என் காதலை நீ கேளடி

அவன் அந்த சாலை ஓரத்தில் அமைதியாக நின்றுக்கொண்டிருந்தான். அங்குமிங்கும் உலாத்தினான். கைபேசியை எடுத்து மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டான். தன் வண்டியை ஒரு முறை பலமாக தட்டினான். கடுப்பான முகத்தோடு திரும்புகையில் தூரத்தில் அவள் நடந்துவந்துக்கொண்டிருந்தாள். கடுகடுக்கப்பான அவனது முகம் சட்டென மாறியது.

அவள் அருகில் வந்தாள்.

‘சார்… ரொம்ப சூடா இருக்கீங்களோ?’ அவள் கேட்டாள்.

‘இல்ல.. ரெண்டு வாட்டர்மெலன் ஜூஸ் குடிச்சுட்டு கூலா நிக்கிறேன்…’

‘டே… எனக்கு..?’

‘அப்படியே உதச்சனா தெரியும். எவ்வளவு நேரம் எரும…’ அவன் பொய் கோபத்தோடு கேட்க அவள் சட்டென திமுறினாள்.

‘ஏன்.. வெயிட் பண்ண மாட்டீங்களோ?’

‘எதுக்கு வெயிட் பண்ணனும்…? என்னால முடியாது…’

‘ஆமா… மூக்கு மேல கோவம் வந்திரும். சரிங்க சாமீ.. இனிமே வெயிட் பண்ண வைக்க மாட்டேன்… போலாமா?’ அவள் சொன்னதும் அவன் முகம் இன்னும் இளகியது.

‘பாவம்..’ அவன் சொன்னான்.

‘யாரு..?’ அவள் கேட்டாள்.

‘உனக்கு வர்றப்போறவன் தான்…’

‘அந்த ஜீவன் பாவம் தான்… எங்க இருக்கானோ…’ அவள் சலிப்போடு சொன்னாள். அவன் சிரித்துக்கொண்டே வண்டியை எடுத்தான். அவள் பின்னால் அமர்ந்துக்கொண்டாள். அவர்கள் வண்டி கிளம்பியது.

‘ஆமா… நீ யார் வண்டியிலயும் ஏற மாட்டேங்குற.. எப்படி என் வண்டியில மட்டும் ஏறுற?” அவன் கேட்டான்.

‘அதுவா… நீ ரொம்ப நல்ல பையன். பொண்ணுங்கள ரொம்ப மதிக்கிறவன். என்ன க்ளோஸா இருந்தாலும் உன் லிமிட் தெரிஞ்ச பையன்.. அதனால தான்…’ அவள் சொன்னாள்.

‘பாதகத்தி… போட்டு மடக்குறாயா…’ அவன் வாயிற்குள்ளே முனகிக்கொண்டான்.

‘என்னடா…’

‘இல்ல.. ரொம்ப சந்தோசம்னு சொன்னேன்…’ அவன் சமாளித்தான். அவள் உதட்டோரமாக மெல்லியதாய் சிரித்தாள். வண்டி கண்ணாடியை திருப்பி அவள் முகம் பார்ப்பது போல வைத்துக்கொண்டான். அவள் அதை கவனித்திருந்தாலும் கவனிக்காது போல பாவலா செய்தாள்.

‘’ஆமா.. நம்ம டீம்ல இருக்கானே நகுல் அவன் எப்படி டா..?’ அவள் கேட்டாள்.

‘என்னாத்துக்கு இவ திடீர்னு அவன கேக்குறா.. அய்யய்யோ..’ என்று அவன் மனதினுள்ளே நினைத்துக்கொண்டு தொண்டையை உருமினான்.

‘அவன் எப்படி… பொண்ணுங்ககிட்ட கண்டுக்காத மாறிகாட்டிக்கிட்டு பின்னாடி சுத்த விடுவாங்களே அந்த மாதிரி கேஸ் அவன்லாம். அவன்லாம் காட்டு எறுமை மாதிரி. தூரத்துல இருந்து பாக்க தான் பிரம்மிப்பா, அழகாலாம் இருக்கும். பக்கத்துல வந்து நக்கவிட்டோம், முழு தோலையும் உரிஞ்சுட்டு போயிருவான்… ஏன் கேக்குற…’

‘இல்ல.. நம்ம ப்ராஜெக்ட்ல இருந்து அவன ரிலீஸ் பண்ணப்போறங்க… என் ஃப்ரண்டு ப்ராஜக்ட்ல எடுக்க ஃபீட்பேக் கேட்டாங்க. நீ சொன்னதயா சொல்ல முடியும்…’ என்றாள் சளிப்பாக.

‘ஈ.ஈஈஈ..’ அவன் பல்லை காண்பித்தான்.

’ஒருத்தன் எப்படினாலே அவன் எப்படி வேலை செய்வான், எப்படி பேசுவான்னு சொல்லாம பொண்ணுங்ககிட்ட எப்படி பழகுவான்னு சொல்லுற புத்தி இருக்கே…’

‘ஏன்.. அந்த புத்திக்கு என்னவாம்…’

‘அல்ப புத்தி. அடுத்தவன ஒரு பொண்ணு நல்லவன்னு சொல்லிடகூடாதே.. இந்த ஆம்பளைங்களுக்கு எப்படி தான் பொத்துக்கிட்டு வருமோ…’

‘மேடம் எத்தன ஆம்பளைங்கள பாத்தீங்க…’

‘ஏன்டா.. நம்ம நகுல், ஸ்ரீ, ராகுல், லிங்கன்…’ அவள் இழுத்துக்கொண்டே போனாள்.

‘போதும் போதும்…’ சளிப்போடு அவன் சொன்னான். ‘லிஸ்ட் பெருசா சொல்லுறாளே… கீழ இறக்கி பொங்குனு ஒண்ணு வாயிலயே கொடுத்து உன்ன லவ் பண்ணுறேன்டினு சொல்லிருவோமா? இல்ல இல்ல.. இவ திரும்பி அடிக்கிற கேஸ்… சாஃப்டாவே டீல் பண்ணுவோம்..’ மனதினுள் நினைத்துக்கொண்டான்.

’சரி.. இப்ப எதுக்கு வண்டி ஓட்ட கத்துக்கணும் உனக்கு..’ அவன் கேட்டான்.

‘அப்பாக்காக. என் அப்பா ஒரு பைக் பிரியர். சின்ன வயசுல இருந்தே எங்கள பைக்ல வச்சு ஓட்ட அவருக்கு ரொம்ப பிடிக்கும். அம்மாவ, என்ன, என் தங்கையனு அவர் இடம் பத்தாம முன்னாடி உட்கார்ந்து நிமிர்ந்துகிட்டே வண்டி ஓட்டுவார். சிரிப்பா இருக்கும். ஆனா அவர் ரசிப்பார்… எங்க போனாலும் என் அப்பா வண்டில தான் போவார். யார்கிட்டயும் கொடுக்க மாட்டார். அம்மா சின்ன வயசுல இருக்குறப்போ அப்பா ஒரு முறை சொல்லியிருக்கார். எனக்கு பிள்ளை பொறந்து அவன் என் வண்டிய ஓட்டுறப்போ தான் நான் பின்னாடி உட்காருவேன்னு. அம்மாக்கு உடம்பு முடியல.. என் தங்கைக்கு அப்பரம் குழந்தை பிறக்கல… அதான். பையன் மட்டும் தான் செய்யணுமா? பொண்ணு செய்யக்கூடாதா… என் அப்பாவ பின்னாடி உட்கார வச்சு நான் கூட்டிட்டு போகணும்..’

‘அடடே.. அருமையான ஃப்ளாஷ்பேக்… அப்பாவ அம்புட்டு பிடிக்குமோ?’

‘இந்த உலகத்துலயே… என் அப்பாவ மட்டும் தான் ரொம்ப பிடிக்கும்… அவர போல ஒரு ஆம்பள இந்த உலகத்துலயே கிடையாது… ஐ லவ் மை டாடி..’ அவள் சற்று உரக்க தான் சொல்லிவிட்டாள். அவன் மெல்லியதாய் சிரித்தான். அவன் மனம் அங்குமிங்கும் அலைபாய்ந்தது.

ஈசிஆர் சாலையிலே அவர்கள் வண்டி நின்றது. அவன் கீழிறங்கினான்.

‘இன்னைக்கு தான் கடைசி. இன்னைக்கு நீ கரெக்டா ஓட்டி ஆகணும்… இத்தன நாள் ஏதோ அங்க இங்கனு ஓட்டின.. இப்போ மெயின் ரோட்டுல தூரமா ஓட்டப்போற.. ஞாபகம் இருக்குல..’

‘இருக்குடா…’

‘ப்ரேக் எந்த பக்கம்…’

‘ரைட்…’

‘கியர்..?’

‘லெஃப்ட்..’

‘க்ளச்..?’

‘லெஃப்ட்…’

‘முன்னாடி போற வண்டி ப்ரேக் போட்டா?’

‘ப்ரேக் போட்டுட்டு க்ளச் பிடிச்சுப்பேன்…’

‘வேகமா போகுறப்போ.. ஸ்பீடு குறைக்கணும்னா..’

‘க்ளச் பிடிச்சு.. கியர குறைச்சு.. கொஞ்சம் கொஞ்சமா ஓரங்கட்டுவேன்.’

‘சூப்பர்… இப்ப ரெடியா? நான் இன்னைக்கு பின்னாடி உட்கார்ந்திக்குறேன்..’

‘ஓகேடா..’ அவள் சொல்லிவிட்டு வண்டியில் ஏறினாள். வண்டியை இயக்கி முதல் கியரை போட்டு முன்னால் சென்றாள். வண்டி ‘தடக்’கென்று நின்றது.

‘ஏ..’

‘சாரி சாரி டா..’ அவள் சொல்லிவிட்டு மீண்டும் இயக்கினாள். இம்முறை சரியாக எடுத்தாள். ஒவ்வொரு கியராக மாற்றி வேகத்தை கூட்டினாள். காற்றில் அவளது கூந்தல் அவனது முகத்தில் முத்தம் கொடுத்துவிட்டு சென்றது.

கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்தான். உன்னிப்பாக அவள் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தாள். எங்கும் இடித்திடா வண்ணம் செல்லவேண்டும் என்னும் கவனிப்பு அவள் முகத்தில் தெரிந்தது. அவள் புருவங்கள் உயர்ந்தே இருந்தன. அவன் அத்தனையும் ரசித்தான்.

‘டே.. எனக்கு இந்த நிறுத்துறது மட்டும் இன்னும் பழக்கம் வரல. ஹெல்ப் பண்ணு சரியா..’ அவள் சொன்னாள்.

‘என்னாது நிறுத்துறது பழக்கமாகலயா..’ அவன் யோசித்தான். கண்கள் விரிந்தன. அவள் முகத்தை பார்த்தான். அவள் அருகில் நெருங்கி அமர்ந்தான்.

‘ஹோய்…’

‘சொல்லுடா.. நிறுத்தலாமா?’

‘ஹோய்…’ அவன் இன்னும் இழுத்தான்.

‘சொல்லித்தொலை எறுமை…’

‘ஐ லவ் யூ…’ அவன் சட்டென அவள் காதில் சொன்னான். அவள் கண்ணாடியில் அவன் முகத்தை பார்த்தாள். அவன் ‘ஈஈஈஈ…’ என இளித்தான்.

‘தூ… இத நிறுத்த ஹெல்ப் பண்ணு…’ அவள் சொன்னாள் கடுகடுப்பாக.

‘நீ பதில் சொல்லு அப்ப தான் நிறுத்த ஹெல்ப் பண்ணுவேன்..’ அவன் சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து கையை விரித்துக்கொண்டான்.

‘டே… மரியாதையா ஹெல்ப் பண்ணுடா…’

‘என்னைய லவ் பண்றேன்னு சொல்லு. ஹெல்ப் பண்றேன்..’

‘டே… விளையாடுற நேரும் இல்லடா இது.. ப்ளீஸ்டா..’

‘இங்க பாரு. நான் உன் அப்பா அளவுக்கு நல்லவனா என்னனுலாம் எனக்கு தெரியாது. எனக்கு தெரிஞ்ச அளவுக்கு நான் நல்லவன்பா.. உன் அப்பா அளவுக்கு பாத்துபேனாலும் தெரியாது… ஆனா நல்லா பாத்துப்பேன்னு நம்பிக்கை இருக்கு. உன் அப்பா அளவுக்கு என்னைய உனக்கு பிடிக்குமா தெரியாது. ஆனா உனக்கு என்னைய பிடிக்கும் அது எனக்கு தெரியும்.. ஸோ.. சொல்லு…’

‘டே குரங்கு. நீ சொல்லுவனு தெரியும்டா. ஆனா இப்படி சொல்லுவேன்னு தெரியாதுடா..’ அவள் இன்னும் ஓட்டிக்கொண்டே பல்லை கடித்துக்கொண்டு சொன்னாள்.

‘என்னது தெரியுமா… ஹே ஹே.. தெரியுமா.. சொல்லு சொல்லு..’

‘ஆமா.. தெரியும்…’

‘அப்போ பதில்…’ அவன் கேட்டுவிட்டு கண்ணாடி வழியாக அவள் முகத்தை பார்த்தான். அவளும் அந்த கண்ணாடி வழியாக அவனை பார்த்தாள். கடுகடுப்பான அவள் முகம் சட்டென மாறியது. காண்ணாடி வழியாக சிறு புன்னகையை தூவினாள்.

‘ஐ லவ் யூ டா… எறுமை..’ சொல்லிவிட்டு கையை சடாரென விரித்தாள். வண்டி ஆடியது. சட்டென அவன் பாய்ந்து வண்டியின் ஹாண்டில் பாரை பிடித்தான்.

‘அடி பாதகத்தி… கொலை பண்ண பாத்தியேடி…’ அவன் சொல்லிவிட்டு எக்கி ஒவ்வொரு கியராக குறைத்தான். அவர்கள் நெருங்கிய இணைப்பில் இருந்தார்கள். அவன் முகம் அவள் முகத்தோடு ஒன்றாக இருந்தது. அவன் வண்டியை நிறுத்த போராடிக்கொண்டிருந்தான். அவள் அவன் முகத்தையே உற்று பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘என்னடி அப்படி பாக்குற.. முத்தம் கித்தம் கொடுத்துறாத.. பட்டுனு ஆஃப் ஆகிடுவேன்..’ அவன் சொன்னான்.

‘ஆசை தான்..’ அவள் சொல்லிவிட்டு முகத்தை கோண காண்பித்தாள். அவன் அவனது தலையால் அவன் தலையை செல்லமாக முட்டினான். இருவரும் சிரித்தார்கள். காதல் ஆரம்பித்தது. வண்டி நின்றது.

Comments

  1. அருமையான கதை .சுவாரசியம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!