ஆழப்பதிதல் - தகப்பனாகிய நான் எழுதும் *3

மகளே!
பள்ளி உனக்கு பழக்கமாகியிருக்கும்.

தினமும்…
பள்ளிப்பாடம் வீட்டுப்பாடம் யென
வாழ்க்கை ஒரு நேர்க்கோட்டில் பயணிக்கும்…

முக்கியமாய் ஒன்று சொல்லபோகிறேன் நான்!
நிலவை காட்டவேண்டிய நான்
அவசிய அறிவை புகட்டவேண்டிய சூழல் இது
கலையுலகில் பொக்கிஷத்தின் தனி தேடலிலோ
காலம் கடந்த திருமண கோலத்தில் அம்மையூடோ
உம்மை வந்து சேர வேண்டிய அறிவு
காலத்தின் கட்டாயத்தால் இப்பொழுதே!

உலகம் அழகு தான்!
சுற்றிய மனிதரும், அவர் மனமும் அழகு தான்
நிலைக்கொள்ள முடியா சூழலும், செயலும்
தினம் தோன்றி மறைகிறது மகளே!

உலகம் நல்லவைக்கொள்ளுதல் போலே
தீயவையும் திகட்டக்கொண்டிருக்கிறது!
அத்தீயன எமை தீண்டாதென
முட்டாள் வேஷமிட்டு
மூக்கில் சிகப்பு பஞ்சுவிட்டு கோமாளியாய்
நானிருக்க விரும்பவில்லை மகளே!

நான்கின் விதி நீ அறியவேண்டும்!

முதலாய் – உன் உடல் உன்னுடையது!
ஒவ்வொருவராய் நம் அத்தனைக்கும் ஓர் உரிமையுண்டு
உடல் – தனியானவை.
அது உனக்கு மட்டும் தான்!
உன் உடல் உன்னுடையது
யென ஆழப்பதிய செய் மகளே!

இரண்டாய் – நான் என்றும் உனக்காக!
’அய்யோ இது செய்தோமே’ எனச்சொல்லும்
பயமோ தயக்கமோ வேண்டாம் கண்ணே!
உனக்காக மட்டுமே நாங்கள் இருக்கிறோம்
அம்மையோ அப்பனோ கடிந்தாரெனும் பயம்கொளல் ஆகாதம்மா
உனை கடிந்தல் கனவிலும் நினையேன்
அப்பன் உன் நண்பன் ஆழ உணர்வாய் கண்மணியே!

மூன்றாய் – மூடும் உறுப்பு முழுதாய் உம்மது!
உம் உள்ளாடை கவரும் பகுதியெதும்
உன்னையன்றி யண்டோர் தொடுதல்
எவராயினும் – ஏன் நானாயினும்
தவறென ஆழப்பதி செல்வமே..
ஆழ்மனதில் ஆழப்பதி!


நான்கின் முக்கியம் – உரக்க கத்திவிடு!
உலகசூழ வாழ்தலில்
நம் உடலோடு உணர்ந்து
பிடித்தலும் வெறுத்தலும் அமைந்திருக்கும்..
உமக்கு பிடிக்காததும் வெறுப்பதும்
உமை சீண்டினால்…
உரக்க கத்திவிடு மகளே!
உமை வெறுக்க செய்யும் விசயத்தை சொல்லி
உரக்க கத்திவிடு!
கத்தி நகர்ந்துவிடு! உரக்க கத்திவிட்டு நகர்ந்துவிடு!

இந்நான்கு நீ அறிதல் தாண்டி பதிதல் வேண்டும்!
ஆழ்மனதில் நன்கு பதிதல் வேண்டும்!
ஏன் அப்பா! என்ற கேள்விக்கு
உன் மகிழ்ச்சி என்ற பதிலை மீறி வேறில்லை கண்ணே!
மகிழ்வாய் நீ தினம் இருத்தல் வேண்டும்
அம்மகிழ்வை நான் தினம் ரசித்தல் வேண்டும்
அம்மகிழ்வை உணர ஒரு படியாய்
நீ இந்த நான்கின் விதிகள் அறிதல் வேண்டும்
உற்று பதிதல் வேண்டும்..
மகளே! செய்வாயா?


-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!