என் காதல் - மீண்டும் கல்லூரி

நாட்களை கடினமாக தான் கடந்துக்கொண்டிருந்தேன். சரியான பேச்சுகள் கிடையாது. அவள் அப்பாவிடம் பேசியிருக்க வேண்டாமோ என்று என்னை நானே பலமுறை கேட்டுக்கொண்டேன். அவர் மீது கோபங்கள் எழுந்தன. அவள் என்னிடம் அவ்வபோது பேசினாள். அப்பொழுதெல்லாம் நான் கோபமாக பேசினால் என் தரப்பு நியாயங்களை மட்டுமே பேசுவாள்.

‘அப்பா பேசியது தவறு. அப்பா உன்னை தரக்குறைவாக பேசியிருக்க கூடாது. நான் அப்பாகூட பேசி நாளாச்சு..’ என்று சொல்லிக்கொண்டிருப்பாள். ஒரு விசயத்தை பற்றி கோபம் கொள்ளும்பொழுது எதிர் தரப்பு வாதம் இருந்தால் தான் அந்த கோபம் இன்னும் பெரிதாகும். ஆனால் இங்கு அவள்… என்னை சார்ந்து பேசினாள். அதனால் என் கோபம் முளைத்த வேகத்திலே அடங்கிபோனது.

அதுப்போல அவள் அப்பா அங்கு கோபம் கொள்ளும்பொழுது அவள் எதிர்த்து பேசுவதில்லை. அமைதியாக அவர் சொல்வதை காதில் வாங்கிக்கொள்வாள். ஒருவேலை வரம்பு மீறி போகும்போது மட்டும் தான் அவள் எதிர்த்து குரல் கொடுத்தாள். இதை பின்னொரு நாளில் அவளிடம் கேட்டறிந்தேன். மனித எண்ணங்களை எப்படி சமாளிப்பது என்னும் யுக்தி அவளுக்கு தெரிந்திருந்தது.

சில நாட்கள் கடந்தன..

அன்று அழைப்பு.

‘நான் சென்னை வர்றேன்’ அவள் சொன்னாள். எனக்கு அளவில் அடங்கா மகிழ்வு.

‘ஆனா.. பேங்க் க்ளாஸ் போயிட்டு திரும்ப வந்திருவேன்.. தினமும் அப்படி தான்.,.’ அவள் சொன்னாள். காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை. இரண்டு மணி நேர பயணம். தினமும் காலையிலே கிளம்பிவிடுவேன். காஞ்சிபுரத்தில் இருந்து திநகர் வரும் ஏசி பேருந்தில் தான் தினமும் வருவாள். நான் கிண்டி நேரடியாக சென்றிடுவேன், சில நாட்கள் விரைந்து எழுந்து பூந்தமல்லி நோக்கி வண்டியில் செல்வேன். எந்த நிறுத்தத்தில் அவளது பேருந்தும் நானும் சந்திக்கிறோமோ அங்கிருந்து திநகருக்கு என் வண்டியில் அழைத்து செல்வேன். அவள் மீண்டும் வரும் வரை காத்திருப்பேன், அல்லது அலுவலகம் சென்றுவிட்டு திரும்ப வருவேன். அவள் பயிற்சி கூடத்தில் இருந்து திநகர் பேருந்து நிலையம் வரை நடைப்பயணம். அடுத்த பேருந்து வரும் வரை தான் எங்கள் நேரம்… வீட்டில் நடந்தவை. அடுத்து என்ன செய்யலாம். நாங்கள் செய்தவை, நான் எழுதியவை, படித்தவை என பல விசயங்கள் பகிர்ந்துக்கொள்வோம். பேருந்து வரும்.. அடுத்த நிமிடம். அவள் என்னோடு இருந்த நிழல் மட்டும் தான் இருக்கும். அவள் கைப்பிடித்த ஸ்பரிசம் மட்டும் தான் கையோடு இருக்கும். அவள் பார்த்த பார்வையின் காட்சிகள் மட்டும் தான் இருக்கும். அவள் சென்றிருப்பாள். மீண்டும் அடுத்த நாள் கனவோடு.. அலுவலகம்.

அடுத்த பத்து நாட்களில் அந்த பயிற்சியும் முடிந்தது. இனி சந்திக்க வாய்ப்பில்லை. அவள் மீண்டும் சென்னைக்கு வரப்போவதில்லை. இனி அவளுக்கு எப்பொழுது வேலை கிடைக்குமோ அப்பொழுது தான் மீண்டும் அவளை பார்க்கலாம். நான் யோசித்து காத்திருந்தேன். மீண்டும் பேச்சுகள் குறைவானது, பார்ப்பது இல்லாமல் போனது.

ஆனால் அதிக நாள் நீடிக்கவில்லை.

சென்ற சில நாளிலே மேல்படிப்பு படிக்கிறேன் என்று அவள் சொல்லியிருக்கிறாள். அதன்படி மீண்டும் சென்னை. WCC, Stella Maris என்னும் இரண்டு கல்லூரிகளில் விண்ணப்பிக்க போவதாய் சொன்னாள்.

‘பேங்க்ல சேரணும்னா லேட் ஆகும்.. அதுவரை பாக்காம இருக்க முடியுமா தெரியல. அதனால நான் படிக்க வர்றேன்.. அப்பாகிட்ட பர்மிஷன் வாங்கிட்டேன்..’ அவள் சொன்னாள். கிட்டதட்ட ஒரு மாதம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவளை சந்தித்தேன். இம்முறை ஒன்றாக கல்லூரிகளுக்கு அலைந்தோம். அந்த கல்லூரிகள் முடிவு தெரியும் வரை பிரிந்து தான் இருக்க வேண்டும்.

விண்ணப்பம் பூர்த்தி செய்து கல்லூரியில் கொடுத்துவிட்டு கோயம்பேடு பேருந்து வளாகத்தில் நின்றிருந்தேன். அவள் கோயம்பேட்டில் இருந்து கிளம்பினாள் காஞ்சிபுரம் செல்லும் ‘All Bye Pass’ வண்டியில் தான் ஏறுவாள். அந்த வண்டிகளின் கண்ணாடிகளுக்கும், அந்த ஐந்தாம் ப்ளாட்பார இருக்கைகளுக்கும், சுற்றி இருக்கும் கடைகளுக்கும் என் இருண்டு போன முகத்தின் காட்சி பரிட்சயம். பேருந்து கண் மறைவு வரை காத்திருப்பேன்.. சடசடவென மாற்று திசை ஓடி நின்று மீண்டும் மறையும் வரை காத்திருப்பேன். மீண்டும் தனிமையென நாட்கள் தொடர போகின்றன என்னும் எண்ணம் தான் இருக்கும்.

மீண்டும் அவள் சென்னையில். இம்முறை WCC கல்லூரி மாணவியாக. அவளுக்கு கல்லூரியில் விடுதி கிடைக்கவில்லை. நுங்கம்பாக்கத்தின் இண்டு இடுக்கு சாலைகளை கால் நடையாக நடந்த சமயங்கள்… பின் நாளில் அங்குலம் அங்குலமாக அதை அளந்து வைக்கும் அளவுக்கு இருக்கும் என்று அந்நாளில் நான் நினைத்து பார்க்கவில்லை. கல்லூரியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் ஒரு விடுதியில் அவள்.

அவ்வளவு தான்.. இன்னும் இரண்டு வருடம் பிரச்சனை இல்லை. தினம் பேசலாம்.. பார்க்கலாம். என்னும் கனவுகள்… எங்கள் காதல் கொஞ்சம் வித்யாசமானது. ஒருமித்த எண்ணங்கள் கொண்ட நாங்கள் மால்களின் லேண்ட் மார்க் கடைகளிலும், கன்னிமாரா நூலகத்திலும், கோவில் கட்டமைப்புகளை பற்றி கருத்து பரிமாறிக்கொண்டும், சினிமாக்களை விமர்சித்துக்கொண்டும், மாறி மாறி உணவு சமைத்து அன்பை பரிமாறிக்கொண்டும், வழித்தெரியா பயணங்களில் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டும் அந்த இரண்டு வருடம் எங்களை ஒரு நல்ல நண்பர்களாய் இணைத்து வைத்தது.

நாட்கள்… இனிமையின் எடுத்துக்காட்டாய் நகர்ந்ததை இனி சொல்கிறேன். அந்த இரண்டு வருட கதையை..

(இன்னும் காதலிப்பேன்)

Comments

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி