நிசைமடியில் தோழி அழுகிறாள்

அவள்:

நிசையே! என் இனிய நிசையே!
நீ கொண்ட வர்ணம் போலே உலகு இருக்கிறதே!
காணாயோ!?
நின் அகத்தில் நான் கண்ட கலவு கனவுகள்
சொச்சமாய் எச்சமாய் பிச்சி பிச்சி
பேருந்தின் நெருக்கத்தில் போய்க்கொண்டிருக்க
கலவின் பேரிலும் காழ்ப்பு தோன்றுதடி..
தோழி நிசையே! கேளாயோ!?

நெரிந்த பேருந்தின் மத்தியில்
அண்டவனெல்லாம் கச்சை தேடுகிறானடி..
நெரிதல் கூடாதா
மறைதல் விலகாதா
கழுகின் கண்களே என் கற்பை கழிக்கிறதடி!

விலகி நடந்திடமாட்டேனாயென
மேல்பிடி கையாயும்
பைமாட்டும் பொய்யாயும்
அலையும் கைகள்
மார்பை அழுத்தம் பார்க்குதடி..
துப்பட்டா போதாதென
முன்பைவைத்து மறைத்து போவதற்குள்
ஆயிரம் அம்புகளை தப்பித்த போர்வீரம் கொள்கிறேனடி..

முன்னாலற்று பின்னாலும்
ஒரு வலுசண்டை நடைகிறதடி..
சில முறை கைகளால்
சில முறை… அது…
உன் அகத்தில் நான் கண்ட கனவுகள்
சொச்சமாய் எச்சமாய் பிச்சி பிச்சி.. சே!

நிசையே! நல்நிசையே!
தினம் மாற்று உடலுக்கு உரம்போட்டுக்கொண்டிருக்கிறேனடி
உன் மடிக்கொண்டு இம்மதிக்கு உறக்கம் தாருமடி..
கலவு கனவுகள் அற்ற கனவு பயங்களை போக்கும்
உன் மடிக்கொண்டு உறக்கம் தாருமடி..

இரவு:

இந்நிசைமடிக்கொண்ட தோழீ!
எச்சமிட்ட நாய்கள் அறுபட வேண்டும்
அவை எச்சிலிட்ட பின்னும் நீ அழுதல் கூடாது
எச்சமிட்ட நாய்கள் அறுபட வேண்டுமடி..
மறித்து நில்லடி கண்ணே
எம்மதியினை தீண்டோனை எதிர்த்து அறைந்திடு கண்ணே!
நெருப்பை உமிழ்ந்து பெண்ணே
நீ மதியல்ல ஆதவனென உரக்க சொல்லிடடி..
கண்ணீர்மட்டும் எத்தனை நாளடி?
நின்கண்ணீரை விட்டு ரௌத்திரம் பழகடி கண்மணியே!

ரௌத்திரம் பழகிடடி… 

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!