என் கவி - பாரதி!

பாரதி ஒரு தேசிய கவிஞன். விடுதலை முழக்கங்களை எழுப்பியவன் என்னும் போக்குகளை கடந்த ஒரு பாரதி இருக்கிறான். அந்த காலத்தை ஒருமித்தமாக கொண்ட இரு தமிழர்கள் – சுப்பிரமணிய பாரதி மற்றும் சீனிவாச இராமானுஜம். இருவர் மீதும் எனக்கு என்னவோ தீராத காதல் உண்டு.

மட்டுறுத்தப்பட்ட சமூகமாக அந்த காலக்கட்டத்தில் இருந்தவர்கள் தாழ் இன மக்கள் மட்டுமல்ல. மேலை சமூகமென சொல்லப்படுபவரும் கூட அங்கு மட்டுறுத்தப்பட்டவராய் தான் இருந்தார்கள். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் நான் நினைக்கும் இருவர் தான் இவர்கள். ஒருவர் தனக்காக தம் குலத்தடுப்பை மீறினார். மற்றொருவர் நாட்டுக்காக மீறினார். நாட்டுக்காக மீண்டுவந்தவன் தான் பாரதி. என் கவிஞன்.

பொதுவாக பள்ளிக்கூடங்களில் சொல்லிக்கொடுக்கும் மனப்பாட செய்யுளும், அவர் எந்த ஆண்டு பிறந்தார், அவர் மனைவி பெயர் என்ன என்பன போன்ற கேள்விகளுக்கு கொட்டாவி தான் வரும் எனக்கு. எல்லாவற்றிலும் ஒரு உட்கருத்து புதைந்து இருக்கிறது, அதை கூடங்கள் கற்பிக்காது நம் மனமே கற்பிக்கும். நான் இன்று வீதிக்கு இறங்கி போராட நினைக்கையில் என் குடும்பத்தால் மறித்து நிறுத்தப்படுகிறேன். அப்பொழுதெல்லாம் தனிமையான இரவுகளில் பாரதியின் வாழ்வை பற்றி நினைந்துக்கொள்வேன். மனம் மீண்டும் எழுச்சி பெற்றுவிடும். அவன் வாழ்வை பார்க்கும்பொழுதெல்லாம் எனக்கு வரும் தடைகள் ஒரு தடையே இல்லை என்பன போல தோன்றும். இங்கு பொதுவாழ்வில் ஈடுபட்டவனின் தனிப்பட்ட வாழ்வு எத்தகையதாக இருக்கும் என்பது அந்த களத்தில் இறங்க நினைக்கும் ஒவ்வொருவனுக்கும் பாடம்.

பாரதி சொன்னவற்றில் எனக்கு மிகவும் பிடித்தது எது? கேள்வி கேட்க வேண்டும், கோபம் கொள்ள வேண்டும். ஆம்..! நம் உரிமைகளுக்காக, நம் தேவைகளுக்காக நாம் கேள்வி கேட்கவேண்டும். கோபபட வேண்டும் தான். இல்லையா?

அதற்கான உரத்தை பாரதி குழந்தையிடமிருந்தே தொடுக்கிறான். உண்மையில் குழந்தைக்கு சொல்வது போல சக மனிதர்களுக்கு சொல்கிறான்.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
             
என்று அவன் சொல்லும் விதத்தில் இருந்து அவனின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது நமக்கு புரிந்துவிடும். இது அவனின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல. சமூகத்திற்கான அவசியம். அக்கால சமூகத்திற்கு மட்டுமல்ல, இக்காலத்து சமூகத்திற்கும்.

சமீபத்தில் டிவிட்டரில் ஒரு செய்தி. தம் ஜாதிய பெயர் சொல்லி குழந்தைக்கு ரத்தம் கேட்ட கேவலம் நடந்தேறியது. படித்துவிட்டோம், மிடுக்காக உடை உடுத்திக்கொண்டோம். சரிதானா? அதை தாண்டிய அறிவு எங்கே? பாரதி சொன்ன ஒவ்வொரு வரியையும் மனப்பாடமாக படித்து ஒப்புவித்தால் மட்டும் போதுமா? அவன் அன்றும் சரி என்றும் விரும்பியது ‘வீறுக்கொண்ட சமூக எழுச்சி…’. தமிழை வளர்ப்பது மட்டும் நம் நோக்கல்ல, தமிழ் நமக்கு புகட்டிய அறிவையும் வளர்க்க வேண்டும். சாதீய பேதமை கூடாது என்று

சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!

என சொல்கிறான்.

நாம் திசை மாறி செல்லலாம். வழிகள் பிழண்டு நிற்கலாம். அதற்கெல்லாம் காரணம் பலவகையாக இருக்கலாம். இக்கால ஆண் இளைய சமூதாயம் பிழண்டு நிற்பது எதிர்பால் மோகத்தால். இவை பண்டை காலத்திலிருந்து நாம் பார்த்துவரும் ஒன்று. இதை பாரதியும் கண்டிருப்பான் போல… இயற்கையை பற்றிய பீடிகை போட்டுக்கொண்டு அச்சமில்லை என பாடிவரும் பாரதி நடுவில் சொல்கிறான்.

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

நன் நிலை மறுதல் கூடாது. அவை கூரிய பெண்ணின் கண்ணில் திசை மாற்றாக இருப்பினும். நம் நிலை மறுதல் கூடாது. இதை இக்கால கட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக இளைய சமூகதாயத்தில் கலந்தோடிய நான் கருதுகிறேன்.

தோல்வி.! இங்கு நிலையற்ற ஒரு கட்டமைப்பு. இங்கு ஒவ்வொரு சமயத்திலும் நாம் தோற்று போய் கொண்டிருக்கிறோம். அந்த தோல்வியை நினைத்து மனம் நொந்து அடுத்த நிமிட வெற்றியையும் நாம் தோற்றுக்கொண்டிருக்கிறோம். இதை பாரதி உணர்ந்திருப்பான் போல. நாம் காணாத பல தோல்விகளை பார்த்த சமயம் தானே அது. காலத்தை மறந்து தினம் பிறப்புற்றது போல வாழ்க்கைய மகிழ்வாய் வாழ்ந்திட சொல்கிறான் என் கவி.

சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;


என்றான். அறிவுரை மட்டும் தானா.? சுதந்திர வேட்கை மட்டும் தானா? அவன் நல்ல காதலன். அவன் காதல் வரிகளிலே தான் என் கண்ணம்மாவை நான் முதல் முறை கண்டேன்.

சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்

என அவன் சொல்லில் வழியூடே நான் என் காதலை கண்டிருக்கிறேன். மேலும் கடந்து,

வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு;
பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு;

பிரிவுக்கொள்ள முடியா உவமைகளில் அவன் காதலை புதைத்த விதம். நித்தம் என் கண்ணம்மாவை நான் அவன் வாக்கிய வடி செவிபுகுதலிலே கண்களால் நான் காண்கின்றேன். பாரதி… ஒரு கவிஞனாய் மட்டும் நான் நிறுத்திவிடவில்லை. அவன் சொன்ன ரௌத்திரத்தை நித்தம் பழக முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். அவன் சொன்ன பேதமையை எதிர்த்து முடிகொளும் வரை வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன். அவன் சொன்ன காதலில் – இந்த பூமியையும், என்னவளையும், சுற்றத்தையும், இயற்கையையும் ரசித்துக்கொண்டிருக்கிறேன்.


என் கவியின்.. என் பாரதியின்… என் தலையனின் நினைவாய்.!!

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..