GST – நான் அறிந்தவை!

GST பற்றிய சரியான புரிதல் இன்னும் நமக்கு வரவில்லை. GSTல் சாதகமும் இருக்கிறது பாதகமும் இருக்கிறது. முன்னால் இருந்த வாட் மற்றும் சேவை வரியை தூக்கிவிட்டு இந்த GST இடம் பிடிக்கிறது.நேற்று நான் படித்தது ஒரு உதாரணம். டிராக்டரின் வரி விலை குறைந்திருக்கிறது. இதன் மூலம் டிராக்டரின் விலை குறையும் என நாம் எதிர்பார்க்கலாம். ஆனால்.. அப்படியில்லை. டிராக்டர் செய்ய தேவையான உபரி பாகங்களின் விலை ஏறிவிட்டது. அதனால் விலை ஏறும் தான். இப்படி மறைமுகமான சில பாதிப்புகள் இருக்கிறது.

GSTக்கான வரையறை தொடக்கம் இன்று நேற்று தொடங்கியது அல்ல. 2000ம் ஆண்டு வாஜ்பாய் காலத்தில் இருந்தே இதற்கான வேலைகள் நடந்துக்கொண்டு தான் இருந்தன. முதலில் அரசியல் கட்சியின் அடிநாதத்தை புரிந்துக்கொள்ளவேண்டும். இருக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும்(விஜயகாந்த் போன்ற சிலர் கொள்கை இல்லாமல் கட்சி நடத்துவார்கள்). RSSன் அரசியல் அமைப்பு தான் பாஜக. RSSன் கொள்கை என்ன? ’ஒரே தேசம்.. ஒரே மொழி.. ஒரே கலாச்சாரம்’. இதை தவிர்த்து அதன் நெடுங்கால கனவாக சமஸ் ஒரு முறை எழுதியிருந்தது. ’ஒரே கொடி.. ஒரே தலைவர்.. ஒரே சித்தாந்தம்..’. இப்படியான கொள்கைகளை கொண்ட ஒரு கட்சியை நாம் ஆதரித்தது நமது குற்றம்..! ஏனென்றால் தனிமனித பிம்பத்தை மட்டுமே வைத்து ஓட்டு போடும் தன்மை கொண்டவர்கள் நாம். மாநில ஆட்சி உரிமைகள் வேண்டாம், ஒரு மொழி சரிதான், ஒரே நாடாக இருப்பது பலம் தான் என நீங்கள் நினைத்தால் இன்று GSTயை எதிர்க்கவோ, பாஜகவின் நிலை, மோடியின் நிலையை எதிர்க்கவோ அவசியம் இல்லை. ஒரு நிமிடம் யோசித்து பார்த்தால் அவர்கள் அவர்கள் கொள்கை படி சரியாக காய் நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.

சரி விடுவோம். இப்பொழுது GST பக்கம் வருவோம். GSTன் முக்கியமான பலம் என்ன Input Tax Credit. அப்படியென்றால் என்ன?

ஒரு எடுத்துக்காட்டு வைத்துக்கொள்வோம். அதாகப்பட்டது நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். முன்னால் எப்படி இருந்தது. கம்ப்யூட்டரின் உபரி பாகங்களை உற்பத்தியாளர் வாங்குகிறார். அதை உற்பத்தி செய்து விற்கபோகிறார். அதன் விலை பத்தாயிரம் என வைத்துக்கொள்வோம். அதற்கு பத்து சதவீத வரி இருக்கிறது. எனவே அவர் பதினோராயிரம் என வைத்து வெளியில் விற்பார். அங்கு கடைக்காரன் ஒருவர் வருகிறார். பதினோராயிரம் கொடுத்து கம்ப்யூட்டர் வாங்கி உங்களுக்கு விற்கையில் நாலாயிரம் லாபம் வைத்து. பதினைந்தாயிரம் என விற்கிறார். நிற்க. இங்கு பதினைந்தாயிரத்தில் பத்து சதவீத வரி இருக்கிறது. எனவே.. அவன் 15000 + 1500 = 16500 என விற்பான். பத்தாயிரம் மதிப்பான ஒன்றை நீங்கள் பதினாறாயிரத்தி ஐநூறு கொடுத்து வாங்குவீர்கள்.

இப்பொழுது GST வந்தவுடன். முதலில் 11000 கொடுத்து கடைகாரன் வாங்குகிறான் அல்லவா? அதில் அவன் 1000 ரூபாய் மறைமுகமாக வரி செலுத்தியிருக்கிறான். அவன் உங்களிடம் விற்கும் பொழுது நாலாயிரம் லாபம் வைத்து 15000 என கூட்டி அதற்கு பத்து சதவீதம் 1500 ஆக.. 16500 என கணக்கிடதேவையில்லை. இந்த முறை 1500 வருகிறது அல்லவா? அந்த 1500ல் அவன் முன்னமே கட்டிய 1000த்தை கழித்துக்கொள்ளலாம். மீதி 500 மட்டும் போட்டு 15500 என விலை நிர்ணயம் செய்யலாம். கம்ப்யூட்டர் வாங்கும் உங்களுக்கு 1000 ரூபாய் கம்மியாக கிடைக்கிறது தானே! இது இரண்டு லெவல் தாண்டி வந்திருக்கிறது. நினைத்து பாருங்கள். இப்படி 5 அல்லது 6 பேர் தாண்டி வரும்பொழுது உங்களுக்கு எந்த அளவுக்கு பணம் குறையும் என்று.

இதுதான் GSTன் ஆக சிறந்த பலமாக சொல்லப்படுவது. உண்மையில் இது பலம் தான்.

நிற்க.. இப்பொழுது வேறு மாதிரி இந்த விசயத்தை பார்க்கலாம். ஒரு பொருள் கை மாறி செல்ல செல்ல எகிறிக்கொண்டிருந்த விலை கட்டுக்குள் வரலாம். ஆனால் அதன் உற்பத்தி விலை என்பது இங்கு உயரும் அபாயம் இருக்கிறது. வரி ஒன்றாக இருந்தால் இமயம் முதல் குமரி வரை ஒரே விலை என்னும் மாயை இருக்கிறது. அது தவறு. இமயத்தில் இருக்கும் பொருள் குமரியை வந்து அடைய இருக்கும் பயண செலவிற்கான காசு வரியாக இல்லாமல் பொருளின் விலையாக இருக்கும். எனவே மாறுதல்கள் இருக்கத்தான் செய்யும்.

இதனால் மாநிலங்களின் பாதிப்புகள் என்ன? GST வரியை இன்று பார்த்தவர்கள் இரண்டு விசயங்களை கவனித்து இருக்கலாம். ஒன்று CGST மற்றொன்று SGST. சென்ட்ரல் மற்றும் ஸ்டேட் GST என்று பொருள். இது ஒரு மாநிலத்திற்குள்ளேயே வணிகம் நடக்கும்பொழுது அதில் வரும் வரியை மாநிலமும், மத்தியும் பிரித்துக்கொள்கிறது. இதுவே வேறு மாநிலமாக இருந்தால் என்ன வரி? IGST. Integrated GST. மாநிலங்களுக்கு மத்தியில் இருக்கும் விற்பனைகளுக்கு இருக்கும் வரி இது. இதன் மொத்த வரியும் மத்திக்கே போகும். இதன் மூலம் மாநிலங்களுக்கு கிடைத்துக்கொண்டிருந்த வரிகள் கிடைக்காமல் போகும். இழப்புகள் வரும். அதை சமாளிக்க மத்தியை நாடவேண்டி வரும். ஒரே தேசம் என்னும் பா...,வின் எண்ணம் தான் இது. பரபரக்க வேண்டாம். முதல் ஐந்து வருடங்களில் இதனால் மாநிலங்களுக்கு வரும் நஷ்டங்களை மத்தியே பார்த்துக்கொள்ளும் என சொல்லப்பட்டிருக்கிறது.

இதைப்பற்றிய சரியான புரிதல் நமக்கு இல்லாத காரணத்தால் இதை காரணம்காட்டி வரியற்ற அடிப்படை விலையை சூட்சமமாக விற்பனையாளர்கள் ஏத்திக்காட்டலாம். சில இடங்களில் இது சரியாகவும், சில இடங்களில் இது பொய்யாக திணிக்கப்பட்டதாகவும் கூட இருக்கும். பொய்யாக திணிக்கப்படாமல் இருக்க Anti Profiterring mechanism என்ற ஒன்று திட்ட வரையறையில் இருக்கிறது. அதன்படி பார்த்தால் இந்த பலனை எண்ட் யூசர் அதாவது உபயோகபடுத்தும் நமக்கு கண்டிப்பாக விற்பனையாளர்கள் தரவேண்டும் என்று இது சொல்கிறது. அது நடக்குமா நடக்காதா என்று தெரியாது. ஏனென்றால் எழுதப்பட்ட விதிகள் அனைத்தும் இங்கு கடைபிடிக்கபடுகிறதா என்ன? இன்னும் சில நாட்களில் இது நமக்கு பழகிவிடும். பெரிய மாற்றங்கள் எதையும் இப்பொழுது வரை கவனித்ததில் கணக்கு வைக்கமுடியவில்லை. சிலதில் சிலவகை ஏற்றமும், சிலதில் சிலவகை குறைவும் இருக்கும். காலபோக்கில் பழகிவிடும்.

மீண்டும் இந்த வரி விகிதம் திருத்தப்படும் ஒருநாள். குடுமி மத்தியின் கையிலே இருக்கும். மெரினாவில் நின்று போர்க்கொடி பிடித்து எதையும் மாற்ற முடியாது. தில்லியில் அம்மண போராட்டம் நடத்தினாலும் ஊர் ஊராக சுற்றும் மத்தியம் நம்மை கண்டுக்கொள்ள போவதில்லை. தனிமனிதருக்கு இருக்கும் உரிமைகள் போல மாநிலங்களுக்கும் சில உரிமை இருக்கிறது.. அதில் ஒவ்வொன்றாக கைவைத்து வரும் மத்தியின் செயல் கண்டனத்துக்குரியது தான். இருப்பினும் மாநிலம் இதன் மூலம் இழக்கும் வருவாயை வேறு ஏதேனும் புது வரியை திணித்தாலும் திணிக்கலாம். யார் அறிந்தது. இன்றே GST 28 சதவீதம் அல்லாமல் மாநிலத்தின் கேளிக்கை வரியாக 30 சதவீதம் சேர்ந்து 58 சதவீதம் சினிமா டிக்கெட்டுகள் விலை இருக்கிறதாம். இன்னும் பொழுதுபோக்கும் அத்தனை இடங்களுக்கும் இது பொருந்தும். இது போல ஒவ்வொன்றாய் இனி கிளம்பினால் ஆச்சர்யம் இல்லை.

இன்னும் காலம் செல்ல செல்ல தான் இது புரியும். அதுவரை.. வழக்கம்போல காத்திருப்போம். கடைசியாக சொல்லிக்கொள்ளபோவது ஒன்றே ஒன்று தான். சிறு வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் என பாதிப்புகள் இருக்கும். அதன் பாதிப்பு மறைமுகமாக நம்மை தாக்கும்.

அத்தியாவசியத்திற்கான வரி இந்த அளவுக்கு இருக்கிறதே என்று கொதிக்க தோன்றினால்… கொதிக்க வேண்டியது தான். முதல் முதலில் கார் வாங்குபவன் என்ன சொகுசு ரக காரா வாங்க போகிறான். பேசிக் கார்களுக்கு வரி அதிகம் தான் இருக்கிறது. கொதிக்கவேண்டிய சமாச்சாரம் தான். ’ஒரே நாடு.. ஒரே வரி..’ என மொட்டை அடிக்கிறான்னு கோபம் வருதா. நாம் தோழர்களே!


-தம்பி கூர்மதியன்

Comments

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி