காதலின் நட்பு

இந்த உலகத்துல அத்தனை பேருக்கும் ஒரு நிறைவேறாத ஆசை இருக்கும். எனக்கும் இருந்துச்சு. 

ராகுல்… என் வாழ்க்கையில வந்த முதல் பையன்.

அப்போ நான் பத்தாவது படிச்சுட்டு இருந்தேன்…

‘டே ராகுல்.. அவ உன்னதான்டா பாக்குறா..’ ராகுலோட நண்பர்கள் அவன கிண்டல் பண்ணுவாங்க. ஆமா. நான் அவன அப்படி தான் பாப்பேன். எல்லோரும் பாக்குற போல பாத்துட்டு இருப்பேன். ஏனா… எனக்கு ராகுல். அவ்வளவு இஷ்டம். ராகுல் என்ன திரும்பி கூட பாக்கமாட்டான். வெட்கப்பட்டுட்டு அவன் நண்பர்கள் கைய தட்டிவிட்டுட்டு வேகமா நடந்திடுவான். சிரிப்பா இருக்கும்.

‘ராகுல் டே… அவ சொல்லுறதுக்கு முன்ன நீயே சொல்லிடுடா..’ அவன் நண்பர்கள் பலர் என் காதுபடவே அவன  கேலி பண்ணுவாங்க. நான் சிரிப்பேன். அவன் பண்ணுற சின்ன சின்ன முகபாவனையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவன ரசிச்சேன்.

ஒரு நாள் என்னைய மரியா மிஸ் கூப்பிட்டாங்க. எங்க எல்லாருக்குமே மரியா மிஸ்னா ரொம்ப பயம். மிரட்டலா தான் எப்பவும் இருப்பாங்க. சிரிக்க கூட மாட்டாங்க. நாங்க எல்லோரும் அவங்க வந்தாலே மிரளுவோம். அவங்க ஏன் என்னைய கூப்பிடுறாங்கனு நான் யோசிச்சுகிட்டே போனேன்.

அவங்க ரூம்ல அவங்க அதே போல கோபமா உட்கார்ந்திருந்தாங்க. பக்கத்துல ராகுல். எனக்கு ஒண்ணும் புரியல.

‘மிஸ்..’ கைய உயர்த்தி காண்பிச்சுட்டு நான் உள்ளே போன்னேன்.

‘என்ன மேடம்… நல்லா இருக்கீங்களா..?’ அவங்க கேட்டாங்க. நான் ஒண்ணும் புரியாம விழிச்சேன்.

‘அப்ப என்ன பண்ணுறார்..?’

‘ரயில்வேஸ்ல க்ளர்க்கா இருக்கார் மிஸ்…’

‘ஓ.. அப்பா நான் ரயில்வேஸ்ல க்ளரக்கா இருக்குறேன். நீ ஸ்கூலுக்கு போயி இருக்குற பையன எல்லாம் ஜொள்ளு விடுன்னு சொல்லி அனுப்பினாரா…’ மரியா மிஸ் கேட்டதும் எனக்கு தூக்கி வாரிபோட்டது. ராகுலை திரும்பி பார்த்தேன். அவன் தலையை கீழே குனிந்துக்கொண்டு நின்றுக்கொண்டிருந்தான்.

‘இந்த வயசுலயே என்ன…’ அவங்க இன்னும் கேட்டாங்க. எனக்கு கண்ணு கலங்கிடுச்சு. கண்ணீர் கொப்பளிச்சுது.

‘உன் அப்பாவுக்கு ஃபோன் போட்டிருக்கேன். வரட்டும்..’ அவங்க சொன்னாங்க.

‘மிஸ் மிஸ்… அப்பாலாம் வேணாம் மிஸ். நான் ஒழுங்கா இருக்கேன் மிஸ்.. ப்ளீஸ் மிஸ். ப்ளீஸ் மிஸ்..’ நான் கெஞ்சினேன். அவங்க கேக்கல. அப்பப்போ ராகுல பாத்தேன். அவன் தலை கீழ குனிஞ்சது நிமிரவே இல்ல. எனக்கு அவன் மேல ரொம்ப கோபமா வந்துச்சு.

பிடிக்கலனு ஒரு முறை கூட நேருல சொல்லாதவன்… நேரா போயி மிஸ்கிட்ட மாட்டிவிட்டுட்டானே. எனக்கு கோபம், ஆத்திரம்.. இயலாமையில அழுகை.

அடுத்த அரை மணிநேரத்துல… அப்பா வந்தார். எங்கள வெளிய அனுப்பிட்டு அப்பாவ உள்ள வச்சு பேசிட்டு இருந்தாங்க. ராகுல் இப்பவும் தலை குனிஞ்சே தான் இருந்தான். அவன் சட்டைய பிடிச்சு கேக்கணும் போல இருந்துச்சு… அடிக்கணும் போல இருந்துச்சு. உள்ள அப்பாகிட்ட என்ன சொல்லுறாங்களோனு பயமும் இருந்துச்சு.

அப்பா பேசிட்டு வெளிய வந்தார். முதல்ல ராகுல திரும்பி பார்த்தார். அப்பரம் என்னைய திரும்பி பார்த்தார்.

‘வீட்டுக்கு போலாம்..’ சொல்லிட்டு அவர் பாட்டுக்கு முன்னால நடந்தார். நான் எதுவும் புரியாம பின்னால நடந்து போனேன். ப்ரேக் டைம். ஸ்கூல் மாடியில இருந்து எல்லோரும் என்னையே பாத்துட்டு இருந்தாங்க.

வீட்டுக்குபோனதும் அப்பா எதுவும் சொல்லல. அடுத்த நாள் நான் எழுந்து ஸ்கூலுக்கு கிளம்பினேன்.

‘இனி ஸ்கூல் வேண்டாம்..’ அப்பா சொன்னார். என்னால எதிர்த்து கேக்க முடியல. அம்மாவும் கடுகடுண்ணே இருந்தாங்க. நான் அமைதியா போயி உட்கார்ந்துட்டேன்.

அப்பா கிளம்பினார். என்னை அவரோட வண்டியில ஏத்தினார்.

நேரா ஒரு ஸ்பெஷல் குழந்தைங்க ஸ்கூல்ல வண்டி நிறுத்தினார். நான் போர்ட பாத்துகிட்டே இறங்கினேன்.

‘அப்பா.. எனக்கு ஒண்ணும் இல்லப்பா.. அப்பா நான் இனி ஒழுங்கா இருக்கேன் பா..’ சொல்லிகிட்டே நான் கத்தினேன். அப்பா என்னைய திரும்பி பார்த்தார்.

‘ஏன் அழுகுற இப்போ..’ என்ன பாத்து கேட்டார்.

‘இந்த ஸ்கூல்ல நான் சேரலபா’

‘ஏன்.. அந்த ஸ்கூல் பசங்க நல்லா இருக்குறது பிடிக்கலயா. நீ சேர்ந்து… பாவம் அவிங்க..’ அப்பா சொல்லிவிட்டு நடந்தார். உள்ளிருந்து ஒரு நடுத்தர வயசுல ஒரு பெண் வெளியே வந்தாங்க. அப்பா அவங்ககிட்ட ஏதோ பாத்து பேசினார்.

அவங்க அப்பப்போ என்னைய பாத்து சிரிச்சாங்க. கொஞ்ச நேரத்துக்கு பிறகு அவங்க என்கிட்ட வந்தாங்க.

‘பேர் என்ன?’ அவங்க கேட்டாங்க.

‘இந்திராணி…’ நான் சொன்னேன்.

அவங்க முகத்தை கேவலமா வச்சிகிட்டாங்க. ‘பேர் பழசா இல்ல..’ அவங்க கேட்டாங்க. நான் ஒண்ணும் புரியாம உதட்டை பிதுக்கினேன்.

‘என் பேர் என்ன தெரியுமா..’ அவங்க கேட்டாங்க. திரும்ப சும்மா நின்னேன். என் மனசுல ஆயிரத்தி எட்டு எண்ணம் ஓடிகிட்டு இருந்துச்சு. இங்க எதுக்கு வந்தோம்?  இவங்க யாரு? நான் பைத்தியமா? நேத்து மரியா மிஸ் என்ன சொல்லியிருப்பாங்க? அப்பா என்ன செய்ய போறார்..? இப்படி என் மனசுல ஆயிரம் கேள்விகள் இருந்துச்சு.

‘சரி.. கன்ஃபூஸ் ஆகாத. நானே சொல்லுறேன். என் பேர்… இந்து என்கிற இந்திராணி..’ அவங்க சொன்னாங்க. எனக்கு ஒண்ணும் புரியல. அவங்கள பாத்து சிரிச்சேன். என் கண்ணுல இன்னும் கேள்வி இருந்திருக்கும் அதை அவங்க கவனிச்சிருப்பாங்கனு நினைக்கிறேன்.

’உண்மையா தான் கண்ணா. என் பேரு.. இந்திராணி’ அவங்க சொல்லிட்டு அப்பாவ திரும்பி பார்த்து சிரிச்சாங்க. அப்பாவும் எங்க ரெண்டு பேரையும் பாத்து சிரிச்சார்.

‘நேத்து ஸ்கூல்ல ஏதோ பிரச்சனை போலவே..’ அவங்க கேட்டாங்க. நான் தலைய மட்டும் ஆட்டினேன்.

’சரி வா.. நடந்துட்டே பேசலாம்…’ சொல்லிவிட்டு அவங்க ஸ்கூல் உள்ள கூட்டிட்டு போனாங்க.

‘இவங்கலாம் யார் கண்ணா?’ அவங்க உள்ள அங்கங்க இருக்குற பசங்கள பாத்து கேட்டாங்க.

‘மனநலம் பாதிக்கப்பட்டவங்க…’ நான் சொன்னேன்.

‘அடடே… சரிதான். அந்த பையன பாக்குறப்போ, படபடனு நெஞ்சு அடிச்சுக்கும். ஏதோ வைப்பேரஷன் போலலாம் தோணுயிருக்குமே… காரணம் மனசுதானே..’ அவங்க கேட்டாங்க. நான் புரியாம தலைய ஆட்டினேன்.

‘அப்போ.. உனக்கும் தான் மனநலம் பாதிச்சுருக்கு…’ அவங்க சொன்னாங்க. எனக்கு ஒண்ணும் புரியல. அப்பா என்னைய இந்த ஸ்கூல்ல சேக்குறதுக்காக தான் இதெல்லாம் செய்யிறாரோனு எனக்கு தோணுச்சு. திரும்பி பாத்தேன். அப்பா அங்க இல்ல. என் கண்ணு கலங்க ஆரம்பிச்சுடுச்சு.

‘ஹே… என்ன… என்ன நினைக்கிறீங்க. எதுக்கு அழுகுறீங்க..’ அவங்க கேட்டாங்க. எனக்கு என்ன பதில் சொல்லனு தெரியல.

‘நான் இங்க படிக்கமாட்டேன். எனக்கு ஒண்ணும் இல்ல.. நான் நல்லா தான் இருக்கேன்..’ நான் அழுதுகிட்டே சொன்னேன். அவங்க பட்டுனு சிரிச்சுட்டாங்க.

‘அட கண்ணா.. நீ இங்க படிக்க வரலமா. ஆண்டிய பாக்க வந்திருக்க.. சரியா. இந்த இந்துகுட்டி.. இந்த பெரிய இந்துவ மட்டும் தான் பாக்க வந்திருக்கா..’ அவங்க சொல்லிட்டு சிரிச்சாங்க. எனக்கு இன்னும் புரியல. அவங்க ஒரு பெருமூச்சுக்கு அப்பரம் பேச ஆரம்பிச்சாங்க.

‘இது வயசு. தெரியாத பல விசயங்கள தெரிஞ்சுக்க ஆசைப்படும். இது சரியா தப்பானு யோசிக்க தெரியாது. மத்தவங்க சொல்லுறதையும் ஏத்துக்காது.. உங்க அப்பா ஸ்கூல் படிச்சு முடிக்கிற கடைசி நாள் என்கிட்ட அவரோட லவ் சொன்னார். நான் முதல்ல ஏத்துக்கல… ரெண்டு மூணு மாசத்துல ஓகே சொல்லிட்டேன்’

‘என்னது.. அப்பாவா? லவ்வா.. சான்சே இல்ல..’ நான் கொஞ்சம் ஃப்ரீ ஆனேன். அவங்ககிட்ட சாதாரணமா பேச ஆரம்பிச்சேன்.

‘என்னோட பெயர தான் உனக்கு வச்சிருக்கான். அதுல இருந்தே தெரியலயா.. நீ எல்லாம் என்ன இந்த காலத்து பொண்ணு..’ அவங்க கேட்டுட்டே சிரிச்சாங்க. நான் கொஞ்சம் யோசிச்சேன். அதுவும் இல்லாம வீட்டுல ஒரு பிரச்சனை, இவங்ககிட்ட அப்பா வேற கூட்டிட்டு வந்திருக்கார். ஒருவேலை உண்மை தானோ.. நான் இன்னும் யோசிச்சேன்.

‘ஓகே சொன்னதுக்கு பிறகு.. என்ன ஆச்சுனு தெரிஞ்சுக்க ஆர்வம் இல்லயா..’ அவங்க கேட்டாங்க. நான் இருக்கு சொல்லுங்கனு கேட்டேன்.

‘அதுக்கு முன்னாடி. உங்க அப்பா, அம்மாகிட்ட எப்படி?’ அவங்க கேட்டாங்க.

‘ஏன்.. ரொம்ப அன்பா இருப்பார். பாசமா பேசுவார்…’

‘உங்க அம்மா எதனா விரும்பினா..?’

‘செஞ்சு பாக்க சொல்லுவார்..’

‘இது பொம்பளைங்க செய்யக்கூடாதுனு உன்னையோ இல்ல அம்மாவையோ என்னைக்காவது தடுத்திருக்காரா..?’ அவங்க கேட்டாங்க. நான் கொஞ்சம் யோசிச்சேன். அப்பா எப்பவும் அப்படி கிடையாது. நான் ஒரு பையன சைட் அடிச்சேன், எல்லோரும் பாக்குறாங்கனு தெரிஞ்சும் சைட் அடிச்சேன், தைரியமா பேசுவேன், எனக்கு பைக் ஓட்ட பிடிக்கும் அப்பாவே ஓட்ட சொல்லிக்கொடுத்திருக்கார். ஆனா.. தனியா ஓட்ட பதினெட்டு வயசுக்கு அப்பரம் தான்னு சொல்லியிருக்கார். ஊருக்கு போறது, ஃப்ரண்ட்ஸ் கூட சுத்தினதுனு எதுக்கும் அப்பா தடை போட்டது இல்ல. சொல்லப்போனா நேத்து என் அப்பாகிட்ட மரியா மிஸ் என்ன சொன்னாங்கனு தெரியல... அவர் எனக்கு கொடுத்த சுதந்திரத்த நான் தப்பா யூஸ் பண்ணிட்டேனு அவர் வருத்த பாடுவாரோன்னு தான் எனக்கு பயம். எல்லாத்தையும் யோசிச்சுட்டு அவங்ககிட்ட இல்லனு தலையாட்டினேன்.

அவங்க சிரிச்சாங்க.

‘இந்த அப்பாவ தான் உனக்கு தெரியும். ஆனா ரொம்ப மோசமா… அரகண்ட்டா… கோபமான உன் அப்பாவ நீ பாத்திருக்கமாட்ட. ஏனா… அவன எனக்கு தான் தெரியும்..’ அவங்க சொல்லிட்டு சிரிச்சாங்க. எனக்கு என்ன ஆச்சுனு கேக்க ஆர்வமா இருந்துச்சு.

‘உங்க அப்பாக்கு நான் ஓகே சொன்னதும். அப்பா அடிக்கடி பேசணும்னு சொல்லுவார்… ஆனா எனக்கு வேற ஆசைகள் இருந்துச்சு. நான் அப்போ அவர்கிட்ட சொன்னேன். என் வாழ்க்கையில நீ ஒரு கூடுதல் தான், என் வாழ்க்கையே நீனு இல்லனு சொல்வேன். எனக்கு சர்வீஸ்னா ரொம்ப பிடிக்கும்… வெளிய சர்வீஸ்னு நிறைய ஊருக்கு போவேன். ஆம்பள பசங்களோட எப்படினு கத்துவார். நான் கேக்கமாட்டேன். விடாபிடியா அதையே தான் செய்வேன். சண்டை வரும்.. என்னடானு கத்துவேன். பொம்பள புள்ள கை நீட்டி பேசுறனு கைய பிடிச்சு ஒடிப்பான். கத்துவேன், அழுவேன். வலிக்குதுல… ஆம்பள. அந்த மரியாதை இருக்கணும்னு சொல்லுவான்..’

‘அப்பாவா…’ நான் அதிர்ச்சியா கேட்டேன். ஏன்னா அம்மா கிட்ட அப்பா அதிர்ந்து கூட பேசினது கிடையாது.

‘உன் அப்பாவே தான். ஒரு கட்டம் என்னால முடியல. பிரிஞ்சிடலாம்னு சொன்னேன். அவன் கேக்கல… ஆனா நான் நிக்கல. அவன்கிட்ட எதுவும் சொல்லாம ரொம்ப தூரம் போயிட்டேன்’

‘அப்பரம்…’

‘அப்பரம் என்ன.. அவர் வாழ்க்கையில நான் இல்ல. என் வாழ்க்கையில அவர் இல்ல. அதுக்கு பிறகு ரெண்டு வருசம் முன்ன விழுப்புரம் பக்கத்துல ஒரு கிராமத்துல என்னைய பாத்தார். வாழ்க்கையில நிறைய மாறிட்டதா சொன்னார். குட்டி இந்துவ பத்தி சொன்னார், உங்க அம்மாவ பத்தி சொன்னார்… நான் போனபிறகு நிறையா யோசிச்சதா சொன்னார். நிறைய மனிதர்கள் நிறைய அனுபவம்… ஒரு பக்குவப்பட்ட வாழ்க்கைக்கு வந்துட்டதா சொன்னார்..’ அவங்க சொன்னதும் நான் ஆழ யோசிச்சு பாத்தேன். அவங்க தொடர்ந்து பேசினாங்க.

‘இந்த வயசுல இது இயற்கை டா கண்ணா. எதிர்பாலினத்த பாக்குறப்போ ஆசை வரும்… காதல்னு கூட தோணும். ஆனா… கல்லூரி முடிச்சு ஒரு வாழ்க்கை வரும். அது வர வரை நாம உலகத்தையே பாக்கல.. நீ ஒரு ஆறாவது படிக்கிறப்போ செஞ்சதெல்லாம் இப்ப யோசிச்சு பாத்தா உனக்கு சிரிப்பு வரும். அப்படி தான்.. .இன்னைக்கு நீ செய்யிறத இன்னும் அஞ்சு வருசம் கழிச்சு யோசிச்சாலே சிரிப்பு வரும். முதல்ல நாம எங்க ஓடப்போறோம்னு தெரிஞ்சுக்கணும் டா.. அப்பரம் தான் யார்கூட ஓடணும்னு முடிவெடுக்கணும்..’ அவங்க சொன்னாங்க. எனக்கு அது புரிஞ்சுது.

‘இல்ல ஆண்டி.. நான் அவன சும்மா தான் பாத்தேன்… அது..’ நான் இழுத்தேன். அவங்க சிரிச்சாங்க. கண்டுபிடிச்சிருப்பாங்கனு நினைக்கிறேன். கண்டிப்பா ராகுல் நான் பாத்ததுக்கு திரும்ப பாத்திருந்தானா நான் லவ் பண்ணுறேன்னு போயி சொல்லியிருப்பேன். லைஃப் அவன்கூடனு ஆயிரம் கனவு கண்டிருப்பேன். அப்போ ராகுல் என் சின்னவயசு அப்பா கேரக்டரா இருந்தா நான் இந்து ஆண்டி போல முடிவெடுத்திருப்பேனா தெரியாது. நான் என்னையே இழந்துட்டு அவனே கதின்னு கிடந்திருப்பேன். என்னோட அடையாளத்த இழந்துட்டு. ஆண்டி சொல்லுறது சரிதான்.. நான் எங்க போகணும். என்ன இருக்குனே தெரியல. ஆனா.. லவ். நினைக்கிறப்போ எனக்கே உதட்டோரம் ஒரு சிரிப்பு வந்துச்சு. ஆண்டி என்கிட்ட எதுவும் சொல்லாம எழுந்து விலகி நடந்தாங்க.

‘ஆண்டி.. ஒரு நிமிசம்’ நான் சொன்னேன். அவங்க திரும்பி பாத்தாங்க.

‘உங்க பசங்க என்ன பண்ணுறாங்க..’ நான் கேட்டேன்.

‘டென்த் படிக்கிறாங்க. நேத்து கூட அவங்க ஸ்கூல்ல ஏதோ பிரச்சனை.. அதான். இவ்வளவு நேரம் அவங்க கூட பேசிகிட்டு இருந்தேன்..’ அவங்க சொன்னது என்னைய தான்னு எனக்கு புரிய கொஞ்சம் நேரம் எடுத்துச்சு.

‘ஆண்டி…’ சொல்லிவிட்டு கொஞ்சம் இழுத்தேன்.

‘சினிமால காட்டுற போல ரொம்ப கற்பனை பண்ணாத. உங்க அப்பா தான் உன் அப்பா. உன் அம்மா தான் உன் அம்மா. ஆனா ஒருகாலத்துல உங்க அப்பாவ மனசுல சுமந்துட்டு இருந்தவ நான். ஸோ.. எனக்கும் நீ பொண்ணு தானே..’ அவங்க கேட்டாங்க. என் மனசுல அப்போ இன்னும் நிறைய கேள்விகள் வந்துச்சு. ஆனா.. நான் அத அப்போ பெருசாக்க விரும்பல. அப்பா எனக்கு என்ன புரியணும்னு நினைச்சாரோ அத நான் புரிஞ்சுட்டேன்.

அப்பா ஒரு சின்ன நடை போயிட்டு திரும்ப வந்தார். அவங்ககிட்ட ஏதோ பேசிட்டு என்னைய கூட்டிட்டு வந்தார்.

‘அப்பா… ஸ்கூல்..’ நான் இழுத்தேன்.

‘போலாம்டா. நான் என் ஃப்ரண்டு ஸ்கூல்ல பேசிட்டேன். அங்கேயே சேத்திடலாம். இந்த வயசு இது இயல்பு டா. இதுகூட புரியாம அந்த உங்க டீச்சர் கண்ணாபின்னானு பேசிடுச்சு. ஸ்கூல்னா புக்ல இருக்குற பாடத்த மட்டும் புரிய வைக்கிறது இல்ல.. வாழ்க்கையையும் புரியவைக்கணும். அத புரியாம… கண்டபடி உன்ன அசிங்கபடுத்தி. எரிச்சலாகிட்டு.. நேத்தியே கண்ணாபின்னானு கத்திட்டேன். உன் டிசிய கொடுத்துட்டாங்க.. உனக்கு கோபம் இல்லயே..’

‘இல்லப்பா… அப்பா நான் செஞ்சது..’

‘இயல்பான தவறுடா.. இது யாருமே பண்ணாத ஒண்ணு இல்ல. இந்த வயசுல இது வரும் தான். அது உங்க டீச்சருக்கு தெரியணும்’

‘இப்போ… இந்து ஆண்டி சொன்ன போலவா பா..’ நான் கேட்டேன். அப்பா சிரிச்சார். அவர் முகத்துல வெட்கத்தோட ஒரு புன்னகை. எனக்கு ராகுல பாத்தப்போ வந்த மாதிரி. நான் அத அதுக்கு மேல யோசிக்க விரும்பல. சும்மா சிரிச்சுட்டு விட்டுட்டேன்.

ஆனா… ஏன் ராகுல் என்னைய மாட்டிவிட்டான். அந்த கேள்வி. ஒரு நாள்.. அவன் கன்னத்துல அறைஞ்சு அத கேக்கணும்னு எனக்கு ஒரு ஆசை உருவாச்சு. தீராத ஆசை. அதுக்கு பிறகு இந்து அம்மாவும் நானும் அடிக்கடி பாத்துகிட்டோம். ஆண்டி மாறி அம்மானு கூப்பிட ஆரம்பிச்சேன்.

காலேஜ் சேர்ந்து ரெண்டு வருசத்துல அவங்க அப்பா இல்லாத வருசங்கள பத்தி சொன்னாங்க. இந்து அம்மாக்கு சில நாட்கள்ல வீட்டுல பாத்து கல்யாணம் ஆகியிருந்திருக்கு. அவர் குடிகாரர். அவங்க அம்மாவபத்தி சொன்னத காட்டிலும் மூணு மடங்கு ஆண் ஆதிக்கவாதியா இருந்திருக்கார். அவர் உடம்புல பிரச்சனை, அதனால அவங்களுக்கு குழந்தை பிறக்கல. ஆனா அதுக்கும் இந்து அம்மாதான் காரணம்னு சொல்லி அடிப்பாராம். எப்படி ஒரு கனவோட இருந்த ஒருத்தவங்க, காலத்தோட கட்டாயம், பெண் ஒரு போர்வை அடக்கம், குடும்ப கௌரவம்னு அவங்க அத்தனை வருசமும் ஒரு அடிமை வாழ்க்கை தான் வாழ்ந்திருக்காங்க. அப்போ ஒரு சமயம் அப்பா அவங்கள விழுப்புரம் பக்கதுல பாத்திருக்காரு. அந்த ஊரையே எதிர்த்து அழைச்சுட்டு வந்து இங்க வேலை வாங்கி கொடுத்திருக்காரு.

அங்க அப்பாவ அவங்க பாக்குறப்போ அவங்க மனநிலை எப்படி இருந்திருக்கும்? பெண் அடிமைத்தனத்த எதிர்க்கிற தன்னோட முன்னால் காதலி ஒருத்தன்கிட்ட அடிமையா இருக்குறானு நினைக்கிறப்போ அப்பா மனசு எப்படி துடிச்சுருக்கும். அந்த பழைய காதல். தன்னோட உயிர நினைச்ச ஒரு பொண்ணு இப்படி கஷ்டபடுறானு நினைக்கிறப்போ அப்பா என்ன நினைச்சிருப்பார். என்கூட வந்திடுனு எப்படி கூப்பிட்டிருப்பார். இந்து அம்மா மனசுல என்னால்ம ஓடியிருக்கும். அத்தனை பேர் முன்னாடி எப்படி அவங்கள அப்பா கூட்டிட்டு வந்திருப்பார். அவங்க மனசுல எப்படி ஒரு வலி இருந்திருந்தா அப்பாகூட அவங்க கிளம்பி வந்திருப்பாங்க. இதெல்லாம் விட… வீட்டுக்கு வந்து அப்பா இதெல்லாம் என் அம்மாகிட்ட சொல்லியிருக்காரு. அம்மா சில பல சமாதானத்துக்கு பிறகு ஏத்துட்டிருக்காங்க. இந்து அம்மாக்கு சர்வீஸ் பிடிக்கும்னு அப்பா இங்க வேலை வாங்கி கொடுத்திருக்காங்க.

அவங்க ரெண்டு பேருக்குள்ள இப்போ என்ன இருக்கு? நட்பா? காதலா? இல்ல அதையும் தாண்டின ஒரு உறவா? எனக்கு தெரியாது. ஆனா… இந்து அம்மா இப்போ சந்தோசமா இருக்காங்க. அது போதும் எனக்கு.

ஆன்… சொல்ல மறந்துட்டேன். இன்னைக்கு நான் படிச்சு ஐடில வேலைக்கு போறேன். சேர்ந்து ரெண்டு வருசம் ஆச்சு. அந்த நிறைவேறாத ஆசை. போன வாரம் நிறைவேறிடுச்சு. ஃபோரம் மால்ல நான் ராகுல பாத்தேன். ஒரு பொண்ணோட. எதுவும் யோசிக்கல.. நேரா போயி கன்னத்துல பளீர்.

‘ஏன்டா மிஸ்கிட்ட மாட்டிவிட்டேனு’ கேட்டேன். அவன் கண்ணு கலங்கிடுச்சு. கூட வந்த பொண்ணு என்ன செய்யனு தெரியாம விழிச்சசுச்சு. அவனுக்கு என்னைய தெரிய கொஞ்சம் நேரம் எடுத்திருக்கும்.

‘நீ அசிங்கமா.. ஆம்பள போல இருப்ப. ரொம்ப திமுறா… உன்னலாம் யார் லவ் பண்ணுவா. அதான் மிஸ்கிட்ட மாட்டிவிட்டேன்..’ அவன் சொன்னான். திரும்பி அவன்கூட வந்திருக்க பொண்ண பாத்தேன். புடவைக்கட்டிகிட்டு, பொட்டு வச்சுகிட்டுனு.. பட்டுனு சிரிப்பு வந்திடுச்சு எனக்கு. எதுக்கு சிரிச்சேனு தெரியாது. ஆனா ரொம்ப நேரம் அத நினச்சு சிரிச்சேன்.

இந்து அம்மா சொன்னப்போல. ‘வாழ்க்கைய வாழுறப்போ தான் தெரியும். நம்ம வாழ்க்கைக்கு யார கூட்டிட்டு போகணும்னு… லவ் யூ மா..’ நினைச்சுகிட்டேன்.

அன்னைக்கு நைட் எங்க வீட்டுல அப்பா, அம்மா, இந்து அம்மா, நான்.. நாலு பேரும் உட்கார்ந்து இத பேசி சிரிச்சுட்டு இருந்தோம்.

ஆமா… அப்பாவுக்கு இந்து அம்மாவுக்கும் என்ன தான் இப்போ..? இதானே உங்க கேள்வி. இன்னைக்கு காலையில அதையும் கேட்டுட்டேன்.
  
’காதலின் நட்பு’ இதான் பதில். 

-தம்பி கூர்மதியன்


Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..