ஒத்துழையாமை..

பெரிய புள்ள இன்னைக்கு ஆட்டம் வரலயா..’ கேட்டார் ரங்கநாதர்.

‘அதுக்கு தான் கிளம்பிட்டு இருக்கேன்…’ சொல்லிக்கொண்டே வீட்டை விட்டு வெளியில் வந்தார் சுந்தர சுவாமிகள். சுந்தர சுவாமிகளின் மகன் அவரை பிடித்துத்தொங்கிக்கொண்டே வந்தான்.

‘அப்பா.. அப்பா… நானும் வருகிறேன்பா.. என்னையும் அழைத்து செல்லுங்கள் பா..’ சொல்லிக்கொண்டே வந்தான்.

ரங்கநாதர் அவனை பார்த்து. ‘கண்ணா.. .சின்ன பசங்கலாம் வரக்கூடாது. பயம் வரும். இரவு நேரத்தில் கெட்ட கனவுகள் வரும். பெண்கள் கூட கிடையாது. அம்மாவும் வீட்டில் தானே இருக்கிறார்கள். அமைதியாக இருக்கவேண்டும்..’ என்றார் அமைதியாக. சுந்தர சுவாமிகள் மகன் தலையை தொங்கலில் இட்டு ஓரமாக நின்றான் அமைதியாக.

’நீங்கள் செல்லுங்கள் ரங்கா… இவனை இப்படி விட்டு வர எனக்கு மனமில்லை..’ சுந்தர சுவாமிகள் வருத்ததுடன் சொன்னார். ரங்கா பாவமாக இருவரையும் பார்த்தார். மகன் சட்டென சிரித்தான்.

‘நீங்கள் செல்லுங்கள் அப்பா. எனக்கு வருத்தமில்லை. ஆனால் நீங்கள் வந்த பிறகு எனக்கு என்ன நடந்தது என்று விவரிக்க வேண்டும்’ அன்பு கட்டளை இட்டான். சுந்தர சுவாமிகள் ஒருமுறை அவனை பார்த்தார். பிறகு அவன் தலையை கோதி கொடுத்துவிட்டு வேகமாக ரங்கநாதரோடு கோவிலுக்கு ஓடினார்.

அவர்கள் அங்கு செல்லுமுன்னே ஊரின் மொத்த ஆண் கூட்டமும் அங்கு இருந்தது. பெரிய புள்ள என்று அழைப்பக்கபடும் அப்பர் பிள்ளை மூலஸ்தானத்தில் சிவனை தரிசிப்பதாக சொல்லப்பட்டது. ஊரே அவருக்காக காத்திருந்தது. முழங்கு ஒலியின் சத்தம் கோவிலின் உள்ளிருந்து கேட்க ஆரம்பித்தது. வெளியில் கூடியிருந்த கூட்டமெல்லாம்.

‘சிவாய நம.. சிவாய நம…’ என்று உரக்க கத்தியது. அதை தொடர்ந்து பறையின் சத்தம் இன்னும் அதிகமாக கேட்டது. மாறி மாறி பறையும், முழங்கும் ஒலிக்க அந்த கோவிலின் பழமை வாய்ந்த பாராங்கற்களும் ஆடிக்கொண்டது. அதிர்ந்தது. வெளியில் நின்றிருந்த அத்தனை பேரின் உடற் ரோமங்கள் நின்றுக்கொண்டது. சிலிர்த்தது. ஊரே கோவிலை பார்த்து கை கூப்பி நின்றது. வீட்டிலே இருக்கும் பெண்களும் பிள்ளைகளுக்கும் அந்த சத்தம் எட்டியது. எல்லோரும் கோவில் இருக்கும் திசையை பார்த்து கைகூப்பி கும்பிட்டுக்கொண்டார்கள்.

‘சிவாய நம… சிவாய நம…’ ஊரே உறக்க கத்தியது. நேரம் ஆக ஆக பறை மற்றும் முழங்கின் சத்தம் இன்னும் அதிகமாக கேட்டது. அந்த சத்தத்திற்கு ஏற்றவாறு ஆடிக்கொண்டே கோவிலிலிருந்து அப்பர் பிள்ளை வெளியில் வந்தார். சுற்றியிருந்த கூட்டமெல்லாம் ‘பெரிய புள்ள.. பெரிய புள்ள…’ எட்டி எட்டி பார்த்துக்கொண்டனர்.

கோவிலின் முன்னர் காலி இடத்திற்கு வந்தார். இன்னும் பறையும் முழங்கும் நிற்கவில்லை. கண்ணை மூடிக்கொண்டார். அவரின் கால்கள் மேலும் கீழுமாக மெதுவாக ஆடியது. பறை நின்றது. முழங்கு நீட்டி முழங்கப்பட்டது. பறை மீண்டும் அடித்தது. டம்.. கண்ணை திறந்தார்.
டம் டம்.. கால்களை விரித்தார். மீண்டும் ஒரு முழங்கு.

டம் டம்… டம் டம் டம் டம்.. டம் டம்..

கைகளை விரித்து முன்னாள் நடந்தார். அடுத்த சில மணிகளில் பறையும் முழங்கும் மாறி மாறி அடிக்க வளைத்து நெளித்து ஒரு காட்டு வாசி நடனம் ஆடினார் அப்பர் பிள்ளை. சுற்றிஇருந்தவர் தூரமாக இருந்தவர் என ஒரு சிலர் அவர்கள் இருந்த இடத்திலே ஆடத்தொடங்கினர்.

‘சிவாய நம.. சிவாய நம…’ ஊரே கத்தியது. ஆட்டம் உஷ்ணத்தை எட்டியது. அப்பரின் கால்கள் தரையில் தங்கவில்லை. உடல் முழுக்க விபூதியை எடுத்து பூசிக்கொண்டார். கண்களில் அப்படி ஒரு ருத்ரம். பறையின் உச்சி வேகத்தில் பூமியை விட்டு மேலேறி, கண்கள் விரிய அவர் பூமிக்கு அடைத்த ருத்ர கோலத்தை பார்த்தவர்கள் மிரண்டு போனார்கள். அடுத்த அரை மணி நேரம் விடாது ருத்ர ஆட்டம். கூட்டத்தில் சிலர் மயங்கி விழுந்தார்கள்.

சில நேரத்தில் எல்லோரும்..

‘ஈஸ்வரா.. பரமேஸ்வரா..’ என்று கத்தி கூப்பாடு போட இடியும் மின்னலும் வந்து மழை பொத்துக்கொண்டு கொட்டியது. அந்த இடம் சேரானது. இன்னும் அப்பர் விடவில்லை. சேற்றில் முகம் நனைய, உடல் முழுக்க பூசிக்கொண்டு. ஒற்றை காலை கழுத்தில் போட்டுக்கொண்டு ஒற்றை காலை பூமியில் தாங்கிக்கொண்டு வேகமாக ஆடினார். அவரின் கால்கள் பீறிட்டு ரத்தம் வெளியானது.

‘பரமேஸ்ரா… என் சிவனே…’ ஊரார் முழுக்க கத்தி கூப்பாடு போட்டனர். ஊரார் கண்கள் குலமாயின. அப்பரின் ஆட்டத்தின் வேகம் குறைந்தது. அடுத்த சில நிமிடத்தில் அவர் ஆட்டம் நிறுத்தினார். வேகமாக சென்று கோவில் வாசல் படிக்கட்டில் அமர்ந்தார். மூச்சு மேலும் கீழும் வாங்கியது அவருக்கு. எல்லோரும் ‘சிவாய நம.. சிவாய நம..’ என்று கத்தினர். அப்பர் கோபம் அடங்காமல் அத்தனை பேரையும் ஒரு முறை பார்த்தார். அவரின் கண்களின் வீரியத்தை யாராலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பட்டென சாய்ந்தார்.

இந்த காட்சியை தூரத்திலிருந்து வின்சன்ட் மற்றும் அவனின் மற்ற ஆட்களும் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆங்கிலேய ஆட்சிக்கு கீழ் இந்தியா இருந்த சமயத்தில் அவ்வூரை ஆண்ட ஆங்கிலேயன்.

’யார் அந்த கோமாளி..’ வின்சன்ட் கேட்டான்.

‘அவர் பெயர் அப்பர். ஊரின் மீது இருக்கும் சிவனின் கோபம் நீங்க அவர் இப்படி ருத்ர தாண்டவம் ஆடுவது வழக்கம்..’ அவன் பக்கத்திலிருந்த அந்த ஊர் காரன் பேசினான்.

‘என்ன ஒரு முட்டாள் தனம்…’

‘சொல்லாதீங்க எசமான். அவர் ஆடியதால் தான் மழையே பெய்தது’

‘ஹே ஸ்டூபிட். மழை க்ளவுட் கூடினா பெய்ய போகுது… இதுக்கு ஏன் அந்த ஆளு டான்ஸ் ஆடணும்.. அவன நாளைக்கு ஆபிஸ் வர சொல்லு..’

‘எசமான்.. அவரு தான் அன்னக்கிளியோட அப்பாருங்க..’ பவ்வியமாக சொன்னான். கோபமான வின்சன்ட் முகம் சட்டென மாறியது. ‘ஓ…’ என்று சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே அவரை பார்த்தான்.

‘அப்ப நாம அங்க போறது தான் சரி. இல்லயா…’ என்றான் கண்ணில் கலவரத்தோடு. 

அடுத்த நாள் வின்சன்ட் மற்றும் இதர ஆட்கள் அப்பரின் வீட்டிற்கு சென்றனர். அவனை தெருவின் திண்ணையில் உட்கார வைத்து அப்பர் பேசினார். உள்ளேயிருந்து அன்னக்கிளியை தண்ணீர் எடுத்து வர சொன்னார். அன்னக்கிளி தண்ணீர் கொடுத்தாள். அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் வின்சன்ட். அதை கவனித்த அப்பர் அவளை உள்ளே போக சொன்னார். வின்சன்ட் ஒரு பெருமூச்சு வாங்கிவிட்டு அப்பரை பார்த்தான்.

‘யு… அப்பர்.. நேத்து உன் டான்ஸ் பார்த்தேன். இன்ட்ரஸ்டிங். எங்க கத்துகிட்ட..’ வின்சன்ட் கேட்டான்.

‘அது கத்துகறது இல்ல. அடிநாதத்திலிருந்து உஷ்ணம் கிளம்பி. என் ஈசனின் இசையை கேட்டு எனக்குள்ள வந்த உணர்ச்சி பெருக்கோட அடையாளம்’ திமுறாக சொன்னார் அப்பர்.

‘ஓகே ஓகே.. குட்.. பட் நைஸ் டான்ஸ்..’

‘நல்லது…’
‘அப்பரம் நான் வந்த விசயம் மறந்துட்டேன். உன்கிட்ட டான்ஸ் மட்டும் நல்லா இல்ல.. வேற ஒண்ணும். ஐ மீன்… உன் பொண்ணும் நல்லாயிருக்கு…’ என்றான். அப்பரின் கைகள் முறுக்கியது. அவன் கவனித்தான். அமைதியாக அந்த கைகளையே பார்த்துக்கொண்டு,

‘அதான்… உன் பொண்ண எனக்கு கட்டி கொடுத்துடு.. கருப்பா இருந்தாலும் கலையான முகம்’ சொல்லிவிட்டு அப்பரை பார்த்தான். சட்டென எழுந்து கூரையில் இருந்த அரிவாளை எடுத்து அவன் கழுத்தில் வைத்தார் அப்பர். வின்சன்ட்டோடு வந்திருந்தவர்கள் அப்பரிடம் துப்பாக்கியை நீட்டினர். அப்பரம் விழித்தார். அவர் கையில் இருக்கும் கத்தியை பிடுங்கினர்.

‘ஏ அப்பரு… துரைக்கு கட்டிக்கொடுக்க கசக்குதா? உன் பொண்ணுக்கு வேற எவன் இவர விட கிடைப்பான்’ வின்சன்ட்டோடு வந்தவன் அப்பரிடம் சொன்னான். வின்சன்ட் ஒரு முறை சிரித்துவிட்டு அவனை அமைதிபடுத்திவிட்டு.

‘மிஸ்டர் அப்பர். உங்களுக்கு மாப்பிள்ளை நான் தான். இன்னையிலிருந்து இரண்டாம் நாள் அது என்ன.. குட் டேனு சொல்வாங்களே.. அது.. ஸோ… உங்க பக்கமிருந்து டெகரேட் பண்ணுவீங்கல.. அதெல்லாம் பண்ணிடுங்க.. நான் வந்து கூட்டிட்டு போயிடுறேன்’ என்று சொல்லிவிட்டு அவரின் காதருகே சென்று. ‘உங்க பொண்ணு.. உங்க சைடுல பண்ணுவீங்களே புடவை, நகை அலங்காரம்.. அப்படி பண்ணுனா செமையா இருப்பா..’ சொல்லிவிட்டு கேவலமாக ஒரு சிரிப்பு சிரித்தான். தனது இயலாமையை நினைத்து அப்பர் கையை இன்னும் இறுக்கமாக முறுக்கினார். அமைதியாக வீட்டினுள் சென்றார். அங்கே ஓரமாக உட்கார்ந்து அன்னக்கிளி அழுதுக்கொண்டிருந்தாள். அப்பரை பார்த்தவுடன் எழுந்து கண்ணை துடைத்துக்கொண்டு நின்றுக்கொண்டாள்.

‘அம்மா.. அந்த வெள்ளக்கார நாயி…’ சொல்லிவிட்டு இயலாமையில் அழுதார். தீ போல இவ்விசயம் ஊரார்க்கு பரவியது. சுற்றுமுற்றும் இருந்தவர்கள் எல்லாம் வந்து துக்கம் விசாரித்துவிட்டு சென்றனர். ஊரில் இருக்கும் சில வயதான பெண்மணிகள் வந்து அன்னக்கிளியை பிடித்து ஒப்பாரி வைத்தனர். ஊர் ஆண்கள் சிலர் ஆலோசனை என்னும் பெயரில் வெள்ளைக்காரனை பகைத்துக்கொள்ளவேண்டாம் என்று அறிவுரை செலுத்தினர்.

இரண்டு நாட்கள் கடந்தது. வின்சன்ட் சொன்ன நாள் நாளை. இரவு அப்பரும், அன்னக்கிளியும் அமைதியாக தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்தனர். அப்பர் ஏதோ யோசித்துக்கொண்டிருந்தார். வேகமாக எழுந்தார். சுவாமி அறைக்கு சென்று விபூதியை எடுத்து நெற்றி நிறைய பட்டை அடித்தார். இரண்டு மூட்டையில் துணிகளை எடுத்து முடிந்துக்கொண்டார். அன்னக்கிளிக்கும் விபூதியை பூசிவிட்டார். அவர் வீட்டின் வெளியே நின்றிருந்த நாயை பிடித்து வந்தார்.

நாயின் முகத்துக்கு சுன்னம் அடித்தார். கருமை இட்டார். தலையில் பூ வைத்தார். கருமணியும், வெள்ளை மணியும் அணிவித்தார். வாலில் ஒரு பூ வைத்தார். வீட்டுக்கு வெளியில் அழைத்து வந்தார். திண்ணையின் தூணில் கட்டிவைத்தார். ஓலை ஒன்றெடுத்தார்.

‘ஆங்கிலேய நாயிக்கு.. என் இந்திய நாயே அதிகம்..’ என்று எழுதி நாயின் கழுத்தில் மாட்டிவிட்டார். அவர் அவரின் பெண்ணை அழைத்துக்கொண்டு அந்த இரவே அந்த ஊரை விட்டு சென்றுவிட்டார். இரவு முழுதும் நடந்து மணிமுத்தாறு, வெள்ளாறு கடந்து. இரு கருவேலக்காட்டை கடந்து. ஒரு ஒதுங்கிய கிராம்பகுத்திக்குள் விடியும் பொழுது நுழைந்தார்.

காலையில் வின்சன்ட் அலங்காரமெல்லாம் செய்துக்கொண்டு அவரின் வீட்டுக்கு வந்தார். தெருவில் நாயை பார்த்து கையை முறுக்கினார். சுற்றியிருந்த ஊர் மக்களெல்லாம் வின்சன்டை பார்த்து சிரித்தனர். அவமானத்தில் தலை தொங்கி போனான். அந்த நாயின் கழுத்தில் தொங்கிய ஓலையை எடுத்து பார்த்தான்.

‘அப்பருக்கு ரொம்ப தைரியம் டோய்..’
.
.
‘ஓய் வின்சன்ட்.. ஓடு ஓடு.. உன் பொண்டாட்டிய இழுத்துட்டு போ..’


ஊர் சேர்ந்து கேலி செய்தது. வின்சன்ட் கண்கள் கலங்கியது. கோபம் தலைக்கேறியது. அவன் ஆட்களை அனுப்பி அப்பரை தேடச்சொன்னான். பயனில்லை. அதன் பிறகு அந்த ஊரில் யாரும் வின்சன்ட்டை மதிக்கவில்லை. ’ஒத்துழையாமை’யை முதலில் அறிமுகம் செய்த அப்பர் புத்தூர் என்னும் கிராமத்தில் விவசாய பூமியில் காலை பதித்தார்.

-தம்பி கூர்மதியன் 

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி