ஆயுதமில்லா சர்வாதிகாரம்

நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றாய் இங்கு திணிப்புகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. இங்கு எது புண்ணியம் எது பாவம் என்று அலசுவதற்கு இல்லை. இது நடைமுறை, இது வரலாறு என்று வாதிடுவதற்கு ஒன்றும் இல்லை. ஒருவன் என்ன செய்யவேண்டும் என்று அவன் முடிவு எடுக்கும் வரை தான் இங்கு உரிமைகள் உயர்ந்து நிற்கின்றன. எப்பொழுது ஒருவன் செய்யவேண்டியதை மாற்றொருவன் சொல்கிறானோ அங்கேயே அடிமைவாதம் தொடங்கிவிடுகிறது.

வேலைக்கு செல்பவன் அவன் முதலாளிக்கு கூலியாக தான் செய்கிறான். அவன் சொல்வதை இவன் செய்வான் பதிலுக்கு கூலி வாங்கிக்கொள்கிறான். இது உழைக்கும் வாழ்க்கைக்குள் வருகிறது. ஆனால் இயல்பான, நடைமுறையாக ஒரு சுதந்திர தனிமனித வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையில் நீ இத்தியாதை தான் செய்ய வேண்டும் என்னும் திணிப்பே இங்கு போராட்டத்திற்கு காரணமாகிறது.

தனி திராவிட நாடு என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படாவிடினும் அது மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிரான குரல் என்னும் பட்சத்தில் இங்கு பார்க்கவேண்டும். மத்திய அரசின் நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்திருக்கிறேன் என்னும் ஒரு மனிதனின் வேகமே திராவிட நாடு என்னும கோரிக்கை.

இது சரியா? தவறா? என்னும் விவாதத்தை விடுத்து அதை ஏன் அவ்வாறு செய்கிறான் என்னும் கோபத்தை புரிந்துக்கொள்ள முடிவெடுக்க வேண்டும் அரசாங்கம். மாட்டை காப்பதில் இருக்கும் அக்கறை கொஞ்சம் மனிதனுக்காக இருத்தல் நலம். அரசாங்க வேலையை தவிற அரசாங்கத்தை நாட இங்கு எவனுக்கும் நாட்டம் இல்லை. அரசாங்க அலுவலகத்தில் இருக்கும் முறைகேடுகள், புரியாத கோட்பாடுகள்.. சரியான மருத்துவமனை இல்லை, சரியான கல்வி இல்லை என இது எதைப்பற்றியும் கவலை இல்லாமல் இந்தியாவை இந்து நாடு என்று முன்னிருத்த பா.ஜ.க., அரசு செய்யும் சேஷ்டாங்கங்கள் பார்க்க சகிக்கவில்லை.

மொழி, உணவு, அடையாள உரிமைகளில் கைவைக்கும் அருகதை இங்கு யாருக்கும் கிடையாது. இந்தியா என்னும் நாடு பலதரப்பட்ட பிரகாணங்கள், பழக்கங்களை இணைத்து கட்டப்பட்ட ஒரு பலம் வாய்ந்த பொக்கிஷம். அதை திணிப்புகளுக்கு உள்ளாக்கி சில்லறையாய் சிதறவிடுவது ஒரு முட்டாள் தனம்.

ஒருவனின் அடையாளத்தை அழிப்பது என்பதை எவனும் பொருத்துக்கொள்ள மாட்டான். அவனுக்கு பழக்கப்பட்ட ஒரு விடயத்தின் மீது மற்றொன்றை திணிப்பது சர்வாதிகாரம். ஜனநாயக முறை என்பதே இங்கு கேள்விக்குறியாக நிற்கிறது.

நான் உடுத்தும் உடையிலும், திண்ணும் உணவிலும், பேசும் மொழியிலும், வாழும் வாழ்க்ககையிலும் மற்றவர் அடையாளத்தை புகுத்த யாருக்கும் உரிமை இல்லை. இப்படி தான் நீ இருக்க வேண்டும் என்று சொல்ல யாருக்கும் இங்கு உரிமை இல்லை.

ஆளும் மாநில அரசு மத்திய அரசின் கால்களை பிடித்து கெஞ்சிக்கொண்டிருப்பது நமக்கான அவல நிலை. அமைதியாக நினைவேந்தல் செய்பவனை குண்டர் சட்டத்தில் கைதி செய்து சிரிப்பு கூட்டிக்கொண்டிருக்கிறது. மக்களுக்கான தேவை என்ன, இப்பொழுது இருக்கும் வறட்சியையும் அடுத்து வரும் பாதிப்புகளையும் சமாளிக்க எந்த வழிவகையும் எடுக்காமல் ஆட்சியை நிலைநாட்ட மட்டும் போராடிக்கொண்டிருப்பது எப்படி இருக்கிறது என்றால்… கண்ணாடியில் உங்கள் முகத்தை கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு எப்படி இருக்கிறதோ என்னவோ எனக்கு கேவலமாக இருக்கிறது.

அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. அதன் தேவைகள் இங்கு என்ன முளைத்து என்று தெரியவில்லை. ஒவ்வொருவனுக்கும் அவனுக்கான சுதந்திரம் என்பது இருக்கிறது. அதில் அரசாங்கம் நிழல் அளவுக்கு தான் கைவைக்க முடியும் அதையும் தாண்டி அவன் மடியில் பாய் போட்டு மல்லாக்க படுத்துக்கொண்டிருக்கிறது நம் அரசாங்கம்.

வளர்ச்சிக்கான பாதை இங்கு மட்டுறுத்து நிற்கிறது. எங்கே வளர்ச்சி என்று தேடும் அளவிற்கு தான் இருக்கிறது. இருந்தாலும் இன்றும் சில காவிகள், மோடி சாதித்துவிட்டார் என்னும் போக்கு திரித்து எதையோ எழுத பார்க்கிறார்கள். நேற்று வரை ஜெயலலிதாவை திட்டியவின் இன்று புகழாரம் சூட்டுகிறான்.. இப்படிதான். நாளை மோடிக்கான புகழாரத்தை இன்னைக்கே எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் வளர்ச்சியையும், அதன் மக்களையும் உருக்கி அவர்கள் ரத்தத்தை மையாக கொண்டு மோடியின் புகழாரத்தை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

செயல்படாத மாநில அரசு. இந்துத்துவாவை மட்டுமே முன்னிருத்தும் மத்திய அரசாக இந்தியா ஒரு இருண்ட காலத்தில் இருக்கிறது. நேரடியாக துப்பாகியை தூக்கி நில்லாமல், வளர்ச்சி ஆசைகாட்டி மயக்கும் போர்வையில் இங்கு சர்வாதிகார திணிப்பு நடக்கிறது. நாளை நீ போடும் ஜட்டியை கழட்டிவிட்டு கோவணம் கட்டிக்கொள்ள சொல்லுவான்… நீ பூநூல் போடாத வரை.

பார்ப்பனீய அரசியல் எதிர்ப்பு நேற்று வரை குறைவாக தான் இருந்தது. இந்த ஆளும் அரசால் அது நீண்டுக்கொண்டே போகிறது. நாளை இண்டு இடுக்குகளில் கூட பார்ப்பனீய எதிர்ப்பு முளைக்க போகிறது…

எங்கே உரிமைகள் மறுக்கபடுகிறதோ அங்கு புரட்சி வெடிக்கும் என்பது அரை டவுசர் போட்டு கம்பு தூக்குபவர்க்கு புரியாமல் இருப்பது ஆச்சர்யம் இல்லை. உண்மையான புரட்சி வெடிக்கையில் முகம் பல் முகரை இளித்து நிற்கும். வாழ்த்துக்கள்.


எரிச்சலுடன்.. ஒரு சக இந்தியன்.

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!