சா'தீ' வெறி

’அவன் சாதி என்ன நம்ம சாதி என்ன… அது….’ என்று ஒரு முறை இழுத்துவிட்டு யோசித்துக்கொண்டே  ’அதெல்லாம் சரி வராது. அத்துவுடுங்க…’ என்றார் சின்னசாமி.

‘ஐயா… சின்ன பசங்க…’ என்று இழுத்தார் பெருவுடத்தான்.

‘அதான்.. அதான் நானும் சொல்லுறேன். சின்ன பசங்கல.. எது சரி எது தப்புனு தெரியாது. நாம தானே சொல்லணும்’

‘ஐயா கரு வேற உருவாகிடுச்சு..’ என்று பெருவுடத்தான் சொன்னதும் சின்னசாமி அதிர்ந்தார். முதுகை சொரிந்தார். யோசித்தார். தலையை ஆட்டினார்.

‘ஒண்ணுமில்ல… அழிச்சிரலாம். இது… அந்த அண்ட சாதி பயக ரத்தமும் நம்ம ரத்தமும் ஒண்ணு சேந்தா எப்படி இருக்கும். சொல்லு பாக்குவோம்.. இல்ல அந்த புள்ள நல்லா தான் இருக்குமா என்ன… இல்ல பெருவுட.. அழிச்சிடு.. அது தான் சரி…’

‘ஐயா….’ என்று இழுத்தார்.

‘அழிக்கிற. அப்பரம் அத்துவுடுற… இல்ல.. மொத்த குடும்பத்தையும் நான் அழிச்சுருவேன். என் சாதிய அசிங்கபடுத்துற எந்த நாயும் எனக்கு ஒண்ணு தான். அது என் சாதியிலயே கெடந்தாலும்’ கோபமாக சொல்லிவிட்டு சின்னசாமி விருட் விருட்டென வீட்டுனுள் நுழைந்து போனார்.

அவரின் மகன் தோட்டத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்தான். அவன் ஆசைப்பட்டான் என்று புல்லட் வண்டி வாங்கி கொடுத்திருந்தார் அவர். அவனுக்கு திருமணம் ஆகி ஒரு மூன்று வயது பெண் குழந்தையும் இருக்கிறது. அவன் வெளியே செல்லும் முன் அவரிடம் வந்து சொல்ல வந்தான்.

‘மோர் குடிச்சியா?’ என்றார்.

‘இல்லப்பா…’

‘ஏன் இங்கயே வயித்த நெறப்பிட்டு போனு எத்தனை முறை சொல்லியிருக்கேன். கண்ட கழிசடைகிட்ட வாங்கி திண்ணவா? என்ன பத்தி தெரியும்ல..’

‘தெரியும்பா.. வாங்கி குடிச்சுகிடுறேன்..’ சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

அவன் சிறுவயதில் இருக்கும்பொழுது வயக்காட்டில் இருந்த அஞ்சல மகனிடம் கம்பங்கூழை வாங்கி குடித்துவிட்டான் அவன். அதை தெரிந்துக்கொண்ட சின்னசாமி அவனுக்கு பேதி மருந்தை கொடுத்து அன்று முழுவதும் அவன் குடல் வெளியில் வரும் வரை எடுத்துவிட்டு தான் உட்கார்ந்தார்.

ஒருமுறை கீழ்சாதி என்று சொல்லப்படும் கூட்டத்திலிருந்து தைரியமான இளைஞன் முன்னே வந்து.

‘ஏன் யா… நீ உட்கார்ந்திருக்குற வீடு. நீ திங்கிற சோறு. நடக்குற பாதை. போகுற வண்டினு எல்லாத்திலும் எங்க உழைப்பு இருக்குயா. நாங்க செஞ்சோம்னு இது எதுவுமே இல்லாம இருக்கியா நீ’ என்றான்.

‘ஏன்டா கீழ்சாதி நாயே. முன்னாடி வந்து நின்னு பேசுற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா..’ என்று சொல்லி எட்டி மிதித்தார். பிறகு ஊராரை பார்த்து,

‘இந்த நாயிக்கு வந்த சந்தேகம் வேற எந்த நாயிக்கு வேணா இருக்கலாம். அதுக்கு பதில இப்பவே சொல்லிடுறேன். நீ செய்யிறது எல்லாமே தீட்டு பட்டு போயிருக்கும். அந்த தீட்ட கழிக்க தான் வீட்ட கட்டுனா பூஜை பண்ணுறோம், வண்டி வாங்குனா பூஜை பண்ணுறோம். ரோட்டுல நடந்துட்டு உள்ள நுழையிற முன்ன கால கழுவுறோம். சோத்த வடிக்கிற முன்ன ஆயிரம்முறை கழுவுறோம். கருமத்தோட இருந்துட்டோம். வாழ்ந்து தானே ஆகணும்’ சொல்லிவிட்டு வேகமாக உள்ளே நுழைந்துக்கொண்டார்.

யாரிடமும் அக்கறையாக அல்லது அரவணைப்பாக பேசாத சின்னசாமியை அடக்கி ஆளக்கூடிய ஒரே நபர் தமிழ்செல்வி. அவரின் பேத்தி.

‘ஏ தாத்தா.. என்ன சத்தமா இருக்கு…’

‘ஏ தாத்தா.. சாப்பிடமாட்டியா?’

‘ஏ தாத்தா… ஷேவ் பண்ணுயா… குத்துது..’

எப்போதும் மிரட்டலும் சலிப்புமாய் இருக்கும் குட்டி தேவதை. அவரின் மனைவியே மீண்டும் பிறந்துவிட்டதாய் அவர் நினைத்துக்கொள்வார். தமிழ்செல்வியை அவர் மட்டும் ‘செண்பகம்… செண்பகம்..’ என்றே அழைப்பார்.

அன்று தமிழ்செல்வி தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள். அவளின் தாத்தா வாங்கி கொடுத்திருந்த பெரிய பந்தை அவள் தூக்கி போட்டு போட்டு விளையாடிக்கொண்டிருந்தாள். அது வேலிக்கு அந்த பக்கம், ஒரு பள்ளத்தை தாண்டி விழுந்தது. அவள் வேலியில் புகுந்து, பள்ளத்தை தாண்டி எக்கி எடுக்க பார்த்தாள். அது எட்டவில்லை. இன்னும் எக்கி எக்கி அவள் குதிக்க, சேற்றில் கால் வழுக்கி ‘தொப்’பென விழுந்தாள். பக்கத்தில் இருந்த கூர் கல்லில் அவள் மண்டை அடிப்பட்டது. ரத்தம் வழிய தொடங்கியது. அதை யாரும் கவனிக்கவில்லை. பத்து நிமிடம் கழித்து அவளின் அம்மா தோட்டத்திற்கு சென்று பார்க்கையில் அவள் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ந்தாள்.

‘ஓஓ..’வென கூச்சலிட்டாள். கத்தி கூப்பாடு போட்டாள். குழந்தையை தூக்கி வண்டியில் வைத்துக்கொண்டு டவுன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதிகமான ரத்த சேதாரம் ‘O+’ ரத்தம் உடனே தேவைபடுகிறது என்று சொன்னார்கள்.

குறுக்கும் மறுக்குமாக சின்னசாமி நடந்துக்கொண்டிருந்தார். அவரின் மகன் ரத்தத்திற்காக ஓடினான். அவர் பின்னாலே ஓடினார். அவனின் கையை பிடித்து நிறுத்தினார்.

‘ஏ… செண்பகம்.. முக்கியம்..’ என்றார் கண்ணை கலங்கிக்கொண்டு வார்த்தை வராமல்.

‘சரிப்பா.. கவலை படாதீங்க… காப்பாதிரலாம் பா..’ என்று சொல்லிவிட்டு அவன் ஓட முற்பட்டான். மீண்டும் அவன் கையை பிடித்தார்.

‘நம்ம சாதி…’ என்றார். அவன் அதிர்ந்தான். ‘அப்பா…’ என்றான். கையை உயர்த்தினார். அமைதியாக இருக்க சொன்னார்.

‘நம்ம சாதி தான்…’ அழுத்தமாக சொன்னார். அவன் கண்கள் கலங்கினான்.

‘அப்பா… தமிழு…’ என்று அவன் சொல்ல அவர் திரும்பி அவள் படுத்திருந்த அறையை பார்த்தார்.

‘நாமலே தப்பு பண்ணக்கூடாது. நம்ம சாதி தான்..’ என்றார் திட்டவட்டமாக. அவன் அழுதுக்கொண்டே வெளியேறினான். தன் சாதி நண்பர்களுக்கு அழைத்தான். யாரும் முன்வரவில்லை. இண்டர்நெட்டில் தகவல் கொடுத்தான். நெட்டிசன்கள் எல்லோரும் காரி மொழிந்தார்கள். அதில் ஒருவன் அவரை தொடர்பு கொண்டான்,

‘ஹலோ… வெட்கமாயில்லயா சார். மூணு வயசு பொண்ணுங்குறீங்க. சாதிய சொல்லுறீங்க…’

‘சார் அது…’ இழுத்தான் சின்னசாமியின் மகன்.

‘நான் O+ தான். ஆனா என் சாதிய சொல்லமாட்டேன்.. விருப்பமா?’ என்றான். அவன் அமைதியாக நின்றான்.
‘சரி வாங்க… ஆனா இங்க வந்து என் சாதினு மட்டும் சொல்லிடுங்க…’

‘முடியாது சார்.. ஏன் சொல்லணும்… ஏன் சார் சொல்லணும்… அசிங்கமா இல்லயா.. வைங்க சார் ஃபோன..’ கொதித்துபோய் அவன் அழைப்பை துண்டிக்க பார்த்தான். சின்னசாமி மகன் தடுத்தான். ஒத்துக்கொண்டான். வரசொன்னான்.

அவன் வந்ததும் சின்னசாமி அவனை சென்று கையை பிடிக்கபோனார். பின்னால் நின்ற அவரின் மகனை பார்த்து, ‘நம்ம சாதி தான..’ என்று சைகை காட்டினார். அவன் ஆமாம் என்றான். ஆமாம் என்றதும் கையை பிடித்துக்கொண்டார். அவன் உள்ளே சென்று ரத்தம் கொடுத்தான். அடுத்த ஒரு மணி நேரத்தில் குழந்தையின் உயிர் காப்பற்றப்பட்டது.

அவன் மகிழ்வாக வெளியில் வந்தான். சின்னசாமியின் மகனைபார்த்து,

‘இனிமேலாச்சும் முட்டாள் தனமா இருக்காதீங்க…’ கோபமாக சொன்னான். பின்னால் இருந்து சின்னசாமி அவனை கவனித்தார்.

‘என்ன தம்பி என் புள்ள மேல கோவம்.?’ மகிழ்வோடு கேட்டார் சின்னசாமி.

‘பின்ன என்ன சார்.. குழந்தைக்கு முடியல.. பைத்தியக்காரன் போல சாதி பேர சொல்லி ரத்தம் கேக்குறான் சார் இந்த ஆளு..’ கையில் ஊசி குத்திய இடத்தை தேய்த்துக்கொண்டே பதில் சொன்னான் அவன். அவர் ஏதோ யோசித்துக்கொண்டே தலையை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டு அவரின் மகனை பார்த்தார். மகன் தலையை கீழ்குனிந்துக்கொண்டான். அவர் புரிந்துக்கொண்டார். தலையை சொரிந்துக்கொண்டே ரத்தம் கொடுத்தவனிடம்,

‘அது கெடக்கட்டும் தம்பி.. நீங்க எந்த சாதி?’ என்றார் சின்னசாமி. கையை தேய்த்துக்கொண்டிருந்தவன் நிறுத்தினான். அவரை மேலும் கீழும் பார்த்தான். அங்கேயே காரி மொழிந்தான்.

‘கீழ சாதி தான் டா. சத்தியமா உங்க சாதி இல்லடா நாயிங்களா.. என்ன செய்ய போற.. உன் பேத்திய கொன்னுறுவியா.. து…’ சொல்லிவிட்டு வெளியில் வேகமாக வந்தான். அன்று இரவு சாய்வு நாற்காலியில் அமர்ந்துக்கொண்டு சின்னசாமி வெகுவாக யோசித்தார். அவரின் பேத்தியை கொல்லலாமா என்று யோசித்தார். அவளின் பாவங்கள் முகங்கள் அவர் கண் முன்னே வந்து போனது. அதே சமயம் நாளை ஊர் மக்கள் அவரின் பேத்தியின் உடம்பில் ஓடும் கீழ்சாதி ரத்தத்தை பற்றி கேலி பேசுவார்கள் என்று பயந்தார். சாய்வு நாற்காலியில் நன்று வேகமாக ஆட்டினார். மேலும் கீழுமாக.

இரவு மூன்று மணி இருக்கும். ஆட்டம் நின்றது. விட்டத்திலிருந்து தொங்கிய கயிற்றின் முனையில் அவர் கழுத்து பிடிக்கொண்டிருந்தது. நாக்கு வெளியே தொங்கிக்கொண்டிருந்தது. விழிகள் விட்டத்தை விளிம்பி பார்த்துக்கொண்டிருந்தது. ஊரார் அடித்துக்கொண்டு அழத்தொடங்கிவிட்டனர். அவர் சாதி மக்களெல்லாம் வீட்டுக்குள் ஓடி வர, மற்ற சாதியினர் தெருவிலே நின்று துக்கம் விசாரித்தனர்.


சின்னசாமி சா’தீ’யை அணைக்காமல் சென்றுவிட்டார். நாமாவது அணைப்போம்.

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!