குழலி பள்ளம்

மலை மேல் நின்றிருந்தவன். கீழே எட்டி பார்த்தான். அடிமேல் அடியாக பல நூறுகளை தாண்டிய பள்ளம். தலை கிறு கிறுத்துவிட்டது அவனுக்கு.

பக்கத்தில் இருந்த வழிகாட்டி அவனுக்கு அந்த இடத்தை பற்றி விளக்கினார்.

இதன் பேர் குழலி பள்ளம்.ஒரு காலத்தில் இந்த இடம் மேடாக தான் இருந்தது. நாயக்கர் காலத்தில் அரண்மனை கட்டுவதற்காக ஒரு சமயம் பல நூறு யானைகளும், வேலையாட்களும் வந்து இரவும் பகலும் தெரியாது கற்களை வெட்டிக்கொண்டிருந்தனர். திடீரென பூமி அதிர்ந்தது. பிளவுண்டது... வேலை செய்துக்கொண்டிருந்தவர்கள் அத்தனை பேரும் அலறி அடித்தனர். 'அய்யோ.. அம்மா..' கூட்டம் அலறியது. அடுத்த நிமிடம் கூட்டத்தின் சத்தம் பிளந்த பாதாளத்தின் அடியில் தான் கேட்டது. பெரிய குழி.. பள்ளம். விழுங்கிவிட்டது. அத்தனை உயிரையும். யானையையும் சேர்ந்து விழுங்கிவிட்டது.

மக்களோடும் யானைகளோடும் சரிந்துக்கொண்டிருந்த குழலிக்கு ஒரு கை துணைக்கு வந்தது. இறுக பிடித்த கையின் உரிமையானவனை அவள் உச்சி நோக்கினாள். அவன் கண்ணன். அவளின் காதலன். கண்ணீர் பெருகியது அவளுக்கு. அவன் தன் முழு பலம் கொடுத்து அவளை உயர தூக்க பார்த்தான். ஊர் ஓலமிடும் சத்தத்தில் காற்றும் நின்று போனது, ஓடும் தண்ணீர் உறைந்து போனது, வானம் இருண்டு போனது... அவள் கைகளை அவனிடம் கொடுத்துவிட்டு கண்ணை மூடினாள். 

'வீசும் காற்று மறையும்
விண்ணும் திசை காணாச்செல்லும்
நீரும் நின்னை காணா போகும்
நான் இருப்பேன் கண்மணியே.. உனக்காக
என்றும் நான் இருப்பேன்'

அவன் சொல்லிவிட்டு அவள் உதட்டை தீண்டிய நொடிகளை நினைத்து பார்த்தாள். மெல்லிய புன்னகை. கண்களை திறந்து பார்த்தாள். அவன் சறுக்கிக்கொண்டிருந்தான். இன்னும் காதலோடு அவனை பார்த்தாள். கைகளை விலக்கினாள். சரிந்தாள்.
 

'குழலீஈஈஈஈ...' அவள் மண்டை கூரான பாறையில் மோதி நினைவிழைக்கையில் கடைசியாக அவள் கேட்ட குரல். அவள் மனம்க்கொண்டு ஏற்ற காதலனின் குரல். கண்ணனின் குரல்... 'குழலீஈஈஈ..' இனிமையென சாவு அவளுக்கு.

ஆனால் இறந்து போன அவளுக்கு தெரியாது.. அந்த 'குழலீ...' என்னும் அழைப்பு பள்ளத்தின் மேலிருந்து வரவில்லை.. பள்ளத்தின் பாதியில் குதித்துக்கொண்டிருந்த கண்ணனின் வாயில் இருந்து வந்ததென்று.

காதலின் பெயர் சொல்லும் இது ‘குழலீ..’ பள்ளம் என்றானது.

குழலி கண்ணனின் காதலை கேட்ட அவன். முதலில் பள்ளத்தின் ஆழத்தை பார்த்து மிரண்டான், இப்பொழுது அவர்கள் காதலின் ஆழத்தை பார்த்து நெகிழ்ந்தான். மீண்டும் ஒரு முறை பள்ளத்தை எட்டி பார்த்தான். குழலியும், கண்ணனும் அங்கு இருப்பதாய் உணர்ந்தான். சட்டென குழலி சரியப்பார்த்தாள். 'குழலீ...' இம்முறை இவன் தன்னை மறந்து கத்தினான். பக்கத்திலிருந்த வழிகாட்டி சிரித்துக்கொண்டே அவனை பிடித்து மேலே இழுத்தார்.

'குதிச்சிடாத சார் நீ பாட்டுக்கு..' சொல்லிவிட்டு அவர் சிரித்தார். அசட்டு சிரிப்போடு அவன் மேலெழும்பி நடந்து வந்தான். பலமுறை அந்த பள்ளத்தை திரும்பி பார்த்தான்.
 

அவன் அலைப்பேசி மணி ஒலித்தது. எடுத்து பார்த்தான்... 'குழலி செல்லம்..' என்றிருந்தது. அலைப்பேசியில் பேசினான்.

'சொல்லுடீ..' என்றான்.

'என்னடா கண்ணா.. ஊருக்கு போனா பேசமாட்டியா? பொண்டாட்டிய மறக்க வைக்குதோ ஊரு..' அந்த பக்கம் அவள் கேட்டாள்.

'உன்ன மட்டும் தான் நினைக்க வைக்குது..' சொல்லிவிட்டு அவன் திரும்பி அந்த பள்ளத்தை ஒரு முறை பார்த்துவிட்டு நடந்தான்.

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

அதிகாரி சாமி