அவள் எங்கே சென்றாள்.. நடுநிசி தேடல்!

’அவ கிளம்புறப்போ உன்கிட்ட சொன்னாளா மா?’ ரகு கேட்டான். மறுப்பக்கம் இருந்து சிறிது நேர அமைதி.

‘இங்க பாரு மா… அவள காணும். நீ சொல்லுறத வச்சு தான் எதுவா இருந்தாலும் கண்டு பிடிக்க முடியும். அதனால உனக்கு என்ன தெரியுமோ அத மறைக்காம சொல்லு…’ ரகு மீண்டும் சொன்னான்.

‘சார்… உண்மையா சார். நான் இனைக்கு கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிட்டேன்… அதனால அவ எங்க போனானு எனக்கு தெரியாது சார்..’ மறுபக்கம் இருந்து அவளது தோழி சொன்னாள். ரகு இணைப்பை துண்டித்துவிட்டு முன்னால் இருந்த மூர்த்தியை பார்த்தான். அவர் கண்ணில் கலவரம்.

‘சார்… என்ன சார் ஆச்சு…’ அவர் கேட்டார். அவன் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான்.

‘சார்… நீங்க வீட்டுக்கு போங்க. பயப்பட எதுவும் இல்ல.. நான் பாத்துக்குறேன்..’  ரகு சொல்லிவிட்டு எழுந்தான். மூர்த்தியின் கண்கள் இன்னும் பதட்டமாகவே இருந்தது.

‘கான்ஸ்டபிள்… சார அவர் வீட்டுல விட்டுடுங்க. நீங்க எதுக்கோ அவர்க்கு துணையா இன்னைக்கு அங்கேயே இருங்க. சார்.. பொண்ணு வீட்டுக்கு வந்துருவா.. எதுக்கும் பயப்படாதீங்க. நான் போயி பாக்குறேன் சார்..’ அவரை சமாதானபடுத்திவிட்டு ரகு அங்கிருந்து கிளம்பினான். நேராக அவன் வண்டி காலேஜ் முன்னால் நின்றது. இரவு நேரம். வெளியில் வாட்ச் மேன் நின்றிருந்தார்.

அவன் இறங்கி அவனை அறிமுகபடுத்திக்கொண்டான்.

‘காலேஜ்ல இப்ப யாருனா இருக்காங்களா?’ அவன் கேட்டான்.

’இல்ல சார். யாரும் இல்ல… பூட்டியாச்சு..’ வாட்ச் மேன் சொன்னார்.

‘வழக்கமா எத்தன மணிக்கு கேட் பூட்டுவீங்க..’

‘எட்டு மணிக்கு சார்.. உள்ள போயி ஒரு செக் பண்ணுவோம்.. விசிலடிச்சு.. முடிச்சுட்டு பூட்டிருவோம் சார்..’

‘இந்த க்ளாஸ்லாம்…?’

‘அதெல்லாம் சும்மா சாத்துறதுதான் சார்.. பூட்டுறது இல்ல…’ அவர் சொன்னார். ரகு கேட்டுக்கொண்டே தலையாட்டிவிட்டு வெளியில் வந்தான். அவனது அலைப்பேசி ஒலித்தது.

அந்த பெண்ணின் தோழி.

‘சார்..’

‘சொல்லுமா..’

‘பிரியா… ஒரு பையன லவ் பண்ணினா சார். பேர் நகுல்… அவன்கிட்ட இன்னைக்கு அவளோட லவ்வ சொல்லப்போறதா சொன்னா சார்.. நீங்க நகுல்கிட்ட கேட்டுபாருங்களேன்.. எதனா தெரிய வாய்ப்பு இருக்கு..’

‘அவன் நம்பர் உன்கிட்ட இருக்கா மா..’

‘இருக்கு சார்.. அனுப்புறேன்..’ அவள் சொல்லிவிட்டு அணைத்தாள். அடுத்த நொடி அவனது நம்பர் ரகுவுக்கு கிடைத்தது. ரகு அழைத்தான். நம்பர் அணைத்துவைக்கப்பட்டிருப்பதாய் ஆங்கிலத்தில் செய்தி வந்தது. ரகு இணைப்பை துண்டிப்பதற்குள் அந்த செய்தி தொடர்ந்து கன்னடத்தில் சொல்லப்பட்டது.

’கன்னடமா…’ அவன் யோசித்துக்கொண்டே இருந்தான். பிரியாவின் அலைப்பேசியை அழைத்தான். தமிழில் தான் அணைத்திருப்பதாய் செய்தி வந்தது.

ரகு அங்கிருந்து கிளம்பினான். நகுலின் ரூம் எங்கிருக்கிறது என்று அந்த தோழியிடம் கேட்டுக்கொண்டு அவனது அறைக்கு சென்றான். கதவை தட்டினான். அவனது நண்பர்கள் திறந்தார்கள்.

‘இங்க நகுல் யாரு..’ அவன் கேட்டான்.

‘அவன் ஊருக்கு போயிருக்கானே.. நீங்க யாரு..’ உள்ளிருக்கும் ஒருவன் கேட்டான்.

‘எந்த ஊருக்கு…’

‘உள்ள கும்பகோணம் பக்கத்துல.. நீங்க யாரு சார்..’ அவன் மீண்டும் கேட்டான்.

‘உள்ள வந்து பேசலாமா..?’ கேட்டுக்கொண்டே ரகு உள்ளே நுழைந்தான்.

‘நகுல் எப்படி நல்ல பையனா? பொய் எதனா சொல்வானா? உங்ககிட்ட எதனா மறைப்பானா?’ ரகு கேட்டுக்கொண்டே போனான்.

‘நீங்க யாரு சார்..’ இம்முறை அவன் கறாராக கேட்டான்.

‘போலீஸ்..’ முறைப்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டு இன்னும் ரூமை நோட்டமிட்டான்.

கறாராக கேட்டவன் சட்டென நிமிர்ந்து நின்றான்.

‘நகுல்… நல்ல பையன் தான் சார். எதுவும் பொய்லாம் சொல்லமாட்டான்.. எங்ககிட்டயும் எதையும் மறைக்க மாட்டான்..’ அவன் சொன்னான்.

‘அப்போ.. பிரியா எங்க..?’ ரகு கேட்டான்.

‘பிரியாவா.. எந்த பிரியா?’

‘நீங்க தூக்குனீங்களே.. அந்த பிரியா தான்..’ ரகு நக்கலாக சொன்னான்.

‘சார்.. சத்தியமா எனக்கு தெரியாது சார். சார் ப்ளீஸ் சார்..’ அவன் கண்கள் கலங்கின.

‘ஏ.. அழுகாதடா. உன் நண்பனுக்கு ஃபோன் போடு..?’ ரகு கொஞ்சம் சத்தமாக சொன்னான். அவன் ஃபோன் போட்டான். நம்பர் ஸ்விட்ச் ஆஃப் என முதலில் ஆங்கிலத்திலும் பின்னர் கன்னடத்திலும் சொன்னது.

‘கும்பகோணம் போற நாயி ஃபோன்ல எப்படி கன்னட மெஷின் பேசும்..’

‘சார்… அது…’

‘பொண்ண எங்க தூக்குனீங்க.. எதுக்கு தூக்குனீங்க சொல்லுடா..’

‘சார் சத்தியமா பொண்ணெல்லாம் தூக்கல சார். அவன் அப்பாவும் அம்மாவும் பிரிஞ்சு இருக்காங்க… அவங்க அப்பாவ பாக்குறதுக்காக அவன் மும்பை போயிட்டு இருக்கான் சார். அது யாருக்கும் தெரியாது… அதனால எங்கள யார் கேட்டாலும் கும்பகோணம் போயிருக்குறதா சொல்ல சொன்னான் சார்..’

‘ஆஹா.. அப்போ அவன் அப்பா நம்பர் கொடு…’

‘சார்.. சத்தியமா தெரியாது சார்..’ அவன் சொன்னான். ரகு அச்சமயம் எல்லா இடத்தையும் நோட்டமிட்டுக்கொண்டே வந்தான். டேபிளில் சில புத்தகங்கள் இருந்தன. அதை கைகளில் எடுத்து பக்கங்களை வேகமாக காற்றில் பறக்கவிட்டான். சட்டென ஒரு புத்தகத்தில் ஒரு பேப்பர் கிடைத்தது.

ரகு அதை திறந்து படித்து பார்த்தான். அது பிரியா நகுலுக்கு எழுதிய காதல் கடிதம்.

‘இது யாரோட புக்கு?’ ரகு கேட்டான்.

‘நகுலுது தான் சார்..’ அவன் சொன்னான். ரகு முறைத்தான். அந்த புத்தகத்தையும், லெட்டரையும் எடுத்துக்கொண்டான்.

‘பிரியா பத்தி உனக்கு எதனா தெரியுமா..’

‘சத்தியமா தெரியாது சார்.. அந்த பொண்ண நாங்க ஏன் சார் கடத்த போறோம்..’

‘தே சீ.. அழுகாதடா.. பொதுவா அந்த பொண்ண பத்தி எதனா தெரியுமா?’

‘சார் அந்த பொண்ணுக்கு நகுல ரொம்ப பிடிக்கும் சார். அவன அடிக்கடி சைட் அடிப்பா… அது நகுலுக்கு தெரியும். அவன நாங்க கிண்டல் பண்ணுவோம் சார்..’

‘அவனுக்கு பிடிக்குமா?’

‘பிடிக்கும் சார்.. ஆனா ரெண்டு பேரும் சொல்லிக்கிட்டது இல்ல இதுவரை..’

‘ஏன்…’

‘அவ பின்னாடி ராகுல்னு ஒரு பையன் சுத்திகிட்டு இருந்தான் சார்.. அவன அவளுக்கு பிடிக்காது.. நகுல் கொஞ்சம் பயந்த சுபாவம்.. அதனால அவகிட்ட இவன் அப்ரோச் பண்ணல சார்… ராகுல் எதனா பிரச்சனை பண்ணுவானோனு பயம்..’ அவன் சொன்னான். ரகு யோசித்தான்.

‘அந்த ராகுல் நம்பர் இருக்கா..’ ரகு கேட்டான். அவன் எடுத்து கொடுத்தான். கூடவே அவன் வீடு எங்கிருக்கிறது என்ற குறிப்பையும் வாங்கிக்கொண்டார்.

அந்த நம்பரை அழைத்தார். இணைப்பு கிடைக்கவில்லை. ரகு இன்னும் குழம்பிக்கொண்டே இருந்தான். மீண்டும் கல்லூரிக்கு சென்றான்.
’பாஸ்.. நான் கொஞ்சம் உள்ள போயி பாக்கணும்..’ அவன் சொன்னான். வாட்ச் மேன் கதவை திறந்துவிட்டார். அவன் உள்ளே சென்றான். ஒவ்வொரு இடமாக பார்த்தான். அவளது வகுப்பறைக்கு சென்று பார்த்தான். கீழே இறங்கினான். கொஞ்சம் சத்தம் கொடுத்து பார்த்தான். யாரும் எதுவும் சொல்லவில்லை.

அங்கும் இங்கும் உலாத்தினான். புல்தரையில் நின்று அந்த கட்டிடத்தையே வெறிக்க பார்த்தான். இன்னும் நடந்து சென்றான்.

அருகில் இருக்கும் காவலாளியிடம் பேசிக்கொண்டே சென்றான்.

‘ஏன் பாஸ்.. எட்டு மணிக்கு பூட்டுறீங்க? காலேஜ் நாலு மணிக்கே முடிஞ்சுரும்ல..’ அவன் கேட்டான்.

’அதான் சார் ரூல்ஸ்.. நாலு மணிக்கு பசங்க கிளம்பிருவாங்க.. சிலர் இருப்பாங்க. அதிகபட்சம் அஞ்சு மணிக்கு ஸ்டாஃப் எல்லாம் கிளம்புவாங்க.. அப்பவே எல்லாரும் கிளம்பிருவாங்க… அதுக்கு அப்பரம் யாரும் வரமாட்டாங்க..’

‘இந்த வீட்டுக்கு போயிட்டு காலேஜ் வர்றதுனு..’ அவன் கேட்டான்.

‘அது வருவாய்ங்க எப்பனா எதனா பசங்க.. நோட்ட விட்டுபுட்டேன் முக்கியம்னுட்டு வருங்க.. சிலது ஃபோன தேடி வருங்க..’ அவர் சொன்னார்.

‘இன்னைக்கு வந்தாங்களா…’

‘ஆன் வந்தாங்களே… கேட்ட பூட்டினதும் ஒரு பையன் வந்தான்.. அவன் போனதும் ஒரு பத்து நிமிசத்துல அந்த பிரியா பொண்ணு அப்பா வந்து தேடிட்டு போனார்..’

‘அந்த பையன் யாரு…’

‘யாருன்னு தெரியலீங்க.. ரிஜிஸ்டர்ல என்ட்ரீ இருக்கும். பாத்து சொல்லுறேன்..’ அவர் சொன்னார். ரகு அந்நேரம் அத்தனையும் அலசியிருந்தான். அவனுக்கு எதுவும் பிடிபடவில்லை. கட்டிடத்தை விட்டு கீழே இறங்கினான். அவன் காலை ஏதோ இடறியது. அது ஒரு செல்ஃபோன்..

அவன் எடுத்து பார்த்தான். அது அணைத்திருந்தது. ஆன் செய்தான்.

முதலில் தெரிந்தது பிரியாவின் முகம்.

அவன் கையிலிருந்த பிரியாவின் நம்பரை அழைத்தான். அந்த செல்ஃபோன் ஒலித்தது.

‘ப்ரியா ஃபோன்.. கீழ கிடக்கே..’ அவன் யோசித்துக்கொண்டே வெளியில் வந்தான். அந்நேரம் காவலாளி யார் என்ற தகவலை விரித்து வைத்திருந்தார். ரகு அதை பார்த்தான். ராகுல் என்ற பெயர் இருந்தது. காரணம் – நோட் எடுக்க என்ற குறிப்பு இருந்தது.

‘நோட் எடுக்க வந்திருக்கானா..’ ரகு சொன்னான்.

‘அது அப்படிதான் எழுதிட்டு போகுதுங்க. அந்த பையன் போறப்போ ஒரு நோட்டும் இல்ல.. எங்கனா விட்டுட்டு இங்க வந்து தேடிட்டு இருக்குங்க..’ சொல்லி சலிப்போடு அந்த ரிஜிஸ்டரை எடுத்து வைத்தார் காவலாளி.

ரகு இன்னும் ஆழமாக யோசித்தான். அங்கிருந்து கிளம்பினான்.

‘பிரியா ஃபோன் காலேஜ்ல கிடக்கு. ராகுல் ஃபோன் போகல… நகுல் ஃபோன் சுவிட் ஆஃப். காலேஜ் முடிஞ்ச பிறகு ராகுல் காலேஜூக்கு வந்திருக்கான்… நோட் எடுக்க வந்தேனு சொல்லியிருக்கான். ஆனா போறப்போ எதுவும் எடுத்திட்டு போகல.. நகுலுக்கு பிரியா லவ் லட்டர் கொடுத்திருக்கா. பிரியா… நகுல்… ராகுல்.. பிரியா…’ அவன் யோசித்தான்.

வண்டியை நேராக ராகுலின் வீட்டிற்கு விட்டான். அவன் வீடு பூட்டியிருந்தது. ஒரு கல்லை எடுத்து பூட்டை உடைத்தான். சத்தம் மடீர் மடீரென்றது. பக்கத்து வீட்டில் இருந்த ஒருவர் வெளியில் வந்தார்.

‘ஹலோ.. மிஸ்டர். யார் நீ..’ அவர் கேட்டார்.

‘போலீஸ்…’ ரகு சொல்லிக்கொண்டே முன்னால் வந்தான். ‘ இந்த வீட்டுல இருக்குற ராகுல்னு..’

‘ஆன்.. அந்த பையன் இன்னைக்கு வீட்டுக்கு வரலயே.. எதனா பிரச்சனையா? ஏன் வீட்ட உடைக்குறீங்க..?’

‘இல்ல.. ஒண்ணுமில்ல. அவன் எங்கனு தெரியுமா..’

‘தெரிலயே.. அவன்கூடவே ஒண்ணு சுத்தும். சதீஷூ.. அவன கேட்டு பாருங்க. அவனுக்கு தான் தெரியும்..’ அவர் சொன்னார்.

‘அவன் நம்பர் கிடைக்குமா..?’

‘நம்பர்லாம் தெரியாது சார்.. இங்கிருந்து அஞ்சாவது வீடுதான் அவன் வீடு. போயி கேட்டு பாருங்க..’ அவர் சொன்னார். ரகு அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அவர் சொன்ன வீட்டுக்கு சென்று பார்த்தார். வீட்டு கதவை தட்டினார். ஒரு வயதானவர் கதவை திறந்தார்.

‘சார் சதீஷ் இருக்காரா..’ ரகு கேட்டான்.

‘யார்பா நீ.. அந்த நாயி எங்க குடிச்சுட்டு கிடக்கோ… பாக்க நல்லவனாட்டம் இருக்க.. அது கூடலாம் சேராதபா…’ அவர் சொன்னார். ரகு உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.

‘ஒண்ணுமில்ல சார்.. சும்மா தான். அவர் நம்பர் இருக்குமா.. ஒரு சின்ன விசயம்..’

‘என்ன கருமமோ.. இந்தா… பேசுனீனா.. அம்மாக்கு மேலுக்கு முடியல சீக்கிரம் வர சொன்னேனு சொல்லு.. எங்க கிடக்கோ..’ அவர் நம்பரை கொடுத்துவிட்டு முனகிக்கொண்டே உள்ளே சென்றார். ரகு அந்த நம்பரை அழைத்தான். கடைசி ரிங்கில் ஒருவன் எடுத்தான்.

‘ஹலோ..’ ரகு பேசினான்.

‘ஹலோ..’ சதீஷ் மறுப்பக்கம் இருந்து.

‘ஹலோ.. சதீஷ். நான் ரகு.. போலீஸ்.. உங்ககிட்ட..’ என்று சொன்ன மாத்திரத்தில் சதீஷ் இணைப்பை துண்டித்தான். ரகுவிற்கு பொறி தட்டியது. மீண்டும் அந்த நம்பரை அழைத்தான். இம்முறை ஸ்விட்ச் ஆஃப்.

ட்ராக்கிங் சென்டருக்கு அழைத்தான். அவர்களுக்கு அது அதிக நேரம் எடுக்கவில்லை. அடுத்த சில நொடிகளில் கடைசியாக அந்த நம்பர் எங்கு இருந்தது என்னும் செய்தி அவனுக்கு கொடுக்கப்பட்டது. சென்ட்ரல் அரசாங்க மருத்துவமனை. 

ரகு அதையே உற்று பார்த்துக்கொண்டிருந்தான். 

'ஹாஸ்பிடல்லா.. அங்க யாரு..' அவன் யோசித்துக்கொண்டே நின்றான். சென்று பார்க்கலாம் என வண்டியை எடுத்தான். அடுத்த பத்து நிமிடத்தில் அதன் வாசலில் நின்றான்.

தொடர்ந்து சதீஷ் நம்பருக்கும், ராகுல் நம்பருக்கும் மாறி மாறி அழைத்தான். ஆனால் இரண்டு நம்பரும் இணைப்பு கிடைக்கவில்லை. உள்ளே சென்றான்.. வரவேற்பறையில் நின்றான்.

'இங்க பிரியானு யாராச்சும் இன்னைக்கு அட்மிட் ஆனாங்களா?' அவன் கேட்டான். 

'இல்லீங்களே சார்..' பதில் வந்தது.

‘சதீஷ்..’

‘இல்லீங்களே..’

‘அப்ப ராகுல்..’ அவன் கேட்க அவர்கள் பார்த்துவிட்டு தலையாட்டுகிறார்கள். அவனின் இருப்பிடத்தை சொல்கிறார்கள். ரகு மெதுவாக அந்த அறைக்கு செல்கிறான். சட்டென கதவை திறக்கையில் ராகுல் பெட்டில் படுத்திருக்கிறான், சதீஷ் சட்டென எழுந்து நிற்கிறான். ரகுவை பார்த்ததும் சதீஷ் ஓட முற்படுகிறான். அவனை நெட்டித்தள்ளி கீழே சாய்த்து படுக்க வைத்துவிடுகிறான்.

‘பிரியா எங்கடா.. பிரியா எங்க…’ அவன் இன்னும் சதீஷை அழுந்த கொடுத்துக்கொண்டே கேட்டான்.

‘சார்.. அவனுக்கு ஒண்ணும் தெரியாது.. நான் சொல்றேன்..’ ராகுல் திணறிக்கொண்டே எழுந்தான். அவனை பிடித்து இறுகக்கொண்டு துப்பாக்கியை நெற்றியில் வைத்துக்கொண்டே ராகுலை பார்த்தான்.

‘சொல்லு…’ அவன் கேட்டான்.

‘சார்.. பிரியா நகுல் கூடதான் இருப்பா. அவன் சொன்னான்..’

‘புரியல…’

‘சார்… நான் பிரியாவ உயிருக்கு உயிரா காதலிச்சேன். அவகிட்ட அடிக்கடி சொன்னேன். அவளுக்கு என்னைய பிடிக்கல பிடிக்கலனு சொன்னா.. ஆனா அதே சமயம் அவளுக்கு நகுல ரொம்ப பிடிச்சுருந்துச்சு. நானும் அவளுக்காக என்னலாமோ பண்ணி பாத்தேன். ஆனா அவ மசியில சார்.. அப்படி தான். இன்னைக்கு காலையில அவ அவளோட ஃப்ரண்டு கிட்ட இன்னைக்கு நகுல்கிட்ட லவ்வ சொல்லபோறதா சொன்னா.. அவனுக்கு ஒரு லெட்டர்ல எழுதி கொடுத்தா. அத பாக்க பாக்க எனக்கு ரொம்ப கோபம் சார்.. அதனால அவள அந்த லேப் ரூம்ல வச்சு பூட்டிட்டேன். எங்க காலேஜ்லயே அதான் கடைசி ரூம். அதனால அவ சத்தம் கேக்காதுனு போட்டு பூட்டிட்டேன். இன்னைக்கு ஒரு நாள் அங்கேயே கெடன்னு.. ஆனா மனசு கேக்கல சார். மூணு மணி நேரம் கழிச்சு. ஒரு எட்டு மணி போல.. திரும்ப அங்க போனேன் சார். ஆனா… அவ அங்க இல்ல. நான் தேடி பார்த்தேன் காணும்.. சரின்னு வெளிய வந்துட்டேன்..’

‘ஓ… அதுக்கு தான் நீ அப்ப போனியா..’ ரகு நினைத்துக்கொண்டான்.

‘வர்ற வழியில… அவ நகுல்கிட்ட எதையோ சொல்லி பேசிகிட்டு இருந்தா.. அப்போ அவங்க என்னைய பாத்தாங்க. ஏ.. னு சொல்லிட்டு நான் பக்கத்துல போனேன். பட்டுனு அவன் என்னைய ஒரு கட்டையால அடிச்சு போட்டுட்டு அவள கூட்டிட்டு போயிட்டான் சார்… அதுக்கு அப்பரம் எனக்கு எதுவும் தெரியாது சார்… முழிச்சு பாக்குறப்போ இங்க ஆஸ்பிட்டல்ல இருந்தேன்..’ அவன் சொன்னான்.

‘உண்மைய சொல்லுங்கடா.. அந்த பொண்ணு எங்க..’ ரகு இன்னும் அழுத்தமாக கேட்டான்.

‘சார்.. எங்கள கொன்னே போட்டாலும் இதான் சார் உண்மை. அவ நகுல் கூட இருக்கா.. அதான் எனக்கு தெரியும். நீங்க அவன கேட்டு பாருங்க..’ அவன் சொன்னான். ரகு யோசித்தான்.

‘ஒரு பொண்ணு ஒத்துக்கலனா போட்டு பூட்டுவ. அழுக விடுவல..’ ரகு கேட்டுவிட்டு ராகுலை முறைத்தான். ராகுல் தான் செய்தது ஒரு தவறு என்றே நினையாமல் இருமாப்போடு இருந்தான். ரகுவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. சட்டென தலையில் ஒரு தட்டு தட்டினான். ராகுல் உடனே மயங்கினான்.

’சார்..’ சதீஷ் ஆர்வமாக பாய்ந்தான். அவனையும் ஒரு தட்டு. சட்டென விழுந்தான்.

‘இதுக்கு கூட்டு வேற.. நாயிங்க..’ சொல்லிவிட்டு வெளியேறினான். காவல் நிலையம் அழைத்து இரண்டு பேரை அங்கு காவலுக்கு நிற்குமாறு சொல்லிவிட்டு இன்னும் வெளியேறினான்.

பிரியாவின் அப்பாவை அழைத்தான்.

‘சார்.. உங்க பொண்ணு லவ் பண்ணுது சார். ஏதோ.. நகுல்னு ஒரு பையன.. அவன்கூட மும்பை போயிருக்கும்னு நினைக்கிறேன்..’ ரகு சொன்னான்.

‘இல்லப்பா.. என் பொண்ணு அப்படிப்பட்டவ இல்ல..’

‘சார்.. என்ன லவ் தானே பண்ணினானு சொன்னேன். லவ்க்கு என்ன அப்படிபட்டவ இல்ல.. லவ் பண்ணினா தப்புலாம் இல்ல சார். நான் அந்த பையன புடிச்சு பொண்ண சீக்கிரம் கூட்டி வர பாக்குறேன்..’

‘தேங்க்ஸ் சார்..’ சொல்லிவிட்டு அவர் அணைத்தார். அவன் மீண்டும் நகுலின் நம்பரை அழைக்க பார்த்தான். போகவில்லை.

ரகு அவனது வீட்டிற்கு சென்றான். குளித்தான். அன்று நடந்தது முழுக்க அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஒவ்வொரு இடமாக.. ஒவ்வொரு வார்த்தையாக அவன் மீண்டும் மீண்டும் யோசித்தான்.

அவள் அப்பா பதறிக்கொண்டு வந்தது, அந்த வாட்ச் மேன், அவள் தோழி, ராகுல், நகுல், நகுலின் நண்பன், சதீஷ்.. அவன் மீண்டும் மீண்டும் யோசித்தான். ஒவ்வொரு பேச்சுகளாக.. அவள் அப்பா பதறியது. தோழி நகுல் பற்றி சொன்னது. நகுல் நண்பர்கள். அந்த வாட்ச் மேன்…

‘அந்த வாட்ச் மேன்..’ ரகு இன்னும் யோசித்தான்.

‘எட்டு மணிக்கு பூட்டுவோம் சார்.. உள்ள போயி ஒரு செக் பண்ணுவோம்.. விசிலடிச்சு.. முடிச்சுட்டு பூட்டிருவோம் சார்..’ அந்த வாட்ச் மேன் குரல் அவனுக்கு கேட்டது. சட்டென வெளியில் அவனது அலைப்பேசி ஒலித்தது.

அவன் அரைக்குளியலில் ஓடி வந்து எடுத்தான். அது நகுல். சட்டென எடுத்து பேசினான்.

‘ஹலோ நகுல்..’ ரகு பேசினான்.

‘சொல்லுங்க சார்.. யாரு..’

‘நகுல். நான் ரகு. போலீஸ் இன்ஸ்பெக்டர். பிரியானு ஒரு பொண்ணு காணும்னு கேஸ் வந்திருக்கு.. விசாரிச்சதுல உங்ககூட இருக்கானு சொன்னாங்க. கொஞ்சம் கன்ஃப்ர்ம் பண்றீங்களா..’

‘சார்.. பிரியாவ காணுமா..’ நகுல் அதிர்ச்சியானான். ரகுக்கு தூக்கிவாரிப்போட்டது.

‘நகுல்.. பிரியா உங்க கூட இல்லயா..’

‘இல்ல சார். அவள வீட்டுல விட்டுட்டு தானே நான் வந்தேன்…’ அவன் சொன்னான்.

‘புரியல நகுல். கொஞ்சம் விளக்கமா சொல்லுறீங்களா..’

‘சார்.. பிரியா என்னைய லவ் பண்ணுறா. அத இன்னைக்கு ஒரு லெட்டரா எழுதி என்கிட்ட கொடுத்தா.. ஒரு புக்ல வச்சு. அத நான் வீட்டுக்கு போயி தான் பாத்தேன். உடனே அவளுக்கு ஃபோன் போட்டேன். அவ எடுக்கல.. அவ வீட்டுக்கு போனேன். உள்ள போகல.. வெளிய நின்னே பாத்தேன்.. அவ வெளிய வரல. சரின்னுட்டு காலேஜ் வழியா என் ரூமுக்கு திரும்பி வந்தேன். அப்போ அவ ரோட்டுல தெரிச்சு ஓடிவந்துட்டு இருந்தா.. என்னனு கேட்டப்போ ராகுல்னு ஒருத்தன் அவள லவ் டார்ச்சர் பண்ணுவான். அவன் அவள பூட்டி வச்சுட்டதாகவும். பின்னாடி வழியா ஏறி குதிச்சு தப்பிச்சதாவும் சொன்னா அவ.. அந்த சமயம் ராகுல் அங்க வந்துட்டான். நான் அவன அடிச்சு போட்டுட்டு அவள வீட்டுல விட்டுட்டு வீட்ட விட்டு வெளிய வராதனு சொல்லிட்டு வந்தேன்..’

‘நீங்க இப்ப எங்க இருக்கீங்க?’

‘மும்பை போயிட்டு இருக்கேன் சார்.. ஒரு பர்சனல் விசயமா..’

‘சரி ஃபோன ஆன்லயே வையிங்க.. தேவைபடலாம்..’

‘சார் பிரியாக்கு..’

’ஒண்ணுமில்ல நகுல். பயப்படாதீங்க.. கண்டுபிடிச்சிடலாம்..’

‘நான் அடுத்த ஸ்டேஷன் இறங்கி ரிட்டன் வர்றேன் சார்..’ அவன் பதறினான். ரகு சரியென்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தான். ரகுவிற்கு ஒன்றும் புரியவில்லை. கிளம்பினான். அவளது வீட்டிற்கு. அவள் வீட்டின் வெளியே நின்று பார்த்துக்கொண்டிருந்தான். அங்குமிங்கும் உலாத்தினான்.

‘இங்க ராகுல்.. இல்ல நகுல். எவனோ ஒருத்தன் பொய் சொல்லுறான்..’ ரகு இன்னும் யோசித்துக்கொண்டே நின்றான். உலாத்திக்கொண்டே நிற்கையில் எதிரில் ஒரு வீட்டின் பால்கனியில் இருந்து ஒருவர் எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தார்.

ரகு அவருக்கு கை காட்டினான். அவர் சட்டென உள்ளே ஓடி சென்றார். ரகு விரட்டினான். அவரை பிடித்தான்.

‘யார் நீங்க.. ஏன் ஓடுறீங்க..’ அவன் கேட்டான்.

‘சார்.. சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது. நான் எதுவும் பாக்கல..’ அவர் சொன்னார்.

‘என்ன பாக்கல..’

‘அந்த வீட்டுல நடந்த எதையும் நான் பாக்கல..’

‘என்ன நடந்துச்சு..’

‘சார்.. ப்ளீஸ் சார்..’

‘சொல்லுறீயா இல்ல கம்பி எண்ணுறியா..’

‘சார் சார் சொல்லிடுறேன் சார்.. நைட் எட்டு மணிக்கு மேல.. அந்த வீட்டு ஆளு அவன் பொண்ண குண்டுகட்டா தூக்கி ஒரு ஆட்டோல ஒக்கார வச்சுட்டு போனான் சார்.. ஏதோ உடம்புக்கு முடியல போலனு நினச்சேன். பாத்தா அடுத்த ஒரு மணி நேரத்துல எல்லாரும் அந்த பொண்ண காணும்னு பேசிக்கிறாங்க சார்..’ அவர் சொல்லிவிட்டு நடுங்கினார்.

‘என்னது அந்த பொண்ணோட அப்பாவேவா..’ ரகு குழம்பினான். ஆனா, எதுக்கு..? அவன் இன்னும் குழம்பினான். அவரை இழுத்துக்கொண்டு பிரியா வீட்டிற்குள் நுழைந்தான். அவளது அப்பா இன்னும் அந்த சோபாவில் உட்கார்ந்திருந்தார். ரகுவை பார்த்ததும் அவர் எழுந்து வந்தார்.

‘சார்.. என் பொண்ணு கிடச்சுட்டாளா..’ அவர் கேட்டார்.

‘கிடச்சுட்டா..’ ரகு சொன்னான்.

‘எங்க சார்.. எங்க என் பொண்ணு..’ அவர் பதட்டமாக கேட்டுக்கொண்டு பின்னால் பார்த்தார்.

‘அத நீங்க தான் சொல்லணும்..’ ரகு சொன்னான். அவர் அதிர்ந்து பார்த்தார். புரியாமல் பார்த்தார்.

‘நைட்.. பொண்ண ஆட்டோல நீங்க தூக்கிட்டு போனதா இவர் பாத்திருக்காரு..’ சொல்லிவிட்டு வீட்டின் வெளியே பயந்து நின்றுக்கொண்டிருந்த எதிர்வீட்டுகாரரை ரகு பிடித்து உள் இழுத்துக்கொண்டு வந்தான்.

‘நானா.. என் பொண்ணையா? நான் ஏன்..’ அவர் தடுமாறினார்.

‘அதான் நானும் கேக்குறேன்…’

‘சார்.. யோவ்.. என்னைய பாத்தியா.. நானா அது.. நானா..’ அவர் எதிர்வீட்டுக்காரரை பார்த்து கேட்டார்.

‘ஆமா.. நீ தான்.. நான் தான் பாத்தேனே.. என்ன முகம் தான் தெரியல.. ஆனா நீ தான்..’ அவர் பம்மிக்கொண்டே சொன்னார்.

‘என்ன முகம் தெரியலயா..’ ரகு அலறிக்கேட்டான்.

‘ஆமா.. முகம் தெரில.. ஆனா.. இவரா தான் இருக்கும். இவர போல தான் இருந்துச்சு..’ அவர் சொன்னார். ரகு அவரை வெஞ்சினான். முனகினான். பிரியாவின் அப்பா தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்தார்.

‘அப்ப எவனோ என் வீட்டுக்கு வந்து என் பொண்ண.. ஆனா.. அவ… இங்க எப்ப வந்தா..??’

‘சார்.. நகுல்னு ஒரு பையன உங்க பொண்ணு லவ் பண்றா. அவன்.. உங்க பொண்ண இங்க கொண்டு வந்து விட்டிருக்கான். அந்த சமயம் நீங்க.. காலேஜ் போயிருந்திருக்கீங்க பொண்ண காணும்னுட்டு.. உங்க பொண்ணுகிட்ட எதனா வீட்டு சாவி இருக்கா? அத வச்சு அவ உள்ள வந்திருக்கணும்..’

‘ஆங்.. இருக்கு சார்..’ அவர் சொன்னார். அதுக்கு பிறகு, யாரோ ஒருத்தர். ரகுவின் எண்ணம் முழுக்க இப்பொழுது ராகுல் தான் நிரம்பியிருந்தான். ஆனால் அவனுக்கு இன்னும் சில அமைதி தேவைபட்டது. அமைதியாக மீண்டும் வீட்டிற்கு சென்றான். மீண்டும் குளியல். மீண்டும் யோசிப்பு. விட்ட இடத்தில் இருந்து யோசித்தான். அந்த காவலாளி சொன்னது..

‘எட்டு மணிக்கு பூட்டுவோம் சார்.. உள்ள போயி ஒரு செக் பண்ணுவோம்.. விசிலடிச்சு.. முடிச்சுட்டு பூட்டிருவோம் சார்..’ அவன் மீண்டும் மீண்டும் யோசித்தான்.

’என்ன இரண்டு பேர் செய்யிற போல சொல்லுறான் அந்த ஆளு.. அப்ப இன்னொருத்தன் அங்க இருந்தானா என்ன..’ யோசித்துக்கொண்டே வெளியில் வந்தான். உடனே அந்த காவலாளி நம்பரை அழைத்தான்.

‘பாஸ்.. நீங்க ஒருத்தர் தான் வாட்ச் மேனா..?’ அவன் கேட்டான்.

‘இல்ல தம்பி.. இன்னொருத்தர் இங்க இருக்கார். அவருக்கு இன்னைக்கு மேலுக்கு முடியலனு லீவு எடுத்துகிட்டார்..’

‘ஓ.. இன்னைக்கு வரவே இல்லயா..?’

‘வந்தாரு தம்பி.. வந்துட்டு திரும்ப போயிட்டாரு…’

‘எப்ப போனாரு பாஸ்..’

‘அந்த தம்பி ஒருத்தன் வந்தான்ல… அவன் போனதும், அந்த பொண்ணோட அப்பா வர்றதுக்கு முன்னவே அவர் போயிட்டார் தம்பி..’

‘ஓ.. சார். அவர் நம்பர் கிடைக்குமா?’ என்று ரகு கேட்க. அவர் நம்பர் தந்தார். நம்பரை போட்டு பார்த்தான். ஸ்விட்ச் ஆஃப்.

அவன் நேராக காலேஜ் சென்றான். அந்த காவலாளியை தன்னோடு அழைத்தான். அவர் முதலில் வர மறுத்தார், பின்பு சம்மதம் சொல்லிவிட்டு நகர்ந்தார். அந்த மற்றொரு காவலாளி வீட்டை தேடி சென்றார்கள். அவர் வீடு பூட்டியிருந்தது. வரும் வழியில், ரகு ராகுலை ஒரு விசாரணை போட நினைத்தான்.

‘பாஸ்.. இங்க ஆஸ்பிட்டல்ல ஒரு அஞ்சு நிமிசம் வேலை முடிச்சுட்டு போயிரலாமா..’ ரகு கேட்டான். அந்த காவலாளி சம்மதம் சொன்னார். வண்டியை மருத்துவமனையில் நிறுத்தினான். அவர் இறங்கினார்.

‘தம்பி.. அவன் தான் அந்த இன்னொரு வாட்ச் மேன் பா..’ அவர் சட்டென ஒரு பக்கம் கையை நீட்டினார். அவர் கைகாட்டிய நபர் வேறு ஒருவனோடு பேசிக்கொண்டிருந்தார். அந்த வேறொரு நபர் சதீஷ்…

ரகு முன்னேறினான்.

‘ஹே..’ என்றான். அவர்கள் இவனை கண்டதும் பதறி ஓட ஆரம்பித்தார்கள். அவன் துரத்தி பிடித்தான். அந்த வாட்ச் மேனை அடித்தான்.

அவர் உண்மையை சொன்னார்.

‘சதீஷ் என் அக்கா பையன். எட்டு மணி வாக்குல எனக்கு ஃபோன் பண்ணினான். ராகுல அடிச்சுட்டதா, அவன் மயக்கத்துல இருக்குறதா சொன்னான். அதனால எனக்கு உடம்பு முடியலனு சொல்லிட்டு வந்துட்டேன். இங்க கொன்னாந்து அந்த பையன சேத்தேன்.. ஆனா சதீஷூக்கு கோபம் போகல.. ராகுல இப்படி நிலமைக்கு ஆளாக்குன அந்த பொண்ண எதனா பண்ணனும்னு சொன்னான்… அதான்.. நானும் சதீஷூம் அந்த பொண்ண போயி அவ வீட்டுலயே தூக்கினோம்’

‘அந்த பொண்ண.. என்ன செஞ்சீங்க..’

‘ஒண்ணுமில்ல சார்.. அடச்சு தான் வச்சிருக்கோம்.. ராகுலுக்கு இன்னும் இந்த விசயம் தெரியாது.. ராகுல் முழுசா வந்ததும் யோசிச்சு பண்ணலாம்னு இருந்தோம்..’ அவன் சொன்னதும் ரகு பட்டென கன்னத்தில் அறைந்தான்.

‘என்னடா செய்வீங்க? ரேப்பா? பொறுக்கி பொறம்போக்கு நாயிங்களா..’ அவன் எரிச்சலாக அடித்தான். அவர்கள் சொன்ன இடத்திற்கு அவர்களை அழைத்து சென்றான்.

அங்கு கட்டிப்போட்டு வாயில் துணி வைத்து பிரியா அடைக்கப்பட்டிருந்தாள். ரகு அவளை விடுவித்தான். நகுலுக்கும் மூர்த்திக்கும் விசயம் சொல்லப்பட்டது. குற்றவாளிகளான சதீஷ் மீதும், அந்த காவலாளி மீதும் வழக்கு பதியப்பட்டது. ராகுலின் மீதும் தனி குற்றப்பிரிவில் வழக்கு பதியப்பட்டது. தப்பித்து வந்த பிரியா.. வெறும் கண்ணீரை தவிர்த்து வேறு உதிர்க்கவில்லை.

-தம்பி கூர்மதியன்

Comments

 1. நறுக் நறுக் கென சொல்லிப் போனவிதம்
  எதிர்பாரா திருப்பங்கள்
  அருமையான் துப்பறியும் நாவல் படித்த திருப்தி
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா.. தங்களை போன்றோர் வாழ்த்தே எனக்கு ஊக்கம்.

   Delete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!