வறட்டு பூமியாக்கும் வளர்ச்சி எதற்கு?

விவசாயம் நாட்டின் முதுகெலும்பு. இந்தியா ஒரு விவசாய பூமி. இதுபோன்ற வாசகங்களை காற்றில் எழுதி வைக்கும் நிலை வந்துவிட்டது. விவசாயத்திற்கு தேவையான உள்ளீடும் சரி வெளியீடும் சரி இங்கு அந்தரத்தில் தொங்கிக்கொண்டு தான் இருக்கிறது. ஒரு இடம் எதில் உயர்ந்து இருக்கிறதோ அங்கு தான் அவனை முடக்க வேண்டும். வளர்ச்சி என்னும் பொறி வைத்து, அவனின் அஸ்திவாரத்தை ஆட்டி பார்க்க வேண்டும். அதை தான் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

ஏர் உழும் நாட்டு மாடுகளை அழிக்கும் திட்டம், ஹைபிரிட் விதைகள், நிலத்தை அழிக்கும் பூச்சிக்கொள்ளி மருந்துகள், பாய்ச்ச வேண்டிய தண்ணீரின் தட்டுப்பாடு என விவசாயத்தின் ஒவ்வொரு பகுதியும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. பறக்கிற பறவையின் ரெக்கையை உடைத்துவிட்டு பறக்கிற போல வீடியோ கேம் தயாரித்து பறவையை விளையாட சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் நம்மை ஆட்டி வைக்கும் ஆட்கள்.

வளர்ச்சி அடிப்படையை அழித்து வரக்கூடாது. அப்படி வந்தால் அது வளர்ச்சி இல்லை. இந்தியாவின் மொத்த அடிப்படையே விவசாயம் தான். இயற்கை நமக்கு அளித்த கொடை கொஞ்சநஞ்சமல்ல. அதை மீறி நாம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியவர்கள் நம் முன்னோர்கள். நீரின் அவசியத்தை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அதனால் முளைத்ததே தெருவுக்கு ஒரு குளம், ஊருக்கு ஒரு ஏரி.

ஆனால் நாம் என்ன செய்துக்கொண்டிருக்கிறோம். குளம் எல்லாம் சாக்கடைகளாக இருக்கின்றன. ஏரிகள் எல்லாம் ஆக்கிரமிப்புகளாக இருக்கிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 474 நீர்நிலைகள் இருந்தன. இப்பொழுது வெறும் 43 தான் இருக்கிறது.

நாம் வாய் பிளந்து நின்ற வள்ளுவர் கோட்டம் நுங்கம்பாக்கம் ஏரியில் கட்டப்பட்டது. பெருமையாக சொல்லிக்கொள்ளும் கோயம்பேடு பேருந்து நிலையமும், மார்க்கெட்டும் கோயம்பேடு சுழல் ஏரியை மூடி கட்டப்பட்டிருக்கிறது. ஏன் நமது நேரு ஸ்டேடியம் முன்னர் அல்லிக்குளம் ஏரியாக நின்றிருக்கிறது. புது திட்டமோ, புது வளர்ச்சியோ வரும்பொழுது முதலில் அழிக்கப்படுவது நமது ஆதாரத்தை தான்.

விவசாயத்திற்கு நீர் இல்லை என்று புலம்பிய காலம் போய் இன்று குடிக்கவும் கழுவவும் நீர் இல்லை என்று புலம்பிக்கொண்டிருக்கிறோம். அதிகபட்சமாக 25 அடியில் வந்துக்கொண்டிருந்த தண்ணீருக்கு பதில் இப்பொழுது போர் மிஷின் போட்டு மண் ஊத்து தாண்டி, பாறை ஊற்றை பிளந்துக்கொண்டு கட்டுப்பாறையில் முட்டி மோதிக்கொண்டு இருக்கிறது. இது தான் வளர்ச்சியா? எனை எட்டி மிதிக்கு, கீழே தள்ளிவிட்டு அன்றாடம் வாழ்விற்கே திண்டாடவைக்கும் இப்படி தான் நமக்கு வளர்ச்சி வேண்டுமா?

ஆக்கிரமிப்புகளாக ஆகும் நீர்நிலைகள் நிறுத்தியே ஆகவேண்டும் என்று போராடுவோம். நிலத்தடி நீரை மாசு படுத்தும், அல்லது நீர் படுகையை அழிக்கும் திட்டங்களையும், மணல் அள்ளும் கொள்ளையையும் எதிர்த்து குரல் கொடுப்போம்.

தேவைகள் என்ன? அதை எப்படி அடைவது என்பதற்கு ஒரு வழி இருக்கிறது. முதலீடு என்னும் பெயரில் விவசாய நிலத்தை அழித்து ப்ளாட் போட்டு வித்துவிட்டு அடுத்த வேலை சோற்றுக்கு எந்த நாட்டிடம் பிச்சை எடுக்க போகிறோம் நாம்?

நமக்கு சோறு போட்ட விவசாயியை ‘நான் மண்ணு மேல பட்ட கஷ்டம் போதும். என் புள்ள வெளியூருக்கு போகட்டும்’ என்று நினைக்க வைக்க போகிறோமா? நமக்கு அடையாளம் பெற்று தந்த விவசாயத்தின் அடையாளம் இல்லாமல் அழிக்க போகிறோமா?

2015ம் வருடத்தில் 2000 விவசாயிகளுக்கு மேல் இறந்திருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. அத்தனை பேரும் விளைந்த மண் காய்ந்து போய் கிடந்ததை பார்த்து உயிரை விட்டவர்கள். இதை விட கொடுமை என்ன இருக்க போகிறது?

ஒரு விவசாய நிலத்தை விற்க வேண்டுமானால் அதற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். இது அவ்வளவு எளிதல்ல. இருந்தாலும் ஒரு வருடத்தில் தமிழகத்தில் 2 லட்சம் புது வீடுகள் கட்டப்படுகின்றன. 40 சதவீதம் மக்களின் வாழ்வாதாரம் ஆன விவசாய நிலத்தில் இந்த 2 லட்சத்தில் சில ஆயிரங்கள் இருக்கிறது என்பதே கசப்பான உண்மை.

வீடுகள் மட்டும் தானா?

ஒவ்வொரு புது அரசாங்க திட்டமும் நம் நீர் வளத்தையும், நில வளத்தையும் சுரண்டி பார்க்க தான் செய்யப்படுகிறது. உதாரணம் நமது ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள். மண்ணை சுரண்டும் கும்பலும் ஒரு பக்கம் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது. இன்னும் மண்ணை அழிக்கவும் புறப்பட்டாகிவிட்டது. இன்னும் என்ன?

முன்னேறி குரல் கொடுக்க வேண்டிய சமயம் இது. யாருக்கோ தானே என்று அல்லாமல் நாம் தினம் வாயில் போட்டுக்கொள்ளும் சோறும், பருப்பும், காயும் விளைவித்த நமக்கு சோறு போட்ட உயிருக்காக – அவரது உழைப்புக்காக இறங்கி போராட வேண்டும். ஆடம்பர பொருட்களுக்கும், கார்ப்பரேட்டின் பொருட்களுக்கும் அவர்களே விலை நிர்ணயம் செய்யும் பொழுது விவசாயி அவனது உழைப்புக்கு அவன் ஏன் விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை. அவர்களுக்கு அந்த சுதந்திரத்தையாவது தரவேண்டி போராடுவோம் நாம்.

இந்த விவசாயம் கார்ப்பெரேட் பக்கம் போகும் தூரம் இல்லை. அந்த கார்ப்பரேட் என்பது ரத்தங்களாய் நம்மை உரிஞ்சி, நம்மை அடிமைபடுத்தும். கார்ப்பரேட் நிறுவனம் கையில் விவசாயம் செல்லும்பொழுது அவன் ஆட்டி வைக்கும் நிலையில் நாம் ஆடிக்கொண்டிருக்க வேண்டியது தான். அப்பொழுது கொய்யோ மொய்யோ என்று கத்தினாலும் ஒன்று கேட்பார் இருக்கமாட்டார்கள்.

போராடுவோம். நீர் நிலை ஆக்கிரமிப்பு கூடாது என போராடுவோம். மாசு படுத்துதல் கூடாது என போராடுவோம். நீர் நிலை, நில படுகை அழிவு சம்பந்தமான எந்த கார்ப்பரேட் அனுமதியும் கூடாது என போராடுவோம். அனைத்து ஆறுகளும் இணைக்கவேண்டும், ஒவ்வொரு ஆறிலும் தடுப்பணைகள் பல கட்டவேண்டும் என கோரிக்கை வைத்து போராடுவோம். இனியும் ஒரு விவசாயி உயிர் பிரியக்கூடாது என போராடுவோம். உணவு என்னும் பெயரில் திணிக்கப்படும் விஷங்களை எதிர்த்து போராடுவோம். விளை நிலத்தில் கொண்டு வரும் வளர்ச்சியும் வேண்டாம், முன்னேற்றமும் வேண்டாம் என எதிர்த்து குரல் கொடுப்போம்.


நாம் – நமது அடையாளத்தை காப்போம். நீர் நிலையை காப்போம். விவசாயத்தை காப்போம்.

-தம்பி கூர்மதியன் 

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி