என் காதல் - முதல் பிறந்தநாள்...

அவள் வேலையை விட்டு  சென்ற சில நாட்களில் மீண்டும் சென்னைக்கு வந்தாள். இம்முறை வங்கி வேலைக்காக படிக்க போவதாகவும் தனியாக பயிற்சி கூடத்தில் பயிற்சி எடுக்க போவதாகவும் சொன்னாள்.

மீண்டும் அவளை சந்திக்கலாம் என்னும் மகிழ்வு. தினமும் சந்தித்துக்கொண்டோம். அளவில் அடங்கா பேச்சுக்களோடு மீண்டும் வாழ்க்கை மீண்டுவிட்டது தான் என்று உணர்ந்தேன்.


நாங்கள் காதலிக்க ஆரம்பித்த பிறகு அவளின் முதல் பிறந்தநாள். வாழ்க்கையில் அவள் மறக்க முடியாததாய் இருக்கவேண்டும் என்னும் எண்ணம். காலையிலிருந்து இரவு வரை.. முழு நேரம் அவளுடன் தான் என்னும் முடிவு எடுத்தேன். முழு ஏற்பாடு செய்திருந்தேன்.

காலையில் அவள் விரும்பும் குன்றத்தூர் முருகன் கோவிலில் அர்ச்சனை. அங்கிருந்து அவளுக்கு பிடித்த பொருட்களை வாங்க தி.நகர் செல்லவேண்டும். அதை முடித்துக்கொண்டு மதியம் உணவுக்கு ஆதம்பாக்கத்தில் இருக்கும் உதவும் உள்ளங்கள் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளோடு மதிய உணவை முடித்துக்கொண்டு, மதியம் அபிராமி தியேட்டரில் ‘வழக்கு எண் 18/9’ படம். முடித்துக்கொண்டு பின் மாலை வேலையில் இரவு ஏழு மணிக்கு மெரினா கடற்கரையில் சர்ப்ரைஸ் கேக் மற்றும் சாக்லேட் டெலிவரி. இரவு மெழுகுவர்த்தி ஒளியில் உணவு.

இது தான் என் திட்டம். இதற்கான ஏற்பாடுகள் முழுதாய் முன்னமே செய்திருந்தேன். அந்த நாளும் வந்தது. அதிகாலையிலே எழுந்து அவசரமாய் கிளம்புகையில் ஒரு குறுஞ்செய்தி.

‘அப்பா வர்றாராம்.. அவர்கூட திநகர் போறேன்.. இன்னைக்கு ஈவ்னிங் அவர் கிளம்பினதும் பாக்கலாம்..’ அவள் அனுப்பியிருந்தாள்.

‘ஹே.. ஊருக்கும் போல அப்பாவும் வரலனு சொல்லியிருந்தல..’ நான் அனுப்பினேன்.

‘ஆமா டா.. ஆனா திடீர்னு வர்றாங்க. என்னானு தெரியல..’ அவள் சொன்னாள். எனக்கு தலை சுற்றியது. அவளிடம் எனது திட்டத்தை பற்றி நான் வாயே திறக்கவில்லை. இப்பொழுது குன்றத்தூரில் முன்னமே பணம் கட்டியிருந்ததால் அபிஷேகம் நடந்துக்கொண்டிருக்கும். மனம் கனத்தது.

நேராக அவளை பார்க்க சென்றேன். அவள் அவளது விடுதியை விட்டு வெளியில் வந்தாள். எனது திட்டங்களை எல்லாம் சொன்னேன். வெறிக்க என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘தெரியல… திடீர்னு வந்துட்டாங்க. இப்போ எதுவும் பண்ண முடியாது..’ அவள் சொன்னாள். எனக்கு கோபமாக வந்தது. அவளோடு திநகர் சென்றேன்.

