கல்லூரி ஆசை - ஒரு காதலி...!

அந்த பேருந்து நிறுத்தத்தில் அவள் நின்றுக்கொண்டிருந்தாள். அவன் அவள் முன் தயங்கியபடியே நின்றான்.

‘அப்பரம்?’ அவள் கேட்டாள்.

‘தோ…’ அவன் வாயிலிருந்து வார்த்தைகள் தடித்தன. தொண்டையை கரகரத்துக்கொண்டான். மாற்று பக்கம் திரும்பினான். ‘தோ.. இப்படி.. இப்படி போகவேண்டியது தான்..’ சொல்லிவிட்டு தயங்கி நின்றான். அவள் மெல்லியதாய் சிரித்தாள். அவனும் பதிலுக்கு சிரித்து வைத்தான். அங்கு சிறிது நேர அமைதி இருந்தது.

‘சீக்கிரமா ஓடிடுச்சோ…’ அவள் பேச ஆரம்பித்தாள். இம்முறை அவன் சிரித்தான். அவளும் சிரித்தாள்.

’திரும்ப எப்போ…?’ அவன் கேட்டான். அவள் உதட்டை பிதுக்கினாள். அவன் அமைதியாக நின்றுக்கொண்டிருந்தான். அவள் சிரித்தாள்.

பேருந்தின் ஓட்டுநர் வந்தார். ‘பீம் பீம் பீம்…’ மூன்று முறை அழுத்தமாக ஹார்ன் செய்தார். அவள் திரும்பி பார்த்தாள்.

‘வண்டிய எடுக்க போறாங்க…’ சொன்னாள். அவள் முகத்தையே உற்று பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு சுய நினைவு வந்தவனாய் ‘ஹான்…’ என்று சொல்லிவிட்டு தலையை ஆட்டினான். அவளின் பைகளை தூக்கிக்கொண்டு பேருந்தில் ஏறினான்.

அவளின் இருக்கையை பார்த்து பைகளை சரியாக வைத்துவிட்டு அவளது இடத்தை காட்டி அவளை அமர சொன்னான். கீழே இறங்கி நின்று ஜன்னல் வழியாக அவளை பார்த்தான்.

‘தண்ணீ… வேணுமா…?’ என்று கேட்டான். அவளிடமிருந்து பதில் வருமுன்னே கடையை பார்த்து ஓட ஆரம்பித்தான். கொஞ்சம் தூரம் சென்றதும். ‘பிஸ்கட்.. கூல்ட்ரிங்க்ஸ்…’ கத்தி கேட்டான் அவன். அவள் வேண்டாம் என்பதாய் தலையை ஆட்டினாள். அவன் அவளை கவனிக்காது திரும்பி ஓடினான்.

அவள் அமர்ந்திருந்த பேருந்து பின்னால் எடுத்தார்கள். அவள் கண்கள் அவனை தேடியது. அவன் அவசர அவசரமாக தண்ணீர், பிஸ்கட், கூல்ட்ரிங்க்ஸ் என வாங்கி குவித்துக்கொண்டிருந்தான். அவளது பேருந்தை நோக்கி ஓடி வந்தான். அவனை கண்டதும் விரிந்திருந்த அவளது விழிகள் அமைதியானது. இவன் ஜன்னல் வழியாக வாங்கி வந்ததை கொடுத்தான்.

’ஏன் இதெல்லாம்’ என்பது போல அவள் முக பாவனையால் கேட்க அவன் கண்களால் ‘இருக்கட்டும்’ என்றான். அவள் மெல்லியதாய் ஒரு சிரிப்பு சிரித்தாள்.

அந்த கோயம்பேட்டு பேருந்து நிலையத்தை விட்டு வண்டி மெதுவாக கிளம்பியது. அந்த முக்கு திரும்பும் வரை அவள் ஜன்னல் வழியாக கண்களை அவனோடு உறவாட விட்டிருந்தாள். வண்டி திரும்பியதும் இவன் ஓட ஆரம்பித்தான். இரண்டு ப்ளாட்பாரங்கள் தாண்டி ஓடி, அந்த பேருந்து திரும்பி வரும் திசையில் நின்றுக்கொண்டான்.

அவள் கண்கள் அவன் நின்றிருந்த இடத்தில் தேடிக்கொண்டே வந்தது. சட்டென பக்கத்தில் அவன் நிற்பதை பார்த்து அந்த தேடல் கண்கள் வெட்கம் கொண்டது. அந்த ஒரு நொடி பார்வைக்காக அவன் மீண்டும் ஓடினான். ஆனால் பேருந்து கடந்து சென்றுவிட்டது. பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த தன் வண்டியை சென்று பார்த்தான். வண்டியின் மீது கை வைத்து மெதுவாக குத்திக்கொண்டே யோசித்தான். இரைச்சலான அந்த பேருந்து நிலையம் அமைதியாக அவனுக்கு தோன்றியது. எங்கோ அவள் இறங்கி ஓடி வந்துவிட்டாள் என அவனுக்கு தோன்றியது. சுற்றி முற்றும் பார்த்தான். யோசித்தான்.

வண்டியில் சாவியை போட்டு அடுத்த நொடி பிஸியான சென்னை சாலையில் பறந்துக்கொண்டிருந்தான். அவனது அலைப்பேசி ஒலித்தது. எடுத்து பார்த்தான். அவள் தான். அவன் பேசவில்லை. உள்ளே வைத்துவிட்டு இன்னும் வேகமாக வண்டியை முறுக்கினான். அன்று பார்த்து சென்னை சாலைகள் பிஸியாக இருந்தாலும் கொஞ்சம் காலியாக தான் இருந்தது. அவளின் பேருந்து சீறி பாய்ந்துக்கொண்டிருக்க, அவன் பின்னாலே துரத்தினான். எப்பொழுதும் வண்டி நிற்கும் ஆசர்கானாவில் இம்முறை நிற்கவில்லை, அடுத்து ஏர்போர்ட்டில் பிடித்துவிடலாம் என்று இருந்தான். ஆனால் அங்கும் நிற்கவில்லை. பல்லாவரத்தில் அவன் போலீஸில் மாட்டிக்கொள்ள அவள் பேருந்து தாம்பரத்தில் தஞ்சம் புகுந்திருந்தது.

அப்படி இப்படி என்று போலீஸஸை சமாளித்துவிட்டு அவன் கிளம்பும்பொழுது பெருங்களத்தூரில் இருந்து அவள் பேருந்து கிளம்பிக்கொண்டிருந்தது. வண்டியை இன்னும் முறுக்கினான். வண்டி ஊரப்பாக்கத்தில் சாலையை கிழித்துக்கொண்டு பறந்தது. காட்டாங்குளத்தூரில் வண்டி செல்லும் பொழுது முன்னால் சென்று தனது வண்டியை அவன் நிறுத்தினான். பேருந்து ஓட்டுநர் திடீர் நிறுத்தம் போட்டு இறங்கி அவனை அடிக்க ஓடி வருகையில் அவன் சட்டென காலில் விழுந்தான்.

ஓட்டுநரும், நடத்துநரும் ஒருவரை மாற்றி ஒருவர் விழித்துக்கொள்ள அவன் சடசடவென எழுந்து உள்ளே ஓடினான். அவனை அதுவரை அலைப்பேசியில் அழைத்து பிடிக்கமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தவள் அவனை நேரில் கண்டதும் வாய் பிளந்து நின்றாள்.

‘ஹே… ப்ளீஸ் இறங்கு..’ என்றான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவளது பைகளை எல்லாம் அவன் தூக்கிக்கொண்டான்.

‘ஹே…’ என்று அவள் சொல்ல சொல்ல கேட்காமல் அவன் அவளை கீழிறக்கினான். வாய்குள்ளே முனகிக்கொண்டு அந்த பேருந்து கடந்து சென்றது. அவள் இடுப்பில் கை வைத்துக்கொண்டு அவனை முறைத்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

’என் அப்பாவ நான் எப்படி சமாளிப்பேனு தெரியல. என் அம்மாவையும் தான். என் வீட்டு குட்டீஸ் கூட பேசாம வம்பு பண்ணுங்க…’ சொல்லிவிட்டு தன் புருவத்தை ஒற்றை விரலால் சுரண்டி விட்டுக்கொண்டான். கீழே குனிந்து ஒரு முறை சிரித்துக்கொண்டான். ‘எல்லாருக்கும் என்னை பிடிக்கும்…’ சொல்லிவிட்டு வாயை திறந்து ஒரு முறை முழு மூச்சை வாங்கிக்கொண்டான்.

’இந்த ரோடு தான். நானும் என் நண்பர்களும் தினமும் காலேஜ் முடிஞ்சு இப்படி தான் போயி டிரெயின் ஏறுவோம்… நாங்க அப்பலயிருந்தே மொட்ட பசங்க தான். இந்த ரோட்டுல… எனக்கு பிடிச்ச பொண்ணோட கை கோர்த்து நடந்து போகணும்னு எனக்கு ரொம்ப ஆசை. டச் ஃபோன் வாங்கிட்டு, அதுல பாட்டு கேட்டுகிட்டு ஒரு ஹெட் செட் அவ காதுலயும், ஒரு ஹெட் செட் என் காதுலயும் வச்சிட்டு… செல்லமா சண்டை போட்டுகிட்டே போகணும்னு… ஆசை…’ அவன் சொல்லிவிட்டு அவளை பார்த்தான். அவளின் கோபமான விழிகள் அடுத்து என்ன என்று ஏங்கி காத்துக்கொண்டிருந்தன.

’உள்ள ஜாவா க்ரீன்னு ஒரு கான்டீன் இருக்கும். அங்க தான் முதல் முதலா நட்பு, காதல், சண்டைனு எல்லாத்தையும் பாத்தேன். ஆனா எதுலயும் நான் இல்ல… ஏனா… எனக்கு நட்பு, காதல், சண்டைனு எல்லாம் எனக்கு பிடிச்சவளோட தான் இருக்கணும்னு ஆசை. அந்த ஜாவா க்ரீன்ன வெயிட் பண்ண சொல்லியிருந்தேன்… கண்டிப்பா ஒரு நாள் என் மனசுக்கு பிடிச்ச பொண்ணோட வருவேன்னு…’ சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே அவளை பார்த்தான்.

‘ஸோ..?’ அவள் கேள்விக்குறியோடு ஆவளாய் கேட்டாள்.

‘ஸ்மார்ட் ஃபோன் வாங்கிட்டேன். ஹெட் செட்… JBL ஹெட் செட்… நல்ல குவாலிட்டி. ரோடு இருக்கு… உள்ள ஜாவா க்ரீனும் இன்னும் காத்துட்டு இருக்கும்…’

‘சரி…..’

‘கை பிடிச்சுக்கிறியா…’ அவன் கேட்டுவிட்டு தன் ஒரு கையை உயர்த்தி கொடுத்தான். அவள் அமைதியாக சிரித்தாள். அவன் முகத்தை பார்க்கவில்லை. கீழே குனிந்து இன்னும் சிரித்தாள். அவள் கண்கள் கலங்கியது. அவன் கீழே குனிந்து அவள் முகத்தை பார்க்க நினைத்தான். கண்களை தன் விரல்க்கொண்டு அவள் துடைத்துவிட்டு உயர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

’நான் ஊர்க்கார பொண்ணு… சென்னை லோக்கல்ல தமிழ் பேசுறவங்கள எனக்கு பிடிக்காது’ என்றாள். சிரித்துக்கொண்டிருந்த அவன் முகம் சுருங்கியது.

’பல நாள் ஷேவ் பண்ணாத தாடி. உவ்வே…’ முகத்தை கேவலமாக வைத்துக்கொண்டாள். அவன் தன் தாடியை தடவிக்கொடுத்துக்கொண்டே கீழே குனிந்துக்கொண்டான்.

‘கலைஞ்சு கிடக்குற பறட்டை தலை. ம்ம்ஹூம்… பத்து நாள் துவைக்காத ஜீன்ஸ்… லோக்கல் கடையில சாப்பிடுறவன். எப்போதும் வியர்த்து இருக்குறவன்… பொண்ணுங்க கிட்ட சகஜமா பேச தெரியாதவன். இப்படி…’ சொல்லிவிட்டு அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தாள். ‘இப்படி இருக்குற ஒருத்தன… நான் என்னைக்கும் செலக்ட் பண்ணிட கூடாதுனு குறிப்பா இருந்தேன்’ சொல்லிவிட்டு அவன் முகத்தை பார்த்தாள். அவன் முகம் சுருங்கி கீழே குனிந்துக்கொண்டிருந்தது.

‘ஆனா.. நான் எதிர்பார்த்த குவாலிட்டில இப்ப ஒருத்தன பாத்தா… என் கண் இமை கூட அந்த பக்கம் திரும்பாதுனு நினைக்கிறேன்’ சொல்லிவிட்டு அவள் சிரித்தாள். குனிந்துக்கொண்டிருந்தவன் மேலே மெதுவாக கேள்விக்குறியோடு திரும்பி பார்த்தான்.

‘என்னால என்னோட கொள்கைய விட முடியாது…’ என்றாள். அவனின் கேள்விக்குறி கண்கள் மீண்டும் சுருங்கிப்போனது. காற்றை இறக்கிவிட்ட பலூனாக நின்றான்.

‘அதனால…. என் கைய… நீயே எடுத்துக்கோ..’ என்றாள். சொல்லிவிட்டு அமைதியாக அவன் கண்களை பார்த்துக்கொண்டே சிரித்தாள். அவனுக்கு புரிய சிறிது நொடிகள் எடுத்தது.

‘நீ.. நீ…’ என்று இழுத்தான். தலையில் கைவைத்தான். குதித்தான். வாயில் வார்த்தை வரவில்லை. மூச்சு திணறியது. அங்குமிங்கும் ஓட வேண்டும் என்பது போல இருந்தது. அத்தனை இளையராஜா பாடல்களும் காதுகளில் மாறி மாறி ஒலித்தது. உலகம் இன்னும் வேகமாக சுற்றியது. அமைதியானான்.

‘பாட்டு…. கேக்கலாமா?’ என்றான்.

‘உன் காதுல ஒண்ணு.. என் காதுல ஒண்ணு.. ஹெட் செட்..’ அவள் சொன்னாள்.

‘ஜாவா க்ரீன் போலாமா?’

‘ரெண்டு டம்ளர்ல.. ரெண்டு ஜூஸ்னா ஓகே…’ என்றாள். அவன் வெட்கத்தோடு சிரித்தான்.

‘என்னை கல்யாணம் பண்ணிப்பியா…?’

‘எங்க கையெழுத்து போடணும்?’ என்று அவள் கேட்டதும் அவன் கண்கள் கலங்கியது. அவள் முகத்தை தன் இரு கைகளால் பிடித்துக்கொண்டான். அவள் நெற்றியில் தன் நெற்றியை அழுத்த கொடுத்தான்.

’நான் வேற பொண்ண சைட் அடிச்சா என்ன செய்வ?’


‘ஓங்கி… இப்படி பின்னாலயே கொடுப்பேன்…’ என்று சொல்லி அவன் பின்னால் அவள் அடிக்க அவன் அவளை இறுக கட்டிக்கொண்டான். அவளும் அவனை இறுக கட்டிக்கொண்டாள். உயர்ந்து நிற்கும் அவனது கல்லூரி கட்டிடத்தை பார்த்து கட்டை விரலை உயர்த்தி காட்டி சிரித்தான் அவன்.

-தம்பி கூர்மதியன் 

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..