பிறப்பு - தகப்பனாகிய நான் எழுதும்.. *1

மகளே!
நீ கருவிலே உருவாகிக்கொண்டிருப்பதை
உன் அம்மை என் காதோரத்தில் நாணப்புன்னகையில் சொல்வாள்..
நான் முதலில் தகப்பம் உணரும் நொடி அது!

உன் காதுகள் மலருமுன்னே
நான் உன்னோடு பேச ஆரம்பித்திருப்பேன்..
உன் கண்களில் ஊடே எனை காணும்
கனவுகள் பல கண்டுக்கொண்டிருப்பேன்..

என் அலுவலக சீண்டல்களையும்
நான் தினம் கடந்து வரும் மனிதர்களையும்
உன் அம்மையூடாய் உன் காதுகளில் சொல்லி வைப்பேன்..

எட்டி தவழ்ந்து நீ என்னை பிடிக்க
அம்மையின் வயிற்றை கிழிக்க போடும்
எத்து தாளங்களை
என் முகம் புதைத்தும்
என் காதும் கண்களும் புதைத்தும்
நான் ஏங்கி காத்துக்கொண்டிருப்பேன்…!

மாதங்கள் கழியும்…
என் குரல் உனக்கு பழக்கமாகும்..!
செல்லமே! என நான் அழைக்கையில்
அம்மையின் வயிற்றை நெட்டித்தள்ளி
என்னிடம் பாய்ந்திட துடிப்பாய் நீ..!
அம்மை வயிற்றினூடாய் உன் கன்னத்திலே
அப்பொழுதே முதல் முத்தம் பதித்திடுவேன்!

நீ என் உலகத்தை ஆக்கிரமித்தாலும்
என் உலகத்தை உருவாக்கி தந்தவள் உன் அம்மை..!
அவள் வலியற்று சிரிக்கும்படியே நீ உலகத்தை ரசிக்க வருவாய்..

உண்மையாக சொல்கிறேன்..!
அன்று மட்டும் தான் உன் அழுகையின் போது
நாங்கள் ஆனந்த குளிர்பெறுவோம்.

ஊர் கூடி வரும்..
பெண்ணை போற்றும் நம் பூமி
ஏனோ உனை முதலில் ஏளனமாக தான் பார்ப்பர்..
உலகம் அப்படித்தான்! நீ பயந்துவிடாதே..!
உன் செயல்கொண்டு மெச்சும்
பின்தொடராக நாங்கள் என்றும் உன் பின்னால் நிற்கும்
கனவுகளை சுமந்துக்கொண்டிருப்போம்..

உன் அப்பனுக்கு தாடி பிடிக்கும்..
உனக்காக முழுதாய் வழித்துவிடுவேன்..
ஊரே சிலிர்த்து பார்க்கும் அடர் மீசையும் நழுவிடும்.
உனை கைகளில் தூக்கும் நொடி
ஏனோ.. வார்த்தை அற்று..
கண்ணீரால் உனை வரவேற்பேன்..!
மிகுந்த ஆனந்தத்தோடு..

என் மகளே..!
பூமி உன்னை வரவேற்க மழை பொழியலாம்
கொஞ்சம் மேளங்களாய் இடிகள் முழங்கலாம்
உறார் கூடி உனை உற்று பார்க்கலாம்..
மிரளாதே.. பிரம்மிக்காதே..!
ஒற்றை புன்னகையில் கடந்துவிடு!!

உன் உலகத்தில் எங்களை இணைத்துக்கொண்டு

பயணப்படு மகளே..! வா… நம் பூமிக்கு.!!

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!