‘மதியத்துக்குள்ள கிளம்பிட்டாங்கனா மதியம் மேல எல்லாம் போகலாம்..’ அவள் சொன்னாள். உதவும் உள்ளங்கள் இல்லத்திற்கு அவளை அழைத்து செல்லவேண்டும் என்று மிகவும் விரும்பினேன். அதனால் அவளோடு திநகர் சென்றேன். அவள் தந்தை வரும் வரை காத்திருந்தேன்.. அவர் வந்ததும் அவருக்கு அறிமுகம் தருவதாக சொன்னாள். அவர் வரும் நேரம் நெருங்கியது.

போத்தீஸ் வளாகம். உள்ளே நாங்கள். மூன்றாவது மாடி என்று நினைக்கிறேன். லிஃப்ட் திறக்கிறது. அவள் அப்பாவும் அக்காவும் வருகிறார்கள்…

‘டே.. பயமா இருக்குடா. நீ போடா..’ அவள் சொன்னாள்.நான் விழித்தேன்.

‘போடா..’ தள்ளிவிட்டாள். நான் நகர்ந்து சென்றேன்.

அவர்கள் பேசிக்கொண்டார்கள். நான் அந்த கடையிலே சுற்றி திரிந்தேன். கீழே சென்றேன். ஜூஸ், சிப்ஸ், சமோசா என சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். உலாத்தினேன். ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினேன். ஒன்றரை மணி நேரம் கடந்திருந்தது. இது உதவும் உள்ளங்கள் இல்லத்து குழந்தைகள் சாப்பிடும் நேரம்.

நான் அவளை அழைத்தேன். பலமுறை… பலமுறை அழைத்தேன். பதில் இல்லை. இன்றைய நாள் திட்டத்தில் எது பாழாகினும் இது ஆகக்கூடாது என்று நான் உறுதியாக இருந்தேன். காரணம்… அவளுக்கு இது போன்ற இல்லங்களுக்கு செல்ல விருப்பம். ஆனால் சென்றதில்லை. காரணம்.. அவள் அப்பா விரும்புவதில்லை. அவள் நீண்ட நாள் ஏக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்று எனக்கு ஆசை.

மீண்டும் அழைத்தேன். அவள் இல்லாமல் அந்த இல்லத்திற்கு செல்லவும் மனம் இல்லை. ஆனால் அந்த குழந்தைகளை பாராமல் இருக்கவும் மனமில்லை. சரியென்று முடிவெடுத்து மேலே சென்றேன்.

லிஃப்ட் வாசலிலே அவள் அப்பா அமர்ந்திருந்தார்.

‘ஹலோ..’ என்றேன். அவர் என்னு வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

‘எப்படி இருக்கீங்க? நான் ராம்.. உங்க பொண்ணோட ஃப்ரண்டு’ என்றேன். முறைத்தார். பதில் இல்லை. சிரிப்பில்லை. நான் அங்கு வந்தது அவருக்கு பிடித்தம் இல்லை என்பது புரிந்தது.

‘நீங்க எங்க இங்க..?’ அவர் கேட்டார்.

‘அம்மாக்கூட வந்தேன். மேல பர்சேஸ் பண்ணிட்டு இருக்காங்க.. நீங்க வந்திருக்கீங்கனு சொன்னா அவ. அதான் பாக்கலாம்னு வந்தேன்..’

‘ஆபிஸ் போலயா..’

‘இல்ல பா.. இன்னைக்கு அம்மா வேற துணி வாங்கனும்னு சொன்னாங்க. மதியம் இவ ஹோம்க்கு போகணும்னு சொன்னா.. அதான். லீவ் போட்டுட்டேன்..’

‘ஓ..’ அவர் பேசிவிட்டு அமைதியாக இருந்தார். முகத்தில் ஒட்டு சிரிப்பு இல்லை. எனக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை. முறைப்பாகவே உட்கார்ந்திருந்தார்.

‘என்னடா.. பார்த்தற்காக ஆச்சும் சிரிக்கலாமே’ என்று எனக்கு தோன்றியது.

‘என்னப்பா அப்படியே பாத்துட்டு இருக்கீங்க.. ஒரு சிரிப்பு கூட இல்லயே..’ கேட்டே விட்டேன். மீண்டும் உர்ரென்றே இருந்தார்.

‘சரி அப்போ நான் கிளம்புறேன்..’ சொல்லிவிட்டு கோபமாக தான் அங்கிருந்து கிளம்பினேன். சுற்றி வந்தேன். அங்கே அவள் அவளது அக்காவோடு துணிகளை புரட்டிக்கொண்டிருந்தாள்.

‘ஹே..’ என்றேன். என்னை பார்த்ததும் மிரண்டாள்.

‘என்ன ஃபோன் பண்ணினா எடுக்க மாட்டியா?’ என்று கேட்டுக்கொண்டே அவளது அக்காவிற்கு ஒரு ‘ஹாய்’ சொன்னேன். அவர் என்னை பார்த்து விழித்துக்கொண்டிருந்தார். என்னவள் அவருக்கு என்னை அறிமுகபடுத்தினாள்.

‘குழந்தைகங்க சாப்பிடுற நேரம் ஆச்சு..’ நான் சொன்னேன். அவள் வரவில்லை என்றாள்.

‘சரி அப்போ நான் மட்டும் போறேன். திரும்ப கால் பண்ணினாவாச்சும் கொஞ்சம் எடு..’ சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றேன். அந்த இல்லத்திற்கு சென்றேன்.

குழந்தைகளோடு குழந்தைகளாக சாப்பாடு பரிமாறி சாப்பிட்டுவிட்டு பேசிக்கொண்டிருந்தேன்.

‘சார்.. வாழ்த்து செய்தி அனுப்பனும். அட்ரஸ் சொல்லுங்க’ அவர் கேட்டார். இது என்னவள் சம்பாத்தியத்தில் போட்ட சாப்பாடு. காரணமும் அவள் தான். அவளுக்கே வாழ்த்து செல்லவேண்டும் என்று எண்ணினேன். ஆனால் அவளது முகவரி எனக்கு கொஞ்சமாக தான் ஞாபகம் இருந்தது.

‘இத பண்ணுறது என் ஃப்ரண்டு பர்த்டேக்காக தான். அவங்க தான் காசு கொடுத்தாங்க.. ஒரு முக்கியமான வேலை அவங்களால வர முடியல.’ நான் சொன்னேன்.

‘பரவால சார்.. அட்ரஸ் மட்டும் கேட்டே சொல்லுங்க..’ அவர் சொன்னார்.

நான் சிரித்துக்கொண்டே அலைப்பேசியை எடுத்து தட்டினேன். அவள் மீண்டும் எடுக்கவில்லை. நான்கு முறை ஐந்து முறை கடந்தது. அவள் எடுக்கவே இல்லை. தலைவரை கோபம் கொப்பளித்தது. எடுத்து சாதாரணமாக பேசிவிட்டு வைத்துவிட்டாள் என்ன.. ஏன் இவ்வளவு பயம் என்று கோபம் தலைக்கு ஏறியது.

அவள் வீட்டாரிடம் சகஜமாக பேசக்கூடியவன் நான். அவள் அம்மாவிடம் சில முறை பேசியிருக்கிறேன். என்னோடு தான் குழந்தைகள் இல்லத்திற்கு செல்கிறாள் என்று முன்னமே சொல்லியிருக்கிறாள் அவள். பிறகு என்ன பிசகு.. எடுத்து சாதாரணமாக பேசிவிட்டு வைத்திடலாமே. கோபம் தலைக்கேற.. அவளது அக்காவை அழைத்தேன்.

அவளிடம் அலைப்பேசியை கொடுக்க சொல்லி வீட்டு முகவரியை வாங்கிக்கொண்டேன். நேராக எங்கும் நில்லாமல் எனது அலுவலகம் சென்று கம்ப்யூட்டரை தட்டிக்கொண்டு அமர்ந்தேன்.

அடுத்த ஒரு மணிநேரத்தில் அவளிடம் இருந்து அழைப்பு.

‘நான் ஹாஸ்டல் வந்துட்டேன். அப்பா ஊருக்கு கூப்பிடுறார்.. நான் போறேன்’ என்றாள்.

‘ம்ம்..’ என்றேன்.

‘நீ எதுக்கு அப்பாகிட்ட போயி பேசுன.. அதான் ப்ராப்ளம். அவர் திரும்ப என்னைய இங்க வரவே விடமாட்டார்.. போறேன் போ..’ சொல்லிவிட்டு அணைத்தாள். ஊருக்கு கிளம்பினாள். இரண்டு நாட்கள் பேச்சில்லை. மூன்றாம் நாள் குறுஞ்செய்தி அனுப்பினாள்.

‘அப்பாகிட்ட பேசுனது அப்பாக்கு பிடிக்கல… அக்காவுக்கு நீ கால் பண்ணினது அதவிட சுத்தமா அப்பாக்கு பிடிக்கல..’ அவள் இன்னும் அவர் என்மீது காட்டமாக சொன்ன அத்தனையும் சொன்னாள். அதில் சில கொச்சை வார்த்தைகளும் அடக்கம்.

‘பேச தானே செஞ்சேன். வேற எதுவும் தப்பா செய்யலயே..’ நான் கேட்டேன். நான் செய்தது தவறா சரியா எனக்கு தெரியாது. ஆனால் நான் செய்த செய்கைக்காக தன்மானம் இழக்க நான் விரும்பவில்லை.

‘உடனே உங்க அப்பாகிட்ட நான் பேசுறேன்..’ நான் சொன்னேன். அவள் வேண்டாம் என்றாள். கோபங்களை குறைத்துக்கொண்டு மெதுவாக பேசவேண்டும். நான் எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன்.

சிறிது நேரம் யோசித்தேன். நான் பேசியிருக்க வேண்டாமோ? அன்று நான் செய்தது எதையும் செய்திருக்க வேண்டாமோ என்று பலமுறை யோசித்தேன். ஆனால் சாதாரணமான பேச்சுக்கு அவர் என்னை கடிந்துக்கொள்ள வேண்டியதில்லை என்று என் மனம் சொன்னது. அவள் இடத்தில் இருந்து கொஞ்சம் யோசித்திருக்கலாமோ என்று நினைத்தேன். அவள் அலைப்பேசியை எடுத்து விசயத்தை சொல்லியிருந்தால் இந்நிலை இல்லையே என்றும் யோசித்தேன். இங்கு என் மேல் தப்பு, அவள் மேல் தப்பு, அவள் அப்பா மேல் தப்பு என்று என்னால் பிரித்து பார்க்கமுடியவில்லை. அனைவர் மீதும் பிழை இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

இந்த சம்பவம் முன்னர் கூட என் மீது அவருக்கு அந்த அளவு நல்ல அபிப்ராயம் இருந்ததில்லை. இப்பொழுது அந்த இடைவெளி இன்னும் நீண்டுவிட்டது. விலகிவிட்டது. காதலை சொல்லி மூன்று மாதத்திலே பிரச்சனை பிடிக்கொண்டுவிட்டது…

போய் பேசிவிடலாமா… பொறுமையாக இருக்கலாமா... என்னை தரக்குறைவாக பேச வேண்டிய அவசியம் என்ன? கோபத்தை நிலைக்கொள்ளாமல் அவ்வபோது மனம் கொப்பளித்துக்கொண்டிருந்தது. என்னையும் சமாளித்துக்கொண்டு, அவள் அப்பாவையும் சமாளித்துக்கொண்டு சரியாக காய் நகர்த்தினாள் என்னவள்… சொல்கிறேன்... இன்னொரு நாள்.

நான் நினைத்தது போல அவள் முதல் பிறந்தநாள் மறக்கமுடியாததாக தான் இருந்திருக்கும். ஆனால் வேறு விதத்தில்... :) 

(மீண்டும் காதலிப்பேன்)

Comments

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..