Skip to main content

களம் காணீர்

’நகுலா… நகுலா…’ அந்த காட்டு பகுதியில் ரகு கத்திக்கொண்டே ஓடினான். ஒரு மர மறைவிலிருந்து நகுல் வெளிப்பட்டான். அவனை பார்த்த நொடியில் ரகு ஒரு பெருமூச்சு விட்டான்.

அடுத்த நொடி இரண்டு குச்சிகளில் நடுவில் ஒரு குச்சியில் முயல் தோலுறித்து தொங்க, கீழே நெருப்பு மூட்டிக்கொண்டிருந்தது.

‘சைவரு… கிழங்கு எதையும் காணல.. இதான் இன்னைக்கு.. கோச்சுக்காதம்முடே…’ நகுல் ரகுவை பார்த்து சிரித்துக்கொண்டே சொன்னான்.

‘பொறவு.. விசயம் காதுக்கெட்டுச்சா?’ நகுல் மீண்டும் கேட்டான். இன்னும் ஒரு கையால் முயல் கறியை உருட்டிக்கொண்டே.

ரகு பக்கத்தில் இருக்கும் ஒரு அலுமினிய கிண்ணத்தை எடுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த காட்டோடையின் தண்ணீரை நிரப்பினான். ஓடை ஓர ஆலமர வேரையும், பக்கத்திலிருந்த சிறு இலைகளையும் பிய்த்துக்கொண்டான். அடுத்து ஒரு நீண்ட நெடிய மரத்தின் கீழ் கிளையை கத்தியால் வெட்டினான்.

மேலாதிய பட்டையை சீவிக்கொண்டே பேசினான்.

‘கம்பேனி முடிவெடுத்துட்டாங்க’ என்றான். இன்னும் சீவிக்கொண்டே.

‘என்னானு…’ நகுல் கேட்டான்.

‘நாளைக்கு அறிவிப்பு வரும். அப்போ தெரியும்…’

‘இத சொல்ல தான் வந்தியா…?’

‘இல்ல… இனி எனக்கு வெளிய வேலை இல்ல. நாம இந்த போராட்டத்த ஆரம்பிக்கிறப்போ எடுத்த முடிவு தான். இனி நான் இங்க தான் இருப்பேன்… ஆயுத எதிர்ப்பு தீர்க்கமாகவேண்டிய சூழல்!’

‘ஆஹா… பாருடா…’ உருட்டிக்கொண்டிருந்த முயல் கறியை விட்டுவிட்டு எழுந்து வந்தான் நகுல். ரகு இன்னும் செதுக்கிக்கொண்டே இருந்தான்.

‘வியாபாரம் மட்டும் தான் இங்க பெருகிக்கெடக்கு நகுலா.. வியாபாரம் மட்டும் தான். சுதந்திரம் அடைஞ்சு இருபத்தி அஞ்சு வருசம் ஆகுது. ஆனா…. என்னைக்கு நமக்கு சுதந்திரம் கிடச்சுச்சோ அன்னைக்கே வியாபாரி நம்ம நாட்ட ஆள ஆரம்பிச்சுட்டாங்க…’ ரகு கோபமாக சொன்னான்.

‘பெரிய அளவுல மட்டும் இல்ல ரகு. சின்ன சின்ன ஊருலயும் தான்… இங்க அடிமைப்பட்டவன் அடிமைப்பட்டவன் தான். ஆளப்பட்டவன் ஆளப்பட்டவன் தான்… அசிங்கமா இருக்குயா..’

சட்டென சீவுவதை நிறுத்திவிட்டு நகுலை உற்று பார்த்தான். ‘உழைகிறவன் எதுக்குயா வெட்கபடணும். ஏழைப்பட்டவன் எல்லாம் அடிமைப்பட்டவன் இல்ல. எதிர்த்து குரல் கொடுக்குறவனுக்கு உன் நிலைமை தான் வரும். இது தான்…. ஜனநாயக ஆட்சி முறை இல்ல இது. பணநாயகம். முதலாளித்துவம். அது மட்டும் தான் இங்க இருக்கு. வேற எதுவும்… எதுவுமே இல்ல..’ கையில் இருக்கும் கத்தியை தூக்கி நகுலை ஆவேசமாக பார்த்தான். அவன் கண்ணில் அப்படி ஒரு கோபம் தெரிந்தது.

’இப்ப என்ன சொல்லுறாங்க…?’ நகுல் கேட்டான்.

‘நீயும் நானும் தீவிரவாதிங்கனு நாளைக்கு அறிவிக்க போறாங்க. நம்மல கண்டதும் சுட உத்தரவு வர போகுது..’ மரக்கட்டை கொஞ்சம் இளகி வழவழப்பாக உள்ளே ஈரப்பத்ததோடு இருந்தது. அதை பல துண்டுகளாக வெட்டிக்கொண்டே சொன்னான் ரகு.

ரகு சொன்னது நகுலுக்கு கொஞ்சம் அதிர்வாய் இருந்தது. விழித்தான்.

’நான் சொன்னேன்ல.. நான் அப்பவே சொன்னேன்.. இப்ப பாரு? இன்னும் போராட்டமே ஆரம்பிக்கல. அங்க அங்க நடந்த கலவரத்திலே.. நீயும் நானும் தீவிரவாதி ஆயாச்சு… சண்முகம் ஐயா என்ன சொன்னார்..?’ நகுல் கேட்டான்.

சீவிய கட்டையையும் அந்த கிண்ணத்தில் போட்டு தீயில் காட்டிக்கொண்டே பேசினான் ரகு.

‘கைது பண்ணிட்டாங்க. எமர்ஜன்ஸி டைம். நாம எதுவும் பண்ண முடியாது. அவங்களாலயும் எதுவும் பண்ண முடியாதுன்னுட்டாங்க… ஆலையில நடக்குற அநியாயம் நடந்துகிட்டே தான் இருக்க போகுது. போராட்டம் வழியிலயும், எதிர்த்து குரல் கொடுக்குறதால மட்டும் எதுவும் நடந்திறாதுனு நான் புரிஞ்சுண்டேன் டா…’ ரகு சொன்னான்.

‘நீ….’ கேள்விக்குறியோடு நகுல் கேட்க ரகு தலையை ஆட்டிக்கொண்டே எழுந்தான்.

‘சண்முகம் ஐயாவ போலீஸ் காரங்க புடிக்கிற முன்ன… அவர் என்கிட்ட ஒண்ணு சொன்னார். சே குவேரா ஆரம்ப காலகட்டத்துல பயணப்பட்ட சமயம்… அவர் முழுசா நம்பின ஒண்ணு. ஆயுதம் இல்லாத புரட்சிங்கிறது சாத்தியமே இல்ல.. அப்படினார். எனக்கும் அதுதான் உண்மைனு தோணுது டா…’

‘அருமை… செம… இப்பவாச்சும் என் வழிக்கு வந்தியே… அப்போ நம்ம பசங்கள இறக்கிறலாமா…?’ நகுல் கேட்ட சமயம் பாத்திரத்திலிருக்கும் தண்ணீர் கொதித்துக்கொண்டிருந்தது.

அதை உற்று பார்த்துக்கொண்டிருந்த ரகு இன்னும் கூரிய கண்களோடு சொன்னான்.

‘கட்டை இளகினதும் தான் சாப்பிடணும். இளகுற சமயம் வரட்டும்…’ என்றான். அவன் சொன்னதில் ஆழந்து அர்த்தங்களை வாங்கிக்கொண்டு நகுலும் கொதிக்கும் அந்த தண்ணீரை பார்த்துக்கொண்டிருந்தான்.

அடுத்த சில நாட்கள் அவர்கள் கூட்டிய இளையோர் கூட்டம் முழுதும் கடினமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.

‘சும்மா கத்தி.. பாஞ்சு சண்டை போடுறது பயிற்சி மட்டும் பத்தாதுடா நகுல். நமக்கு துப்பாக்கி வேணும்…’ ரகு ஒரு நாள் ஆழ்ந்த யோசனையில் சொல்லிக்கொண்டிருந்தான்.

‘அட… இத நான் முன்னவே யோசிச்சேன். போடியனூர் ரெட்டியார் ஆளு ஒருத்தன பாத்தேன். யானை தந்தம் வேணுமாம் அவருக்கு. அத கொடுத்தா நல்ல பணம் பாக்கலாம்.. என்ன சொல்லுதே…’ நகுல் ஆழமாய் உட்கார்ந்து கேட்டான். ரகு கேவலமான ஒரு பார்வையை அவன் பக்கம் திரும்பினான்.

‘உன்னோட வாழ்க்கை யாரால நகருதோ.. அவங்களுக்காக தான் நீ உன் வாழ்க்கையே வாழ ஆரம்பிப்ப. காசு வேணும்னா.. நாம யாருக்காக போராடுறோமோ அவங்க கிட்ட போகணும். மக்கள்கிட்ட போகணும்… எப்ப நீ ஒரு முதலாளிக்கு வேலை செய்ய ஆரம்பிக்கிறியோ அப்பவே நீ அவனுக்கு அடிமையாகிட்ட..’

‘அது சரி.. எது சொன்னாலும் குதர்க்கம் சொல்லு…’ என்று நகுல் சலித்துக்கொண்டான். ரகு சிரித்துக்கொண்டே திரும்பினான்.

‘அந்த ஆலையில இருக்குற ஒவ்வொரு ஆளோட கதறல் சத்தமும் அப்படி கேக்குதுடா எனக்கு. பெரிய பள்ளிக்கூடத்துல டீச்சரா ஆகியிருக்க வேண்டிய நீயும், என்ஜினியர் ஆக ஆசைப்பட்ட நானும்.. இப்படி காட்டுக்குள்ள தலைமறைவா… அன்னைக்கு சுக்கு நூறாகி செத்துபோன உன் அப்பா… வலிக்குதுடா…’ ரகு ஆழ்ந்து போய் சொன்னான்.

‘ரகு… செண்பா என்ன சொன்னா?’ நகுல் சட்டென பேச்சை மாற்றினான். ரகு விசித்திரமாக அவனை பார்த்தான்.

‘என்னடா…? அப்பாவ நினைச்சு எனக்கு வலிக்குதுடா. உனக்கு எப்படிடா…’ ரகு கேட்ட மாத்திரத்தில் நகுல் கண்களில் நீர் கசிய உதட்டில் சிரிப்போடு பேச தொடங்கினான்.

‘வலி அழுக கூடாது டா. அந்த வலி… என் அப்பாவோட கதறல் சத்தம் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு. அந்த ஆளு சாகுறப்போ.. என் கழுத்த புடிச்சுட்டு.. இந்த ஊர காப்பாத்துடா.. நீ அரசன்டா. நகுலரசன்னு சொன்னாரு. அழுக கூடாதுடா… அழுகவே கூடாது. மனசுல அந்த வெறி.. அந்த வெறி ஊரிக்கிடக்கு. என் அப்பன் சாகுறதுக்கு காரணமான அத்தனை பேரையும்… வெட்டி வெட்டி வெட்டி வெட்டி….’ அவன் ஆத்திரம் பொங்க கையை ஓங்கி ஓங்கி அடித்தான். ரகு வருத்தமாக, கோபமாக, விசித்திரமாக பார்த்தான்.

இம்முறை ரகு பேச்சை மாற்ற நினைத்து.

’செண்பா தானே…’ என்றான். சட்டென கண்ணை துடைத்துக்கொண்டு திரும்பி கேட்க ஆயுத்தமானான் நகுல். கையை விரித்துக்கொண்டு எழுந்து நடந்தான் ரகு.

‘செண்பாஆஆஆ…’ கையை விரித்துக்கொண்டே நடந்தான். தொடர்ந்து, ‘செண்பா நடராஜன் ஆக போறா…’ என்றான்.

நகுலுக்கு அது அதிர்வாக இருந்தது. சட்டென அவனை பிடித்து திருப்பினான்.

‘என்ன ஆச்சு..?’ என்றான். ரகு சிரித்துக்கொண்டே.

‘நானா இல்ல மக்களானு கேள்வி எனக்கு பிடிச்ச வாயில இருந்து வந்துச்சு. நான் ரெண்டாவது ஆப்ஷன தேர்ந்தெடுத்துட்டேன்…’ அவன் சிரித்துக்கொண்டே சொன்னான்.

‘ரகு…’ நகுல் கண்கலங்க முன்னால் வந்தான். ரகு அதை ஒதுக்கிவிட்டு தன் பின்பாக்கெட்டிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்தான்.

‘செண்பா விடு. கலையழகி கடுதாசி போட்டிருக்கா… வேணுமா…’ அவன் உயர்த்தி காட்டினான். நகுல் அதில் ஆர்வம் காட்டவில்லை. ரகு அவன் கையில் வைத்து திணித்தான். நகுல் அதை திறந்து படித்துவிட்டு மடித்து வைத்துக்கொண்டான்.

‘என்ன சொல்லுறா… என் நண்பன் காதலி…’ ரகு கேட்டான். நகுல் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு.

‘உன் கதை போல தான். என்ன கெஞ்சுறா இவ. போராட்டம் வேணாமாம்… பயமா இருக்குதாம். சீக்கிரமா இந்த பிரச்சனை முடிஞ்சு கலை வீட்டுக்கு போகணும். அவ எப்படி இருப்பானு கூட தெரியல… காதலினு நினைக்கிறப்போலாம் ஒரு சின்ன பொண்ணு முன்ன வந்து கண்ணுல நிக்கிறது கொஞ்சம் அசிங்கமா இருக்கு…’

‘ஆமா.. சின்ன வயசுல பாத்துகிட்டது. அவ அப்பன் மாத்தலாகி வேற ஊருக்கு போனான்… திடீர்னு லெட்டர்ல வளர்ந்துருச்சு உங்க லவ். அது எப்படிடா பாக்காமலே வருது அந்த லவ்வு…’ என்று ரகு கேட்டதும் நகுல் சிரித்துக்கொண்டான்.

--

ரகு அன்று அந்த போராட்ட குழு முன்னால் நின்றுக்கொண்டிருந்தான்.

‘இது தான் சமயம். நாம் காத்திருந்த சமயம் வந்துவிட்டது தோழர்களே. நம் போராட்டம் மக்களுக்கானது. அதனால் தான் இன்றுவரை நாம் முதலாளிகளுக்கு விலை போகாமல் இருக்கிறோம். நாளை இந்த போராட்டம் முடிவடையலாம். ஆனால் நம் மீது போர்த்தப்பட்டிருக்கும் தீவிரவாதி என்னும் முகமூடி இன்னும் அவிழாமலே போகலாம். மக்கள் கொஞ்சம் சுயநலவாதிகளாக தான் இருப்பார்கள். அவர்கள் பிரச்சனை முடிந்த பிறகு நம்மை கண்டுக்கொள்வார்களா தெரியாது. ஒருவேலை.. இந்த போராட்டம் வெற்றியில் முடிந்து, நாம் திக்கு கெட்டு தெருவில் நின்றால் – தயங்கொள்ள வேண்டாம். மக்கள் கடலாய் இருக்கிறார்கள். அவர்கள் பிரச்சனைகள் கடல் விரிப்பாய் நிறைந்து கிடக்கிறது.

திட்டம் வலுவாய் இருக்கிறது. நான் சொன்னது போல முதலில் அதிகார வர்க்கத்தையும், ஊடகத்தையும் பணத்தின் பிடியில் இருந்து நம் பக்கம் திரும்பி பார்க்க செய்யவேண்டும். நான் வகுத்த திட்டத்தின்படி கண்டிப்பாக ஆட்சியர் நம் பிடியில் இருப்பார். அவரை பிடிக்கும் விதம் வேண்டுமானால் ஆக்ரோஷமாக இருக்கலாம், ஆனால் அதன் பின்னர் நாம் மெல்லியதாய் நடந்துக்கொள்ள வேண்டும். நம் பிரச்சனைகளை அவரை உணர செய்யவேண்டும். இந்த போராட்டத்தில் எந்த உயிர் வேண்டுமாயின் போகலாம். ஏனென்றால் நாம் இப்பொழுது அரசின் கண்களுக்கு தீவிரவாதிகள். நாளை நீ இல்லாமல் போகலாம், அவன் இல்லாமல் போகலாம், நகுலன் இல்லாமல் போகலாம். ஏன் நான் இல்லாமல் போகலாம். ஆனால் இன்று நம்மில் மூண்டிருக்கும் இந்த தழல் உரிமைக்காக மூண்டது. இது அணையக்கூடாது. நம் உயிரில், நம் உடம்பில் உறையாது இருக்கும் ஒரு சொட்டு ரத்தம் கூட இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். ஆங்கிலேயர் கீழே அடிமைப்பட்டு கிடந்த இந்தியா இப்பொழுது பிரிந்து ஒவ்வொரு தனி முதலாளிகீழும் அடிமைப்பட்டு கிடக்கிறது.

நாம் நமக்காக உருவாக்கிய ஜனநாயகத்தை அழித்து பணநாயகமான நம் நாடு மாறிக்கொண்டிருப்பதை தடுக்கும் முதல் விதையாக இது இருக்க வேண்டும். இந்த விதை விருட்சம் கொள்ள வேண்டும். செய்வோமா தோழர்களே… செய்வோமா?’ ரகு பேசி முடித்ததும் அந்த கூட்டம் ஆக்ரோஷமாய் குதித்தது. எல்லோரும் ஆடி பாடினார்கள். ரகுவும் உடன் ஆடினான்.

நகுலும் ஆடினான். ஆடிக்கொண்டே பேசினான்.

‘வெற்றிக்கு முன்னே களிப்பா?’

‘இது கோபத்தின் வெளிப்பாடு. ருத்ரம்…’ ரகு சொல்லிவிட்டு இன்னும் வேகமாய் ஆடினான். அடுத்த நாள் ரகுவின் திட்டம் படி குழு நான்காக பிரிந்தது. ரகுவின் தலைமையில் மலைப்பகுதி அடிவாரத்தில் ஒரு குழுவும், நகுலின் தலைமையில் சாலை நாற்பிரிவில் ஒரு குழுவும், அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் மற்றொரு குழுவும், காட்டு பகுதி ஆரம்பத்திலே மற்றொரு பிரிவும் என பிரிந்து நின்றுக்கொண்டார்கள்.

ரகுவின் குழு கற்களை ஆட்சியர் கார்களில் வீசியது. ஆட்சியர் கார் வேகம் எடுத்தது. நகுலின் குழுவிலிருந்து ஒரு ஆள், கார் வரும் திசையில் பாய்ந்தான். கார் முறுக்கி திரும்பியது. ரகுவின் கூரிய வேகத்தில் ஒரு வேல் காரின் கண்ணாடிய துளைத்து உள்ளே பாய்ந்தது. முன்னால் இருக்கையில் இருந்த டிரைவர் இறங்கி ஓடினார்.

ரகு தூரமாக இருந்து கையை உயர்த்தி நகுலை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு அவன் மட்டும் முன்னேறினான். காரை மெதுவாக அடைந்து உள்ளே எட்டி பார்த்தான். சட்டென ஒருவர் உள்ளிருந்து எழும்பி ரகுவை சுட்டார். ரகு பாய்ந்து அவர் கழுத்தை இறுக பிடித்துக்கொண்டான். மற்ற குழு திரும்பி ஓடியது.

‘சொதப்பிவிட்டது. சொதப்பிவிட்டது…’ எல்லோரும் கத்திக்கொண்டு ஓடினார்கள். நகுல் அதிர்ச்சியில் நின்றான். விக்கித்தான். விழித்தான். கதறினான். பக்கத்திலிருந்தவன் அவன் கைகளை பிடித்து இழுத்தான். அங்கே தூரமாக ரகு கழுத்திலும், வயிற்றிலும் பாய்ந்தோடிய குண்டுகளோடு போராடிக்கொண்டிருந்தான். நகுல் திரும்பி ஓடினான். அவனுக்கு நேற்றிரவு ரகுவின் சொற்கள் ஞாபகம் வந்தது.

‘நகுல்… எல்லா போராட்டமும் அழியிறது துரோகத்தால தான். நமக்குள்ளவும் துரோகம் இருக்கலாம். இல்லாம போகாது… நாம நாளைக்கு ஆட்சியர தூக்க போறது எப்படியாது அவங்களுக்கு தெரிஞ்சிருந்தா பிரச்சனை. நம்ம நேசன் குழுவ காட்டுபகுதியில நிறுத்திட்டு நாம கிளம்புவோம்.. ஒருவேலை அங்க ஆட்சியர் வரலனா… அவர் எங்க இருப்பாருனு நான் நேசன்கிட்ட சொல்லுறேன்… அவன் தூக்கிருவான். என் கணக்கு சரியா இருந்தா.. இது தப்பவே தப்பாது..’

‘ஒருவேல.. நேசன் குழுவுல துரோகி இருந்தா…?’

‘நேசன் குழுல இருக்குற ஒவ்வொருத்தனும் இந்த பிரச்சனையால அடிப்பட்டவன். அப்பாவ அம்மாவ… நிலத்தனு இழந்தவன். வலி இருக்குறவன் விலை போகமாட்டான்டா…’

ரகு சொன்னது அவன் கண்முன் வந்தது. கண்ணீரை துடைத்துக்கொண்டு அவன் ஓடினான். தூரமாக இருந்து இன்னும் போலீஸ் கூட்டம் நகுல் குழுவை துரத்தியது. சிதறி ஓடினார்கள். ரகு பிடித்திருந்தவர் ரகுவை இன்னும் பலமுறை சுட்டார். கொஞ்சமாக அவன் கை விலகியது. நழுவி அந்த மண்ணிலே விழுந்தான்.

ரகு திட்டத்தின் படி நேசன் குழு ஆட்சியரை கடத்தியிருந்தார்கள். நகுலன் அவன் குழுவில் இருக்கும் துரோகியை கண்டுபிடிக்க முயற்சி செய்யவில்லை.

‘என் உயிர் நண்பன். இந்த ஊருலயே பெரிய குடும்பத்து பையன். புத்திசாலி. மூளையால ஒரு விசயத்த எப்படி கையாளனும்னு சொல்லிக்கொடுத்த என் உயிர். இன்னைக்கு என்கூட இல்ல. அதுக்கு காரணமானவன் இங்க தான் இருக்கனு தெரியும்… அது அவனுக்கும் தெரியும். அதனால தான் நேசன் குழுவ அவன் தயார் செஞ்சு வச்சான். நாங்க ஆலை விசயமா ஆட்சியருக்கூட கொஞ்சம் பேசணும். வரும்போது.. அந்த துரோகி. இங்க இருக்க கூடாது…’ நகுல் விறைப்பாக சொல்லிவிட்டு நகர்ந்தான்.

ஆலை பிரச்சனைகளை பொறுமையாக நகுல் விளக்கினான். இங்கு பணமில்லை, ஒரு நிரந்திர தீர்வு மட்டும் தான் ஆட்சியர் உயிருக்கான விலை என்பதை நகுல் விளக்கினான். பத்திரிக்கைகளில் செய்தி அனுப்பினான். பத்திரிக்கை செய்தி பரவியது. தமிழக மீடியாக்கள் அவன் பக்கம் திரும்பினர். பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

பரபரப்பாக செய்தித்தாள்களில் கட்டூரைகள் வெளியாகின. அடுத்த இரண்டு நாளில் அந்த கூட்டத்தில் விடுதலை பற்றி ஆக்ரோஷமாக பேசிக்கொண்டிருந்த ஒருவன் குறைந்திருந்தான். எல்லோரும் அவனை வசைபாடினார்கள். நகுல் கையை உயர்த்தினான்.

‘இந்த மண் எதிரியால் மட்டுமல்ல. சில முறை துரோகியாலும் உதிரும் சுவைக்க வேண்டி இருக்கிறது. போகட்டும்… நாம் முனைப்போடு இருப்போம்..’ நகுல் சொன்னான். அடுத்த சில நாட்களில் ஆலை இனி அரசாங்கம் கையில் போகும் என முடிவு எடுக்கப்பட்டது. ஆட்சியரை நகுல் விடுவித்தான். ஆனால் ரகு சொன்னது போல அவர்களை இன்னும் தீவிரவாதிகளாவே தீர்மதித்து இருந்தனர். அதனால் அவர்கள் யாரும் வெளியில் செல்ல இயலவில்லை. அடிக்கடி ரகுவை நினைத்து வருந்தினான். கலையின் கடித்தத்தை அவன் மறந்தே போனான்.

ரகு சொன்னது போல – மக்களிடமிருந்து வரும் உதவிகள் அவர்களுக்கு நின்று போனது. நகுல் ரகு பேசியதை நினைத்து சிரித்தான்.

‘தோழர்களே! நம் விதையான தோழர் ரகு சொன்னது போல. இந்த ஊர் நம்மை ஒதுக்கும் நிலைக்கு வந்துவிட்டது. அவர்கள் தேவை முடிந்துவிட்டது. ஆனால் நம் வேகம் இன்னும் முடியவில்லை என நம்புகிறேன். போராட்டம் போதும் என்பவர் விலகிக்கொள்ளலாம். இன்னும் தேவைகள் இருக்கின்றன. இன்னும் போராட களம் இருக்கின்றன. நான் போகின்றேன். என்னோடு வருபவர்கள் வரலாம்…’ நகுல் சொல்லிவிட்டு முன்னால் நடந்தான். நேசன் அவன் பின்னால் நடந்தான். நேசனின் குழு அவன் பின்னால் நடந்தது. ரகுவின் குழு அவன் பின்னால் நடந்தது. நகுலின் குழுவிலிருந்து சிலர் வந்தனர். மற்றவர்கள் அங்கேயே தயங்கி நின்றனர்.


அந்த போராட்ட குழு எறும்புகளாய் அந்த காட்டை விட்டு பிய்ந்து அடுத்த களத்தை நோக்கி பயணித்தது. செண்பா ரகுவின் இறைப்பை கேட்டு அவளின் கணவருக்கு தெரியாமல் வீட்டு ன் பின் வாசலில் நின்று கத்தி அழுதுக்கொண்டாள். நகுலின் வீட்டில் ‘போஸ்ட்..’ வந்து விழுந்தது. நூற்றில் ஒன்றாய்.. எதுவும் பிரிக்கப்படாமல். அது குழுமிகிடந்தது.

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…