சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

சிட்லபாக்கம் பகுதி மக்களின் அடிப்படை ஆதாரமான ஏரியை காக்க போராட்டம் வெகு நாட்களாக நடந்துக்கொண்டிருக்கிறது. இது சம்பந்தமாக சிட்லபாக்கம் குடியிருப்பு சங்கங்களும், சிட்லபாக்கம் ரைசிங்(Chitlapakkam Rising) குழுவினரும் பல்வேறு போராட்ட முறைகளை கையாண்டு வந்தும் இன்னும் ஒரு தெளிவான தீர்வு கிடைத்த பாடில்லை. அப்படி என்ன அந்த ஏரியில் பிரச்சனை?

1.     ஏரியின் ஒரு பகுதியில் பெரிய குப்பை கிடங்கு இருக்கிறது. இதில் டன் கணக்கில் குப்பைகள் தினமும் கொட்டப்பட்டு வருகிறது. இதில் ஏரி மாசு படுதல் மட்டுமின்றி அதன் சுவரை பகிர்ந்திருக்கும் பள்ளிக்கூடத்தின் குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகி நிற்கிறது.
2.     கழிவு நீர் கலத்தல். ஒரு காலத்தில்  ஏரி வற்றி போய், வரண்டு இருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் இன்றோ ஏரி வற்றாமல் இருக்கிறது. காரணம் செழிப்பு அல்ல, கழிவு. வீடு மற்றும் தொழிற் இடங்களின் கழிவுகள் மழைநீர் வடிகாலில் விடப்பட்டு அது நேராக சுத்தம் செய்யப்படாமல் ஏரியில் கலந்து மாசு படுகிறது.

3.     ஆக்கிரமிப்பு. ஒரு காலத்தில்  எண்பது ஏக்கரை மிஞ்சும் அளவில் இருந்த இந்த ஏரி இப்பொழுது சுருங்கி சுருங்கி நாப்பது ஏக்கருக்கு வந்து நிற்கிறது. இன்றும் ஏரிக்கரை ஓரமாக புதிது புதிதாய் முளைத்து வருகிறது ஆக்கிரமிப்புகள்.

எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இந்த பாதிப்புகளை களைய சிட்லபாக்கம் மக்கள் பல நாட்களாக போராடி வருகிறார்கள். அதன்படி பஞ்சாயத்து அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர், கலெக்டர், CM Cell என தொடர்ந்து அவர்கள் கோரிக்கையும் புகாரையும் தெரிவித்து வந்தும் பலன் இல்லாமல் போனது. அதிகபட்சமாக அங்கு முன்னேற்றம் என காட்டப்பட்டது 15 லட்சம் செலவில்(?) 10*10 அளவில் நான்கு குழிகள் ஏரியின் மழைநீர் உள்ளேறும் வடிகாலில் வெட்டப்பட்டது. அதை இயற்கை முறையில் சுத்திகரிக்கும் முறை என்று பெயரும் சொல்லப்பட்டது. ஆனால் 60000 மக்கள் இருக்கும் சிட்லபாக்கம் பகுதி மக்களின் கழிவுகளை 10*10 அடி குழியில் சுத்தம் செய்ய முடியும் என்னும் அலப்பெரிய திட்டம் செல்லூர் ராஜூ அவர்களின் திட்ட அறிக்கையில் ஒன்றா என்பது எனக்கு தெரியவில்லை. இதை 15 லட்சம் செலவில் வேறு மேற்கொள்கிறார்கள் என நினைக்கும்பொழுது இனி வரிக்கட்டும் பொழுதெல்லாம் ரத்த கண்ணீர்  தான் வரப்போகிறது.

Chitlapakkam Rising குழு சார்பாக இருக்கும் தன்னார்வலர்கள் தொடர்ந்து இதனை முதற்கட்ட பிரச்சனையாக எடுத்து அரசாங்கம் செய்யவேண்டிய நீர் பரிசோதனையையும் அவர்களே முன்னெடுத்திருக்கிறார்கள். அடுத்த கட்டமாக சமீபத்திய களப்போராட்டத்தில் புருவம் உயர வைத்த அறப்போருடன் கைகோர்த்து அவர்கள் முன் எடுத்த அடுத்த நிகழ்வு இன்று நடந்தது. சென்னை மாநகரை சுற்றி இருக்கும் முக்கிய ஏரிகளின் முன்னமே கள ஆய்வு மேற்க்கொண்டிருந்த அறப்போரின் உதவியோடு இன்று சிட்லபாக்கம் ஏரியை கள ஆய்வு மேற்க்கொண்டனர். அறப்போரின் சார்பாக சில தன்னார்வாலர்களும், இதை வழிநடத்த அறப்போரை சேர்ந்த திரு.ஹாரீஸ் சுல்தால் அவர்களும் இந்த ஆய்வில் கலந்துக்கொண்டார்கள்.சிட்லபாக்கத்திலிருந்து – சானடோரியம் செல்லும் ‘சிட்லபாக்கம் இரண்டாவது மெயின் ரோடு’ தான் முதல் களம். காலை ஏழு மணி முதலே தன்னார்வாலர்கள் கூட முதல் கட்டமாக அரசாங்க பள்ளி கூடத்தின் அருகின் மலை போல குவிந்துகிடக்கும் குப்பை கிடங்கிற்கு சென்றோம். மலை போன்ற குப்பை கிடங்கில் ஒவ்வொருவரும் ஏறி நின்ற போது பறந்து விரிந்து கிடந்து ஏரி முழுதாய் தெரிந்தது. சரியான முறையில் பராமரித்தால் காலா காலத்திற்கும் நிலத்தடி நீருக்கு பெரும் ஆதாரமாய் இருக்க வேண்டிய ஏரி. ஆனால் வெறும் சாக்கடையின் இடமாய் காட்சி அளிக்கிறது.

குப்பை கிடங்கின் சுவரும் பக்கத்தில் இருந்த அரசுப்பள்ளியின் சுவரும் ஒன்று என்று நினைக்கும்பொழுது கொடுமையின் உச்சம் அது. அந்த பள்ளியின் ஜன்னல் கூட திறக்க முடியாத அவளம். அதுவும் அந்த கட்டப்பட்ட சுவர், அடியில் கூட ஒரு நிலையான அழுத்தம் இல்லாமல் உயர்த்தப்பட்டு மழைநீர் வடிகாலுக்கு வழிவிட்டு நிற்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் சாய்ந்துவிடுவேன் என சொல்லாமல் சொல்லிக்கொண்டு நிற்கிறது அந்த சுவர்.தன்னார்வலர்களின் இருந்த டேவிட் மற்றும் சிவா ஆகிய இருவரும் பெருவாரியான தகவல்களை முன்னே சொல்லிக்கொண்டே வந்தனர்.
’பச்சமலையில இருந்து வர்ற மழைநீர் கால்வாய் ரெண்டு பக்கமா பிரியும். அது ஒண்ணு சானடோரியம் கடந்து ஜட்ஜ் காலனி வழியா, இந்த குப்பை மேட்டுக்கு முன்னால வந்து குப்பை மேட்ட கடந்து.. தோ இந்த வழியா ஏரிக்குள்ள போகுது..’ அவர்கள் சொன்னார்கள். அவர்கள் காட்டிய திசையில் பார்த்தோம். பள்ளிக்கூடத்தின் பின் சுவரின் பக்கமாக ஒரு வாய்க்கால் போகிறது. அது நேராக நிரம்பி வழியும் ஒரு 10*10 குழியில் இறங்கி, இன்னும் நான்கு குழிகளில் இறங்கி நேராக சாக்கடையாகவே ஏரியில் கலக்கிறது. அந்த குழிகள் தான் இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்ய 15 லட்சம் ரூபாயில் கொண்டு வரப்பட்ட திட்டம். அதில் ஒரு குழியில் மட்டும் சிமெண்ட் கற்கள் வைத்து சுற்றி கட்டப்பட்டு கிடந்தது. அதுவும் வலு இல்லாமல் இடிந்து கிடந்தது. இன்னும் சில கற்கள் அங்கே இதே போல் தரமில்லாமல் கட்டுவதற்கு தயாராக நிற்கவைக்கப்பட்டிருந்தது. பெயருக்காக இப்படி வேலை செய்து அதற்கு 15 லட்சம் கணக்கு காட்டுவதை கண்டு பொங்க கூட அரசாங்கத்தில் ஆள் இல்லையா என்ன? இதில் இந்த நான்கு குழியை வெட்ட நேராக வழிவகை இல்லாததால் பள்ளியின் சுவரை இடித்து குழியை வெட்டி தள்ளிவிட்டார்கள். குழிகளை சுற்றி பாதுகாப்பு இல்லை, பள்ளியில் இருந்து சுவரை இடித்தாகிவிட்டது. ஏதோ குழந்தை ஓடி வந்து அந்த குழியில் விழும் அபாயம் இருக்கிறது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் யாருக்கு கவலை? இதை முன்னெடுக்கும் அதிகாரிகளின் பிள்ளைகள் பெரிய கான்வென்டுகளில் படிக்க கூடும்.பெயருக்காக மட்டும் எழுப்பட்டிருக்கும் அந்த இயற்கை சுத்திகரிப்பு திட்டம் ஒரு கண் துடைப்பு அவ்வளவு தான். அதன் மூலம் எந்த மாற்றமும் நிகழ போவதாக தெரியவில்லை. அங்கிருந்து வெளியில் வந்தோம். ஹாரீஸ் இந்த அறப்போரை பற்றியும், அவர்கள் செய்யும் செய்கைகளை பற்றியும் விளக்கினார்.’ஒரு ஏரி ஆக்கிரமிக்கப்போறாங்கனா முதல்ல அதோ இன்லெட், அதாவது தண்ணி உள்ள வர்ற பகுதிய அடைப்பாங்க. காலபோக்குல அதுல தண்ணீ சேரலனு சொல்லி ஒரு கட்டத்துல அத ஆக்கிரமிக்க ஆரம்பிப்பாங்க. ஏரில கழிவு நீர் கலக்குறதுங்குறது ஒரு பொதுவான பிரச்சனை. ஆனா சில ஏரிகள்ல மட்டும் இந்த மாதிரி குப்பை கிடங்கு போல தனித்து பிரச்சனை இருக்கும். உங்களுக்கு அந்த பிரச்சனை இருக்கு. இங்க இருக்குற மொத்த பேரும் தேவைனு நான் சொல்லல.. ஆனா ஒரு மூணு சதவீத மக்களாச்சும் வந்து வெளிய குரல் கொடுக்கணும். சுதந்திர போராட்டத்துல கலந்துகிட்டதே இந்திய ஜனத்தொகையில மூணு சதவீத பேர் தான்.  மக்கள் கலந்துகிட்டா வெற்றி கிடைக்கும்னு ஒரு எடுத்துக்காட்டு இப்போ சமீபமா நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம். அதனால மக்கள வர சொல்லுங்க. ஒரு மனித சங்கிலி போராட்டம் போல பர்மீஷன் வாங்கியே நடத்துங்க. அப்போ தான் அதுக்கான ஒரு விடிவு கிடைக்கும்’ அவர் சொன்னார். அது நூற்றுக்கு நூறு உண்மை தான்.


இது மட்டுமல்லாமல் அவர் சொன்ன மற்றொன்று முக்கியமானது, ‘ஒன்றை நீக்க மட்டுமே சொல்லிகிட்டு இருந்தா வேலை ஆகாது. அதுக்கான மாற்று என்ன இருக்குனு நாம எடுத்து சொல்லணும். அத முன்ன வச்சு நாம போராடணும்’அதனை பார்த்துவிட்டு அடுத்த கட்டமாக ‘சிட்லபாக்கம் மூன்றாவது மெயின் ரோடு’க்கு சென்றோம். அங்கு  நேராக நாங்கள் சென்று நின்றது ஆக்கிரமிப்புகளில் கட்டப்பட்ட  சாய்பாபா கோவிலில் தான். சில ஆண்டுகள் முன்பு வரை இங்கு சாய்பாபா கோவில் கிடையாது. தீடீர் திடீரென முளைக்கும் ஆக்கிரமிப்புகளில் இதுவும் ஒன்று. அதன் பின்னால் இருக்கும் ஏரி கரையில் ஏறினோம். முதலில் அங்கு இருக்கும் நாகவல்லி அம்மன் ஆலயத்தின் பின்புறம். சில நாட்களுக்கு முன்னால் விரிவடைய இருந்த கோவிலின் ஆக்கிரமிப்புகளை Chitlapakkam Rising குழவினர் போராடி தடுத்தனர். அதற்காக பாதி இடிக்கப்பட்ட சுவரின் எச்சத்தை பார்த்துக்கொண்டு அடுத்து அதே வரிசையில் இருக்கும் ஐயப்பன் கோவிலை பார்த்தோம். துப்புரவு தொழிலாளிகளின் குடிசைகள் ஏரிக்கரை நடைப்பாதையை ஆக்கிரமித்து இருந்தது. அந்த ஐயப்பன் கோவிலும் ஆக்கிரமிப்பு இடம் இல்லாமல் இல்லை. அதுவும் தான். அந்த கோவிலின் பின்புறம் ஏரியின் மதகு செடிகள் வளர்ந்து, அடர்ந்து இருந்த இடம் தெரியாமல் மறைந்து கிடந்தது.

அதற்கு பிறகு, அந்த ஏரிக்கரை ஓரமாகவே சென்று ராமகிருஷ்ணாபுரத்தில் இறங்கினோம். அங்கிருந்து ஒரு பத்து வீடுகள் தள்ளி சென்று ஒரு சிறிய வாய்க்கால கடக்கும் பாலம் இருந்தது. சிவா, ‘இதுதான் மழைக்காலத்தில் தண்ணீ அதிகமா ஆகுறப்போ தண்ணீர் வெளியேறுற கால்வாய்’ அவர் சொன்னார்.அதுவும் மாற்றமில்லாமல் சாக்கடை நீராக தான் இருந்தது. பெரிதாக இருக்கவேண்டியது சுருங்கி இரண்டடியும், அதற்கு குறைவுமாய் காட்சியளித்தது. அந்த வெளியேறும் இடத்தின் ஆரம்பத்தை காண அந்த கால்வாயோடே நடந்து சென்றோம். ஆகாய தாமரை செடிகள் முளைத்து இன்னொரு சாக்கடையாக தான் காட்சியளித்தது. ஆச்சர்யம் என்னவென்றால் அதற்கு பக்கத்திலே ஒரு வீடும் இருந்தது. அந்த வீட்டில் இருந்தவரிடம் அந்த வீட்டுக்கான பட்டா இருக்கிறதா என்று விசாரித்த போது இருப்பதாக சொன்னார். அவர்கள் வாசலே அந்த கால்வாயில் தான் இருக்கிறது. அவர்கள் வீட்டு போர் தண்ணீரை பார்த்தால் மஞ்சள் நிறத்தில் இருந்தது. அதுதான் அவர்கள் சமைப்பதற்கு உபயோகபடுத்துகிறார்கள் என்று சொல்லும்பொழுது இந்த அரசாங்கத்தின் அலட்சியத்திற்கு நாம் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கிக்கொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது.

அங்கிருந்து அடுத்து நகர்ந்து அந்த கால்வாயோடே சென்ற போது, ஒரு இடத்தில் அது இருந்த இடம் தெரியாமல் மறைந்து கிடந்தது. அந்த காலத்தில் இருக்கும் சரியான திட்டமிடல் இன்றும் சரியாக இருந்தால் இந்த கால்வாய் நேராக செம்பாக்கம் ஏரியில் சென்று கலக்கும். பச்சமலையில் இருந்து மற்றும் இதர மழை நீர் வடிகால் எல்லாம் சேர்ந்து சிட்லபாக்கம் ஏரியில் கலக்கும். அங்கு கொள்ளளவு எட்டிய பிறகு அது ராமகிருஷ்ணாபுரத்தில் இருக்கும் வெளியேறும் கால்வாய் வழியாக செம்பாக்கத்தை நோக்கி ஓடியிருக்க வேண்டும். ஆனால் ஆக்கிரமிப்புகள் மொத்தமாய் அடைத்து அதை கேள்விக்குறியாக்கிவிட்டது.

சரி. ஒரு இடத்தில் மறைந்து போயிருந்ததே அந்த கால்வாய் என்ன ஆனது. சுற்றி சென்று பார்த்தோம். மீண்டும் ஒரு இடத்தில் இருந்து அந்த கால்வாய் தொடங்கியது. ஆனால் நடுவில் மட்டும் அதை காணவில்லை. அதை பற்றி பேசும்போதே ஒரு பெரியவர் வந்தார். நடுவில் இருந்த கால்வாய் எங்கே என்று கேட்டபோது அவர் காட்டிய இடத்தில் ஒரு மண்டபம் இருந்தது. அந்த மண்டபத்தின் அடியில் தான் அந்த கால்வாய் இருக்கிறது என்று அவர் சொன்னது எங்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. 2015 மழையின் போது முழுதாய் முழுகிபோயிருந்த ராமகிருஷ்ணாபுரத்தின் நிலைக்கு இதுவும் ஒரு புள்ளி காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை. அந்த மண்டபத்தின் உள்ளேயே ஒரு பிள்ளையார் கோவிலும் இருந்தது. 

அந்த பெரியவர் மேலும் சொல்லும்பொழுது, ‘இந்த கால்வாய் போகுற இடத்துல இருக்குற ஆக்கிரமிப்பு எல்லாத்தையும் எடுத்துட்டு வாங்க. அதுக்கு அப்பரம் நாங்க இத இடிக்கிறோம்..’ என்றார். நாங்கள் சில பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு கிளம்பினோம். அங்கிருந்து மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்ட சாய்பாபா கோவிலுக்கு சென்றோம். இங்கு தான் நாம் பார்க்கவேண்டிய ஒன்று. அந்த ஆக்கிரமிக்கப்பட மண்டபமும் சரி, இந்த சாய்பாபா கோவிலும் சரி ஒரே டிரெஸ்டின் கீழ் வந்திருக்கிறது. ஆன்மீகம் என்றும் கடவுள் என்ற பெயரிலும் இப்படி ஆக்கிரமிப்புகளை செய்து பணம் சம்பாதிக்கும் எண்ணம் சரியா? அடுத்த தலைமுறையை பற்றி கவலை இல்லாமல் இருக்கும் அரசாங்க சம்பந்தமான இடங்களை எல்லாம் கோவில் என்றெழுப்பி ஆன்மீகத்தை பணம் சம்பாதிக்கும் இடமாக மாற்றுவது சரிதானா? கண்டுக்கொள்ளாமல் இருக்கும் அரசாங்கமும் பொறுப்பில்லா பொதுமக்களும் தான்  இதற்கு பதில் சொல்லவேண்டும்.அதன் பிறகு ஏரியின் மற்றொரு புறத்தில் இருக்கும் இயற்கை கழிவு சுத்திகரிப்பு இடத்தை(முன்பு பார்த்தது போலவே) பார்த்துவிட்டு – ஆக்கிரமிக்கப்பட்ட சாய்பாபா கோவிலின் பக்கத்தில் இருக்கும் பொது இடத்திற்கு கேட் போட்டிற்கும் அந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராய் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு இன்றைய கள ஆய்வு நிறைவு பெற்றது. அவசரமாக வீட்டிலிருந்து அழைப்பு வந்ததால் இந்த கடைசி இரு இடங்களிலும் என்னால்  கலந்துக்கொள்ள முடியாதது வருத்தம் அளிக்கிறது.


இம்முறை அறப்போரோடு இணைந்து சிட்லபாக்கம் ரைசிங் குழுவும் பொதுமக்களும் எடுத்திருக்கும்  இந்த புது முயற்சி கூடிய விரைவில் ஒரு விடிவு காலம் பிறக்க வழிவகை செய்யும் என்று நம்புவோமாக. கடைசியாக ஒன்று எப்பொழுது குழு சார்பாக முன்வைக்கப்படுவது – களத்திற்கு வாருங்கள் ஒன்று திரண்டு நம் எதிர்காலத்திற்காக குரல் கொடுப்போம். களத்தில் வாராமல் மாற்றம் நிகழாது என்பதே. களத்திற்கு வருவதற்கு உங்களை எது தடுக்கிறது என்று வெளிப்படையாக சொன்னால் – குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எதிர்பார்ப்பு எல்லாம் பிடித்துக்கொள்ள ஒரு கை. நம்பிக்கைகாக – முன் வாருங்கள் தோழர்களே!

Comments

Post a Comment

Popular posts from this blog

முதல் நாள் பள்ளி - தகப்பனாகிய நான் எழுதும் *2

இவருக்கு நான் இதை சொல்லியே ஆகணும்!!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..