மாவீரன் கிட்டு - இக்காலத்திற்கும் பொறுத்தம்

#MaaveeranKittu சாதிய வேறுபாடு, உரிமை மறுக்கப்பட்ட ஒரு சாரரின் வலிகள் இன்னும் இங்கு பலருக்கு உரைக்கப்படாமலே தான் இருக்கிறது. என் அப்பா அம்மா படித்துக்கொண்டிருந்த சமயத்தில் காமராஜர் அனைவருக்கும் கல்வி வழங்க ஏற்பாடு செய்திருந்தார். கீழ சாதிய ஆட்கள் பள்ளிக்கு வருவார்கள் என்னும் காரணத்திற்காக என் அப்பாவும் அம்மாவும் வீட்டின் வெளியேவே சட்டையை கழட்டி போட்டுவிட்டு தலையில் தண்ணீரை விட்டுக்கொண்ட பிறகு தான் வீட்டுக்குள் செல்வார்களாம். சிறு வயதில் கேட்டது.. அன்று முதலே சாதிய பாகுபாடு மீது எனக்கு தீராத வெறுப்பு.

நான் படிக்கும் காலத்திலே கூட சிலர் - இவன் கீழ சாதியன்டா என்று சொல்லி ஒதுங்கி செல்வர். வீம்புக்கு என்றே அவர்கள் ஒதுக்கி வைத்தவனோடு கை குலுக்கிக்கொள்வேன்- கட்டி பிடித்துக்கொள்வேன். படித்துவிட்டோம், பெரிய உத்தியோகம் கொண்டுவிட்டோம் என்று விலகிவிடுவதற்கில்லை. இன்றும் சாதிய பாகுபாடும், சாதிய நிலைப்பாடும் படித்தவனிடமும் பல்லை இளித்துக்கொண்டு நிற்கிறது.

சில நாட்களுக்கு முன்னர் குழந்தைக்கு ரத்தம் வேண்டும் என்னனும் செய்தி. அதிலும் சாதிய குறிப்பிட்டு அந்த சாதியாளரின் ரத்தம் வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. உடை மாறியானது, இருக்கும் இடம் மாறியானது - ஆனால் அழுக்கு படிந்த அசிங்கமான எண்ணம் மட்டும் இன்னும் இந்த மேல்தட்டு மக்களிடமிருந்து மாறவில்லை.

1980களில் நடக்கும் ஒரு கதை. தாழ்த்தப்பட்டவன் மேல் வர துடிக்கிறான். அவன் சரிசமமாக நிற்பதை விரும்பாத மேல்தட்டு என தங்களை சொல்லிக்கொள்ளும் கூட்டம் அவனை அழிக்க நினைக்கிறது. நிலைக்கால சாதிய பிரச்சனைகளை முன்வைத்து நிற்கிறது.

அதிலும் இக்காலத்தில் நாம் குறை சொல்லும் இட ஒதுக்கீட்டின் காரணம் கூட இந்த கதையில் மறைந்து தான் இருக்கிறது. என்ன தாழ்விலிருந்து மேல் வந்தவன் தன்னோடு கீழே இருந்தவனை இப்போதெல்லாம் தூக்கிவிட நினைப்பதில்லை - அவன் இன்னும் உயர்ந்துக்கொண்டே போகிறான் சலுகைகளை வைத்து. அது தான் கொஞ்சம் நெருடலான விசயம்.

சரி கதை.. இக்காலத்திற்கு வரவில்லை. முழுதும் அக்காலத்திலே நடக்கிறது. ஆனால் அதில் சொல்லப்படும் எதுவும் இக்காலத்திலே மறைந்துவிட்டதாகவோ, அல்லது மறந்துவிட்டதாகவோ எனக்கு தெரியவில்லை. மாவீரன் கிட்டு. சில நாட்களுக்கு முன்னர் ஒரு பள்ளியில் மாணவன் கோபம் கொப்பளிக்க பேசினான் - ‘பரப்பய படிக்கிறான்.. உனக்கு படிக்க கேடா..’ என்று வாத்தியார் கேட்டானாம். கிட்டு (எ) கிருஷ்ணமூர்த்தி மாநிலத்திலே முதல் மாணவனாக வரும்பொழுது ஏனோ எனக்கு அந்த சிறுவன் கோபத்தோடு பேசிய வீடியோ ஞாபகத்திற்கு வந்து கை முறுக்கிக்கொண்டது.

ஏனோ படத்தில் நிறைய நடிக்க இடம் இருந்தும் - விஷ்ணு அந்த கோபத்தை வெளிக்காட்டவில்லை. பார்த்திபனின் முதிர்ச்சியான நடிப்பு இங்கு அவசியம் தேவைபடுகிறது. வசனங்கள் ஒவ்வொன்றும் தீப்பொறியை கிளப்பினாலும் - இன்னும் வேண்டும்.. இன்னும் சொல்- சாதீயை பற்றி இன்னும் விவரி இந்த மதிக்கெட்ட புத்திக்கு செருப்படி காட்டு என்று என் மனம் கேட்டுக்கொண்டே தான் இருந்தது.

படமாக நிறைய குறைகள் கண்ணில் பட்டாலும்.. இது சொல்லவேண்டிய ஒன்று. என் நண்பனை, என் உறவை, என் முன்னோனால் மட்டுறுத்தப்பட்ட ஒரு இனத்தை பற்றி சொல்லவேண்டிய ஒன்று. அதை சொன்னதற்காக மட்டுமே - மாவீரன் கிட்டுவை பார்க்கலாம்.

வீரம் - எதிர்த்து நிற்பது மட்டுமல்ல. தியாகித்து நிற்பதும் கூட. தியாகத்தால் விளைந்த பூமி இது. ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு இனம், ஒரு ஜாதி - இப்படி ஒவ்வொன்றும் மேலெழும்பி வர அதற்கு பின் நிறைய தியாகம் இருக்கிறது. அந்த தியாகத்தை உணர்ந்து அவர்கள் விட்ட வழியை பின்பற்றி சுயநலமற்ற பொதுநலத்தோடு நாம் வளரவேண்டும். நாம் முன்னேறும் போது - நம்மை சார்ந்தோரையும் உடன் அழைத்து முன்னேறும் பக்குவம் வேண்டும். இதை சலுகைக்கு உட்பட்ட நண்பர்கள் மட்டுமல்லாது நாமும் புரிந்துக்கொள்ளவேண்டும்.

அடிப்பட்ட இனத்திலிருந்து எழுபவனை காட்டிலும். எழுபவனுக்கு மேல்தட்டு இனத்தவன் கைகொடுத்து அணைத்துக்கொள்பவன் நிறைய வேண்டும். ஒற்றை சமூகம்.. ஒற்றை இனம். ஒற்றை உலகம். ஒரே வாழ்க்கை. நிலை வேண்டும்..!!!!

- தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!