இராஜராஜபெருவழி - 1

--சில வரலாற்று குறிப்புகள் கொண்டு முழுக்க கற்பனையால் எழுதப்படும் கதை இது--சதுர்வேதகம். தற்போது இருக்கும் தமிழகத்தின் மேற்கு பகுதி. கேரளத்தின் கிழக்கு பகுதி. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு குறுநில தேசத்தில் நடக்கும் கதை இது. சோழம் தலைத்தோங்கி நிற்கிறது. மூன்றாம் குலோதுங்கன் காலம் அது. அங்கங்கு புரட்சிகளாய் பாண்டியமும், ஈழமும், சேர தேசமும் பிறண்டுக்கொண்டிருந்த சமயத்தில்…


காலக்குயிலின் ஓசை ஒன்று நித்தம் இசையாமல் இசைத்துக்கொண்டிருக்கிறது. கானகத்தின் நடுவே பச்சிளம் மிருகத்தின் கீச்சுகள் கேட்கின்றன.

சடசடவென ஒரு திசையிருந்து சத்தம் எழும்பியது. ரகுவேந்தனை தேடி அந்த காட்டிற்குள் புகுந்தவர்கள் அத்தனை பேரும் சலசலத்துக்கொண்டனர்.

‘ஹே.. ஹே..’ வாள்களை கொண்டு காற்றில் விசுமிக்கொண்டிருந்தனர்.

‘ஐயா… மன்னர் அவர்களே..’ அவர்கள் குரல் கொடுத்து பார்த்தனர்.

‘தட தட தட..’ திடீரென சத்தம். இம்முறை அவர்கள் பின்னால். சட்டென திரும்பினார்கள்.

’சாண்டியாரே.. மரத்தொங்கி எங்கே…’ கூட்டத்தில் ஒருவன் கேட்டான்.

சாண்டியார். ரகுவேந்தனின்ன முதன்மை தளபதி. ரகுவேந்தன் உற்ற காவல்க்கொண்டையாகிய மெய்க்காவல் படையின் தலையாயன்.

‘உஷ்… அந்த காலடி சத்தம் மன்னரை காணவில்லை. அது நம்மை சுழற்றிக்கொண்டிருக்கிறது.. அமைதியாக இருங்கள்..’ அவன் சொல்லிவிட்டு இன்னும் காதுகளை கூர்மையாக்கினான்.

‘தட தட தட…’ மீண்டும் சத்தம்.

‘சாண்டியாரே… பொறுப்பதற்கில்லை. உத்தரவு கொடுங்கள்.. ஓடும் அத்தனை பேரையும் செதிலாக்கிவிடுகிறோம்…’ ஒருவன் முன்னால் வந்து நின்றான்.

சிறிது அமைதி.

‘இல்லை.. இது ஒற்றை கால் சத்தம். பலர் இல்லை.. முதலில் மேற்கிலிருந்து தெற்கு ஓடினான். இப்பொழுது தெற்கிலிருந்து தென்மேற்கு ஓடுகிறான்… இது…’ சொல்லிவிட்டு சிறிது அமைதியானான்.

‘இல்லை. மன்னர் அரண்மனை வந்திருப்பார். எதுவும் இல்லாமல் களைந்து செல்வோம்..’ சாண்டியான் சொன்னான்.

‘எப்படி…’

‘வாரும்…’ சொல்லிவிட்டு அந்த குறும்படை அங்கிருந்து கிளம்பியது. கானக தொடக்கத்தில் நின்ற நான்கு காவலாளிகள் மன்னரை அவ்விடம் காணவில்லை, வரவும் இல்லை என்றார்கள்.

எல்லோரும் ஒற்றை பார்வையாய் சாண்டியை நோக்கினர். சாண்டி மெல்லிய சிரிப்போடு முன்னால் நடந்தான். புரவி மேல் ஏறினான். புழுதியை கிளப்பிக்கொண்டு அத்தனை புரவிகளும் கிளம்பின.

ஆனால் அங்கே இரண்டு மட்டும் கிளம்பாமல் நின்றுக்கொண்டிருந்தன.

‘என்ன செங்கோடா..? எதற்காக என்னை நிற்க சொன்னாய்..’ சேழறிவான் கேட்டான்.

‘நம் வேலை என்ன? அந்த முட்டாள் தளபதி உளறுகிறான்… அவனை போய் நம் மன்னரும் நம்புகிறார். அடர்ந்த கானத்தின் நடுவே மன்னர் மாட்டியுள்ளார். நம் வேலையை பார்த்துக்கொண்டு போவது சரியா?’

‘மன்னர் அரண்மனைக்கு சென்றுவிட்டதாக சாண்டி சொல்கிறாரே..’

‘யார்.. மன்னர் வந்து அவரிடம் சொன்னாரா? நான் அரண்மனை வந்துவிடுகிறேன்.. நீ நம் படையை கூட்டிக்கொண்டு வந்துவிடு என்று…’ அவன் கோணிக்கையாய் செய்து காட்டினான்.

‘இப்பொழுது என்ன செய்யலாம் என்கிறாய்..?’ சேழறிவான் கேட்டான்.

‘மன்னரை கண்டுபிடிக்க வேண்டும். மற்றும் நம்மை துரத்தும் அந்த காலடி.. அதன் சொந்தக்காரனை பிடிக்க வேண்டும்..’

‘நல்லது.. செய்வோம்..’

‘மன்னருக்காக.. சதுர்வேதக சக்கரவர்த்திக்காக..’ இருவரும் ஒற்றை குரலில் உரக்க சத்தமிட்டனர். வெறிக்கொண்ட வேங்கையாய் அவர்கள் திரும்பி அந்த கானகத்தில் நுழைகையில் சட்டென ஒரு புரவி பாய்ந்து அவர்களை கீழே சாயவிட்டு பறந்தது. சுதாரித்து அவர்கள் எழுந்து பார்க்கும் முன் அந்த புரவி சென்றிருந்தது. நில ஒளியில் தெரிந்த அந்த உருவம் ஒரு பெண்… அவள் ஆடை அப்படிதான் சொன்னது.

--
அந்நேரம்.. சாண்டியும் அவனது இதர படை வீரர்களும் அரண்மனையை அடைந்திருந்தனர்

‘என்ன சாண்டி.. என்னை முன்னால் செல்ல சொல்லிவிட்டு இவ்வளவு தாமதமா..’ கேட்டுக்கொண்டே ரகுவேந்தன் முன்னால் வந்து கட்டியணைத்தான்.

சாண்டி காதில் அவன் காதில் மட்டும் விழுவது போல பேசினான்.

‘தாய் இருக்கிறார். காட்டி கொடுத்துடாதீர் ஐயா..’ அவன் சொல்லிவிட்டு விலகிக்கொண்டான்.

‘மன்னா.. அது.. இது..’

‘புரிகிறது புரிகிறது.. பிரச்சனை இல்லை. நீ வீடு செல்லப்பா..’ அவன் சொல்லிவிட்டு அவன் தாய் பக்கம் திரும்பி பல்லை இளித்தான்.

சாண்டி திரும்பினான்.

‘நில் சாண்டி..’ அவன் தாய் அழைத்தாள். சாண்டி நின்றான்.

‘என் திசை பார்..’ அவள் மீண்டும் சொன்னாள். அவன் திரும்பினான். அமைதியாக தலை குனிந்து நின்றான்.

‘நான் கேட்பின் உன் நா பொய் உரைக்குமா?’

‘இல்லை தாயே.. ஒரு நாளும்…’

‘அப்படியெனில் அந்த கானகத்தில் என்ன நடந்தது…? சொல்’

‘தாயே.. நானும் இன்ன படை வீரர்களும் மன்னரோடு கானகத்திற்கு சென்றோம்..’

‘எதற்கு?’

‘வெஞ்சுனை தடாகம் காண..’

‘இந்நேரத்திலா?’

‘இவ்விரவு பௌர்ணமி.. மன்னர் பௌர்ணமி இரவில் வெஞ்சுனை செல்லாமல் இருக்கமாட்டார்..’

‘ஆன்.. சரி.. மேலே சொல்லுங்கள்…’

‘கானக கூட்டுக்குள் இம்முறை வழமையான வழி வேண்டாம். மாற்று வழியில் செல்லலாம் என மன்னர் கூறினார். நான் தடுத்தேன். அது பாதுகாப்பில்லை என்று சொன்னேன்.. சதுராவின் மொத்தமும் எனக்கு அத்துப்படி என நான் அறியவில்லையா என மன்னர் கோபம் கொண்டார். மன்னர் கோபம்தனில் மறுப்பேச்சுக்கு என் நா எழா. சுற்று படை சூழ மன்னரோடு அந்த கானகத்தில் நுழைந்தோம். அடர்காடாகியிருந்தது. முன்னால் செல்பவரை புதர் ஒதுக்கலாகாது என தடுத்தார் மன்னர். அதனால், தீப்பந்தகளை அணைக்கவேண்டியதானது. ஒரு சருக்கல். ஒரு இமை கண்மூடல். மன்னரை காணவில்லை தாயே..’

‘பிறகு…’

‘சுற்றி திரும்பி பார்த்தோம். எங்கும் மன்னர் இல்லை.. அதனால்..’

‘அதனால்…’ கோபமாக கேட்டார் தாய்.

‘திரும்பி வந்துவிட்டோம். மன்னர் இங்கிருக்கிறார்…’ சாண்டி சொல்லி முடித்தான். இன்னும் தலை கவிழ்ந்தபடியே. உதட்டோரம் ஒரு சிரிப்பு சிரித்தார் தாய் அங்கமித்திரை.

‘பராக்கிரமன் சாண்டியான். பரலோகத்தின் சிவன் நின்றாலும் மன்னர் வழி முன்னர் நின்று தடுக்கும் நெஞ்சுரம் கொண்டவர்.. எச்சேனைக்கொண்டிலும் தான் ஒருவனாய் சேனையாய் முன் நிற்கும் முதன்மை தளபதியார் சாண்டியான் சொல்ல இதை நான் கேட்க வேண்டுமா… ரகுவேந்தன் திரும்பிவிட்டான் என்று ஊர்ஜிதம் இல்லாமல் நீ அங்கிருந்து கிளம்பியிருக்கமாட்டாய்.. உண்மையை சொல். ரகு கிளம்பிவிட்டான் என்று உனக்கு தெரியும் தானே..’ அங்கமித்திரை ஆரம்பத்தில் அமைதியாக இழுப்பாக பேசினாலும் பின்னால் மீண்டும் அந்த ஆக்ரோஷத்தை சேர்த்துக்கொண்டார்.

சிறிது நேர அமைதிக்கு பிறகு சாண்டி பேசினான்.

‘தெரியும் தாயே..’ சொல்லிவிட்டு அமைதியாக நின்றான்.

‘எப்படி..’ அங்கமித்திரை கேட்ட மாத்திரத்தில் தன் உடையில் தரித்த வாளை எடுத்து அவள் முன்னர் வைத்து விட்டு முன்னங்கால் மடித்து தரையில் தலை குனிந்து நின்றான் சாண்டி.

‘மன்னிக்கவேண்டும் தாயே.. மன்னரின் உடல் போல எந்நேரமும் ஒட்டி இருக்கிறேன். அவரின் அசைவுகளும், கண் இமையும் எனக்கு தெரியும். அவர் என்னிடம் ஒன்று சொல்லத்தேவையில்லை.. அவரின் வாசமும், கண்களும், வாயும், கால்களும், கைகளும் என அவரின் அத்தனை செயல்களும், உறுப்புகளும் என்னிடம் எப்பொழுதும் பேசிக்கொண்டு தான் இருக்கும். அந்த கவனிப்பு அவரின் சில செயல்பாடுகளை எனக்கு உணர்த்தியிருக்கிறது. அப்படி ஒரு உணர்தல் தான் இது… அந்த உணர்தலை உங்களுக்கு விளக்க எனக்கு உரிமை இல்லை தாயே.. மன்னியுங்கள்..’ அவன் சொல்லிவிட்டு அமைதியாக இன்னும் தலை சாய்ந்தே முன்னங்கால் மடக்கி நின்றான்.

‘சாண்டி.. என்ன இது? அம்மா வேண்டாம் அம்மா.. அவனை எழச்சொல்லுங்கள்..’ ரகுவேந்தன் பதறினான்.

அங்கமித்திரைக்கு அவன் சொன்னவை திகைப்பூட்டியது. அமைதியாக இருந்தார். ரகுவேந்தனின் பேச்சில் மீண்டும் சுயநினைவு கொண்டவராய்.

‘சாண்டி… எழுப்பா முதலில். இது அவசியமற்றது. விளையாட்டுப்பிள்ளையாய் இருக்கிறானே.. இந்த ராஜ்ஜியத்தை எப்படி ஆள்வானோ என்னும் பயம் தான் எனக்கு பீறிட்டு வருகிறது. கானகம் காண்கிறேன்.. சுனை காண்கிறேன் என்று தெரிகிறான். இன்னும் சோழத்தேசத்து தஞ்சையை காணவேண்டுமாம். பெருவுடையார் கோவிலின் பிரம்மாண்டத்தை எவனோ இவன் காதில் ஓதி வைத்துவிட்டான்..’ அவர் புலம்பினார். காவலாளி உள்ளே வந்தான்.

‘மன்னர் வணக்கம்.. சாண்டியார் படையிலிருந்து செங்கோடன் மற்றும் சேழறிவான் என்னும் இரண்டு கடைநிலை வீரர்கள் வந்திருக்கிறார்கள். முக்கியமான விசயம் சொல்லவேண்டுமாம்.

‘வரச்சொல்..’ அவன் சொன்னான்.

இரண்டு பேரும் முன்னால் வந்து வணங்கி நின்றனர். அதே இடத்தில் சாண்டியாரும் இருப்பதை பார்த்து சற்று தயங்கினர்.

சாண்டி அவர்களை பார்த்து சற்று விழித்து நின்றான். ரகுவேந்தன் சாண்டி பக்கம் சற்று கண் அசைவை காண்பித்தான்.

‘என்ன விசயம்.. சொல்லுங்கள்..’ ரகுவேந்தன் கேட்டான்.

‘மன்னருக்கு வணக்கம். கானகத்தில் இருந்து மன்னர் மறைந்தபின் தேடி கிடையாத சமயம். எங்களுக்கு சிலர் ஓடும் சத்தம் கேட்டது. தளபதி சாண்டியார் நீங்கள் அரண்மனை வந்திருப்பீர்கள் என சொல்லி எங்களை அழைத்துக்கொண்டு கிளம்பினார். ஆனால் மனம் கேளாமல் நாங்கள் மீண்டும் அந்த கானத்தில் எங்கள் தேடலை தொடங்கினோம்… அச்சமயம் திடீரென ஒரு புரவி எங்களை நிலைகுலைய செய்துவிட்டு பறந்து சென்றது. நாங்கள் எழுந்தோம்.. அதில் ஒரு பெண் இருந்தாள். நாங்கள் பின் தொடர்ந்தோம். ஆனால் பிடிபட முடியாமல் சென்றது. மன்னர் வருவது அவளுக்கு தெரிந்திருக்கிறது. மன்னரை தாக்க அங்கு திரிந்திருக்கிறாள். அவள் மீண்டும் வர வாய்ப்பு உள்ளது. அவள் தெற்கு பக்கமாக சென்றாள். மன்னர் உத்தரவு கொடுத்தால்.. கொஞ்சம் விசாரித்து பிடித்து வருவோம்’ சொல்லிவிட்டு மண்டியிட்டு நின்றனர்.

ரகுவேந்தன் கேவலமான ஒரு பார்வையை சாண்டியின் முன்னர் திருப்பினான். சாண்டி என்ன செய்வது என்று புரியாமல் விழித்தான். இருவரும் ஒன்றாக தாய் அங்கமித்திரையை கண்டனர். அவள் முறைத்துக்கொண்டு நின்றாள்.

‘அம்மா… நீங்கள் காத்திருங்கள். ஒரு நிமிடம்..’ சொல்லிவிட்டு ரகுவேந்தன் சாண்டி பக்கம் சென்றான். அவனோடு கைகோர்த்துக்கொண்டு சேழறிவான் பக்கம் சென்றான்.

‘எழுங்கள். மண்டியிட்டு முன்னால் தவறு செய்த சமயம் மீறி நீங்கள் நிற்க தேவையில்லை..’ ரகுவேந்தன் அதட்டலாக சொன்னான். இருவரும் சடீரென எழுந்து நின்றார்கள்.

‘என்ன கண்டீர்..?’ அதட்டலாக கேட்டான்.

‘புரவிமேல் ஒரு பெண்…’

‘சந்தேகத்திற்கு உரியவளா?’

‘ஆம்…’ இருவரும் ஒருசேர சொன்னார்கள்.

‘அடுத்து என்ன செய்யவேண்டும்…’ அவன் கேட்டான். அவர்கள் விழித்தார்கள். ரகுவேந்தன் சாண்டி பக்கம் திரும்பினான்.

‘என்ன செய்யவேண்டும் சாண்டியாரே..’ கொஞ்சம் கோபம் தொனித்த தோரணையில் தான் கேட்டான்.

‘இவர்கள் கடைநிலை வீரர்கள். கடைநிலை முதலோனிடம் சொல்லவேண்டும். அவர்கள் அலச வேண்டும். பிடிபடா நிலையில் முதன்மை வீர முதலோனிடம் சொல்லவேண்டும். அவர்களுக்கு விளங்கா சமயம். மூத்த முதலோனிடமும்.. அவனும் அச்சமாகி அறிந்தால் என்னிடமும். நான் நிலைக்கொள்ளா சமயம் உங்களிடமும் தெரிவிக்க வேண்டும்’

‘அது நடந்ததா?’ ரகுவேந்தன் கேட்டான். சாண்டி அமைதியாக நின்றான்.

‘என்ன சாண்டியாரே.. வாளை பிடித்து சுழற்றிவிட்டால் போதுமா? காற்றில் பறக்கவிடவா விதிமுறைகளும் வழக்கங்களும்..’ சொல்லிவிட்டு அந்த இருவரையும் பார்த்தான்.

‘மெய்க்காவல் படையில் முட்டாள்கள். பித்தாகிவிட்டது போலும் சாண்டியாருக்கு. யாரெங்கே.. இனி கோட்டை காவலில் இவர்கள். கோட்டை செவ்வீரனுக்கு என் செய்தி அனுப்புங்கள்.  குறிவிழியானிடம் நன்கு குறிப்பு எடுக்க சொல்லுங்கள். அல்ல நான் வந்து எழுதட்டுமா? அவரவர் பொறுப்பிற்கு ஒரு ஒத்து… பிழைப்பில்லாமல் இருக்கிறானா மன்னன்..?’ கோபம் கொப்பளித்து நின்றது ரகுவேந்தனுக்கு. அந்த இருவரும் இழுத்து செல்லப்பட்டார்கள்.  சாண்டி அமைதியாக நின்றான்.

‘மன்னரே.. நானும்..’ அவன் இழுத்தான்.

‘எங்கேயா நீரும். எங்கே நீரும். இனி தான் இருக்கிறது…’ சொல்லிவிட்டு ரகுவேந்தன் திரும்பினான். அவனின் கோபமான முகம் சட்டென பாவமாக மாறியது. அங்கே அங்கமித்திரை நின்றுக்கொண்டிருந்தார்.

‘யார் அந்த பெண்…?’ அவர் கேட்டார்.

‘பெண்ணா… குருடர்கள். தெரியாமல் உளறுகிறார்கள்..’ ரகுவேந்தன் நழுவினான்.

‘யார்…. அந்த… பெண்…’ இன்னும் அழுத்தமாக கேட்டார் அங்கமித்திரை.

‘சாண்டி… நான் பொய்யா சொல்கிறேன்.. அம்மா பார் ஐயா… படுத்துகிறார். காப்பாற்றேன்’ ரகுவேந்தன் கெஞ்சினான்.

ஒருமுறை மிடுக்காகவும் மறுமுறை குழந்தையாகவும் ரகுவேந்தன் மாறி மாறி செயல்படுவதை அவர்கள் இருவரும் நன்கு கவனித்துக்கொண்டார்கள். விளையாட்டு புத்தியாய் நினைத்து சளித்துக்கொண்டாள் அங்கமித்திரை.

‘இவ்வளவு தூரம் வந்துவிட்டது சாண்டி.. இனியும் மறைத்து என்ன ஆக போகிறது. சொல்.. ரகுவேந்தன் மனதில் இருக்கும் அவள் யார்? புரவி பிடித்து அடித்து தூள் கிளப்பும் அந்த வேங்கை யார்..?’ அங்கமித்திரை கேட்டார்.

‘உனக்கு தெரியாமல் இருக்காது சாண்டியாரே.. அவள் யார்…’ இன்னும் அழுத்தமாக கேட்டார்.

சாண்டி அமைதியாக நின்றான்.

‘சொல் சாண்டி..’ அவர் இன்னும் அழுத்தமாக கேட்டார். ரகுவேந்தன் இடை மறித்தான்.

‘அம்மா.. நானே சொல்கிறேன்..’ சொல்லிவிட்டு முன்னால் நடந்தான். அவர்கள் இருவருமே அவன் என்ன சொல்ல வருகிறான் என கேட்க ஆவலாக இருந்தார்கள்.

‘விண்ணில் இருக்கும் நட்சத்திரங்கள் ஒன்றுக்கூடி அந்த பௌர்ணமி நிலவை கையோடு தாங்கி பதினாறு வருடம் முன்னர் இந்த பூமியில் இறக்கிவிட்டு சென்றுவிட்டன. அந்த நிலவு பெண்ணாக பிறந்து வளர்ந்து.. பாரில் இல்லை இதுபோல் அழகு என ஊர்மெச்சிக்கொள்ளவும். தோழிகள் பொறாமைக்கொள்ளவும்… அரசின் இளங்குமாரர்கள் அவள் நுனிக்கண்ணின் ஓரவிழி ஒருமுறையேனும் தீண்டிடாதா என தவம்கிடக்கும் பெண் அவள். இயற்கை மடியணைத்த சதுர்வேதகத்தின் காலாதீக நட்புமை பாராட்டும், நிலவுடைக்கொள்ளும் சோலையூர் சாம்ராஜ்யத்து இளவரசியவள்..’ அதுவரை அவர்களை காணாது கைகளை அசைத்து அவன் சொன்ன தோரணையை இருவரும் வாய் விரிந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். மெல்லிய புன்னகையோடு, கண்ணில் காதலோடு அவன் அவர்களை பார்த்தான்.

‘என் மனம் கொண்டவள் அவள். இந்திரமதியழகி..’

(காத்திருப்போம்...)

- தம்பி கூர்மதியன்


Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..