முப்பருவ காதல்

ரகு அந்த அமைதியான இரவில் கதை எழுதிக்கொண்டிருந்தான். அவன் மனைவி பக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்தாள். அவள் குழந்தைகள் பள்ளி டூர்க்கு வெளியூர் சென்றிருந்தார்கள். தூக்கத்திலே புரண்ட அவன் மனைவி இன்னும் அவன் பேனாவும் கைகளோடு இருப்பதை பார்த்துவிட்டு கண்களை கசக்கிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தாள்.

‘என்னடா பண்ணுற..?’ அவள் கேட்டுக்கொண்டே எழுந்தாள். அவன் புன்னகையோடு அவளை பார்த்தான்.

‘ஒரு கதை மா…’

‘என்ன கதை…? வழக்கம் போல இந்த கதைக்கும் ஹீரோ ரகு.. ஹீரோயின் சுவாதியா…?’ அவள் சிரித்துக்கொண்டே கேட்டாள்.

‘உன்னையும் என்னையும் விட்டா.. எனக்கு வேற யாருடி கண்ணம்மா தெரியும்..’ அவன் காதல் பார்வையோடு சொல்ல அவள் சிரித்தாள்.

‘அது சரி… இப்போ உங்க கதை. கொஞ்சம் படிச்சு காட்டுறீங்களா..?’ அவள் கேட்டாள். அவன் தொண்டையை கரகரத்துக்கொண்டான். படிக்க தொடங்கினான்.

---

ரகு அந்த பூங்காவின் வாசலிலே அமைதியாக நின்றுக்கொண்டிருந்தான். தூரத்திலிருந்து சுவாதி சிரித்த முகத்தோடு ஓடி வந்தாள். அவன் உர்ரென்றே நின்றுக்கொண்டிருந்தான்.

‘ஹே.. ரகு சாரி டா.. லேட் ஆகிடுச்சா..’ அவள் கேட்டாள். அவன் இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினான். அவள் தோப்புக்கரணம் போடுவது போல இன்னும் பாவனை செய்தாள். அவள் அப்படி செய்கையில் இன்னும் அழகாக இருந்தாள். அவன் சட்டென முகத்தை திருப்பிக்கொண்டான்.

‘ஹே.. ரகு.. கோபமாடா..?’ அவள் பாசமாக கேட்டாள். அவன் சற்று நடந்து சென்றான். அவள் அவனுக்கு பின்னாலே ஓடிவந்தாள்.

‘ரகு…’ அவள் சத்தமாக அழைத்தாள். அவன் திரும்பினான்.

‘சுவாதி… இது செட் ஆகாது. லெட்ஸ் எண்ட் இட்..’ என்றான். அவள் விசித்திரமாக பார்த்தாள்.

‘எதை..?’ அவள் புரியாமல் கேட்டாள்.

‘நம்ம லவ்.. இதை… இதை தான்…’

‘எதுக்காக..?’

‘இல்ல… எங்க வீடு. எங்க அப்பா. என் குடும்பம்… சூ.. செட் ஆகாது டி..’ அவன் காட்டமாக சொன்னான்.

’ஓ…’ என்று சொல்லிவிட்டு அவள் திரும்பினாள். அதுவரை குழந்தை முகம் போன்றிருந்த அந்த முகத்தில் ஒரு இறுக்கம் தொற்றிக்கொண்டது.

‘நீ கேக்கலாம்… இது லவ் பண்ணுற முன்ன தெரியலயா.. அந்த ஜெமினி ப்ரிட்ஜ் மேல நைட் கத்திகிட்டு ஓடினப்போ தெரியலயானு.. ஆனா…’ அவன் இழுத்தான். அவள் திரும்பி அவன் முகத்தை பார்த்தாள்.

‘சுவாதி… இது என் தப்பு தான். இல்லனு சொல்லல.. பட்…’ அவன் இழுத்தான். அவள் ஒரு பெருமூச்சு வாங்கினாள். திரும்பினாள்.

‘இப்ப என்ன பிரச்சனைனு நேரா சொல்லுறியா…’ அவள் இன்னும் இறுக்கமாக கேட்டாள்.

‘இல்ல சுவாதி…’

‘என்ன பிரச்சனைனு மட்டும் சொல்லணும்..’ அவள் கோபமாக சொன்னாள். அவன் விழித்தான். அவள் கோபம் கொப்பளிக்கும் கண்களையே பார்த்தான். பேசத்தொடங்கினான்.

‘நான் அதிகமா உன்கிட்ட என் குடும்பத்தை பத்தி பேசுனது இல்ல. நீயா கேட்டப்பவும் நான் சொல்லல… இப்ப சொல்லுறேன். என் அப்பாவும் அம்மாவும் அந்த காலத்துல ரொம்ப கஷ்டபட்டவங்க. ஒவ்வொரு நாளையும் எப்படி ஓட்டுறதுனு தெரியாம விழிச்சவங்க. அப்படிப்பட்ட ஒருத்தர் ஒவ்வொரு அடியா முன்னேறி இப்ப நாங்க ஒரு நிலையான வாழ்க்கை வாழுற அளவுக்கு வந்திருக்கோம். அவங்க பணம் இல்லாம இருந்தப்போ.. ஒரு சொந்தம் ஒரு பந்தம் அவங்கள மதிக்கல. இப்பதான் ஒவ்வொரு கூட்டத்துக்குள்ளயும் போகுறப்போ அவங்க காலர தூக்கிவிட்டுட்டு போறாங்க… ஆனா நம்ம லவ்.. இந்த கல்யாணம் நடந்தா… வேணா சுவாதி. என்னைக்குமே எங்க அப்பா அம்மா தலை கீழ குனிஞ்சு தான் இருக்கணுமா.. அதுக்கு நான் காரணமா இருக்கணுமா… என்னால முடியாது சுவாதி..’ அவன் கண்கள் கலங்க பேசினான். அவள் அவன் முகத்தை கேவலமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘சுவாதி…’ என்றான். அவள் இன்னும் முறைத்துக்கொண்டே இருந்தாள்.

‘சுவாதி…’ அவன் இன்னும் அழைத்தான். அவள் மீண்டும் மூச்சை இழுத்து கண்ணை மூடி திறந்தாள்.

‘இங்க பாரு. லவ் பண்ணுறது தப்பு பண்ணுறோம்னு நினைக்கிறத மொதல்ல எல்லாரும் மாத்திக்கணும். லவ்னா… தப்பு இல்ல. அத புரிஞ்சுக்கணும். ஒரு பொது சமூகத்துல, பொதுவாக  போற உலகத்துல உங்க தரப்புல முதல்ல பொதுவெளியில வந்த குடும்பமா தான் உங்க குடும்பம் இருக்கும். இதுக்கு நீங்க வெட்க பட தேவையில்ல.. தலையை நிமிர்ந்து வரலாம்’

‘இல்ல சுவாதி…’ என்று அவன் இழுக்கும்போதே அவள் கையை உயர்த்தி அவன் பேசுவதை நிறுத்தினாள்.

‘நான் முடிக்கல…’ என்று சொல்லிவிட்டு இன்னும் பேசினாள். ‘இது… நீ சொன்ன சாக்குக்கான பதில். ஒருவேல இந்த சந்தேகம் உன் மனசுல இருந்தா.. இது தான் என்னோட பதில். இப்ப உண்மைய சொல்லு… எதுக்காக ப்ரேக் அப்..?’ அவள் திடமாக கேட்டாள்.

‘அதான் .. அதான்டி உண்மை…’

‘செருப்பு பிஞ்சுரும்…’ அவள் சட்டென சொல்லிவிட்டு பல்லை கடித்தாள். ‘உன் மொகரைய பாத்தா எனக்கு தெரியாதா..? எது உண்மைனு…?’ என்று சொல்லிவிட்டு இன்னும் பல்லை கடித்தாள். அவன் தலையை கீழ்குனிந்துக்கொண்டே நின்றான்.

‘அடிங்க.. சொல் டா..’ அவள் ஆக்ரோஷமாக பேசினாள். அவனுக்கு உள்ளுக்குள் நடுங்கியது.

‘இல்லடி.. எங்க அப்பா சின்ன வயசுல இருந்து என்னைய என் இஷ்டதுக்கு விட்டதே இல்ல. நான் எது கேட்டாலும் அவர் இஷ்டதுக்கு தான் செய்வார்.. விஸ்காம் படிக்கிறேன்னு சொன்னேன்.. பிசிஏ படிக்க வச்சார். சரி.. மீடியால வேலைக்கு போகுறேன்னு சொன்னேன். ஐடிக்கு தான் போகணும்னு சொன்னார். இது ஏன்.. இந்த கலர் டிரஸ் போடணும்.. எத்தனை மணிக்கு சாப்பிடணும் போகணும்னு எல்லாமே அவர் தான் சொல்லுவார். அவர எதிர்த்து பேசினதே இல்ல… கண்ணம்மா.. உண்மைய சொல்லவா? என்னோட வாழ்க்கையும் சேர்த்து அவரே தான்டி வாழுறார்..’ அவன் சொல்லிவிட்டு ஏக்கமாக பார்த்தான்.

அவள் முகத்தை அறுவறுப்பாக வைத்திருந்தாள்.

‘இந்த சந்தோஷ் சுப்ரமணியம் பட டயலாக்லாம் விடாத.. அதனால உன் அப்பாகிட்ட பேச பயம். அந்த பயத்தால நான் கிடைக்கலனாலும் பரவாலனு எண்ணம்.. அதானே..’ அவள் கேட்டதும் அவன் பல்லை இளித்தான். அவள் முகத்தை இன்னும் அறுவறுப்பாக வைத்துக்கொண்டு ‘து’ என துப்பினாள். அவன் முகத்தை துடைத்துக்கொண்டு இன்னும் இளித்தான்.

‘மூதேவி.. இத சொல்லி தொலைய வேண்டியது தானே.. நான் வந்து உங்க வீட்டுல பேசுறேன்…’ அவள் தைரியமாக சொன்னாள்.

‘அது எப்படிடீ… பையன் தானே பொண்ணுவீட்டுக்கு போவாங்க. இது எனக்கு கௌரவ பிரச்சனை இல்லயா…’ அவன் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான்.

‘ஆமா.. கேக்க சொன்னதுக்கே நான் வேணாங்குற மூதேவி. தொட நடுங்கி.. எப்படிடா உன்னய போயி நான் லவ் பண்ணினேன்…? நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன்… தைரியமா போ… நான் உன்ன மாப்பிள்ளை கேட்டு வர்றேன்..’ என்றாள் அவள் திடமாக. அவன் மீண்டும் பல்லை இளித்துவிட்டு அவள் கன்னத்தை கிள்ளிக்கொண்டான்..

‘இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல…’ என்று அவள் காதலோடு ஒரு சிரிப்பு சிரித்தாள். தொடர்ந்து, ‘ஆனாலும் உங்க வீட்டுல உனக்கு ஒரு சுதந்திரமே தரது இல்லதான். நம்ம பசங்களுக்கு இப்படி பண்ணக்கூடாது ஓகேவா..’ அவள் கேட்டாள். அவன் தலையை மேலும் கீழும் வேகமாக ஆட்டினான். அவள் செல்லமாக அவன் தலையை தடவிக்கொடுக்க இருவரும் அங்கே சிரித்துக்கொண்டார்கள்.

---

கதையை படித்துவிட்டு ரகு சுவாதியை பார்த்து சிரித்தான். அவள் ஏதோ யோசனையிலே இருந்தாள்.

‘என்னடி..? கதை எப்படி..?’ அவன் கேட்டான்.

‘மொக்க… கேவலமா இருக்கு…’ அவள் சொன்னாள்.

‘என்னடி இப்படி சொல்லிட்ட… இந்த கதைய போயி மொக்கங்குற… எவ்வளவு செமயா இல்ல..’ அவன் இன்னும் ஏக்கமாக கேட்டான். அவனது முகம் தொங்கிபோனது. அவள் சிரித்தாள்.

‘அய்யயோ.. கண்ணா. நல்லா இருக்குடா கதை. ஒரு சின்ன கான்வர்சேஸன் அவ்வளவு தான்ல.. குட்.. நல்லா இருக்கு..’ அவள் அவனை ஆஸ்சுவாசபடுத்தினாள்.

‘அப்பரம் நீதானே நல்லா இல்லனே..’ அவன் இன்னும் ஏக்கமாக கேட்டான்.

‘அதுவா… இல்ல.. இந்த கதையில எங்கேயோ ஏதோ உண்மை இருக்குற போல இருந்துச்சு. அதான்… அதான் டவுட்டு…’ அவள் அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். அவன் மழுப்பினான். சிரித்தான்.

‘அதுவும் இல்லாம.. சார் வேற பசங்களுக்கு ஓவர் சுதந்திரம் தர்றீங்க… நான் வேணாம் வேணாம்னு சொல்லியும் பசங்கள டூருக்கு வேற அனுப்புறீங்க.. இந்த கதைப்பொண்ணும் எங்கேயோ நடந்திருக்கும் போலவே…’ அவள் இன்னும் சந்தேகமாய் கேட்டாள்.

அவன் மீண்டும் பல்லை காண்பித்தான்.

‘டேய்…’ அவள் இழுத்தாள். அப்பொழுது அவனின் அலைப்பேசி மணி ஒலித்தது. எடுத்து பேசினான்.

அவனின் சிரித்த முகம் சட்டென மாறியது. ஏதோ பதட்டமாய் பேசினான். விழித்தான். சட்டென கையில் இருக்கும் அலைப்பேசி கீழே விழுந்தது. சுவாதி பதறினாள்.

‘என்னடா.. என்ன ஆச்சு..?’ என்றாள் பதட்டமாக. அவனுக்கு வார்த்தை வரவில்லை. திணறியது. விழித்தான். தொண்டை அடைத்தது. பதறினான்..

‘குழ.. குழந்தை.. குழந்தைங்க..’ அவன் இழுத்தான்.

---

‘டேய் நிறுத்து நிறுத்து நிறுத்து…’ அந்த டேபிளில் உட்கார்ந்திருந்த ரகுவிடம் அவன் பின்னால் இருந்து சுவாதி கேட்டாள்.

‘என்னடி…?’ ரகு கதையிலிருந்து பார்வையை எடுத்து சுவாதி பக்கம் திரும்பி கேட்டான்.

‘டே.. கிழவா? குழந்தைகள கொல்ல தானே போற…?’ அவள் கேட்டான். அவன் பல்லை இளித்தான்.

‘ஏன்டா.. கிட்டதட்ட நாப்பது வருசமா கதை எழுதுற… பசங்களுக்கு கல்யாணம் பண்ணி பேரக்குழந்தைகள பாத்த பிறகு கூடவா உன் கதைகள பாசிட்டிவ்வா முடிக்க தோணமாட்டேங்குது. கிழட்டு மூதேவிடா நீ…’ முகம் எல்லாம் சுருக்கத்தோடு இருந்த சுவாதி அவனிடம் சொன்னாள்.

‘அப்போ…’ அவன் இழுத்தான்.

‘ஒண்ணும் இழுக்காத… குழந்தைங்க வந்துச்சு. எல்லாம் சந்தோசமா இருந்தாங்கனு முடி…’ என்று சொல்லிவிட்டு அவள் நகர்ந்தாள். அவன் வாய் சிரித்தது. தளர்ந்த அவன் கைகள் நடுக்கத்தை பற்றிக்கொண்டு அவன் சொன்ன வாசகத்தை எழுத தொடங்கியது.


‘கதைக்குள்ள கதை எழுதுறாராம்.. பெரிய கிரிஸ்டோஃபர் நோலன்னு நினப்பு..’ அவள் முனகிக்கொண்டே வெளியில் சென்றாள்.

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி