ஆதிக்க காதல் மலர்வு

’என்ன பத்தி உனக்கு தெரியாது. என் வாழ்க்கைய பத்தி உனக்கு தெரியாது..’ அவள் கோபமாக சொல்லிவிட்டு திரும்பி கண்களை துடைத்துக்கொண்டாள்.

‘அதுக்கென்ன..’ அவன் முறைப்போடு நின்றுக்கொண்டிருந்தான். அவள் அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டாள். கைகளை முறுக்கினாள். அவளது கைகடிகாரத்தை ஒரு முறை மேலே இழுத்துக்கொண்டாள்.

அவன் ஒரு பெருமூச்சு வாங்கினான். கண்களை இறுக மூடி திறந்தான்.

‘இங்க பாருமா..’ அவன் பொறுமையாக பேசினான். அவள் திரும்பவில்லை. இன்னும் கைகளை இறுக மூடிக்கொண்டிருந்தாள்.

‘ஏ…’ அவன் கோபமாக கத்தினான். அவள் முறைத்த விழிகளோடு திரும்பினாள்.

‘என்ன.. என்ன ஏ…’ என்று ஆக்ரோஷமாக அவனை பார்த்து கேட்டாள். ‘ஆம்பளனு திமுறா..?’ அவள் கோபமாக கேட்டாள். சட்டென கோபமான அவன் முகம் மாறியது. வாயை அடக்கமுடியாமல் சிரித்தான். புர்ரென்று சிரித்தான். அவள் முறைத்தாள்.

‘சிரிக்காத…’ என்றாள் கோபமாக.

‘சிரிக்காத நாயே..’ அவள் இன்னும் கோபமாக சொன்னாள். அவன் இன்னும் அதிகமாக சிரித்தான். அவள் தொடர்ந்து முறைத்தாள். சிறிது நேர முயற்சிக்கு பிறகு அவன் சிரிப்பை அடக்கிவிட்டு அவளை பார்த்தான்.

‘இப்ப என்ன? உன்ன பத்தி எனக்கு தெரியாது… அதானே…. சொல்லு.. தெரிஞ்சுக்குறேன்..’ அவன் அமைதியாக சொன்னான். இம்முறை முகத்தில் அமைதி இருந்தது.

‘எதுக்காக…? எதுக்கு நான் உன்கிட்ட சொல்லணும்…’

‘சரி … சொல்லாத… லவ் பண்ணு..’ அவன் மீறியவனாய் சொன்னான். அவள் முறைத்தாள்.

‘இங்க பாருடி… உனக்கு பிடிக்கலனு என் கண்ண பாத்து சொல்லு..?’ அவன் கேட்டான் சிரித்துக்கொண்டே.

அவள் ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தாள். ‘என்ன…? பிடிக்கலனு சொல்லணுமா..? ஏன்டா உனக்கு தெரியாது.. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்னு… அந்த தைரியத்துல தானே இவ்வளவு சகஜமா என்கிட்ட லவ் சொல்ற… இல்லனா இந்த தைரியம் வருமா..?’

‘ஹலோ.. நான் யாருக்கும் பயபடமாட்டேன்..’

‘பயப்படுறனு சொல்லல… ஆனா… கண்டிப்பா நான் உனக்கு கிடைப்பேனு நம்பிக்கை இருக்கு பாரு. அந்த நம்பிக்கை இருக்க வேண்டிய தயக்கத்த அழிச்சிடுச்சு. என்ன பாத்தா அவ்வளவு கேவலமா தெரியுதானு எனக்கே வெட்கமா இருக்கு…’ என்று அவள் பல்லை கடித்துக்கொண்டு சொன்னாள். முகத்தை கேவலமாக வைத்துக்கொண்டு அவளை அவன் பார்த்தான்.

‘அப்படி பாக்காத..’ அவள் கோபமாக சொன்னாள்.

‘அப்படி பாக்காதனு சொல்லுறேன்ல..’ இன்னும் கோபமாக சொன்னாள். அவன் திரும்பிக்கொண்டான்.

‘வாழ்க்கைனா என்ன…?’ அவன் கேட்டான்.

அவள் ஒரு பெருமூச்சு வாங்கினாள். திரும்பினாள். ‘தெரில…’ என்றாள்.

அவன் அவளை திருப்பினான். அவள் கண்களை பார்த்தான். உற்று அந்த கருவிழிகளை பார்த்தான். அவள் இமைகள் அவ்வபோது மூடி திறப்பதை பார்த்தான். அவன் கண்களை அசைக்கவில்லை.

‘என்ன..’ அவள் கேட்டாள்.

‘வாழ்க்கைனா…’ என்று சொல்லிவிட்டு அவன் அமைதியாக நின்றான். அவள் கண்கள் ஏதோ எதிர்பார்ப்பை தூவிக்கொண்டு நின்றன. அவள் காதுகள் ஏதோ கேட்க நினைத்தன. ‘வாழ்க்கைனா…  வாழ்க்கை தான்…’ அவன் சொல்லிவிட்டு அவளை பார்த்தான். ஏங்கிகிடந்த அவள் கண்கள் மீண்டும் முறைப்பை கொண்டன.

அவன் சிரித்தான்.

‘வாழ்க்கைனா… வாழ்க்கை. அவ்வளவு தான்டி. அத தாண்டி யோசிக்க ஒண்ணுமில்ல… என்னை உனக்கு பிடிச்சிருக்கு.. எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. இது போதாதா..? எதுக்கு கண்டத யோசிக்கிற…?’

‘கண்டத இல்ல. நிதர்சனத்த… உண்மைய… இந்த ஆதிக்கவாத ஆண் சமூகத்த. இப்ப கூட இந்த பொண்ணு மனச எப்படி வேணா மாத்திரலாம்னு நினைக்கிற இந்த கெட்ட எண்ணம் புடிச்ச ஆண் முன்னால நிக்க அசிங்கமா இருக்கு…’

‘அது சரி…’ ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு அவன் விலகி நடந்தான்.

‘ஏ… என்ன தைரியம் டா உனக்கு… உன்ன நான் வேணாம்னு சொல்லுறேன். இருந்தும் நான் உன்கிட்ட தான் இருப்பேன்னு எவ்வளவு நம்பிக்கை டா உனக்கு…’ அவள் இன்னும் ஆச்சர்யமாக எரிச்சலாக கேட்டாள். அவன் திரும்பினான்.

‘யம்மா தாயே… சொல்லுறத சொல்லுவோம். கிடைச்சா சந்தோசம்… இல்லனா நண்பனா சைட் மட்டும் அடிச்சுட்டு இருப்போம்னு தான் நினைச்சேன்.. நீ தான் வந்ததுல இருந்து போகமாட்டேனு தைரியமா.. கிடைச்சுடுவேன்னு இறுமாப்பானு ஏத்தி விட்டுகிட்டு இருக்க.. இந்த பொண்ணுங்க என்ன லூசா… கற்பழிப்புக்கு எதிரா போராட சொன்னா, பீப் சாங்குங்கு எதிரா போராடுறது. ஆணும் பெண்ணும் சமம்னு சொல்லிட்டு, ஆண் கைவிட வேண்டிய கெட்ட பழக்கங்கள பொண்ணுங்களும் கத்துக்குறதுனு… எல்லாத்தையும் சரியா தப்பா தான் யோசிப்பீங்களா..’

‘டே…’ அவள் கையை உயர்த்தினாள்.

‘சீ.. கைய கீழ இறக்கு. எனக்கு முதல்ல உன்கிட்ட லவ் சொல்றப்போ கூட மனசுல ஒரு டவுட் இருந்துச்சு. எங்க நீ ஒத்துக்க மாட்டியோனு… இப்ப நல்லா கன்ஃபார்ம் நீ ஒத்துப்பனு..’ என்று சொல்லிக்கொண்டே அவன் வண்டியில் ஏறினான்.

‘மாட்டேன். இதுக்காகவே. கண்டிப்பா…’ அவள் கையை கட்டிக்கொண்டு திரும்பிக்கொண்டாள். அவன் அவளது கையை பிடித்தான். திருப்பினான். கீழே குனிந்திருந்த அவள் முகத்தை மேலே உயர்த்தினான். அவள் கண்கள் கலங்கியிருந்தன. அவன் சிரித்தான்.

‘பெண்… இப்படிபட்டவ அப்படிபட்டவனு எனக்கு எந்த எண்ணமும் இல்ல. பெண்னா பொறுமைனு நான் வசனம் பேசி உன்ன ஒரு பெட்டுக்குள்ள அடைக்கமாட்டேன். பெண்னா விட்டுகொடுத்து போகணும்னு உன்ன ஒரு துறவிபோல நடத்தமாட்டேன். பெண்னா…’ என்று சொல்லிவிட்டு அவன் நிறுத்தினான். அவள் கண்களையே பார்த்தான். ‘பெண்னா… பெண் தான்…’ என்றான். அவள் கண்கள் முறைத்தன. சிரித்தான்.

‘முறைக்காதடி. இது தான் உன்னோட நிலை. இது தான் நீ இப்படி இருக்கணும்னு எந்த கட்டுப்பாடும் என்கிட்ட இருந்து உனக்கு வராது. ஆனா.. உன்னோட செயல்களால ஏற்படுற வினைகள நீ எதிர்க்கொள்ளுற பக்குவம் வரணும் உனக்கு. அதுக்காக நான் எப்போதும் உன்கூட இருப்பேன்… நீ இப்படி யோசிக்க கூடாதுனு நான் சொல்லமாட்டேன். இப்படி யோசிச்சா என்ன ஆகும்னும் நான் சொல்லமாட்டேன்… நான் கடவுள் இல்ல. ஆனா நீ யோசிக்கிற ஒரு விசயத்த செயல்படுத்த… என்னால ஆன உதவிகள நான் செய்வேன். அதுவும் நீ விருப்பபட்டாதான். எனக்கு நீ கிடச்சுடுவனு நம்பிக்கை இல்ல எனக்கு. கிடைச்சா நல்லா இருக்கும்னு ஆசை தான். இப்ப உன்ன லவ் பண்றதால… நீ தான் உலகத்துலயே அழகுனு பொய் சொல்லமாட்டேன். உன்ன விட அழகான பெண்கள நான் பாத்திருக்கேன்… ஆனா ஒரு ஈர்ப்பு. உன்கிட்ட மட்டும் தான் இருக்கு. இதுதான் காதலா இருக்கும்னு நான் நினச்சேன். அதான் சொன்னேன்… உன்கிட்ட கொஞ்சிட்டு இருக்க ஆசை இல்ல.. உன்கூட கேன்டில் லைட் டின்னர் போக ஆசையில்ல.. உன்கூட பீச்ல கை கோர்த்து நடக்க ஆசையில்ல.. உன்கூட என்னோட நாட்கள செலவிட மட்டும் தான் ஆசை இருக்கு. நான் ஆண் ஆதிக்கவாதி தான்… ஆனா பெண்ணியம் பேசுற ஆண் ஆதிக்கவாதி. எந்த இடத்துல என்னோட ஆதிக்கத்த காட்டணும்னு எனக்கு தெரியும்டி…’ அவன் சொல்லும்பொழுதே அவள் கண்கள் இன்னும் கலங்கின.

அவன் சிரித்தான்.

‘என்கிட்ட  தானேடி தோக்குற.. அப்படி என்னடி ஈகோ..’ அவன் பாசமாக கேட்டான். அவள் தலையை கீழே குனிந்துக்கொண்டாள். அவன் அவள் முகத்தை உயர்த்தி பார்த்தான்.

‘சரி வண்டியில ஏறு..’ என்றான். அவள் ஏறினாள். அவர்கள் அமைதியாக அந்த சாலையில் சென்றுக்கொண்டிருந்தார்கள். அவன் காதோரத்தில் அவள் வந்தாள்,

‘உன்கூட கொஞ்சிட்டு இருக்க ஆசை இருக்கு. உன்கூட கேன்டில் லைட் டின்னர் போக ஆசை இருக்கு. உன்கூட பீச்ல கை கோர்த்து நடக்க ஆசை இருக்கு. என்னோட நாட்கள் முழுக்க.. நீ மட்டுமே இருக்க ஆசை இருக்கு.. செய்வியா டா..’ அவள் கம்மும் குரலில் காதலாக அவன் காதோரத்தில் சொன்னாள். அவன் சட்டென வண்டியின் ப்ரேக்கை அழுத்தி, அப்படியே திரும்பி பார்த்தான்.

‘கண்ணம்மா…’ என்றான் ஆச்சர்ய காதலோடு.


அவள் நாணம் கொண்டு சிரித்தாள். அவள் கையை இறுக பிடித்துக்கொண்டான். இருவரும் கண்களாலே காதல் பரிமாறிக்கொண்டார்கள்.

-தம்பி கூர்மதியன் 

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி