நீரற்ற நொடியானது அப்பா

வீட்டு கதவை திறந்தேன்.
கூண்டு குருவிகளின் கீச்சுகளாய்
பலசொந்த குரல் என் காதுகளில் பாய்ந்தது.
வீடு நிரம்பிகிடந்தது கூட்டமாய்.
கால் விரலில் ஏதோ ஈரம் படர்ந்தது
அது உள்ளே இரண்டாம் அறையின்
நான்காம் இருக்கைக்கு பக்கத்தில்
சுவற்றில் முட்டுக்கொடுத்திருந்த
அம்மாவின் கண்ணீரின் மீதம்!
வீட்டு கூட்டமெல்லாம் என் கன்னம் தடவியது
கட்டி பிடித்துக்கொண்டது
தோளில் சாய்ந்துக்கொண்டது.
பேயுறங்கும் இரவில் முகமெல்லாம் வலியாக முழுசொந்தங்கள்
ஆனால்,
அப்பா மட்டும் சிரித்துக்கொண்டிருந்தார்.
நடுவீட்டில் படுத்திருந்தார்
அப்படி படுப்பவர் இல்லையே அவர்
தலைசுற்றி வெள்ளை துணியின் இறுக்கமும்
மூக்கின் துளையில் ஏதோ பஞ்சுமாய்
ஊர் அலறல் இடையே நிம்மதியாய் படுத்திருந்தார்.
ஒற்றை புன்னகையோடு!

உஷ்சொந்தங்களே!
அப்பா தூங்குகிறார்
கொஞ்சம் வெளியில் போய் ஓலமிடுங்கள்.
என் மனமே! நீயும் தான்
வெளியில் ஓடிப்போ
அப்பா தூங்குகிறார்.
ஓலமிட எத்தனிக்காதே!’
சொல்லிவிட்டேன்.
அவர் செய்த புண்ணியங்கள்
அவர் மேலே பூவும் மாலையுமாய் படர்ந்திருந்தன
கொஞ்சம் ஒதுக்கிவிட்டு பக்கத்தில் சாய்ந்துக்கொண்டேன்.
அப்பா இன்னும் சிரித்துக்கொண்டுதான் இருந்தார்.

ஏனோ எனக்கு தான் வரவில்லை..

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி