Skip to main content

தவிப்பு...

கரைந்துவிட்ட மேகத்தின் கடைசி துளிகள் சிறு சிறு சாரல்களாக தூவிக்கொண்டிருந்தன. போதும் போதுமென ஒவ்வொரு குளமும் குட்டையும் ஆறும் ஏரியும் உமிழ்ந்துக்கொண்டிருந்தன. சென்னையின் ஒட்டுமொத்த இடமும் கொஞ்சம் அலைக்கழிந்து தான் போயிருந்தது. அவன் மீண்டும் மீண்டும் தன் அலைப்பேசியை எடுத்து தட்டிக்கொண்டிருந்தான்.

சட்டென எழுந்தான்.

‘எங்க போற…’ அவன் நண்பன் கேட்டான்.

‘உனக்கு தெரியாதா…’

‘சார்… நம்ம முதல் ஃப்ளோர் முழுசா முழுகிடுச்சு. தெரியும்ல…’

‘நாம இருக்குறது சென்டர் இடம். நமக்கே இப்படினா.. அவ இருக்குற ஏரியா தெரியும்ல..’

‘சரி.. அதுக்கு? எப்படி போவ… நம்ம ஏரியாவுக்குள்ளவே வரமுடியாம சோத்துப்பொட்டலத்த ஹெலிகாப்டர்ல போட்டுகிட்டு இருக்கானுங்க..’ நண்பன் சொல்ல அவன் அமைதியாக நின்றிருந்தான். கையை பிசைந்தான். பல்வேறு விசயங்களில் அவன் சிந்தனை சென்றது. மறுவார்த்தை எதுவும் இல்லாமல் படிகளில் வேக வேகமாக இறங்கினான். சுற்றி இருந்தவர்கள் கத்தினர். கேட்கவில்லை. அவனை கால் கீழே வைக்க விடாமல் கழிவுகள் கலந்த நீர் அவனை தாங்கிக்கொண்டது. நீந்த ஆரம்பித்தான். தண்ணீரின் வேகம் செல்ல செல்ல ஒவ்வொரு வீடாய் துணைக்கு பிடித்துக்கொண்டான். அரை மணி நேர முயற்சிக்கு பிறகு கால் தரையில் எட்டும் நிலைக்கு வந்தான். இருந்தும் கழுத்தளவு தண்ணீர். இன்னும் கடினமாக இருந்தது அவனுக்கு.

அத்தனை வீட்டு மாடிகளிலும் புலம்பியபடி நிற்கும் மனிதர்கள் தெரிந்தனர். அவனை காப்பாற்ற வந்தவன் என எண்ணி சிலர் காப்பாற்ற கத்தினர். சிலர் சாப்பாடு கேட்டு புலம்பினர். சுற்றி இருந்த சத்தம் ஓல சத்தமாக கேட்டுக்கொண்டிருந்தன. அவன் இடுப்பளவு தண்ணீரில் நடந்துக்கொண்டிருந்தான். இப்பொழுது கொஞ்சம் சகஜமாக மக்கள் அங்குமிங்கும் சென்றுகொண்டிருந்தார்கள். இருவர் வேகமாக ஓடிவந்து அவனை தாங்கி பிடித்து சமமான இடம் வரை அழைத்து வந்து கிடத்தினர்.

இன்னும் பரபரப்பாக மற்றவர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். இவனை கிடத்திய இருவரும் அடுத்தவரை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள். அவன் வந்து சோர்ந்த விகித்தத்தில் தத்தளித்துக்கொண்டே, ‘ஜாப்ரகான்பேட்டை.. எப்படி இருக்கு..’ பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டான்.

‘எங்க இருக்கும். மொத்தமாக போச்சு…’ அவர் சொல்லிவிட்டு முன்னால் நடந்தார். அவன் பதறிபடி எழுந்தான். பக்கத்தில் சென்றுக்கொண்டிருந்த ஒரு டெம்போவில் உதவி கேட்டு போகும் வரை வருகிறேன் என ஏறிக்கொண்டான். அது கத்திப்பாராவில் அவனை விட்டுவிட்டு, அடையார் பக்கமாக திரும்பியது.

அவன் இறங்கி இன்னும் ஓட ஆரம்பித்தான். நடையாக சென்றவன் அடையாறு ஆற்றில் ஓடும் தண்ணீரின் வேகத்தை பார்த்து வாயடைத்து நின்றான். அங்கங்கு சிறு சிறு தீவுகளாக வீடுகள் தெரிந்தன. பக்கத்தில் படகு ஒன்று வந்து நின்றது. எல்லோரும் வரிசையாக இறங்கினர். முன்னர் இருந்தவரிடம் சென்று அவன் பேசினான்.

‘அண்ணே.. காசி தியேட்டர் உள்ள போகணும்னே.. அங்களாம் போனீங்களாண்ணே?’ என்றான்.

‘தம்பி. அந்த பக்கமெல்லாம் வேகம் அதிகமா இருக்கு. வீடு வேற நெருக்கமா இருக்கு.. மரம் எங்க இருக்குனு தெரியல. போனா போட்டும் போயிடும்பா..’

‘அண்ணே.. அங்க லேடீஸ்லாம் இருக்காங்கண்ணே..’

‘இங்க வந்து இறங்குறது எல்லாம் யாரு? லேடீஸ் குழந்தைங்க, வயசானவங்க தான்.. எத்தனை புள்ளதாச்சி பொம்பளைங்க வேற இருக்காங்கனு தெரியுமா..’

‘அண்ணே…’

‘தம்பி.. எல்லாரையும் காப்பாத்தணும்தான் பா.. காப்பாத்தலாம்பா… ஆர்மி வருதுனு சொல்லியிருக்காங்க. காப்பாத்திரலாம்பா..’ அவர் சொல்ல அவனுக்கு அழுகை ஆத்திரமாக வந்தது. கண்களை மூடிக்கொண்டான். கண்களை திறந்து பார்க்கும்பொழுது அவளின் முகம் அந்த ஆற்றில் அவனுக்கு தெரிந்தது.

ஒரு சாரர் பாலத்தை பிடித்துக்கொண்டு மாற்று பக்கம் கடந்துக்கொண்டிருந்தனர். அவர்களோடு சென்றுவிடுவது என்று முடிவெடுத்து குதித்தான். மற்ற நாட்களில் இரண்டு நிமிடத்தில் கடந்துவிடக்கூடிய இடம். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கடந்து நின்றான். தண்ணீரின் வேகம் குறைந்தபாடில்லை. பரபரப்பான அந்த இடம் வெள்ளக்காடாக இருந்தது. தன்னை அறியாமல் கண்ணீரை பெருக்கிக்கொண்டிருந்தான்.

இனியும் பொறுப்பதிற்கில்லை என நீந்தியும், நடந்தும் போராட்டமாய் அடுத்த ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவளின் வீட்டிற்கு முன் அவன் ஒரு மரத்தின் உச்சியை பிடித்துக்கொண்டு நின்றிருந்தான்.

‘சுவாதீ…’ அவன் கத்தினான். யாரும் எட்டி பார்க்கவில்லை.

‘சுவாதீ…’ இன்னும் பலமாக கத்தினான். அவள் எட்டி பார்த்தாள். இன்னும் மரக்கிளையை பிடித்துக்கொண்டு சிரித்தான். அந்த சிரிப்பில் அழுகையும் உடன் இருந்தது.

‘நீ.. ரகு.. டே.. நீ..’ அவள் அழுகை அடக்கமுடியாமல் திணறினாள். பக்கத்தில் அவளது தோழிகள் வந்து நின்றார்கள். அவன் முன்னேறினான். அவள் வீட்டின் சுவற்றை பிடித்துக்கொண்டான். நேராக உள்ளே செல்ல வழியில்லை. தண்ணீர் மூழ்கி, உள்ளே சென்று, வாசலை பிடித்து படிவழியாக அவன் மேலேறி வந்தான். உடம்பெல்லாம் கீறலும் ரத்தமுமாக, ஏதோ போர்க்களத்தில் இருந்து பாதியில் தப்பி வந்தவன் போல இருந்தான் அவன்.

அவள் தூரமாக நின்று பார்வை மட்டுமே செலுத்தினாள். அவனுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது.

‘நல்லா இருக்கியா…’ அவன் கேட்டான். அவள் உதட்டை கடித்துக்கொண்டு கண்ணீரை நிறுத்திக்கொண்டு மேலும் கீழும் தலையாட்டினாள்.

‘என்னைய கல்யாணம் பண்ணிப்பியா..’ அவன் இன்னும் மூச்சிரைக்க கேட்டான். அவள் கண்கள் இன்னும் அதிகமாக கண்ணீரை தள்ளிவிட்டது. உதட்டை இன்னும் இழுத்து கடித்துக்கொண்டாள். மேலும் கீழும் பலமாக தலையை ஆட்டினாள்.

‘எனக்கு சமைக்க தெரியலனா திட்டுவியா..?’ அவள் அழுகையை இழுத்துக்கொண்டு கேட்டாள்.

‘எனக்கு சமைக்க தெரியும்…’ அவன் சொன்னான். ‘சேர்ந்து சமைக்கலாம்…’

‘எனக்கு பைக் ஓட்ட கத்து தருவியா…’

‘லாரி கூட ஓட்ட கத்து தர்றேன்…’ புருவத்தில் வந்து விழுந்த தண்ணீரை தள்ளிவிட்டு சிரித்துக்கொண்டே சொன்னான் அவன்.

‘எனக்காக என்ன வேணா செய்வியா…?’ அவள் கேட்டதும் அவன் பின்னால் திரும்பி பார்த்தான். வேகமாக ஓடும் தண்ணீரில் பார்வை வைத்துக்கொண்டு,

‘இதுக்கு மேலயும் சந்தேகமா..’ என்றான். அவள் இம்முறை சத்தமாக சினுங்கினாள்.

‘அது என்ன இப்போ கோபம் போயிடுச்சா.. இத்தனை நாள் பேசாம இருந்த.. இப்ப வேணும்னு தோணுதோ..’ சட்டென முகத்தை முறைப்பாக வைத்துக்கொண்டு கேட்டாள் அவள்.

‘என்ன பண்ணித்தொலைய… என் இடத்துல எவன் பொண்டாட்டினு பேசுனாலும் உன் முகம் தானே முன்னால வந்து நிக்கிது. எதிர்காலத்த பத்தி கனவு காணலாம்னு பாத்தாலும் பேன்னு அங்கயும் சிரிச்சுட்டு நீ தான் வந்து நிக்கிற… கண்ண மூடிட்டு நயன்தாரா வா வா ன்னு சொல்லி கைய நீட்டுனா… கருமம் பூரிக்கட்டையோட நீ தான் வந்து நிக்கிற…’

‘ஓஹோ…’

‘ஆஹான்…’

‘பொறுக்கி…’

‘ஆமா ஆமா..’ அவன் சிரித்துக்கொண்டே சொன்னான்.

‘அப்படி சிரிச்சுகிட்டே பாக்காதடா…’

‘சரி சரி..’ இன்னும் சிரித்தான்.

‘நல்லா தெரியும்டா உனக்கு… சே…’ சொல்லிவிட்டு ஓடிவந்து கட்டிக்கொண்டாள். அவர்கள் இருவர் கண்ணிலும் ஆனந்த கண்ணீர்.

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…