ஈகோ - கோ..!

அவள் அலுவலகத்தின் வெளியே அவன் நின்றுக்கொண்டிருந்தான். பலதரப்பட்ட மனிதர்கள் மாறி மாறி அவனை கடந்து சென்றனர். தூரமாக அந்த கண்ணாடி பில்டிங்கில் இருந்து அவள் வெளிப்பட்டாள்.

சங்கடத்தோடு வராத சிரிப்பை வரவைத்துக்கொண்டு அவன் கையை உயர்த்தி காட்டினான். அவள் மேலும் கீழும் தலையை ஆட்டிக்கொண்டே அவன் அருகில் வந்தாள். இருவரும் பக்கத்தில் இருக்கும் சாலையோர பூங்காவிற்கு சென்றனர்.

‘சொல்லுங்க.. என்ன விசயம்’ அவள் உர்ரென்று கடினமான குரலில் கேட்டாள். அவன் விசித்திரமாக நிமிர்ந்து அவளை பார்த்தான்.

’இல்ல.. அது.. கொஞ்சம் நம்ம விசயம் பத்தி பேசணும்..’ என்று அவன் சொன்னதும் அவள் முறைத்து பார்த்தாள். ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தாள்.

‘இனி பேச என்ன இருக்கு?’

‘தெரியல.. ஆனா பேசணும்..’

‘இங்க பாருங்க… இதுல பேச ஒண்ணும் இல்ல. எனக்கு வேலை இருக்கு.. ஏதோ பாக்கணும்னு சொன்னீங்களேனு வந்தேன்… இதுக்கு அப்பரம் என்னைய தொந்தரவு செய்யாதீங்க..’ சொல்லிவிட்டு அவள் திரும்பினாள். அவன் அவளது கையை பிடித்தான். அவள் வெறுப்பாய் உதறிவிட்டு வேகமாக நடந்தாள்.

’தேங்காத கண்ணு.. உனக்காக அழுக பாக்குதுடி… ஒரு பத்து நிமிசம் டி..’ அவன் கத்தினான். வேகமான அவள் கால்கள் சட்டென நின்றது. திரும்பாமல் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தது அவளது கண்கள். அவன் அவள் அருகில் வந்தான்.

‘இன்னொரு கல்யாணம்…? பண்ணிப்பியா?’ அவன் கேட்டான். அவள் கைகளை இறுக மூடிக்கொண்டாள்.

‘மிஸ்டர்… என்ன பிரச்சனை உங்களுக்கு..’ அவள் கோபமாக கேட்க அவன் தொண்டையை கரகரத்துக்கொண்டான்.

‘சாரி.. சாரி..’ கையை உயர்த்தி காண்பித்துவிட்டு அவன் அமைதியானான். மீண்டும் தொண்டையை செருமிக்கொண்டு அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான். அமைதி அங்கு நிலவியது. அவள் கண்களை அவன் உற்று பார்த்துக்கொண்டே இருந்தான். அந்த கண்களில் ஆயிரம் வெறுப்பு உமிழ்ந்துக்கொண்டிருந்தது. அவன் ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தான்.

‘சிரி மா… கோபமா என்னை விட்டு போகாத. சிரி…’ சொல்லிவிட்டு அவன் திரும்பினான். ‘காதலிக்கிறப்போ வாழ்க்கை இருந்த போலவே கல்யாணம் பிறகும்.. இருக்கிறதில்ல. இதுதான் வாழ்க்கை. இதுதான் நிதர்சனம் அப்படினு புரிஞ்சுக்கவே நமக்கு தெரியமாட்டேங்குது..’

‘இப்ப என்ன சொல்ல வர்ற..’

‘உனக்கு புரியலயா..’

‘என்ன? என்ன பிரிஞ்சு போக முடியலனு சொல்ல போறியா..’

‘இல்ல.. உன்னால என்ன பிரிஞ்சு இருக்க முடியாதுனு சொல்ல போறேன்..’ என்று அவன் சொன்னதும் அவள் ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தாள்.

‘உனக்கு உடம்பு முடியலனா கண்டபடி கோபபடுவ. சிரிக்கமாட்ட.. விளையாட்ட பேசினா கூட கோபம் வரும் உனக்கு… ஏனா.. என் கண்ணம்மா வலி தாங்கமாட்டா. உனக்கு என் சமையல் புடிக்கும், உனக்கு என் காதல் புடிக்கும், உனக்கு என் ஆசைகள் பிடிக்கும். உன்னோட உலகம் முழுக்க நான் மட்டும் தான். நான் இல்லனா உனக்கு உலகமே இருக்காதுடா கண்ணம்மா..’

‘ஹா… என்ன… அப்படியே உருக பேசி… மயக்குற எண்ணமா?’

‘உன்ன பேசி சமாதானபடுத்தி அழைச்சுட்டு போகுறது என் எண்ணம் இல்ல. நீ உன் மனசு சொல்லுறத கேளு… ஆனா.. ஒரு நாள் உன் மனசு. நான் வேணும்னு சொல்லும். அப்போ.. அவன இப்படி அசிங்கபடுத்திட்டோமே… நாம தானே வேணாம்னு வந்தோம், திரும்ப போனா என் கௌரவம் என்ன ஆகுறதுனு எதையும் யோசிக்காத. என்னைக்கும்.. இவன் உனக்காக தான் காத்துட்டு இருப்பான். அத சொல்லத்தான் வந்தேன்..’

‘அடேயப்பா.. சினிமா தோத்துரும்..’ அவள் கேலி செய்தாள். அவன் புன்னகை செய்தான்.

‘கண்டிப்பா. நாளைக்கு நான் ஒரு படம் எடுக்குறப்போ.. அதுல போல்ட்டா.. அழகா.. என்னைவிட பெரிய.. ஒரு பொண்ணு இருப்பா. அவளுக்கு கல்யாணம் ஆகும்… எதிர்பார்ப்பு ஈடேறலனு அவ புருசன விட்டு போவா… அதுக்கு அப்பரம்… எல்லாம் என் கற்பனை தான். ஒரு நாள்… அவ புருசன் இல்லாம உலகமே இல்லனு சொல்லிட்டு அவன் ஓடி வந்திருவா..’

‘ஹலோ… இது விண்ணை தாண்டி வருவாயா லைன் தானே… இப்படி எழுதினா இந்த ஜென்மத்துக்கு நீ டைரக்டர் ஆகமாட்ட..’

‘ஆமா.. உன்ன தான் கேட்டாங்க. இது எத தாண்டியும் வரல… இது என் கதை..’

‘ஏன்டா.. கதையில பட்டி டிங்கரிங் பண்ணிட்டு உன் கதைனு சொல்லுறியே வெட்கமா இல்ல..’

‘தே சீ.. போ டி.. நான் செமயா ஒரு நாள் கதை எழுதி மணிரத்னம் போல ஆகல..’

‘முதல்ல பேரரசு போல படம் எடுத்து காட்டுறா டுபாகூரு…’ என்று அவள் சொல்ல அவன் ஆடிப்போய் நின்றான்.

‘என்னடி டுபாகூருனுலாம் சொல்லுற..?’ அவன் கேட்டதும் முறுக்கிக்கொண்டிருந்த அவள் சட்டென அமைதியானாள்.

‘ஏன்டா.. என்ன பாக்க ஒரு வாரம் ஆகுதா உனக்கு.. அப்பப்பா.. டைரக்டர் சாரே.. செம டைலாக்லாம் பேசுறீங்க. அப்படியே உருகிட்டேன்.. ஓடி வந்து அப்பவே முத்தம் கொடுத்திருப்பேன்.. பப்ளிக்குனு பாத்தேன்… அதெப்படி.. எனக்காகவாம்.. நான் ரொம்ப வருத்தப்படுவேனாம்.. டே லூசு.. ஆமா டா.. நீ தான்டா எனக்கு எல்லாம். லவ் யூ டா.. எரும மாடு..’ அவள் செல்லமாக சொல்ல அவன் வெட்கப்பட்டு நின்றான்.

‘எனக்கு புரியுதுடா… ஏதோ டென்ஷன் நான் தப்பா பேசிட்டேன். நீ கண்டிப்பா ஜெயிப்ப டா.. நான் உனக்கு என்னைக்கும் பலமா இருப்பேன்டா..’ அவள் அவன் கையை பிடித்துக்கொண்டு சொல்ல அவன் உருகிப்பார்த்தான்.

‘சரி சரி.. ஓவரா ஃபீல் ஆகாத.. வீட்டுக்கு போயி சமைச்சு வை. நான் வேலைய முடிச்சுட்டு வர்றேன்… இன்னைக்கு உன் டர்ன் சமையல். தெரியும் தானே..’ அவள் சொல்ல அவன் பொய் சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு மேலும் கீழும் தலையை ஆட்டினான்.


‘ஓடு ஓடு..’ என்று அவள் அவனது முதுகில் கையை வைத்து தள்ள.. அவன் சிரித்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு விலகினான்.

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!