காதலாகிய நாள் ஒன்றில்...

’என் உதிரம்க்கொண்ட எழுத்தச்சு
உன் பெயரை தவிற வேறு எழுதவில்லையடி
அதை உம்மோடு இணைத்து
நம் இணைவின் சாட்சிக்கு அழகுயிரை பெத்தெடுப்போமா?’ அவன் சொல்லிவிட்டு அவளின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அவள் சிறிது அந்த வார்த்தைகளை யோசித்தாள். உருட்டிக்கொண்டிருந்த அவளின் பார்வை சட்டென விரிந்து பாசாங்கு கோபத்தோடு அவன் முகத்தை பார்த்தது.

‘பொறுக்கி… முதல்ல கல்யாணம் பண்ணிக்கோ டா…’ அவள் செல்ல கோபத்தோடு சொன்னாள்.

‘ஒற்றை நீள மஞ்சக்கயிற்றின் பிடியா?
சுற்றிய உறவின் அலைக்கழிப்பா?
என் வீட்டு படியின் உன் பாதம் தொடுதலா?
எது திருமணம் கண்ணம்மா?
ஒற்றை நிலவொளியில்
உன் முகம் மறித்து மற்றவை காணா நொடிபொழுதில்
உன் காதோரம் என் காதலை பதித்த நொடியல்லோ
நம் திருமணம் முடிந்தேறிய நொடி…’

‘ஆமா.. இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. இதுக்கு தான் கவிஞன கட்டிக்க கூடாதுங்குறது. ஏதாச்சும் பேசி ஏமாத்திருவானுங்க…’

‘எத்தனை கவிச்சொல் காதில் கொண்டாயோ!?
உரிமைக்கவிஞன் இந்த ஒருவனற்றோ ஏதாய் ஒற்றனுண்டோ?’

‘யப்பா சாமீ… நான் ஏதோ பாகவதர லவ் பண்ற போல இருக்குடா…’

‘கவிபாடும் காதலன் கொள்ளும் ஆசை உம்மது அல்லவோ
இந்த கவிஞனின் காதலும் உம்மது அல்லவோ?
காதலோடு கவிச்சொல்லும் எம் காதலை
செல்ல கூச்சுகள் போட
கசவை கொள்ளுதோடி..? என் கண்ணம்மாவுக்கு..’ அவன் மீண்டும் சொல்லிவிட்டு அவளது கண்களையே உற்று பார்த்துக்கொண்டிருந்தான். அவள் தன் கைப்பையிற்குள் கைவிட்டாள். ஏதோ துழாவினாள். உள்ளிருந்து ஒரு கத்தியை எடுத்தாள். அவனிடம் நீட்டினாள்.

‘இது என்ன..’ அவள் கேட்டாள்.

‘மனிதன்…
ஒருமுகம் கூறாய் மறுமுகம் கூறற்று
நேரத்திற்கேற்றார் போல் நடிப்பழகும்
கத்தியெனச்சொலும் இவையும் மனிதர்போன்றே!’

’ஆமா சார்.. கத்தியெனச்சொலும் இந்த கத்தி இருக்கே. இது அடுத்த வார்த்தை உங்க வாயில இருந்து கவிதைனு எதனா வந்தா உங்க தொண்டையில சொருகி இருக்கும்…’ அவள் உயர்த்தி காண்பித்துக்கொண்டே சொன்னாள். அவன் விழித்தான். பதில் எதுவும் சொல்லவில்லை.

‘எப்படி வசதீ..’ அவள் இன்னும் அழுத்தமாக அந்த கத்தியை கையில் வைத்து திருப்பிக்கொண்டே கேட்டாள்.

‘சூசூலிப்பா.. செல்லக்குட்டி. பேசுறேன்டா செல்லம் கவிதை சொல்லல. அந்த கத்திய உள்ள வை உள்ள வை..’ அவன் கெஞ்சலாக சொல்ல அவள் நக்கலாக அவனை பார்த்துக்கொண்டு தலையை ஆட்டிக்கொண்டே கத்தியை உள்ளே வைத்தாள்.

‘நீ வாழ்க்கையில ரொம்ப விளையாட்டா இருக்கியோனு தோணுதுடா..’ அவள் அமைதியாக சொன்னாள்.

‘வாழ்க்கைங்குறதே ஒரு விளையாட்டு மைதானம் தானே..’

‘டே… மண்டயா. பொலந்துருவேன்..’ அவள் ஆக்ரோஷமாக பேசினாள். அவன் சட்டென அவள் தாடையை தடவி முத்தமிட்டு கெஞ்சினான்.

‘சீரியஸா பேசணும்..’ அவள் சொன்னாள்.

‘சொல்லுடி..’

‘ஏதோ பேசுனோம். பழகினோம். பிடிச்சுது. காதலிச்சோம். ஆனா இதுக்கு அப்பரம் என்னனு நினைக்கிறப்போ ரொம்ப பயமா இருக்குடா. அது.. எப்படி… எனக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு. அந்த வாழ்க்கை முழுக்க என்னோட இருக்க போற ஒருத்தன நான் ஏதோ பிடிச்சுதுனு தேர்ந்தெடுத்துட்டேன்னு நினைக்கிறப்பவே ஒரு மாதிரி இருக்கு.. ஒரு மாதிரி பயமா…’

‘ஓ…’

‘நான் அதனால உன்ன விட்டு போயிடுவேன்னு சொல்லுறேன்னு நினைக்காத..’

‘நான் அப்படி நினைக்கவே இல்லயே…’ அவன் சொன்னான். அவள் ‘ஈ…’யென பல்லை இளித்தாள்.

அவன் அவளது கண்களை உற்று பார்த்துக்கொண்டிருந்தான். கைகளை இறுக பிடித்துக்கொண்டான்.

‘கண்ண மூடு..’ என்றான். அவள் கண்ணை மூடினாள். அவன் அவளது கைகளை இன்னும் இறுக பிடித்துக்கொண்டான். நொடிகள் கடந்தன. அவள் ஒரு பெருமூச்சு விட்டாள். கண்களை மெல்ல திறந்தாள்.

‘இது இப்போ வர்ற பயம் தான். சரியானவன தான் நாம தேர்ந்தெடுத்திருக்கோமா? நம்ம வாழ்க்கை நல்லா இருக்குமானு ஒரு பயம். அவ்வளவு தான்… இது லவ் பண்றதால மட்டுமில்ல. வீட்டுல பாத்து வச்சாலும் வரும்..’ அவன் சொல்லிவிட்டு அவளை பார்த்தான். அவள் மெல்லியதாய் சிரித்தாள்.

‘நீ என் கைய பிடிச்சப்போ.. இந்த உலகமே நீ தான்னு தோணுச்சு டா. அப்பா அம்மா எல்லாரையும் தூக்கி போட்டுட்டு உன்கூடவே வந்திடணும்னு தோணுச்சு டா..’

’ஆமா.. தோணாதா பின்ன. நாளைக்கு என்னோட ஒரு பிரச்சனை வர்றப்போ என்னைய தூக்கி போட்டுட்டு அம்மா அப்பாட்ட ஓட தோணும்’

‘டேய்…’ அவள் செல்ல கோபமாய் இழுத்தாள்.

‘லூசு உண்மைதான் டி. மனசு தோணுறபடி எல்லாம் வாழ்க்கைய வாழ முடியாது. வாழவும் கூடாது. சொல்வாங்களே… மனுச மனசு ஒரு குரங்குனு… நிலையா இருக்காது. மாறிகிட்டே இருக்கும். அப்படி மாறிகிட்டே இருந்தா வாழ்க்கை நல்லா இருக்குமா என்ன?’ அவன் சொன்னதும் அவள் அமைதியாக யோசித்துக்கொண்டிருந்தாள்.

‘இந்த வயசு. திருமண வயசு. என்னைய தவிற உலகத்துல  எதுவுமே முக்கியம் இல்லனு தோணும். இன்னும் கொஞ்ச வருசத்துல, நம்ம பசங்கள தவிற வேற இல்லனு இருக்கும். இப்படி தானே கொஞ்சம் வருசம் முன்ன அம்மா அப்பா தவிற வேற எதுவுமே இல்லனு தோணியிருக்கும். மனசு அப்படி தான்… காலத்துக்கு ஏத்த போல மாறும். அதுக்காக.. அது கேக்குற போலலாம் நாம நடந்துட்டு மத்தவங்கள தூக்கி போட்டுட்டு போயிட்டே இருந்தா, ஒரு கட்டத்துல நாம கடந்து வந்த பிடியும் இருக்காது. நாம இப்போ புடிச்சுட்டு இருக்குற பிடியும் இருக்காது… சோ.. பொறுமை. நிதானம். ஆழ்ந்த யோசனை… அவசியம்..’ அவன் சொல்ல அவள் ஆழமாக அவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவன் மெல்லியதாய் சிரித்தான்.

‘என்னடி யோசிக்கிற…?’ அவன் கேட்டான். அவள் ஒரு பெருமூச்சு விட்டாள்.

‘இல்ல இப்படி ஒரு புத்திசாலி என்னைய எப்படி காதலிச்சான்னு தான் யோசிக்கிறேன்’

‘ஹா.. அந்த கேள்வி எனக்கும் இருந்துச்சு’ அவன் சொல்ல அவளின் பாசப்பார்வை கோபமாக மாறியது.

‘ஓ…’ என்றாள்.

‘தாயே.. கோபம் வேணாம்மா…’ அவன் கையெடுத்து கும்பிட்டான்.

‘அப்போ சமாதானபடுத்து..’

‘எப்படி சமாதானபடுத்துறது…?’

‘உனக்கு தெரியாதா…’

‘தெரியாதே..’ அவன் பாவமாக முகத்தை வைத்தான். அவள் முறைப்பாக அவனை பார்த்தாள். பட்டென அவன் சிரித்துவிட்டான்.

‘சரி சரி.. முகத்துல இருக்குற வேர்வைய முதல்ல தொடை. இப்படி வேர்க்குது…’ என்று சொல்லிவிட்டு தன் கைகுட்டையை எடுத்து அவள் முகத்தை துடைத்தான். அவள் அதை ஆசையாக ரசித்துக்கொண்டிருந்தாள்.

‘இப்ப கண்ண மூடு..’ அவன் சொன்னான். அவள் ஆசையாக கண்ணை மூடினாள். ‘நெத்தியில கொடுத்தான்னா நார்மல் மூட்ல இருக்கான். கன்னத்துல கொடுத்தான்னா.. லவ் மூட்ல இருக்ககான்’ அவள் நினைத்துக்கொண்டாள். அவனின் முத்த தீண்டலுக்காக காத்திருந்தாள்.

அவன் தொண்டையை உருமினான். ‘கண்ண தொற…’ அவன் சொன்னான். அவள் ஒன்றும் புரியாமல் கண்களை திறந்தாள்.  கையில் நெய் பிஸ்கட்டோடு நின்றுக்கொண்டிருந்தான் அவன். அவள் கண்கள் முறைத்தன.

‘என்ன இது…?’ என்றாள்.

‘நீதானே.. கோபமா இருக்கேன். சமாதானபடுத்துனு சொன்ன…’

‘டே.. பொறுக்கி. பிஸ்கட் வாங்கி கொடுத்து சமாதானபடுத்த நான் என்ன நாய்குட்டியா… நில்லுடா..’ தன் பையினுள் கையை விட்டு கத்தியை துழாவினாள்.

‘அடியே… என்ன வேணும்னு சொல்லுடி…’

‘என்ன வேணும்னு திரும்பவுமா கேக்குற.. அடேய்…’ அவள் ஆக்ரோஷமாக எழுந்தாள்.

‘அடிப்பாவிகளா.. என்ன வேணும்னு சொல்லவே மாட்டேங்குறாளுங்களே.. எனக்கு என்ன ஜோசியமா தெரியும்..’ சொல்லிவிட்டு அவன் அலறி ஓடினான். அவள் பின்னால் கத்தியோடு துறத்தினாள். செல்ல கோபமாய், காதல் நிறைவாய்.

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

அதிகாரி சாமி