இதுவல்ல தொலைநோக்கு.!

சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் டிவியில் நீயா நானா விவாதம் நடைப்பெறுகிறது. அதில் ஒரு இளைஞர் குஜராத்தின் முதலமைச்சராக மோடியின் வளர்ச்சி பாதையை பற்றி சிலாகித்து பேசினார். அதை கேட்ட சிறப்பு விருந்தினரில் ஒருவர்,

‘இதான். இது தான் இந்த காலத்து யூத். எதையும் மேம்போக்கா, மீடியா என்ன கண்ணோட்டத்த முன்ன வைக்குதோ அத மட்டுமே புடிச்சுட்டு திரியிறாங்க’ என்று கோபம் கொண்டார். அவர் சுட்டி காட்ட நினைத்தது மோடியின் ஆட்சியின் கீழ், குஜராத் - வளர்ச்சி என்னும் பாதையில் எவர்களை நசுக்கிவிட்டு முன்னேறிக்கொண்டிருந்தது என்பதை தான்.

மோடி என்னும் மாயை இந்தியா முழுதும் பரவி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் ஒரு இந்திய அரசியலையும், வாழ்வாதாரங்களையும் புரட்டி போடும் ஒரு அறிவிப்பு வருகிறது. ஒரு வாரம் முன்னர் தான் சம்பளம் வாங்கி வாய் முழுக்க புன்னகையோடு மொத்த பணத்தையும் எடுத்து வந்து அம்மாவிடமும், மனைவியிடமும் கொடுத்துவிட்டு சிரித்துக்கொண்டிருந்தவனின் சிரிப்பு அதிக நேரம் நீடிக்கவில்லை. ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்னும் அறிவிப்பு.

சிப் இருக்கிறது, சிப்ஸ் இருக்கிறது என்று வழமையாக பரவும் வதந்திகள் முளைத்துக்கொள்ள வெளிவந்த நோட்டில் இந்த பக்கம் இருந்து பார்த்தால் அந்த பக்கம் தெரியும் அழகு வடிவமைப்பு அத்தனையும் கப்சா என்று முகத்தில் எச்சை துப்பிவிட்டது. இரண்டு நாட்களில் நிலைக்கொள்ளும் என்னும் மாயை உருவாக்கப்பட பல்லை கடித்துக்கொண்டு இரண்டு நாட்கள் ஓட்டிய குடிமகன் மூன்று மணி நேர வரிசைக்கு பிறகு வாங்கிக்கொண்டது ஒற்றை இரண்டாயிரம் நோட்டு.

பணம் வைத்திருந்தும் பிச்சைக்காரனாய் தெருவுக்கு தெரு அல்லோலப்படும் ஒவ்வொருவன் பின்னாலும் ஏதோ ஒரு குடும்பத்தின் பிடி இருக்கமாக இருக்கிறது. கருப்பு பணம் அழிக்கப்படும், கள்ள பணம் அழிக்கப்படும் என்னும் பீடிகை போடப்பட்டது.

கருப்பு பணம். திண்டதிலிருந்து பேண்டதுவரை, படுத்ததிலிருந்து போர்த்துனது வரை அத்தனைக்கும் வரிக்கட்டி வரிக்கட்டி பல்லை இளித்துக்கொண்டிருக்கும் ஒரு சாமானியனின் உழைப்பு. வருமான வரி, சொத்து வரி, கொடை வரி, செலவின வரி, சேவை வரி, சுங்க வரி, விற்பனை வரி, வாட் வரி, கஷ்டம் ட்யூட்டி, எக்சைஸ் வரி, ப்ரொபஷனல் வரி, கேளிக்கை வரி, கல்வி வரி, சுவச் பாரத், க்ரிஷ் கல்யாண், உள்கட்டமைப்பு வரி என நின்னா வரி உட்கார்ந்தால் வரி என புடுங்கிக்கொண்டிருக்கிறது.

அரசாங்க பள்ளியில் சுத்தமில்லை, சுகாதாரம் இல்லை, அத்யாவசிய வசதியில்லை. ஆனாலும் இல்லாத ஒன்றை மேம்படுத்த நம் வரி செலவிடபடுவதாய் கணக்கு. அரசாங்க மருத்துவமனையில் சரியான சேவையில்லை. உங்களுக்கு தலைவலியாக இருந்தால் ரவுண்ட் மாத்திரை, ஜூரம் என்றால் நீட்டு மாத்திரை, சளியும் பிடித்துக்கொண்டால் ட்யூப் மாத்திரை. அப்படியே மீறி ஏதேனும் வந்தால்… ‘ஒரு நல்ல ப்ரைவேட் ஹாஸ்பிடலாக போங்கள்’ என்னும் அறிவரை. இதுக்கு… வரிக்கட்டணும்.

அடிப்படையில் இருந்து அத்யாவசியத்தில் இருந்து அனைத்து தேவைகளும் இங்கு மட்டுறுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. ஒன்று கிடைக்கவே இல்லை. அல்ல சரியாக கிடைக்கவில்லை. இங்கு நிர்வகிக்கப்பட்ட சட்டங்கள் நலத்திட்டங்களாகவே கண்ணுக்கு தெரிகின்றன. ஆனால் அவை எவையும் இங்கு சரியாக செயல்படுத்த முடியவில்லை. அந்நிய முதலீடு, அனைத்தையும் தனியார் மயம் ஆக்குதல் என்று இறங்கிவிட்டு சிறு முதலீட்டார்கள் வாயிலும் வயித்திலும் அடித்துவிட்டு- ஆட்டிப்படைக்கும் ஒரு கார்ப்பரேட் முதலைகளில் வாயில் அள்ளிப்போட்டுக்கொண்டிருக்கும் அழகான அரசாங்கம்.

ஒரு அகல கால் எடுத்து வைக்கிறார் ஒரு நாட்டின் பிரதமர். குறைந்த பட்சம் அந்த திட்டத்தின் பாதிப்புகளுக்கு ஆறுதலாக இருக்க கூடவா மனம் ஒத்துவரவில்லை. திட்டத்தை போட்டுவிட்டு ஃப்ளைட் பிடித்து ஏறிசென்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? அறிக்கைக்கு ஒன்றும் குறைவில்லை. அன்றாடம் ரோட்டு கடையில் சாப்பாடு போட்டு வித்துக்கொண்டு அடுத்த நாளை ஓட்டும் ஒரு சாதாரண வியாபாரி என்ன செய்ய போகிறான் என்னும் கவலை இருக்கிறதா? என்ன மேல்தட்டு மக்கள் மட்டும் தான் இந்தியாவா? இன்னும் அத்தனை பேருக்கும் வங்கி கணக்கு என்னும் திட்டம் முழுதாக நிறைவடைந்ததா இன்னும் இந்தியாவில் பாதிக்கும் அதிகமானோர் வங்கி கணக்கு இல்லாமல் தான் இருக்கின்றனர். பெருவாரியான மக்கள் தினக்கூலிகளாக தான் இருக்கின்றனர்.

இந்தியாவின் கட்டமைப்பு உயர்ந்து நிற்கும் மேல்தட்டு வர்கத்தின் இருபது சதவீதத்தில் இல்லை. அதன் கட்டமைப்பு உழைக்கும் வர்க்கத்தின் எண்பது சதவீதம் கையில் இருக்கிறது. இரண்டு நாட்களில் புடிங்கி நட்டுவிடுவார் பிரதமர் என்று கனவு கண்ட ஒவ்வொருவனும் இன்று க்யூவில் நின்றுக்கொண்டு அரை நாள் சம்பளத்தை விட்டு கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறான். நகை கடை டீவி ஃபூட்டேஜ் கேட்கிறார் பிரதமர் என்று சும்மா பூச்சாண்டிகளும் அவ்வபோது கிளம்பிக்கொண்டிருக்கின்றன. சில சமயங்களில் கதவை மூடிவிட்டு வீட்டுக்குள் உட்கார்ந்து வாய்விட்டு சிரித்துக்கொள்ள வேண்டும் என்றிருக்கிறது.

முடக்கப்படபோகிறது பணம் என்றால் அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். இனிமேல் தான் ஒவ்வொன்றாய் செய்வேன் என்றால் இது நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பது போல பத்து இருபது நாட்களில் முடிந்துவிடாது. இன்னும் இது இழுக்க போகிறது, நாம் தெருவரை வரிசையில் வியர்வையை துடைத்துக்கொண்டு நிற்கவேண்டியது தான். ஆம்.. பிரதமர் ஆப்ரிக்கா போவார் அப்போது.

நீங்கள் கருப்பு பணத்தை ஒழியுங்கள், கள்ள நோட்டை அழித்துவிட்டு உச்சி பார்த்து பெக்க பெக்கவென சிரியுங்கள் கவலையில்லை எங்களுக்கு. ஆனால் சரியான திட்டமிடல் அல்லாமல் எதற்காக அன்றாட பிழைப்பு பிழைப்பவன் வயிற்றில் அடிக்கிறீர்கள்? வந்து அந்த வரிசையில் நின்று பாருங்கயா. ஒண்ணும் புரியாத வயசானவங்க.. பல வருசமா சேர்த்து வச்சிருந்த ஐம்பதாயிரமும் அறுபதாயிரமும் செல்லாதுனு நினச்சுகிட்டு கலங்கி நிக்கிறாங்க. போயி மாத்துனா போலீஸ் புடிச்சுருமாம்.. இதுக்கும் வரிக்கட்டணுமாம் என்று சேர்த்து வைத்த காசுக்கெல்லாம் கலங்கி நிற்கிறது கூட்டம். ஆனால் உங்களுக்கு கவலை இல்லையே… ஏசி கார். இந்தியாவின் பிரதமர் என்னும் அந்தஸ்த்து. அடுத்து லிஸ்ட்டில் இருக்கும் நாட்டுக்கு போகணும் தானே.

கள்ள நோட்டை அழிக்குமா? கண்டிப்பாக. இதுவரை அடித்துவைத்திருந்த கள்ள நோட்டை அழித்துவிட்டு புதுசாக உருவாக்கும். அவ்வளவு தான். என்ன தீவிரவாதிகளில் திட்டமிடல் ஒரு ஆறு மாதம் தள்ளி போகும். இது தான் உங்கள் தொலைநோக்கு பார்வையா? கருப்பு பணத்தை மீட்டு தருமா? ஆமாம் கண்டிப்பாக. ஒரு வீடு, ஒரு கார் என சொகுசு வாழ்க்கையை எட்டி பார்க்க நினைக்கும் ஒவ்வொரு சிறு வியாபாரியின் வீட்டு கருப்பு பணமும் ஒன்று குப்பைக்கு போகும், அல்ல பெருமுதலாளி முதலைகளின் வாயிக்கு போகும்.


இந்த திட்டத்தை வைத்து இந்தியாவை வல்லரசாக ஆக்கிவிட முடியுமா? ஒரு ம**யும் புடுங்க முடியாது. இன்னும் ஆறு மாசம். கள்ள நோட்டு புழங்கும். கருப்பு பணம் தங்கமாகும் இல்ல அயல்நாட்டுக்கு அட்வான்ஸ் கோர்ஸ் பண்ண போகும். அவ்வளவு தான்.. அதுக்காக இன்னைக்கு சாமானியன் அவன் அன்றாட வாழ்க்கைய தொலைச்சுட்டு நிக்கிறான். நல்லா இருக்குயா உங்க முன்னேற்றம்…

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..