். பின்பு மாற்று பக்கம் திரும்பிக்கொண்டு, ‘எனக்கு பிடிக்கல ரகு’ என்றாள்.

‘என்ன பிடிக்கல…?’

அவள் ஒரு பெருமூச்சு விட்டாள். அவன் கண்களை பார்த்தாள், ‘எனக்கு உன்ன பாக்குறப்போலாம் உன்கிட்ட என் காதல சொல்லி கதறணும்னு தோணும். உன் கைய புடிச்சுட்டு தூரமா நடக்க தோணும். உன் தோளுல சாஞ்சுட்டு, நீ எனக்கு மட்டும் சொந்தம்னு பெருமைபட்டுக்க தோணும். உன்ன கல்யாணம் பண்ணிகிட்டு உன் மடியிலயே கிடந்திரலாம்னு தோணும். உனக்கு வசைவசையா நிறைய பிள்ளைங்க பெத்து போடணும்னு தோணும். உனக்கு அது பிடிக்குமா இது பிடிக்குமானு வித விதமா சமச்சு போட தோணும். நீ ஆபிஸ்க்கு கிளம்புறப்போ ஒரு குழந்தைய கிளப்புற போல கிளப்பிவிட தோணும். நீ எப்ப வீட்டுக்கு வருவ வருவனு காத்திருக்க தோணும். உன் முடிய கோதிவிட்டுகிட்டே உன தூங்க வைக்க தோணும். வருசம் நிறைய, காலம் முழுக்க உன்ன காதலிச்சுகிட்டே இருக்கணும்னு மனசு தவிக்கும்டா’ அவள் சொல்லிமுடிக்கும்பொழுது அவன் கண்கள் கண்ணீரை பெருக்கிக்கொண்டிருந்தது. அத்தனை அழகாக காதலை அவளை தவிற வேறு யாரும் சொல்லிவிட முடியாது என்று அவன் எண்ணினான். அழுகும் கண்களூடே சிரித்தான் அவன். அந்த பக்கம் இந்த பக்கம் திரும்பி இன்னும் விட்டு விட்டு சிரித்தான். ஒரு பெருமூச்சு விட்டான். அவள் பக்கம் திரும்பினான். அவள் அவனின் கண்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளிடம் வேறு மாற்றம் இல்லை.

‘ஆனா…’ அவள் கண்கள் அலைபாய்ந்தது இம்முறை. ‘ஆனா.. நீ… நான்.. என்னை இழந்திடுவேன். ஒரு சராசரி பெண்ணாகிடுவேன். பெண்ணுனா இதுக்குதான்னு ஒரு எடுத்துக்காட்டுக்கு நானும் ஒரு பொருளா மாறிடுவேன். பெண் சுதந்திரம், வேட்கை, விடுதலைனு பேசுனவ இன்னைக்கு அப்படி தானே இருக்கானு ஊர் பேசும். ஒரு தப்பான எடுத்துக்காட்டா இந்த உலகத்துக்கு நான் மாறிடுவேன். எனக்கு வேணா. அப்படி ஒரு பேர் எனக்கு வேணா. அப்படிபட்ட உலகத்த நான் உருவாக்க விரும்பல. எனக்கு வேணா. எனக்கு நீ வேணா. எனக்கு நீ சுத்தமா வேணா. நான் இப்பவே போயி வேலைய விடப்போறேன். என்னால உன்ன பாக்க முடியாது. பாக்கவே முடியாது…’ என்று அவள் சற்று அதிகமாக கத்தவே ஆரம்பித்தாள். அவன் அவள் கைகளை பிடித்தான். அவள் உடம்புகளில் மின்சாரம் பாய்வதை போல உணர்ந்தாள். அமைதியானாள்.

அவள் கைகளை பிடித்தவன் இன்னும் அழுத்தம் கொடுத்தான். கைவிரல்களை தடவிக்கொடுத்தான். அவள் அவனது கைகளையே உற்று பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘இதுவும் ஒரு வகையில ஆண் ஆதிக்கம் தானே’ என்றாள் ஒரு கிண்டல் சிரிப்போடு.

‘எது?’ என்றான் அவன்.

‘உன் கைகுள்ள என் கை. இறுக்கமா’ என்றாள்.

‘ஹா. ரசனை ரசனை… ஆனா நீ ஒண்ணு புரிஞ்சுக்கலடி. ஆதிக்கம் வேற, அடிப்பணிதல் வேற. உன் கை என் கை அணைப்பை தேடுச்சு. இது அடிபணிதல். என் கைகுள்ள தான் உன் கை இருக்கணும்னு சொல்லுறது தான் ஆதிக்கம். ஒரு பாதையை கடக்க நூறு வழி இருக்கும். அதுல நாலு வழியில போயி அடிப்பட்டவன், அந்த பயத்திலே மீதி தொண்ணூத்தி ஆறு வழியையும் கடக்க மாட்டானாம். இருக்குற இடத்துல சூதானமா இருந்துட்டு போயிடுவோம்னு. அப்படி தான் பெண்களும் இருந்தாங்க. அதுல சில பெண்கள் விதிவிலக்கு. உன்ன போல. உணர்ச்சி இல்லாத, உயிர் இல்லாத மீதி தொண்ணூற்றி ஆறு வழிக்கிட்ட ”ஏய் நான் வரமாட்டேன். நீ என்ன கொன்னுடுவ. உன்ன மிதிச்சு தூக்கி எரியப்போறேன் பாரு. அந்த வழி அப்படிப்பட்டது, இந்த வழி இப்படிப்பட்டதுனு” இருந்த இடத்துல இருந்தே கத்திகிட்டு இருக்கீங்க. வழிய கடந்து பாருங்க. வர்ற விசயங்கள எதிர்த்து பாருங்க. உங்க பின்னாடி வர்ற சமுதாயத்துக்கு அந்த வழிய கடக்குற வித்தைய சொல்லிக்கொடுங்க. ஒன்னு ரெண்டு நாளுல மாறுற விசயம் இல்ல இது.. முட்டாள் தனமா நடந்துக்காத…’ என்றான் அவன்.

அவள் ஒன்றும் புரியாமல் விழித்தாள். ‘எனக்கு என்ன சொல்ல வர்ற.. புரியல’ என்றாள்.

‘அதாவது. என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா இப்படி நடக்கும் அப்படி நடக்கும்னு கற்பனை பண்ணாத. அப்படி இருந்தா அங்க உன்னோட அடையாளத்தை எப்படி நிலைநாட்டனும்னு பாரு. அத இந்த உலகத்துக்கு சொல்லு. உன்னோட அடையாளம் என்னைக்கும் அழியாது. என்னால. ரகுவோட பொண்டாட்டியும் ஒரு பெண் தானே. ரகுவோட பொண்டாட்டியாவே நீ இந்த உலகத்துக்கு வழி காட்டலாம். நீ தோத்தேனு யாரும் சொல்லமாட்டாங்க. நீ அடிமையாகிட்டனு யாரும் சொல்ல மாட்டாங்க…’ என்றான் அவள் தலையில் கைவைத்து அழுத்தம் கொடுத்து. அவள் சிறிது நேரம் யோசித்தாள். அவள் மனம் அங்குமிங்கும் அலைபாய்ந்தது. அவன் அவளுக்கான இடம் கொடுத்துவிட்டு எழுந்து சென்றான்.

வருடங்கள் கடந்தோடின…

அன்று ரகு அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தான். அவள் சமையலறையில் வேக வேகமாக வேலை செய்துக்கொண்டிருந்தாள்.

‘அடியே.. லேட் ஆகுது டி.. வர்றியா இல்லையா..’ என்று அவன் சத்தம் அதிகமாக கொடுத்தான்.

அவள் உள்ளிருந்து கையில் கரண்டியோடு வெளியில் வந்தாள். ‘யோவ். இன்னொரு முறை சத்தம் கொடுத்த கொன்னுருவன். சும்மா ஆபிஸ்ல வேலை பாத்துட்டு இருந்தவள கண்டத பேசி கொழப்பி கல்யாணம் பண்ணிட்டு வந்து மிரட்டுற. போ.. போய் உட்காரு. வருவேன். கத்த கூடாது. கொன்னுருவேன்’ என்று கையை உயர்த்தி அவள் சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். அங்கிருந்து ஒரு குட்டி சிறுமி ஓடிச்சென்று அவன் மடியில் ஏறிக்கொண்டது.

‘அப்பா.. அப்பா.. அப்படி அம்மாகிட்ட நீங்க என்ன தான் சொன்னீங்க…’ என்றது. அவன் ’ஹா.. ஹா.. ஹா..’ என்று உயரபார்த்து வாய்விட்டு சிரித்துவிட்டு ‘உண்மைய சொன்னேன் மா…’ என்றான். சட்டென அடுப்பறையிலிருந்து ஒரு கரண்டி அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் வந்து விழுந்தது.


-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி