காதலொன்றை கண்டார்

’சார்… பசிக்குது சார்..’ கெஞ்சலாக சொன்னான் அவன். அவர் அவரது மனைவியை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார்.

‘அப்போ முதல்ல ஒரு நல்ல வெஜிடேரியன் ஹோட்டலா போபா..’ அவர் சொன்னார். சோர்ந்து போய் இருந்த அவன் முகம் பொலிவடைந்தது. அடுத்த ஐந்து நிமிடத்தில் ஒரு ஹோட்டலில் நிறுத்தினான். மூவரும் உள்ளே சென்று கையை கழுவிவிட்டு ஆளுக்கு நான்கு இட்லி சொல்லிவிட்டு அமர்ந்தனர்.

‘அப்பரம் சார்… சுத்து சுத்துனு சுத்தியாச்சு.. நான் சொன்னாலும் கேக்கமாட்டுறீங்க.. ரூம் இப்போ எங்கயும் கிடைக்காது சார்.. சீசன் டைம் வேற…’ அவன் சொல்லிவிட்டு அவரை பாவமாக பார்த்தான். அவரும் அவர் மனைவியும் மாறி மாறி பார்த்துக்கொண்டனர்.

‘ஒண்ணு சொல்லவா? பக்கத்துல தான் என் வீடு இருக்கு.. வாங்க… தங்கிக்கிடுங்க.. காலையில கிளம்பிடுங்க..’ என்றான். அவர் மீண்டும் அவர் மனைவியை பார்த்தார். அவள் மௌனமாக தலையை கீழே தொங்கலில் விட்டுக்கொண்டார். அவர் சிறிது நேரம் யோசித்தார். பிறகு சரியென தலையை ஆட்டினார்.

‘அது.. சூப்பர் சார்… இத முன்னாடியே சொல்லியிருந்தா வீட்டுலயே நைட் சாப்பாட்ட முடிச்சிருக்கலாம்..’ அவன் சொல்லிவிட்டு டேபிளை தட்டினான். அவர்கள் சிரித்துக்கொண்டனர்.

‘என்ன சார்… நம்ப மாட்டிங்களா? என் லேடி… செமயா சமைப்பா… அங்க எப்படி?’ சொல்லிவிட்டு நக்கலாக சிரித்தான் அவன். அவர் அவளை திரும்பி பார்த்தார். அவனை பார்த்து விழியை அகலப்படுத்தி வெட்கத்தோடு சிரித்தார்.

‘சூப்பர் சார்… லவ்வு?’ என்று அவன் கேட்க அவர் இன்னும் வெட்கம் கொண்டார். அவள் குனிந்த தலை நிமிரவில்லை. அவர்கள் சாப்பிட்டுவிட்டு அவனது வீட்டிற்கு சென்றனர். அவன் அவனது மனைவியில் காதில் ஏதோ குசு குசுத்தான். வீட்டின் உள்ளே இருவருக்கும் பாய் விரித்து போடப்பட்டது.

‘சார்.. பாப்பா இருக்கா.. அதான். பாய் பரவால தானே..’ அவன் சங்கடத்தோடு கேட்டான்.

‘மண்தரை கூட நிம்மதி தான்..’ சொல்லிவிட்டு அவர் அவரது மனைவியை பார்த்து சிரித்தார். அவள் அவரது கையை இறுகபிடித்துக்கொண்டார்.

‘தூக்கம் வருதா சார்.. இல்ல கொஞ்ச நேரம் பேசிட்டு இருப்போமா?’ என்று அவன் கேட்க அவர் சிரித்தார்.

‘இன்னைக்கு எனக்கு தூக்கம் வராதுபா…’ என்றார். அவன் அவர் பக்கத்திலே உட்கார்ந்தான்.

‘அது என்ன ஸ்டோரி?’ அவன் கேட்க அவர் சிரித்தார்.

‘நாளையோட என் மனைவிய பாத்து அறுபது வருசம்.. முடிய போகுது..’ சொல்லிவிட்டு பெருமையாக அவரது மனைவியை பார்த்தார்.

‘தோ பார்றா..’ என்று சொல்லிவிட்டு அவனது மனைவிக்கு கண்ணை காண்பித்தான். ‘செம… எப்படி சார்?’ அவன் இன்னும் ஆர்வமானான். அவர் ஒரு பெருமூச்சு வாங்கினார். அவர் மனைவியை பார்த்தார். அவளது கையை இறுகபிடித்துக்கொண்டார்.

‘அப்போ… கன்னியாகுமரி தமிழ்நாட்டோட இல்ல.. கேரளத்தோட இருந்துச்சு. நான் இங்க அப்போவே சுத்தி பாக்குறதுக்காக வந்தேன்… அப்போ இந்த மாதிரி கூட்டமெல்லாம் கிடையாது. கடல் அலையோட நம்ம உலகம் மட்டும் இருக்கும்… அன்னைக்கும் ஒரு சூரியன் உதிச்சுச்சு… நானும் சூரியனும் மட்டும். எங்களுக்குள்ள ஒரு நட்பு போல… சூரியன் சொன்னான்.. உன் பக்கத்துல ஒரு நிலா இருக்கு பாருன்னு.. நான் திரும்பி பாத்தேன். என் கண்ணம்மா அங்க நின்னுட்டு இருந்தா..’ சொல்லிவிட்டு காதலோடு பார்த்தார் அவளை.

‘பாருடா.. அந்த காலத்து லவ்வா?’ அவன் இன்னும் குதூகலமானான். அவர் வாய்விட்டு சிரித்தார். இன்னும் தொடர்ந்தார்..

‘ஆனா பிரச்சனை இருக்கு… நாங்க இந்து.. இவ கிறிஸ்துவம்...’

‘அய்யயே.. அந்த காலத்துலலாம் ரொம்ப பிரச்சனை இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேனே..’ அவன் சொன்னான். அவர் பலமாக தலையை ஆட்டினார்.

‘இவ யாருன்னு தெரிஞ்சுக்க வீடு வரைக்கும் பின்னாலயே போனேன்.. அப்பரம் இவளுக்காக இந்த ஊருலயே வேலைய மாத்தல் வாங்கிட்டு வந்துட்டேன்…. அப்பலாம் இவ கண்ண பாக்கவே பயமா இருக்கும்.. ஏன் இப்பவும் தான்..’ சொல்லிவிட்டு அவர் அவளது கண்ணை திரும்பி பார்த்தார். அவள் கண்கள் காதலோடு அவரை பார்த்தது. சட்டென திரும்பிக்கொண்டார்.

‘யப்பா… ஆள சாச்சுப்புடும்..’ சொல்லிவிட்டு வாய் விட்டு அவர் பொக்கை வாய் தெரியும் அளவுக்கு சிரித்தார். தொடர்ந்தார்…

‘அப்படி இப்படி இவ தெரு, வீடுன்னு பழக்கமாகி என் காதலையும் சொல்லிட்டேன். அய்யயோ.. அப்பா திட்டுவாங்கனு சொன்னா. நான் அப்பாகிட்ட பேசுறேன்னு சொன்னேன்..’ சொல்லிவிட்டு மீண்டும் அவளை பார்த்தார். அவன் வாயை பிளந்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தான்.

‘பேசுனியா சார்…’

‘பேசுனேன்… அடுத்த நாளே ஹாஸ்பிடல்ல தான் கிடந்தேன். அதுக்கு அடுத்த வாரம் நானும் இவளும் மும்பையில.. கணவன் மனைவியா…’ சொல்லிவிட்டு சிரித்தார்.

‘செம ஆளு சார் நீங்க… கலக்கிட்டீங்க…’ என்றான் சிரிப்போடு. அவன் மனைவிக்கு கண்ணை காண்பித்து சிரித்தான்.

‘உங்க வயசு என்ன சார்…?’ அவன் கேட்டான்.

’83 ஆகுது…’ சொல்லிவிட்டு இன்னும் இறுக பிடித்துக்கொண்டார் அவர் மனைவியின் கையை. ‘குழந்தைங்க.. பேரக்குழந்தைங்கனு ஆகிப்போச்சு. எல்லாம் அவங்க பொழப்ப பாக்குறாங்க. நாங்க 60 வருசம் முன்னாடி எப்படி இருந்தோமோ அப்படியே இருக்குறோம். என்ன முத்தம் தான் கொடுக்க மாட்டேங்குறா..’ சொல்லிவிட்டு அவர் சிரித்தார். அவர் மனைவி பக்கத்தில் வெட்கத்தோடு அவர் கையில் குத்தினாள். அவரும் மாறி அவளது கன்னத்தை திறுகினார். இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக்கொள்வதை அவன் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே அவன் கண்கள் அவனை அறியாது கலங்கியிருந்தது. காதலோடு தன் மனைவியை ஒரு முறை திரும்பி பார்த்தான். அவளின் சிரித்த முகம் அவன் கண்களை பார்த்ததும் சட்டென மாறியது.

அவர் திரும்பி அவர் மனைவியை பக்கமாக இறுக அணைத்துக்கொண்டு பேசத்தொடங்கினார். ’பாசம்.. எல்லார் மேலயும் இருக்கும். காதல்.. அத தாண்டிய ஒரு உணர்வு. நீ உன் அம்மாகிட்ட நண்பன்கூட பேசுற மாதிரி பேசமுடியாது, உன்னோட அக்கா தங்கைனு யார்கிட்டயும் உனக்கில்லாத ஒரு உரிமை உன் மனைவிகிட்ட வரும். என் மனைவிகிட்ட எனக்கு வந்த போல.. எங்களுக்குள்ள நாங்க எந்த மறைவும் வச்சுகிறது இல்ல… சந்தேகம் மனித இயல்பு. அதுக்கு நாங்க இடம் கொடுக்குறது இல்ல.. அப்படியே ரெண்டு பேருக்கும் இப்படி ஒரு எண்ணம் வருதுனாலும் அத வெளிப்படையா சொல்லிப்போம். அத ரெண்டு பேருமே தப்பா எடுத்துகிட்டது இல்ல.. கடைசியா.. என் கண்ணம்மாகிட்ட கோச்சுட்டு நான் என்ன செய்யப்போறேன்..’ சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர் கண்களும் கலங்கின. அவன் அவர்களை வைத்த கண் வாங்கமால் பார்த்தான். சிலை போல உட்கார்ந்துக்கொண்டிருந்தான். சட்டென நினைவு வந்தவனாய் ஒரு புன்சிரிப்பு சிரித்தான்.

’என்னப்பா.. மொக்க போடுறேனா..’ அவர் கேட்டார்.

‘இல்ல சார்..’ என்று சொல்லிவிட்டு ஏதோ யோசனையிலே.. ‘சார் உங்கள தாத்தானு கூப்பிட்டுக்கவா?’ என்றான். அவர் அவரது மனைவியை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு அவனை பார்த்து தலையை ஆட்டினார்.

’பாட்டிய.. 60 வருசத்துக்கு முன்னால பாத்த இடத்துலயே திரும்ப பாக்கணும்னு கூட்டிட்டு வந்திருக்கீங்க. சரியா..’ அவன் கேட்டான். அவர் ஆமாம் என்பதாய் தலையை ஆட்டினார்.

‘இத்தன வருசத்துல உங்களுக்கு சண்டையே வந்ததில்லையா தாத்தா..’ அவன் ஆச்சர்யமாக கேட்டான்.

‘ஏன்… எதுக்கெடுத்தாலும் சண்டைதான். ஆனா அடுத்த அஞ்சு நிமிசத்துல ரெண்டு பேருமே பேசிருவோம். ஒருத்தர் இல்லாம இன்னொருத்தரால இருக்க முடியாது. நான் கத்துவேன்.. அவ உர்ருனு பாத்துட்டு இருப்பா.. பேசித்தொலையேன்னு கத்துவேன். கண்ணு கலங்கிடும் அவளுக்கு. கண்ணம்மாக்கு கண் கலங்கினா மனசு தாங்குமா.. போய் கன்னத்தை பிடிச்சு கெஞ்ச ஆரம்பிச்சுருவேன். கோவம், கொஞ்சல்ல முடிஞ்சுரும்.. ‘ சொல்லிவிட்டு அவர் சிரித்தார்.

’எப்படி தாத்தா… எப்படி பட்டுனு மாற முடியும்..’ என்றான் இன்னும் யோசனையோடு.

‘காதல் தான்டா கண்ணா. உன் மனைவிய நீ ஆழமா காதலிச்சு பாரு.. அவள உன் மனைவின்னு பாக்காத. நம்ம ஊர பொறுத்த வரை மனைவினா அடிமை.. அப்படி பாக்காத. சக மனுசியா பாரு. உன்கூட வாழ்க்கைய வாழுற ஒரு குழந்தையா பாரு… 80 வயசாகுது இந்த கிழவிக்கு… இன்னும் குழந்தை தான் இவ. இந்த கிழவன் என்னைக்கும் அவள கொஞ்சுற அப்பன் தான். குழந்தைங்க மேல அப்பனுக்கு எப்படிடா கோவம் வரும்..’ என்று அவர் சொல்ல பாட்டி இன்னும் இறுக பிடித்துக்கொண்டார் கைகளை.

’பாட்டி.. தாத்தா ஓடிபுட மாட்டாரு.. ரொம்ப இறுக பிடிச்சுகாதீங்க..’ சொல்லிவிட்டு அவன் வாய்விட்டு சிரித்தான். ஆனால் அவர்கள் சிரிக்கவில்லை. அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். ஒருவர் ஒருவர் மாற்றி முகத்தை பார்த்துக்கொண்டார்கள். சிரித்துக்கொண்டிருந்த அவன் முகம் சுருங்கியது…

தாத்தா பாட்டியின் கைகளை தட்டிகொடுத்தார். பாட்டி கண்ணீர் வடித்தார். அவர் இன்னும் அணைத்துக்கொண்டார். அவர் கண்களும் கலங்கியது. மூக்கை உரிஞ்சுக்கொண்டார். ’ஏதோ மூளையில இருந்து வியாதியாம். இன்னும் ஒரு வாரம் கூட தாங்காதுனு சொல்லிட்டாங்க. இன்னைக்கு நைட்டா கூட இருக்கலாம். நாளைக்கு காலையில கூட இருக்கலாம்… வயசான வர்றது தானே..’ அவர் சமாதானமாக சொல்லிக்கொண்டார். அவன் அதிர்ச்சியுற்றான். அவர்களை சங்கடபடுத்திவிட்டதை நினைத்து வருந்தினான். முகம் வாடியது. அந்த அழகான ஜோடி பிரியபோகிறது என்பதை அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

‘தாத்தா…’ அவன் இழுத்தான் கண்களை கசக்கிக்கொண்டே.

‘சீ சீ.. விடுறா.. எதுக்கு இப்ப நீ கலங்குற..’ என்றார் அவர். பாட்டி இன்னும் தேம்ப ஆரம்பித்தாள்.

’பாட்டி…. தாத்தாக்கு ஒண்ணும் ஆகாது. அந்த கடவுள நம்புங்க. பகவதி அம்மன நம்புங்க..’ சொன்னான் அவன். தாத்தா உடனே சிரித்துவிட்டார்.  சிரிப்பை அடக்கமுடியாமல் பேசினார்,

‘வியாதி அவளுக்கு டா கண்ணா..’ சொல்லிவிட்டு கண்கள் ஒருபுறம் கலங்க ஒருபுறம் சிரித்துக்கொண்டிருந்தார். அவன் திரும்பி பாட்டியை பார்த்தான். பாட்டி தாத்தாமீது வைத்திருந்த கண்களை எடுக்கவில்லை. அவன் புரியாமல் விழித்துக்கொண்டிருந்தான்.

’அவளுக்கு அவ சாகப்போறத தாண்டி.. இந்த கிழவன் இதுக்கு அப்பரம் எப்படி இருப்பான் யார் துணைனு தான் கவலை… என் கண்ணம்மாவுக்கு அம்புட்டு பாசம். அறுபது வருசம் யாரும் இல்லாம இருந்துட்டோம்ல… இப்ப எனக்கும்..’ அவர் சொல்லிவிட்டு கண்ணீர் விட்டார். வாயை பொத்திக்கொண்டார். பாட்டி அவரின் நெஞ்சில் சாய்ந்துக்கொண்டு அழுதார்.

‘நானும் வந்திடுறேன்.. வந்திடுறேன்டி கண்ணம்மா..’ முகத்தை மூடிக்கொண்டு அழுதார். பாட்டி அவரின் கண்களை துடைத்துக்கொண்டே இன்னும் அழுதார். அவன் கண்கள் தாரை தாரையாக கொட்டியது. ஓரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்த அவனின் மனைவியும் கண்ணீர் வடித்தாள். அங்கு ஒரு நிசப்தம் இருந்தது.

‘எனக்காக உலகத்தையே தூக்கி போட்டுட்டு வந்தா… திரும்பி அவ அப்பாகிட்ட அவ போகல. என் கூடவே தான் இருந்தா. எனக்கு அவ தான் உலகம்… அவளுக்கு நான் தான் உலகம். நான் அவள பாத்த இடத்துல.. அவ என்னைய கடைசியா பாக்கணுமாம். தினமும் சாகுற வரை அந்த கடற்கரை பக்கத்துல நிக்கணுமாம். நாளைக்கு வந்திரக்கூடாது. இன்னையோட இந்த உலகம் அழிஞ்சுபோயிரணும்னு.. துடிக்குதுயா..’ சொல்லிவிட்டு வாயை பொத்திக்கொண்டு இன்னும் அழுதார்.

அவன் மனைவி உள்அறைக்கு கண்ணீரை துடைத்துக்கொண்டு ஓடினாள். அவன் கண்ணீரை துடைத்துக்கொண்டான்.

‘அதெல்லாம் ஒண்ணும் ஆகாது தாத்தா. நாம பாத்துக்கலாம்.. எத்தனை நாள் வேணும்னாலும் இங்கயே இருங்க… நான் உங்கள பாத்துக்குறேன்’ அவன் சொல்லிவிட்டு அவர்களை படுக்க வைத்தான். அவர்கள் படுத்துக்கொண்டார்கள்.

அவன் மெதுவாக எழுந்து அவனின் அறைக்கு சென்றான். அவன் மனைவி அங்கே விட்ட கண்ணீர் காய்ந்து போய் ஏதோ யோசனையில் உட்கார்ந்திருந்தாள். அவளருகே சென்று அவள் தலையில் கைவைத்து தடவிக்கொடுத்தான். அவள் அவனை திரும்பி பார்த்தாள். சட்டென அவனை அணைத்துக்கொண்டாள். இருவரும் மாறி மாறி கண்ணீர் வடித்தனர்.


‘மன்னிருடா…’ அவன் சொல்லிவிட்டு அவள் முகத்தை பாசமாக பார்த்தான். அவள் அணைப்பை இன்னும் விடவில்லை. ’கன்னம் வலிக்குதுடா..’ அவன் கேட்டான். அவள் வாய்பேசாமல் அழுதுக்கொண்டே ‘இல்லை’ என்பதாய் தலையை ஆட்டினாள். இன்னும் இறுக அவனை பிடித்துக்கொண்டாள். அவன் உச்சிப்பார்த்தான். கண்ணீர் இருவருக்கும் தாரை தாரையாக வெளியேறியது. மெதுவாக வெளியில் எழுந்து வந்தார்கள். தாத்தாவும் பாட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்தது போல படுத்துகிடந்தார்கள். கையை இறுக பிடித்துக்கொண்டு…!

-தம்பி கூர்மதியன் 

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி