மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.

இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.

கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.

நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி மத்திம பகுதியை நோக்கி சென்றுக்கொண்டிருந்தோம். காவலர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும். அங்கு காவலர்கள் இல்லை - எல்லாமே தமிழினம் தான். பாதுகாப்பும் அவர்களே, போராட்டகாரர்களும் அவர்களே. சாலையிலே நடக்க முடியாமல் நாங்கள் கடற்மணலில் இறங்கி நடந்தோம். மத்திம பகுதிக்கு நெருங்க நெருங்க இன்னும் நெரிசல் கூடிக்கொண்டு போனது.

மத்திய பகுதி வரை ஆனால் போராட்டகாரர்கள் காத்திருக்கவில்லை. அங்கங்கே சிறு சிறு குழுக்களாக அவர்களின் கருத்தை முன்வைத்து பேசிக்கொண்டிருந்தார்கள். கோஷங்கள் குறைந்து கருத்து பரிமாற்றங்கள் நிறைந்துக்கொண்டிருந்தன. அதே சமயம் மெரினாவின் ஒரு திசையில் இருந்து இன்னொரு திசைக்கு அணிதிரளாக மக்கள் சென்றவண்ணம் இருந்தனர் - பதாதைகளோடு கோஷங்களை முழங்கி.

திடீரென எங்களை கடந்து ஒரு 'கெடா' ஓடியது. நாங்கள் பார்த்து கொண்டே சென்றோம். அங்கங்கே கூட்டம் கூடி நின்றது. பறை அடிப்பது, நாடகம், மைம், ஆட்டம் என கலைகட்டி அவர்களுக்கு தெரிந்த விதத்தில் போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார்கள் தோழர்கள். ஆனால் அனைத்தும் அறவழி.

அங்கங்கே மினி லாரிகளிலும், ஆட்டோகளிலும் சாப்பாடுகள் பரிமாறப்பட்டன. கொஞ்சம் முண்டி அடித்து தான் வாங்கிக்கொண்டார்கள். கூட்டம் அப்படி. விவேகானந்தர் இல்லம் நெருங்கியபோது ஒரு அடி கூட கூட்டம் நடக்கும் இடத்தில் காலை எடுத்து வைக்க முடியவில்லை. இன்னும் கடந்து செல்லலாம் என சென்றோம். மத்தியில் பெரிய கூட்டம் இருந்தாலும், அங்கங்கே சிறு சிறு கூட்டங்களும் இருந்தன.

அடுத்து ஒரு கூட்டம் நெரித்துக்கொண்டு நின்றது. எட்டி நின்று பார்த்தோம். நாங்கள் முன்னர் பார்த்த ‘கெடா’ இன்னொரு கெடாவோடு முட்டிக்கொண்டு நின்றது. ‘டப்..’ ‘டப்…’ என அவை முட்டி சண்டைபோடும்போது எழும் சத்தங்களில் ஏதோ கிராமத்திற்குள் நாங்கள் புகுந்துவிட்டோமோ என்னும் எண்ணம் எங்களுக்கு எழுந்தது. அவை முடியும் பொழுது தோழர்கள் உரக்க,

‘வேண்டும் வேண்டும்.. ஜல்லிக்கட்டு வேண்டும்.’ என்று சத்தமிட்டார்கள். கூட்டம் ஆர்பரித்தது.

மணி 8ஐ கடந்தது. பசி வயிற்றை கிள்ளியது. கூட்டத்தை பிளந்துக்கொண்டு வீடு இருக்கும் பக்கம் சென்று ஒரு சிறிய உணவு விடுதியில் இரவு உணவை முடித்துக்கொண்டோம்.

அங்கங்கே இருந்த சிறு சிறு கூட்டங்களில் கருத்து பரிமாற்றம் நடந்தன. ஒரு பெண், பாலின் அவசியத்தை பற்றியும் ‘என் குழந்தைக்கு நான் கொடுக்குற வரை நல்ல பால தர்றேன்னு நம்பிக்கை இருக்கு. அதுக்கு அப்பரம் நான் என் புள்ளைக்கு நோய கொடுக்கணுமா?’ என்று கேட்டு இந்த ஜல்லிக்கட்டுக்கு பின்னால் இருக்கும் வெளிநாட்டு கம்பேனிகளில் வியாபார நோக்குகளை சுட்டி காட்டி உணர்ச்சி பூர்வமாக பேசினார்.

ஒரு பெரியவர். சாதீய கொடுமைகளையும், இத்தனை நாள் அரசாங்கம் எப்படி வஞ்சித்தது என்பதை பற்றியும் பேசினார். கொஞ்சம் பார்ப்பனீய எதிர்ப்பாளராய் பேசினார். இது கூடி இருக்கும் கூட்டத்தில் கொஞ்சம் எதிர்ப்பு கிளப்ப கூடியது. பேசும் தோழர்கள், ஜாதி மதம் பற்றிய விசயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு பேசலாம் என்பது என்னுடைய கருத்து.

சரி எப்படியேனும் மத்திய பகுதிக்குள் நுழைந்துவிடுவது என்று நாங்கள் முண்டிக்கொண்டு உள்ளே நுழைந்தோம். கீழே குனிந்து, பாய்ந்து, ஊடுருவி என பார்த்தால் கூட்டத்தில் நுழையாமல் மெயின் ரோட்டில் நின்றோம். இது என்ன கொடுமையடா என்று நாங்கள் நிற்கையில், தன்னார்வாலர்கள் அழகாக கைகோர்த்து போக்குவரத்தை சரிசெய்துக்கொண்டிருந்தார்கள். அலையாக குப்பைகளை சேகரித்து வைத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வளவு பெரிய கூட்டம்.. பெண் தனியாக இருக்கிறாள் – பாதுகாப்பாக இருக்கிறாள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். நான் சொல்கிறேன். லட்சகணக்கான மக்கள் இருக்கும் அந்த கூட்டத்தில் ஒரு நெட்டி தள்ளுதல் இல்லை, ஒரு மோதல் இல்லை. என் மீது கூட யார் கையும் படவில்லை. அப்படி ஒரு ஒழுக்கம்.

மத்திய பகுதிக்குள் நுழைவது சாத்தியமில்லை. தூரமாக இருந்தே பார்த்துக்கொள்ளலாம் என மீண்டும் கடற்கரை மணலில் சென்று உட்கார்ந்துக்கொண்டோம். அலையாக மக்கள் மணலிலும் திரண்டார்கள். மணலை திரட்டி படுக்கை செய்துக்கொண்டார்கள்.. அட்டைகளை விரித்து படுத்துக்கொண்டார்கள். இன்னும் சிலர், குழித்தோண்டு மரக்கட்டைகளை போட்டு குளிர் காய தொடங்கினார்கள். யாருக்கும் வீட்டிற்கு செல்லும் எண்ணமில்லை.

திடீரென மணலில் இருந்த அனைவரும் சாலையை பார்த்து தங்கள் அலைப்பேசியின் ஒளியை காட்ட, சாலையில் இருந்தவர்கள் அனைவரும் மணலை பார்த்து அலைப்பேசி ஒளியை காட்டினர். உடல் ரோமங்கள் சிலிர்த்துக்கொண்டன. உனக்கு நான் இருக்கிறேன் தோழா என இருப்புறமும் பரஸ்பர செய்திகள் பரிமாறப்பட்டன.

மணி 1ஐ நெருங்கி ஓடியது. கடற்கரை மணலில், சில்லென்ற காற்றில் கண் அயர்ந்துவிட்டேன். மூன்று போல மீண்டும் கண்விழித்துக்கொண்டேன். மத்திய பகுதியில் இடம் கொஞ்சம் கிடைத்தது. ஓடி சென்று உட்கார்ந்துக்கொண்டேன்.

ஒரு நண்பர் தனி தமிழ்நாடு என்னும் தவறான கோஷத்தை முன்வைத்தார். வைத்தது மட்டுமல்லாது, வஞ்சித்துவிட்டது மத்திய அரசு என்று கோபமாக சொன்னார். தனி ‘தமிழ்நாடு என்று வந்துவிட்டால் வஞ்சித்துவிட்டதுனு கூட சொல்லமுடியாது தோழா. உரிமைகளை கேட்டு பெறுவோம்’ என்று நான் சொல்ல அவர் என்னை விசித்திரமாக பார்த்துவிட்டு ‘தமிழன் வாய்பொத்திக்கொண்டு இருந்தால் வாய் பொத்திக்கொண்டே இருக்கவேண்டும் தான்’ என்றார். இவரிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று என் வாயை மூடிக்கொண்டேன்.

இன்னும் கடந்து அந்த மத்திய பெருங்கூட்டத்தில் இணைந்தேன். கிராமத்து பாடல்களோடு மக்களும் சேர்ந்து பாடிக்கொண்டிருந்தார்கள். நானும் இணைந்து பாடிக்கொண்டிருந்தேன். சில இளைஞர்கள் முன்னால் வந்து சரியான நேரமாக பார்த்து ஓட்டு போடும் போது மக்களாகிய நாம் செய்யும் தவறுகளை முன் வைத்து பேசினார்கள். கரகோஷம் விண்ணை பிளந்தது. முறையான அரசியல் வரும் காலம் தூரம் இல்லை என்று தோன்றுகிறுது.

நேரம் ஓடியது. குப்பை வண்டி வந்தது. குப்பையை அகற்ற சொல்லி தன்னார்வாலர்கள் எழுந்து சேகரித்த குப்பைகளை கொண்டு போய் வண்டியில் போட்டார்கள். விவசாயம், மாடு வளர்த்தல் என்று பல விசயங்கள் பேசப்பட்டன. நான் எழுந்து நடந்தேன். அங்கே இன்னும் சில தன்னார்வாலர்கள் குப்பைகளை சேகரித்துக்கொண்டனர். நானும் சென்று நின்று செய்யவரவா என்று கேட்டேன். அவர்களிடம் இருந்த ஒரு கையுறையை கொடுத்தார்கள். மாட்டிக்கொண்டு அவர்களோடு குப்பைகளை சிறிது நேரம் சேகரித்தேன். தன்னார்வாலர்கள், மற்றும் சில மக்களை தாண்டி யாரும் பொறுப்பாக குப்பைகளை குப்பை தொட்டிகளில் போடவில்லை. கண்ட மேனிக்கு விசிறி அடித்துவிட்டு சென்றார்கள். போராட்டத்தில் கலந்து கொள்ளும் தோழர்கள் இதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்வதை எந்த தன்னார்வலரும் குறையாக கருதவில்லை. முகம் சற்றும் சுளிவற்று குப்பைகளை சேகரித்தார்கள்.

தோழர்கள் அமைத்த மொபைல் டாய்லட் மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்திருக்கிறது. இருப்பினும் போராட்டம் ஓய்ந்தப்பின் துப்புரவு தொழிலாளர்களுக்கு கொஞ்சம் வேலை அதிகமாக தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

ஒரு மணி நேர போக்கில் குப்பைகளை சேர்த்துவிட்டு மீண்டும் மத்திய பகுதியில் வந்து நின்றேன். மைக்கில் பேசிக்கொண்டிருந்தவர் திடீரென பரபரத்தார்.

‘யப்பா.. நெஞ்சுவலியாம். அந்த ஆம்புலன்ஸ கூப்பிடு..’ என்றார். சாலையில் இருந்து ஒரு பெரிய சத்தம். ‘ஆம்புலன்ஸ் இல்லயாம்..’ என்றார்கள்.

‘அந்த 108ஆ போடுங்கயா. அதான் உடனே வந்திருமே..’ என்றதும் அத்தனை பேரும் கையில் அலைப்பேசியை எடுத்தார்கள். கடற்கரை உள்சாலையில் தூரமாக ஒரு ஆம்புலன்ஸ் நிற்பதை ஒரு தோழர் பார்த்தார்.

‘அங்கே அங்கே..’ என கைகாட்டினார். மைக்கில் பேசியவர் அழைத்தார். ஆம்புலன்ஸ் வரவில்லை. ஒற்றை கோஷமாக அங்கிருந்த கூட்டம் அத்தனையும் ஆம்பலன்ஸை நோக்கி கத்தி, கையை காட்டியது. ஆம்புலன்ஸ் கிளம்பியது, உள்சாலையில் உட்கார்ந்திருந்த மொத்த கூட்டமும் எழுந்தது. சரியாக வழிவிடப்பட்டது, நேராக எந்த தொல்லையும் இல்லாமல் பாதிக்கப்பட்டவர் இடத்துக்கு சென்றது. அவசர உதவிக்கு இருந்த மருத்துவர்கள் அவரை பார்த்தார். ஆம்புலன்ஸில் அவர் அழைத்து செல்லப்பட்டார். எல்லாம் இரண்டு நிமிடத்தில்.

அடுத்த பத்து நிமிடத்தில் அவர் நன்றாக இருப்பதாக செய்தி சொல்லப்பட்டது. 

செல்ஃபோன் தொலைத்தவர், பர்ஸ் தொலைத்தவர் என சிலர் வந்து முறையிட அது மைக்கில் சொன்ன அதிக பட்சமான அடுத்த ஐந்து நிமிடத்தில் அவரிடம் கிடைத்துவிட்டு. சரியான திட்டமிடல் இங்கே இருக்கிறது. சரியான திட்டமிடல். பெண்கள் நலனும், அவர்களின் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. கண்ணுல வச்சு தாங்குறானுங்கயா.

இனி இந்த கூட்டம், இந்த படை எப்படி இருக்கவேண்டும் என்று மைக்கில் அவர் பேசிக்கொண்டிருந்தார். தூரத்தில் சூரியன் உதயமாக தொடங்கியது.


குறிப்பு: உங்கள் வாழ்நாளில் நீங்கள் தவறவிடக்கூடா ஒரு தருணம். ஒரு கிராமத்து திருவிழா சென்னையில். அத்தனை ஒழுக்கமாக, அத்தனை சிறப்பாக, எந்த பிரதிபலனும் அற்று.

-தம்பி கூர்மதியன்

Comments

  1. http://bakutharivaalan.blogspot.com/2017/01/blog-post.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி