ஈனக்கூடல்

கனவுகள் பல சுமந்துக்கொண்டிருந்தவளின் கனவுகள் நிலைக்கொண்ட சமயம் அது. அவள் அமைதியாக அந்த அறையில் அமர்ந்திருந்தாள். பால்கனியில் அவன் நின்றுக்கொண்டிருந்தான். அவன் வாயில் இருந்து புதிதாக கிளம்பிய மேகங்கள் போல வெள்ளை புகை பறந்துக்கொண்டிருந்தன.

‘சூஊ…. உஷ்…’ அவன் பலமாக இழுத்து ஊதிக்கொண்டிருந்தான் அந்த வெள்ளை நிற சிகரெட்டை. அவள் அந்த கட்டிலில் அமர்ந்தபடி பால்கனியில் நிற்கும் அவனையே உற்று பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவன் சட்டென அவளை திரும்பி பார்த்தான். சிகரெட்டை தூக்கி தூற போட்டுவிட்டு நேராக வந்தான். அவள் பக்கத்தில் அமர்ந்தான்.

‘கொஞ்சம் நர்வஸ்.. பயம்… அதான்… சாரி..’ அவன் நெளிந்துக்கொண்டே உட்கார்ந்தான். அவள் மெல்லியதாய் சிரித்தாள்.

‘ஸ்மெல்லு.. பரவால.. இல்ல..’ அவன் மீண்டும் கேட்டான்.

‘எனக்கு பழக்கமில்ல.. பழக்கமா இருந்திருந்தா பரவாலனு சொல்லியிருப்பேன்..’ அவள் சொன்னாள். அவன் நெளிந்தான். முகம் மாறியது. அவள் மெல்லியதாய் சிரித்தாள்.

‘இன்னைக்கு தான் மேரேஜ் ஆகியிருக்கு. நாம… இத ஏன்.. இன்னொரு நாள்..’ அவள் இழுத்தாள்.

‘ஹே.. அதெல்லாம் இல்ல. வெளிய போயி நல்லா மூச்சு வாங்கிட்டு, பப்புள் கம் போட்டுட்டு, மவுத் ஸ்ப்ரே அடிச்சுட்டுனு வந்திடுறேன்..’

‘அதுக்கு இல்ல… இன்னும் நாம ஒருத்தர ஒருத்தர் புரிஞ்ச..’ அவள் பேசும்போதே அவன் தடுத்தான்.

‘புரிஞ்சுக்கணும்.. தெளிஞ்சுக்கணும்னு எதனா சொல்லாதமா.. நான் பாவம்மா.. பல நாள் ஆசை..’ அவன் சொல்லி கெஞ்சுவது போல முகத்தை வைத்துக்கொண்டான். அவள் வாய்விட்டு சிரித்துவிட்டாள்.

அடுத்த நிமிடம்… கருந்திரை போட்டு புலி மானின் மீது பாய்வது போன்ற படத்தை கன்முன்னே கொண்டுவந்துக்கொள்ளுங்கள்.

அடுத்த நாள் அதிகாலை. முழுதாய் போர்த்திய போர்வையில் அவளின் கலைந்த ஆடை கூடாய் நெஞ்சகத்தில் சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்தான் அவன். அவனது அலைப்பேசி ஒலித்தது. அவள் அவனை பார்த்து சிரித்துக்கொண்டே எட்டி அந்த அலைப்பேசியை எடுத்தாள்.

அது ஒரு மெயில். ஒரு பெண்ணின் பெயரில் அது இருந்தது. அலைப்பேசியின் முன் திரையில் அந்த மெயிலின் சப்ஜெக்ட் இருந்தது.

‘மிஸ் யூ..’ என்று எழுதி அதை தொடர்ந்து முத்தங்களும் கவலைகளுமாய் எமோஜிக்கள் நிறைந்து இருந்தன. சிரித்துக்கொண்டிருந்த அவளது முகம் சட்டென மாறியது. ஏதோ முனகிக்கொண்டே அவன் அவளை இன்னும் இறுக பிடித்துக்கொண்டான். அவள் கைகள் ஏதோ நடுக்கத்தில் இருந்தன. அந்த மெயிலை படிக்கலாமா வேண்டாமா என்று பதட்டம் அவளுக்குள். தன் நெஞ்சில் இன்னும் இறுக கட்டிக்கொண்டிருக்கும் அவனை ஒருமுறை பார்த்தாள்.

அந்த மெயிலை திறப்பதற்காக ஒரு தள்ளு தள்ளினாள். பாஸ்வேர்டு லாக் ஆகியிருந்தது. அவள் இரண்டு மூன்று போட்டு பார்த்தாள். திறக்கவில்லை. அவன் விலை உயர்ந்த ஆப்பிள் போன் வைத்திருந்தான். அதில் விரல் ரேகை அச்சும் பாஸ்வேர்டாக உபயோகபடுத்தால்ம. அவளுக்கு சட்டென பொறி தட்டியது. அவன் கட்டை விரலை எடுத்து அந்த பொத்தினால் மெல்ல வைத்தாள். ஃபோன் திறந்தது.

ஒரு நிம்மதி பெருமூச்சு..

கொஞ்சம் கொஞ்சமாக அவனது மெயிலுக்கு சென்றாள் அவள். அந்த மெயிலை திறந்து பார்த்தாள்.

அந்த மெயிலை படித்தாள்.

‘டியர் ராகுல்,

எனக்கு நைட் முழுக்க தூக்கம் வரலடா. என்னோட கனவு, ஆசையான நிமிடங்கள் எல்லாத்தையும் இன்னொரு பொண்ணு அனுபவிச்சுட்டு இருக்குறானு நினைக்கிறப்போ எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா. நீ.. உனக்கு.. சூ.. என்னால முடியலடா. இப்பவே ஓடி உன்கிட்ட வந்திடணும் போல இருக்குடா… ஏன்டா நாம பிரிஞ்சோம், எப்படி உன்னால இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ண முடிஞ்சுது?

ராகுல்… ராகுல்.. ராகுல்… சொல்லி ஓங்கி ஓங்கி அழுகணும் போல இருக்குடா.. ராகுல்…..’

படித்துக்கொண்டிருந்த அவள் நெஞ்சம் படபடவென அடித்துக்கொண்டது. துணியை சுற்றிக்கொண்டு படுத்திருந்த அவனை மெல்ல மாற்று பக்கம் சாய்த்துவிட்டு கட்டிலில் இருந்து எழுந்தாள்.

அந்த ஏசி அறையில் அவளுக்கு வியர்த்து ஒழுகிக்கொண்டிருந்தது. மீண்டும் அந்த அலைப்பேசியை எடுத்து மீதி மெயிலையும் படித்தாள்.

‘உன் பேர் எனக்கு புதுசா இருக்குடா. உன் பெயர் எனக்கு சொந்தமில்லாத போல இருக்குடா.. ராகுல்.. என்கிட்ட வந்திடுடா. ப்ளீஸ் டா…

அந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்காளா? என்னவிட யாரும் அழகா இல்லனு சொல்லுவியே.. அவகிட்டயும் அதுதான் சொன்னியா? என்கிட்ட கொஞ்சுனது எல்லாம் அவளையும் கொஞ்சுனியா..’

படித்துக்கொண்டிருந்த அவள் நெஞ்சம் அடைத்தது. நேற்று ஐந்து நிமிட விடாமல் அவள் உதட்டை சுவைத்துவிட்டு பத்து நிமிடம் பிரமிப்பாக பேசிக்கொண்டிருந்தான் அவன். கொஞ்சலும், சீண்டலும், வர்ணிப்புமாய் இருந்தது அந்த பேச்சு. பெருமூச்சு வாங்கியது அவளுக்கு.

தொடர்ந்து அந்த மெயிலை படித்தாள்.

‘ஒண்ணே ஒண்ணு மட்டும் கடைசியா கேக்குறேன் ராகுல். நேத்து நைட் அவகூட பெட்ல இருந்தியா? அவள தொடுறப்போ என்னை தொடுற போல இல்லயா? ஒரு நிமிசம் கூட என்னோட பெட்ல இருந்த நினைவுகள் வரலயா.. அவள தொட்ட நொடி உண்மையா அவள தொட்ட மாதிரி தான் இருந்துச்சா..? ராகுல்…

கண்ணீருடன்,
உன் பீட்ரூட்(அப்படி தானே என்ன கூப்பிடுவ..)’

அந்த மெயில் முடிந்த சமயம் கையிலிருந்து நழுவி அவள் அலைப்பேசியை கீழே போட்டாள். பொடீரென்றது. பக்கத்தில் இருந்த இருக்கையில் சட்டென சாய்ந்தாள்.

சத்தம் கேட்டு அவன் திடுக்கிட்டு விழித்தான்.

‘ஏ.. என்னமா..’ கேட்டுக்கொண்டே போர்வையை உடம்பில் சுருட்டிக்கொண்டு எழுந்து வந்தான்.

‘அடிப்பாவி.. என்னாடி அம்பதாயிரம் ஃபோன இப்படி கீழ போட்டுட்ட..’ பதறிப்போய் அந்த அலைப்பேசியை எடுத்தான். அவள் முகம் இருண்டு போயி கிடந்தது.

‘ஏ.. என்ன..’ அவன் கேட்டுக்கொண்டே அலைப்பேசியை துடைத்தான். அது அணையவில்லை. ஒன்றும் ஆகவில்லை. உள்ளே சென்றான். கடைசியாக திறந்திருந்த மெயில் திறந்தே கிடந்தது.

அவன் வேகமாக ஒரு பார்வை பார்த்தான். சட்டென அவள் முகத்தை பார்த்தான், மீண்டும் அலைப்பேசியை பார்த்தான். மீண்டும் அவள் முகத்தை பார்த்தான்.

‘புர்’ரென சிரித்துவிட்டான். அவள் ஒன்றும் புரியாமல் மீண்டும் அவனை பார்த்தாள்.

‘அடியே.. இந்த மெயில படிச்சுட்டு பயந்துட்டியா.. எவனோ பசங்க விளையாண்டிருக்கானுங்கடி…’ அவன் சொல்லிவிட்டு இன்னும் சிரித்தான். அவள் ஒன்றும் புரியாமல் பார்த்தாள்.

‘வேணும்னே.. கண்டமேனிக்கு அனுப்பிருக்கானுங்க. லூசு.. இதுக்கு போயி பயப்புடுற.. இங்க பாரு.. லூசு பயலுக.. இப்படி யாருனா எனக்கு இருந்திருந்தா நான் கண்டிப்பா உன்கிட்ட சொல்லியிருப்பேனே.. தோ பாரு.. மெயில் ஐடிய.. beetrootlover@gmail.com ஆம்.. இவனுங்கள..’ சொல்லி சிரித்தான். அவள் இன்னும் விழித்தாள்.

‘நம்பல ல.. இரு..’ சொல்லிவிட்டு அவன் படபடவென ஏதோ ஒரு நம்பரை அழைத்தான்.

‘டே.. பீட்ரூட்னு மெயில் அனுப்பினவன் யாருடா..’ கேட்டான்.

‘இங்க பாருங்கடா.. எனக்கும் என் வொயிஃப்க்கும் ப்ராப்ளம் ஆகிடும் சொல்லிட்டேன். நீங்க நினச்சது தான் நடந்திடுச்சே.. ஏற்கனவே ரொம்ப கெஞ்சிட்டேன் டா.. சொல்லுங்கடா.’ அவன் இன்னும் கேட்டான்.

சட்டென ஸ்பீக்கர் ஆன் செய்தான்.

‘வேணும் மச்சான் உனக்கு.. அது நம்ம ரமேஷ் தான். வேணும்னா இன்னொரு மெயில் போட சொல்லவா… மச்சான் போட்டுக்கோ..’ அங்கே இருந்தவர்கள் ஒரே கும்மாளமாய் சிரித்தார்கள். பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அவளை பார்த்தான். நெஞ்சில் அடைத்திருந்த ஏதோ ஒன்று வெளிப்பட்டதாய் உணர்ந்தாள் அவள். முகம் சட்டென மலர்ந்தது. குழப்பம், மகிழ்வு, கோபம் என எல்லாம் கலந்து சிரித்தாள் அவள்.

‘என்னம்மா.. சீ.. லூசு..’ சொல்லிவிட்டு முன்னாள் சென்று கட்டிக்கொண்டான். அவள் கண்கள் கலங்கின. இன்னும் இறுக்கமாக கட்டிக்கொண்டாள். அவன் மெல்லியதாய் தலை தடவக்கொடுத்தான்.

அவன் வைத்துவிட்டு குளிக்க சென்றான். மீண்டும் அந்த அலைப்பேசியை எடுத்து அவள் திறந்தாள். மெயில், மெசேஜ், பேஸ்புக் என எல்லா இடத்திலும் தேடி பார்த்தாள். கொஞ்சலாகவோ, பீட்ரூட் எனவோ எந்த மெசேஜ்ம் இல்லை. அவளுக்கு அப்பொழுது தான் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு வந்தது.

நாட்கள் கடந்தன…

அவள் ஐந்து மாதம் கர்ப்பமாக இருந்தாள். அவன் வேலைக்கு சென்றிருந்தான். மறதியில் அவனது பர்சை வீட்டிலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டான். அவள் அந்த பர்சை எடுத்து சுத்தம் செய்துக்கொண்டிருந்தாள்.

‘வாங்கினதுல இருந்து பல வருச குப்பைகள் இங்க இருக்கும் போலவே…’ ஒவ்வொன்றாக கொட்டினாள். பல துவாரங்கள். அதிலிருந்து பலவகை குப்பைகள். எது தேவை, தேவையில்லை என்று தரம் பிரித்துக்கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு சீட்டாக திறந்து பார்த்தாள். சாப்பாட்டு பில், ஏடிஎம் சீட்டு என பலவகை. அதில் ஒரு துண்டு சீட்டு இருந்தது. கசங்கி போய், பர்சின் தோள்கள் ஒட்டியிருந்தது அது பல நாட்களாக எடுக்காத சீட்டு என்று புரிந்தது அவளுக்கு. எடுத்து திறந்து பார்த்தாள்.

‘பீட்ரூட் பாஸ்வேர்டு’ என எழுதி ஒரு சில எழுத்துக்கள் எழுதியிருந்தது. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பீட்ரூட்டா.. அவள் யோசித்துக்கொண்டே எழுந்தாள்.

அந்த சீட்டை கையில் வைத்து அங்கும் இங்கும் உலாத்தினாள். கையில் இருந்த சீட்டை பலமுறை திறந்து படித்தாள்.

அவள் வீட்டு கம்ப்யூட்டர் முன்னர் அமர்ந்தாள். அன்று அவனது அலைப்பேசியில் பேசிய மெயிலை ஞாபகபடுத்தினாள். சில முறை தவறுகளுக்கு பிறகு சரியாக அடித்தாள். அந்த சீட்டில் இருந்த பாஸ்வேர்டை போட்டாள். அது உள்ளே சென்றது..

இன்பாக்ஸ் முழுக்க அது ராகுலின் மெயிலாக தான் இருந்தது. நேற்று இரவுக்கூட ஒரு மெயில் வந்திருந்தது. அனுப்பிய மெயில்கள் அனைத்தும் ராகுலுக்கானது மட்டுமே இருந்தது. சாட் விண்டோவில் ராகுல் பெயர் மட்டுமே, அதன் ஹிஸ்டரியலும் ஒருநாள் விடாமல் ராகுல் பெயரே..

அவளுக்கு கைநடுக்கம். நேற்று சாட் செய்ததை திறந்து பார்த்தாள். இருவரும் கொஞ்சிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் பேசியிருந்தார்கள். அந்த சாட் நீண்டுக்கொண்டே சென்றது.

கடைசியில் அவள் படித்துக்கொண்டே சென்றாள்.

அவள்: லாஸ்ட் வீக் செஞ்சது போல.. நாளைக்கும்.. ப்ளீஸ் டா..

அவன்: கண்டிப்பா.. வொய் நாட்.. உனக்கு இல்லாததா..

அவள்: ஸோ ஸ்வீட்… லவ் யூ.. உம்மா..

அவன்: அதெல்லாம் சரி.. என்ன ட்ரஸ்ல வர்ற?

அவள்: எதுல வரணும் சாருக்கு?

அவன்: ஜீன்ஸ்.. டீ சர்ட்..

அவள்: ம்ம்.. சுவர்.. அப்பரம்..

அதுக்கு பிறகு இருந்தவை மிகவும் கொச்சையாகவும் பார்க்கவே அறுவறுப்பாகவும் அவளுக்கு வந்தது. குமட்டிக்கொண்டிருந்தது.

உடம்பு முழுக்க சில்லென்று ஆனது. பதறினாள். அழுதாள். ‘ஓவென கதறினாள்…’ கண்ணீர் தாரையாக வடிந்தது. தன் வயிற்றை தடவி பார்த்துக்கொண்டாள். இன்று காலையில் செக் அப்பிற்கு வரமுடியாது வேலை இருப்பதாக அவன் சொல்லிவிட்டு சென்றதை நினைத்து பார்த்தாள். கண்ணீர் இன்னும் தாரையானது.

கைநடுக்கத்தோடு அவளது அப்பாவை அழைத்தாள். ஆனால் அது போகும் முன்னே அணைத்துவிட்டாள். மீண்டும் அழுதாள்.

ஒரு கணவனை நினைத்து அவளது கல்லூரி காலத்திலும் பின்னர் சமயங்களிலும் அவள் கண்ட கனவுகள் ஒரு முறை நிழலாடியது. கண்ணீர் மீண்டும் தாரையானது.

‘ராமனுக்கே சவால் விடுறவன் தான்டி அவ புருசனா இருப்பான்.. உங்கள போல கருவண்டா இருந்தா தானே.. என் பொண்ணு ராசாத்தி கணக்கா இருக்கா.. வேற பொண்ண பாக்க தோணுமா என்ன..’ அவள் அம்மா முன்னெல்லாம் சொல்வது அவளுக்கு நினைவு வந்தது. இந்நேரம் வேறு பெண்ணோடு அவளது படுக்கையை அவன்… நினைக்கும்பொழுதே அவளுக்கு மீண்டும் கொமட்டியது.

அழுது அழுது கண்ணீர் வடிந்திருந்தது. அவள் மீண்டும் தன் வயிற்றில் கை வைத்து தடவினாள். அவனை அழைத்தாள். அவன் எடுக்கவில்லை. மீண்டும் அழைத்தாள். அவன் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்தாள்…

‘ஹலோ.. அறிவில்ல.. ஃபோன் எடுக்கலனா.. பிஸியா இருப்பேனு தெரியாதா.. சும்மா நொய் நொய்யுனுட்டு.. என்ன இப்போ..’ அவன் சிடுசிடுவென பேசினான். அவளுக்கு வார்த்தை வரவில்லை. வாய் அடைத்தது.

‘என்னான்னு கேக்குறேன்ல… சே.. உயிர எடு..’ அவன் இன்னும் காட்டமாக பேசினான்.

‘இப்ப ஃபோன வச்சிடுவேன்.. திரும்ப கால் பண்ணி உசுர எடுக்காத..’ அவன் சொன்னான்.

தொண்டையை உறுமினாள். மூக்கை உரிஞ்சினாள்.

‘ராகுல்.. எனக்கு நீ காதுல முத்தம் கொடுக்குறது பிடிக்கும். அவகிட்ட அத மட்டும் செய்யாத சரியா.. பை..’ சொல்லிவிட்டு அவள் இணைப்பை துண்டித்தாள். இணைப்பை துண்டித்துவிட்டு ‘ஓ’வென கத்தினாள்.

கல்லூரி நினைவுகள் எழுந்தன..

‘ஏன்டி.. இதெல்லாம் பாக்காம ஃபர்ஸ்ட் நைட்ல முழிக்க போறியா..’ அவளது தோழிகள் அவளை சிண்டினார்கள்.

‘என் கண்ணு முதல்ல பாக்குற நிர்வாணம் என் புருஷனதா தான் இருக்கணும்.. தெரியாம முழிச்சாலும் பரவால.. பாத்து பயந்தாலும் பரவால.. போங்கடி..’ அவள் சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே கனவுகள் கண்டது நினைவுக்கு வந்தது.

அந்த வெட்க சிரிப்பு இன்று விரக்தியாக இருந்தது. ஒரு நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டாள். சுற்றி அந்த வீடு அவளுக்கு அந்நியமாய் இருந்தது. பல நாட்கள் கட்டி புரண்ட அந்த படுக்கையை பார்க்க பார்க்க அவளுக்கு எரிந்தது.

கல்லூரியில் யாருமே சேராமல் ஒதுக்கி வைத்திருந்த அந்த பெண் சொன்னது அவளுக்கு சட்டென ஞாபகம் வந்தது.

‘இங்க பாருமா.. இங்க ஆம்பளைங்க தன் பொண்டாட்டிக்கு முதல் படுக்கை தன்னோட தான் இருக்கணும்னு நினைப்பானுங்க. ஆனா அவனுங்க அப்படி இருக்கமாட்டானுங்க.. அவனுங்க எங்க வேணா மேயலாம்.. ஆனா அவன் பொண்டாட்டி மட்டும் உத்தமியா இருக்கணும்னு நினைப்பானுங்க. அதனால நானும் அப்படி போறேன்னு சொல்லல… ஆனா.. அவனுங்க அப்படி போறது பரவாலனு நினைக்கிற எண்ணம் நம்மல விட்டு போகணும். ஆம்பளையோ பொம்பளையோ கணவன் மனைவி உண்மையா இருக்கணும்.. செக்ஸ் தப்பில்ல.. அது நமக்கான இடத்துல நடக்குற வரை. நாய் போல கண்ட இடத்துலயும் வாய் வைக்காம இருக்கணும்.. அப்போ தான் அது இயல்பானதா இருக்கும். படுக்கை பழகினவனுக்கு… பத்தோடு பதினோறாவது உடம்பு தான் உன்னுது. அப்படி இருக்குறவன் உன்ன முந்தைய பத்தோட கம்பேர் பண்ணிகிட்டே தான் இருப்பான்… அப்படிப்பட்ட கேவலமான ஆம்பிளைங்க இருக்குற இடம் இது. இங்க வந்து நான் புனிதமா இருப்பேன்.. அவனும் புனிதமா இருப்பானு கனவு கண்டுட்டு இருக்காத..’ அந்த பெண் சொன்னாள்

‘ஹலோ.. எனக்கு வர்றவன் கண்டிப்பா என்னை மட்டுமே சுத்தி வர்றவனா தான் இருப்பான்.. வேணும்னா பாரேன்..’ அவள் செல்ல கோபமாய் சொன்னாள்.

‘வாழ்த்துக்கள் தோழி..’ சொல்லிவிட்டு அந்த பெண் நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டு சென்றாள்.

அந்த சிரிப்புக்கான அர்த்தம் அன்று புரியவில்லை அவளுக்கு. இன்று புரிந்திருக்கிறது. தூரத்தில் அந்த பெண் நின்று இவளை கேலி செய்து சிரிப்பது போல இருந்தது.

அவன் அவளை நன்றாக பார்த்துக்கொண்ட சமயங்களை எல்லாம் மீண்டும் நினைந்து பார்த்தாள். அவனை தவிற வேறு வாழ்க்கை இல்லை என்று இருந்த நிமிடங்களை நினைந்து பார்த்தாள். அவள் ஏமாற்றப்பட்டிருக்கிறாள் என்பதை நினைத்து பார்த்தாள். அவளுக்கே அசிங்கமாக இருந்தது. மீண்டும் கண்ணீர்…

அவன் அன்றிரவு தாமதமாக தான் வீடு வந்தான். உள்ளே நுழைந்ததிலிருந்து அவள் முகம் அவன் பார்க்கவில்லை. கீழே குனிந்து தான் இருந்தான். அழுது அழுது அவள் முகம் வீக்கம் கொண்டிருந்தது.

அவள் மெல்ல தட்டை எடுத்து வைத்து இட்லியை எடுத்து வைத்தாள். அவன் அமைதியாக வந்து உட்கார்ந்தான். இட்லியை உருட்டிக்கொண்டே இருந்தான்.

‘ஹே.. அது.. நான் வேணும்னு பண்ணல..’ அவன் திணறினான்.

‘கிச்சன்ல மாவு வச்சிருக்கேன். ஒரு வாரம் வரும். பொடி எல்லாம் கிச்சன்ல வச்சிருக்கேன். வேணும்னா சாதம் வடிச்சு போட்டுக்கலாம். அம்மாவ ஃபோன் பண்ணி வேணா வர சொல்லிக்கோ… நான் அப்பா வீட்டுக்கு போறேன்..’ அவள் பட்டும் படாமல் எங்கோ பார்த்துக்கொண்டே பேசினாள்.

‘அப்பா வீட்டுக்குனா.. ஏன்.. எத்தன நாள்..’

‘இனிமே அங்க தான்..’ அவள் சொன்னாள். அவன் அமைதியாக இருந்தான்.

‘நம்ம குழந்தைய பத்தி நினச்சு பாத்தியா..’ அவன் கேட்டான். அச்சமயம் முதலாய் அவன் முகத்தை பார்த்தாள். கேவலமாக, பல்லை கடித்தாள்.

‘சீ..’ சொல்லிவிட்டு முன்னாள் நடந்தாள். பெட்டியை எடுத்துக்கொண்டு வந்தாள்.

‘நான் எப்படி இந்த வீட்டுல இருந்திருக்கேனு தெரியல. அந்த பொண்ணு ஏன் உன்னய கூப்பிட்டானு எனக்கு தெரியல… நான் உன்னைய எந்த விதத்துல திருப்தி படுத்தலனு எனக்கு தெரியல.. ஆனா.. நீ என்னைய மட்டும் இல்ல.. அந்த பொண்ணையும்.. இன்னும் எங்களுக்கு தெரியாம வேற பெண்களையுமே… ஒரு விபச்சாரி.. போல தான் பாத்திருக்க..’ அவள் கோபமாக சொன்னாள்.

‘ஹே.. அப்படி..’ பதில் பேசும்போதே அவனை தடுத்தாள்.

‘நிறைய கேட்டு ஏமாந்திருக்கேன். இதுக்கு மேலயும் முடியாது. நான் உன்ன உண்மையா தான் காதலிச்சேன். அதுக்காக தான் இப்போ போலீஸ கூப்பிடாம போறேன்… ஆனா… இன்னொரு நாள் அந்த பொண்ணுகூட இல்ல வேற பொண்ணுக்கூடவோ நீ இருக்குறது தெரிஞ்சா நான் போலீஸ கூப்பிட்டுடுவேன்.. எனக்கு டிவோர்ஸ் வேணாம். ஆனா நீயும் எனக்கு வேணாம்.. எந்த ஈனமான செக்ஸ்க்காக நீ அலஞ்சியோ.. அது உனக்கு கிடைச்சா.. நீ ஜெயில்ல இருப்ப… இனி அது உனக்குன்னே இந்த உடம்ப பாதுகாத்து வச்சிருந்த என்கிட்ட இருந்து கூட கிடைக்காது..’ அவள் சொல்லிவிட்டு விருட்டென நடந்தாள்.

‘ஹே.. சாரி டீ..’ சொல்லிவிட்டு பாய்ந்து அவள் கைகளை பிடித்தான். அவள் சட்டென திரும்பினாள். அவன் பாவமாக முகத்தை வைத்திருந்தான்.

‘க்ராக்.. தூ..’ என்று துப்பிவிட்டு காலில் இருந்த செருப்பை கழட்டினாள். அவன் கையை விட்டான்.

‘பொறுக்கி நாயே.. எச்ச பொறுக்கி..’ சொல்லிவிட்டு அந்த இருட்டிய நேரத்தில் வேக வேகமாக அந்த வீட்டை விட்டு வெளியேறினாள். கண்ணீர் சுரந்தது. அவனுக்காக இல்லை.. அவளின் ஏமாற்றத்திற்காக.

-தம்பி கூர்மதியன்

Comments

  1. நல்லதொரு சிந்தனை...

    தொடருங்கள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..