ஒரு உசுரு

ரகு. அவர் மனைவி சுவாதி. அவர் அந்த தோட்டத்திலே போட்டிருந்த கட்டிலில் உட்கார்ந்திருந்தார். அவர்  மனைவி அருகில் அவர்  முன்னால்  படுத்திருந்தாள். பரபரப்பாக அவர் வீட்டில் இருந்த இரண்டு மருமகள்களும் வேலையை முடித்துக்கொண்டிருந்தார்கள். அவர் ஓடிக்கொண்டிருந்த அந்த இரண்டு மருமகள்களையுமே பார்த்துக்கொண்டிருந்தார். சட்டென அவர்  நினைவுகள் பின்னோக்கி சென்றன.

’ஊரு எப்படி இருக்குனு  முக்கியம் இல்லீங்க. உங்களுக்கு நான் எனக்கு  நீங்கனு நாம முடிவெடுத்துட்டோம். பொறந்த பிறகு ஒட்டிக்கிட்டது  தானே இந்த ஜாதியும் மதமும். அது ஏன் நம்மல பிரிக்கணும்’ சுவாதி கேட்டாள். இளமை காலத்து ரகு அமைதியாக நின்றுக்கொண்டிருந்தான்.

‘உங்களால முடிஞ்சத கொடுங்க. நான் குடும்பம் நடத்தி காட்டுறேன். அது போதுங்க. எதுக்கும் பயப்படாதீங்க’ அவள் இன்னும் தீர்க்கமாக சொன்னாள். இது போன்ற சந்திப்புகள் நான்கு, ஐந்து கடந்தது. ஆறாம் சந்திப்பில் அவன் அவள் கழுத்தில் தாலி கட்டிக்கொண்டிருந்தான் – ஒரு  கோவிலில்.

‘அந்த சிறுக்கி மொவளையும், அந்த கீழ சாதி நாயையும் இப்பவே வெட்டி போடுறேன்’ அவள் அப்பா அரிவாளை தூக்கிக்கொண்டு ஓடி வந்த வேகத்தை பார்த்து ரகுவே ஒரு முறை மிரண்டு தான் போனான். அவனை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னால் வந்து நின்றாள் சுவாதி.

‘வெட்டுங்க. எங்க வெட்டுங்க பாப்போம்… அத்தனை பேரையும் இங்கயே நான் வெட்டி போட்டுடுவன். எச்சத்தனமா ஜாதினு ஒரு  கருமத்த புடிச்சுட்டு பாசமா வளத்த பொண்ணயே சிறுக்கினு சொல்லுவ, அரிவாள எடுத்து வெட்ட வருவ நீயெல்லாம் மனுசனா..’ அவள் அன்று அவளது  அப்பாவிடம் பேசியதை பார்த்து அரிவாளை விட அவளை பார்த்து மிரள ஆரம்பித்துவிட்டான் ரகு. அன்று அந்த வீட்டை விட்டு ரகுவின்  கையை அவள் பிடித்து வெளியில் வந்த போது,

‘எப்படி ஆம்பள போல வளத்திருக்கான் பாரு… அந்த பொண்ணுலாம் எங்க உருப்புட போகுது. கீழ சாதி காரனோட வாழந்துருவாளா? இன்னும் நாலு மாசம். இங்க தான் வந்து நிப்பா..’ அந்த தெருவை அவர்கள் கடக்கும் முன்னர் ஆயிரம் வசை சொற்களை தாண்டி தான் வந்தார்கள்.

யோசித்துக்கொண்டிருந்த ரகு, ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தார். அவரின் மூத்த மகன் வந்து நின்றான். அவரை பார்த்தான், படுத்திருந்த சுவாதியை பார்த்தான்.

‘ஏ.. என்னாடி வேலையெல்லாம் முடிஞ்சுதா..’ வேறு எதுவும் பேசாமல் அவன் மட்டும் உள்ளே சென்றுவிட்டான். அவன் கண்ணில் இருந்து மறையும் வரை ரகு அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அது சுவாதிக்கு முதல் பிரசவம். மூத்தவன் வயித்தில் – நிறை மாதம். மருத்துவச்சி உள்ளே போராடிக்கொண்டிருந்தாள்.

‘குழந்தை குடலுல சுத்திகிச்சாம். வயித்து தண்ணி எல்லாம் வத்தி போக போகுதுயா..’ மாறி மாறி அவனுக்கு வந்த செய்தி வெளியில் நின்ற இவனுக்கு வயிறு கலங்கியது. அரை மணி  நேர போராட்டத்தில் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலம். பதறியடித்து உள்ளே ஓடிய ரகு குழந்தையை பாராமல் நேராக சுவாதியிடம் ஓடினான். அவள் தலையை தடவி கொடுத்தான்.

அரைமயக்கத்தில் அவள் கண்ணை லேசாக திறந்து பார்த்தாள். வராத சிரிப்பை மெல்லியதாய் வரவைத்தாள். ரகு ஓவென அழுதுவிட்டான். அவள்  செல்லமாக அவன்  கன்னத்தை தட்டினாள்.

அவள் அப்படி தான். மிகவும் தைரியசாலி. எப்பொழுதுமே. ரகு முதலில் ஒரு தனியார் பேருந்தில் நடத்துனராக இருந்தான். ஆனால் இவர்கள் திருமணம் நடந்த சமயம் அந்த பேருந்து விபத்துக்குள்ளாகி ரகு மட்டும் உயிர் தப்பினான்.

’புதுசா வந்தவ கட்டம் சரியில்ல. அந்த தம்பியே கொல்ல பாத்துருச்சு பாரு…’ ஊர் மீண்டும் பேசதொடங்கியது. ரகு அதை கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் எப்பொழுதும் துரு துருவென இருக்கும் சுவாதி சில நாட்களாக உம்மென்றே இருந்தாள்.

ரகு அவளிடம் பேசினான்.

‘என்ன ஆச்சு?’ அவன் கேட்டான். அவள் பதிலெதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

’என்னமா ஆச்சு..’ அவன் இன்னும் அழுத்தமாக கேட்டான். அவள் இன்னும் அமைதி. அவன் இன்னும் நச்சரித்தான். சட்டென திறந்துவிட்ட மடை போல அவள் கண்கள் தாரையாகின. பதறியவன் எழுந்து சட்டென அவள் முகத்தை தன் மார்பில் சாய்த்துக்கொண்டான்.

‘எனக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்லங்க. ஆனா.. ஒருவேல இது உண்மையா இருந்து. என்னால தான் உங்களுக்கு இதெல்லாம் நடக்குதுனா.. நான் செத்துடுறேங்க’ அவளுக்கு வார்த்தை வரவில்லை. கொஞ்சம் பிடித்து இழுத்து வரவேண்டி இருந்தது. அவன் பதிலெதுவும் பேசவில்லை. அமைதியாக இன்னும் அவள் தலையை தடவி கொடுத்தான்.

‘எனக்கு நம்பிக்கை இருக்குமா. இந்த கட்டத்தால நல்லது கெட்டது நடக்குதுனு சொல்லுறதுல எனக்கு நம்பிக்கை  இருக்கு’ அவன் சொன்னான். அழுதுக்கொண்டிருந்த அவள் வாயடைத்து நின்றாள். சிலைபோல அவனை மேலெழும்பி பார்த்தாள்.

‘ஒருவேல நீ என்கூட இல்லாம இருந்திருந்தா அதுல நான் செத்துருப்பேன். உன்னோட கட்டம் தான் என்னைய காப்பாத்திருக்கு. தோ.. இந்த தாலி. இது தான்.. நீ தான் என் உலகம். ஊர் ஆயிரம் பேசும் தான். ஆனா… இந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் சொன்னவ நீ. உன் கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும் என்னால தாங்க முடியாது மா. நீ என்னோட ராணி போல இருக்கணும்.. இருப்பியா?’ அவன் கேட்டான். அவள் அமைதியாகவே இருந்தாள்.

‘என்ன சொல்லு..’ அவன் இன்னும் அழுத்தமாக கேட்டான்.

‘கண்ணாடியில மூஞ்ச பாத்திருக்கியா? நீ ராஜாவா?’ அவள் கேட்டாள்.

‘ஓய்..’ அவன் செல்லமாக தட்ட. அவள் ஆசையாக கட்டிக்கொண்டாள். நினைவுகள் மீண்டெழ இந்த வயதிலும் ரகு ஒரு வெட்க புன்னகை விட்டார். முன்னால் படுத்திருந்த அவர் மனைவி அருகில் இன்னும் நகர்ந்தார். அவரின் காலை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டார்.

கால் முட்டியில் இருந்து முழங்கால் வரை மெல்ல மெல்ல அழுந்த கொடுத்தார். ரகு இப்பொழுது பெரிய பணக்காரர் இல்லை. ஆனால் அவரின் இரண்டு பிள்ளைகளையும் கல்லூரி வரை படிக்க வைத்து, நல்ல பணியில் இருக்கும் அளவுக்கு உயர்த்திவிட்டார். அவர் செய்தார் என்பதை காட்டிலும் சுவாதி செய்தாள் என்று சொன்னால் தான் சரியாக இருக்கும்.

ரகு சுவாதியின்  பேச்சை  மீறியது இல்லை. இப்படி தான் இருக்கணும் என்றால் அப்படியே இருப்பார். பலமுறை பிரச்சனைகளில் அவருக்கு முன்னால் நின்று குரல் கொடுத்தவள் சுவாதி.

அவர் காலை அழுத்திக்கொண்டிருக்கும் பொழுதே அவரின் கண்ணீர் அவளின் காலை நனைத்தது. அவரின் மூத்த மகன் மீண்டும் வந்தான்.

‘ஜாமான்லாம் தொடச்சு மேல வச்சுட்டாங்க பா. சொந்தகாரங்க யாருக்கு சொல்லணும்னு சொன்னீங்கனா சொல்லிடலாம்..’ அவன் சொன்னான். அவர் அவளின் முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தார்.

திருமணம் ஆன புதிதில் ‘உங்களுக்கு நான். எனக்கு நீங்க.. அவ்வளவு தான். நம்ம வாழ்க்கை..’ அவள் சொல்லிவிட்டு அவருக்கு சாப்பாடு ஊட்டியது அவருக்கு நினைவு வந்தது. அவர் பதிலெதுவும் பேசமால் நின்றார். மூத்த மகன் இரண்டு நிமிடம் நின்று பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்குள் சென்றுவிட்டான்.

தன் அலைப்பேசியை எடுத்து யாரையோ அழைத்தார்.

‘அஞ்சு மணிக்கு தானே. சரி.. வச்சிடுங்க..’ சொல்லிவிட்டு அணைத்தார். மீண்டும் அவளின் காலை பிடித்து அழுத்திக்கொடுத்துக்கொண்டிருந்தார். காற்று அடித்தது. சேலை விலக பார்த்தது. எட்டி சரிசெய்து விட்டார். முகத்திலும், கைகளிலும் ஈக்கள் மொய்த்தது. தட்டி விட்டார். அவள் கையை பிடித்துக்கொண்டார். தன் முகத்தில் வைத்துக்கொண்டார். அவர் தலையில் கோத கொடுத்தார்.

மணி கடந்தது.

4.30 மணிக்கு எழுந்தார். வீட்டு கிணற்றில் தண்ணீரை மொண்டார். அவள் படுத்திருந்த கட்டிலை நோக்கி வந்தார். மேலிருந்து கீழ்வரை மொட மொடவென ஊற்றினார்.


இடுப்பில் சொருகியிருந்த ஒரு குங்கும டப்பாவை எடுத்து கை நிறைய குங்குமம் கொட்டிக்கொண்டார். அவளின் நெற்றியை பார்த்தார். கண்ணீரோடு ஒரு முத்தம் வைத்தார். அடுத்து அந்த குங்குமத்தை நிரப்பினார். வேட்டியை மடித்துக்கொண்டார். தன் இருகைகளிலும் அவளை தூக்கிவிட்டு ஐந்து மணிக்கு சரியாக வரச்சொன்ன வெட்டியானின் சொல்பேச்சு மறவாதராய் சுடுகாடு நோக்கி புறப்பட்டார். ஒரு உசுராய்.

- தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி